Home

Sunday, 20 November 2022

மரணம் - சிறுகதை

 

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்  கிடந்தது.

கணிப்பொறிப் பழுதுகளைக் கவனித்து நீக்கும் பயிற்சி பெற்ற சுலோச்சனாவின் அறை நான்கு அறைகள் தள்ளியிருந்தது. நேரிடையாகச் சொல்லி கையோடு அழைத்துவந்துவிடும் நோக்கத்தோடு வேகமாக இருக்கையைவிட்டு எழுந்த போது துப்பட்டாவின் முனை நாற்காலி விளிம்பில் சிக்கிக்கொண்டது. “அவசரம்னு ஏந்திருக்கறப்பதான் நமக்குன்னு ஆயிரம் பிரச்சினைங்க வரும்” என்று முணுமுணுத்தபடி, வேகமாக துப்பட்டாவை விடுவித்துக்கொண்டு நகர முற்பட்டபோது கைப்பேசி அழைப்பு ஒளிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். புதிய எண். எடுக்கலாமா வேண்டாமா என்று சில கணங்கள் தயக்கமாக இருந்தது. பிறகு கைப்பேசியை காதோடு அழுத்தியபடி சுலோச்சனாவின் அறையை நோக்கி நடந்துகொண்டே பேச்சுக்கொடுத்தேன். மறுமுனையில் கரகரத்த குரலில் “அக்கா அக்கா, நான்க்கா, வித்யாக்கா தம்பி பேசறன்க்கா…” என்றொரு ஆண் சொல்வது கேட்டது. மறுநொடியே அவன் முகம் நினைவுக்கு வந்துவிட்டது.  ஒல்லியான உடல். சுருள்முடி. வித்யாவை நினைவுபடுத்தும் அகன்ற கண்கள். அவன் சொல்லப் போகும் செய்தி விவரத்தை என் மனம் புரிந்துகொண்டாலும் பதற்றத்தோடு “சொல்லுப்பா” என்றேன். “வித்யாக்கா உயிர் பிரிஞ்சிடுச்சிக்கா. மூளநரம்புல ஒன்னு வெடிச்சி ரத்தம் க்ளாட்டாய்டுச்சாம்க்கா…” அழுகையோடு அவன் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டேன்.

“ஆபீஸ்ல மத்தவங்களுக்கும் சொல்லிடுங்க்கா. நெல்லித்தோப்பு ஊட்டுல சாஸ்திரப்படி கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டுதான் போவணுமாம். ஆஸ்பத்திரில வேல எப்ப முடியுமோ தெரியல. ஒரு நாலு மணிக்கு அங்க வந்துட்டு நாலரைக்கெல்லாம் கெளம்பலாம்ன்னு திட்டம். பாக்கறவங்க யாராச்சிம் இருந்தாங்கன்னா அங்க வந்துடச் சொல்லுங்க்க்கா…”

உரையாடல் நின்றதும் ஒரு கணம் எதுவும் புரியவில்லை. சுலோச்சனாவின் அறைக்குள் வேகமாக நுழைந்து பரபரப்போடு கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த சுலோச்சனாவின் முதுகைத் தொட்டு அழுத்தினேன். ”என்ன விஜி, அதுக்குள்ள காப்பியா? வெளியில கெளம்பறத சுப்பையா சாமி பாத்துட்டா, அட்வைஸ் பண்ணியே கொல பண்ணிருமேடி” என்று திரும்பாமலேயே சொன்னாள் அவள்.

“அதுக்கு வரலைடி சுலோச்சனா. இது வேற விஷயம். என் சிஸ்டம் நின்ன நெலயில மூச்சே போனாப்புல ஹேங்காயிடுச்சி. அத சொல்லத்தான் வந்தேன். அதுக்குள்ள இன்னொரு செய்தியும் வந்துட்டுது. நம்ம வித்யா செத்துட்டாளாம்.” வேகத்தில் வார்த்தைகளைக் கொட்டினேன்.

சட்டென்று எழுந்து நின்றுவிட்டாள் சுலோச்சனா. “என்னடி லூஸாட்டம் பேசற? இன் எ பெட்டெர் வே ஷீ ஈஸ் ரிக்கவரிங்க்னு அந்த டாக்டர் மூணு நாள் முன்னால நான் பாக்கப் போனப்போ சொன்னாரே, யாருடி சொன்னா ஒனக்கு?”  என்று வேகமாகக் கேட்டாள் .

“இப்பதான்டி. அவ தம்பி பேசனான்.”

சுலோச்சனா ஒரு பெருமூச்சோடு சட்டென்று அடங்கினாள். எதுவும் பேசாமல் என் முகத்தையே சில கணங்கள் வெறித்துப் பார்த்தபடி நின்றாள். பிறகு அறைமூலையின் பக்கமாக தன் பார்வையைத் திருப்பினாள். அவள் தொண்டை இறுகி அடங்குவதை பருத்து அடங்கும் நரம்புகள் வெளிப்படுத்தின. த்ச் த்ச் என்றவாறு மூன்றுநான்கு தரம் உச்சுக்கொட்டியபடி தலையை மேலும்கீழும் அசைத்துக்கொண்டாள்.

அக்கணத்தில் மீண்டும் என் கைப்பேசி ஒளிர்ந்தது. வேகமாக எடுத்துப் பார்த்தேன். குமாரின் பெயர் சுடர்விட்டது. அது பேசுவதற்கான சூழலாக இல்லாததால் அமைதியாக நின்றேன். சுலோச்சனாவின்மீதே என் கவனம் குவிந்திருந்தது.

“நான், அவ, மல்லிகா, ஜெயந்தி, அப்பறம் திண்டிவனம் ப்ராஞ்சில இருக்காளே கிளாரா நாங்கள்ளாம் அந்த காலத்துல ஒரே செட்டுடி. தொண்ணொத்தொன்னு செட். சென்னை தி.நகர். பிராஞ்சில ஒன்னா ஒரே நாள்ல சேந்தம். எங்க போனாலும் நாங்க ஒன்னாதான் இருப்போம். பஞ்சகல்யாணின்னு பட்டப்பேரு வச்சிதான் ப்ராஞ்சில எல்லோரும் எங்கள கூப்புடுவாங்க. கல்யாணத்துக்கப்புறம் நான்தான் மொதல்ல பாண்டிச்சேரிக்கு வந்தன். அதுக்கப்பறமா மல்லிகா, ஜெயந்தி ரெண்டு பேரும்  மரக்காணம், சிதம்பரம்னு அலஞ்சிட்டு அதுக்கப்பறமா இங்க மாத்தல் வாங்கி வந்து சேந்தாங்க. கடசியாதான் அவ வந்து சேந்தா. படுபாவி, இப்படி சட்டுனு என்னமோ டிரான்ஸ்பர் ஆர்டர வாங்கிகினு கெளம்பறாப்புல பாதியில கெளம்பிப் போயிட்டாளே” சொல்லும்போதே சுலோச்சனாவுக்கு தொண்டை அடைத்தது. சொற்கள் உடைந்து வெளிப்பட்டன.

அவளால் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொங்கிப்பொங்கி எழும் வார்த்தைகளையும் தடுத்துநிறுத்த முடியவில்லை. கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி “அவளுக்கு இருந்த உடம்பு உறுதிக்கு நூறு வயசு  வாழலாம்டி. கட்டையில போறவன், அநியாயமா அவ மேல எண்ணெய ஊத்தி கொளுத்தி உயிர பலிவாங்கிட்டான்டி…” என்றாள்.

அழுகைச் சத்தமும் நாங்கள் நின்றிருந்த கோலமும் கூடத்தில் இருந்த பலரையும் எங்களைக் கவனிக்கவைத்துவிட்டது. திறந்த கோப்புகளை மூடிவைத்தபடி “என்னடி?” என்று பார்வதி கேட்டாள். “நம்ம வித்யா செத்துட்டாளாம்டி” என்றேன். நொடிநேரத்தில் விஷயம் நெருப்பைப்போல அலுவலகமெங்கும் பரவிவிட்டது. ரெக்கார்ட் செக்‌ஷனிலிருந்து வேகமாக எங்களைத் தேடி வந்த மல்லிகா விழிகள் தளும்ப சுலோச்சனாவின் கைகளை அழுத்திப் பற்றிக்கொண்டாள். “எப்பிடிடி? நம்ம வித்யா…. நம்ம வித்யா……?” என்று வார்த்தை வராமல் திணறினாள். அவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் அவள் கன்னங்களில் இறங்கியது. கைப்பேசியில் குமாரின் பெயர் மீண்டும் ஒரு சில கணங்களுக்கு ஒளிர்ந்துவிட்டு நின்றது.  

எல்லோரும் வேலைகளை நிறுத்தி ஒருகணம் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். “சங்கத்துல சொல்லி இப்பவே ஒரு போர்டு எழுதி வைக்க ஏற்பாடு செய்யறேன்” என்றபடி சொக்கலிங்கம் எழுந்துபோனார். ”எல்லா கண்டங்களயும் தாண்டி வந்துட்டாள்னு அந்த டாக்டரு போன சனிக்கெழம பாக்கப்போனப்போ சொன்னாரு. இப்பிடி பொசுக்குனு போவறதுக்கா அவ்வளவு வேகவேகமா கொணமாச்சி?” என்று மனம்நொந்து சொன்னார் சரஸ்வதி மேடம். சுப்பையா சார் எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேட்ட பிறகு, “தங்கமான பொண்ணு. என் சர்வீஸ்ல அப்பிடி கொஞ்ச பேரத்தான் பாத்திருக்கேன். அவ்ளோ தெறமயும் இப்பிடி அற்பாயுசுல போவறதுக்கா? கடவுளே. கடவுளே. அவன் போடற கணக்க ஒருநாளும் நம்மால புரிஞ்சிக்கமுடியாதுபோல” என்று உருக்கமாகச் சொன்னார். பிறகு, “இப்பிடி ஒருத்தவங்கள ஒருத்தவங்க மசமசனு பாத்துகினிருந்தா என்னம்மா அர்த்தம்? ஜி.எம்.கிட்ட நான் சொல்லிக்கறேன். யாராச்சிம் நாலு பேரு நம்ம ஆபீஸ் சார்பா போயி ஒரு மாலையோ மலர்வளையமோ வச்சிட்டு ஊட்டுக்கு போங்கம்மா” என்று சொல்லிவிட்டு ஜி.எம்.அறைக்குள் சென்றார். சிடுசிடுக்காமல் ஒரு வார்த்தைகூடப் பேசத் தெரியாதவர் அவர். அவரா அப்படிப் பேசுகிறார் என்று அக்கணத்தில் தோன்றியது.

