Home

Sunday, 13 September 2026

மனம் கவர்ந்த பாடல்கள்

 

சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் கவிஞர்கள் அனைவரும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகையான வடிவங்களில் எழுதினார்கள். திருத்தக்கதேவர் விருத்தப்பாக்களை எழுதி உயிரூட்டினார். மரபான வடிவங்களை மீறி மக்களைக் கவர்வதற்காக புதிய வடிவங்களில் பாடல்களை எழுதுவது இலக்கிய உலகத்தின் தேவையாக இருந்தது. அருணகிரிநாதர் சந்தப்பாடல்களை எழுதி அவ்வடிவத்துக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்துப் பாடல்களை எழுதி மற்றொரு பாதையை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து கண்ணி, கும்மி என பல புதிய வடிவங்கள் உருவாகின. பாரதியாரும் பாரதிதாசனும் இருவகை வடிவங்களிலும் எழுச்சியோடு பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் இடம்பிடித்தனர்.


அதே நேரத்தில், சமூகத்தில் பொதுக்கல்விமுறை அறிமுகமாகி நாடெங்கும் பள்ளிக்கூடங்கள் இயங்கத் தொடங்கின. அக்காலகட்டத்தில் சிறார்களுக்கென தனி வகைமையில் பாடல்களும் கதைகளும் தேவைப்பட்டன. சிறார்களுக்கென அதுவரை வாய்மொழி வடிவத்திலேயே புழங்கிவந்த பாடல்களும் கதைகளும் எழுத்துவடிவில் வெளிவந்து அவர்களைக் கவர்ந்தன. அவற்றில் சில பாடல்கள் பாடநூல்களிலும் இடம்பெற்றன.

வளர்ந்துவரும் சிறார்களின் தலைமுறையிடம் நல்ல எண்ணங்களையும் நல்ல கருத்துகளையும் பதியவைப்பதற்கான ஒரு சமூகத்தேவை உருவானது. அத்தேவையை ஈடுகட்டும் வகையில் சிறார்களுக்காக பாரதியார் எழுதிய பாடல்கள் அமைந்திருந்தன. கெடுவாய்ப்பாக, அன்றிருந்த அரசியல் சூழல் காரணமாக பாரதியாரின் பாடல்கள் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆயினும் பத்திரிகைகளில் வெளிவந்த அப்பாடல்கள் அனைவராலும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டு வாய்வழியாகவே பரவத் தொடங்கின. அப்பாடல்களில் இயற்கையாகவே அமைந்திருந்த சந்தத்தினாலும் தாளக்கட்டினாலும் அவை சிறார்களை ஈர்த்தன. ஒரு நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் இன்றைய சிறார்களும் அப்பாடல்களைப் படித்து மகிழ்கிறார்கள்.

பாரதியார் தொடங்கிவைத்த பாதையில் சிறார்களுக்கென எழுதுகிறவர்களாக நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இன்றுவரை உருவாகிவிட்டனர். சிறார்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் எளிய சொற்கட்டு, இனிய தாளம், குறும்பு, கற்பனை, விளையாட்டு அனைத்தையும் ஓசைநயத்துடன் வெளிப்படுத்தும் பாடல்களெல்லாம் மிகவிரைவில் அவர்களுடைய நெஞ்சில் இடம்பிடித்துவிடுகின்றன. 

இவ்விதத்தில் இன்றைய தலைமுறையில் சிறார்களுக்கென பாடல்களை எழுதித் தம்மை நிறுவிக்கொண்ட கவிஞர்களின் வரிசையில் கிருங்கை சேதுபதி முக்கியமான கவிஞர். ஏற்கனவே பூந்தடம், சிரிக்கும் பனைமரம், சிறகு முளைத்த யானை, எறும்பின் கதை, தேர்வு எழுதிய பூதம் என ஐந்து பாடல் தொகுதிகள் வந்துள்ளன. இவருடைய ’பவளப்பந்து’ ஆறாவது தொகுதி. இவற்றில் ‘சிறகு முளைத்த யானை’ தொகுதிக்காக சாகித்திய அகாதமியின் பால சாகித்திய புரஸ்கார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தொகுதியில் உள்ள 43 பாடல்களை சின்னப் பிள்ளையின் விண்ணப்பம், புதிய விலங்கு, எல்லை கல்விக்கு இல்லை, வரங்கள் தருமே மரங்கள், விடைகள் கொடுக்கும் கேள்விகள், ஞானம் தந்த கனிகள் என ஆறு  வெவ்வேறு தலைப்புகளில் பகுத்து வரிசைப்படுத்தியிருக்கிறார் கிருங்கை சேதுபதி. வசீகரமான சொற்கட்டும் இனிய தாளக்கட்டும் கொண்டிருக்கும் ஒவ்வொரு பாட்டையும் வாய்விட்டு ரசித்துப் பாடும்படி எழுதியிருக்கிறார்.

‘மாறுவேடம் போட்ட ராஜா’ என்னும் பாட்டில் ஒரு  கதை அடங்கியிருக்கிறது. சிறார்கள் விரும்பிக் கேட்கும் வகையிலான ஒரு ராஜாவின் கதை. ஒரு ராஜா மாறுவேடம் போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் நகர்வலம்  செல்கிறார். ஏதோ ஒரிடத்தில் எப்படியோ பாதை மாறிவிடுகிறது. அரண்மனைக்குத் திரும்பிச் செல்லும் வழி தெரியாமல் தடுமாறி நின்றுவிடுகிறார் அந்த ராஜா.

