தமிழ்ப் பேராசிரியரும் என் நண்பருமான சு.வேங்கடராமன் எழுதிய “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு” என்னும் கட்டுரைத் தொகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தற்செயலாகப் படித்தபோதுதான் செங்கோட்டை ஆவுடை அக்காவைப்பற்றித் தெரிந்து கொண்டேன். ஆவுடை அக்காவைப்பற்றிய கட்டுரையில் சு.வேங்கடராமன் மனஆதங்கத்துடன் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். “பாரதியார் அக்காவை நன்றாக அறிந் திருந்தார், அக்காவின் பாடல்களை அவர் மனம்நெகிழச் சுவைத்தார், ஆனாலும் அக்காவைப் பற்றி ஒரு சிறிய குறிப்பைக்கூட எங்கும் அவர் எழுதி வைக்கவில்லை” என்பதுதான் அந்த ஆதங்கம். அதைப் படித்த கணத்தில் என் மனம் அதை ஏற்கவில்லை.
எழுதுவது என்பது முற்றிலுமாக ஒரு படைப்பாளியின் தேர்வு என்பதே என் எண்ணம். எழுதுவதற்கான எண்ணற்ற கருக்கள் மனத்துக்குள் அடுத்தடுத்து எழுச்சி பெற்றாலும் அவற்றுள் ஏதோ ஒன்றையே படைப்பாளியின் நெஞ்சம் முடிவு செய்கிறது. எழுதியவை ஒரு நூறு கருக்கள் என்றால் எழுதாமல் விட்டவை எப்போதும் ஓராயிரமாகவே இருக்கும். பாரதியாருக்கும் அது ஏன் பொருந்தக்கூடாது என்றும் விடுபட்டது ஏன் தற்செயலான விஷயமாக இருக்கக்கூடாது என்றும் கேட்டேன். நண்பர் புன்னகைத்தபடி “அக்காவின் பாடல்களை ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்கள்” என்று சொன்னார், இந்தச் சம்பவமே அக்காவின் பாடல்களை உடனடியாகத் தேடிப் படித்துமுடிக்க ஒரு புறத்தூண்டுதலாக இருந்தது.
பெண் கவிஞர்களை வரிசைப்படுத்தும் ஒவ்வொரு வரும் காக்கைப்பாடினியாரிடம் தொடங்கி, ஒளவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் வரைக்கும் வந்து, பிறகு ஒரே தாவலில் நவீன கவிதையாசிரியர்களிடம் கொண்டுவந்து முடிப்பதுதான் வழக்கம். அது எவ்வளவு பிழையானது என்பதுதான் அக்காவின் பாடல்களைப் படித்துமுடித்ததும் தோன்றிய முதல் கருத்து. அக்காவின் பெயரை இணைத்துக்கொள்ளாமல் இனிமேல் எந்த இலக்கிய வரலாறும் எழுதப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். இலக்கிய வரலாற்றில் தேடிப் பார்த்தால் இன்னும் பல அக்காக்கள் கிடைக்கக்கூடும். அவர்களைக் கண்டடைவது நம் கடமை.
அக்காவின் பாடல்கள் ஏறத்தாழ முந்நூறு பக்கங் களில் வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தபோவனம் கிராமத்தில் உள்ள ஞானானந்த நிகேதன் வெளியீடாக இத்தொகுதி பிரசுரமாகியுள்ளது. முதல் வாசிப்பிலேயே அப்பாடல்கள் என் மனத்தைக் கவர்ந்துவிட்டன. விதவிதமான கண்ணி களிலும் சிந்து மெட்டுகளிலும் தாளலயத்தோடு எழுதப் பட்டவை அவை. நாட்டுப்புறப் பாடல்களின் அமைப்பில் கும்மிப் பாடல்களாகவும் கோலாட்டப் பாடல்களாகவும் எழுதப்பட்டவை ஒரு பகுதியாகவும் ராக தாளக் குறிப்பு களோடு எழுதப்பட்ட கீர்த்தனைகள் இன்னொரு பகுதி யாகவும் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒரு முத்து என்றே சொல்ல வேண்டும். படித்துமுடித்ததுமே கன்னடக் கவிஞரான அக்கமகாதேவியைத்தான் நினைத்துக் கொண்டேன். அதே எளிமை. அதே நுட்பம். அதே ஆழம். அக்கமகாதேவியின் பாடல்களின் மையம் மல்லிகார் ஜூனன். அந்த உறவின் வழியாகவே உலகியல் உண்மைகள் ஒவ்வொன்றும் அலசப்படுகின்றன. ஆனால் ஆவுடை அக்காவின் பாடல்கள் மெய்ஞானம் என்னும் உண்மையையே மையமாகக் கொண்டவை. உருவமில்லாத கருத்துக்கு விதவிதமான உருவங்களைப் பொருத்தி வசீகரமான முறையில் பாடல்களை எழுதித் செல்கிறார் அக்கா.
அக்காவைப் பொருத்தவரை மெய்ஞ்ஞானம் என்பது அத்வைத மெய்ஞ்ஞானம். அந்த மெய்ஞ்ஞானத்தை ஆண்டியாக முன்னிலைப்படுத்தி அக்கா பாடல்களை எழுதியுள்ளார். “எங்கிருந்தெங்கே வந்தாண்டி - அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி மாயையினால் மறைந்தாண்டி - இவன் மனத்துக்குள்ளே இருந்தாண்டி” என்று தொடங்குகிற பாடல் மெய்ஞ்ஞானத்துக்கு வடிவமான ஓர் ஆண் உருவத்தை வழங்குகிறது. பிறகு, அந்த உண்மையின் வெவ்வேறு தன்மைகளை விளக்கும்வகையில், அவை யனைத்தையும் அந்த ஆண் உருவத்தின் திருவிளை யாடல்களாக உருமாற்றிப் பாடல் வரிசை முன்னகர்கிறது. எடுத்துக்காட்டாக, “கோடிப் பெண்களைத் தாண்டி - அவன் கோரணி கொண்டிருப்பாண்டி வேஷதாரி போலே தாண்டி - அவன் வேண்டி அவதரித்தாண்டி” என்னும் வரிகளைச் சொல்லலாம்.
“பையப்பைய இவன்தாண்டி பரப்பிரும்மம் நீ என்ற சொன்னாண்டி, யாரென்றென்னை கேட்டாண்டி - ஒன்றும் அறியாது போலிருந்தேண்டி” என்னும் வரிகள் இப்பகுதியின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். “மோகத்தை மாற்றி வைத்தாண்டி அவன் மோட்சேச்சை அளித்தாண்டி, தாயோடு பிள்ளையைத் தாண்டி சகலமும் நான் மறந்தேண்டி”, “வெறிக்கும் நிலவுபோல் தாண்டி - அவன் என்னை வெட்ட வெளி ஆக்கினாண்டி, தர்ப்பண பிம்பம்போல் தாண்டி - அவன் ஜகதுத்பத்தி என்றாண்டி” ஆகிய வரிகள் வழியாக மனம் அடைகிற மாற்றத்தை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. “அத்வைத வெளியேலதாண்டி அம்பரம்போலாகினேண்டி, கர்ம சாகரத்தைத்தாண்டி கன்று குளம்புபோல் தாண்டி வைத்தாண்டி, போகாதிகள் பொய்பொய் என்றாண்டி - பரிபூர்ணானந்தம் மெய்மெய்யென்றாண்டி, துக்க சாகரத்தைத் தாண்டி - அதைத் தூரவே இறைத்து விட்டாண்டி” ஆகியவை, தான் அறிந்த உண்மையால் உண்டான நல்விளைவுகளைப் பரவசத்துடன் பகிர்ந்து கொள்பவை.
