Home

Sunday, 6 November 2022

காலத்தின் விளிம்பில் - சிறுகதை

 பூந்தோட்டம்என்னும் இணைய வார இதழில் நான் எழுதத்தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது-. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்திவந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான காரணமும் இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப்பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

பதினோராவது வாரத்துக்கான கட்டுரையை எழுதி முடித்து அனுப்புவதற்காக மின் அஞ்சல் பக்கத்தைத் திருப்பியபோது எனக்கொரு மடல் வந்திருக்கும் செய்தியை அறிந்தேன். முதலில் திரையில் புலப்பட்ட ஒற்றைவரி முகவரியை வைத்து எழுதியவர் யாராக இருக்கும் என்று ஊகிக்க முயற்சிசெய்தேன். என் மனத்தில் வழக்கமாக எனக்கு மடலெழுதும் நண்பர்களின் மின்அஞ்சல் முகவரிகள் அனைத்தும் பளிச்சிட்டு மறைந்தன. யார் என்பதை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவில்   ஆர்வம் உந்த அந்த மடலைத் திறந்தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தது அக்கடிதம். பல ஆண்டுகளாக இலக்கிய அறிமுகம் உள்ளவராகத் தெரிந்தார். தொடராக வந்திருந்த பத்துக் கட்டுரைகளைப்பற்றியும் சிற்சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அம்மடல் பொதுவாக என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது.- நன்றியைத் தெரிவித்து அவருக்குப் பதில் அனுப்பினேன்.

அவர் பெயர் சந்திரன். எங்கள் நட்பு இப்படித்தான் தொடங்கியது. பிறகு கட்டுரை வெளியானதும் ஒவ்வொரு வாரமும் அவரிடமிருந்து அஞ்சல் தவறாமல் வரத்தொடங்கியது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவில் வேலை செய்வதாகத் தெரிவித்திருந்தார் அவர். ஒவ்வொரு அஞ்சலிலும் தினசரி வாழ்வில் தாம் கண்ட விசேஷமான செய்தியொன்றை எழுதி அனுப்புவார். இரு சக்கர வாகனத்தில்  சென்று அவசரத்தில் தடுமாறி மரத்தில் மோதிக் கால் உடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கிதார் வாசிக்கும் இளைஞன் ஒருவனைப்பற்றிய குறிப்பை ஒரு மடலில் எழுதியிருந்தார். ஒரு பூங்காவில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து தன் சேமிப்புப்பையிலிருந்து ரொட்டித்துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆனந்தமாகத் தின்ற பிச்சைக்காரன் ஒருவனைப்பற்றி ஒருமுறை எழுதியிருந்தார். தன் வீட்டைப் பற்றியும் சுற்றுப் புறத்தைப்பற்றியும் சொற்சித்திரங்களாகவே தீட்டியிருந்தார். வீட்டுக்கு அருகிலிருந்த விலங்குக் காட்சிச் சாலையை பற்றி அவர் எழுதிய தகவல்கள் ஏராளமானவை. ஒவ்வொரு விலங்கின் கூண்டுக்கும் அவர் பெயர் சூட்டியிருந்த விதம் விசித்திரமானது. சிங்கத்தின் கூண்டுக்குஇடியோசையின் இல்லம்.” சிறுத்தையின் கூண்டுக்குவேகத்தைத் துறந்த விவேகியின் வீடு”. பஞ்சவர்ணக்கிளிகளின் கூண்டுகளுக்குபறவைகளின் இசைக்கோயில்.”

பெங்களூர் நகரைவிட்டு வெகுதொலைவு தள்ளியிருக்கும் ஹுடி என்னும் கிராமத்தில்ஆஷ்ரயாஎன்கிற பெயரில்  இயங்கும் முதியோர் இல்லத்தைத் தெரியுமா-?” என்று ஒருமுறை கேட்டிருந்தார் சந்திரன். அச்சமயத்தில் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிற உள்ளூர் நண்பர்களை விசாரிக்கத் தொடங்கினேன். பலருக்கு அதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. ஒருவர் மட்டும் அது ஒரு முதியோர் இல்லமென்றும் சேவை மனப்பான்மை கொண்ட சிலரால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொன்னார். திருமணமாகாத தன் சகோதரிகள் இருவரும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்கே  தங்கியிருக்கிற முதியோர்களுடன் பேசியும் பழகியும் அவர்கள் தேவையை நிறைவேற்றியும் ஊக்கமூட்டியும் வருவதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் சொன்னார். அந்தத் தகவலை அன்று இரவே நான் சந்திரனுக்கு அனுப்பினேன். அதற்கப்புறம் இரண்டு மாதங்கள் அதைப்பற்றிய பேச்சே இல்லை. ஒருநாள் திடீரென்று தன் பெரியம்மா அந்த இல்லத்தில் சேர்க்கப்ட்டிருப்பதாகவும் தன் சார்பில் அவரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். என் ஓய்வுநாளுக்காகக் காத்திருந்த இடைவெளியில் அவரிடமிருந்து விரிவான மடலொன்று வந்தது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் தனக்கு ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்தது என்று தன் மடலைத் தொடங்கியிருந்தார் சந்திரன். தாயார் மட்டுமே அவருக்கு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் தனியாகவே வாழ்ந்தார் சந்திரன். பிறகு இந்தியாவுக்குத் திரும்பி தாயாரையும் தன்னோடு அழைத்துச் சென்றார். தாயாருக்குப் பிரியமான சகோதரி ஊரில் இருந்தார். ஏழைக் குடும்பம், ஆறு பிள்ளைகள். முடிந்தவரை பெரியம்மாவின் குடும்பத்தையும் தாங்கியே வந்தார் சந்திரன். ஆப்பிரிக்கப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். பேரப் பிள்ளைகளோடு ஆனந்தமாக ஆடிப் பொழுதுபோக்கிய அம்மா வெகுகாலம் உயிருடன் இல்லை. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்துபோனார். இடைக்காலத்தில் இந்தியாவில் பெரியம்மாவின் நிலையும் மோசமானது-. ஆறு பிள்ளைகளும் ஆறு விதமாக வளர்ந்தார்கள். சந்திரன் அனுப்பிய பணத்தையெல்லாம் தாய்க்குத் தெரிந்து பாதியும் தெரியாமல் பாதியுமாக சாப்பிட்டு தீர்த்தார்கள். மூத்தவன் சதாகாலமும் குடிபோதையில் மிதந்தான். இரண்டாவது மகன் சம்பாதித்த பணத்தையெல்£ம் விபச்சாரத்தில் அழித்தான். மூன்றாவது மகனும் நாலாவது மகனும் உள்ளூரிலேயே திருட்டு வழக்கொன்றில் அகப்பட்டுச் சிறையிலிருந்து தப்பித்து மும்பைப்பக்கம் ஓடிப் போனார்கள். பள்ளியிறுதி முடித்ததும் ராணுவத்தில் சேர்ந்து ஊரையே மறந்து போனான் ஐந்தாவது மகன். ஆறாவது பையன் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தான். அலுவலகத்துக்கு எதிரே இருந்த ஆயத்த ஆடை அங்காடியில் வேலை பார்த்த ஒரு பெண்ணோடு பழகித் திருமணம் செய்துகொண்டான். மனைவியை உள்ளே அழைத்துக் கொண்டதும் வயதான பெரியம்மா வாசலுக்கு மாற்றப்பட்டார். மனமுடைந்த பெரியம்மா தன் துக்கத்தை யெல்லாம் யாரோ ஒருவர் மூலம் கடிதமாக எழுதிச்  சந்திரனுக்கு. அனுப்பினார். பெரியம்மாவின் துயரம் தன் அம்மாவின் துயரமாகத் தெரிந்தது சந்திரனுக்கு --இணைய தளங்களில் தேடித்தேடி பெங்களூருக்கு அருகே ஹுடியில் இயங்கும் ஆஷ்ரயா இல்லத்தின் முகவரியைக் கண்டறிந்து அங்கே சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை வேறொரு நண்பர் மூலம் செய்துமுடித்தார். ஒரு வருடம் ஓடிவிட்டது. மாதத் தவணைகளை அங்கிருந்தபடியே நேரிடையாகச் செலுத்திவந்தார். சமீபகாலத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கனவுகள் அவரைப் பாடாய்ப்படுத்திவந்தன. விலங்குக்காட்சிச் சாலையில் நின்றிருந்தபோது அக்கூண்டுகளையும் முதியோர் இல்லங்களையும் சம்பந்தப்படுத்தி யோசித்த கணத்திலிருந்து அக்கனவு விரட்டத்தொடங்கிவிட்டது. பெரியம்மா பலவித விலங்குகளின் உருவத்துடன் ஒவ்வொரு முறையும் கனவில் வந்து கம்பிகளைப் பிடித்தபடி ஏக்கத்துடன் முறைத்ததுப் பார்ப்பதைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. நினைத்தவுடன் விடுப்பெடுப்பது சாத்தியமாக இல்லை. அவர் சார்பில் இல்லத்துக்குச் சென்று அந்தப் பெரியம்மாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வரவேண்டும். இதுதான் அக்கடிதத்தின் சாரம்.

