அன்புள்ள
நண்பருக்கு
வணக்கம். சென்னையிலிருந்து நியுயார்க் நகரத்துக்குப் பயணம் செய்தபோது, சுனில் கிருஷ்ணன், சு.வேணுகோபால், நான் மூவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து உட்கார்ந்து உரையாடியபடியே பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு இருக்கைகள் அமைந்தன. அதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும். ஆயினும் நீண்ட பயண நேரம் காரணமாக என் நெஞ்சில் ஒருவித பதற்றமும் சோர்வும் இருந்தன.
இன்னும்
எத்தனை மணி நேரம் பயணம் செய்யவேண்டும் என ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை எனக்கு
அருகில் அமர்ந்திருந்த சுனில் கிருஷ்ணனிடம் கேட்டபடி இருந்தேன். அவரும் பொறுமையாக ஒவ்வொருமுறையும்
இருக்கைக்கு எதிரில் இருந்த தொடுதிரையைத் தொட்டு விமானத்தின் செல்வழி வரைபடத்தைப் பார்த்துவிட்டு
இன்னும் பத்து மணி நேரம், இன்னும் ஒன்பது மணி நேரம் என சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால்
நியுயார்க்கிலிருந்து சென்னைக்குத் திரும்பும் பயணத்தில் நான் ஒருமுறை கூட இன்னும்
எத்தனை மணி நேரப்பயணம் எஞ்சியிருக்கிறது என அவரிடம் கேட்கவே இல்லை. இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கே அது ஆச்சரியமாகவே
உள்ளது. எவ்விதமான சோர்வுக்கும் இடமில்லாதபடி ஆழ்மனம் நிகழ்ச்சியனுபவங்களில் திளைத்திருந்ததுதான்
அதற்கு முதன்மையான காரணம். பயணம் முழுக்க ஒருவித கனவு மனநிலையிலேயே இருந்தேன்.
நியுயார்க்கில்
விமான நிலைய நடைமுறைகளை முடித்துக்கொண்டு நாங்கள் வெளியே வருவதற்கு சற்றே தாமதமானது.
ஆயினும் விமான நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்த மகேஸ்வரி அனைவரையும் அன்புடன்
வரவேற்று, ஒரு வாகனத்தில் ஏற்றி நியுஜெர்சி கோர்ட்யார்ட் விடுதிக்கு அனுப்பிவைத்தார்.
இன்னும் இரண்டு குழுக்கள் வந்து சேரவேண்டுமென்றும் அவர்களை வரவேற்று அழைத்துக்கொண்டு
விடுதிக்கு வருவதாகத் தெரிவித்தார்.
விமானநிலையத்திலிருந்து
நியுஜெர்சி விடுதி ஒன்றரை மணி நேரப் பயணத்தில் இருந்தது. ஹட்சன் நதியின் முகத்துவாரத்துக்கு
மேலே நீண்ட சாலை வழியாகச் சென்ற வாகனத்தில் அமர்ந்தவாறு, இரவு விளக்குகளில் மின்னும் நகரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே
பயணம் செய்தோம். வாகனத்தை ஓட்டிவந்த நண்பர் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் சில தகவல்களை
எங்களிடம் சொல்லிக்கொண்டே வந்தார்.
பார்த்த
கணத்திலேயே அந்த விமானநிலையச்சாலை எனக்கு பெங்களூரு விமானநிலையச் சாலையை நினைவூட்டியது.
அதே வாகன வரிசை. அதே நெருக்கடி. அதே ஒலியெழுப்பிகளின் சத்தம். இரண்டுக்கும் இடையில்
பெரிய வேறுபாடொன்றும் தெரியவில்லை.
விடுதி
வளாகத்துக்கு முன்னால் இறங்கியபோது நல்ல குளிர் இறங்கியிருந்தது. முன்னெச்சரிக்கையாக
நாங்கள் அணிந்திருந்த உடைகள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன. தமிழகத்திலிருந்து
வரவேண்டிய எழுத்தாளர்களில் பலரும் ஏற்கனவே வந்து விடுதியின் கூடத்தில் நிறைந்திருந்தனர்.