“தனியே இருக்கவைத்தாண்டி - அவன் சாகசம் என்ன சொல்வேண்டி, சண்மதவாதிகளைத் தாண்டி - அவன் தன்வசமாக்கிக்கொள்வாண்டி, பார்த்த இடமெல்லாம்தாண்டி பரிபூர்ணமாய் தோற்றி வைத் தாண்டி வார்த்தைகளொன்றும் காணேண்டி மௌனம தாக்கி விட்டாண்டி” என்ற வரிகளில் புலப்படும் கொண்டாட்ட உணர்வையும் ஆனந்தக்கூத்தையும் ஒரே வாசிப்பில் உணர்ந்துகொள்ளலாம். எனக்குள் இறைவன் உறைகிறான் என்பது மிகப்பெரிய ஞானம். அந்த ஞானம் இயல்பாகவே நெஞ்சில் இருக்கிறது. குளத்தில் நிறைந் திருக்கும் நீர்போல. அதன் இருப்பையே உணர இயலாத வகையில் அதன்மீது பாசியும் ஆகாயத்தாமரையும் படர்ந்து மறைத்திருக்கின்றன. அவை விலகவிலக ஞானத்தின் இருப்பு வெளிப்படுகிறது. ஞானம் தன் சுடரால், தன்னைச் சுற்றி அடர்ந்துள்ள இருளை அகற்றுகிறது.
தன் அருளால் எண்ணங்களைக் குளிரவைக்கிறது. பார்த்த இடங்களி லெல்லாம் ஞானத்தையே தரிசிக்கும் வகையில் பக்குவப்படுத்துகிறது. உள்ளிருக்கும் ஞானம் வெளியே இருப்பவற்றையும் ஞான தீபங்களாக்குகிறது. தனக்குள் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு குழந்தைக்கே உரிய உற்சாகத்தோடும் இனிய தாளலயத்தோடும் அழகான பாடல்களாக மாற்றியிருக்கிறார் அக்கா. அக்காவின் பரவசம் என்பது ஞானத்தை அறிந்த பரவசம். அதைத்தான் ஆண்டியாக உருவகித்துக் களிக்கிறார் அக்கா. சின்னஞ் சிறு சிவலிங்க உருவத்தை உள்ளங்கையில் வைத்துமூடிய அக்கமகாதேவி மல்லிகார்ஜூனனையே வசப்படுத்தி விட்டதாக நினைத்து மகிழ்ந்து பாடிய பாடலுக்கு நிகரானதாக அக்காவின் பாடல்களைச் சொல்லலாம்.
பரவசத்தைப் பகிர்ந்துகொள்வதையே மூலஉத்தேச மாகக் கொண்ட மெய்ஞ்ஞான ஆண்டிப் பாடல்கள் சில முக்கியமான திருப்பங்களைக் கொண்டவை. ஞானத்தின் இருப்பு என்பது ஒரு திருப்பம். ஞானத்தை அறிதல் என்பது அதற்கடுத்த திருப்பம். ஞானம் அளிக்கும் பரவசம் மேலுமொரு திருப்பம். ஞானத்தால் உருவாகும் விளைவுகள் அதைத் தொடர்ந்து வரக்கூடிய திருப்பம். ஞானத்தை ஆட்சி செய்ய அனுமதித்து அமைதியில் லயித்திருத்தல் இன்னுமொரு திருப்பம். ஞானத்தின் மேன்மையை உணர்த்தாமல் உணர்த்துதல் இறுதியில் வரக்கூடிய திருப்பம். இது அடிப்படையான ஒரு சட்டகம். அம்மானை, பள்ளு, ஊஞ்சல் பாட்டு, நாடகப்பாட்டு என எந்த வகையில் பாடினாலும் அடிப்படையான அந்தச் சட்டகம் மாறவில்லை. ஒரே சட்டகம் எனத் தெரியாத வகையில் உணர்ச்சிப் பெருக்காக மாறி ஒவ்வொரு பாடலும் ஓர் அருவிபோலப் பொழிகிறது.
அக்காவின் மற்றொரு பாடல் வேதாந்த அம்மானை. அம்மானை பிள்ளைகள் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு. மெய்ஞ்ஞான உண்மையையே அக்கா தன் பாடல்களில் விளையாட்டாக மாற்றுகிறார். விளையாடத் தெரியாத ஒருத்தி பாடல்களில் தோன்றுகிறாள். ஆட்டத்தின் மீது அவளுக்கு ஆர்வமாக இருக்கிறது.
அதே தருணத்தில் ஆடத் தெரியாமல் ஆடித் தோற்றுவிடுவோமோ என்று அச்சமாகவும் இருக்கிறது. தயக்கம் கொள்கிறாள். பிறகு ஆட்டத்தின் வசப்படுகிறாள். நாளாகநாளாக ஆட்டத்தின் மேன்மையை உணர்கிறாள். ஆடிக் களித்துப் பரவசத்தில் மூழ்குகிறாள். ஒவ்வொரு பாட்டிலும் படிந்திருக்கும் தாளக்கட்டு வாய்விட்டுப் பாடத் தூண்டும்வகையில் உள்ளது.
“மூலத்துக்குள்ளே முளைத்து முளைஎழுப்பி
மாயை அதுவாகி மரித்துப் பரிணமித்து
சகல ஜகத்தையும் தெரியவிடாமல் மறைத்து
அஞ்சு பூதங்களென்னும் பஞ்சவர்ணத்தால் இழைத்து
கருப்பாய் சிவப்பாய் களங்கமற்ற வெள்ளையுமாய்
மூன்று குணமாய்ச் சமைந்த மூர்த்தமுள்ள அம்மானை”
என்பது ஞானத்தின் இருப்பை உணர்கிற திருப்பம்.
“பார்த்தாள் பிரமித்தாள் பரிசிழந்து மெய்சோர்ந்தாள்
நானாட அறிவேனோ அல்லாமல் தோற்பேனோ
பாட அறிவேனோ பரிசிழந்து நிற்பேனோ
ஏந்த அறிவேனோ அடையில் தவறிடுமோ
பரமஹம்சர் நம்மை பரிகாசம் பண்ணுவரோ”
என்பது தன் தகுதியின்மையை எண்ணி உள்ளூர நாணம் கொள்ளும் திருப்பம்.
“கூவும் குயில் போலே பாடி இவளாட
தாழாது அம்மானை தானும் கலகலவென்னும்
சினத்தும் எறிவாள் திரும்பிவந்து கையில் விழும்
மறித்தும் எறிவாள் வணங்கிவந்து கையில்விழும்
அந்தரத்தே போயொளிக்கும் ஆகாசத்திற் சுழலும்”
என்பது ஆடிஆடி அவள் அடைந்த தேர்ச்சியைக் குறிப்பிடும் திருப்பம்.