அடுத்த ஞாயிறு அன்று பேருந்துத்தடம் விசாரித்து அந்த இல்லத்துக்குக் கிளம்பினேன். மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருந்தது. இறுதியாக இறங்கிய நிறுத்தத்தின் அருகே ஓர் ஓலைக்குடிசை டீக்கடை மட்டும் காணப்பட்டது. ஒரே ஒரு சிகரெட் மட்டும் வாங்கிப் பற்றவைத்தபடி ஆசிரமத்தைப் பற்றி விசாரித்தேன். டீக்கடைக்காரப் பெண் குடிசைக்கு வெளியே வந்து தொலைவில் தோப்பைப்போலக் காணப்பட்ட ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டிஅதுதான் இல்லம்என்றாள்.

அதுவரிக்கும் பஸ் போகாதா?”

இல்லத்துக்கு இதுதான் ஸ்டாப். எல்லாரும் இங்க எறங்கித்தான் நடந்துபோவாங்க. நீங்க வெளியூரா?”

நான் வேடிக்கைக்காகஆமாம்என்றேன்.

வயசானவங்கள இங்க கொண்டாந்து உட்டுட்டு ஆளுக்கொரு பக்கமா போயிடறாங்க சார். கூழோ கஞ்சியோ ஒன்னா சேந்து லட்சணமா குடிக்கறத உட்டுட்டு பணம்பணம்ன்னு எதுக்குத்தான் சார் மக்கள் அலையறாங்களோ? காலம் ரொம்ப மாறிப்போச்சி சார்”-.

நல்லா கவனிச்சிடக்கிடறாங்களா இங்க-?”

கவனிப்புக்கெல்லாம் எந்தக் கொறையுமில்ல சார். நூறு பேரு கவனிச்சிக்கிட்டாலும் பக்கத்துல பெத்த புள்ள இருந்து பாக்கறமாதிரி ஆவுமா, சொல்லுங்க”.

அடிக்கடி நீங்க போவிங்களா?”

காலையில அங்க பால்பாக்கெட் வாங்கிம்போயி குடுக்கறதெல்லாம் எங்க ஊட்டுகாருதான். ஒங்க ஜனங்க யாராவது இருக்காங்களா இங்க?- நான் வேற எகணமொகண இல்லாம ஏதேதோ பேசிட்டிருக்கேன்”.

எங்க ஜனங்க யாருமில்ல. எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தருக்கு வேண்டியவங்க இருக்காங்க”.

புன்னகையுடன் சிகரெட்டை அணைத்துவிட்டு அவளிடம் விடைபெற்று நடக்கத் தொடங்கினேன். அவளுடைய தமிழ் திருவண்ணாமலைப்பக்கத்து மொழியைப் போல இருந்தது. பெங்களூரின் பல புறநகர்களில் இப்படிப்பட்ட பல குரல்களைக் கேட்டிருக்கிறேன். நமக்குப் பழக்கமான குரல் ஏதாவது காதில் விழாதா என்று நினைத்தபடி நடக்கும்போதெல்லாம் சொல்லி வைத்தமாதிரி ஒரு குரல் ஒலித்து அரைக்கணம் நிறுத்திவிடும்.

மஞ்சளாகப் பூப்பூத்த சின்னசின்ன முட்செடிகள் இருபுறமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்திருந்தன. அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத குருவிகள் எல்லாக் கிளைகளிலும் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தன. கட்டாந்தரையாக இருந்த இடத்தில் சில பிள்ளைகள் கிரிக்கெட் ஆடியபடி இருந்தார்கள். அந்தப் பாதை முடியுமிடத்தில்ஆஷ்ரயாஎன்று எழுதப்பட்ட பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. அதையொட்டி உடனடியாக சுற்றுச்சுவர் தொடங்கியது. சுவரின் மேல்விளிம்பு தெரியாத வகையி¢ல் சிவப்புக் காகிதப்பூக்கள் அடர்ந்து பூத்திருந்தன. எல்லா இடங்களிலும் அவற்றின் கிளைகள் படர்ந்திருந்தன. வாசலில் இருந்த காவலரிடம் விவரம் சொல்லி உள்ளே நுழைந்தேன். பெரிய பூந்தோட்டத்தில் நுழைந்ததைப்போல இருந்தது. கண்ணில் பட்ட இடங்களி லெல்லாம் வகைவகையான நிறங்களில் பூக்கள் பூத்திருந்தன. இரு சேவகர்கள் மரங்களின் கீழே உதிர்ந்திருக்கும் இலைகளையெல்லாம் கூட்டிச் சேகரித்தபடி இருந்தார்கள். பூந்தோட்டத்தையொட்டிப் பச்சைக் கம்பளத்தைப்போல பளபளக்கும் பெரிய புல்வெளி, பெரிய நிழற்குடையின் கீழே வட்டமாக வடிவமைக்கப்பட்ட சிமெண்ட் பெஞ்சுகள். அழகான சுற்றுச்சுவர். சிலைகளுடன் எளிய முறையில் அமைந்திருந்த கோவில். தேவாலயம். தொழுகைக்கூடம். கையில்  கோலேந்தி நடக்கும் மூதாட்டி ஒருத்தியையும் முதியவர் ஒருவரையும் கரம்பற்றி நடத்திச் செல்லும் ஒரு சின்னஞ்சிறுவனைப்போன்ற சிலைகள் பீடத்தில் வீற்றிருந்தன. அதைச்சுற்றியும் அழகான பூச்செடிகள். பிறகு வட்டமான பளிங்குத் தொட்டி. அதற்குள் பலவித உயரங்களில் பொருத்தப்பட்ட நீரூற்றுகளிலிருந்து நீர் பீய்ச்சியடித்தபடி இருந்தது. எதிரில் ஒரு சிறிய கண்ணாடிக்கூடம். உள்ளே நான்கைந்து மேசைகள். கூடத்தின்மீது பலவிதமான கொடிகள் படர்ந்து பச்சைப்பசேலெனக் காணப்பட்டது. பின்னால் விரிந்த வெளியில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுசிறு இல்லங்கள். எல்லாமே ஓட்டு வீடுகளுக்கு உரிய அமைப்பில் கட்டப்பட்டவை மறுபுறம் மருத்துவமனை, வேறொரு புறத்தில் உடல் எரிமையம. அதன் புகைப்போக்கி மேகத்தைத் தொடுவதைப்போல மிக உயரமாக எழுப்பப்பட்டிருந்தது. அங்கங்கே வாகன நிறுத்தங்கள், பக்கவாட்டில் நடப்பதற்குத் தோதான கிளைப்பாதைகள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக நடந்தேன். தாமதமாகத்தான் கட்டட அமைப்புகளைக் கவனித்தேன். எல்லாமே தரையோடு ஒட்டியவை. படிக்கட்டுகளோ, மாடிப் பகுதியோ எங்கேயும் காணப்படவில்லை. முதுமையின் சக்தியைக் கருத்தில் கொண்டு அவை வடிவமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும் அந்த இடத்தின் தனிமை விசித்திரமான ஒரு உணர்ச்சியை என் மனத்தில் பரப்பியது. ஆழ்மனத்தில் என்னை அறியாமலேயே ஒருவித அச்சம் பரவுவதை உணர்ந்தேன்.

நீரூற்றுக்கு இடதுபுறமாக இருந்த விசாரணை மையத்துக்குள் நுழைந்தேன். அந்த அறையின் உள்சுவர் முழுக்க அழகான புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சிறுசிறு வாக்கியங்களைக்கொண்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தன. தயக்கத்துடன் பார்வையை அங்குமிங்கும் படரவைத்தபடி திரும்பியபோது ஒரு மேசையின் பக்கம் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணின் புன்னகையைப் பார்க்க நேர்ந்தது. ஒருகணம் அப்புன்னகையை ஒரு சிற்பத்தின் புன்னகையாக நினைத்துப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு மெல்ல அவளை நெருங்கி என்னிடம் இருந்த குறிப்புளைக் கொடுத்தேன்.

