சின்ன வயதில் கதைப்புத்தகங்களைத் தேடித்தேடி படிப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போது படித்த கதைகளில் ஒன்று இன்னும் என் நினைவில் உள்ளது. அதன் பெயர் நவரத்தின மலை. அது செங்குத்தான மலை. மேலேயிருந்து தட்டுத்தடுமாறி கீழே இறங்கிவிட முடியுமே தவிர, மேலே ஏறிச் செல்ல வழியில்லை. அதன் உச்சியில் அழகானதொரு தோட்டம் இருப்பதாகவும் அங்கே பூக்கும் பூக்கள் ஒருபோதும் வாடாதவை என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
அந்த ஊரில் ஒரு சிறுவன் வசிக்கிறான். அவனுக்கு அந்த மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும் என்று ஆவல் எழுகிறது. தினமும் அந்த மலையின் அடிவாரத்துக்குச் சென்று நீண்டநேரம் வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். ஒருநாள் அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெரிய கழுகு வருகிறது. அடிவாரத்தில் இறந்துகிடந்த ஒரு கன்றுக்குட்டியை கால்களால் பற்றியெடுத்தபடி உச்சியை நோக்கிப் பறந்து செல்வதைக் காண்கிறான். அக்கணமே அவன் மனத்தில் ஒரு திட்டம் உதித்துவிடுகிறது.
அடுத்த நாள் பசுவிடம் பால் கறப்பதற்காக அவன் வீட்டில் ஆயத்தமாக எப்போதும் வைத்திருக்கும் வைக்கோல் நிரப்பப்பட்ட கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்துக்கு வருகிறான். வைக்கோலை உருவி வெளியே வீசிவிட்டு, அதன் வயிற்றுக்குள் அவன் சுருண்டு படுத்து மறைந்துகொள்கிறான். இரை தேடி இறங்கிவரும் கழுகு வழக்கம்போல அதைத் தூக்கிக்கொண்டு உயரே பறந்துசெல்கிறது. மலை உச்சியில் இறங்கி கொத்தும் சமயத்தில் கன்றின் தோலை உதறிவிட்டு கழுகின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான் சிறுவன். குழம்பிப் போன கழுகு அஞ்சி விலகி ஓடிவிடுகிறது.
மலை உச்சியின் அழகைக் கண்டு சிறுவன் மலைத்துப் போகிறான். எங்கெங்கும் எண்ணற்ற நிறங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றின் அழகைக் கண்டு அவனுக்கு
மயக்கமே வருகிறது. மகிழ்ச்சியில் அவனுக்குப் பேச்சே எழவில்லை. மாலை வரைக்கும் விளையாடிக் களித்திருந்த பிறகு தட்டுத்தடுமாறி மலையிலிருந்து
இறங்கி திரும்பிவிடுகிறான்.
அன்றுமுதல் ஒவ்வொரு நாளும் அவனுடைய முதல் பொழுதுபோக்கே நவரத்தின மலைக்குச் செல்வதுதான் என்றாகிவிட்டது. வைக்கோல் கன்று திட்டம் வெகுகாலத்துக்கு சரிவராது என்பதை அவன் மனம் உணர்ந்த தருணத்தில் மலையில் ஒரு பக்கத்தில் பாடுபட்டு படிக்கட்டுகளை உருவாக்க முனைந்து, அம்முயற்சியில் வெற்றிபெறுகிறான். அதற்குப் பிறகு அவனுடைய நவரத்தின மலைப்பயணம் எளிதாகிவிடுகிறது.
அச்சிறுவனைப்போலவே என் சிறுவயதில் என் மனத்துக்குப் பிடித்தமான ஒரு மலைத்தோட்டத்தைக் கண்டடைந்து, நினைத்த நேரத்திலெல்லாம் அந்தத் தோட்டத்தைச் சுற்றிச்சுற்றி விளையாடி பொழுதைக் கழித்தேன். இனிப்புத்துளியை நோக்கி நகரும் எறும்பைப்போல மனம் தோட்டத்தில் நிறைந்திருந்த வண்ணவண்ண மலர்களை நோக்கி நகர்ந்து செல்லத் தொடங்கியது. புத்தகங்கள் என்னும் மலர்கள் பூத்துக் குலுங்கிய நூலகத் தோட்டம் என்னுடைய இடமாக மாறியது.