செளந்தர், பழனி, பத்மனாபன், பாலாஜி, ஜெகதீஷ்குமார், பிரபு என பல நண்பர்களும் கூடி நின்று
வரவேற்றனர். அக்கணத்திலேயே விழாமனநிலை கூடிவந்துவிட்டது. விருந்தினர்கள் எல்லோருக்கும்
அறைகள் ஒதுக்கப்பட்டன. நானும் சு.வேணுகோபாலும் ஒரே அறையில் தங்கினோம். அறையைத் திறந்து
பெட்டிகளை வைத்துவிட்டு, மீண்டும் கூடத்துக்குத் திரும்பி வந்து உணவு உண்டபடியே நீண்ட
நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அடுத்தநாள்
ஓய்வு என்றபோதும் ஆர்வத்தின் காரணமாக அனைவருமே விரைவில் துயிலெழுந்து கம்பளியாடைகளோடு
வெளியே வந்து நின்று படமெடுக்கத் தொடங்கினர். விடுதியின் வளாகத்திலேயே செர்ரி ப்ளாசம்
பூத்திருந்தது. ஒருபக்கம் பளிச்சென்ற வெளிச்சம் இருந்தபோதும், இன்னொரு பக்கம் தலைக்குக் குல்லாயும் கைகளுக்குக் கையுறைகளும் தேவைப்படும்
அளவுக்கு குளிரும் இருந்தது. அது ஒரு விசித்திரமான அனுபவம். குளிரைப் பொருட்படுத்தாமல்
அனைவரும் அந்த மரத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தோம். இது பூக்கத் தொடங்கும் பருவம்
என்றும் இன்னும் இரு வாரங்களில் நகரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் செர்ரி ப்ளாசம்
பூத்துக்குலுங்குவதைப் பார்க்கலாம் என்றும் நண்பர் சொன்னார். மூன்றுமூன்று பேராக சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து
சிறிது நேரம் நின்றுகொண்டே உரையாடுவதும் சிறிது நேரம் நடப்பதுமாகவும் இருந்தோம். கூடத்திலேயே அனைவருக்கும் காலைச்சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நண்பகல்
உணவுக்குப் பிறகு விழா நண்பர்கள் அனைவரையும் தனித்தனி வாகனங்களில் சுதந்திரதேவிச் சிலையைப்
பார்க்க அழைத்துச் சென்றனர். தீவின் கரைவரைக்கும் மட்டுமே வாகனத்தில் செல்லமுடிந்தது.
அதற்குப் பிறகு படகுப்பயணம். அதில் ஏறி பயணம் செய்து சிலை நிறுவப்பட்டிருந்த இடத்தில்
இறங்கி அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வட்டப்பாதையில் வேடிக்கை பார்த்தபடி நடந்தோம்.
பல கோணங்களில் நின்று பலரும் சுதந்திரதேவி சிலையைப் படமெடுத்துக்கொண்டனர்.
அமெரிக்க
சுதந்திரத்தையொட்டி பிரான்சு தேசத்தால் அன்பளிப்பாக 1886இல் அச்சிலை அளிக்கப்பட்டதென்று
எங்களோடு வந்த நண்பர் பிரபு சொன்னார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி எல்லிஸ்
தீவை நோக்கி வந்தபோது, அந்த இடத்தில்தான் அவர்களைத் தங்கவைத்திருக்கிறது அன்றைய அரசாங்கம்.
அவர்கள் எவ்விதமான நோய் பாதிப்புகளுக்கும் உட்படாதவர்கள் என்பதை உறுதி செய்துகொண்ட
பிறகே, வேலைகளுக்காக ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிலை நின்றிருக்கும்
பீடத்தில் சுவர்களில் சில வாசகங்களும் கவிதை வரிகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன என
நண்பர்கள் உரைத்தனர். ஆயினும் அந்த எல்லைக்குள் செல்ல அனுமதி இல்லாததால் நாங்கள் அனைவரும்
தொலைவிலிருந்தே சிலையைப் பார்த்து மகிழ்ந்தோம். கூட்டமாகவும் தனித்தனியாகவும் படங்களை
எடுத்துக்கொண்டோம். இருட்டும்வரைக்கும் ஆங்காங்கே சிறுசிறு கூட்டமாக நின்று பேசிக்கொண்டே
இருந்தோம். அதனால் அறைக்குத் திரும்பி வர தாமதமாகிவிட்டது. அங்குள்ள உணவு விடுதிகள்
எட்டு மணிக்கே தம் சேவையை நிறுத்திக்கொள்ளும் என்பதால் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே
இருந்த விடுதிக்குச் சென்று உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பினோம்.