பரிமளா பெருமூச்சோடு “இதான்டி வாழ்க்கை. பார்த்துக்கோ. தூங்கையில வாங்கற மூச்சு சுழிமாறி போனாலும் போச்சி” என்றபடி அருகில் வந்து நின்றாள். பிறகு, “மனசால தங்கமா இருக்கறவங்கள கடவுளு அதிக நாளு வாழ உடமாட்டாருபோல” என்று கசப்பாகச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள். அழுகையை அடக்கிக் கலங்கியதில் அவள் கண்கள் ரத்தம் கட்டியதுபோலச்  சிவந்து விட்டன.

“கொளுத்திட்டு ஓடிப் போயிட்டானே, அந்த கபோதிய புடிச்சாங்களா இல்லயாடி?” கேஷ் செக்‌ஷனில் ஆண்டாள் பேசுவது கேட்டது.

“இப்ப அதுவாடி முக்கியம? எங்கயோ போய் தொலஞ்சான் உடு…” கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொன்னாள் பரிமளா. “கட்டையில போறவன் இருந்தா என்ன, செத்தா என்ன?”

“சட்டத்துல அப்பிடிலாம் உடமுடியாது பாத்துக்கோ. மாட்டினான்னா மவனுக்கு என்னைக்கா இருந்தாலும் தூக்குதான்டி..”

“நம்ம சட்டம்தான? புடிச்ச மக்காநாளே தூக்குல தொங்க உட்டுட்டுதான் மறுவேலயில எறங்கும். போய் ஆவபோற வேலய பாருடி. நெனப்புதான் பொழப்ப கெடுக்குது ஒனக்கு…” பரிமளாவின் வார்த்தைகளில் கசப்பும் அவநம்பிக்கையும் வழிந்தன.

“எதுக்குடி கொளுத்தனானாம்? ரெண்டுபேருக்குள்ள அந்த அளவுக்கு அப்பிடி என்னதான்டி சண்ட?” ப்ரிண்டரில் புதிய தாள்சுருளைப் பொருத்தி முடுக்கியபடி கேட்டாள் சாரதா.

“ஊர சுத்திட்டு சுத்திட்டு வந்து, வேளாவேளைக்கி பொறுக்கி கொட்டிகிட்டானில்ல, அந்த கொழுப்பாலதான் கொளுத்திட்டு ஓடிட்டான்..” வெடிக்கிறமாதிரி சொன்னாள் ஜெயந்தி.

“ஐ.டி.லதான அவன் வேல பார்த்தான்?”

“அதெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாலடி. ப்ராஜெக்ட் இல்லனு சீட்ட கிழிச்சி ஊட்டுக்கு அனுப்பிட்டாங்க. வேற கம்பெனிங்க எதுலயும் வேல கெடக்கலை. அதுல ஆரம்பிச்ச பிரச்சினதான் இவ்ளோ தூரம் கொண்டாந்து உட்டுடிச்சி……”

“ஊட்டுல பெரியவங்க யாருமில்லயா?”

“யாரு இருந்து என்னடி பிரயோஜனம்? பெங்களூரு போறேன், ஐதராபாத்து போறேன், அங்கதான் எனக்கு சான்ஸ் நெறய கெடைக்கும். எப்படியாச்சிம் பணம் பொரட்டி குடுன்னு அப்பப்ப கேட்டு தொல்ல குடுப்பானாம்.  வாய்வார்த்தயா ஆரம்பிச்ச சண்ட. கடசிவரைக்கும் அது நிக்கவே இல்ல…..”

“சனியன் எங்கயாச்சிம் தொலயட்டும் உடுன்னு பணத்த உட்டு கெடாசியிருக்கணும். இவளாச்சிம் நிம்மதியா இருந்திருக்கலாமில்ல?”

“எங்கடி நிம்மதியா இருக்க உட்டான் அவன்? அந்த கருமாந்திரம் புடிச்சவனுக்கு எத்தன தரம் கடன் வாங்கி குடுத்தா தெரியுமா? ஆபீஸ்ல இருக்கற எல்லா லோனும் வாங்கி குடுத்துட்டா. அவளுக்காக நான் ரெண்டு தரம்  ஷூரிட்டி கையெழுத்து போட்டிருக்கன். பெருமாள் கோயில் தெருவுல வட்டிக்கு கடன் குடுக்குமே ஒரு அக்கா, அதுங்கிட்ட வேற வாங்கி குடுத்தனுப்புனா. எல்லாத்தயும் அழிச்சிட்டு மரமாட்டம் வந்துவந்து நின்னான்டி அவன். கேக்கும்போதுலாம் தொரைக்கி எடுத்து நீட்டலன்னுதான் தூங்கற சமயத்துல எண்ணெய ஊத்தி கொளுத்திட்டு ஓடிட்டான்…”

எனக்கு ஒவ்வொருவரிடமும் வித்யாவைப்பற்றி விரிவாகச் சொல்லவேண்டும்போல பரபரத்தது. அதே சமயத்தில் இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது என்றும் தோன்றியபடி இருந்தது. சுலோச்சனாவும் மல்லிகாவும் சென்னையைவிட்டு வெளியேறிய பிறகு அதே கிளையில் வேலைக்குச் சேர்ந்தவள் நான். முதல்நாளே எனக்கு வித்யா தோழியாகக் கிடைத்தாள். மிகவும் கஷ்டமான குடும்பம் அவளுடையது. அப்பா இல்லை. இரண்டு தங்கைகளைப் படிக்கவைத்து வேலையில் அமர்த்தித் திருமணம் செய்துகொடுத்தாள். இரண்டு தம்பிகள் படிப்பை முடித்து கரையேறுகிறவரைக்கும் குடும்பத்தைத் தோளில் தாங்கினாள். முப்பத்திரண்டுவயது வரைக்கும் வேறு நினைப்புக்கே அவள் நெஞ்சில் இடமில்லாமல் இருந்தது. பல சந்தர்ப்பங்களை இதற்காகவே உருவாக்கி எடுத்துச் சொன்ன யோசனைகள் எதையுமே அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. ”ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் ஆட்டமே வேணாம்டி விஜி. இந்த கடமைங்க எல்லாத்தயும் முடிக்கறவரைக்கும் எந்த யோசனைக்கும் என் நெஞ்சில எடமில்ல தெரிஞ்சிக்கோ. எனக்குனு ஒருத்தன் இனிமேலவா பொறக்க போறான்? எங்கயாச்சிம் பொறந்திருப்பான்ல. அவனா தேடி வருவான் உடுடி” என்று எதையாவது விரக்தியாகச் சிரித்தபடி சொல்லித் தப்பித்தாள்.  எனக்குத் திருமணமாகி பாண்டிச்சேரிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கிளம்பிய தினம், மதியம் உணவு இடைவேளையில், “இனிமே கல்யாணம் கல்யாணம்னு ஞாபகப்படுத்தக்கூட எனக்கு ஆளில்லாம போயிடுச்சி விஜி” என்று கசந்த சிரிப்போடு சொன்னபோது அவள் விழியோரம் கண்ணீர்முத்துகள் திரண்டிருந்ததைப் பார்த்தேன். “அப்பிடிலாம் லேசா உட்டுடற ஆள் கெடயாதும்மா  நான், தெரியுமா?” என்று சிரித்தும் அவள் இடுப்பைக் கிள்ளியும் சூழலை இயல்பாக்கினேன். “எங்க இருந்தாலும் வாரத்துல ரெண்டுதரம் போன்போட்டு இன்விடேஷன் எப்படி குடுக்கப்போறன்னு கேட்டுட்டே இருப்பேன்” என்றேன். சொன்னபடி எட்டு வருஷங்கள் சலிப்பே இல்லாமல் கேட்டபடியேதான் இருந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து பள்ளிக்குப் போகிற வயதில்தான் அவள் திருமணமே நடைபெற்றது.

எல்லோரும் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் வித்யாவின் நினைவுகளைச் சொல்லி அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். சீரான ஓசையோடு ப்ரிண்டர் ஓடிக்கொண்டே இருந்தது. காகிதச்சுருள் உள்வாட்டத்தில் மடிந்து சிக்கிக்கொள்ளாதபடி பக்கத்திலேயே ஒருவர் நின்று வாகாக சரிப்படுத்தியபடி இருந்தார். எதிர்பாராத கணத்தில் தன் அறையிலிருந்து ஷூ ஓசை ஒலிக்க வெளியே வந்த ஜி.எம். கூடத்தில் நின்றபடி எல்லோருக்கும் கேட்கும் குரலில் வித்யாவின் பணி அனுபவங்களை நினைவுகூர்ந்து ஒருநிமிடம் ஆங்கிலத்தில் சொன்னார். தன் சார்பில் இரங்கல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிறகு சுப்பையாவின் பக்கம் திரும்பி, “ஈவனிங் ஸ்டேட்மெண்ட்ஸ் கவனிக்கறவங்க மட்டும் இருந்தா போதும் சுப்பையா. மத்தவங்க நாளைக்கி கூட கொஞ்ச நேரம் இருந்து மொத்தமா முடிச்சிக்கலாம். ஹோமேஜ் அட்டெண்ட் பண்ண போறவங்கள அனுப்பி வையுங்க. நம்ம ஆபீஸ் சார்பா என்னென்ன செய்யணுமோ அதயும் செஞ்சிடுங்க….” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்த அடையாளமாக  வெளிச்சம் பரவி அடங்கியது. எடுத்துப் பார்த்தேன். “ஆர் யு தெர்”. குமார் அனுப்பிய செய்தி. எற்கனவே அவர் அழைத்த சமயங்களில் எடுக்காததை நினைத்து சற்றே பதற்றம் உண்டானது. சட்டென்று நினைவு வந்தவளாக அவர் எண்ணை அழுத்தினேன். ஒரு முறை மணி அடித்து ஓயும் முன்பாகவே அவர் எடுத்தார். “ஸாரிங்க. என் க்ளோஸ் ஃப்ரெண்ட் வித்யானு சொல்வேனே, அவ செத்துட்டாங்க. அது விஷயமா பேச்சு போயிட்டிருந்ததா, அதான் எடுக்க முடியலை” என்று நானாகவே பேச ஆரம்பித்தேன். நான் சொல்வதை காதிலேயே வாங்காதவராக “வீட்டுக்கு பேசனியா? மருந்து சாப்டாங்களா, கஞ்சி குடிச்சாங்களானு அம்மாகிட்ட கேட்டியா?” என்று கேள்விகளை அடுக்கியபடி போனார். சுத்தமாக எனக்கு அது ஞாபகத்திலேயே இல்லை. “இந்த டென்ஷன்ல எல்லாமே மறந்துபோயிடுச்சிங்க. அவுங்க பக்கத்திலேயே எல்லாத்தயும் எடுத்து வச்சிட்டுதான் வந்திருக்கேன். போட்டிருப்பாங்க” என்றேன். “இனிமே நீ என்னத்த கேக்கறது? நானே கேட்டுக்கறேன், உடு” என்று விறைப்பாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்த வேகம் கொஞ்சம் மனக்கஷ்டமாக இருந்தது. வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குப் பேசி அத்தையிடம் மெதுவாக விசாரித்தேன். அந்தச் செய்தியை உடனே குமாருக்குத் தெரிவித்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே குமாரின் அழைப்பு மறுபடியும் வந்துவிட்டது. நான் பேசத் தொடங்குவதற்குள் அவராகவே பேசத் தொடங்கிவிட்டார். ”இப்பதான் ஒன் ஏடிஎம் கார்ட்ல மினி பேலன்ஸ் ப்ரிண்ட் எடுத்தேன். பதினஞ்சாம் தேதி ஐந்நூறு ரூபா எடுத்திருக்கியே. எதுக்கு அவ்ளோ பணம் எடுத்த? எங்கிட்ட ஒரு வார்த்தகூட சொல்லல. அப்பிடி என்ன செலவு ஒனக்கு? நம்ம சம்பளம்தானே, இவனுக்கு எதுக்கு கணக்கு குடுக்கணும்னு நெனச்சிட்டியா? மாசம் பொறந்ததும் சொளயா இருபதாயிரம் ரூபா ப்ளாட்டுக்கு டியு கட்டணும், எப்பவும் அது மனசுல இருக்கட்டும்” என்றார். பதில் சொல்ல வாய்ப்பே இல்லாதபடி மறுகணமே இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதை நினைக்கநினைக்க கஷ்டமாக இருந்தது. வெகுநேரத்துக்குப் பிறகுதான், வித்யாவின் மரணச்செய்தியை ஒட்டி குமார் தன்னிடம் எதையுமே விசாரிக்கவில்லை என்பது உறைத்தது. ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று நினைக்கும்போது வேதனையாக இருந்தது. “என்னடி வாழ்க்கை இது. எண்ணெய கொண்டாந்து ஊத்தல. அவ்ளோதான் பாக்கி. அதுக்கு பதிலா தெனம் வார்த்தைங்கள ஊத்தறாங்க” என்று தோன்றியபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