ஆண்டிப்பண்டாரத்தின் பாடல்கள், அம்மானைப் பாடல்களைப் போலவே மனத்தை ஈர்க்கும் மற்றொரு வகைப் பாடல்கள், ஆச்சே போச்சே வகைப் பாடல்கள். ஒவ்வொரு சரணமும் இரண்டிரண்டு வரிகளைக் கொண்டிருக்கின்றன. முதல் வரி பழங்காலத்தின் இருப்பைச் சொல்லி, அது போச்சே என்னும் ஈற்றடியில் முடிவடைகிறது. இரண்டாவது வரி, தற்காலத்தில் அடைந்திருக்கிற மாற்றத்தை முன்வைத்து, இப்படி ஆச்சே என்னும் ஈற்றடியில் முடிவடைகிறது. இங்கும் ஞானமே மையப்பொருள். பாடல்களுக்குக்கூட “வேதாந்த ஆச்சே போச்சே” என்பதுதான் தலைப்பு. “ஆணென்றும் பெண்ணென்றும் அலைந்து திரிந்ததும் போச்சே அனந்த ஜன்மங்களும் இல்லாதிருக்கவும் ஆச்சே” என்று தொடக்கமே அறைகூவிச் சொல்வதுபோல உள்ளது.
“அலையில் துரும்புபோல் அலைந்து திரிந்ததும் போச்சே அசையாத பருவதம்போல இருக்கவும் ஆச்சே” “தான் பிறர் என்கிற தாழ்த்தி உயர்த்தியும் போச்சே சாஸ்திர வேதத்திற்கு அப்புறப்பட்டவனாச்சே பொய்மை மெய்யென்றெண்ணி போகம் புசித்ததும் போச்சே மெய்மை மெய்யென்றெண்ணி மெய்யாயிருக்கவும் ஆச்சே சந்தைக் கூட்டம் வாழ்வுதானே மதித்ததும் போச்சே அந்தக் கூட்டம்விட்டு ஆனந்த ரூபமும் ஆச்சே எனக்கெதிராக வெகுவாகப் பார்த்ததும் போச்சே ஏகம்ஏகமென்று எங்கும் நிறைந்தவராச்சே” என்னும் வரிகளில் மிகவும் இயல்பாகக் கூடிவந்திருக்கிற கவித்துவம் பாடல்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் தன்மையுடையது.
மனமும் புத்தியும் ஒன்றையொன்று கேள்வி கேட்டுப் பதில் பெறுவது போல அமைக்கப்பட்ட வேதாந்த சார கும்மிப்பாட்டு உற்சாகம் பொங்கித் ததும்புகிற ஏராளமான வரிகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பாட்டும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளன. முதல் இரண்டு அடிகளில் கேள்வியும் அடுத்து இடம்பெற்றுள்ள இரண்டடிகளில் பதிலும் உள்ளன. கேள்வி அன்னே என்னும் ஈற்றுச் சொல்லோடும் அதற்கு ஈடுகட்டும் வகையில் பதில் பின்னே என்னும் ஈற்றுச் சொல்லோடும் உள்ளது. “ஒருக்காலும் வற்றாத ஒப்புகிற துக்கக்கடல் ஒன்றாய்ச் சிதறிப் போனது ஏதடி அன்னே என்பது கேள்வி. அருக்கணி முயற்கொம்பு போலே ஜகன்மித்தையென்னா ஆதிகுரு தன்கிருபையால் போச்சுது பின்னே” என்பது பதில். ஒவ்வொரு கேள்வி-பதிலும் ஞானத்தின் பெருமையைக் கொஞ்சம்கொஞ்சமாக உணரவைக்கின்றது.
“கரையில்லாத ஆனந்தம் கண்டவிடமெல்லாம் பெருக
கானற்சலம் பானம்பண்ணப் போவானேன் அன்னே
விலையில்லா நவரத்னம் வேண்டியபடி இங்கிருக்க
வெறுங்கல்லை வேண்டிக்கொள்ள போவார்காண் பின்னே”
என்னும் பாடலும்
“என்னிடத்திலே உதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி அன்னே
தன்னை மறந்தால் உருக்கும் தன்னையறிந்தால் ஒளிக்கும்
சற்றுநீ உற்றுப் பார்த்துச் சந்தோஷி பின்னே”
என்னும் பாடலும் பல உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கும் விதம் அழகாக உள்ளது.
நாட்டுப்புறப் பாடலின் அமைப்பையொட்டி ஈற்றுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து புதுப்புதுக் கட்டமைப்பில் பாடல்கள் அமைந்திருப்பதை அக்காவின் சிறப்புத்தன்மை என்றே சொல்லவேண்டும். “பொய்யடா மெய்யடா” அமைப்பில் அவர் எழுதியுள்ள பாடல்களில் மெய்ஞ் ஞானம் மட்டுமின்றி விரிவான சமூகவிமர்சனமும் அடங்கியுள்ளது.
“ஜாதிவர்ண குலகோத்திர ஆசிரமாதிகள் பொய்யடா
சத்திய ஞானானந்த சுகசாகரம் நீ மெய்யடா
சிரவண மனன நிதித்யாசன சித்தவிப்பிரமம் பொய்யடா
சின்மயமே தன்மயமாம் சிற்தையற்றயிடம் மெய்யடா”
என்னும் பாடல் மிக முக்கியமானது. சிந்தையற்ற இடம் என்னும் சொல்லாட்சி சிலிர்ப்பூட்டக்கூடியது. ஆன்மிக ஆழமும் பொய்களில் தோய்ந்திருக்கிற உலகம் பற்றிய விமர்சனமும் இப்பாட்டில் ஒருங்கே அமைந்துள்ளதைப் பார்க்கலாம்.
அக்காவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவான அளவிலேயே காணப் படுகின்றன. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக செங்கோட்டையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடை அக்கா. இளம்வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு, கணவனை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளர்ந்துவந்தார். ஊரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அக்காவின் தாயார் அவர் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பண்டிதர்களை வீட்டுக்கே வரவழைத்து அக்காவுக்குப் பாடம் கற்பித் தார்கள். கைம்பெண்ணுக்குக் கல்வியா என்று ஊர்க் காரர்கள் ஏளனம் செய்தார்கள். தற்செயலாக அந்த ஊருக்கு வருகை புரிந்த ஸ்ரீவெங்கடேசர் என்னும் துறவி, தன்னை வரவேற்க பலரும் தத்தம் வீட்டுவாசலில் நின்று காத்திருந்ததை அறிந்ததும், கதவுகள் சாத்தப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்னால் நின்று ஒரு பாடலைப் பாடினார். கைம்பெண்ணின் வீட்டின் முன்னால் துறவி நிற்பதைப் பார்த்து சீற்றம் கொண்ட மற்றவர்கள் தத்தம் வீடுகளுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்கள். பாட்டுச்சத்தம் கேட்டு இளம்பெண்ணான ஆவுடை வெளிப்பட்டதும், அவளை அருகில் அழைத்து ஆசி வழங்கிவிட்டுச் சென்றார் துறவி.