03.04.2026
அன்று காலை எட்டுமணியளவில் விடுதியை விட்டு வெளியேறி இரண்டு பெரிய பேருந்துகளில் பயணம்
செய்து, வாழும் தமிழ் இலக்கியத் திருவிழா நடைபெறவிருந்த நியுயார்க் அகாடமி ஆஃப் மெடிசின்
கட்டடத்துக்கு வந்து சேர்ந்தோம். மிக உயர்ந்த பழமை வாய்ந்த அக்கட்டடம் மூன்று தளங்களைக்
கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு தளமும் நல்ல உயரத்தோடும்
காற்றோட்டத்தோடும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஜன்னலும் ஒன்றரை ஆள் உயரத்துக்கு
இருந்தது. சுவரோரமாக அமைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரிகள் அவற்றைவிடவும் உயரமாகவும்
இருந்தன. ஒரு நூற்றாண்டு கால ஆவணங்கள் அந்த அலமாரிகளில் சேமிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.
ஒவ்வொரு தளத்திலும் பல கூடங்கள்.
ராக்கபெல்லர்
என்னும் பணக்காரர் தன் செல்வத்தை செலவு செய்து ஆய்வுக்காகவும் பலகலைக்கழகங்களை நிறுவுவதற்காகவும்
இப்படி பல மையங்களை நியுயார்க்கெங்கும் கட்டியெழுப்பி அன்பளிப்பாக அளித்திருக்கிறார்
என்று சொன்னார்கள். ‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
என்னும் பாரதியார் வரியை நினைத்துக்கொண்டேன். அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருந்த
அந்தக் கூடத்தில் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எண்ணற்ற அறிஞர்கள் அமர்ந்து உரையாடியிருக்கிறார்கள்
என நினைத்தபோது அவர்கள் இழுத்துவிட்ட மூச்சுக்காற்று இன்னும் அங்கே உலா வருவதாக ஒருகணம்
நினைத்துக்கொண்டேன்.
ஏறத்தாழ
முன்னூறு பேர் அளவில் பார்வையாளர்கள் திரண்டிருந்தார்கள். அனைவருக்கும் சிற்றுண்டி
வழங்கப்பட்டது. வந்தவர்களில் பாதிப் பேர் இளைஞர்களும் இளம்பெண்களும். அனைவருமே கல்லூரியில்
வெவ்வேறு பிரிவுகளில் படித்துக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொருவரும் தயக்கமின்றி பிறரிடம்
சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாட முற்படுவதைப் பார்த்தேன்.
புதுமைப்பித்தன்
அரங்கம், க.நா.சு.அரங்கம், சு.ரா.அரங்கம், அசோகமித்திரன் அரங்கம் என ஒவ்வொரு தளத்திற்கும்
பெயர்சூட்டப்பட்டு, மேடைக்குப் பின்னால் சுவரையொட்டி இருபதடிக்கு பத்தடி உயரத்துக்கு
வண்ணப்பதாகை வைக்கப்பட்டிருந்தது.
புதுமைப்பித்தன்
அரங்கில் திட்டமிட்டபடி பத்துமணிக்கு தொடக்கவிழா நடந்தது. ’அசையும்போது தோணி அசையாதபோது தீவு’ என்னும் தேவதேவனின்
புகழ்பெற்ற கவிதைவரியை ராலே ராஜன் இசையுடன் பாடி விழாவைத் தொடங்கிவைத்தார். டாமியன்
சேர்ல்ஸ், ஆஸ்டின் செளந்தர், ஜெயமோகன், ஜெகதீஷ்குமார்,
பழனிஜோதி ஆகியோர் உரையாற்றினர். அனைவரும் சுருக்கமாக ஒரு கனவு போல வாழும் தமிழ் இலக்கியத் திருவிழா உருக்கொண்ட விதத்தைப்பற்றி
எடுத்துரைத்தனர். தமிழ்மொழியின் மிகச்சிறந்த
படைப்புகளை உலகவாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கனவு இத்திருவிழா வழியாக நிறைவேறியிருக்கிறது
என்றும் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான ஆற்றலோடு இவ்விழா நடைபெறும் என்றும் ஜெயமோகன்
தெரிவித்தார்.
ஒவ்வொரு
அமர்வும் எழுபது நிமிட கால அளவில் திட்டமிடப்பட்டு, அதன்படியே கச்சிதமாக நிறைவேறியது.
ஒரே நேரத்தில் க.நா.சு. அரங்கிலும் சு.ரா.அரங்கிலும் அமர்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு அரங்கிலும் நான்கு அமர்வுகளாக முதல்நாள் எட்டு அமர்வுகளும் இரண்டாவது நாள்
எட்டு அமர்வுகளும் நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விலும் இரு தமிழ் எழுத்தாளர்களும் ஒரு அமெரிக்க
எழுத்தாளரும் இடம்பெற்றிருந்தனர். ஒருங்கிணைப்பாளராக இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
துடிப்புடன் செயல்பட்டனர்.
