Home

Wednesday, 13 November 2019

இராஜாஜி - குன்றாத ஊக்கம் - கட்டுரை



முதலாம் உலகப்போரின் முடிவில் பஞ்சாபிலும் வங்காளத்திலும் பல புரட்சி இயக்கங்கள் தோன்றி கிளர்ச்சிகளில் ஈடுபட்டன. மற்றொரு புறத்தில் திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையில் அமைந்த இயக்கங்களும் போராட்டங்களைத் தொடங்கின. இடையில் காந்தியின் தலைமையில் 01.03.1919 அன்று  சத்தியாகிரகம் தொடங்கியது. மக்களிடையில் பரவிய எழுச்சியையும் வேகத்தையும் கண்கூடாகக் கண்ட ஆங்கில அரசு, அந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தது. எனவே அனைத்துவிதமான போராட்டங்களையும் ஒடுக்கி அச்சத்தை விதைப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக சர் சிட்னி ரெளலட் என்பவருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு பரிந்துரைத்தளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஆங்கில அரசு உடனே ஒரு குற்றவியல் சட்டத்தை அறிவித்தது. அதுவே ரெளலட் சட்டம். அதன்படி ஆட்சியதிகாரத்துக்கு ஆபத்தானவர் எனக் கருதப்படும் எவரையும் எவ்விதமான நீதிமன்ற விசாரணயுமில்லாமல் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவானது.

ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடையடைப்புகளும் பொதுக்கூட்டங்களும் நடைபெறத் தொடங்கின. இப்போராட்டத்தின் உச்சக்கட்ட நிகழ்ச்சிதான் ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை. அன்று வைசாகி நாள். குருகோவிந்த் சிங் சீக்கிய அறப்படைக்கு அடிக்கல் நாட்டிய நாள். மைதானத்தில் மக்கள் கூடி அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இராணுவ ஜெனரல் டையர் தன் படையுடன் அங்கு தோன்றி வெறித்தனமாக துப்பாக்கிசூடு நிகழ்த்தி நூற்றுக்கணக்கானவரை சுட்டு வீழ்த்தினார்.
ரெளலட் சட்டத்தையும் பஞ்சாப் படுகொலையையும் எதிர்த்தும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்ட குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தும் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கம் என்பது படிப்படியாக இந்திய மக்கள் ஆங்கில அரசுடன் ஒத்துழைப்பதை நிறுத்தி, அரசாங்கத்தை முடக்குவதாகும். இதை அகிம்சைவழியில் நடத்துவதற்குத் திட்டமிட்டார் காந்தியடிகள். அப்போராட்டத்தில் மூன்றுவிதமான புறக்கணிப்புகளை அவர் முதன்மைப்படுத்தினார். புதிதாக அமுலுக்கு வரவிருந்த மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் திட்டப்படி நடைபெறவிருந்த சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்தல் என்பது முதல் நடவடிக்கை. நீதிமன்றங்களில் பணியாற்றும் இந்திய வழக்கறிஞர்கள் உடனடியாக நீதிமன்றங்களைப் புறக்கணித்தல் என்பது இரண்டாவது நடவடிக்கை. மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறி கல்லூரிகளைப் புறக்கணித்தல் என்பது மூன்றாவது நடவடிக்கை. காந்தியடிகளின் அறிவிப்பு வெளியானதுமே சேலத்தில் மிகவெற்றிகரமான முறையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த ஓர் இளம்வழக்கறிஞர் தான் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு சென்னை மாகாணத்திலேயே முதன்முதலாக வெளியேறினார். அவர் சக்கரவர்த்தி இராஜாகோபாலாச்சாரியார் என்கிற இராஜாஜி. உடனே அவரைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு தேசத்தொண்டில் ஈடுபட்டார்கள்.