ஊருக்கு வெளியே ஆற்றங்கரையில் அந்தத் துறவி தங்கியிருப்பதை அறிந்த அக்கா, அன்று மாலையில் அவரைச் சந்திப்பதற்காகச் செல்ல விரும்பினார். ஆனால் அச்சத்தின் காரணமாக அவருடைய தாய் அதற்கு ஒப்பவில்லை. ஒரு கைம்பெண் வீட்டு வாசலுக்குச் செல்வதற்கே தடையிருந்த காலம் அது. மகளுடைய பிடிவாதம் அவருக்குக் கலக்கத்தைத் தந்தது. பிள்ளைப் பாசம் அனுப்பி வைக்கத் தூண்டியது. ஆனால் ஊராரைப் பற்றிய அச்சம் அதைத் தடுத்தது. அவளைக் கண்காணிக்க ஒரு துணையை ஏற்பாடு செய்துவிட்டு வேறு வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் அக்காவின் தாய். மனம் கவரும்படி உரையாடுவதில் வல்லவரான அக்கா, அவருடன் நெகிழ்ச்சியாகப் பேசி மனத்தை மாற்றி, அவரையே துணையாக அழைத்துக்கொண்டு ஆற்றங் கரைக்குச் சென்றார். சூரியன் மேற்குத்தொடர் மலையில் சரியும் நேரம். இதயம் படபடக்க அக்கா ஆற்றங்கரை மண்டபத்தின் அருகில் சென்று நின்றாள். ஒருகணம் அவள் தலை சுற்றியது. மறுகணம் அக்காவின் கண்ணெதிரில் அந்தத் துறவி நிற்பதைக் கண்டார்.
பதற்றத்தில் கைகால் நடுங்க, துறவியின் பாதத்தில் விழுந்தார் அக்கா. துறவியின் கை மிகவும் அன்புடன் அக்காவின் தலையை வருடித் தந்தது. அக்கணமே அத்துறவியை அக்கா தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அக்காவை எழுப்பி அமரவைத்த துறவி, அவர் அகம் விழிப்புறும் வகையில் ஞானத்தை வழங்கிவிட்டு மறைந்து போனார். அந்த ஞானச் சொற்களில் லயித்து, ஊரை மறந்து உலகத்தை மறந்து ஆற்றங்கரையிலேயே தங்கிவிட்டார் அக்கா. அவருக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என்று ஏளனம் செய்த ஊர்க் காரர்கள் அவரை சாதியிலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்கள். அதற்கிடையில் அக்காவே அந்த ஊரைவிட்டு வெளியேறிவிட்டார். பல இடங் களிலும் அலைந்து திரிந்து இறுதியாக மாயவரத்தை அடைந்தபோது, குருவாக ஏற்றுக்கொண்ட துறவியை மறுபடியும் பார்க்கிற வாய்ப்பு ஏற்பட்டது.
அக்காவுக்கு உபதேசமும் ஆசியும் வழங்கிய துறவி அவரை செங் கோட்டைக்கே சென்று தங்கியிருக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார். இடைப்பட்ட காலத்தில் அத்வைத உண்மையை விளக்கும் அக்காவின் பாடல்கள் எங்கெங்கும் பரவி, அவருக்கு மதிப்புமிக்க ஓரிடத்தை உருவாக்கியது. அவருக்குப் பல சீடர்கள் உருவாகத் தொடங்கினார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறும்போது காணப்பட்ட எதிர்ப்பு, ஊருக்குத் திரும்பியபோது மறைந்து, எங் கெங்கும் வரவேற்பு முழக்கங்களே கேட்டன. வெகுகாலம் அங்கே வசித்த அக்கா, அத்வைத உண்மையைப் பரப்பு வதையே தன் நோக்கமாகக் கொண்டு, மிக எளிய மனிதர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஏராளமான பாடல்களைப் பாடினார். தான் அறிந்த உண்மையை உலகமாந்தர் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று மனதார விரும்பினார். அக்கா தன் முதுமைப் பருவத்தில் ஒருநாள் ஓர் ஆடிமாத அமாவாசை அன்று குற்றாலம் சென்று அருவியில் குளித்துவிட்டு, அப்படியே மலைச் சரிவில் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்து விட்டு வருவதாகச் சீடர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை.
அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த நாட்டுப்புறப் பாடல்களின் எல்லா வடிவங்களிலும் அக்கா பாடல் களைப் புனைந்திருக்கிறார். அவருள் இயங்கிய படைப் பூக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. சிறுமிகள் தமக்குள் பாடி விளையாடுகிற கோலாட்டப் பாட்டுகூட அக்காவின் கவனத்திலிருந்து பிசகவில்லை. ஆதியில் ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே வேதமும் அறியாக் கோலே வேதாந்தக் கோலே என்று கோலாட்டப் பாட்டின் தாளத்தில் மெய்ஞ்ஞானக் கருத்தை எளிதாக முன்வைத்துப் பாடியுள்ளார். உற்சாக மான தாளக்கட்டோடு கால்வேகத்துக்கும் கோல் வேகத்துக்கும் தகுந்த வரிகள் உத்வேகத்தோடு வந்து விழுந்திருக்கின்றன. பாடும்போதே, கோலடித்தபடி சுற்றிச் சுழன்றாடும் சிறுமிகளின் வட்டம் கண்களில் நிழலாடு வதை உணரமுடிகிறது. மெல்லமெல்ல முன்னேறும் பாட்டு, உச்சத்தில் “புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே” என்று முத்தாய்ப்பாக ஒரு வார்த்தையைச் சொல்லி முடிவடைகிறது.
கோலாட்டப் பாட்டைப் போலவே அக்கா பாடிய கண்ணிகளும் சுவாரசியமானவை. கிளிக்கண்ணி, குயில் கண்ணி, பராபரக்கண்ணி என கண்ணிகளின் பல வகைகளையும் பயன்படுத்தியுள்ளார் அக்கா. கிளிக் கண்ணிப் பாடல்கள். ஞானம் என்னும் பழத்தை முன் வைத்துப் பாடப்பட்டுள்ளன. கிளியாகப் பிறப்பெடுத்த பிறகு அந்தப் பழத்தை உண்ணுவதே இலக்கு. எங்கெங்கோ தேடியும் அதைக் கண்ணால் பார்க்கமுடியவில்லை. “எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன் கணக் கில்லாமல் போதமிழந்துவிட்டேன், கிளியே” என்று தொடக்கத்தில் நொந்துகொள்கிறது. “தேடக் கிடையாதடி - தெகட்டாத வஸ்துவடி அறிவுள்ளோர்க்கு ஆனந்தமடி கிளியே அதிக மதுரமடி” என்று அப்பழத்தின் அருமையைச் சொல்லிச் சொல்லித் தவிப் பாறிக் கொள்கிறது.
பல இடங்களிலும் இடைவிடாது தேடியலைந்த முயற்சி களுக்குப் பிறகு அந்தப் பழம் கண்ணில் படுகிறது. ஆனால் தொடமுடியாத உச்சத்தில் இருக்கிறது அப்பழம். அந்தத் தவிப்பைக் குறிக்கும் “எட்டாத கொப்படியோ என்னால் முடியுமோ தட்டிப் பறிக்கவென்றால் கிளியே சாதுக்கள் வேணுமடி” என்னும் வரிகளில் தொனிக்கும் ஆற்றாமையில் கவித்துவம் அடங்கியிருப்பதை உணரலாம். இறுதியில் குருவின் அருளால் அப்பழத்தை எட்டிப் பறித்துவிட முடிகிறது. ஆனால் அப்பழத்தைத் தனியாக உண்ண மனம் வரவில்லை. தன்னைப் போலவே பழத்தைத் தேடியலைகிற எல்லாரையும் அழைக்கிறது. “பற்றிப் புசிப்போமடி கிளியே - பிரம்மரசத்தை எல்லாரும் புசிப்போமடி, கிளியே எல்லாரும் புசிப்போமடி” என்ற கோரிக்கையோடு பாடல் முடிவடைகிறது. பராபரமே கண்ணியில் “எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள் எச்சிலில்லாத இடமில்லை பராபரமே” என்று எழுச்சியுடன் வெளிப் படும் அக்காவின் வரிகள் மிகமுக்கியமானவை. சமூகத்தாரின் தீட்டு பற்றிய பார்வையைக் கடுமையாக எதிர்க்கின்றன அக்காவின் வரிகள். “சுக்லத்தால் தீட்டுறைந்து தொண் ணூற்றாறுமாகி எக்குலமும் சத்குலமாச்சே பராபரமே” என்ற வரியும் “உலகத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ உன்னுடைய வெட்கத்தை யாரோடும் சொல்வேன் பராபரமே” என்னும் வரியும் அக்காவின் பார்வையை முன்வைப்பவை.