தையல்நாயகி, எஸ் ஸெவன்

என் குறிப்பை வாய்விட்டுப் படித்தபடி அவள் இருக்கை யிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். குடில்கள் தொடங்கும் பகுதிவரைக்கும் கூடவே வந்து நான் செல்லவேண்டிய திசையையும் திரும்பவேண்டிய இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றாள். அவள் காட்டிய  திசையில் நடக்கத் தொடங்கினேன் நான். எல்லா இல்லங்களும் ஒரேவிதமாக வடிவமைவக்கப்பட்டிருந்தன. இல்லத்துக்கு முன்னால் மொசைக் கற்கள் பதிப்பப்பெற்ற சிறு முற்றம். ஒரு சிறு நிழற்குடை. அதன்கீழ் ஒரு சாய்வு நாற்காலி. அதைச்சுற்றிச் சின்னத் தோட்டம். தோட்டத்தில் சூரியகாந்திப் பூக்களின் மஞ்சள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

தற்செயலாகத்தான் ஒரு இல்லத்தின் ஜன்னல் பக்கமாக என் பார்வை சென்றது. இரண்டு கண்கள் என்மீது பதிந்திருந்தன. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவை என்னைத்தான் பார்க்கின்றனவா என்கிற சந்தேகத்தில் மீண்டும் அத்திசையில் பார்த்தேன். வைத்த விழி வாங்காமல் அப்பார்வை என்மீதே நிலைகுத்தியிருந்தது. தோல் சுருங்கிய அம்முகத்தையும் எதையோ யாசிக்கும் அக்கண்களையும் நீண்ட கணங்களுக்கு என்னால் பார்க்க முடியவில்லை. உடனடியாகத் திரும்பி மற்ற இல்லங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினேன். உண்மையிலேயே என் பதற்றம் அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஜன்னலின் பக்கத்திலும்  இரு கண்கள். நைந்து தளர்ந்த விழிக்குழிகளிலிருந்து உயரும் பார்வை. பாதையைப் பார்த்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினேன். யாரோ என்னை அழைப்பதைப் போலிருந்தது. தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. அடையாளம் காட்டிய பெண்ணைக்கூட காணவில்லை. ஏதோ வாகனங்களில் சுமந்துவந்து இறக்கிவைத்துவிட்டுப் போன பெரிய பெரிய எந்திரங்களைப்போல காணப்பட்டன இல்லங்கள். ஜன்னல்களின் பக்கம் நிமிர்ந்துகூட பார்க்கமுடியாத அளவு நெஞ்சில் அச்சம் துளிர்த்ததை ஆச்சரியமாக உணர்ந்தேன். மறுகணமே என் பகுத்தறிவு மூளை விழித்து அந்த அச்சத்தை விரட்டியது. அந்த இடத்தின் விசித்திரம் ஒரு சின்னச் சத்தம்கூட காதில் விழவில்லை என்பதுதான். ஒரு தும்மல் சத்தம்கூட கேட்கவில்லை.

இல்லத்தின் கதவை நெருங்கி அழைப்புமணியை அழுத்தினேன். என் புலன்கள் இல்லத்துக்குள் ஏற்படக்கூடிய துணிகள் உரசும் ஒலியையோ செருப்புகள் அழுந்தும் சத்தத்தையோ ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தன. சில கணங்கள் வரை எதுவும் கேட்கவில்லை. மீண்டும் மணியை அழுத்தலாம் என்று நினைத்த தருணத்தில் கதவு சட்டெனத் திறந்தது. வெளிப்பட்ட அந்த உருவத்தின் தோற்றம் என்னை ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உருக்குலைந்த சதைக் கோளத்துக்குக் கையும் காலும் முளைத்ததைப் போலிருந்தது அத்தோற்றம். என் இதயம் வெகுவேகமாகத் துடிக்கத்  தொடங்கியது.

தையல்நாயகிங்கறது நீங்கதானேம்மா?”

கேட்க நினைத்த கேள்வி நெஞ்சிலிருந்து எழாமல் வறட்சி அடைத்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி ஈரத்தைப் படரவைத்த பிறகுதான் சகஜமாகக் கேட்கமுடிந்தது. என் கேள்வியையே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கண்கள்மட்டும் அசைந்தன. என்னை ஆராய்வதைப்போல உற்றுப் பார்த்தன. நான் மீண்டும்தையல்நாயகிங்கறது நீங்கதானே?” என்று கேட்டேன். அவர் மேலும் நெருங்கிவந்தும்?” என்று என்பக்கம் செவியைக் கொடுத்தார். என் கேள்வியை மறுபடியும் நான் கேட்கவேண்டியதாக இருந்தது.

என் சின்னப்புள்ளைதான் இங்க கொண்டாந்து உட்டுட்டுப் போனான். அப்புறமா வரவே இல்ல

தொடர்பில்லாமல் பேசியபடி அவர் உள்ளே திரும்பினார். அவரைத் தொடர எனக்கு அச்சமாக இருந்தது. அதைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.

இல்லம் மிகவும் தூய்மையாக இருந்தது. டெட்டால் மணம் கமழ்ந்தது. சுவரில் இயற்கைக் காட்சிகளின் ஓவியம் ஒருபுறமும் குழலூதும் கிருஷ்ணனின் படம் மறுபுறமும் ஒட்டப்பட்டிருந்தன. அப்பால்¢ கம்பியிட்ட ஜன்னல். வெளிப்புறக் காட்சிகளும் மேகங்களும் அசையும் மரக்கிளைகளும் படம்படமாகத் தெரிந்தன. மறுபுறம் குளியலறையும் கழிப்பறையும் இருந்தன. ஜன்னலோரமாகவே கட்டில். மருந்து மேசை. மூலையில் தொலைக்காட்சிப் பெட்டி. என் உடல் பதறுவதை உணர்ந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிவயிற்றில் குளிர்ச்சி பரவி உறைவதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்தபடியே நின்றேன். தோல் சுருங்கிய முகம். ஒடுங்கிய கன்னக் குழிகள். வெள்ளையாகப் புரண்ட நீண்ட கூந்தல் அள்ளிக் கொண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. பார்க்கப்பார்க்க அக்கண்கள் முதலில் ஊட்டிய அச்சம் கரைந்தது. குழப்பத்தையும் கலவரத்தையும் அவை வெளிப்படுத்துவதை உணர்ந்தேன். முதுமையின் சரிவும் தளர்ச்சியும் படிந்த உடல். காதுகளின் விளிம்பிலும் முன்நெற்றியிலும் வெண்முடி காற்றில் புரண்டு அலைபாய்ந்தது. சட்டென என் பக்கமாக விரலை நீட்டிநீங்க யாரு?” என்று கேட்டார்.

உங்க தங்கச்சி பையன் சந்திரனுக்கு சிநேகிதன் நான். சந்திரன், சந்திரன் தெரியுமில்ல....?”

சற்று சத்தமாகவே நான் சொன்னேன். ஆனால் என் ஒலிகள் எதுவும் கேட்காத உலகில் அவர் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. கட்டிலில் உட்கார்ந்தபடி உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார். மேலுதடும் கீழுதடும் உட்குழிந்து காணப்பட்டன. கோடுகோடாக எழுந்த சுருக்கங்களின் நீட்சி உதடுகள் வரை தாக்கியிருந்தது.

ஆறு ஆம்பளை புள்ளைங்க பெத்து என்ன பிரயோஜனம் சொல்லு. ஊரு உலகத்துல புள்ளைங்க தலையெடுத்து பெத்தவங்கள காப்பாத்தும்ன்னு பேரு. நான் பெத்ததுங்க எல்லாமே அதுக்கு நேர்மாறா போச்சிங்க. ஒவ்வொருத்தனா போவும் போது கடைசி பையன் பாத்துக்குவான்னு இருந்தேன். அவனும் இங்க கொண்டாந்து தள்ளிட்டு போயிட்டான். என் தங்கச்சி பையன் வெளிநாட்டுல இருக்கான். அவன்தான் இதுக்கான ஏற்பாடயெல்லாம் கவனிச்சிக்கறான்.”

உங்க தங்கச்சி பையன் சந்திரன் சிநேகிதன்தான் நானு. அவர்தான் உங்கள பாத்துட்டு வரச்சொல்லி அனுப்பனாரு

அவர் பதில் சொல்லவில்லை. என் சொற்கள் அவர் மூளையைத் தொடவே இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியே தெரியும் பனைமரங்களின் அசைவையே வெகுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அவர் மௌனம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அந்தக் காலத்துல எங்களுக்கு பெரிய பல சரக்குக்கட இருந்திச்சி. வில்வண்டி வச்சிருந்தாரு அவரு. எங்க போனாலும் நாஙக அதுலதான் போவோம்.”

அவராகவே ஒரு கதையைத் திடீரென சொல்லத் தொடங்கினார். அவரைப் பெண்பார்க்க வந்தது, திருமணம் நடந்தது. செழிப்பான முறையில் நடந்த வியாபாரம், வரிசையாகப் பிறந்த பிள்ளைகள், சந்தையில் யார் பிடியையோ விலக்கிக்கொண்டு ஓடோடிவந்த எருதுகளின் முரட்டுத்தனமான தாக்குதலால் நேர்ந்த மரணம் என அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார். பிறகு ஒருகணம் நிறுத்திநீங்க யாரு?” என்றார். நான் நிதானமாக மறுபடியும் என்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னேன். அவர் கண்கள் எனது படிந்திருந்தனவே தவிர என் சொற்களைக் கேட்டுக்கொண்ட சுவடுகளே அந்த முகத்தில் தெரியவில்லை.

மருந்துமேசைமீது ஒரு புத்தகம் கிடந்தது. ஆசுவாசப்படுத்திக்கொள்ள அதை எடுத்துப் புரட்டினேன்.

அதுவரை நான் பார்த்திராத புத்தகம். வெறும் படங்கள். எல்லாமே தென்னாட்டு சைவத் திருத்தலங்கள். ஒருபுறம் குன்றும் மரங்களும் ஆறும் சூழ நிற்கிற கோயில்களின் கம்பீரத் தோற்றம். மறுபுறம் கருவறை நாயகரின் படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கூடுதலாக சிற்சில பக்கங்களில் சில தூண்சிற்பங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஒங்கள நல்லா கவனிச்சிக்கறாங்களா இங்க? சந்திரனுக்கு ஏதாவது சொல்லணுமா?”

