கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசமெங்கும் சுதந்திரப்போராட்ட எழுச்சி சுடர்விட்டது. அதற்கு வித்திட்டவர்கள் விபின் சந்திரபால், திலகர், லாலா லஜபதி ராய் ஆகிய முப்பெருந்தலைவர்கள். 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கப்பிரிவினையை எதிர்த்து உருவான எழுச்சியில் லஜபதி ராய் பங்கேற்றார். அந்த தன்னிச்சையான எழுச்சியை சுதந்திர வேட்கையாக மடை மாற்றியவர்களில் முக்கியமானவர் அவர். தமக்கு எதிராக உருவான எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு லஜபதி ராயை இந்தியாவிலிருந்து மண்டேலாவுக்கு நாடுகடத்தியது. அதை அறிந்த இந்திய சமூகம் திகைப்பில் ஆழ்ந்தது. அதுவே மெல்ல மெல்ல தீப்பொறியாக மாறி சுதந்திர வேட்கை நாடெங்கும் பரவ வழிவகுத்தது.
சொந்த நாட்டைவிட்டு அந்நிய தேசத்தில் வாழ்ந்தபடி இந்தியாவை நினைத்து
துயரிலாழ்ந்த லஜபதி ராயைப்பற்றிய ஒரு சித்திரத்தை பாரதியார் தீட்டியிருக்கிறார்.
என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ
ஏதெல்லாம் யானறியாது எம்மனிதர் பட்டனரோ
இது லஜபதி ராய் என்னும் ஒற்றை மனிதரின் வேட்கையோ, கனவோ, விருப்பமோ
மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக அதை நயமாக மாற்றிவிடுகிறார். தேசபக்தியை வெளிப்படுத்த
கிட்டிய வாய்ப்பாகவே பாரதியார் லஜபதி ராயைப்பற்றிய சித்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஒவ்வொரு தமிழ்வாசகனுக்கும் கடந்த நூற்றாண்டின் முப்பெருந்தலைவர்களைப்பற்றியும் இந்திய
சுதந்திரப்போராட்டத் தொடக்க முயற்சிகளைப்பற்றியும் தெரிந்துகொள்ள இந்தக் கவிதைச்சித்திரம்
ஒரு தொடக்கமாக உள்ளது.
லாலா லஜபதி ராயின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய
ஒரு பாடம். இந்திய மக்களால் ஒரு காலகட்டத்தில் ’பஞ்சாப் சிங்கம்’ எனப் பாசமுடன் அழைக்கப்பட்டவர்
லஜபதி ராய். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதோடு மட்டுமில்லாமல்
இறுகிப்போன சமயப் பழக்கவழக்கங்களிலிருந்து இந்தியா விடுபட்டு மறுமலர்ச்சியுற வேண்டும்
எனவும் அவர் விழைந்தார். 28.01.1865 அன்று
பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்.
அரும்பாடுபட்டு படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். அவர் பட்டம் பெற்ற காலகட்டம் இந்தியாவில் ஒரு சிக்கலான
தருணம்.
1857 இல் கிழக்கிந்தியக் கம்பெனியை விலக்கி இந்தியாவை ஆளும்
ஆட்சிப்பொறுப்பை நேரிடையாக ஏற்றுக்கொண்ட ஆங்கிலேய அரசாங்கம், அரசுப்பதவிகளை இந்தியர்களுக்கு
வழங்குவதில் தயக்கம் காட்டியது. படித்த இளைஞர்களிடையே இது கடுமையான கசப்பை வளர்த்தது.