தோட்டத்திலேயே உலவுகிறவனுக்கு கைகள் சும்மா இருக்குமா என்ன? அடர்ந்திருக்கும் சருகுகளை பெருக்கித் தள்ளி, வேரில் நீர் நிற்கும்படி மேடெழுப்பி, விதைகளைச் சேகரித்து, பதியத்துக்குத் தகுந்த தண்டுகளை வெட்டியெடுத்து நட்டு, நுனியில் சாணம் பூசி பாதுகாத்து, தன் பங்குக்கு நான்கு விதைகளை விதைத்து, அவை வளர்வதைப் பார்த்து ரசிக்கத் தொடங்குகிறான் அல்லவா? என்றோ தூவிய விதை உயிர்பெற்று மண்ணைப் பிளந்துகொண்டு முளைத்தெழுந்து ஒரு செடியென நின்று காற்றையும் ஒளியையும் உள்வாங்கி வளர்ந்து மொக்குவிட்டு நிற்பதை நேருக்கு நேர் நின்று பார்க்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு சிறகு முளைக்கும் தருணமே.
மொட்டு மலர்ந்து மணம்வீசுகிறது. இனிய மணத்தால் நிறைந்த மனத்தில் இசை எழுகிறது. மலரை மலராக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன் ஒரு தருணத்தில் அன்பின் வடிவாக, கருணையின் வடிவாக, புன்னகையின் வடிவாக, காதலின் வடிவாக, பெண்ணின் வடிவாக, பூமியின் வடிவாக என ஏராளமான அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களின் படிமமாகப் பார்க்கும் கலையில் தேர்ச்சி பெறுகிறான். அன்று அவன் எழுத்தாளனாகி, முதல் வரியை எழுதிவிடுகிறான்.
அப்படித்தான் நானும் ஓர் எழுத்தாளனாக மலர்ந்தேன். இரவெல்லாம் சொல்லரும்புகளைக் கோர்த்துக் கோர்த்து என் முதல் சிறுகதையை ஒரு மாலையெனப் புனைந்து முடித்தேன். இன்னும் இருள் பிரியாத காலையில் குயில்களின் பாடல் கேட்டது. என் நெஞ்சில் ஊற்றெடுத்த உல்லாசத்தையே அக்குரல் பிரதிபலித்தது. வானத்தில் ஆழ்ந்து பின்னோக்கிச் செல்லும் நட்சத்திரங்களையும் அவற்றை நோக்கிப் பறந்து செல்லும் காக்கைகளையும் பார்த்துப் புன்னகைத்தேன். வானமே, மேகமே, காற்றே, பறவைகளே, மரங்களே, மலர்களே பாருங்கள் பாருங்கள் என என் கதையைக் காட்டிப் பெருமிதமடைந்தேன்.
ஆனந்த சுரங்கத்தின் முதல் படிக்கட்டில் அன்று காலடி வைத்து இறங்கத் தொடங்கினேன். இன்னும் நடந்துகொண்டே இருக்கிறேன். முப்பத்தாறு ஆண்டுகள் பறந்துவிட்டன. முப்பத்தாறு படிகளில் இறங்கி ஒவ்வொரு படியிலும் நின்றிருக்கும் பதுமையிடமும் உரையாடிய மகிழ்ச்சியோடு நடந்துகொண்டே இருக்கிறேன். நடக்க நடக்க என் மகிழ்ச்சி பெருகியபடியே இருக்கிறது. காணக்காண கண்களுக்குத் தெவிட்டாத மலர்கள் இருபுறங்களிலும் அடர்ந்து அசைந்தபடியே இருக்கின்றன. அவற்றின் வசீகரத்தால் ஒவ்வொரு கணமும் மனம் மயங்கித் ததும்புகிறது. இம்மலர்களைக் கண்களால் காண்பதும் இன்பம். தொடுவதும் இன்பம். முகர்வதும் இன்பம். பறித்து உள்ளங்கையில் ஏந்துவதும் இன்பம்.