காந்தியத்தின்பால் ஈடுபாடு கொண்டு காந்திய வழியில் வாழ்ந்துவந்தாலும் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்துக்காக சென்னைக்கு வந்திருந்த சமயத்தில்தான் காந்தியடிகளை முதன்முதலாக சந்தித்தார் இராஜாஜி. மகாதேவதேசாய் அவரை காந்தியடிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சத்தியாகிரகம் தொடர்பான ஐயங்களுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு காந்தியடிகளுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர் அச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு காந்தியடிகள் பதில் சொன்னார். சில கேள்விகளுக்கு இராஜாஜியே பதில் சொன்னார். கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவரான விஜயராகவாச்சாரியார்சத்தியாகிரகம் பற்றி நீங்கள் ஏதேனும் புத்தகங்களை எழுதியிருக்கிறீர்களா? இராஜாஜி அப்புத்தகத்தை கரைத்துக் குடித்திருப்பார் போலத் தெரிகிறதுஎன்று காந்தியடிகளிடம் கேட்டார். உடனே காந்தியடிகள்அப்படி நான் ஒரு புத்தகமும் எழுதவில்லை ஆனால் அவர் எப்படியோ என் வழிகளைப்பற்றியும் தத்துவங்களைப்பற்றியும் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார். அது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறதுஎன்று சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
பொதுநலத்தொண்டின் பெருமையையும் தியாகங்களின் மகத்துவத்தையும் மிக இளம்வயதிலேயே உணர்ந்தவராக இருந்தார் இராஜாஜி. 1897ஆம் ஆண்டில் சிகாகோ நகரில் உரைநிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பிய விவேகானந்தர் திருவல்லிக்கேணியில் இருந்த ஐஸ் ஹவுஸில் சில நாட்கள் தங்கி பொதுமக்களிடையில் உரைநிகழ்த்தினார். கல்லூரிமாணவராக இருந்த இராஜாஜி அவ்வுரையைக் கேட்டு ஊக்கம் கொண்டார். சமூகத்தில் காளான்கள்போல முளைத்திருந்த சாதிவேறுபாடுகளைப்பற்றியும் தீண்டாமையைப்பற்றியும் தெளிவாக உணர்ந்துகொண்டார். அக்கணத்திலேயே அவற்றைத் தன் சொந்த வாழ்க்கையிலிருந்து விலக்கிவைத்துவிட்டார். முதலில் வேதாந்தியும் துறவியுமான சகஜானந்தரை விருந்தினராக தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து எண்ணற்ற முறை தன் வீட்டிலேயே அனைத்துச் சாதியினருடனும் சேர்ந்துண்ணும் சமபந்திபோஜன முறையை ஏற்படுத்தினார். அதனால் அவரைச் சூழ்ந்திருந்த எண்ணற்ற வைதிகர்களின் சீற்றத்துக்கு ஆளானார்.
1917 ஆம் ஆண்டில் அவர் சேலம் நகராட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டிருந்தபோது நகரசபைக் குழாய்களை தண்ணீரைத் திறக்கவும் மூடவுமான பணிகளைச் செய்வதற்காக சுழற்சிமுறையில் நகரெங்கும் சிலர் அமர்த்தப்பட்டனர். அக்குழுவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அக்கிரகாரத்துக்குள் செல்லும் குழாய்களைத் திறந்து மூடும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டது. இதையறிந்த அக்கிரகாரத்தினர் இராஜாஜியைச் சந்தித்து புகாரளித்தனர். பணியிலிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை அக்கிரகாரத்துப் பகுதியிலிருந்து விலக்கி, வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார் இராஜாஜி. “நகராட்சி அனைவருக்கும் பொதுவான அமைப்பு. நகராட்சி நிர்வாகத்தில் சாதிவேற்றுமையை கடைபிடிக்கமுடியாதுஎன்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டார். ஏறத்தாழ அதே நேரத்தில் நகராட்சியின் பொறுப்பிலிருந்த மாணவர் விடுதியிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர்  பணியில் அமர்த்தப்பட்டார். அவரையும் வெளியேற்ற வேண்டும் என்றொரு கோரிக்கை எழுந்தது. உறுதியான குரலில் அதையும் மறுத்தார் இராஜாஜி. “இங்கு இப்படித்தான் இருக்கும். வேண்டுமென்றால் இந்த ஏற்பாட்டை விரும்பாத மேல்சாதிப் பிள்ளைகள் விடுதியிலிருந்து வெளியேறலாம்என்று சொல்லி அடக்கிவிட்டார். இதுபோன்ற செயல்களால் ஆத்திரமுற்ற வைதிகப்பிராமணர்கள் இராஜாஜியை சாதிநீக்கம் செய்தார்கள்.
