ஆய்
ஆய் என்று தலைக்கு ஒருபுறம் இழுக்கும் மாடுகளை அதட்டும் முனுசாமி மாமாவின் குரல் வீட்டு வாசல் வரைக்கும் கேட்டது. அதற்கப்புறம் நாலைந்து நிமிடங்கள் கழிந்த பிறகுதான் எருவேற்றிய வண்டி வந்தது. கருப்பு சிவப்பு கொடியையே மாமா தலைப்பாகையாக கட்டியிருந்தார். வலது கை வண்டிக்கயிற்றைப் பிடித்திருக்க இடதுகையால் ஒரு மாட்டின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி இருந்தார்.
“என்ன மாப்ள, யாரயோ எதிர்பார்த்து நிக்கற மாதிரி இருக்குது.”
“தயிர்க்கார அத்தைக்காக நிக்கறேன் மாமா.”
“யாரு, அந்த சாலையாம்பாளையத்து கொண்டக்காரம்மாதான? அது எங்க இப்ப வரப்போவுது? அங்க டாக்டரூட்டமா ஊட்டுல இப்பதான் ஒரு கதைய ஆரம்பிச்சிருக்குது. இங்க வந்து சேர இன்னும் நேரமாவும். நீ எதுக்குடா வெயில்ல நின்னு வீணா கருத்துப் போற.”