Home

Saturday 26 November 2022

வரலாற்றின் தடம்

 

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசமெங்கும் சுதந்திரப்போராட்ட எழுச்சி சுடர்விட்டது. அதற்கு வித்திட்டவர்கள் விபின் சந்திரபால், திலகர், லாலா லஜபதி ராய் ஆகிய முப்பெருந்தலைவர்கள். 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கப்பிரிவினையை எதிர்த்து உருவான எழுச்சியில் லஜபதி ராய் பங்கேற்றார். அந்த தன்னிச்சையான எழுச்சியை சுதந்திர வேட்கையாக மடை மாற்றியவர்களில் முக்கியமானவர் அவர். தமக்கு எதிராக உருவான எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய  ஆங்கிலேய அரசு லஜபதி ராயை இந்தியாவிலிருந்து மண்டேலாவுக்கு நாடுகடத்தியது. அதை அறிந்த இந்திய சமூகம் திகைப்பில் ஆழ்ந்தது. அதுவே மெல்ல மெல்ல தீப்பொறியாக மாறி சுதந்திர வேட்கை நாடெங்கும் பரவ வழிவகுத்தது.

வண்ணவண்ண முகங்கள் - விட்டல்ராவின் ‘காலவெளி’


நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் புதைந்திருக்கும் வண்ணமுகங்களையும் ஒரே நேரத்தில் ஒளியையும் நிழலையும் இணைத்த சித்திரம்போலக் காட்சியளிக்கும் மரத்தடி நிழலென ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் எழுதி 1990 ஆம் ஆண்டில் முதல்பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் கடந்த நிலையிலும் இன்றைய சூழலுக்கும் ஏற்றதாகவே உள்ளது நாவல்.

Sunday 20 November 2022

மரணம் - சிறுகதை

 

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்  கிடந்தது.

தியாக தீபங்கள்

 

காந்தியடிகளின் தலைமையில் இருவிதமான அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று இந்திய விடுதலைப்போராட்டம். மற்றொன்று தேச நிர்மாணப்பணிகளை நிறைவேற்றுதல். இவ்விரு பாதைகளிலும் ஈடுபட்டு தியாக உணர்வுடன்  தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகள் பலர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என்கிற மத வேறுபாடுகளைக் கருதாது நல்லிணக்கப்பார்வையுடன் நாட்டின் மேன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு உழைத்தவர்கள் அவர்கள்.

Sunday 13 November 2022

ஊருக்கு வந்தவன் - சிறுகதை

 ஜன்னலுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் முட்களை தற்செயலாக உற்றுப் பார்த்தான். முட்கள் துடித்து நகரும் ஓசை உடனடியாக ஓர் இதயத்தை உருவகப்படுத்தியது. தொடர்ந்து அந்த இதயத்துக்கு உரியவனாக அழகேசனை நினைத்துக்கொண்டான். இரவின் அமைதியைக் குலைத்தபடி சிறிய அளவில் விடாமல் ஒலித்த அந்த ஓசையின் வேகம் நொடிக்குநொடி பெருகுவதைப் போலிருந்தது. ஒரு பெரிய மத்தளத்தை இடைவிடாமல் ஓங்கி அடிப்பதைப்போல அந்த ஓசை அறையில் நிரம்பியது. ஒருவித பயம் மனத்தைக் கவ்வி ஆட்டிப் படைத்தது.

ஒரு நாவல் ஒரு கேள்வி

 

மூத்த தலைமுறையைச் சேர்ந்த கன்னட நாவலாசிரியர்களுள் ஒருவர் கே.வி.ஐயர்.   மல்யுத்தம் பயிற்றுவிக்கும் கலைஞராக  பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நிலையில் தற்செயலாக எழுத்துத்துறையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியவர்.   அவருடைய முக்கியமான நாவல் "சாந்தலை". பதினேழு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தநாவலைப் படித்த அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் பதிந்துள்ளது.  

Sunday 6 November 2022

காலத்தின் விளிம்பில் - சிறுகதை

 பூந்தோட்டம்என்னும் இணைய வார இதழில் நான் எழுதத்தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது-. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்திவந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான காரணமும் இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப்பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

ஜெயமோகனின் சிறுகதைகள் : அகச்சித்திரமும் புறச்சித்திரமும்

  

மூடியிருக்கும் பெட்டியென மனத்தை உருவகித்துக்கொண்டால், அப்பெட்டிக்குள் என்ன இருக்குமென ஒருவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆபரணங்கள் நிறைந்திருக்கலாம். அல்லது ஆடைகளாகவும் இருக்கலாம். கூழாங்கற்கள்  மணல்கட்டிகள், கரித்துண்டுகள், கொலைக்கருவிகள் என ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். பாம்புக்கூடைகள், பூந்தொட்டிகள், அமுதம், நஞ்சு என எதுவும் இருக்கலாம். எல்லாச் சாத்தியங்களும் உண்டு. எதையும் முழுக்க ஏற்கவும் இயலாது. நிராகரிக்கவும் இயலாது. மனித இயல்பே ஏற்கவும் இயலாத, நிராகரிக்கவும் இயலாத கலவையாக இருக்கும் சூழலில் மனமும் அப்படித்தானே இருக்கமுடியும். மனம் என்பது எது என்னும் புதிரான ஒற்றைக் கேள்விக்கு எதார்த்த வாழ்வில் ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் கலைஞனால் அப்படி எளிதாக நகர்ந்துவிட முடிவதில்லை. அவன் தன் கலையின் வழியாக வெவ்வேறு வாழ்க்கைத்தருணங்களை அலசி ஆராய்ந்து ஆயிரம் பதில்களைக் கண்டறிகிறான்.