கிராமத்திலிருந்த இராஜாஜியின் தந்தைக்கு அச்செய்தி தெரியவந்தது. உடனே மகனுக்கு அறிவுரை சொல்வதற்காக சேலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார் அவர். ”நாளைக்கு நான் இறந்துபோனால் எனக்கு இறுதிச்சடங்கு செய்ய வைதிகர்கள் வரவேண்டாமா? இப்படிச் செய்தால் எப்படி?” என்று மனவருத்தத்துடன் கேட்டார். தன் குடும்பம் பற்றி தொன்றுதொட்டு நிலவிவரும் பழைய கதையொன்றை தன்  தந்தைக்கு நினைவூட்டினார் இராஜாஜி. சில தலைமுறைகளுக்கு முன்பாக, அவர் குடும்பத்தில் வாழ்ந்த ஒரு பெரியவர் ஒருநாள் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். அப்போது ஆற்றில் உயிரற்ற ஓர் உடல் மிதந்துவந்தது. அப்பெரியவர் அவ்வுடலைக் கரைக்கு இழுத்து வைதிக முறைப்படி எரியூட்டினார். ஊரில் வாழ்ந்தவர்கள் அவரைக் கண்டித்து சாதியிலிருந்து விலக்கிவைத்தனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. தான் செய்ததே சரியான செயல் என அவர் உறுதியாக நம்பினார். நாளடைவில் அவருடைய உயர்வான குணங்களை உணர்ந்து மக்களே மனம் மாறி தன் ஊருக்கு வந்த சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டு வாழ்த்திப் போற்றினர். பிறகு அதுவே அவர்களுடைய குடும்பப்பெயராக மாறியது. அனைவரையும் சமமாக நடத்தும் எண்ணம் இராஜாஜியிடம் இயல்பாகவே படிந்திருந்தது.
1921ஆம் ஆண்டின் இறுதியில் காங்கிரஸ் பிரச்சாரத்துக்காக வேலூருக்குச் சென்றார் இராஜாஜி. அன்று பொதுக்கூட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தடையை மீறி இராஜாஜி பொதுக்கூட்டத்தில் பேச முடிவெடுத்தார். சத்தியாகிரக விதியின்படி அதிகாரிகளுக்கு எழுதித் தெரிவித்துவிட்டு பொதுமக்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். உடனே சட்டத்தை மீறிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலிருந்து வெளியே வந்த நேரத்தில்தான் செளரிசெளரா சம்பவம் நடந்தேறியது. இயக்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி அங்கிருந்த காவல்நிலையத்துக்குள் சென்ற பொதுமக்கள் நிலையத்தைச் சேதப்படுத்திவிட்டு காவலர்களையும் கொன்றுவிட்டனர். தம் போராட்டவழியில் வன்முறை படிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தியடிகள் போராட்டத்தை நிறுத்திவிட்டார். பொதுமக்களின்  மன உறுதியைப் புரிந்துகொள்ளாமல் தாம் இமாலயத்தவறு செய்துவிட்டதாக வெளிப்படையாகக் கூறினார்.
சிறைவாசம் முடிந்து வெளியே வந்த இராஜாஜி, காந்தியடிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்தார். உரையாடலின் முடிவில் ஆசிரமம்  தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்த யங் இந்தியா இதழுக்கு ஆசிரியராக இருக்கும்படி இராஜாஜியிடம் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். பொறுப்பை ஏற்றுக்கொண்ட இராஜாஜி யங் இந்தியாவில் அரசியல்நிகழ்ச்சிகள் தொடர்பாக பல நேரடிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவ்வப்போது சில தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தும்  வெளியிட்டார்.