என் முதல் சிறுகதை பிரசுரமாகவில்லை. அந்தப் பிரதியே என் வசமில்லை. கனவுபோலவே அதுவும் கலைந்துபோய்விட்டது. பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்னும் தகவல் வந்து சேர்வதற்குள் நான் மேலும் சில கதைகளை எழுதி முடித்திருந்தேன். அவை ஒவ்வொன்றாக வெளிவந்து என் பெயரை அச்சில் உலவவைத்தன. அந்தப் பிரதிகளும் எங்கோ பறந்துபோய்விட்டன. என்னுடைய தொகுதிக்குள் இருப்பதாலேயே பல கதைகள் பாதுகாப்பாக உள்ளன. இல்லையென்றால், அவற்றையும் பறந்துபோக விட்டிருப்பேன்.
ஒரு கதைக்கு முதல் வரி என்பது மிகமிக முக்கியம். அது சரியாக அமைந்தால்தான் என்னால் அடுத்த வரியை ஒழுங்காக எழுதமுடியும். இன்றுவரைக்கும் அதுவே விதியாகிவிட்டது. அந்த முதல் வரியைக் கண்டடைவதற்காக இரைதேடும் பறவையென மனம் அலைந்தபடியே இருக்கும். மனத்தை அலையவிட நான் உட்கார்ந்திருக்கும் இடம் தோதாக இல்லையென்றால் தெருவில் இறங்கி ஏதோ ஒரு திசையில் நடக்கத் தொடங்கிவிடுவேன். நான் தேடிக் கொண்டிருக்கும் வரியை யாரோ எனக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று அந்தத் திசையின் முடிவில் மறைத்துவைத்திருப்பதைப்போலவும் ஒரு எட்டு நடந்துபோய் அதை எடுத்துக்கொண்டு திரும்பிவிடலாம் என்பதுபோல ஒரு வேகத்துடன் செல்வேன். கண்டடைந்து திரும்பும் நாட்களெல்லாம் நற்பேறு மிக்கவை. கண்டடைய முடியாமல் தடுமாறவைத்துக் குழப்பும் நாட்களெல்லாம் இயலாமையின் வதை நிறைந்தவை. மல்லிகையும் கனகாம்பரமும் சேர்த்துக் கட்டிய மாலைச்சரத்தைப்போலவே இவ்விரண்டு தருணங்களும் இணைந்து நீண்டதே என் எழுத்துப்பயணம்.
என்னைக் கடந்து செல்பவர்கள் ஏராளமான பேர். என் பார்வையில் படும்படி எதிரில் நடந்து வருபவர்கள் இன்னும் ஏராளமானோர். நான் எல்லோருக்கும் இடையில் சென்றுகொண்டே இருக்கிறேன். அவர்களுடைய அசைவுகளையும் நடைவேகத்தையும் விதவிதமான கைவீச்சுகளையும் முக அசைவுகளையும் கவனிப்பதில் எனக்கு சலிப்பே ஏற்படுவதில்லை.
மனிதர்களுக்காகக் காத்திருக்கும் தருணங்களில் மரங்களையும் செடிகளையும் பூக்களையும் குளங்களையும் குளக்கரையோரம் அடர்ந்திருக்கும் நாணல்புதர்களையும் புதரோரமாக வந்து எட்டிப் பார்த்துவிட்டு மறைகிற முயல்குட்டிகளையும் பார்த்து மனம் வியந்ததுண்டு. மலர்க்கண்காட்சியைப் பார்ப்பதற்காக சீட்டு வாங்கிக்கொண்டு போகிற வழியில் அபூர்வமாகப் பார்க்க நேர்ந்த மனிதர்களோடு மணிக்கணக்கில் பேசிச் செலவழித்துவிட்டுத் திரும்பியதுமுண்டு. ஒவ்வொரு தருணத்திலும் எது கிட்டுகிறதோ, அதைக்கொண்டு மனத்தை நிரப்பிக்கொள்கிறேன்.