மறைவிடத்தில் இருக்கும் ஆட்களையோ, குதிரையோ அவரால் அழைக்கமுடியவில்லை. என்ன செய்வது என கையைப் பிசைந்தபடி தவித்திருந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு நாய் வந்து அவருடைய காலடியில் நிற்கிறது. அவர் வளர்த்த நாய்தான் அது. தன் மோப்ப சக்தியால் ராஜாவை அந்த நாய் அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறது. உடனே அந்த நாய் ராஜாவை அரண்மனைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறது. நாய் முன்னே செல்ல, ராஜா பின்னால் செல்கிறார். எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத வகையில் நல்ல தாளக்கட்டோடு இருபது வரிகளில் அழகானதொரு பாடலை எழுதியிருக்கிறார் கிருங்கை சேதுபதி.

’தாத்தாவின் தாடி’ என்பதுன் இன்னொரு பாடல். அதுவும் சிறார்கள் ரசித்துப் படிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருக்கிறார். அவருடைய தாடி முகத்திலிருந்து தொடங்கி தரையைத் தொடும் அளவுக்கு மிகவும் நீளமானது. தாத்தாவுக்கு அந்தத் தாடி மீது எல்லையில்லாத பாசம். ஒரு குழந்தையைச் சீராட்டி வளர்ப்பதுபோல எண்ணெய் தடவி சிக்கில்லாதபடி சீவி அதை வளர்க்கிறார்.

பல பேர் அவரை நெருங்கி தாடியை மழிக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்களுடைய சொற்களை அவர் பொருட்படுத்தவே இல்லை. தாடியைப் பராமரிப்பதிலேயே  கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

சொல்லிச்சொல்லிச் சலித்துவிட்ட பாட்டி ஒருநாள் தாத்தா தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாடியைக் கத்தரித்துவிடுகிறார். விழித்தெழுந்து பார்த்த தாத்தா தாடி காணாமல் போன விதத்தை அறிந்து திகைத்துவிடுகிறார்.

 

மண்ணைக் கூட்டும் தாடியோ

மாயமாகிப் போச்சு

மறுபடியும் வளர்ப்பதற்கு

ஆறு வருஷம் ஆச்சு

 

என்று கூறி அந்தப் பாடலை முடித்துவைக்கிறார் கிருங்கை சேதுபதி. தொடக்கவரி முதல் இறுதிவரி வரைக்கும் சிரித்துக்கொண்டே படிப்பதற்கு ஏற்ற பாடலாக அமைந்திருக்கிறது.

’குட்டி போட வந்த அணில்’ என்னும் பாடலை அழகானதொரு காட்சிச்சித்திரமாக வடிவமைத்திருக்கிறார் கிருங்கை சேதுபதி. அணில் கூடுகட்டுவதில் தொடங்கி சின்ன அணில்கள் உறங்குவது வரையிலுமான காட்சிகள் அப்பாடலில் அடுக்கடுக்காக இடம்பெற்றிருக்கின்றன.

 

சன்னல் ஓரம் அணில் ஒன்று

சந்தோசமாய் ஓடுது

சணலும் நாரும் எடுத்துவந்து

வீடு ஒன்று கட்டுது

 

தின்னப் பழங்கள் தேடுது

தெளிந்த நீரும் பருகுது

என்ன வேலை இருந்தாலும்

இரவில் நன்றாய்த் தூங்குது

 

சின்ன அணில் குட்டிகள்

செம்மையாக இருக்குது

இன்னும் கொஞ்ச நாளிலே

எல்லாம் போகப் போகுது

 

எத்தனைமுறை படித்தாலும் சுவை குன்றாத பாடல்.

     கதைப்பாடல்கள், காட்சிப்பாடல்கள் மட்டுமன்றி விடுகதைப்பாடல்களையும் இத்தொகுதியில் எழுதியிருக்கிறார் கிருங்கை சேதுபதி. ’புதிய விலங்கு’ என்னும் பாடல் புன்னகைக்க வைக்கிற விடுகதையை உள்ளடக்கியிருக்கிறது.

    

அழகான கொம்பிருக்கும்

ஆனால் அது மாடு இல்லை

 

நீளமான வால் இருக்கும்

ஆனால் அது புலியும் இல்லை

 

தூணைப்போல கால் இருக்கும்

ஆனால் அது யானை இல்லை

 

காணப் புது உருவம்தான்

கவிதா வரைந்த ஓவியம்தான்

 

குழந்தைகள் வரையும் ஓவியங்களுக்கு ஒருவராலும் பெயரிடமுடியாது. ஒரே ஒரு கோட்டை வரைந்து அதை மரம் என்று சொல்லும் குழந்தையும் உண்டு. குச்சி என்று சொல்லும் குழந்தையும் உண்டு. மலை என்று சொல்லும் குழந்தையும் உண்டு. குழந்தைகள் தம் மனத்துக்குள் நினைக்கும் எல்லா உருவங்களுக்குமான மொத்த வெளிப்பாடாகவே அவர்கள் தீட்டும் ஓவியங்களும் அமைந்திருக்க முடியும்.

கிருங்கை சேதுபதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிக்கத்தக்க விதத்தில் அமைந்துள்ளது. அவற்றை ஒருமுறை வாய்விட்டுப் படிக்கும் சிறார்கள் மீண்டும் மீண்டும் அப்பாடல்களைப் படிக்கவும் பாடவும் விரும்புவார்கள். எழுத்துமுயற்சிகளில் தொடர்ந்து ஊக்கமுடன் ஈடுபட கிருங்கை சேதுபதிக்கு என் வாழ்த்துகள்.

 

(முல்லை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் கிருங்கை சேதுபதியின் ’பவளப்பந்து’ சிறார் பாடல் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)