ஏலேலோ பாட்டின் கட்டமைப்பு வசீகரம் மிகுந்தது. ஒவ்வொரு வரியும் இரண்டாகப் பிளந்து தாளலயத்தின் ஊடே சரசரவென்று ஓடுகிறது. இறங்குமுகக் கால்வாயில் பெருக்கெடுத்தோடும் நீர்போல. “பூரணமாய் ஏலேலோ” என்பது ஒரு பாதி வரி. “புருஷனாக அயிலேலோ” என்பது மறுபாதி வரி. இருவர் மாறிமாறிப் பாடுவதுபோல அமைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஆசை என்னும் ஏலேலோ - அரும்புவிட்டு அயிலேலோ
கோசம் என்னும் ஏலேலோ - கொழுந்துவிட்டு அயிலேலோ
மோட்சம் என்னும் ஏலோலோ - மொட்டுகட்டி அயிலேலோ
போதம் என்னும் ஏலோலோ - பூப்பூத்து அயிலேலோ
புத்தி என்னும் ஏலேலோ - பிஞ்சுவிட்டு அயிலேலோ
காமம் என்னும் ஏலேலோ - காய்காத்து அயிலேலோ
கருணை என்னும் ஏலேலோ - காவலிட்டு அயிலேலோ
பக்தி என்னும் ஏலேலோ - பழம்பழுத்து அயிலேலோ”
என அடுக்கிக்கொண்டே செல்லும் பாடலைப் படிக்கும் போது திரும்பத்திரும்பப் பாடவேண்டும் போலத் தோன்றுகிறது. வாழ்வில் இயல்பாகக் காணக்கூடிய படிமமாக்கி, நித்தமும் பயன்படுத்துகிற சொற்கள் வழியாகவே அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் கட்டப்பட்டிருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் அக்காவின் திறமைக்குச் சாட்சியாக விளங்குகின்றன.
இதையடுத்து இடம்பெறக்கூடிய பள்ளுப்பாடலும் பாடுவதற்கு இனிமையானது. பள்ளனும் அவன் மனைவி யாகிய பள்ளியும் வயல்வெளியைப் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத ஒரு கணத்தில் சத்குருவின் வார்த்தையைக் கேட்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னாலேயே சென்றுவிடுகிறான். ஊர், பேர், உற்றார், பெற்றார், மனைவி எல்லாவற்றையும் மறந்து அவரைத் தொடர்ந்து செல்கிறான். பள்ளன் இல்லாமல் வயல்வேலைகள் நின்றுவிடுகின்றன. அதைக் காணப் பொறுக்கமாட்டாத ஆண்டை வயல்வெளிக்கு வந்து பள்ளியிடம் பள்ளனைப் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறான். ஆண்டையின் கேள்விகளும் பள்ளியின் பதில்களும் பாட்டில் மிகச் சிறப்பான பகுதியாகும்.
“பாங்குடனே மூன்றுகாலம் கடந்து பண்ணை பாராமல்
ஏன் போனான் பள்ளி
பிரளயம் வந்தால் ஜகம்நாசமுண்டென்று
பதறி அப்புறப்பட்டான் காணாண்டே
வஞ்சகி காமகுரோதம் மேலாசை
ஒழிந்துபோன வகைஏது பள்ளி
மேல்பள்ளி குருநாதனை வேண்டி
மறித்தாலும் ஆணை சேரான் காணாண்டே
உன் பிள்ளை காமகுரோதனை விட்டு
உகந்து நாடி அழைத்துவா பள்ளி
அவனைக் கண்டால் அடித்து விரட்டி
அதிதூரம் கொண்டு தள்ளுவான் காணாண்டே
நீதானே போய் இணங்கி அழைத்து
சமாதானம் பண்ணிஅழைத்துவா பள்ளி
என்னைக் கண்டால் எரிந்துவிழுவான்
ஏறிட்டு முகம்பாரான் காணாண்டே
சரளி பாடி சரசங்கள் பேசி
சருவி மெள்ள அழைத்துவா பள்ளி
சத்குருவுடைய வார்த்தையைக் கேட்டு
தலைகீழாக நின்றாலும் வாரான் காணாண்டே.”
பல விதமான கேள்விகளால் சுற்றிச்சுற்றி வளைத் தாலும் இறுதியில் அக்காவின் மனவிருப்பப்படி அது மெய்ஞ்ஞானம் என்னும் உண்மையின் மையத்தைத் தீண்டி முடிவடைகிறது.
முதல் வரியை “போரும் போரும்” என்னும் ஈற்றடியோடும் அதற்கடுத்த வரியை “பாரும்பாரும்” என்னும் ஈற்றடியோடும் புனைந்தெழுதிய பிரம்மம் ஏகம் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களில் மெய்ஞ்ஞானக் கருத்தை அழகாகக் கலந்து தருகிறார் அக்கா.
“மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும்
நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும்
உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும்
தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”
சாடும் தன்மையுள்ள இத்தகைய பல வரிகள் அப்பாடல்களில் உள்ளன.
ஞானத்தைத் தன் மனமுவந்த தலைவனாகவும் அவன் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவியாகத் தன்னையும் உருவகித்துக்கொண்டு அவர் எழுதியிருக்கும் பாடல்கள் மனத்தைத்தொட்டு அசைக்கவல்லவை. இப்பாடலின் ஒவ்வொரு வரியும் வெண்ணிலாவே என்னும் ஈற்றடியோடு முடிவடைகிறது.
“பஞ்சணை மெத்தையலுத்திங்கே வந்தேன்நான்,
வெண்ணிலாவே - அந்த
மெத்தையைப் பார்க்க மிகுதியாய்க் காய்கிறாய்,
வெண்ணிலாவே
நித்திரைக்கென்ன பிழைசெய்திருந்தேனோ,
வெண்ணிலாவே - அந்த
நித்திரையும் இங்கு சத்துருவாச்சுதே வெண்ணிலாவே.”
என்று தொடங்கக்கூடிய இப்பாடல் அகத்துறைப் பாடலின் எழுச்சியோடு விளங்குவதைக் காணலாம்.
“எந்த தேசத்துக்கும் நீ செல்லவல்லவன்
வெண்ணிலாவே என்றன்
ஈசனைக் கண்டால் எனக்குடனே சொல்வாய்
வெண்ணிலாவே”
என்ற கோரிக்கையையும்
“சேவலும் கோவென்று கூவத் தொடங்குமே,
வெண்ணிலாவே என்
ஆவலைத் தீர்க்க அழைத்துவா நாதனை,
வெண்ணிலாவே”
என்ற கெஞ்சுதலையும்
“அகர்த்தனை இப்போது அழைத்துவராவிட்டால்
வெண்ணிலாவே
அரைகஷணம் தங்காதென் ஆவி தயைசெய்வாய்
வெண்ணிலாவே”
என்று தன் முடிவை ஆற்றாமையோடு அறிவிப்பதையும் படிக்கும்போது ஞானத்தின்பால் அவருக்கிருக்கிற நாட்டத்தை உணர்ந்துகொள்ளலாம்.
