Home

Monday, 19 January 2026

புத்தகக்காட்சி என்னும் புனித யாத்திரை

 

சென்னை புத்தகக் கண்காட்சி என்பது எழுத்தாளர்களும் வாசகர்களும் பங்கேற்றுக் களிக்கவேண்டிய ஒரு திருவிழா. ஒரு புத்தகத்தைக் கூட வாங்காவிட்டாலும் இரு புறங்களிலும் புத்தகக்கடைகளை மட்டுமே கொண்ட  பாதையின் ஊடே நடந்துசெல்வது ஒரு பேரனுபவம். மேகங்களுக்கு நடுவில் மிதந்துசெல்வதுபோன்ற ஓர் அனுபவத்தை அளிக்கும் இடம். 

திரும்பிய திசையிலெங்கும் எண்ணற்ற தலைப்புகளில் புத்தகங்களைப் பார்ப்பதற்கும் புன்னகை பூத்தபடி கையசைத்து வரவேற்கும் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும்  புத்தகக் கண்காட்சி நல்வாய்ப்பான இடமாக உள்ளது. ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, இரு வாரங்கள் தொடர்ச்சியாக இந்த வாய்ப்பை சென்னை புத்தகக்கண்காட்சி நமக்கு வழங்குகிறது.  ஒரு நாடக விழாவில் தினந்தோறும் நாடகங்களைப் பார்க்கச் செல்வதுபோல அல்லது இசைவிழாவில் தினந்தோறும் கச்சேரிகளுக்குச் செல்வதுபோல, வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று அந்த இன்பத்தில் திளைத்துவிட்டு வரவேண்டும். ஆண்டுமுழுவதும் நினைத்து நினைத்து உரையாடிக் களிப்பதற்கான பல தருணங்களை நாம் அக்கண்காட்சி வழியாக பெறலாம். சென்னை நகரத்திலேயே வசிக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அத்தகு வாய்ப்புகள் அமையக்கூடும். என்னைப் போல வெளியூர்களில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே திட்டமிட்டு அக்கண்காட்சிக்குச் சென்றுவர இயலும். அந்த இரண்டு நாள் அனுபவத்துக்காக ஆண்டுமுழுவதும் நினைத்து நினைத்துக் கனவு காண்பதுகூட ஒருவகையான இனிய அனுபவம். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களையும் மதிப்புரைகளையும் பார்த்துப் பார்த்து வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பது என் வழக்கம். அந்தப் பட்டியலோடுதான் கண்காட்சிக்குச் செல்வேன். எனினும் திட்டமிட்ட புத்தகங்களோடு திட்டமிடாமல் சட்டென பார்வையில் தென்படும் புத்தகங்களில் ஒருசிலவற்றையும் சேர்த்து வாங்குவது வழக்கம். அதைத் தவிர்க்கவே முடியாது. அவற்றையெல்லாம் பெட்டி நிறைய சுமந்துகொண்டு ஊருக்குத் திரும்பும்போது ஏதோ தெரிந்தவர்கள் திருமணத்துக்குச் சென்று வந்ததுபோல மனமெல்லாம் நிறைந்திருக்கும். ஏற்கனவே அறிமுகமான நண்பர்களின் சந்திப்பும் கைகுலுக்கல்களும் தழுவல்களும் உரையாடல்களும் புதிதாக அறிமுகமான நண்பர்களின் உரையாடல்களும் கனவுக்காட்சியைப்போல மனத்தில் மிதந்தபடியே இருக்கும். அப்படிப்பட்ட மனநிறைவையும் மிதக்கும் உணர்வையும் புத்தகக்கண்காட்சியைத் தவிர வேறெந்த இடத்திலிருந்தும் நாம் பெற்றுவிடமுடியாது. சுருக்கமாகச் சொன்னால், புத்தகக் கண்காட்சி என்பது புத்தகங்களை வாங்குவதற்கோ, புரட்டிப் புரட்டி வேடிக்கை பார்ப்பதற்கோ உரிய சந்தை மட்டுமல்ல, வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு புனித யாத்திரைக்கான இடம்.

 

(அந்திமழை இணையதளத்தில் சென்னை புத்தகக்கண்காட்சி தொடர்பான அனுபவப்பகிர்வு பக்கத்தில் 12.01.2016 அன்று இடம்பெற்றது.)