மேசையில் விரித்திருந்த கோப்புகளை மூடிவைத்து சீராக்கினேன். அப்போதுதான் உறைந்துபோன கணிப்பொறியின் நினைவு வந்தது. இருள்படர்ந்த அதன் திரை ஒருகணம் குழப்பிவிட்டது. இயக்கத்தை நிறுத்தவும் முடியவில்லை. “என் சிஸ்டத்த என்னடி பண்றது?” என்று பரிதாபமாக சுலோசனாவின் பக்கம் பார்த்துக் கேட்டேன். “ப்ளக்க புடுங்கிடுடி. பவர் ஆஃப் ஆவட்டும். நாளைக்கி பார்த்துக்கலாம்” என்றாள். “ஐயோ, நெறய எண்ட்ரிங்க போட்டனே. க்ராஷ் ஆயிடாதா?…” என்று பதற்றத்தோடு சொன்னேன். “நாளைக்கி இன்னொரு தரம் போட்டுக்கலாம், மொதல்ல கெளம்பற வேலய பாருடி” என்று பறந்தாள் அவள். வேறு வழியில்லாமல் அவள் சொன்னபடி செய்துமுடித்தேன்.

”ஒரு நிமிஷம்” என்று கைகாட்டிவிட்டு கைப்பையோடு கழிப்பறைக்குச் சென்று திரும்பினேன். இன்று மூன்றாவது நாள்தான். போக்கு ஒன்றும் அதிகமில்லை. போகிற இடத்தில் உணர்ச்சிவசப்பட்ட சூழலில் எதிர்பாராதவிதமாக போக்கு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பீதி அடிமனசில் உறைந்திருந்தது. அதை நினைக்கும்போதே போக்கு தொடங்கிவிடும் போல இருந்தது. வேகவேகமாக பழைய பட்டையை எடுத்து குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு புதியதைப் பொருத்திக்கொண்ட பிறகுதான் நிம்மதியாக இருந்தது.  அதற்குள் மல்லிகாவும் ஜெயந்தியும் சுலோச்சனாவும் படியிறங்கிச் சென்று வாசலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். ஒரு ஆட்டோவை நிறுத்திப் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.  

“நெல்லித்தோப்புல எந்தப் பக்கம் வருதும்மா?”  

“ரொம்ப உள்ள எல்லாம் போவ தேவயில்ல. ரெண்டாவது தெரு மொனையிலதான்…” ஜெயந்தி சொல்வதை அந்த ஆட்டோக்காரர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. “அட்ரஸ் சரியா தெரியுங்களா?” என்று மறுபடியும் கேட்டார்.

“எங்க எல்லோருக்குமே வீடும் வழியும் தெரியும். நான் டூ வீலர்ல முன்னால போறன். என் பின்னாலயே வாங்க. அது போதும். எங்கள என்ன பாண்டிச்சேரிக்கு புதுசுனு நெனச்சிட்டிங்களா?” சுலோச்சனா சலிப்போடு பதில் சொன்னபடி வண்டியைக் கிளப்பினாள்.

“பெட்ரோல் விக்கற வெலையில அலய உட்டுட்டிங்கன்னா, எங்களுக்கு எப்பிடிம்மா கட்டுப்படியாவும்? அத யோசிக்க வேணாமா?” என்று முணுமுணுத்தபடி ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார் ஆட்டோக்காரர். நாங்களும் உட்கார்ந்தோம்.

தடதடவென்று உறுமியபடி ஆட்டோ  முன்னால் நகர்ந்தது. பாதாள சாக்கடைக்காக தோண்டிப்போடப்பட்ட பள்ளங்களில் இருந்து எடுத்து குவிக்கப்பட்ட மண் குன்றுஅடுக்குகள்போல தெருவெங்கும் நீண்டிருந்தன. ஒரு மின்கம்பத்துக்குக் கீழே உருட்டிவிடப்பட்டிருந்த குழாய்களின் அருகில் ஒரு காக்கையின் சடலம் கிடந்தது. ஒரு சின்ன கரியதுணிமூட்டைபோல. மின்கம்பிகள் உரசலில் உயிர் பிரிந்திருக்கும் என்று தோன்றியது. ஏராளமான காக்கைகள் கம்பத்துக்கு மேலே வட்டமிட்டு கரையும் ஒலி கேட்டது. ஒரு கூட்டமே வாய்விட்டு அழுவதுபோல இருந்தது அந்தக் காட்சி.

”ட்ரெய்னிங்ல எனக்கு வித்யாதான்டி ரூம்மேட். அவ குடும்பக் கதயெல்லாம் அடிக்கடி சொல்லுவா. அவுங்கப்பா ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல் டீச்சர். சூது, குடி எல்லாம் உள்ள ஆளு. திடீர்னு பாதி வயசுல நெஞ்சுவலி வந்து செத்துட்டாரு.  குடும்ப பென்ஷன் பணத்த வச்சிகினு ஒத்தயில அவுங்கம்மா புள்ளைங்கள வளர்த்திருக்காங்க. அரவயிறு கால்வயிறுனு கஞ்சி குடிச்சாலும் படிக்கறதமட்டும் நிறுத்தாதிங்கடினு சொல்வாங்களாம்” பழைய நினைவுகள் அவிழ ஜெயந்தி தன்னிச்சையாகப் பேசத் தொடங்கிவிட்டாள்.

“நம்ம பேங்க்ல வேல செய்ற ஹொஸ்கீப்பிங் பொண்ணுங்க பையனுங்களுக்குலாம் வித்யாவும் அப்பிடிதான்டி அட்வைஸ் பண்ணுவா. நேரா போயி படிக்கமுடியாதவங்க போஸ்டல்லியாச்சிம் படிங்கப்பா. இந்த வாழ்க்கையில ஒரே ஒரு அடி தூரம் உசரணும்னாகூட படிப்பும் வேலயும் இருந்தாதான் முடியும்னு சொல்லிட்டே இருப்பா…..” நாக்கு சப்புக்கொட்டியபடி இடையில் புகுந்து சொன்னேன் நான்.

“இதோ எந்தன் தெய்வம் முன்னாலேன்னு ஒரு சினிமா பாட்டு. தல பின்னும்போது, துணி தொவைக்கும்போதுலாம் அத பாடுவா. கேக்ககேக்க நெஞ்சு உருகிடும். பிறர் உயர்வினிலே நீ அடையும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்ன்னு ஒரு வரி வரும் அதுல. அன்னைக்கு எந்த அர்த்தமும் புரியலைடி. இன்னைக்கு யோசிச்சி பாத்தா பெரியபெரிய அர்த்தத்தோடதான் பாடியிருக்காள்னு தோணுது…..” விழியோரம் உருண்ட கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடி சொன்னாள் ஜெயந்தி.

“அவ செல்லுல சேவ் பண்ணி வச்சிருக்கற பாட்டுலாம் இந்த மாதிரிதான்டி ஒரே தத்துவமா இருக்கும். ஒருதரம் நான் அந்த லிஸ்ட்ட பார்த்திருக்கென்” என் நினைவில் தோன்றியதை அப்படியே சொன்னேன்.

”எல்லாமே அவளுக்கு அனுபவ பாடம்தான்டி. அவளே அப்பிடி உழுந்து கிழுந்து பொரண்டுதான மேல வந்தா. அந்த காலத்துல அம்மாவுக்கு ஒத்தாசயா டைலரிங்க் செஞ்சிருக்கா. எம்ப்ராய்டரிங் போட்டிருக்கா. அவ செய்யாத வேலயே இல்லடி. அவுங்கம்மா செஞ்சி குடுக்கற முறுக்கு அப்பளம் சீடைங்கள பாக்கெட்டுங்களா போட்டு எடுத்துகினு இவதான் கடைங்களுக்கும் ஊடுங்களுக்கும் போயி குடுத்துட்டு வந்திருக்கா. ஒருதரம் எவனோ ஒரு கமினாட்டி முறுக்கு பாக்கெட்டு எப்பிடிம்மானு கைய புடிச்சி தடவ பாத்தானாம் தெரியுமா? ” என்றாள் ஜெயந்தி.

“அப்பறம்?” என்று பதறினாள் மல்லிகா.