புதுமைப்பித்தனிலிருந்து அசோகமித்திரன் வரைக்கும் நம் தமிழில் மானுட வலிகளையும் வேதனைகளையும் புன்னகைகளையும் கசப்புகளையும் எழுதிவைத்துச் சென்ற மேதைகள் ஏராளமான பேர் உள்ளனர். அவற்றையெல்லாம் வாசித்துப் பெற்ற பயிற்சியில் எனக்கென ஒரு குரலையும் பேச்சையும் மொழியையும் உருவாக்கிக்கொண்டேன். என் வாழ்வில் நானறிந்த வலிகளையும் வேதனைகளையும் புன்னகைகளையும் கசப்புகளையும் எழுதியெழுதிக் கரைத்துவிடுகிறேன்.
எனக்கு நீச்சல் தெரியாது. நீந்துகிறவர்கள் அணிந்து பழகும் கவச உடைகளும் என்னிடம் கிடையாது. ஆயினும் சட்டென ஒரு கணத்தில் தோழமையுடன் தோளில் கைவைத்த யாரோ ஒருவன் தண்ணீருக்குள் மூழ்கவைத்து மறைத்துவைக்கப்பட்ட மாபெரும் நகைக்குவியலெனக் கிடக்கும் பவழப்பாறைகளைப் பார்க்கவைத்த அனுபவத்தை எத்தனை முறை அசைபோட்டாலும் பரவசம் குறையவில்லை.
எப்போதாவது நண்பர்களோடு சேர்ந்து மலைப்பாதையில் வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்பவன் நான். எப்போதோ ஒரு சில முறைகள் காட்டின் உட்பகுதிக்குள் அழைத்துச் சென்று அபூர்வமான பறவைகளைப் பார்க்கவைத்திருக்கிறார்கள். ஒரு பயணத்தில் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்த என்னை எனக்கு அருகிலேயே படுத்திருந்த மற்றொருவர் அவசரமாக எழுப்பி, அருகில் கண்ணுக்கெட்டிய தொலைவில் மனமுருகக் கூவும் குயிலையும் மின்னல் வேகத்தில் மரப்பட்டையைக் கொத்திக்கொண்டிருக்கும் மரங்கொத்தியையும் காட்டினார். ஒருகணம் தவிலோசையையும் நாயன இசையையும் இணைத்துக் கேட்டதுபோல மனம் பொங்கியது.
ஏற்கனவே நின்றுகொண்டிருக்கும் வரிசையில் நானும் நிற்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பாயசத்தொன்னையை கைநீட்டிப் பெற்றுக்கொள்கிறேன். நின்றதும் பெற்றதுமாக அமைந்தவையே கதைகள்.
மானுட வாழ்க்கையே மாபெரும் நாடகமாக இருக்கிறது.
யாரும் பார்த்துவிடும் முன்பே கலத்தில் தேங்கிவிட்ட அழுக்கு நீரை ஊற்றிவிட்டு தூய்மைப்படுத்தி வைத்துவிட்டுப் போகிறார் ஒருவர். ஆனால் எதிர்பாராது பொழியும் மழைநீர் கூரையிலிருந்து சொட்டுச்சொட்டாக இறங்கி கலத்தை நிரப்பிவிட்டு நுரைத்துத் தளும்புகிறது.
ஒரு சிறுகதை உருவாகும் கணம் என்னப் பொறுத்தவரையில் ஒரு பேரனுபவம். புத்தம்புதிய ஊரில் மேற்கொள்ளும் மலைப்பயணத்தைப்போல அல்லது படகுப்பயணத்தைப்போல என்று சொல்லலாம். சமீபத்தில் ‘சிவப்புக்கல் மோதிரம்’ என்றொரு
சிறுகதையை எழுதியிருந்தேன். அந்தச் சொல் எழுப்பிய கிளர்ச்சியே அக்கதை உருவாகக் காரணம். ஒரு பகல் நேர ரயில் பயணத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த குடும்பத்தினர் தமக்குள் ஏதோ குடும்ப விஷயங்களை உரையாடியபடி வந்தார்கள். அக்குழுவில் நடுவயதில் இருந்த ஒரு பெண்மணியின் உரையாடலில்தான் முதன்முதலாக சிவப்புக்கல் மோதிரம் என்னும் சொல்லைக் கேட்டேன். அச்சொல் அக்கணத்தில் அபூர்வமான ஒன்றாக என் மனத்துக்குத் தோன்றியது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு சட்டென அவர்கள் பக்கமாக திரும்பிப் பார்த்தேன்.