1922ஆம் ஆண்டு இறுதியில் பீகார் மாகாணத்தில் கயா என்னும் நகரில் காங்கிரஸ் மகாசபை கூடியது. ‘ஓர் ஆண்டுக்குள் சுயராஜ்ஜியம்என்று காந்தியடிகள் அளித்த வாக்குறுதி நிறைவேறாததாலும் செளரிசெளரா சம்பவத்தை முன்னிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை சட்டென நிறுத்திய விதம் பிடிக்காததாலும் லார்ட் ரெடிங் விடுத்த சமரச அழைப்பை காந்தியடிகள் நிராகரித்ததாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தியில் மூழ்கியிருந்தனர். அதனால் காந்தியடிகளின் திட்டத்திலிருந்து விடுபட்டு பழையபடி சட்டசபைகளுக்குச் செல்ல விரும்பினர். தேசபந்து தாஸ், மோதிலால் நேரு, விஜே.பட்டேல் போன்ற பலர் அந்த மாற்றுக்குழுவில் இருந்தனர். அவர்கள் தம் விருப்பத்தை கயை மகாசபையில் வெளிப்படையாகவே வெளிப்படுத்தி ஆதரவைக் கோரினர். காந்தியடிகள் சிறைப்பட்டிருக்கும் தருணத்தில் அவருடைய திட்டத்தை மாற்றக்கூடாது என நினைத்தவர்கள் மற்றொரு அணியினராக இருந்தனர். அவர்களின் குரலாக மகாசபையில் எழுந்து உரையாற்றினார் இராஜகோபாலாச்சாரியார். அடுக்கடுக்கான வாதங்களை செறிவான மொழியில் முன்வைத்து காந்தியடிகளின் திட்டங்களை மாற்றவேண்டும் எனக் கருதியவர்களின் எதிர்வாதங்களை முறியடித்தார். இறுதியில் மாறுதல் வேண்டாதவர்களின் குரலே ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இராஜகோபாலாச்சாரியாரின் உரையையும் வாதத்திறமையையும் வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். இராஜகோபாலச்சாரியார் என்னும் நீளமான பெயரைச் சுருக்கி இராஜாஜி என அழைத்து மகிழ்ந்தனர். அன்றுமுதல் வடநாட்டிலும் தென்னாட்டிலும் இராஜாஜி என்னும் பெயரே நிலைத்துவிட்டது.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு காந்தியடிகள் விடுதலை பெற்றார். காங்கிரஸில் ஒற்றுமை நிலவவேண்டிய அவசியத்தைக் கருதி ஓர் இடைக்கால ஏற்பாட்டை அவர் அறிவித்தார். அதன்படி சட்டசபைத் திட்டத்தை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் சட்டசபைக்குச் செல்ல விழைபவர்கள் செல்லலாம்  என அனுமதி வழங்கப்பட்டது. இராஜாஜி யங் இந்தியா பொறுப்பை மீண்டும் காந்தியடிகளிடமே ஒப்படைத்துவிட்டு தமிழகத்துக்குத் திரும்பினார்.
காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளிலும் கிராம சேவையிலும்  ஈடுபட விரும்பினார் இராஜாஜி. அதற்காக கிராமத்தில் ஓரு ஆசிரமத்தை நிறுவ விரும்பினார் அவர் திட்டத்தைக் கேட்டு, திருச்செங்கோட்டுக்கு அருகில் புதுப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசபாபதிக் கவுண்டர் என்பவர் தென்னை முதலிய மரங்கள் நிறைந்த பெரியதொரு தோட்டப்பகுதியையே நன்கொடையாக அளித்தார். ஆசிரமம் அங்கு நிறுவப்பட்டு, அதற்குக் காந்தி ஆசிரமம் என பெயர் சூட்டப்பட்டது. அங்கேயே குடிசைகள் கட்டியெழுப்பி, இராஜாஜி தம் பிள்ளைகளுடன் வசிக்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில் கதர்ப்பணிகள் மட்டுமே ஆசிரமத்தில் நடைபெற்று வந்தது. நாளடைவில் மற்ற கிராம சேவைகளிலும் ஈடுபட்டது. கிராமவாசிகளுக்காக இலவச வைத்திய சாலையும் இரவுப்பள்ளிகளும் நடத்தப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக மதுவிலக்குப் பிரச்சாரத்தில் இராஜாஜி மிகுந்த ஆர்வம் காட்டினார். அக்கம்பக்கத்தில் உள்ள சின்னச்சின்ன கிராமங்களுக்கு தினந்தோறும் மாட்டுவண்டியில் மற்ற தொண்டர்களுடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதுவிலக்குக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவேவிமோசனம்என்னும் பத்திரிகையைத் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டு காலம் நடத்தினார்.