“பொருள வித்து பொழைக்கலாம்னுதான் சார் இப்பிடி ஊடூஊடா நாயாட்டம் ஏறிஏறி எறங்குறம். மானத்த வித்து பொழைக்கலாம்னு நெனைச்சதில்ல. நீங்க வாங்கலைனாலும் பரவாயில்ல, இப்பிடி நடு ஊட்டுல ஒக்காந்துகினு கைய புடிச்சி இழுத்து அசிங்கப்படுத்தலாமா சார்னு கேட்டுட்டு வந்துட்டாளாம். இப்பிடி ஒன்னில்ல ரெண்டில்ல நூறு சம்பவங்க நடந்திருக்கு அவ வாழ்க்கையில..” கசப்போடு ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திவிட்டு ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவுக்கு வெளியே வேடிக்கை பார்த்தாள்.

”எல்லாத்தயும் மலமுழுங்கியாட்டம் முழுங்கி தண்ணி குடிச்சிட்டாடி அவ. வேற என்ன செய்யமுடியும் சொல்லு?” மூக்கில் வடிந்த தண்ணீரை கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துவிட்டு மூச்சுவாங்கினாள். “என்னடா நெனச்சிகிட்ட நாயேனு கேக்க ஒரே ஒரு நொடி போதும். ஆனா என்ன நடக்கும் தெரியுமா? ஆம்பள அப்பிடியே  ப்ளேட்ட மாத்திருவான்டி. பொம்பளதான் கைய புடிச்சி இழுத்தான்னு சொல்லுவான். ஊர கூட்டுவான். எல்லா நாயமும் பேசுவான். ஆனா ஊருஒலகம் அவனத்தான்டி நம்பும். பொம்பளய நம்பாது. ஏழைங்க வார்த்தைக்கு எந்த அம்பலமும் எடத்த குடுக்காது. காசி பணம் செல்வாக்கு அந்தஸ்துதான்டி ஒவ்வொருத்தவனுக்கும் முக்கியம். உண்மயோ நியாயமோ இங்க எவனுக்கும் வேணாம்.”

எனக்கு மூச்சு முட்டுவதுபோல இருந்தது. ”ஆம்பளைங்கள எல்லாம் அப்பிடியே நிக்கவச்சி சுடணும்டி. ஊட்டுல பொண்டாட்டினு ஒருத்தி இருக்கா இல்ல, அப்பறம் எதுக்குடி இந்த நாய்ங்க அலயுதுங்க?” என்னால் வெறுப்பைக் கொட்டாமல் இருக்கமுடியவில்லை.

ஜெயந்தி தன் கைப்பையைத் திறந்து ஈரமான கைக்குட்டையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு வேறொரு கைக்குட்டையைத் தேடி எடுத்தாள். அப்படியே ஆட்டோவுக்குக் கொடுப்பதற்கான பணத்தையும் எடுத்து கையில் மடித்துவைத்துக்கொண்டாள்.

“காலம் காலமா இப்பிடிதானே நடந்து வந்திருக்குது. திடீர்னு எப்பிடி மாறும் சொல்லு?” துக்கம் தாங்காமல் உதடுகளை மடித்து அடக்கினாள். சில கணங்களுக்குப் பிறகு தன் கண்ணெதிரில் வித்யாவின் கணவனை நிறுத்திக் கேட்பதுபோல கேள்விகளை அடுக்கினாள். ”அந்த காலத்துலதான் படிப்பு இல்ல, நாகரிகம் இல்ல. இந்த காலத்துல என்ன கொற? எண்ணய ஊத்தி கொளுத்திட்டு ஓடிட்டியே, படிச்சவன்தான நீ? காதல் கருமாந்திரம்தான் இல்ல, கொஞ்சமாச்சிம் நெஞ்சில ஈரம் இரக்கமாவது இருக்கவேணாமா? ஒரு பொம்பள. ஒரு பத்து வருஷம் ஒங்கூட படுத்து ஏந்திருந்தவ. ஒம் புள்ளய வயித்துல வாங்கி சொமந்து பெத்தவ. நீ நல்லா இருக்கணும்ங்கறதுக்காக கேக்காத எடத்துல எல்லாம் கடன்பட்டு வாங்கியாந்து குடுத்தவ. கொஞ்சமாச்சிம் அந்த நன்றி வேணாமா ஒனக்கு? ஒரு நாய்க்கு இருக்கற  நன்றியுணர்ச்சிகூட ஒனக்கு இல்லாம போயிடுச்சே. கோழயாட்டம் தூங்கறவ ஒடம்புல எண்ணெய ஊத்தி  கொளுத்திட்டு ஓடிட்டியே, என்னடா சொகத்த கண்டுட்ட நீ சொல்லு?”

ஆட்டோ சுப்பையா சிலையைக் கடந்து நெல்லித்தோப்பு எல்லைக்குள் நுழைந்ததுமே, திரும்ப வேண்டிய இடத்தின் அடையாளத்தைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லாதபடி சுலோச்சனாவின் வண்டி முன்னால் போய்க்கொண்டிருந்தது. மாதாகோவிலைக் கடந்து குறுக்குத்தெரு முனையை அடைந்ததும் “போதும் போதும் நிறுத்திக்குங்க” என்றபடி வண்டியை நிறுத்தினாள் அவள். ஜெயந்தி கையில் மடித்துவைத்திருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கினாள். நாங்களும் இறங்கினோம். சுலோச்சனா வண்டியை தெருவோரமாக நிறுத்திப் பூட்டினாள்.

அங்கிருந்தே வித்யாவின் வீடு தெரிந்தது. அவள் பையனுடைய பிறந்தநாள் விழாவுக்கு சில மாதங்களுக்கு முன்பாக வந்த நினைவு எழுந்தது.

“அந்த புள்ளய யாருடி பாத்துக்குவா? இப்பதான் மூணோ நாலோ படிக்கறான்.”

“வேற யாரு வச்சிக்குவா? வித்யா தம்பியோ தங்கச்சிங்களோதான் வச்சி வளக்கணும். யார நம்பி இங்க உட்டுட்டு போவமுடியும் சொல்லு?”

சில நிமிடங்கள் மெளனமாகக் கழிந்தன. ஒரு வேகத்தில் ”மல்லிகா” என்றேன். அவள் திரும்பினாள். “எதிர்காலத்துல அந்த புள்ளைக்கு நம்ம அம்மாவ அப்பாவே கொளுத்தி சாவடிச்சிட்டாருனு புரிஞ்சிக்கிற வயசுவரும்போது ரொம்ப கஷ்டமா இருக்குமில்ல?” கேட்கும்போதே எனக்கு நெஞ்சு அடைத்தது.

“நாம யோசிச்சி என்னடி புண்ணியம்? கொளுத்தறதுக்கு மின்னால அந்த கமினாட்டி யோசிச்சிருக்கணும் அத. படிச்சவன் செய்யற காரியமா அது? பொண்டாட்டிய புரிஞ்சிக்க முடியாத புண்ணாக்குடி அவன்.  புள்ள மனசயா புரிஞ்சிக்க போறான்?” இன்னொரு கேள்வியையே பதிலாகச் சொன்னபடி உரையாடலுக்குள் சேர்ந்துகொண்டாள் சுலோச்சனா.

வித்யாவின் வீட்டுக்கு முன்னால் கம்பங்கள் நடப்பட்டு துணிக்கூரை விரித்திருந்தார்கள். வெளியே சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. “அங்க போயி தனியா ஒக்காந்து என்னடி செய்யறது? இப்பிடியே நெழல்ல நிக்கலாம்” என்றபடி அருகிலிருந்த புங்கைமரத்துப் பக்கமாகச் சென்றாள் ஜெயந்தி. நாங்களும் அவளோடு நடந்து சென்றோம்.

புங்கைமரத்துக்குப் பின்னால் தகரங்களால் தடுப்புவைத்த ஒரு டீக்கடை இருந்தது. உயரம் குறைந்த பெஞ்ச் ஒன்றைப் போட்டிருந்தார்கள். “ஆளுக்கொரு டீ” என்றபடி அதில் உட்கார்ந்தாள் ஜெயந்தி. யாரும் மறுக்கவில்லை. அவளோடு சேர்ந்து உட்கார்ந்தோம். அங்கிருந்து அந்தத் தெருவைப் பார்த்தேன். வெயில்பட்டு சிமெண்ட் பாதை கொதிப்பேறியிருந்தது. பொழுதே இறங்கப் போகிறது. ஆனாலும் வெப்பம் குறையவில்லை. நீளமாக ஒரு வெள்ளைக்கோடு இழுத்ததுபோல அந்தப் பாதை நீண்டிருந்தது. இரு பக்கங்களிலும் நெருக்கமாக அடர்ந்த வீடுகள். அவற்றுக்கு நடுவிலேயே இரண்டு கைப்பேசிக் கோபுரங்கள். நாலைந்து முருங்கைமரங்கள். இரண்டு வேப்பமரங்கள் காணப்பட்டன. பாதையோரச் சாக்கடையின் விளிம்பில் ஒரு எருமை படுத்திருந்தது. அது வாலைச் சுழற்றும்போதெல்லாம் ஈக்களும் கொசுவும் பறந்து வட்டமிட்டன. இன்னொரு ஓரத்தில் வயிறு உப்பிய ஒரு பெருச்சாளி செத்துக் கிடந்தது. ஒரு காக்கை அதன் வயிற்றில் துளைபோட்டு குடலை வேகவேகமாக இழுத்து இரண்டுபக்கங்களிலும் மாறிமாறிப் பார்த்தபடி கொத்தித் தின்றது.

டீ க்ளாஸை பற்றியபடி, “வித்யா எப்பவுமே சுகர்லெஸ் டீதான் குடிப்பா, தெரியுமா ஒனக்கு?” என்று கேட்டாள் ஜெயந்தி. முதல் மிடறு டீயை பருகியபடியே எனக்குத் தெரியும் என்பதுபோல தலையசைத்தேன். பிறகு அவளே “எந்த கம்ப்ளெய்ண்ட்டும் அவளுக்கு கெடயாதுடி. ஆனா அந்த கசப்புதான் ருசிக்கும்னு சொல்லும் கழுத.” என்றாள். நாலைந்து மிடறுகள் பருகி முடிக்கும்வரை அமைதியாக இருந்தாள் அவள். அப்புறம், “வாழ்க்கையிலயும் அவ கசப்ப தவிர எத பாத்தா சொல்லு?. அவ வாழ்க்கையில நிம்மதியான நேரம்னு சொன்னா அது ஆபீஸ்ல இருந்த நேரம்தான்” என்றாள்.