என்னால்
ஒரே நேரத்தில் இரு அரங்குகளுக்கும் மாறிமாறிச் செல்ல இயலவில்லை. எந்த அரங்காக இருந்தாலும்
நடைபெறும் அமர்வை முழுமையாகப் பங்கேற்பது என்னும் எண்ணத்தோடு எட்டு அமர்வுகளில் மட்டுமே
கலந்துகொண்டேன். ஒவ்வொரு அமர்விலும் விவாதிக்கப்பட்ட பொருள் ஆர்வமூட்டுவதாகவும் புதிதாகவும்
இருந்தது.
இருநாட்களாக
நடைபெற்ற இலக்கியத்திருவிழாவில் என் மனத்தைக் கவர்ந்த மிகமுக்கியமான அம்சம் இளையோரின்
பங்கேற்பும் அவர்களுடைய உற்சாகமும். ஒவ்வொரு படைப்பாளியுடைய மிக முக்கியமான ஆக்கங்களையும்
தேடிப் பிடித்து படித்துவிட்டு தம் கேள்விகளை ஒருங்கிணைத்துக்கொண்டு தயாரிப்புடன் வந்திருந்த
அவர்களுடைய ஈடுபாடு பாராட்டப்படவேண்டிய ஒன்று. என் ஆர்வத்தின் காரணமாக அவர்களில் நான்கைந்து
பேருடன் உரையாடினேன். அவர்கள் அனைவருமே பொறியியல், மருத்துவம், கணிதம் என வெவ்வேறு
துறைசார்ந்த படிப்பைப் படிப்பவர்கள். ஆனால் அவற்றுக்கு அப்பால் இலக்கியம், ஓவியம்,
இசை சார்ந்து அவர்கள் கொண்டிருந்த ஆர்வம் வியப்பூட்டியது. எல்லாவற்றையும்விட ஒரு படைப்பைப்
புரிந்துகொள்ள பல்வேறு கோணங்களில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் என்னை மெய்சிலிர்க்கவைத்தன.
இதே அளவிலான
வேகமும் ஈடுபாடும் அவர்களிடம் தொடருமெனில், குறிப்பிட்ட ஆறேழு ஆண்டுகளில் அவர்களால்
தமிழின் மிகமுக்கியமான படைப்பாளர்களின் பெரும்பாலான படைப்புகளை அவர்களால் படித்துவிடமுடியும்
என்ற எண்ணம் எழுந்தது. இன்னொரு முக்கியமான செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்த இளையோர் கூட்டத்தில் பலரும் இலக்கிய ஆர்வலர்களாகவும் வாசகர்களாகவும் மட்டுமன்றி,
தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பதை
நான் பார்த்தேன். மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ்குமார் போன்றவர்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக
இருக்கிறார்கள்.
இத்தகையோரின்
முயற்சி தொடருமெனில், எதிர்காலத்தில் பல தமிழிப்படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்
நியுயார்க் இளையோரிடமிருந்தே உருவாகும் என்ற எண்ணம் எழுகிறது. கடல்கடந்து, கண்டம் கடந்து,
அவர்கள் தமிழை வாழவைப்பார்கள் என்கிற நம்பிக்கையும் உருவாகிறது. இத்தகைய இளையோரிடம்
உரையாடிய அனுபவம் ஏதோ ஒரு சோலைக்குள் தங்கிவிட்டு வந்த அனுபவத்தைப்போல உள்ளது.
பாரதியாரின்
பாடல்களில் ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்றொரு பாடல் உண்டு. அதன் இறுதிப்பகுதியில்
‘வெற்றி கொண்ட கையினாய் வாவாவா, விநயம் நின்ற நாவினாய் வாவாவா, முற்றி நின்ற வடிவினாய்
வாவாவா, முழுமை சேர் முகத்தினாய் வாவாவா, கற்றலொன்று பொய்க்கிலாய் வாவாவா, கருதியது
இயற்றுவாய் வாவாவா, ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் ஒருபெரும் செயல் செய்வாய் வாவாவா’
என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இலக்கியத்திருவிழாவில் பார்த்த இளையோரின் புன்னகையும்
ஊக்கமும் படிந்த முகங்களை நினைக்கும்தோறும் எனக்கு இந்த வரிகளையும் இணைத்து நினைக்கத்
தோன்றுகிறது.
பெருஞ்செயல்களை
அவர்கள் ஆற்றுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து பேணி வளர்க்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
அனைவரையும் இலக்கியத்தின் திசையில் ஆற்றுப்படுத்தி செயலாற்ற முனையும் உங்களுக்கும்
வாழ்த்துகள். உங்கள் தோளோடு தோள்நின்று சோர்வின்றித் தொண்டாற்றும் நட்புக்குழுவினருக்கும்
வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