மழை இல்லாமல் விவசாயத்தில் ஈடுபடமுடியாமல் கிராமத்தினர் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது. கதர் வேலைகள் வழியாக கிராமத்து மக்களுக்கு வேலையும் கூலியும் ஒழுங்காகக் கிடைத்துவந்தது. அவர்கள் வறுமையில் பிடியிலிருந்து ஓரளவேனும் விடுபட்டு நிற்க ஆசிரமம் உதவியாக இருந்தது.
தீண்டாமை விலக்கில் உறுதியான நிலைபாடுடைய இராஜாஜி ஆசிரமம் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே தம்மோடு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்களையும் சேர்த்துக்கொண்டிருந்தார். மற்ற தொண்டர்களோடு அவர்களும் சரிசமமாக நடத்தப்பட்டு வந்தார்கள். எல்லோரும் ஒன்றாகவே கூடியிருந்து உணவு உட்கொண்டனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு அது பெரிய ஒவ்வாமையை அளித்தது. நாட்டில் மழைபெய்யாததற்கு இப்படி சாதிவித்தியாசம் பார்க்காமல் ஒன்றாகக் கூடிச் சேர்ந்திருப்பதுவும் ஒரு காரணம் என்று கதைகட்டிப் பரப்பினார்கள். இன்னொரு புறத்தில் ஆசிரமத்தினர் ஒவ்வொருநாளும் செய்யும் மதுவிலக்குப் பிரச்சாரம் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்த கள்ளுக்கடைக்காரர்களுக்கும் குடிப்பிரியர்களுக்கும் பிடிக்கவில்லை. இவ்வாறாக, ஆசிரமத்துக்கு எதிரான உணர்வுகள் ஒவ்வொரு நாளும் வளரத்தொடங்கின. ஆசிரமத்துக்கு யாரும் போகக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உடனே இராஜாஜி அருகிலிருந்த கிராமங்களுக்குச் சென்று கூட்டம்போட்டு ஆசிரமத்தின் செயல்பாட்டுத் திட்டங்கள் பற்றி விரிவாகவும் நிதானமாகவும் அன்பு கலந்த குரலில் பேசினார். அதற்குப் பிறகு ஆசிரமம் செய்துவந்த தொண்டின் பெருமையை அவர்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார்கள்.
காந்தி ஆசிரமத்தில் தங்கி இராஜாஜி செய்த தொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நிர்மாணவேலைகள் இடையறாமல் நடைபெறுவதற்கு ஒரு நல்ல தூண்டுகோலாக விளங்கியது. திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய சர்க்கா சங்கம் இயங்கியது. தமிழ்மாகாணத்தில் உள்ள எல்லாச் சங்கங்களின் பொறுப்பையும் ஏற்று சிறப்பான முறையில் வழிநடத்தினார் இராஜாஜி.
1930 ஆம் ஆண்டில் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அவர் தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாட்கள் நடந்து 240 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து சென்று தண்டி என்னும் கடற்கரைப்பகுதியை அடைந்து உப்பெடுக்கும் திட்டத்தோடு தன் தொண்டர்களை வழிநடத்திச் சென்றார்.  தமிழ்நாட்டிலும் இதேபோன்றதொரு போராட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தினார் இராஜாஜி. திருச்சியிலிருந்து நூறு தொண்டர்களை நடைப்பயணமாக வழிநடத்திச் சென்று வேதாரண்யத்தில் உள்ள கடற்கரையில் உப்பை அள்ளும் போராட்டமாக அது நடந்தது. வழியில் தென்பட்ட எல்லாக் கிராமங்களிலும் நின்று மக்களிடையே கதர் அணிதல், தீண்டாமை, மதுவிலக்கு ஆகிய கொள்கைகளைப்பற்றி இராஜாஜி உரைநிகழ்த்தியபடி சென்றார். யாத்திரை முடிந்து வேதாரண்யத்தை அடைந்ததும் உப்பையெடுத்து சட்டத்தை மீறாதபடி இராஜாஜியைத் தடுக்கவேண்டும் என நினைத்து காவல்துறையினர் காவல் காத்தனர். வேதாரண்யத்தை அடைந்ததும் கடற்கரைக்குச் செல்லாமல் எல்லாத் தொண்டர்களும் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்த முகாமில் தங்கி ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அது காவலர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. மறுநாள் அதிகாலையில் காவலர்கள் விழித்தெழும் நேரத்துக்கு முன்னாலேயே கடற்கரைக்குச் சென்று நீரைக் காய்ச்சி உப்பை எடுத்தார் இராஜாஜி. தகவல் தெரிந்த காவலர்கள் உடனே அங்கு வந்து அவரைக் கைது செய்தார்கள். விசாரணைக்குப் பிறகு அவர் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ஆம் ஆண்டில் விடுதலையான இராஜாஜி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசியப்பிரச்சார்த்திலும் மதுவிலக்குப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
காங்கிரஸின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டுக்குச் சென்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார் காந்தியடிகள், ஆனால் தாயகம் திரும்பிய ஒரு வாரத்துக்குள்ளேயே அவர் கைது செய்யப்பட்டார். வில்லிங்டன் புதிய வைசிரயாக பதவியேற்றுக்கொண்டார். எல்லா மாகாணத் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இராஜாஜியும் நாலாவது முறையாக கைது செய்யப்பட்டார். மிகக்கொடுமையான அடக்குமுறை தேசமெங்கும் நிலவத் தொடங்கியது.