நாட்டுப்புறப் பாடல்களின் சாயலையுடைய பாடல்களைத் தவிர, பல்லவி, அனுபல்லவி, சரணங் களுடன் ராகமும் தாளமும் கூடிய சுவையான கீர்த்தனை களையும் அக்கா புனைந்துள்ளார். ஏறத்தாழ எழுபத்தி நான்கு கீர்த்தனைகள் ஏட்டிலிருந்து எடுத்தெழுதித் தொகுக்கப்பட்டுள்ளன. இசைஞானம் உள்ளவர்களுக்கு இப்பாடல்கள் மிகப்பெரிய விருந்து. ஒவ்வொரு சரணமும் ஒரு முத்து.
“அகங்காரம் இருக்கையில் ஓங்காரம் அண்டுமோடா
அகங்காரத்தைவிட்டு பிரணவ ஓங்காரத்தைக் கொள்ளடா
அனாகதத்தில் மனதை அணுகாமல் நிறுத்தினால்
பிரணவ ஓங்காரத் தொனி ஓசையறியலாமேடா”
“சட்டிபோல் நொறுங்கும் தேகத்தை சதமென்று
எண்ணினாயோடா
திட்டுநீர்க்குமிழிபோலடா தேகம் நிச்சயம்
என்றெண்ணாதேடா
பொட்டெனவே குருபாதம் போற்றி அடிபணிந்து
பட்டியைப் போலலையாதே பரமார்த்தமாயிருடா”
ஆகிய இரண்டு சரணங்களும் அந்த முத்துக்குவியலி லிருந்து எடுக்கப்பட்டவை.
தனிப்பாடல்களைத் தவிர “சூடாலை கதை” என்னும் தலைப்பில் ஒரு குறுங்காவியத்தையும் எழுதியுள்ளார் அக்கா. இக்காவியம் ஏறத்தாழ அறுநூறு வரிகளைக் கொண்டது. மெய்ஞ்ஞான உண்மையை உணர்தல் என்னும் மையப்பொருளையே இக்காவியமும் கொண்டு உள்ளது. மாளவ தேசம் என்னும் தேசத்தை சிகித்வஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வருகிறான். அவனுடைய அழகு மனைவியின் பெயர் சூடாலை. சூடாலையின் அழகில் மயங்க அவள் வழங்கும் இன்பத்தில் திளைத்து ராஜ்ஜியத்தை மறந்திருக்கிறான் சிகித்வஜன். ஏறத்தாழ எட்டாண்டுகள் இப்படியே கழிந்தன. ஒருநாள் மாலை நேரம் பூங்காவில் சூடாலையின் வரவுக்காக வழக்கம் போலத் காத்திருக்கிறான். தனிமைத் தவிப்பைத் தீர்த்துக் கொள்ள அந்திவானத்தையே பார்த்தபடி இருக்கிறான். ஒளிகுறைந்து, பொலிவிழந்து, மங்கி மெல்லமெல்ல கருக்கத் தொடங்கிய வானத்தைப் பார்த்ததும் அவன் மனம் துணுக்குறுகிறது.
அழகு என்பதே இப்படி நிலையற்ற ஒன்றுதானோ, நம் சூடாலைக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணிக் குழப்பத்தில் நிலைகுலைகிறான். சூடாலை வந்த பிறகு அவளிடம் தன் கேள்வியைக் கேட்கிறான். அவளும் நிலையாமையை உறுதிப்படுத்துகிறாள். அந்த உண்மையை நீ எப்படி அறிந்துகொண்டாய் என்று கேட்கிறான் அரசன். அமரநிலை எய்தும் வழிகளைப் பல நூல்கள் வழியாகப் படித்துத் தெரிந்துகொண்டதாகவும் ஆன்மவிசாரணை யால் சோக மோக தாபங்களை வெற்றி கொள்ளலாம் என்றும் சொல்கிறாள் சூடாலை. “ராஜபோகம் நுகர்ந்து வரும் உனக்கு யோகமாவது பிரம்மவாவது” என்று கேலியுடன் சிரித்துவிட்டுச் செல்கிறாள் அரசன். இவனுக்கு எப்படி உண்மையை உணர்த்துவது என்று கலக்கம் கொள்கிறான் சூடாலை. அன்று முதல் அரசன் சிறிதுசிறிதாக தன் மனஅமைதியை இழந்து வருந்துகிறான்.
காட்டுக்குச் சென்று தனிமையில் தவம் செய்யும் முயற்சியில் இறங்கினால் அமைதி கிடைக்கக்கூடும் என்கிற முடிவோடு காட்டுக்குச் செல்கிறான். சூடாலை எவ்வளவோ எடுத்துச் சொல்லித் தடுத்தும் அவன் கேட்கவில்லை. ஏறத் தாழ பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலேயே அலைந்தான். அவனுடைய இடத்தில் இருந்து ராஜ்ஜியத்தைக் கவனித்துக் கொண்ட சூடாலை ஒருநாள் அவனைக் காணும் ஆவலில் முனிகுமாரன் உருவில் காட்டுக்குள் அலைந்து தேடிக் கண்டடைந்தாள். மாறுவேடத்தில் கணவனுடன் உரை யாடியபோது தன் மனச்சஞ்சலம் இன்னும் தீரவில்லை என்றும் தன் அகத்தில் இருப்பதே புறத்திலும் இருக்கிறது என்றும் சொல்லிவிட்டுக் கலங்குகிறான் அரசன். அவனிடம் மனம்விட்டுப் பேசும் அரசன், இறுதியில் அவளையே தன் குருவாக ஏற்றுக்கொள்கிறான். பிறகு, தனக்கொரு நல்வழியை உபதேசிக்குமாறு கேட்கிறான். “அரசே, உங்களுக்கு இரண்டு கதைகளைக் கூறுகிறேன். அவற்றின் பொருளை நீங்கள் அறிந்துகொண்டால் உங்களால் உண்மைமார்க்கத்தை உணர்ந்துகொள்ள முடியும்” என்று சொல்லிவிட்டு இரண்டு கதைகளைச் சொல்கிறார்.
முதல் கதை ஒரு ரத்தின வியாபாரியைப் பற்றியது. நாடெங்கும் அலைந்து ரத்தினங்களைச் சேகரிப்பவன் வியாபாரி. அவனிடம் ஒருவன் எல்லா ரத்தினங்களிலும் மிகச் சிறந்த ரத்தினம் சிந்தாமணி ரத்தினம் என்று சொல்கிறான். அதன் பிறகு, சிந்தாமணி ரத்தினத்தைத் தேடியலைகிறான் வியாபாரி. அதிர்ஷ்டவசமாக அது கிடைத்தபோதும் சந்தேகத்தின் காரணமாக உதறி விடுகிறான். மறுபடியும் அலைந்தான். முதலில் சிந்தா மணியைக் காட்டிய ஒரு பெரியவர் அவன் முன் தோன்றி ஒரு கூழாங்கல்லை எடுத்துப் போட்டு அதுவே சிந்தாமணி என்று சொன்னார். வியாபாரி மிகவும் மகிழ்ந்து போனான். இதை இப்படியே ஊருக்கு எடுத்துச் சென்றால் யாராவது பறித்துக்கொள்ளக்கூடுமோ என்று சந்தேகப்பட்டு, அந்தக் கூழாங்கல்லுக்காகத் தன் வீடு, சொத்து, வாசல், சுதந்திரம் அனைத்தையும் துறந்து அங்கேயே உட்கார்ந்துவிட்டான். கதையைச் சொல்லி முடித்ததும் அதன் உட்பொருள் புரிகிறதா என்று அரசனைப் பார்த்துக் கேட்கிறாள் சூடாலை. “என் பேதைமையால் எதுவுமே எனக்கு விளங்கவில்லையே” என்று கலங்குகிறான் அரசன். “சிந்தாமணியைப் போன்ற பெண் ரத்தினம் உனக்குக் கிடைத்தும் உதறித் தள்ளிவிட்டு வறட்டுத் தவத்தால் பிரமத்தை அடையமுடியும் என்று வந்துவிட்டாயே, நீயே அந்த ரத்தின வியாபாரி” என்று பொருளுரைக்கிறாள் சூடாலை.