“ஆஸ்பத்திரில பாக்கும்போது தீஞ்சிபோன கெழங்குபோல கெடந்தாடி. பாக்கபாக்க என் ஈரக்கொலயே நடுங்கிடுச்சி. சின்ன வயசில அவ எப்பிடி இருப்பா தெரியுமா? நல்லா கெளதமியாட்டம் இருப்பா. பிராஞ்சில மாதவன்னு ஒரு மலயாளத்து பையன் அப்ப அவளயே சுத்திசுத்தி வந்தான். எனக்கு என் கடமைகள்தான் முக்கியம்னு அவ வேணவேவேணாம்னு ஒதுங்கி போயிட்டா. ஒதுங்கிஒதுங்கி வந்தவள கடசியில எங்க வந்து உழவச்சிது பாரு விதி…..” எப்படி பேச்சைத் தொடங்கினாலும் அவளிடமே வந்து முடிந்தது.

டீ கிளாஸ்களையும் பணத்தையும் கொடுத்துவிட்டு மீண்டும் பெஞ்சிலேயே உட்கார்ந்தோம்.

“ஏன்டி, கிளாராவுக்கு விஷயத்த சொன்னியா?” என்று ஜெயந்தியிடம் கேட்டாள் சுலோச்சனா. அவள் இல்லை என உதட்டைப் பிதுக்கினாள்.

“மொதல்ல அவகிட்ட சொல்லு. கெளம்பி வந்தாலும் வந்துருவா அவ…” 

கைப்பேசியை எடுத்து அவள் எண்ணை அழுத்திவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தேன்.  எல்லோருக்கும் கேட்கட்டும் என்பதற்காகவே கைப்பேசியை ஒலிபெருக்கி நிலையில் வைத்திருந்தேன். நாலாவது மணி அடித்து ஓய்ந்தபோது அவள் பேசினாள். “இப்பதான்டி ஒன்ன நெனச்சேன். அதுக்குள்ள நீயா எப்பிடிடி பேசற? ஏதாச்சிம் டெலிபதி தெரியுமா ஒனக்கு?” என்று கிளாரா சிரிப்பது கேட்டது. அந்தச் சிரிப்பை மறித்து, ”கிளாரா, ஒரு வருத்தமான செய்திடி” என ஒரு சின்ன அறிவிப்போடு நடந்ததைச் சொன்னேன். அவள் அப்படியே பொங்கி அழுதாள். மாதாவே மாதாவே என்று அடுத்தமுனையில் அவள் தேம்புவது கேட்டது. “எங்க மாமனாருக்கு அடுத்த மாதம் ஒரு ஆப்பரேஷன்டி. ஒரு வேண்டுதலுக்காக வேளாங்கண்ணிக்கு காலையிலதான்டி கெளம்பி வந்தோம். அவ மூஞ்சிய கடசியா ஒருதரம் பாக்கறதுக்கு கூட எனக்கு குடுத்துவைக்கலியே” என்று தேம்பித்தேம்பி அழுதாள். “என்னடி என்னடி ஆச்சி?” என்று மீண்டும்மீண்டும் கேட்டாள் அவள். “எல்லாத்தயும் முடிச்சிட்டு வாடி நீ, அப்பறமா பேசறேன்” என்று சொன்னது அவள் காதிலேயே விழவில்லை.

”அவ எனக்கு ஒரு சிநேகிதக்காரி மட்டுமில்லடி, நான் கும்புடற மாதாவயே அவ உருவத்துல பாத்தவடி நான். இங்க பேங்க் வேலயே அவ குடுத்த வாழ்க்கைடி. அந்த காலத்துல இந்த எக்ஸாம் பத்தி சொல்லி, படிக்கவச்சி எழுதவச்சதெல்லாம் அவதான்டி. என்ன ஏணியில ஏத்தி உட்டுட்டு அவ இப்பிடி நடுவழியில போயிட்ட்டாளே……”

அவளை அமைதிப்படுத்துவது பெரிய பாடாக இருந்தது. ஊருக்குத் திரும்பிய பிறகு அவசியம் ஒருநாள் சந்திக்கலாம் என்று சொல்லி இணைப்பைத் துண்டிக்கவேண்டியிருந்தது.

ஒவ்வொருவராக எங்கள் வங்கி ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். பெரிய மலர்வளையத்தோடு பாபு ஆட்டோவில் வந்து இறங்கினார். எங்கள் சங்கச் செயலாளர் கடைத்தெரு கிளையில் வேலை செய்துவந்தார். செய்தியறிந்து அவரும் வந்துவிட்டார். சுலோச்சனாவிடம் வித்யாவைப்பற்றி கொஞ்ச நேரம் பேசினார். “சந்தா கேக்கப்போவும்போது கொஞ்சம்கொஞ்சம் பேசனதுதான். நல்ல டைப். ஆயுள்ங்கறதுகூட நமக்குலாம் பேங்க் பேலன்ஸ்மாதிரிதான். யார்யார் அக்கெளண்ட்ல எவ்வளோ போட்டிருக்குதோ, அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்” என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். டீக்கடையில் கூட்டம் பெருகிவிட்டது. நாங்கள் கிளம்பி மரத்தடியின்பக்கம் சென்று நின்றுகொண்டோம்.

”எத்தன மணிக்கு வராங்க தோழர்?”

“நாலாய்டுச்சே, வர நேரம்தான்….”

அங்கங்கே கொத்துக்கொத்தாகப் பேசிக்கொண்டிருந்தாலும் எல்லோருடைய பார்வையும் பாதையிலேயே பதிந்திருந்தது.

ஒரு வார்த்தை குமாரிடம் மீண்டும் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. அவருக்கு நன்றாக அறிமுகமானவள்தான் வித்யா. பல முறை வீட்டுக்கு வந்திருப்பவள். அவளைப்பற்றி அவர் விசாரிக்காதது மனபாரமாக இருந்தது. அவள் விரல்கள் தன்னிச்சையாக அவர் எண்களை கைப்பேசியில் அழுத்தின.  முதல்மணி அடித்து முடிப்பதற்குள்ளாகவே அவர் எடுத்துவிட்டார்.

“நெல்லித்தோப்புல வித்யா வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ்கூட சேந்து வந்திருக்கேன். இன்னும் ஆம்புலன்ஸ் வரலை. கொஞ்ச நேரம் இங்க வச்சிருந்துட்டு ஒடனயே மெட்ராஸ்க்கு எடுத்துட்டு போறாங்களாம். கடசியா அவ மூஞ்சிய ஒருதரமாச்சிம் பார்த்தாதாங்க மனசு அடங்கும். அவுங்க கெளம்பனதுமே நான் வந்துருவேன்…..” மெதுவாகச் சொன்னேன்.

“எவ்ளோ நேரமாவும்?”

“அஞ்சரைக்குள்ள வந்துருவேன்…”

“சரி…சரி... சீக்கிரமா வந்து சேரு” என்றபடி இணைப்பைத் துண்டித்தான். ஒளிபெருகி அணைந்த கைப்பேசியையே ஒரு கணம் பார்த்தபடி நின்றேன். இந்த முறையும் அவர் வித்யாபற்றி எதுவும் கேட்கவில்லை என்பதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  

”வீட்டுக்கு சொல்லிட்டியா, சுத்தமா மறந்துட்டேன் பாரு. நான்கூட சொல்லிடறேன்” என்றபடியே மல்லிகா தன் கைப்பேசியை எடுத்து அழைத்தாள். அவள் விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் மறுமுனையில் அடுத்தடுத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குத்தான் அவள் பதில் சொல்லும்படி இருந்தது. கடைசியாகத்தான் அவள் வித்யாவின் மரணச்செய்தியைத் தெரிவித்தாள். ஆறுமணிக்குள் திரும்பிவிடுவதாக மீண்டும்மீண்டும் உறுதியளிப்பது கேட்டது. பேசி முடித்துவிட்டு அவள் கண்களைமூடி பெருமூச்சு விட்ட வேகம் பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது. எல்லார் வீட்டுக் கதையும் ஒன்றுதான் போல என்று தோன்றியது. இருந்தாலும் மனம் பொறுக்காமல் “என்னடி?” என்று தூண்டினேன்.

“என்னத்த சொல்றது போ. ஆறுமணிக்குள்ள வந்துருவியா ஆறுமணிக்குள்ள வந்துருவியான்னு ஆயிரத்தெட்டு தரம் ஒரே கேள்விய கேட்டா என்னன்னு பதில் சொல்றது? நான் என்ன ப்ரோக்ராம் பண்ண ரோபாவா, சரியா ஆறுமணிக்கு போய் உழுந்துட?”

வெடிப்பதுபோல அவள் முணுமுணுப்பதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. “ஒரு சாவு வீட்டுல இருக்கறவள்ன்னு கூட நெனச்சி பார்க்காம பேசனா என்னடி அர்த்தம்?  ஸ்கூல்லேந்து வந்துட்டான்னா பையனுக்கு யார் டிபன் குடுப்பாங்க? யார் டுயுஷனுக்கு அனுப்பி வைப்பாங்க? டெந்த் எழுதற பையன்ங்கறது ஞாபகமில்லயா? அவன்பாட்டுக்கு டிவி முன்னால உக்காந்துட்டா என்ன செய்றது? கூட உக்காந்து கேள்வி கேக்கலைனா எப்பிடி படிப்பான்? வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் பீஸ் கட்டிட்டு கவனிக்காம விடலாமா? மார்க் கம்மியாச்சின்னா அவன் எதிர்காலம் என்னாவும்? அம்மா சாமி, தெனமும் இந்த கேள்விங்கள கேட்டுகேட்டு எனக்கு பைத்தியமே புடிச்சிடும்டி…….” நெற்றியில் விரல்வைத்து அழுத்தித் தேய்த்துக்கொண்டாள்.

இடைப்பட்ட நேரத்துக்குள் ஜெயந்தியும் சுலோச்சனாவும் தத்தம் கைப்பேசிகளிலிருந்து அழைத்து வீட்டுக்குத் தகவல் சொல்லிவிட்டிருந்தார்கள். அவர்களுடைய முகம்போன போக்கும் சரியில்லை.   சாவுவீட்டுக்கு வந்த துக்கத்தைக் கடந்து வேறொரு துக்கமும் இணைந்திருப்பதைப் பார்க்கமுடிந்தது.

”என்னடி ஜெயந்தி?” என்று சும்மா பேச்சுக்காகக் கேட்டேன்.