கசப்பு வெறுப்பாக மாறி விடுதலை பெறும் வேட்கையை உருவாக்கியது. இந்தியர்களின் மனக்குறைகளையும்
கோரிக்கைகளையும் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேரிடையாகத் தெரிவிக்கும் வகையில்
இந்திய தேசிய காங்கிரஸ் 1885 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆங்கிலேய அரசின் மெளனமும்
தயக்கங்களும் பொய்வாக்குறுதிகளும் காங்கிரஸை தேசிய விடுதலையை நாடும் அமைப்பாக மெல்ல
மெல்ல மாற்றியது. 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கப்பிரிவினை லஜபதி ராயின் தேசிய உணர்வைத்
தூண்டியது. ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளும் கடுமையான அணுகுமுறையும் அவருடைய சுதந்திர
வேட்கையையும் தன்மான உணர்வையும் தூண்டின. சுதந்திர நாட்டத்துக்கான அவருடைய குரல் தேசமெங்கும்
பரவியது.
இக்கட்டத்தில் லஜபதி ராய் ஆற்றிய பணி மகத்தானது. ஆங்கிலேய அரசு
இந்தியர்களையும் இந்தியப் பட்டதாரிகளையும் விலக்குவதற்கான காரணம் என்ன என்பதை எவ்விதப்பதற்றமும்
இல்லாமல் ஆய்வுநோக்கில் அவர் சிந்தித்தார். பிரிட்டன் அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில்,
இந்தியர்கள் நாகரிகமற்றவர்கள். பழமையில் தோய்ந்தவர்கள். அவர்களை நாகரிகமானவர்களாக மாற்றும்
கடமையையே பிரிட்டன் அரசு செய்கிறது. அவர்களால் தனித்தியங்க முடியாது. தனித்தியங்க முனைந்தால்
அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதி தம்மைத்தாமே அழித்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அவர்களிடயே
பிரிவினைகள் உள்ளன. அந்த நோயை அகற்றி, அவர்களைக் குணப்படுத்த பிரிட்டன் அரசால் மட்டுமே
முடியும். இப்படியாக பலவிதாமக அரசின் மனத்தில் இருந்த எண்ணங்களை மாற்றுவதோடு மட்டுமன்றி
இங்கிலாந்து பொதுமக்களின் மனப்பதிவையும் மாற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதையும்
நோக்கமாகக் கொண்டார் லஜபதி ராய். அந்தப் புரிதலில் கிட்டும் வெற்றியின் வழியாக இங்கிலாந்து
பொதுமக்கள் மூலம் ஓர் அழுத்தத்தை அரசுக்கு
ஏற்படுத்த முடியும் என அவர் நம்பினார்.
இந்தியர்களின் விருப்பங்களை நேரிடையாக தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்துக்குச்
சென்ற குழுவில் ராய் இடம்பெற்றிருந்தார். குழுவினரின் குரல் அரசின் ஆன்மாவை அசைக்கவில்லை.
பிறகு அரசுக்குப் புரியவைக்க முடியாத உண்மையை இங்கிலாந்து மக்களுக்குப் புரியவைக்க
லஜபதி ராய் முடிவெடுத்தார். இதற்கு முன்பு ஆங்கிலேயர்களும் ஆங்கிலேயர் அல்லாதோரும்
இந்தியாவைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான புத்தகங்களைத் தேடிப் படித்தார்.
அவை அனைத்தும் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டிருந்தாலும் அனைத்தும் இரு கோணங்களை மட்டுமே
கொண்டிருப்பதை அறிந்தார். நாகரிகமறியாத இந்தியர்களை நாகரிகப்படுத்தி மேன்மையுறச் செய்யவே
ஆங்கில அரசு முயற்சி செய்கிறது என நம்பவைக்கும் கோணம் ஒருபக்கம். சுற்றுலாப்பயணியின்
பார்வையில் தாம் பார்த்ததையெல்லாம் தொகுத்து முன்வைக்கும் கோணம் மறுபக்கம். இதைத் தாண்டி,
இந்தியாவின் முகத்தையும் சிக்கல்களையும் உலகத்தின் பார்வையில் முன்வைக்கும் நூல் எதுவுமில்லை.