இரண்டாவது கதை ஒரு மாவுத்தனைப் பற்றியது. அவன் காட்டுக்குச் சென்று ஒரு யானையைப் பிடிக்க எண்ணினான். தற்செயலாக அவன் பார்வையில் ஒரு யானை தென்படுகிறது. தன்வசம் இருந்த சங்கிலியை எடுத்து அதை நோக்கி வீசினான். ஆனால் யானை அந்தச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அவன் நல்ல காலம். யானையிடமிருந்து பிழைத்துக் கொண்டான். மற்றொரு தருணத்துக்காகக் காட்டில் அலைந்தான். பலத்தால் மட்டுமே ஒரு காரியத்தைச் சாதிக்க முடியாது, அறிவும் தந்திரமும் வேண்டும் என்பதை அவன் புரிந்து கொண்டான். பிறகு பெரியதொரு பள்ளம் வெட்டி, அதன்மீது இலைதழைகளைப் பரப்பி யானையின் வரவுக்காகக் காத்திருந்தான். தற்செயலாக அவ்வழியாக வந்த யானை அந்தப் பள்ளத்தில் விழுந்து அகப்பட்டுக் கொண்டது. பத்து நாட்கள் அதைப் பட்டினி போட்டு, பலவீனமடைந்ததும் சங்கிலியால் பிணைத்து தன்னோடு அழைத்துச் சென்றான். கதையைச் சொல்லி முடித்ததும் அதன் உட்பொருள் விளங்கவில்லையே” என்று கலங்கு கிறான் அரசன்.
சூடாலை விரிவான முறையில் உட் பொருளை விளக்குகிறாள். “மனம் என்பதும் ஒருவகையில் யானையைப் போன்றது. அம்மாவுத்தனைப் போல நீங்களும் அதை சங்கல்பம் என்னும் சங்கிலியால் பிணைக்க முயற்சி செய்தீர்கள். அதனால் தோற்க நேர்ந்தது. மனமென்னும் யானையை ஆசாபாசங்களாகிய உணவைக் கொடுக்காமல் அறிவென்னும் குழியில் தள்ளினால் அது நம் வசமாகும். துறவினால் இச்சை அழிந்தது போலத் தோன்றும். ஆனால் அஞ்ஞானம் முதிரும் போது பைசாசம் போல் பற்றிப் படர்ந்துவிடும். விவேகத்தால் அதைத் துண்டிக்க வேண்டும். ஆசாபாசங்களைத் துறப்பதுதான் துறவு. அரசைத் துறப்பதல்ல” என்று பொருளுரைக்கிறாள் சூடலை.
இப்படி பல எடுத்துக்காட்டுகள் மூலம் மெய்ஞ்ஞான உண்மையின் பொருளை எடுத்துச்சொல்லி, தொடர்ச்சி யான விவாதங்கள்வழியாக, அவன் மனத்தைப் பக்குவ மடைய வைக்கிறாள் சூடாலை. இருவருக்குமிடையே நிகழும் வேதாந்த உரையாடல்களைக் கொண்ட பாடல்கள் இக்குறுங்காவியத்தின் சுவை மிகுந்த பகுதி யாகும்.
“ஞானக் குறவஞ்சி” என்பது அக்காவின் மற்றொரு குறுங்காவியம். இதில் புத்தி என்பது தலைவியாகவும் மனம் என்பது தோழியாகவும் பரமாத்மாவைக் குறத்தியாகவும் பிரம்மம் தலைவனாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன. நிகழ்கலைக்கே உரிய பலவிதமான தாளக்கட்டுடைய பாடல்கள் இக்காவியத்தில் உள்ளன. ஒவ்வொரு காட்சியும் தொடங்கும் முன்பாக, அதன் உள்ளமைப்பை உணர்த்தும் விதமாக கட்டியங்காரன் வருகிற விருத்தம், புத்தி பிரிந்து வாடும் விருத்தம், மன சகி கேட்க புத்திமாது சொல்லும் விருத்தம், ஞானக்குறவஞ்சி புத்திமாதிடம் வரும் விருத்தம் என்னும் தலைப்பில் ஆறேழு வரிகளில் அமைக்கப் பட்டிருக்கும் பாடல்கள் புதுவிதமாக, வாசகர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் அமைந்துள்ளன. இறுதியில் தளராத நிலைதன்னில் தங்கினாள் மனத்தால் தானே எல்லாமாகத் தரிசனம் கண்டாள் என்று ஞானம் கைவரப் பெறுவதோடு காவியம் முற்றுப்பெறுகிறது. 24 பகுதிகளில் 754 அடிகளைக் கொண்ட பகவத்கீதை வசனம் அக்காவின் மற்றொரு சிறப்பான ஆக்கம்.
ஆவுடை அக்காவைப் பற்றிய வரலாற்றுத் தகவல் களையும் கிடைத்த பாடல்களையும் முதன்முதலாகத் திரட்டியவர் ஆய்க்குடி வேங்கடராம சாஸ்திரிகள். 1953ஆம் ஆண்டில் இத்தொகுப்பு வெளிவந்தது. இதற்கு முன்பாக 1890-1910 காலகட்டத்தில் வைத்தியநாத பாரதியாரும் இராமஸ்வாமி தீட்சிதரும் தஞ்சை திருவாதியில் வெளியிட்ட சிறுசிறு பிரசுரங்களின் வழியாகக் கிடைத்த பாடல்களையும் வாய் வழியாகத் தொகுத்த தனிப்பாடல்களையும் கையெழுத்துப் பிரதி களாகக் கண்டெடுத்த சில பாடல்களையும் இத்தொகுப்பு பயன்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகும் பாடல் களைத் திரட்டும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இம்முயற்சியில் மனம் தளராமல் ஈடுபட்டவர் கோமதி அம்மையார். இவர் 1908-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் கடயத்தில் பிறந்தவர். இவருடைய தாயார் சீதாலட்சுமியும் பாரதியின் மனைவி செல்லம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள்.
