தமிழ்ப் பேராசிரியரும் என் நண்பருமான சு.வேங்கடராமன் எழுதிய “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு” என்னும் கட்டுரைத் தொகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தற்செயலாகப் படித்தபோதுதான் செங்கோட்டை ஆவுடை அக்காவைப்பற்றித் தெரிந்து கொண்டேன். ஆவுடை அக்காவைப்பற்றிய கட்டுரையில் சு.வேங்கடராமன் மனஆதங்கத்துடன் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். “பாரதியார் அக்காவை நன்றாக அறிந் திருந்தார், அக்காவின் பாடல்களை அவர் மனம்நெகிழச் சுவைத்தார், ஆனாலும் அக்காவைப் பற்றி ஒரு சிறிய குறிப்பைக்கூட எங்கும் அவர் எழுதி வைக்கவில்லை” என்பதுதான் அந்த ஆதங்கம். அதைப் படித்த கணத்தில் என் மனம் அதை ஏற்கவில்லை.