அவள் கசப்பாகச் சிரித்தாள். “இதுலாம் ஒரு மேட்டரா, உட்டு தள்ளுடி. ஒங்க ஊட்டுல என்ன சங்கீதமோ, அதே சங்கீதம்தான் எல்லா எடத்துலயும். ஒரே வித்தியாசம் இது வேற ராகம், வேற தாளம், வேற பல்லவி.”

“சீக்கிரம் வந்துருங்கறத எத்தன விதமா சொல்லலாம்னு ஒரு பந்தயம் வச்சா, எங்க ஆளுக்குதான் மொதல் மெடல்…..” சொல்லிக்கொண்டே சுலோச்சனா தலையை ஆட்டினாள். 

புங்கைமரத்துக்குப் பின்னாலிருந்த வீட்டுச் சுவரோரம் ஒரு பந்தை உருட்டி உருட்டி தள்ளிக்கொண்டிருந்தது ஒரு நாய். கொஞ்ச நேரம் அந்தப் பந்தை அது நாக்கை நீட்டி நக்கியது. பிறகு பல்லால் கடித்தது. தலையை அதன்மீது வைத்துத் தேய்த்தது. காலால் தள்ளியது. தன்னைவிட்டு நகர்ந்துபோவதைப் பார்த்து திடீரென்று ரோஷத்தோடு தாவிவந்து அதைத் தடுத்து நிறுத்தி அதன்மீது ஏறி உட்கார்ந்தது. அந்தப் பந்தை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது. நெருங்கிவந்த ஆட்டோ சத்தம்கூட கேட்காத அளவுக்கு அதன் கவனம் சிதைந்துபோயிருந்தது.

அந்த ஆட்டோவிலிருந்து டெஸ்பாட்ச் செக்‌ஷன் பெண்கள் வந்து இறங்கினார்கள். அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள். ”இன்னும் வண்டி வரலைங்களா?” என்று என்னிடம் கேட்டாள் ஒருத்தி. “இல்லம்மா, வர நேரம்தான்” என்றேன். “நாலரையே ஆயிடுச்சே, அஞ்சுக்குள்ளயாச்சிம் வந்துட்டா நல்லது. வழக்கமான நேரத்துலயே ஊட்டுக்கு ஓடிரலாம்” என்று சொல்லிவிட்டு மையமாகச் சிரித்தாள் அவள்.

வெப்பம் குறைந்து காற்று வீசத் தொடங்கியிருந்தது. ஆண்கள் கூட்டம் டீக்கடையிலிருந்து விலகி மாதா கோவில் பக்கம் சென்று நின்றுகொண்டது. பக்கவாட்டுச்சுவர்களில் கண்ணாடிப்பேழைக்குள் ஒளிக்கூம்புக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் சலவைக்கல் சிற்பம் மனத்தைக் கரையவைத்தது. அந்தக் கண்களில்தான் எவ்வளவு கருணை. எவ்வளவு அன்பு. தாயிடமிருந்து பெறுகிற கருணையையும் அன்பையும் இந்தப் பிள்ளைகள் எங்கோ எப்படியோ தொலைத்துவிடுகிறார்கள் என்று விசித்திரமாகத் தோன்றியது. வெள்ளைத்தாமரையின் நிறத்தில் இருந்த அச்சிற்பத்தையே கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தாள்.

”மேடம், கெளம்பிட்டாங்களான்னு சும்மா ஒரு வார்த்த கேட்டு பாருங்களேன்” என்று ஆண்கள் பகுதியிலிருந்து ஒருவர் வந்து என்னிடம் கேட்டபோதுதான் எனக்கு சுய உணர்வு வந்தது. எப்படிக் கேட்பது என்றுதான் தயக்கமாக இருந்தது. சுலோச்சனாவைப் பார்த்தேன். “பேசு, பரவாயில்ல…” என்று அவளும் சொன்னாள். வேறு வழி தெரியாமல் நான் வித்யாவின் தம்பியின் எண்ணை அழுத்தினேன். நாலைந்து நீண்ட மணியோசைக்குப் பிறகு, அவனே எடுத்தான்.

“கெளம்பிகிட்டே இருக்கம்க்கா. அந்த பேப்பருல கையெழுத்து வாங்கியாரணும், இந்த பேப்பருல கையெழுத்து வாங்கியாரணும்னு ரொம்ப இழுக்கறாங்கக்கா. எல்லாம் முடிச்சாச்சிக்கா. வண்டிக்குலாம்கூட பணம் கட்டியாச்சி. இன்னும் ஒரு கையெழுத்துதான். அதுக்குதான் நிக்கறேன். ஆபீஸ்ல சொல்லிட்டிங்களாக்கா?” பரபரப்பாக அவன் பேசினான்.

“ஆபீஸ்காரங்க எல்லாரும் இங்க வந்துட்டம். நெல்லித்தோப்பு வீட்டுங்கிட்டதான் இப்ப நிக்கறம்.”

”இதோ ஆயிடுச்சிக்கா. இருபது முப்பது நிமிஷம். அவ்ளோதாங்க்கா. கெளம்பும்போது நானே ஒரு மிஸ்ட் கால் குடுக்கறங்க்கா.”

ஒரு டி.வி.எஸ். வண்டியில் இரண்டு போலீஸ்காரர்கள் மாதாகோவில் பக்கம் திரும்பி வந்து எங்களைப் பார்த்துக்கொண்டே கடந்துபோய் வித்யா வீட்டுக்கு முன்னால் நின்றார்கள். மிடுக்காக வண்டியை விட்டு இறங்கி தொப்பியைச் சரிப்படுத்தியபடி படியேறி வீட்டுக்குள் சென்றார்கள்.

“ஸ்டேஷன்ல சூடு பரவிடுச்சி போல.  ஓடிப் போனவன சீக்கிரமா புடிச்சிடுவாங்கன்னு நெனைக்கறேன்.” மல்லிகா மெதுவாக முணுமுணுத்தாலும் எல்லோருக்கும் கேட்டது. “புடிச்சி நல்லா மூட்ட பூச்சிய நசுக்கறமாதிரி நசுக்கணும்டி அவன” என்றாள் ஜெயந்தி.

“என்ன மேடம் நீங்க, ஒலகம் தெரியாத ஆளா இருக்கிங்க? புடிச்சி நசுக்கறதுக்கா ஆள தேடறாங்க? நசுக்காம இருக்கறதுக்காகன்னு சொல்லி சொல்லியே ஒட்ட கறக்கறதுக்காவதான் இந்த ஆளுங்க அலயறதும் தேடறதும்.” கேஷியர் நடராஜன் சொன்னார்.

“என்ன சார் அப்பிடி சொல்லிட்டிங்க? அப்ப கேஸ் நடக்காதா?” என்று படபடத்தாள் ஜெயந்தி.

“நடக்கவே நடக்காது. வேணும்னா ஆயிரம் ரூபா பந்தயம் கட்ட நான் தயார்”

“பின்ன?”

“கேஸ நடத்தறேன் நடத்தறேன்னு இந்தப் பக்கம் புடுங்குவாங்க. கேஸே இல்லாம பண்ணறேன்னு அந்தப் பக்கம் புடுங்குவாங்க. வித்யா வீட்டுக்காரங்களாம் சென்னைகாரங்க போல. இதுக்காக எத்தன தரம் அலைவாங்க சொல்லுங்க? ஒரு வருஷம் வருவாங்க, ரெண்டு வருஷம் வருவாங்க. அப்பறம் ஒரு கட்டத்துல அவுங்களே சலிச்சி உட்டுருவாங்க. அதுவரைக்கும் வைக்கப்போர்ல உருவறமாதிரி இவுங்க பணத்த உருவிகிட்டே இருப்பாங்க…..”

“அப்ப அவனுக்கு தண்டனயே கெடைக்காதா?” ஜெயந்தியின் குரலில் நிராசை பரவியிருந்தது.

“தப்பு செய்யறவனயெல்லாம் தண்டிச்சிகினிருந்தா, போலீஸ்காரங்க பொழப்பு எப்பிடி மேடம் ஓடும்?”

”அப்பிடிலாம் இல்ல சார், போன வாரம்கூட பொட்டு தனபால்னு ஒரு ரெளடிய புடிச்சி தண்டன குடுத்தாங்கன்னு பேப்பர்ல வந்திச்சே சார்?”

“ஒருத்தன புடிக்கறதபத்திதான் மேடம் செய்தி வருது. புடிக்காம உடற ஒம்போது பேர பத்தி என்ன செய்தி வருது?”

ஜெயந்தி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக வானத்தைப் பார்த்தாள். வித்யாவின் வீட்டிலிருந்து காவலர்கள் வெளியே வந்து வண்டியிலேறி உட்கார்வது தெரிந்தது.

“இன்னிக்கு மாப்புள்ளைங்களுக்கு கொண்டாட்டம்தான். அஞ்சாயிரம் கெடச்சிதோ பத்தாயிரம் கெடச்சிதோ..” காவலர்களின் பக்கமாக பார்வையைப் பதித்தபடி சத்தமில்லாமல் முணுமுணுத்தார் நடராஜன். 

கைப்பேசி ஒளிர்வதை ஜெயந்தி சுட்டிக் காட்டியபிறகுதான் பார்க்க முடிந்தது. குமாரின் அழைப்பு. என் தலையே சுக்குநூறாக வெடித்துவிடும்போல இருந்தது. என்ன பேசுவது என்ற தடுமாற்றத்தில் இரண்டு மூன்று மணியோசையை ஒலிக்கவிட்டு, கடைசியாக எடுத்தேன். ”என்ன கெளம்பலையா இன்னும்?” என்று கேட்டார். “இதோ வர நேரம்தாங்க. எல்லாருமே இங்கதான் எதிர்பார்த்திட்டிருக்கோம்.  இன்னம் ஆஸ்பத்திரி வண்டி வரல. முடிஞ்சதும் வந்துருவேன்….” என்றேன்.

“மணி என்ன தெரியுமா? அஞ்சர. நான் வீட்டுக்கே வந்தாச்சி.  நீ என்னடான்னா இதோங்க இதோங்கனு கத சொல்லிட்டிருக்கற? இதோ ஒன் புள்ள பேசறான் பாரு என்னன்னு கேளு” அவருக்கு பதில் சொல்வதற்குள் முரளியிடம் கைப்பேசி போய்விட்டது. அக்கணமே அவன் “அம்மா அம்மா” என்று இரண்டுதரம் கூப்பிட்டுவிட்டான்.

“என்னடா முரளி? எப்படா வந்த?” நான் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன். அவன் அதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. “அம்மா, அப்பாவுக்கு தோசயே சுட தெரியல. தடிதடியா சுட்டு குடுக்கறாரு.  ஒன்ன போல பேப்பர் தோச சுடவே தெரியலை. எப்பம்மா வருவ நீ? எனக்கு பசிக்குதுமா” என்று அவன்போக்கில் சொல்லிக்கொண்டே போனான்.