அவர் எவ்விதமான பதிலும் சொல்லவிலலை. என் மனம் அதிர்ச்சியில் உறையத் தொடங்கியது. ஒரு சிற்பத்தின் முன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருபதைப்போல சங்கட உணர்வு எழுந்தது. நான் அவர் புருவங்களைக் கவனித்தேன். வெளுத்து வளைந்திருந்தன அவை. கண்கள் மட்டும் இமைத்தபடி இருந்தன.

சட்டென அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

அவருக்கு நான்னா ரொம்ப உசிரு. எங்க போயி வீட்டுக்குத் திரும்பிவந்தாலும் கையில பூ இல்லாம வரமாட்டாரு. சமையக்கட்டுக்கு வந்து அவரு கையாலயே தலையில வச்சிட்டுப் போனாத்தான் அவருக்கு நிம்மதி. ஒருநாளு அவர் எனக்கு பூ வச்சிவிடறத என் மாமியார்க்காரி பாத்துட்டா. சம்சாரி இருக்கிற எடமா, இல்ல அவிசாரி இருக்கற எடமா இதுன்னு ஒரே சத்தம். எவளுக்காவது இங்க கண்ணியமா இருக்கத் தெரியுதா, தாசி மாதிரி கொண்டைபோட்டு பூவச்சிட்டு திரியறாளுங்கன்னு பேசிட்டே இருந்தா. அவரு உடனே பின்பக்கமா போயிட்டரு. நா சத்தம் காட்டாம அடுப்புவேலையை கவனிச்சி கிட்டிருந்தேன். அதுலயும் ஒரு குத்தம் கண்டுபிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா. என்ன நெஞ்சழுத்தம் பாரு இவளுக்கு, எப்ப எப்பன்னு அலையறா வெறிபுடிச்ச கழுதன்னு சொல்லிட்டே உள்ள வந்தா. வந்து என் தலையில் இருந்த பூவை புடுங்கி எரியற அடுப்புல போட்டுட்டா”.

அவர் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துத் தீயிலிட்ட பூ இன்னும் தன் கண்முன்னால் எரிந்து வதங்குவதைப் போல தேம்பித்தேம்பி அழுதார். உதடுகள் கோணிக்கொள்ள அவர் அழுத கோலத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. சங்கடமாக இருந்தது. அழுகையின் உச்சத்தில் அவர் சொன்ன சொற்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மிக அருகே இருந்தாலும் யாராலும் எளிதில் நெருங்கித் தொட்டுவிடமுடியாத  காலத்தின் விளிம்பில் இருப்பதை உணரமுடிந்தது. எங்கோ பார்வை நிலைகுத்த சுவரில் சாய்ந்துகொண்டார். தேம்பலால் அவள் நெஞ்சு தூக்கித்தூக்கிப் போட்டது. கழுத்து நரம்புகளும் நெஞ்சுக்குழியும் நெளிந்தன. அவற்றின் அசைவுகள் என் சங்கட உணர்வை மேலும்மேலும் அதிகரித்தன. மீண்டும் அவர் முகத்தைப் பார்த்தேன். முள் குவியலுக்கிடையே தவறிவிழுந்த கண்ணாடித்துண்டுகளைப் போல அவர் கண்கள் பளிச்சிட்டன. நாக்கைச் சுழற்றி உதடுகளை மற்றொருமுறை ஈரப்படுத்திக் கொண்டார்.

கண்ணீரும் அச்சமும் நிரம்பிய அக்கண்களிலிருந்து என் பார்வையை விலக்க இயலவில்லை. பெரும் குற்ற உணர்வுடன் மூண்ட வேதனையால் என் தொண்டை இறுகி உலர்ந்துபோனது. எழுந்து அவரை நெருங்கித் தொட்டு ஆறுதல் சொல்ல நினைத்தேன். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு பின்வாங்கினேன். சந்திரனைப்பற்றிய நினைவுகளை அவர் மனத்தில் எழுப்பமுடியாத தோல்வியுணர்வு ஒருபுறம் அரித்தபடி இருந்தது. அந்த உட்கூடம், ஜன்னல், திரைச்சீலை, சுவரோவியங்கள், கழிப்பறைக் கதவுகள், தென்னாட்டுச் சைவத் திருத்தலங்கள் புத்தகம் என ஒவ்வொன்றின்மீதும் தயக்கத்துடன் என் பார்வை படர்வதையும் பெருமூச்சுடன் எழுந்திருப்பதையும் நடக்கத் தொடங்குவதையும் அவர் கண்கள் கவனித்தபடியே இருந்தன. நான் கதவை நெருங்கும்வரை கூட அவர் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஒருகணம் கண்களை இமைத்து என்னை நோக்கிநீங்க யாரு?” என்று கேட்டார். அக்கேள்வியால் என் உடல் குறுகிச் சிலிர்த்தது. சில நொடிகள் கதவில் சாய்ந்தபடி அக்கண்களைப் பார்த்தேன். அந்த இல்லங்களின் ஒவ்வொரு ஜன்னல்களிலும் தென்பட்ட கண்களையெல்லாம் மறுபடியும் எண்ணிக்கொண்டேன். ஒருகணம்கூட என்னால் அங்கே நிற்கமுடியவில்லை. வேகவேகமாக இல்லத்தைவிட்டு வெளியேறினேன். கச்சிதமாக வளைந்து நீளும் சாலைகளையும் புல்வெளிகளையும் நீரூற்றுகளையும் தாண்டி நுழைவாயிலைக் கடந்து தரையில் கால்வைத்த பிறகுதான் சீராக மூச்சுவிட முடிந்தது- என் வேதனையைச் சந்திரனுக்குத் தெரியப்படுத்தும் விதத்தைப்பற்றிய கவலையை முதன்முதலாக உணர்ந்தது மனம்.

(தீராநதி, ஏப்ரல் - 2004)

7. ஊருக்கு வந்தவன்

ஜன்னலுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் முட்களை தற்செயலாக உற்றுப் பார்த்தான். முட்கள் துடித்து நகரும் ஓசை உடனடியாக ஓர் இதயத்தை உருவகப்படுத்தியது. தொடர்ந்து அந்த இதயத்துக்கு உரியவனாக அழகேசனை நினைத்துக்கொண்டான். இரவின் அமைதியைக் குலைத்தபடி சிறிய அளவில் விடாமல் ஒலித்த அந்த ஓசையின் வேகம் நொடிக்குநொடி பெருகுவதைப் போலிருந்தது. ஒரு பெரிய மத்தளத்தை இடைவிடாமல் ஓங்கி அடிப்பதைப்போல அந்த ஓசை அறையில் நிரம்பியது. ஒருவித பயம் மனத்தைக் கவ்வி ஆட்டிப் படைத்தது

இரண்டு வாரங்களாக ஒரேஒரு பக்கத்தைக் கூட சிரத்தையுடன் படிக்க முடியாத அளவுக்கு பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று தூக்குமேடைச் சித்திரமொன்று மனத்தில எழுந்தது. பின்னங்கைகள் கட்டப்பட்ட நிலையில் அழகேசனுடைய முகத்தை கருப்புத்துணியால் மூடிக் கழுத்துச்சுருக்கு மாட்டப்பட்டது. காவலர்களுக்கிடையே சைகைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குறித்த நேரத்தில் மேடைக்கு அருகிலிருந்த ஒரு பிடி இயக்கப்பட்டு காலடிக்குக் கீழேயிருந்த வட்டப்பலகை உள்முகமாகத் திறந்தது. சுருக்குக் கயிற்றில் உடல் துடித்து அடங்கியது. தன் உடல் வேர்வையில் நனைந்துவிட்டதை உணர்ந்ததும் கட்டிலிலிருந்து எழுந்து நாற்காலியின் அருகில் வந்து நின்றுகொண்டான். அனிச்சையாக தன் கழுத்தைத் தடவிப்பார்த்தான். எல்லாம் கைமீறிப்போய்விட்டது என்று முணுமுணுத்துக்கொண்டான்.  அவன் மனம் அதிர்ச்சியில் கலங்கிப்போயிருந்தது. எரிந்துகொண்டிருக்கும் விளக்கையும் மேசைக்கு அருகில் அடுக்கிவைத்திருந்த புத்தகங்களையும் கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தான். தூக்குமேடை மனிதனின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கண்களும் கெஞ்சுதலும் ஒரு சிற்பத்தைப்போல நெஞ்சுக்கடியிலேயே நின்றது.