அந்தப் பெண்மணி தன் கைவிரலை மற்றவர்கள் முன்னால் நீட்டியிருக்க, அவர்கள் அவ்விரலில் அணிந்திருந்த சிவப்புக்கல் மோதிரத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் ஒருகணம் அந்த வசீகரத்தைப் பார்த்தேன். அந்தச் சொல் என் மனத்தில் ஆழமாக இறங்கிவிட்டது. ஏதோ மந்திரத்தை உச்சரிப்பதுபோல, அச்சொல்லை ஆழ்மனம் உச்சரிக்கத் தொடங்கியது.
ஏதோ எழுதுவதற்கான தொடக்கம் என்பதை மட்டும் நான் உணர்ந்தேன். ஆனால் எதை எழுதப்போகிறேன் என்பதில் தெளிவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சிவப்புக்கல் மோதிரம் வைக்கப்பட்டிருப்பதுபோலத் தோன்றியது. மேசையின் மீதிருந்த பென்சிலை எடுத்து தன்னிச்சையாக அந்த மோதிரத்தின் வடிவத்தை ஓவியமாக வரைந்தேன். நட்சத்திரம்போல வடிவமைக்கப்பட்ட தங்க இதழுக்கிடையில் ஒரு சிவப்புக்கல். தெளிவாக எதுவும் தெரியாத பதற்றமும் பரபரப்புமாக அலைந்துகொண்டே இருந்தேன்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அச்சொல்லை இறக்கிவைக்க முடியாத ஒரு மலர்க்கொத்தென மனத்தில் ஏந்தியபடி நடமாடிக்கொண்டிருந்தேன். ஏதோ தினசரி வேலைகள் அதனதன் பாட்டுக்கு நடைபெற்றதே ஒழிய ஆழ்மனத்தில் சிவப்புக்கல்மோதிரம் சுடர்விட்டபடி இருந்தது.
ஒருநாள் வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தேன். எனக்குரிய நிறுத்தத்தில் இறங்கி தேநீர்க்கடையில் தேநீர் அருந்தியபடி சாலையை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். முற்றிலும் தற்செயலாக பக்கத்துச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியின் மீது என் பார்வை படிந்தது. அந்தச் சுவர் முழுவதையும் அடைத்துக்கொள்ளும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை அடுத்தடுத்து ஒட்டியிருந்தார்கள். ஒரு வயதான பெண்மணியின் படம். முகம் திருத்தமாக நல்ல ஒப்பனையுடன் இருந்தது. கீழே தோற்றம் மறைவு தேதி விவரமெல்லாம் அச்சிடப்பட்டு, அவர் பிரிவை எண்ணி வருந்துவோர்களின் பெயர்ப்பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. பழகியதுமே சட்டென நெருக்கம் கொள்ளக்கூடியவர்போல இருந்தது அவர் தோற்றம்.
கடையிலிருந்து வெளியேறி வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன். வழிநெடுக நீண்ட தொலைவு வரைக்கும் அதே சுவரொட்டிகள். சுவரொட்டியிலிருந்து பார்வையை விலக்கிய கணத்தில் மிக இயல்பாக சிவப்புக்கல் மோதிரத்தின் நினைவு வந்தது. அந்தச் சொல்லை முனகியபடி ஒருகணம் சுவரொட்டியை நினைத்தேன். நான் எழுத வேண்டிய கதையின் மையம் சட்டென பிடிபட்டுவிட்டது. மனம் பறக்கத் தொடங்கியது. மண்ணுக்குக் கீழே புதையுண்டிருந்த ஒரு சிலையை அகழ்ந்தெடுப்பதுபோல, சிறுகதையை மனம் உடனே நெய்யத் தொடங்கியது. தொடக்க வரிகள் தானாக வெள்ளம்போல பொங்கி வந்தது. உத்தேசமாக கதையை வளர்த்துச் செல்லவேண்டிய திசையைப்பற்றிய பிடியும் கிடைத்துவிட்டது.