“முரளி, அம்மா ஒரு வேலயா வந்திருக்கேன்டா. நாளைக்கி உனக்கு புடிச்ச மாதிரி பேப்பர் தோச போட்டு குடுக்கறன். அப்பாவுக்கு கஷ்டம் குடுக்காம, செஞ்சி குடுக்கறத வாங்கி சாப்ட்டுட்டு போடா கண்ணா…”

“எனக்கு அந்த தோசயே வேணாம்மா. பாக்கறதுக்கே புடிக்கலை. ரொட்டியாட்டம் இருக்குது. அவர எனக்கு சாக்லெட் கேக் வாங்கி வந்து குடுக்க சொல்லு…”

பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு அறுந்துபோனது. நானாகவே மீண்டும் முயற்சி செய்து பிடிக்கவேண்டியதாக இருந்தது. அவர் எடுத்து கோபமாக “எதுக்கு இப்ப கூப்புடற?” என்றார். “டியுஷனுக்கு அனுப்பும்போது அப்பிடியே ஒரு கேக் வாங்கி குடுத்தனுப்பிடுங்க…..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “எல்லாம் எனக்கு தெரியும், வை” என்று பட்டென்று பேச்சை முடித்துக்கொண்டார். அவமானத்தில் ஒருகணம் என் முகம் சிவப்பதை என்னால் உணரமுடிந்தது. அந்தக் கோபத்தில்கூட வித்யாவின் மரணம்குறித்து அவர் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை என்பதை என் மனம் குறித்துக்கொண்டது. வார்த்தைகளைவிட அந்த மெளனம்தான் எனக்கு அவமானமாக இருந்தது.

எல்லோருமே கைப்பேசியில் சத்தமாகவும் ரகசியமாகவும் விரல்களை மடக்கி அடங்கிய குரலிலும்  தள்ளித்தள்ளி பேசிக்கொண்டே இருந்தார்கள்.

“இன்னும் பாடி வரலைங்க. வந்ததும் பார்த்துட்டு கெளம்பிடுவேன்”

“மாலய போட்ட கையோட கெளம்பிடுவேன். அப்பறம் ஒரு நிமிஷம்கூட நிக்கமாட்டேன். ஆட்டோ புடிச்சி நேரா வீடுதான்.”

“அதிகபட்சம் போனா இன்னும் ஒருமணிநேரம்தாங்க. அதுக்குள்ள வந்துருவேன்.”

“ஒங்களுக்கு எதுக்கு அலச்சல்? அதெல்லாம் ஒரு பயமும் இல்ல. தனியாவெல்லாம் வரமாட்டேன். முருகா தியேட்டர் பக்கத்துகாரங்க மூணுபேரு இங்க ஒன்னா இருக்கோம். ஆட்டோ புடிச்சி கும்பலோட கும்பலா வந்துருவன்ங்க…”

எல்லாப் பெண்களும் ஒரு கணம் பாதையைத் திரும்பிப் பார்ப்பதும் மறுகணம் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதுமாக பொறுமையிழந்தபடி காணப்பட்டார்கள்.

குமாரின் அழைப்பு மீண்டும் வந்தது. வை என்று சொன்னவன் இப்போது எதற்கு அழைக்கவேண்டும் என்று கோபம் பொங்கிவந்தது. நாலைந்துமுறை மணியடித்து ஓயும்வரை எடுக்கவே இல்லை. கைப்பேசியையே பார்த்தபடி நின்றிருந்தேன். அதற்குள் அங்கே என்ன குழப்பமோ என்கிற பீதி பரவியது. சட்டென்று மனம்மாறி எடுத்து ”அலோ” என்றேன். மறுமுனையில் அவர் குரல் வெடித்தது. “டீ போடலாம்னு பாத்தா டப்பாவுல டீ தூளயே காணமே, வேற எங்கனா எடம் மாத்தி வச்சிட்டியா? இல்ல வாங்கியே வைக்கலியா?” என்று சத்தம் போட்டார் அவர்.  காலையிலேயே தீர்ந்துபோனதும்  மாலையில் வாங்கிக் கொள்ளலாம் என்று அப்போது நினைத்ததும் சட்டென்று நினைவுக்கு வந்தது. ”அது.. அது..” என்று கொஞ்சநேரம் இழுத்தேன். பிறகு உண்மையைச் சொன்னேன்.

“இங்க பாரு. நீ வேலைக்கு போயி சம்பாதிச்சி கொண்டாந்துதான் குடும்பத்த நடத்தணும்னு தலவிதி கெடயாது.  எல்லாத்தயும் விட்டுட்டு ஊட்ட ஒழுங்கா கவனிக்கற வேலய பாருனு  நூறுதரம் சொல்லியாச்சி. ஒன் மரமண்டையில ஏறவே மாட்டுது. ஆபீஸ்ல என்ன வேல செஞ்சி கிழிக்கறியோ” என்று வெறுப்பும் கசப்புமாகப் பேசினான். என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. தடுமாற்றத்தில் “இல்லிங்க… அது…அது….” என்று மீண்டும் இழுத்தேன்.  அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் அவர் இணைப்பைத் துண்டித்தார்.

என் முகம் வெளுத்துப் போனதைப் பார்த்து “என்னடி?” என்று கேட்டாள் ஜெயந்தி. நடந்ததைச் சொன்னதும், “என்னமோ தெரியல, எல்லாமே இன்னிக்கு ஏறுக்கு மாறா நடக்குது” என்றாள் கசப்போடு.

சற்றே தள்ளிப்போய் பேசிவிட்டு அப்போதுதான் திரும்பினாள் சுலோச்சனா.  என்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி தண்ணீர் அருந்தினாள். தன் பையைத் திறந்து ஒரு மாத்திரையை எடுத்து பிரித்து போட்டுக்கொண்டாள். அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“அவருக்கு தெரிஞ்சவங்க ஊட்டுல ஒரு சீமந்தம்டி இன்னிக்கு. சாயங்காலம் போவலாம்னு சொல்லியிருந்தாரு. இப்பிடி மாட்டிக்குவம்னு நமக்கு என்ன ஜோசியமா தெரியும்? சீமந்தத்துக்கு போவணுமே சீமந்தத்துக்கு போவணுமேன்னு அவர் விஷயத்தையே பொலம்பறாரு. இப்பிடி சாவு வீட்டுல ஒருத்தி மாட்டிகினு கெடக்கறாளேன்னு கொஞ்சம்கூட அக்கறயே இல்லாம பேசறாரு. சரி, நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னா, அதுவும் முடியாதாம். முன்னயும் உடாம பின்னாலயும் உடாம ஒரே ரோதணடி. காலம் முழுக்க இதே இம்சயா போயிடுச்சி….” 

என் கைப்பேசி மீண்டும் ஒரேமுறை ஒளிர்ந்து அடங்கியது.  குமார் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தோடும் அச்சத்தோடும்தான் புரட்டிப் பார்த்தேன். வித்யாவின் தம்பி. வண்டி புறப்பட்டுவிட்டதன் அடையாளம். உடனே அதை எல்லோருக்கும் சொன்னேன்.

மாதா கோவிலைச் சுற்றி இருந்த குழல்விளக்குகள் முதலில் சட்டென்று ஒளிர்ந்தன. பிறகு வாசல் விளக்குகள். அப்புறம் உச்சி விளக்குகள். அதைத் தொடர்ந்து பக்கவாட்டுப் பேழை விளக்குகள். உச்சியிலிருந்து எல்லாத் திசைகளிலும் சரம்போல தொங்கவிடப்பட்ட வண்ணவண்ண முத்துவிளக்குகள். மெல்லமெல்ல சூழத் தொடங்கிய இருளில் மாதாகோவிலின் தோற்றம் ஒரு மாபெரும் மெழுகுவர்த்திபோலத் தோன்றியது. மறுகணமே அந்த எண்ணம் மறைந்து, காலம்காலமாக எழுந்து நின்றுகொண்டே இருக்கும் ஒரு மாதாபோல அந்தக் கோவில் தோன்றியது. கருணையை வழங்கும் மாதா. காவல்காத்து சேவை செய்யும் மாதா. கல்லடிகளையும் சொல்லடிகளையும் மெளனமாக ஏற்றுப் புறக்கணித்துவிட்டுச் செல்லும் மாதா.

அடுத்து, சில நிமிடங்களில் பாதையோர விளக்குகளும் எரியத் தொடங்கின. டீக்கடைக்காரர் பாத்திரங்களை ஓரமாக வைத்துக்கொண்டு சாம்பலும் கரியும் போட்டுத் தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்தார்.

கறுப்பு நிறத்தில் அமரர் ஊர்தி தெருவுக்குள் நுழைவது தெரிந்து எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தார்கள். கும்பலைப் பார்த்ததும் ஊர்தியின் வேகம் குறைந்தது. மெல்லமெல்ல ஊர்ந்து சென்று வித்யாவின் வீட்டுக்கு முன்னால் நின்றது. பின்கதவைத் திறந்து வித்யாவின் தம்பியும் தங்கையின் கணவரும் இறங்கினார்கள். வங்கி ஊழியர்கள் தாமாகவே வண்டிக்குள் சென்று ஆளுக்கொரு பக்கம் பிடித்து வித்யா கிடத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சரைத் தூக்கிச் சென்று வாசலில் இருந்த பெஞ்சின்மீது வைத்தார்கள். கழுத்திலிருந்து கால்வரைக்கும் போர்த்தப்பட்டு அசைந்து உருண்டுவிடாதபடி ஸ்ட்ரெச்சரோடு இணைத்து கட்டியிருந்தார்கள். “அடுத்த மாசம் ப்ரோமோஷன் பரீச்சைக்கு அப்ளை பண்ணலாமான்னு கேட்டியே, அதுக்குள்ள ப்ரோமோஷன் வாங்கிட்டு போயிட்டியாடி பாவி….” என்று சத்தம் போட்டு அழுதாள் சுலோச்சனா. அவள் அப்படி பொங்கிச் சீறுவாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

குரைத்துக்கொண்டே ஓடிவந்த ஒரு தெருநாய் வித்யா கிடத்தப்பட்டிருந்த பெஞ்சுக்குப் பக்கத்தில் செல்ல முயன்றது. ஆட்கள் சட்டென்று விலக, அவர்களை ஒரே எட்டில் கடந்துசென்று பெஞ்சுக்கு அருகில் சென்று நின்றது. அவளை எழுப்ப விரும்புவதுபோல, அவளைப் பார்த்து இடைவிடாமல் குரைத்தது. பிறகு பெஞ்சையே சுற்றிச்சுற்றி வந்தது. அப்புறம் ஓய்ந்துபோய் தலைமாட்டில் சிறிதுநேரம் நின்றது.