புதிய அரசியல் திட்டத்தையொட்டி 1938ஆம் ஆண்டில் மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. சட்டசபையைப் பொறுத்தவரையில் இராஜாஜியின் எண்ணம் அப்போது மாறியிருந்தது. மக்களிடையில் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் வழியாக நிர்மாணத் திட்டங்களைப்பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு உருவாக்கப்பட்டுவிட்டது. இனி அதிகாரத்தை வசப்படுத்துவதன் வழியாக புதிய சட்டங்களை இயற்றி நிர்மாணத்திட்டக்கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என்று அவர் நினைத்தார். மாகாண மந்திரிகளுக்குள்ள அதிகாரத்தின் எல்லைக்குட்பட்டே அவற்றை நிகழ்த்தமுடியும் என்பது அவர் எண்ணமாக இருந்தது. அதனால் மாகாண சட்டசபை தேர்தலில் அவர் இறங்கினார். வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சித்தலைவராகவும் பிரதமராகவும் பணியாற்றத் தொடங்கினார்.
இரண்டாண்டு காலம் இராஜாஜி பிரதமராகத் திகழ்ந்தார். இக்குறுகிய காலத்தில் அவர் இயற்றிய சட்டங்கள் தமிழ் மாகாணத்தில் மிகமுக்கியமான மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தன. முதல்முறையாக சேலம் மாவட்டம் மதுவிலக்குச் சட்டத்துக்குட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக சித்தூர், கடப்பா என மேலும் இரு மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, இறுதியில் மாகாணம் முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டது.  அரசின் வருமான இழப்பைச் சுட்டிக்காட்டி பலரும் இராஜாஜியின் நடவடிக்கைகளைக் கண்டித்தார்கள். அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக விற்பனைவரியை அறிமுகப்படுத்தினார் இராஜாஜி. மதுவின் கோரப்பிடியில் சிக்கி அழிந்துவிடாதபடி இராஜாஜி கொண்டு வந்த சட்டம் எண்ணற்ற குடும்பங்களைக் காப்பாற்றியது.
இராஜாஜி இயற்றிய மிகமுக்கியமான இன்னொரு சட்டம் ஆலயநுழைவு உரிமை தொடர்பானது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்களுடன் வைத்தியநாத ஐயர் நிகழ்த்திய ஆலயப்பிரவேசத்தை ஒட்டி, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கவர்னரின் உத்தரவோடு ஒரு தடையாணை விதிக்கப்பட்டு அவ்விசாரணை ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உடனடியாக தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுக்கான சட்டம் இயற்றப்பட்டது.  மதுரையைத் தொடர்ந்து திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் என ஒவ்வொரு நகரங்களிலும் இருந்த ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டோர் தடையின்றிச் சென்று வழிபாடு நிகழ்த்தும் உரிமையைப் பெற்றனர்.
இராஜாஜியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியச்சட்டம் விவசாயக்கடன் நிவாரணச்சட்டமாகும். கணக்கில்லாமல் வட்டி வாங்கும் பணக்காரர்களின் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளை இச்சட்டம் காப்பாற்றியது. விவசாய வேலைகளுக்கு அவர்களுக்குத் தேவையான கடனை மிகக்குறைந்த  வட்டியில் அரசாங்கத்திடமிருந்தே பெறும் வகையில் இச்சட்டம் உதவி செய்தது.
இராஜாஜி அறிவித்த ஆணைக்கிணங்க சென்னை நகரின் நடுப்பகுதியில் நின்றிருந்த கர்னல் நீல் சிலையை இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்டு காட்சிச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சிப்பாய்க்கலகத்தில் ஈடுபட்ட எண்ணற்ற இந்தியச்சிப்பாய்களை இரக்கமில்லாமல் தூக்கிலேற்றி உயிரைப்பறித்த அதிகாரி கர்னல் நீல். அந்தச் சிலை அங்கு நிற்பதே நகரத்துக்கு அவமானம் என்று கருதினார் அவர். பல ஆங்கிலேய அதிகாரிகள் இராஜாஜியைக் கண்டித்தபோதும் அதை அவர் சிறிதும் பொருட்படுத்தாமல் சிலையகற்றத்தை நிறைவேற்றினார்.
தண்ணீர்வசதி இல்லாத கிராமங்களில் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு ஊரில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் மந்திரி பதவியில் இருப்பவர்கள் ஐந்நூறு ரூபாய்க்கும் மேல் சம்பளமாகப் பெறக்கூடாது என்பது காங்கிரஸ் மகாசபையின் தீர்மானம். அப்போது அவர்கள் ஐயாயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்களாக இருந்தார்கள். காங்கிரஸின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக தனக்கும் தன் அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும் சம்பளமாக ஐநூறு மட்டுமே கிடைக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.
இதுபோன்ற பல நற்செயல்களால் சென்னை மாகாண நிர்வாகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆட்சி நிர்வாகத்தில் முதன்மையாக இருந்ததைப்போலவே, பதவிகளைத் துறப்பதிலும் அவர் முதன்மையானவராகவே இருந்தார். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் ஈடுபட்டதும் இந்திய மக்களைக் கேட்காமலேயே இந்தியரையும் போரில் ஈடுபடுத்த விழைந்தது. அதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டித்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதாக இருந்தால், இந்தியர்கள் பிரிட்டனுகு உதவலாம் என்று காங்கிரஸ் மகாசபை கூறியது. ஆனால் ஆங்கில அரசாங்கம் அதை ஏற்க மறுத்தது. காங்கிரஸ் மந்திரிசபைகள் பதவி விலகும் முடிவை எடுத்தன. இந்தியாவிலேயே உடனடியாக மந்திரிசபையைக் கலைத்துவிட்டு முதன்முதலாக வெளியேறியவர் இராஜாஜி. அடுத்த நாளே யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆங்கில அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஆங்கில அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரைத் தொடர்ந்து ஏராளமானோர் கைதானார்கள். எங்கெங்கும் சிறைகள் நிரம்பி வழிந்தன. வேலூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார் இராஜாஜி.
1942ஆம் ஆண்டில்வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தை அறிவித்ததுமே காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். நேரு, சர்தார் படேல் போன்ற பெரிய தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்களின் உள்ளக்கொந்தளிப்பு எல்லை மீறிச் சென்றது. காந்தியடிகளின் உத்தேசத் திட்டத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமின்றி பலரும் தன்னிச்சையாக தந்திக்கம்பிகளை அறுத்தல், தண்டவாளங்களைப் பெயர்த்தல், அரசுக்குச் சொந்தமான கட்டடங்களை எரித்தல், தபால் நிலையங்களை எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். இராஜாஜி அப்போராட்டத்தை விரும்பவில்லை. தனியே விலகியிருந்தார்.
ஒருமுறை காந்தியடிகளைச் சந்திப்பதற்காக பூனாவுக்குச் சென்றிருந்தார் இராஜாஜி. அதற்குப் பிறகு பூனாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இராஜாஜி பேசிக்கொண்டிருந்தபோதே யாரோ ஒருவர் அவர்மீது தாரை ஊற்றி தன் வெறுப்பைப் புலப்படுத்தினார். அவர் முகத்தில் தார் வழிந்தது. கண்கள் பாதிக்கப்பட்டன. அந்த நிலையிலும் கலக்கமின்றி தன்னிடமிருந்த துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு தொடர்ந்து பேசினார்.