மனம் துள்ளத் தொடங்கியது. என் உடலிலும் மனத்திலும் படிந்திருந்த சோர்வு போன இடமே தெரியவில்லை. ரத்தத்தில் யாரோ புதிய ஆற்றலை ஏற்றியதுபோல இருந்தது. அன்று இரவு உணவுக்குப் பிறகு ஐந்தாறு மணி நேரத்துக்கு ஒரே அமர்வில் அமர்ந்து அந்தக் கதையை எழுதி முடித்தேன். தமிழ், கதிர், கலைச்செல்வி என பெயர்கள் தாமாகவே கரைபுரண்டு வந்தன.
ஒரு சொல் உருவாக்கும் கிளர்ச்சியிலிருந்து ஒரு சிறுகதை உருவாவதுபோல பீறிட்டெழும் ஏதேனுமொரு பழைய அனுபவத்திலிருந்தும் ஒரு சிறுகதை பிறந்ததுமுண்டு. ஒரு கதை பிறப்பதற்கு ஒரு நூறு வழிகள். இது மலை, இது ஆறு, இது மரம் என சுட்டிக்காட்டுவதுபோல கதையாக்கத்துக்கு இதுதான் வழி என புறவயமாக ஒருபோதும் முடிவாகச் சுட்டிக் காட்டமுடிவதில்லை.
என்னுடைய பழைய கதைகளில் ஒன்று கத்தி. என் இளம்வயது அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட கதை. எங்கள் ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏழெட்டு சதுரமைல் பரப்பளவுள்ள ஏரி. ஏரிக்கு நடுவில் வனத்துறை வேலங்கன்றுகளை நட்டு காடுபோல வளர்த்திருந்தது. கோடை காலத்தில் ஏரி தண்ணீரின்றி வறண்டுவிடும். மாட்டுக்காரப் பிள்ளைகள் ஏரிக்குள் மாடுகளை அழைத்துக்கொண்டு வந்து மேய்ப்பார்கள். நிழலில் நாங்கள் விளையாடிக்கொண்டிருப்போம்.
ஊர்க்காரர்கள் வேலங்காட்டிலிருந்து சின்னச்சின்ன மரக்கிளைகளை வெட்டியெடுத்துக்கொண்டு செல்வதுண்டு. தோட்டத்துக்கு வேலி போடவும் அடுப்பு விறகுக்காகவும் பயன்படுத்திக்கொள்வார்கள். ஒரு விடுமுறை நாளில் விறகு வெட்டிக்கொண்டு வருவதற்காக தெருவிலிருந்து ஒரு பட்டாளமே புறப்பட்டது. நானும் எங்கள் அம்மாவிடம் சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டு அவர்களோடு சேர்ந்து காட்டுக்குச் சென்றேன். எங்களிடம் கத்தி இல்லை. உறவுக்காரர் வீட்டிலிருந்து கத்தியை வாங்கிக்கொண்டு சென்றிருந்தேன்.
எல்லோரும்போல நானும் ஒரு தாழ்வான கிளையைப்பற்றி வெட்டத் தொடங்கினேன். அதன் மஞ்சள் பூக்கள் தரைமுழுதும் உதிர்ந்து உலர்ந்திருந்தன. முதல் அடுக்கில் விழுந்த பூக்கள் மக்கிக் கருத்திருக்க, அதற்கடுத்த அடுக்கில் விழுந்திருந்த பூக்கள் நிறம் மங்கி சுருண்டு துவண்டிருக்க, மேல் அடுக்கில் விழுந்திருந்தவை புத்தம்புதிதாக மணம் பரப்பியபடி இருந்தன.