அதே நேரத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளும் இந்திய இலக்கியங்களும்
இந்தியாவின் பழமையையும் பெருமையையும் பற்றி உணர்த்திய உண்மை ஒரு சிறிய அசைவை மட்டுமே
நிகழ்த்தியிருந்தது. அச்சிறிய வட்டத்தினர் மீது நம்பிக்கைவைத்து, அவர்கள் வழியாக நம்பிக்கைக்குரிய
பெரிய வட்டத்தை ஏற்படுத்திவிட முடியும் என்னும்
தீரா வேட்கையோடு அவர் இரண்டு புத்தகங்களை
எழுதி வெளியிட்டார்.
’நிராசை மிக்க இந்தியன்’ (UNHAPPY INDIAN) என்ற தலைப்பில் அவர்
எழுதிய புத்தகம் ஞான பூமியாக இந்தியா திகழ்ந்த வரலாற்றையும் இந்தியாவில் பின்பற்றப்படும்
சாதிமுறைகளைப்பற்றியும் இந்திய மகளிரைப்பற்றியும் முப்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில்
ஏராளமான தரவுகளோடு எழுதப்பட்ட கட்டுரைகளை அடங்கியது அந்தப் புத்தகம். அதைத் தொடர்ந்து
‘யுவ பாரதம்’ (YOUNG INDIA) என இன்னொரு புத்தகத்தையும் எழுதி முடித்தார். இந்தப் புத்தகத்தில்
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இங்கே அரசு நிலவிய முறை, நிலையான ஆட்சியளித்த மன்னர்கள்,
சமயக்கலப்புகள் என ஏராளமான தகவல்களை வரலாற்றின் வெவ்வேறு காலகட்டத்திலிருது எடுத்துத்
தொகுத்து முன்வைத்தார். அதுவரைக்கும் நிகழ்ந்த மன்னர்களின் ஆட்சிமுறைக்கும் ஆங்கிலேயர்களின்
ஆட்சிமுறைக்கும் இடையிலிருக்கும் மிகமுக்கியமான வேறுபாட்டை அவர் தெளிவாகவே முன்வைத்தார்.
செல்வம் சேர்ப்பதில் ஆசை கொண்டவர்களாக இருப்பினும் கூட, சொந்த நாட்டு மக்களை பசியிலும்
பஞ்சத்திலும் அழிந்தொழிய விட்டவர்கள் அல்ல. ஆங்கிலேயர்களோ செல்வத்தைச் சுரண்டியெடுத்து
தன் நாட்டுக்கு எடுத்துச் செல்வதில் பேராசை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும்
பஞ்சங்களால் மக்கள் செத்தொழிவதைப்பற்றி துளியும் வருத்தப்படாத மனசாட்சியற்ற கற்களாக
இருக்கிறார்கள் என்பதையும் தக்க சான்றுகளோடு ஒரு வழக்கறிஞரின் குரலாக அந்த நூலில் ராயின்
பார்வை பதிவாகியிருந்தது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் துயரங்களை இங்கிலாந்தின் பாராளுமன்றம்
வரைக்கும் எடுத்துச் செல்ல காந்தி கையாண்ட அதே வழிமுறையையே ராய் பின்பற்றினார். உண்மைகளைத்
தொகுத்து எதிரியின் மனசாட்சியை அசைக்கும் முயற்சியாக ராய் எழுப்பிய குரல் ஒரு பெரிய
விவாதத்தை இங்கிலாந்தில் ஏற்படுத்தியது. கல்வித்தகுதி கொண்ட இந்திய இளைஞர்களை உடனடியாக
அரசு வேலைகளில் அமர்த்துவதைப்பற்றிய கொள்கை முடிவுகளை அரசு எடுக்க அது ஒரு தூண்டுதலாக
இருந்தது.
சுதந்திரப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக காந்தியின் வருகை திகழ்ந்தது.