அறையைவிட்டு வெளியே வந்தான். விளக்கை அணைப்பதற்காக நீண்ட கையை ஒருகணம் தயக்கத்துக்குப் பிறகு இழுத்துக்கொண்டான். வெளியே வாசலில் நின்று அமைதியாக தெருவைப் பார்த்தான். தார்ச்சாலையின் கருமை நிலவொளியில் அவிழ்த்துவைத்த இடுப்பு பெல்ட்போல மின்னியது. சாலையோரப் புளியமரங்களின் நிழல்தோற்றம் தூக்கிடப்பட்டு தொங்கும் தலைகளைப்போலத் தெரிந்தன. காற்றின்றி அசைவற்ற அதன் தோற்றம் அந்த எண்ணத்துக்கு உயிரூட்டுவதாக இருந்தது. தவிர்க்க முடியாதபடி தூக்குமேடைச் சித்திரம் மறுபடியும் மிதந்து வந்தது.

ஆயிரம் சந்தாக்கள் உள்ள மாலைப்பதிப்பு பத்திரிகையொன்றில் செய்தி சேகரிப்பாளானாகவும் உதவி ஆசிரியனாகவும் மெய்ப்பு பார்க்கிறவனாகவும் பலதுறை மன்னனாக வேலை செய்துகொண்டிருந்தவன் அவன். பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம். உண்மைச் செய்திகளை வெளியிடும் நோக்கத்துடன் நீதிமன்றத்தின் வாசலில் விசாரணை நடக்கும் எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து செய்தி சேகரித்தபோதுதான் அறைஎண் 18ல் பரபரப்பான கொலைவழக்கின் விசாரணை நடப்பதை அறிந்தான். தள்ளித்தள்ளி வைக்கப்பட்ட வழக்கில் அன்றுதான் முதல் விசாரணை நடக்கப் போவதாகச் சொன்னார்கள். பெரிய, சிறிய பத்திரிகைக்காரர்கள் பலரும் அந்த அறையின்முன் சூழ்ந்திருந்தார்கள். கும்பலுக்கிடையே மௌனத்திலும் அச்சத்திலும் உறைந்த நிலையில் கூண்டில் நிறுத்திவைக்கப்பட்ட முகத்தைக் கண்டான். பார்வையாளர்களிடையே சலசலப்பு எழுந்து அடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நகருக்குள் நடந்த மொழிக்கலவரத்தின் போது மாற்றுமொழிக்காரன் ஒருவனைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் அவன் கைது செய்யப்பட்டதை அப்போதே பத்திரிகைகள் கட்டம் கட்டி வெளியிட்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் விதம்விதமான செய்திக்கட்டுரைகள் வெளிவந்தபடி இருந்தன. வாசகர்களின் கடிதங்கள் இச்சம்பவத்தையொட்டி விசேஷமாக வரவழைக்கப்பட்டு  தொகுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. அவன் எப்படியெல்லாம் தண்டிக்கப்படவேண்டும் என்றும் பெரும்பான்மை மொழியினரின் நலம் எப்படி பாதுகாக்க்படவேண்டும் என்றும் ஏராளமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. கடுமையான அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மொழிப்பிரிவைச் சேர்ந்தவன் அவன். இலட்சக்கணக்கான அளவில் பொருள் சேதத்துக்கும் 42 பேர்களின் உயிர்ப்பலிக்கும் காரணமாக இருந்த கூட்டத்தவர்கள் சார்பில் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. தற்செயலாக அழகேசன் அகப்பட்டதும் அவனை மையமாக வைத்து சதித்திட்டங்களைத் தீட்டும் ஒரு பெரிய ரகசிய இயக்கமே அரசுக்கு எதிராக இயங்குவதைப்போன்ற ஒரு சித்திரம் தீட்டிக்காட்டப்பட்டது. நான்கு வருடங்கள் சிறைவாசம். ஏராளமான அளவில் புனையப்பட்ட சம்பவங்களாலும் கற்பனைகளாலும் தீவிரவாதி என்கிற படிமம் அவன் மீது கட்டியெழுப்பப்பட்டது.

தொடர்ந்து அங்கே நிற்க இயலவில்லை. வாசலைச் சாத்திக்கொண்டு அறைக்குத் திரும்பினான். பிதுங்கிய விழியைப் போல எரியும் சுடரையே வெகுநேரம் உற்றுப்பார்த்தபடி யிருந்தான். மனம் குழம்பித் தவித்தது. மீண்டும்மீண்டும் அவன் மனம் அழகேசன் மீது குவிந்தது. நடந்த எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தித் தொகுத்து யோசிக்கவே அவன் விரும்பினான். விடியும் நேரத்தில் அவன் உயிர் பிரிந்துவிடக்கூடும் என்கிற விஷயம் அவனது மற்ற எண்ணங்களைச் சிதறவைத்தபடி இருந்தது. இன்னொரு கோணத்ததில் கையாலாகாதவனாகவும் கோழையாகவும் உண்மையான வலிமையை நிறுவிக் காட்ட வழியில்லாத பத்திரிகைக்காரனாகவும் சுயசித்திரங்களை முன்வைத்தது. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் செய்திக்காக புகுந்து வந்தபோதெல்லாம் காக்கிச்சட்டைகளின் கம்பீரம் எந்த விதத்திலும் செயல்பட அனுமதிக்காத கோழைத்தனத்தை மூட்டிவிடுகிறது என்று தன்னையே நொந்துகொண்டான்.

விடியும்வரை அழகேசனைப் பற்றிய எண்ணங்களிலேயே ஆழ்ந்திருக்கும் நாட்டம் திடுமென எழுந்தது. ஒருவகையில் அச்செயல் அவனுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கக்கூடும் என்று மன அமைதியடைந்தான்.

பலத்த ஆரவாரங்களுக்கிடையேதான் அவனது விசாரணை அன்று தொடங்கியது. மிரட்சியிலும் கூச்சத்திலும் அவன் உடல் குன்றிப்போயிருந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லை. வாக்குறுதி வாங்கிய நீதிமன்றப் பணியாளன் அவனை நிமிர்ந்து 

பார்த்துப் பேசுமாறு திரும்பத்திரும்பச் சொன்னான்.

உங்க பேரு?”

அழகேசன்”.

அப்பா பேரு?”

பரமசிவன்.”

எந்த ஊரு?”

திர்ணாமலைக்குப் பக்கமுங்க. திருக்கோயிலூரு. உலகளந்த பெருமாளுக்கு அழகான கோயில் இருக்கிற ஊருங்க”.

இந்த நகரத்துகு ஏன் வந்திங்க?”

டிகிரி முடிச்சி மூணு வருஷமாச்சிங்க. எண்பத்திரண்டு பர்சென்டுங்க. ஊருல அதுக்கெல்லாம் ஒரு மரியாதையும் இல்லிங்க. எந்த வேலையும் கெடைக்கலைங்க. கோயில் வாசல்ல இருபது ரூபா சம்பளத்துக்கு பூக்கட்டி பொழைச்சேன். எவ்வளவு காலத்துக்குத்தான் அத செய்யறது சொல்லுங்க. இங்க வந்தா ஏதாவது கம்பெனியில வேலபார்த்து பொழச்சிக்கலாம்ன்னு வந்தங்க”.

கிருஷ்ணதாஸ் நாயக்க ஏற்கனவே தெரியுமா ஒங்களுக்கு?”

தெரியாதுங்க-”

அவர் கூட ஏதாவது விரோதமா?”

யாருன்னே தெரியாத ஆளுமேல எப்படிங்க விரோதமா இருக்கமுடியும்?”

அவர எப்ப பாத்திங்க?”

பஸ் ஸ்டாண்ட்லேருந்து வெளியே வந்தங்க. திடீர்னு நெறய கூட்டம் அலஅலயா ரெண்டு பக்கத்திலேருந்தும் ஓடியாந்தாங்க. எஙக பாத்தாலும் ஒரே தலைங்களா தெரிஞ்சிது. ஏகப்பட்ட வண்டிங்க நடுவுல மாட்டிக்கிட்டுதுங்க. ஓரத்துல போலீஸ்காரங்க வேனுங்கள கொண்டாந்து வச்சிகிட்டு கண்ணுமண்ணு தெரியாம அடிச்சிட்டிருந்தாங்க. பூந்து ஓடக்கூட ஒரு வழியும் தெரியல. எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம்ங்கற மாதிரி இருந்திச்சி நெலைமை. என்ன ஏதுன்னு ஒன்னுமே எனக்குப் புரியலைங்க. ஏதாவது பெரிசா நடக்கறதுக்குள்ளே ஓடித் தப்பிச்சிடணும்ன்னு கண்ணுக்குத் தெரிஞ்ச சந்துங்க வழியா பூந்துபூந்து ஓடினான்.