நேரம் போனதே தெரியவில்லை. ஏதோ பழைய திரைப்படப் பாடல் வரிகள் மனத்தில் படர்ந்தெழ, வெட்டும் வேலையில் மூழ்கிவிட்டேன். பாட்டை அசைபோடும் தீவிரத்தில் சில கணங்கள் சுற்றுப்புறமே மறந்துவிட்டது. அப்போது திடீரென அங்கே தோன்றிய காவல்காரன் விறகுவெட்டுகிறவர்களையெல்லாம் சுற்றி வளைத்துவிட்டான். அங்கங்கே விறகு வெட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் சட்டென மரத்திலிருந்து இறங்கி போட்டதுபோட்டபடி தப்பித்து ஓடினார்கள். ஏதோ நினைவில் மூழ்கியிருந்த நான் அவர்கள் போட்ட சத்தத்தையும் நடப்பது என்ன என்கிற விஷயத்தையும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். அதிர்ச்சியிலும் திகைப்பிலும் கைகால் நடுங்க அவசரமாகக் கீழே இறங்கினேன். கையில் பிடித்திருந்த கத்தி நழுவி கீழே விழுந்துவிட்டது.
கத்தியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடத் தொடங்குவதற்குள் காவல்காரன் என்னை நெருங்கிப் பிடித்துவிட்டான். தரையில் விழுந்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டான். என் உடல் நடுங்கியது. என்னை விட்டுவிடும்படி அழுதுகொண்டே அவனிடம் கெஞ்சினேன். அவன் விடவில்லை. என்னை உறுதியாகப் பற்றிக்கொண்டான். அவன் முகத்தில் இரக்கமே இல்லை.
நீண்ட நேர கெஞ்சுதலுக்குப் பிறகு, “சரி, போய்த்தொலை. படிக்கிற புள்ளைங்கறதுக்காக பாக்கறன். இல்லைன்னா நடக்கறதே வேற” என்று திட்டி அங்கிருந்து ஓடிப் போகுமாறு சொன்னான். நான் தயங்கித்தயங்கி கத்தியைக் கொடுக்கும்படி கேட்டேன். அவன் கோபம் உடனே பலமடங்காகி விட்டது. “ஒழுங்கா ஓடிப் போயிடு. கத்தி கித்தின்னு கேக்கற கதையே வேணாம்” என்று மீசையை முறுக்கிக்கொண்டு சொன்னான். எனக்கு அக்கணத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அச்சத்தில் என் உடல் நடுங்கியது.
வீட்டுக்குத் திரும்பி அம்மாவிடம் நடந்ததையெல்லாம் சொன்னேன். நான் நினைத்ததுபோலவே அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. முதுகில் அடிகள் விழுந்தன. நான் சொல்வது எதையும் அவர் கேட்கும் மனநிலையிலேயே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் நடந்த விவரத்தைக் கேட்டார். மீண்டும் கோபத்தில் கொதித்து “மத்த பசங்களெல்லாம் ஓடிவரும்போது, ஒனக்கென்னடா கேடு” என்று முகத்திலேயே குத்த வந்தார்.
”வா
எங்கூட. வந்து யாரு அந்தக் காவல்காரன்னு காட்டு” என்று என்னோடு ஏரிக்குப் புறப்பட்டார். வேகாத வெயிலும் நாங்கள் இருவரும் மீண்டும் வேலங்காட்டுக்குச் சென்றோம். அதற்குள் அவன் போய்விட்டிருந்தான். அவன் இருக்குமிடத்தை விசாரித்துக்கொண்டு தேடிப் போனோம். அம்மாவுக்கும் அவனுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை நடந்தது.
என் பதின்ம வயதில் நடந்தது இந்நிகழ்ச்சி. ஏராளமான பல அனுபவங்களோடு ஒன்றாகக் கலந்து ஆழ்நெஞ்சில் உறைந்துபோய் விட்டது. எவ்வளவோ பால்யகால நினைவுகளை நான் எழுதியதுண்டு. அப்போதுகூட இந்த அனுபவத்தை எழுதியதில்லை. எழுதும்படியான ஓர் உத்வேகமோ அல்லது இணைப்போ கிடைக்காமல் ஓர் அனுபவத்தை ஒருபோதும் நான் எழுதியதில்லை.
ஒருநாள் வேலையின் பொருட்டு அதிகாலையிலேயே கிளம்பினேன். இரண்டு நகரங்களிடையே தொலைபேசிக் கேபிளைப் புதைத்து இணைப்பை உருவாக்குவதுதான் என் வேலை. பள்ளமெடுப்பவர்கள் காலையிலேயே வேலையிடத்துக்கு வந்துவிடுவார்கள். வெட்டுவதற்கான தடவழியை அவர்கள் வருவதற்கு முன்னால் நாம் சென்று அடையாளப்படுத்தி வைக்கவேண்டும். அதற்காக நானும் ஊழியர்களும் சென்றுவிட்டோம்.