நேசநாடுகளின் வெற்றியோடு இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது. இந்தியாவுக்கு தேசிய சர்க்கார் அமைப்பதற்கு ஆங்கில அரசு சம்மதித்தது. நேருவின் தலைமையில் ஓர் இடைக்கால அரசு உருவானது. இராஜாஜி அதில் கைத்தொழில் அமைச்சராகப் பணியேற்றார். இடைக்கால அரசில் பங்கேற்றிருந்த முஸ்லிம் லீகிடமிருந்து போதிய ஆதரவு கிட்டாத நிலையில் அரசால் செயல்படமுடியவில்லை. இதற்கிடையில் எங்கெங்கும் வகுப்புக்கலவரம் வெடித்தது. உயிர்ப்பலி பெருகியது. இந்தியா, பாகிஸ்தான் என நாடு பிரிக்கப்பட்டு சுதந்திரத்தை வழங்கியது ஆங்கில அரசு.
அமைச்சர், கவர்னர், கவர்னர் ஜெனரல் என பல பதவிகளை தம் வாழ்நாளில் வகித்தவர் இராஜாஜி. எல்லா நிலைகளிலும் அவர் மக்கள் நலம் சார்ந்தே முடிவெடுத்தார். உணவுப்பங்கீடு, தானியக்கட்டுப்பாடு ஆகியவை யுத்த காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கத்தினர் கொண்டுவந்த ஏற்பாடுகள். விடுதலை பெற்ற பிறகும் பல காங்கிரஸ் அரசாங்கங்கள் அதை விலக்கவில்லை. நாடெங்கும் அவை அமுலில் இருந்தன. உணவுப்பங்கீடு, தானியக்கட்டுப்பாடு முறைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை நன்கு அறிந்திருந்த இராஜாஜி அவற்றை நாட்டிலேயே முதல் முறையாக நீக்கினார். அதனால் மக்களுக்கு அவர்மீது நம்பிக்கை பிறந்தது. ஒருமுறைஎதிர்காலத்தில் என்னைப்பற்றி யாராவது எழுதினால் உணவுப்பங்கீட்டையும் தானியக்கட்டுப்பாட்டையும் நீக்கியவன் என்று எழுதினால் போதும்என்று அவர் கூறினார். அந்த அளவுக்கு அது முக்கியமான முடிவாக இருந்தது. அவருடைய நிர்வாகத்திறமைக்கு இது ஒரு சான்று.
காந்தியடிகளின் ஐம்பெரும் தோழர்களில் ஒருவர் இராஜாஜி. மற்ற நால்வர் நேரு, படேல், ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத் ஆகியோர். இந்த நால்வருக்கும் காந்தியடிகளுக்கும் அடிக்கடி கருத்துமோதல் நிகழ்வதுண்டு. ஆனால் இறுதியில் அவர்கள் காந்தியடிகளின் நிலைபாட்டுக்கு உறுதுணையாகவே வந்து நின்றுவிடுவார்கள். ஆனால் முரண்பாடு ஏற்படும்போது காந்தியடிகளாகவே இருந்தாலும் தன் எதிர்ப்பை உறுதியாகத் தெரிவிக்கும் குணம் கொண்டவராகவே இருந்தவர் இராஜாஜி. அதனால் பலருக்கு இராஜாஜியைப் பிடிக்காமலே போனது. ஆனால் தனக்கு சரியெனப் பட்டதை  வெளிப்படையாகப் பேசுவது அவர் இயல்பு. காந்தியடிகளே ஒரு சமயத்தில் அவரைத் தன் மனசாட்சியின் காவலர் என்று குறிப்பிட்டதுண்டு. எளிமைக்கும் நேர்மைக்கும் குன்றாத ஊக்கத்துக்கும் இருப்பிடமாக வாழ்ந்தவர் அவர்.


(சர்வோதயம் மலர்கிறது - நவம்பர் 2019 இதழில் வெளிவந்த கட்டுரை)