நிமுந்து பாக்கறவங்க மூஞ்சிலயெல்லாம் ஒரே பயம். யார யாரு என்ன செய்வாங்கன்னு யோசிக்கவே முடியல. கண்ணு முன்னாலயே ஒருத்தன் இன்னொருத்தவன் நெஞ்சில குத்தினான். கீழ தள்ளி உட்டு வெறவு வெட்டற மாதிரி வெட்டினான். எங்க பாத்தாலும் ரத்தம் வழிஞ்சிகிட்டிருந்திச்சி. கைகாலெல்லாம் நடுங்கிச்சி. நிக்கறதுக்கு பயமா இருந்திச்சி. ஓடிட்டே இருந்த. சட்டுனு ஒரு மூலையில ஒரு கும்பல் மடக்கி எக்குத்தப்பா கேள்வி கேட்டாங்க. அவுங்க மொழி எனக்கு சுத்தமா புரியலை. எல்லாத்துக்கும் தலையை ஆட்டி இல்ல இல்லன்னு சொன்னன். அதுக்குள்ள ஹாக்கி ஸ்டிக்கால ஒருத்தன் என் முதுவுலேயே ரெண்டு அடி அடிச்சிட்டான். அடிவாங்கன வேகத்துல கீழ விழுந்தாலும் டக்குன்னு போக்கு காட்டி தப்பிச்சிட்டேன். ஓடிஓடி இன்னொரு கும்பல்கிட்ட மாட்டிகிட்டேன். அங்கயும் நல்ல அடி. கையில் இருந்த பைய புடுங்க வந்தாங்க. என் சர்டிபிகேட்லாம் அதுலதான் இருந்திச்சி. எப்படியாவது அத காப்பாத்திக்கணும்ன்னு வேகம். எப்படியோ அவுங்க கையிலேருந்து தப்பிச்சி ஓடனன். ரொம்ப தூரம் ஓடி மூச்சி வாங்கிகிட்டு நிக்கற நேத்துலதான் அவருகிட்ட மாட்டிகிட்டேன்.

அவரு ஒங்கள அடிச்சாரா?”

இல்ல.”

எதாவது திட்டனாரா?”

இல்ல.”

மெரட்டனாரா?”

இல்ல.”

வேற என்ன செஞ்சாரு?”

தாண்டி ஓட முடியாத மாதிரி வேகமா என்ன பாத்து வந்தாரு. எனக்கு பயம். -ஏற்கனவே ரெண்டுதரம் அடிவாங்கன பயம். கையில இருந்த பைய புடுங்கிக்குவாரோன்னு பயம். அடிச்சிக் கொன்னுடுவாரோன்னு பயம். அனாதயா இந்த ஊருல செத்துட்டா கிராமத்துல அப்பா அம்மாவ யாரு காப்பாத்துவாங்கன்னு பயம். அவரு என்ன பாத்து வரவர என் பயம் அதிகமாயிடுச்சி”.

அதனால என்ன செஞ்சிங்க நீங்க?”

என்ன காப்பாத்திகறதுக்காக பக்கத்துல கெடந்த கட்டடைய 373 பாவண்ணன் தொகுப்பு பாகம் 1 s

எடுத்து தடுத்து புடிச்சன். அவுரு வந்த வேகத்துல தலையில இடிச்சிக்கிட்டாரு.”

அவர நீங்க அடிக்கலையா?”

இல்ல

அவர் செத்தது தெரியுமா?”

அன்றைய விசாரணையை கட்டம்கட்டிய பெட்டிச் செய்தியாக மாலைப்பதிப்பில் எழுதினான். ஒவ்வொரு பத்திரிகையும் அச்செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதியது. பாதிக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் அதை திட்டமிட்ட கொலை என்றே எழுதின. மொழிவெறுப்பைக் காட்டுவதற்காக செய்யப்பட்ட கொலை என்று தலையங்கம் தீட்டியது ஒரு பத்திரிகை. பிழைப்பதற்காக உள்ளே நுழையும் வந்தேறிகள் நிரந்தரமாக வாழ்பவர்களின் அமைதியைக் குலைப்பதற்காக தீட்டிய சதித்திட்டத்தின் ஓர் அம்சமே இந்தக் கொலை என்று எழுதியது மற்றொரு பத்திரிகை. அந்த மொழியில் பிரபலமான அளவில் துப்பு துலக்கி செய்திகளை வெளியிடும் ஜனரஞ்சக வார இதழொன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பயங்கரவாதம் இக்கொலையின் வழியாக அழகிய பூங்காவாகத் திகழும் பிரதேசத்துக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டது என்றும் அதைச் சரியான முறையில் இனம்கண்டு காவல்துறையும் நீதித்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் மூலமே அமைதிளை நிலைநாட்ட முடியுமென்றும் சுட்டிக்காட்டியது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கோணத்தில் செய்தி சேகரித்து எழுதினாலும் நடந்த நிகழ்ச்சி திட்டமிட்ட கொலையே என்று சாதிப்பதிலேயே முனைப்பாக இருந்தன. திருக்கோயிலூருக்கு அருகில் இருந்த அவன் கிராமத்துக்கும் அவன் படித்த கல்லூரிக்கும் சென்று செய்திகளைச் சேகரித்து கட்டுரையொன்றை எழுதினான் அவன். அவனுடைய தந்தையார் சாதாரண நெசவாளி. வயதின் காரணமாக தறியில் உட்கார இயலாமல் பத்திரம் பதியும் இடத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு இரண்டும் நாலுமாக சம்பாதித்துக்கொண்டிருந்தார். தாயார் எருமுடை தட்டி விற்றுச் சம்பாதித்தார். நாலு சகோதரிகளில் இரண்டுபேர் திருமணம் முடிந்து உள்ளூரிலேயே வாழ்க்கைப் பட்டிருந்தார்கள். முதிர்கன்னியாக இருந்த ஒருத்தி மனநிலை பிறழ்ந்த மற்றொருத்திக்கு பாதுகாப்பாகவும் வீட்டு வறுமையைப் போக்குவதற்காக ஆயத்த ஆடை அங்காடியில் தையல்  தொழிலாளியாகவும் வேலை செய்துகொண்டிருந்தார். பசியிலும் பட்டினியிலும் மூழ்கிக்கொண்டிருந்த குடும்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நம்பிக்கையோடு வண்டியேறினான் அழகேசன். சேரும் இடத்தில் தனக்கொரு தூக்குக்கயிறு தொங்கிக்கொண்டிருப்பதை அறியாமலேயே வண்டியேறி விட்டான். நிராதரவான நிலையில் மகன் அகப்பட்டுத் தவிக்கும் செய்தி அக்குடும்பத்தையே நிலைகுலையச் செய்திருந்தது. அவர்களுக்கு அழமட்டுமே தெரிந்திருந்தது. அழகேசனைக் காப்பாற்றும் பொறுப்பை அந்தத் தெய்வத்திடம் ஒப்படைத்துவிட்டு கண்ணீர்விடுவதைத் தவிர வேறு வழியறியாதவர்களாக இருந்தார்கள். சிறையில் அகப்பட்டிருந்த மகனைப் பார்த்துவரக்கூட அவர்களுக்கு வசதியில்லை. வறுமையின் நெருப்பில் கொஞ்சம்கொஞ்சமாக கரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது அக்குடும்பம்.

ஓராண்டு விசாரணைக்குப் பிறகு அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கலவரத்தில் நடந்த மரணத்தை திட்ட மிட்ட கொலையாக கருதுவதாகவே நீதிமன்றம் தெரிவித்தது. அத்தீர்ப்பு படிக்கப்பட்டபோது இருண்ட முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அழகேசன் மயக்கமடைந்து கூண்டுக்குள்ளேயே கீழே விழுந்தான்.

நகரில் செயல்பட்டுக்கொண்டிருந்த மனித உரிமை அமைப்பு அந்த வழக்கின் தன்மை முழுஅளவில் ஆராயப்படவில்லை என்றொரு அறிக்கையை வெளியிட்டது. குறிப்பிட்ட மொழியினரை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட கலவரப் பின்னணியைக் கணக்கிலெடுத்துக்கொண்டே இந்த வழக்கு ஆராயப்பட வேண்டும் என்பதை மீண்டும்மீண்டும் வலியுறுத்தியது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கண்டதும் உருவாகிற பயமும் நம்பிக்கையின்மையும் கொல்வதற்குத் தூண்டுகிற சக்திகளாக உருமாறும் அவலத்தை முற்றுலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறியது. விசாரணையின்போது அழகேசன் சார்பில் வாதாடிய வழக்கறிஞரும் அதைத்தான் ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வந்தார். ஏற்கனவே பலமுறை அடிவாங்கி உயிர்பிழைத்து ஓடிவந்தவன் தற்செயலாக மறுபடியும் ஒருவனைப் பார்த்ததும் தன்னைக் கொல்ல வந்தவனாகவே அவனைக் கருதி தற்காப்புக்கு நிகழ்த்திய தாக்குதல் துரதிருஷ்டவசமாக மரணத்தில் முடிவடைந்ததைக் கருணையுடன் அணுகுதல் வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கையை முன்வைத்தார். அந்த வழக்கறிஞரும் மனித உரிமை அமைப்பினரும் தாமாகவே அவ்வழக்கில் நியாயம் கோரி  மறுபரிசீலனைக்காக உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.