முதலில் அதன் சத்தத்தால் எல்லோரும் பீதியில் ஒதுங்கிப் போனாலும், அது வித்யாவையே சுற்றிச்சுற்றி வரும் காட்சியைக் கண்டு, அதை விரட்டியனுப்ப யாருக்கும் மனம் வரவில்லை.

“பாவம், தெனம் ராத்திரி இதுக்கு அந்த மவராசிதான் சோறு வைக்கும். தெருநாய்னுகூட பாக்காம அள்ளிஅள்ளி வைக்கும்.”

“விருந்தாளியாட்டம் சட்டமா வாசல்ல வந்து நின்னுகினு கொரல் குடுக்கறத நான் எத்தனயோ தரம் பாத்திருக்கேன். அந்த பொண்ணும் அவசரப்படாதடா அவசரப்படாதடான்னு கொழந்தகிட்ட பேசறாப்புல பேசிகினே குண்டான் நெறய சோத்த கொண்டாந்து போடும்.”

”இதுக்குனு அந்த பொண்ணு ஒரு தட்டுகூட வாங்கியாந்து வச்சிருந்தா அந்த மவராசி. அதோ அந்த கனகாம்பரம் செடிகீழ கெடக்குது பாரு…”

அக்கம்பக்கத்துப் பெண்கள் பேச்சோடு பேச்சாக சொன்னதைக் கேட்டு எல்லோரும் செடியின் கீழே பார்த்தார்கள். நீல நிறத்தில் ஒரு பிளாஸ்டிக் தட்டு கவிழ்த்துவைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய உரையாடலின் ஆழம் எல்லோருடைய மனத்தையும் கனக்கவைத்தது. பேச வார்த்தைகள் அற்றவர்களாக மெளனமாக ஒரு நீண்ட துணிப்பொட்டலமாகக் கிடந்த வித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தோம். சுற்றிச்சுற்றி வந்து குரைத்த நாய் சோர்ந்துபோய் வாகனத்தின் சக்கரத்துக்கு அடியில் சென்று உடலைச் சுருக்கி உட்கார்ந்து வித்தியாசமான குரலில் ஊளையிட்டது. வலி தாளாமல் ஒரு சிறுவன் தேம்பித்தேம்பி ஓங்கி அழுகிற குரல். என் அடிவயிறு ஒருகணம் சிலிர்த்து அடங்கியது. 

 வித்யாவின் முகம் உப்பியிருந்தாலும் மரணக்களையே இல்லை. உறக்கத்தில் மூழ்கியவள்போன்ற அமைதி. அடர்த்தியான புருவங்கள் நடுவே ஒரு ஈ பறந்துசென்று உட்கார்ந்தது. அருகில் நின்றிருந்த ஒரு அம்மா அதை விரட்டினாள்.  முழுக்கமுழுக்க மூடப்பட்ட உடலிலிருந்து துணி விலகி. கால்விரல்கள் மட்டும் தெரிந்தன. ஒவ்வொரு விரலும் ஊதிப்போய் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்ட வாழைப்பழங்கள்போல காணப்பட்டன. அவள் காலருகில் சென்று தொட்டு வணங்கும்போது உடைந்து அழுதேன். என் தோளைப் பற்றியபடி மல்லிகாவும் ஜெயந்தியும் வித்யா வித்யா என்று அழுதார்கள். வங்கிச் செயலாளர் அருகில் சென்று மலர்வளையத்தை அவள் பாதங்கள்மீது வைத்து வணங்கினார். அதிரும்  தோள்கள் அவர் உடைந்து நிலைகுலைவதைப் புலப்படுத்தியது. மெளனமாக சில நிமிடங்கள் அப்படியே சிலையாக நின்றுவிட்டு பின்னகர்ந்து ஓரமாக ஒதுங்கினார். வித்யாவின் மாமனாரும் மாமியாரும் அருகில் வந்து மாலை போட்டுவிட்டு உட்கார்ந்து அழுதார்கள். பரிதாபமாக நின்றுகொண்டிருந்த வித்யாவின் மகன் தாத்தாவைப் பார்த்து மனம்வெடித்து அழுதான். நாங்கள் நகர்ந்துகொண்டதும் தெருக்காரர்கள் வந்து மாலைபோட்டு வணங்கிவிட்டுச் சென்றார்கள். பிரிய மனமில்லாதவர்கள்போல வங்கி ஆட்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.

வித்யாவின் தம்பி என்னருகில் வந்து அக்கா அக்கா என்று தேம்பியபடி, மேற்கொண்டு பேச்சு வராமல் அழுதுகொண்டே கையெடுத்துக் கும்பிட்டான். அவன் தலையசைப்பது புறப்படட்டுமா என்று கேட்பதுபோல இருந்தது. அவன் கைகளைப்பற்றி அழுத்தி என் ஆறுதல்களை அவனுக்குத் தெரியப்படுத்தினேன். எனக்கும் பேச்சே வரவில்லை.

வங்கி ஆட்களே கூடியிருந்து ஸ்ட்ரெச்ச்ரைத் தூக்கிவந்து ஊர்திக்குள் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றார்கள். கும்பலைவிட்டு ஒதுங்கிப் போன நாய் அந்த வாகனத்தைப் பார்த்து இடைவிடாது குரைத்தபடியே இருந்தது. வித்யாவின் தம்பி கூடியிருந்த எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.  அழும் சிறுவனின் பிஞ்சுக் கைகளையும் பற்றிக் குவித்து கும்பிடவைத்தான். அக்கணத்தில் எங்களுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. எல்லோரும் வண்டிக்குள் ஏறிக்கொண்டதும் கதவை அடைத்துவிட்டு வாகன ஓட்டி ஊர்தியைக் கிளப்பினார். ஒருகணம் வாகனம் அதிர்ந்து புகையைக் கக்கியது. பிறகு சக்கரங்கள் உருண்டன. மெதுவாக பின்பக்கமாகவே நகர்ந்துபோனது வாகனம். வாகனத்தை ஒட்டி சட்டென்று நாயும் பின்னாலேயே குரைத்தபடி ஓடியது. தெருமுனை திரும்பி பாதையைத் தொடும்வரைக்கும் வைத்த கண் எடுக்காமல் வாகனத்தையும் நாயையும் எல்லோரும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தோம். வாகனத்தின் பின்னாலேயே நாயும் ஓடி மறைந்தது.

களைப்பும் பரபரப்பும் எல்லோரையும் தொற்றிக்கொண்டன. பெண்கள் தத்தம் வீடுகள் இருக்கும் பகுதிகள்நோக்கிச் செல்ல இரண்டுமூன்று பேராகச் சேர்ந்து ஆட்டோ பிடித்தார்கள். தனியாக வந்த ஆண்கள் ஒருசில வாகனங்களின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்றார்கள்.

“வரட்டுமாடி, ஊட்டுல என்னமாதிரியான கச்சேரியோ, போனாதான் தெரியும்” என்றபடி சுலோச்சனா புறப்பட்டாள். “வரியா, வேணும்ன்னா ஒன்ன சுதாகர் நகர்ல வி்ட்டுட்டு போறன்” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். “பரவாயில்லடி, நாங்க மூணு பேருமா ஆட்டோவுல போயிடறோம்” என்றேன் நான்.

“அந்த புள்ள மூஞ்சிய பாக்கவே முடியல. அவள மறந்து எப்பிடிதான் அது இருக்கப் போவுதோ தெரியல…” சொல்லும்போதே அழுதுவிடுவேன்போல இருந்தது. ஜெயந்தியும் மல்லிகாவும் பேசாமல் அமைதி காத்தபடி வந்தார்கள்.  மாதாகோவில் வாசலிலேயே எங்களுக்கு ஆட்டோ கிடைத்தது.

“சுதாகர் நகர் போயிட்டு மூலகொளம் போவணும்…”

“போவலாம்மா,. ஒக்காருங்கம்மா…” என்றபடி ஆட்டோக்காரர் ஸ்டார்ட் செய்யத் தொடங்கினார்.

”எவ்ளோ வேணும் சொல்லுங்க?”

“ஒங்களுக்கு தெரியாதாம்மா, நூறு ரூபா குடுங்கம்மா”

அறுபது அல்லது எழுபது ரூபாய் என்பதுதான் சரியான தொகை. ஆனால் நின்று பேச எங்களுக்கு பேரம்பேச சக்தியில்லை. அந்த அளவுக்கு மனபாரம் அழுத்தியது. “சரி” என்றபடி வண்டிக்குள் ஏறி அமர்ந்துகொண்டோம்.

வண்டி கிளம்பியதும் சற்றே சாய்ந்து உட்கார்ந்த ஜெயந்தி ஏதோ நினைவுகளில் மூழ்கியவளாக சில கணங்கள் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக விசும்பும் ஒலி அவளிடமிருந்து வெளிப்பட்டது.

”என்னடி?” என்றேன்.

“மழநாளா இருந்தாலும் சரி, வெயிலா இருந்தாலும் சரி, சில்லுனு பச்சதண்ணியிலதான்டி அவ குளிப்பா. வெந்நீரே புடிக்காது அவளுக்கு. ஒடம்பு பூரா நெருப்பு புடிச்சி எரிஞ்சியிருக்கே, பாவி எப்பிடிதான் தாங்கனாளோ…” என்று துண்டுதுண்டாகச் சொல்லிவிட்டு கைக்குட்டையால் வாயை மூடிக்கொண்டு திடீரென்று அழுதாள் ஜெயந்தி.

அவளை ஆதரவோடு என் தோளோடு சாய்த்துக்கொள்ளவும்  குமாரின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. ஐயோ இந்த நேரத்திலா என்று தோன்றியது. பொத்தானை அழு்த்திவிட்டு காதருகில் எடுத்துச் சென்ற தருணத்திலேயே “என்ன, கெளம்பிட்டியா இல்லயா?” என்று சத்தமாகக் கேட்டார்.

“வண்டியில ஏறிட்டம்ங்க. இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்” என்றேன். எனக்கு பேசவே சக்தியற்றுப்போனதுபோல இருந்தது. அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தார். இப்போதுகூட அவர் வித்யாவைப்பற்றி எதுவும் கேட்கவில்லையே என்று தோன்றியபோது வருத்ததிலும் ஏமாற்றத்திலும் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

(அம்ருதா – 2012)