Home

Wednesday 27 November 2019

உண்மையின் உருவம் - கட்டுரை



காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப் படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?என்று கேட்டார். “உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச் சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதியவை அனைத்தும் மீண்டும்மீண்டும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய நீண்ட உரையில் முடிவாக ஒரே ஒரு வரியைச் சொல்வதற்குமுன்னால் குறைந்தபட்சம் பத்துவரிகளாவது அடுக்கிச் சொல்லி, இறுதியாக அந்த முடிவுவரியைச் சொல்வதுதான் அவர் பழக்கம். தொடக்கத்தில் சொல்லப்படும் பத்து வரிகளையும் வசதியாக மறந்துவிட்டு, அதன் இறுதிவரியைமட்டும் முக்கியத்துவப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை....என்றேன்.

வீரமும் விடியலும் (கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி



கேரளத்துக்கு வருகை தந்த விவேகாநாந்தர் அப்பிரதேசத்தை மனநோயாளிகளின் இல்லம் என்று சொன்னதாகச் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு கேரளத்தில் சாதிப் பிரிவினைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் கடுமையான அளவில் காணப்பட்டிருந்தன. பிராமணர்களிடமிருந்து நாயர் பதினாறு அடி துாரமும் ஈழவன் முப்பத்திரண்டு அடி துாரமும் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து ஈழவன் பதினாறு அடி துாரமும் புலையன் 32 அடி துாரமும் விலகி நிற்க வேண்டும். ஈழவனிடமிருந்து புலையன் ஆறடி துாரமாவது தள்ளி நிற்க வேண்டும். உள்ளாடன் என்று அழைக்கப்பட்ட மலைச் சாதியினர் பிராமணன் பார்வையில் பட்டாலே பிராமணன் அசுத்தமாகி விடுவான். இப்படியெல்லாம் விதிகள் இருந்த காலம் அது. அத்தகு சூழலில் புலையர்கள் வாழ்வுக்காவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர் அய்யன்காளி. அவருடைய வாழ்க்கை வரலாறு ஒரு புராண பாத்திரத்தின் சாகச வரலாற்றுக்கு நிகராக விளங்குகிறது. அவர் வீரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிப்புணர்வையும் முழு வீச்சுடன் உள்வாங்கி நம் மனத்தை நிறைத்துக் கொள்ளும் விதமாக இந்த நுாலை உருவாக்கியுள்ளார் நிர்மால்யா.

Wednesday 20 November 2019

திரும்பி வராத குருவிகள் - கவிதை



அந்தக் குருவிகள் ஏன் இன்னும் திரும்பவில்லை
என்பதன் காரணம் புரியவில்லை
என்னையும் இந்த அறையையும்
அவை வெறுத்திருக்கக் கூடுமோ தெரியவில்லை
வழக்கமாக அவை வந்து சேரும் நேரம் இது

அடையாளச்சின்னங்கள் - கட்டுரை




சென்ற நூற்றாண்டில் தமிழ்க்கவிதைகளுக்கான இடத்தை மிக உயரத்துக்குக் கொண்டுசென்று நிலைநிறுத்தியவர் பாரதியார். இனிமையும் எளிமையும் வீரமும் வேகமும் பொருந்திய சொற்களால் அவர் புனைந்த கவிதைகள் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித் தந்தன.  அவர் மறைந்து தொண்ணூற்றியெட்டு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட அவர் படைப்புகள் இன்றளவும் புதிய இளம்வாசகர்களை ஈர்க்கும் ஆற்றலுடன் உள்ளன. ’மந்திரம்போல சொல்லின்பம் வேண்டும்என்று எழுதிய பாரதியாரின் பாடல்கள் கண்ணால் படிப்பவரின் மனத்தையும் காதால் கேட்பவரின் மனத்தையும் காந்தம்போல இழுக்கும் மந்திரசக்தி பொருந்தியவை. அவருடைய ஒவ்வொரு பாடலும் அவரை நினைக்கவைக்கும் அடையாளச்சின்னம். அவருடைய காலத்திலேயே அவர் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தன. பல பாடல்கள் தொடர்ச்சியாக மேடைகளில் பாடப்பட்டன. சத்தியமூர்த்தி, கோதைநாயகி, ஜீவா, ஜெயகாந்தன் போன்றோர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சிமயமான குரலில் பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்கள் என்பது வரலாறு.