மேற்கொண்டு யோசிக்கமுடியாதபடி மூளை வெடித்துவிடுவதைப் போல இருந்தது. எழுந்து அறை மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீரை எடுத்துப் பருகினான். குளிர்ந்த தண்ணீர் தொண்டை வழியாக நெஞ்சைத் தாண்டி இறங்கும்போது கொதித்துக்கொண்டிருந்த உடல் வெப்பத்துக்கு சற்றே ஆசுவாசுமாக இருப்பதை உணர்ந்தான். மனநெருப்பு முழுவதையும் யாரோ ஒரே கணத்தில் அணைத்து விட்டதைப்போல. விலக்கமுடியாமல் அழுத்திக் கொண்டிருந்த பாரம் தானாகவே கரைந்து விலகியதைப்போல, சில கணங்கள் மட்டுமே அந்த அமைதியில் அவன் மனம் அமிழ்ந்திருக்க முடிந்தது. மறுபடியும் சுயவெறுப்பே பொங்கி மேலெழுந்து அவன் ஊக்கத்தை அழித்தது.

வருடக்கணக்கில் விசாரணை நடந்தபடியே இருந்தது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவ்வழக்கு எடுத்தக்கொள்ளப்படும். கயிறுகட்டி இழுத்து வரப்படுகிற பலியாட்டைப்போல அழகேசன் ஒவ்வொரு முறையும் கூண்டுக்கு அழைத்துவரப்படுவான். வழக்கறிஞர்கள் மாற்றிமாற்றி அவனை வெவ்வேறு கோணங்களில் கேள்வி கேட்டபடி இருப்பார்கள். அவன் கேள்விப்பட்டே இராத பல தீவிரவாத இயக்கங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி அவற்றுக்கும் அவனுக்கும் இருந்ததாக நம்பப்படும் தொடர்புகளைப்பற்றி ஓயாமல் கேள்வி கேட்பார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவன் மறுதலித்தே பதில் சொல்லவேண்டியிருந்தது. அதுவே வழக்கறிஞர்களின் கோபத்தைத் தூண்டப் போதுமான காரணமாக இருந்தது. தொடர்ச்சியான கேள்விக்கணைகளை வேறொரு கோணத்திலிருந்து தொடுக்கத் தொடங்குவார்கள். ஒரு முறையாவது தனக்குத் தேவையான பதிலை அவன் வழியாக வரவழைத்துவிடும் முயற்சியில் இடைவிடாமல் ஈடுபடுவார்கள். மணிக்கணக்கில் தொடர்கிற விசாரணை ஒரு சலிப்பான கட்டத்தில் வந்து நின்றுவிடும். மறுபடியும் ஒத்திவைப்பு. சிறைவாசம். சில நாள்களுக்குப் பிறகு மறுவிசாரணை. பலமுறை ஏதாவது காரணம் சொல்லப்பட்டு வழக்கை ஒத்திவைப்பதற்கு அனுமதி கோரப்படும். உடனே எந்த மறுப்புமின்றி அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். செய்திக்காக விசாரணை மண்டபத்தை மொய்த்திருக்கும் பத்திரிக்கைக்காரர்கள் ஏமாற்றத்துடன்  திரும்ப நேரிடும். சுடச்சுட அச்செய்தியை முதலாம் ஆளாகத் தருவதற்கு ஆவலுடன் காத்திருந்து திரும்பும்

 

ஏமாற்றம் அவர்கள் முகங்களில் வரிவரியாகத் தெரியம். “நாலே நாலு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால்கூட போதும். நான்கு காலம் செய்தியை வேக வேகமாக எழுதிவிடமுடியுமேஎன்று பாதையோர தேநீர்க் கடைகளில் தேநீர் அருந்தியபடி அவர்கள் தமக்குள் அங்கலாய்த்துக்கொள்வார்கள். வழக்கு நடக்காத குறையை வேறு சில பத்திரிகைகள் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு ஈடுசெய்தன. சொந்த மொழிக்காரர்களின் தலைக்குமேல் எந்த நேரமும் விழுந்துவிடக்கூடிய கத்திகள் தொங்கிக்கொண்டிருப்பதைப்போன்ற கற்பனைகளை வார்த்தைகள் வழியாக சாமர்த்தியமாக இறக்கிவைத்தார்கள் அவர்கள். அந்த சொற்கட்டுகள். உணர்ச்சி ததும்பும் உவமைகள். அரையடி தொலைவில் மரணம் நின்றுகொண்டிருப்பதான எண்ணத்தையும் பயத்தையும் வலுவாகத் தோற்றுவிக்கும் தன்மையில் அந்த எழுத்துக்கள் அமைந்திருக்கும். பொய்களின் அணிவகுப்பைத் தாங்கமுடியாமல் அவன் மனம் கொதிக்கும். ஒருமுறை அப்பொய்த்தன்மையை அம்பலப்படுத்திக்காட்டும் கட்டுரை ஒன்றை எழுதினான். அதன் வேகம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அச்சுக்குப் போகும் முன்னர் ஆசிரியர் அதை நீக்கிவிடும்படி கட்டளையிட்டுவிட்டார். நெருங்கி வந்து உட்கார்ந்து மெதுவான குரலில் ஏதோ ஒரு பொதுவான விஷயத்தைப்பற்றிப் பேசுவதைப்போல பேசினார். அது கொலையல்ல என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. திட்டமிட்ட கொலை என்று எழுதுகிறவனுக்கும் கூட அது கொலையல்ல என்பது தெரியும். படிக்கிற ஒவ்வொருவனுக்கும் தெரியும். சூழல் எதிர்பார்ப்பதெல்லாம் அது உண்மையல்ல என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு குரலை. ஒரே ஒரு கட்டுரை. ஒரே ஒரு வாக்கியம்கூட போதும். மற்றொரு கலவரத்தை எளிதாகத் தூண்டிவிட முடியும். இன்னொரு கலவரத்தையும் இன்னும் சில உயிர்ப்பலிகளையும் சந்தித்து இந்த நகரில் உயர்வாழ்வது சிரமமாகிவிடும். ஒருவேளை கஞ்சிக்கு நம்பிக்கையோடு இந்த நகரில் அலைந்துகொண்டிருக்கும் கூட்டம் அகதிகளாக சுக்குநூறாக சிதைந்து போவார்கள். மாடுகளை விரட்டுவதைப்போல விரட்டப்படுவார்கள். வாய்ப்புக்காகவே காத்திருக்கிறவர்கள் சந்தடிசாக்கில் நுழைந்து தாக்கத் தொடங்குவார்கள். அகங்காரத்துடனும் வெறியுடனும் மிருகத்தைப்போலப் பாய்கிற கூட்டத்தின் முன்னால் எந்த றியாயமும் எடுபடாது. கொலை. கொள்ளை. ரத்தம். வெட்டப்படும் கைகள். கால்கள். துண்டாடப்படும் தலைகள். நகரில் அங்கங்கே மறைவிடங்களிலும் சாக்கடை ஓரங்களிலும் அடையாளம்

தெரியாத பிணங்கள் ஒதுங்கத் தொடங்கும். யாராவது இன்னொரு அழகேசன் விவரம் புரியாமல் அந்த நேரத்தில் ஊருக்குள் இறங்கி எல்லாப் பழிகளுக்கும் பலியாடாக நிறுத்தப்பட்டு மரண தண்டனை பெறுவான்.

அன்று இரவுதான் மனவேதனையை மறக்க முதன்முதலாக மது அருந்தத் தொடங்கினான். தூக்கமின்றி ஒரு பைத்தியத்தைப் போல உடனிருந்த நண்பனிடம் புலம்பிக்கொண்டே இருந்தான். “உண்மையைக் கொல்றதும் மறைக்கறதும் ஒரு கோழிய அமுக்கிக் கொல்றாப்பல ரொம்ப சுளுவான காரியம் தெரியுமா?” என்று திரும்பத்திரும்பப் பிதற்றினான். தட்டிலிருந்தத சிவந்த மாமிச வறுவலைப் பார்த்ததும் கொஞ்சநேரம் அழுதான். அதைத் தொடுவதற்கு தன் கை கூசுவதாக தள்ளிவைத்துவிட்டான். குழப்பமான பார்வையை அவன்மீது செலுத்தினான் அவனுடைய நண்பன்.