கோமதி அம்மையாருக்கு பாரதியார் சித்தப்பா முறையாக வேண்டும். கோமதி அம்மையாரும் எழுத்தார்வம் உள்ளவர். பக்தி சார்ந்த விஷயங்களைக் கட்டுரைகளாக எழுதும் பழக்கத்தைக் கொண்டவர். அவர் ஆவுடை அக்காவின் பாடல்களால் கவரப்பட்டு, அப்பாடல்களையும் அவரைப் பற்றிய தகவல்களையும் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திரட்டித் தொகுத்தார். 1964 ஆம் ஆண்டில் சங்கர கிருபா என்னும் இதழில் ஆவுடை அக்காவைப் பற்றி விரிவாக எழுதிய கட்டுரையொன்றில் “சுப்பிரமணிய பாரதியார் அவர்களுக்கு அக்கா அவர்களின் பாடல்கள் என்றால் உயிர், அவரும் அக்காவின் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல் களின் கருத்துகளையொட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர்
எனது தாயார் அவர்களுக்கு சகோதரியின் கணவரா கையால் சிறுவயதில் அவர் மூலமாகவும் சில தகவல்கள் அறியும் பாக்கியம் கிடைத்தது” என்றொரு குறிப்பை எழுதியுள்ளார். சில நிமிடங்களே சந்தித்த சகோதரி நிவேதிதையைப் பற்றிக்கூட கட்டுரை எழுதும் பாரதியார், தான் நன்கு அறிந்த அக்காவைப் பற்றி ஏன் எந்தக் கட்டுரையும் எழுதவில்லை என நண்பர் மனத்தில் எழுந்த ஆதங்கத்துக்கு ஆதாரமான புள்ளி இந்தக் கட்டுரைக் குறிப்பு. பாரதியாரின் ஒருசில பாடல் வரிகளையும் எடுத்துக்காட்டுக்காக முன்வைத்து, அக்காவின் கருத்து அவற்றில் தொனிப்பதையும் நண்பர் சுட்டிக் காட்டுகிறார்.
அக்கா மிகப்பெரிய ஆளுமை. அவர் சுட்டிக்காட்டும் ஞானவழி உலகத்தை மேம்படுத்தவல்ல அருமையான வழி. இறைவனைத் தனக்குள் உணர்வதும், அந்த இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்பதை உணர்வதும் எளிய விஷயமல்ல. அதன் வழிமுறை நிரூபணங்களுக்கு அப்பாற்பட்டதென்றாலும், உலகம் அன்புமயமானதாக ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. வெறுப்பையும் சீற்றத்தையும் துறந்து அன்பால் இணைந்து வாழ எண்ணுகிற எல்லாருக்கும் அக்காவின் பாடல்கள் முதல் வாசிப்பிலேயே பிடித்து விடும். அக்காவின் பாடல்களைப் படிக்க பெரிய கல்விப் பயிற்சி எதுவும் தேவையில்லை. எளிய பள்ளிப் படிப்பு உள்ளவர்களால் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். படிப்பு குறைந்தவர்களையும் படிப்பறிவே இல்லாதவர்களையும் ஈர்ப்பதற்காகவே இவை பாடல் களாகப் பாடப்பட்டுள்ளன.
ஒருவர் ஒருமுறை அல்லது இரண்டுமுறை பாட்டாகப் பாடி, மற்றவர்கள் அதைத் திரும்பத்திரும்பப் பாடி, பாட்டுப் பழக்கத்தாலேயே அதை மனத்தில் இருத்தி வைத்துக்கொள்ளத்தக்க பாடல் களாகவே இவை உள்ளன. இந்த வகையில் இப்பாடல்கள் பெருமளவில் பயன்படவேண்டும் என்கிற விழைவு அக்காவின் மனத்தில் இருந்திருக்கக்கூடும். அதற்காகவே மரபான எந்த இலக்கண வடிவத்தையும் பயன்படுத்தாமல், மரபுக்கு வெளியே வாய்மொழியாகப் புழங்கிவந்த நாட்டுப்புறப் பாடல்களின் அமைப்பைத் துல்லியமாக அறிந்து அதையே தன் பாடல்களுக்கான வடிவமாகப் பயன்படுத்தினார். அம்முயற்சியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் அவருடைய பாடல்கள் வாய்வழக்காகவே பாடப்பட்டு வந்தன. கையெழுத்துப் பிரதியாகக் கிடைக்காத பல பாடல்கள் அவர்களைப் பாட வைத்துத் தான் பிற்காலத்தில் திரட்டியெடுக்கப்பட்டன.
பக்தி இலக்கியக் காலகட்டத்தில் உருவான பிரபந்தப் பாடல்களை இந்த இடத்தில் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் பொது வாழ்வில் பயன்பட்டு வந்த தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி போன்ற குழந்தைப் பருவத்துப் பாடல்களின் சமூக வடிவங்களில் கண்ணன் பெருமையை உணர்த்துகிற பாடல்களை பிரபந்தக் கவிஞர்கள் பலரும் புனைந்திருப்பதைக் காணலாம். தாம் அழுத்தமாக நம்புகிற வைணவத் தத்துவம் மக்களிடையே வேரூன்றிச் செழுமையுடன் வளர, அவர்கள் அவ்வடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தசாவதாரங்களின் சிறப்பை முன்வைக்காத பிரபந்தக் கவிஞர்களே இல்லை. ஒரு கோணத்தில் எல்லாருடைய பாடல்களின் மையமும் ஒன்றுதான். ஆனால் அந்த ஒன்றைக் கொண்டு ஒரு கவிஞரின் செல்வாக்கு இன்னொரு கவிஞருக்கிருந்தது என்று உடனடியாக முடிவுக்கு வந்துவிட முடியாது. அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மையில் இருக்கும் ஒற்றுமையின் காரணமாக, ஒருவரால் இன்னொருவர் பாதிப்படைந்தார் என்றும் சொல்லிவிடமுடியாது. எல்லாரும் தன்னிகரில்லாத தனித்தன்மை உள்ள கவிஞர்கள்.
அக்காவையும் பாரதியாரையும் மதிப்பிடும்போது நாம் பெரிதும் கவனமாக இருக்க வேண்டும். ஞானத்தைப் பற்றிய தெளிவை மக்களிடையே பரவச் செய்வதில் அக்காவுக்கு எந்த அளவுக்குத் தீவிரமான எண்ண மிருந்ததோ, அதே அளவுக்கு தீவிரமான எண்ணம் பாரதி யாரிடமும் இருந்தது. சமூகம் அடிமைப்பட்டிருக்கும் அறிவையும், சமூகத்தில் ஏற்படவேண்டிய மாற்றங் களையும் விடுதலை பெற வேண்டிய அவசியத்தையும் எழுச்சியையும் மக்கள் பெற வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம். கல்வியறிவு அதிமில்லாத மக்களை மிக எளிதில் அடைந்து, பரவவேண்டும் என்கிற நோக்கத்தில் இருவருமே தன் சமகாலத்தில் நிலவிய வாய்வழக்கப் பாடல் வடிவங்களை சாத்தியமான அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். பாரதியாரின் சமகாலக் கவிஞர்கள் பயன்படுத்திய மொழியையும் பாரதியார் பயன்படுத்திய மொழியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாரதியாரின் முயற்சியைப் புரிந்துகொள்ள முடியும். ஒரே ஆயுதத்தை இருவரும் பயன்படுத்தினார்கள் என்கிற ஒரே அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு இருவரையும் இணைத்துப் பார்க்கவேண்டிய தேவையில்லை. இருவரும் இயங்கிய தளங்கள் வேறுவேறானவை. இருவரும் தன்னளவில் தனிப்பட்ட ஆளுமைகள்.
( 2010 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாத உங்கள் நூலகம் இதழில் வெளிவந்த கட்டுரை)
Save