Wednesday 13 November 2019

இராஜாஜி - குன்றாத ஊக்கம் - கட்டுரை



முதலாம் உலகப்போரின் முடிவில் பஞ்சாபிலும் வங்காளத்திலும் பல புரட்சி இயக்கங்கள் தோன்றி கிளர்ச்சிகளில் ஈடுபட்டன. மற்றொரு புறத்தில் திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையில் அமைந்த இயக்கங்களும் போராட்டங்களைத் தொடங்கின. இடையில் காந்தியின் தலைமையில் 01.03.1919 அன்று  சத்தியாகிரகம் தொடங்கியது. மக்களிடையில் பரவிய எழுச்சியையும் வேகத்தையும் கண்கூடாகக் கண்ட ஆங்கில அரசு, அந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தது. எனவே அனைத்துவிதமான போராட்டங்களையும் ஒடுக்கி அச்சத்தை விதைப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக சர் சிட்னி ரெளலட் என்பவருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு பரிந்துரைத்தளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஆங்கில அரசு உடனே ஒரு குற்றவியல் சட்டத்தை அறிவித்தது. அதுவே ரெளலட் சட்டம். அதன்படி ஆட்சியதிகாரத்துக்கு ஆபத்தானவர் எனக் கருதப்படும் எவரையும் எவ்விதமான நீதிமன்ற விசாரணயுமில்லாமல் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது.

கே.சுவாமிநாதன் - எப்போதும் இருக்கும் பெயர் - கட்டுரை



1915 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தன் மனைவி கஸ்தூர்பாவுடன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தியர்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவது அவருடைய நோக்கமாக இருந்தது. அவரை இந்தியன் ரிவ்யுபத்திரிகையின் ஆசிரியரான ஜி..நடேசன் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்று தம் வீட்டிலேயே விருந்தினராகத் தங்கவைத்திருந்தார். ஆர்வத்துடன் அவரைக் காண்பதற்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள் ரயில்நிலையத்துக்கே வந்திருந்தார்கள்.

Saturday 2 November 2019

நாவல் என்னும் பேருலகம் - ஒன்பதாம் விக்கிரகத்தைத் தேடி - இரண்டாம் பகுதி


     கருத்துலக சுதந்திரத்தைத் தேடிச் செல்லும் கலைஞனான ஜே.ஜே.யின் பயணத்தையும் அவன் எதிர்கொள்ளும் மோதல்களையும் தொகுத்து ஒரு வாழ்க்கைவரலாற்றின் தோற்றத்தோடு முன்வைத்திருக்கும் நாவாலன "ஜே.ஜே. சில குறிப்புகள்" தமிழில் எழுதப்பட்ட முக்கியப்படைப்புகளில் ஒன்று. தனிமனிதப் பிரக்ஞைக்கும் சுதந்திரச் சிந்தனைக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக நம்புகிற ஒரு கலைஞனாக ஜே.ஜே.யைச் சித்திரக்கிறார் சுந்தர ராமசாமி. கலைகளும் இலக்கியங்களும் இத்தகு சுதந்திர சிந்தனைகள்வழியாகவே உருப்பெறுகின்றன. ஏற்கனவே நிறுவனமயமாக்கப்பட்ட கருத்துகளை மோதி எதிர்கொள்வதைத் தவிர இந்த சுதந்திர சிந்தனைக்கு வேறு வழியில்லை. தன்னோடு இருப்புக்காகமட்டுமல்ல, தொடர்ந்த நகர்வுக்காகவும் இந்த மோதலை நிகழ்த்தவேண்டியிருக்கிறது. 

நாவல் என்னும் பேருலகம்- ஒன்பதாம் விக்கிரகத்தைத் தேடி - முதல் பகுதி


  
                            -1-
     பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட ருஷ்ய, ஐரோப்பிய நாவல்களின் வருகைக்குப் பிறகு நாவல் என்னும் இலக்கிய வடிவம் சார்ந்த ஆவல் உலகத்தில் எல்லா மொழிகளிலும் உருவானதைப்போலவே தமிழ்ப்படைப்பாளிகளிடமும் பிறந்தது. அத்தருணம் வரையிலும் கவிதைத்துறையின் பாடுபொருளாக இருந்த அம்சங்கள் மெல்லமெல்ல நாவல்களின் பாடுபொருளாக மாற்றமடையத் தொடங்கியது. வெண்பாக்களிலும் விருத்தங்களிலும் பாடப்பட்டுவந்த நீதிக்கருத்துகளும் அறநெறிக்கருத்துகளும் உரைநடையின் தளத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தன.