எந்த விசாரணைக்கும் பயனில்லாத வகையில் உயர்நீதி மன்றத்திலும் அவனுடைய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆசை அழகேசனுடைய கண்களில் ஒரு கெஞ்சுதலாக வெளிப்பட்டபடி இருந்தது. வார்த்தைகள் எதுவுமின்றி அவன் கண்கள் கண்ணீரை வழியவிட்டன. அப்போதுதான் அழகேசனுக்காக வாதாடிய வழக்கறிஞரோடும் மனித உரிமை அமைப்போடும் தன்னையும் இணைத்துக்கொண்டான் அவன். உச்சநீதிமன்றத்துக்கு அந்த வழக்கைக் கொண்டுசெல்லும் ஆவலும் வேகமும் எல்லாருக்கும் இருந்தாலும் அதற்கென தேவையான பணஉதவி இல்லாத குறை எல்லாரையும் செயல்படவிடாமல் முடக்கியது. சிறை அதிகாரியின் அனுமதியைப் பெற்று ஒருமுறை அழகேசனைப் பார்க்கப் போனான் அவன். உடல் தளர்ந்து ஒரு குச்சியைப் போல நின்ற அவன் தயங்கித்தயங்கிப் பேசினான். வாய்ப்புகளைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய கடவுள் சந்தர்ப்பங்களை உருவாக்கி தண்டிக்க முற்படநேர்ந்த அவலங்களைச் சுட்டிக்காட்டும் ஆவேசமும் அழுகையும் பேச்சினூடாக கலந்து வெளிப்பட்டன. எஞ்சிய தன் வாழ்நாள்களின் கணக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்ட விஷயத்தை அவனால் நம்பவே முடியவில்லை. ஒருகணம் ஆவேசம். மறுகணமே புலம்பல். காரணமே இல்லாமல் ஒரு கோப வெளிப்பாடு. அடுத்தபடி உதடுகளைக் கடிப்பதுபோல பற்களால் பற்றியபடி ஒரு விம்மல். இளமையின் விளிம்பிலிருந்த அவனை எதிர்பாராத மரணஅழைப்பு வாழ்க்கையின் விளிம்புக்கு  வேகவேகமாக இழுத்துச் சென்றுவிட்டது. தனது துக்கத்தையும் ஆற்றாமையையும் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுத்தியபடி பேசினான். அழகேசனுடைய கண்களை நேருக்குநேர் பார்க்கும் துணிச்சலின்றி நிமிர்வதும் குனிவதுமாகவே பேச்சுக்கு காதுகொடுத்துக்கொண்டிருந்தான் அவன். சட்டென கைகளை நீட்டிப்பற்றிக் கொண்டுஉயர் போவும்போது ரொம்ப வலிக்குமா சார்?” என்று கேட்டான். அப்போது இருண்டு வியர்வையில் மின்னிக்கொண்டிருந்தது அவன் முகம். எந்த மாதிரியான பதிலைச் சொல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் பார்த்தான் அவன். அதே கேள்வியை தன்னோடு நடந்து வருகிற யாரோ ஒருவரிடமும் கேட்பதைப்போல கேட்டுக்கொண்டே அவன் சந்திப்பை முடித்துக்கொண்டு நடந்துபோனான். அந்தக் காட்சியை அவனால் மறக்கவே முடியாமல் போய்விட்டது. அன்றிரவும் தூக்கமின்றி மது அருந்திப் புலம்புவதன் வழியாக மன ஆறுதலைத் தேடிக் கொண்டான்.

போதையின் உச்சத்தில்தான் அழகேசனுக்காக கருணை மனு எழுதும் எண்ணம் அவனுக்கு உதித்தது. உடனே அதை செயல்படுத்தினான். வாக்கியங்கள் கோர்வையாகவும் கச்சிதமாகவும் இரக்கத்தை யாசிப்பனவாகவும் வந்து விழுந்தன. ஆறு பக்கங்கள். திருக்கோயிலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாட்சிக் கையெழுத்துக்கு அழைக்கும் கண்களுக்காக நாளெல்லாம் ஏங்கும் தோல்சுருங்கி உடல் தளர்ந்த முதியவரின் சித்திரம்முதல் ஒவ்வொருவருடைய சித்திரமும் ரத்தமும் சதையுமாக வார்த்தைகளில் நிற்பதைப்போல இருந்தது. அவர்களுடைய வறுமை. இயலாமை. வாய்ப்பின்மை. பட்டினிக் கோலம். ஒவ்வொன்றையும் அந்த மனு வெளிச்சம் போட்டுக் காட்டியது. உயிருக்காக மன்றாடுகிற குரல் ஒவ்வொரு வரியின் இடைவெளியிலும் கைநீட்டி எழுந்தபடி இருந்தது.

மனித உரிமை அமைப்பின் நண்பர்களும் வழக்கறிஞரும் அந்த மனுவைப் படித்து திருப்தியாக இருப்பதாகச் சொன்னார்கள். சட்டம் தொடர்பான சின்னச்சின்ன வாக்கியங்களை மட்டுமே கூடுதலாக சேர்க்கவேண்டியருந்தது. அந்தக் காரியத்தை அவர்களே செய்தார்கள். கெடு விதிக்கப்பட்ட நாளுக்கு முன்னாலேயே அந்த மனு உரிய முறையில் கவர்னருடைய பார்வைக்கு அதனுப்பிவைக்கப் பட்டது. கிட்டத்தட்ட மூன்று வார பரபரப்போடு வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்ற அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கவர்னரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தியை அவர் சொல்வதை அவனால் தாங்கவே முடியவில்லை. மீண்டும் மரண தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டது கடைசி முயற்சியாக குடியரசுத் தலைவருக்கு இந்தக் கருணைமனுவை அனுப்பி வைக்கலாம் என்ற யோசனை அலசி ஆராயப்பட்டது. மனுவில் சில வரிகளை அங்குமிங்கும் மாற்றினான் அவன். இரக்கத்தைத் தூண்டும் விதமாக அம்மனுவை அமைப்பதில் அவன் மிகுந்த முயற்சியெடுத்துக்கொண்டான். வழக்கறிஞரும் கூட இருந்து சில திருத்தங்களைச் சொன்னார். முடிவுசெய்யப்பட்ட மனுவை முறையாக தட்டச்சு செய்து அழகேசனிடம் கையெழுத்தைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தான்.

நாள்கள் திடீரென மெதுவாக கரைவதைப் போல இருந்தனவழக்கமான செயல்களைச் செய்வதில் காரணமில்லாத பதற்றம் வெளிப்பட்டபடி இருந்தது. ஒரு சின்னப் பிழைகூட இல்லாத அளவுக்கு மெய்ப்பு பார்க்கும் அவன் திறமை சட்டென மங்கிப்போனது. தலைப்புச் செய்தியிலேயே எழுத்துப்பிழை. குற்றச்சாட்டுகள் அவனை அவமானப்படுத்துவதாக இருந்தன. காரணமில்லாமல் வெளியே அலைந்தான். அறையில் தங்கியிருக்கப் பயந்தான். அளவுக்கு அதிகமாக மது அருந்தத் தொடங்கினான். ஆனாலும் அவன் மறக்க நினைக்கிற முகமும் கண்களும் மீண்டும்மீண்டும் மிதந்து வந்து அவனுக்குக் காட்சியளித்தன. அழுகையும் உயிரோசையும் ததும்பும் அக்கண்களை அவனால் பார்க்கவே முடியவில்லை. விழியோரம் கோர்த்துத் தேங்கியிருந்த கண்ணீரின் ஈரம் இரக்கத்தை யாசித்து உறைந்துபோயிருந்தது. வழக்கறிஞரைப் பார்ப்பதையே அவன் தவிர்ந்துவந்தான். அதன் மூலம் அழகேசனுடைய மரணத்தை ஒத்திப் போடமுடியும் என்பதைப்போல குழந்தைத்தனமாக நம்பினான் அவன். எதிர்பாராத ஒருநாளில் வழக்கறிஞரே இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலக அறைக்கே வேனைத் தேடி வந்தார். அவர் முகம் வாடியிருந்தது. எதுவோ பேசவேண்டும் என்பதைப்போல வேகமாக வந்தவர் மேசையின் அருகே பேச்சேயின்றி கண்ணாடிக் கோளத்தை கையிலெடுத்து சுழற்றிச்சுழற்றி விழவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவரால் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேச இயலவில்லை. அவனைப் பார்த்து உதட்டை பிதுக்கி ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினார். அவ்வளவுதான். குடியரசுத் தலைவரின் நிராகரிப்பு விளங்கிவிட்டது. ன்னலோரமாக இயங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின¢மீது அவன் பார்வை மீண்டும் அனிச்சையாகப் பதிந்தது. நாலரைக்கு இன்னும சில மணித்துளிகளே பாக்கியிருந்தன. அழகேசனுடைய கழுத்தில் தூக்குக்கயிறு அந்நேரத்தில் மாட்டப் பட்டிருக்கும் என்பதை அவனால் தாங்கவேமுடியவில்லை. விரல்களை மடித்து மேசையின்மீது ஓங்கிஓங்கிக் குத்தினான். முறையில்லாமல் மேசையில் சிதறிக்கிடந்த ஒரு குண்டூசி குத்தி ரத்தம் ஒழுகியது. ஆனாலும் நிறுத்தாமல் பற்களைக் கடித்தபடி மீண்டும் மீண்டும் குத்தினான். சட்டென கடிகாரம் நாலரையைச் சுட்டும் விதத்தில் ஓங்கி அலறியது. வழக்கமாக அவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதற்காக முன்வைக்கப்படும் அழைப்புக்குரல் அது. எரிந்துகொண்டிருந்த மனத்தின் நெருப்பை அக்குரல் மேலும் கிளறிவிடுவதைப்போல இருந்தது. ஆவேசத்துடன் அதைத் தாவி எடுத்து ஓங்கித் தரையில் அடித்தான். சில கணங்களுக்கு விடாமல் ஒலித்த அதன் குரல் திடீரென அடங்கியது. அதையே விடாமல் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அவன் பார்வைக்கு அக்கடிகாரத்தின் தோற்றம் உயிரற்ற ஒரு சடலத்தை ஞாபகப்படுத்தியது.

(கதைசொல்லி -2004)