லஜபதி ராய் அவருடைய அணுகுமுறையின் வசீகரத்துக்கு ஆட்பட்டு ஒத்துழையாமை இயக்கத்தில்
முழுமனத்தோடு ஈடுபட்டு சிறைபுகுந்தார். பதினெட்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
செளரி செளரா சம்பவத்தை முன்னிட்டு காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை நிறுத்தியதை
அறிந்து அவர் மனவேதனையுற்றார். விடுதலைக்குப் பிறகு சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு தொடங்கிய
சுயராஜ்ஜியக்கட்சியோடு இணைந்து செயலாற்றினார். 1928 ஆம் ஆண்டில் சைமன் குழு லாகூருக்கு
வருகை தந்தபோது, அதை எதிர்த்து நடத்தப்பட்ட கருப்புக்கொடி போராட்டத்தை தலைமை தாங்கி
நடத்தினார். அப்போது காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காவல் அதிகாரி அத்தருணத்தைப்
பயன்படுத்திக்கொண்டு லஜபதி ராயை முரட்டுத்தனமாக தாக்கி காயப்படுத்தி வீழ்த்தினார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஜபதி ராய், அங்கேயே உயிரிழந்தார்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு லஜபதி ராயின் புத்தகத்தை
தமிழில் வாசிக்கும் பேறு தமிழ் வாசகர்களுக்கு இன்று கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை
தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கல்கி என்பது ஒரு புதிய தகவல். இதுவரைக்கும் கல்கியைப்பற்றிய
எந்த விவரக்குறிப்பிலும் (விக்கிபீடியா குறிப்பு உட்பட) இந்தத் தகவலே இல்லை. அவருடைய
மொழியாளுமை இப்புத்தகத்தை ஒரு வரலாற்றுப்புத்தகத்தைப்போல படிக்கவைக்கிறது.
முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரைக்கும் லஜபதி ராய்
மேற்கொண்டிருக்கும் நிதானமான அணுகுமுறை இந்தப் புத்தகத்தை மிகமுக்கியமான ஒரு புத்தகமாக
மாற்றுகிறது. எந்த ஒரு இடத்திலும் அவர் கூடுதலாகவோ,
குறைவாகவோ தகவலை முன்வைக்கவில்லை. உணர்ச்சிவசப்படவுமில்லை. இந்தியர்களைப்பற்றி உலகின்
பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் பிம்பத்தை வாதங்கள் வழியாக கலைத்து வெளிச்சத்தை
அளிக்கிறார். புதிய தகவல்களை முன்வைக்கும்போது தெளிவாகவும் சுருக்கமாகவும் முன்வைக்கிறார். ஒரு வழக்கறிஞருக்கே உரிய பொறுமையோடும் நம்பிக்கையோடும்
நினைவாற்றாலோடும் வரலாற்றைப்பற்றிய ஆய்வனுபவத்தகவல்களோடும் உரையாடிக்கொண்டே செல்கிறார்
லஜபதி ராய். மெல்ல மெல்ல இந்தியாவைப்பற்றிய புதிய சித்திரத்தின் பக்கம் பார்வையைத்
திருப்புகிறார். அழுத்தமான உண்மைகளும் திருத்தமான குரலில் அவற்றை முன்வைக்கும் விவேகமும்
இந்த நூலின் மிகமுக்கிய வலிமைகள்.
நினைவிலிருந்து மறையத்தொடங்கிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்து
மறுபதிப்பு கொண்டுவந்திருக்கும் சந்தியா பதிப்பகத்தின் முயற்சிக்கு என் பாராட்டும்
வாழ்த்தும். லஜபதிராயின் எழுத்துக்கு கச்சிதமாக தமிழ்வடிவம் கொடுத்திருக்கும் மூத்த
எழுத்தாளர் கல்கிக்கு என் வணக்கம். தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலை அவசியம்
படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
( 2018இல் சந்தியா பதிப்பகத்தின் வழியாக, கல்கியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த யுவபாரதம் என்னும் புத்தகத்துக்கு
எழுதிய முன்னுரை )