சில இடங்களில் நேர்க்கோட்டுத்தடத்தின் வழியைக் கணிக்கமுடியாதபடி புதர் மண்டிக் கிடந்தது. அவற்றை ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி நீக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் வேலையை முடிப்பதற்காக நான் காத்திருந்தேன். ஊழியர்களின் கைகள் வேகவேகமாக இயங்கி அந்தப் புதர்களை இருபுறமும் வெட்டி வீசியபடி செல்வதைக் கவனித்துக்கொண்டே இருந்தேன். நீண்ட கத்தியால் வெட்டுப்பட்டு பச்சைப்பசேலென கிளைகளும் தழைகளும் இருபுறமும் சிதறி விழுந்தன. இலைகளின் பச்சைமணம் மூக்கைத் தொட்டது. கத்திவெட்டின் சத்தம் கேட்டது. வேகவேகமாக ஏறியிறங்கும் கத்தியின் அசைவையும் சத்தத்தையும் கவனிக்கக் கவனிக்க சட்டென எங்கள் ஊர் ஏரிக்குள் வேலங்காட்டில் விறகு வெட்டி கத்தியைப் பறிகொடுத்த அனுபவம் மேலெழுந்து வந்தது. அசைவுகளைப் பார்க்கும்தோறும் நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக மனத்தில் விரிந்தன. அந்த விரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் உடைந்துவிடுமோ என்று அஞ்சினேன். ஒரு சிறு பறவையென மாறி நானே எங்கோ பறப்பதுபோல இருந்தது.
ஊழியர்கள் வேலையை முடித்து கரையேறியதும் வழித்தடத்துக்கான இடக்குறிப்புகளை அங்கங்கே அடையாளம் செய்துகொடுத்து முடித்தேன். மனம் முழுதும் அந்தக் கத்திச்சம்பவத்தின் பக்கம் திரும்பிவிட்டது. பேசாமல் வருவதைக் கண்டு ஊழியர்கள் திகைத்து “என்ன சார்?” என்று கேட்டார்கள். நான் “ஒன்றுமில்லை” என்பது போல புன்னகையோடு தலையசைத்துவிட்டு என் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தேன். கதையை ஆணின் அனுபவமாக இல்லாமல் பெண்ணின் அனுபவமாக மாற்றி யோசிக்கத் தொடங்கியதுமே கதையின் முதல் வரி வந்து விழுந்துவிட்டது. அன்றும் மறுநாளுமாக உட்கார்ந்து அக்கதையை எழுதிமுடித்தேன். கதை வழக்கமான கதைகளின் நீளத்தைவிட கூடுதலாகிவிட்டது. அத்தனை நீண்ட வடிவம் கொண்ட கதைக்கு அன்றைய சிறுபத்திரிகையில் இடம் கிடைக்கவில்லை. இரு பகுதிகளாகப் பிரித்து வெளியிடலாம் என்று தீபம் இதழில் சொன்னார்கள். ஆயினும் அது நடக்கவில்லை. நான் திரும்ப வாங்கிக்கொண்டேன். வேறு எந்த இதழுக்கும் நான் முயற்சி செய்யவில்லை. நேரிடையாக என் முதல் தொகுதியில் அக்கதை இடம்பெற்றது.
என் மனத்தை எப்போதும் திறந்துவைத்திருக்கிறேன். ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு காட்சி அல்லது ஒரு அசைவு என்னைத் தூண்டிவிடும்போதெல்லாம் மின்னேற்றம் பெற்றம் காந்தத் துண்டென மாறிவிடுகிறது மனம். அதுவே கதை பிறக்கும் கணம்.
எழுத்தாளனாக வாழும் கனவு என் நெஞ்சில் எழுந்த கணம் மிகமுக்கியமானதொரு தருணம். அந்தக் கனவே எனக்குச் சிறகுகளை அளித்தது. பறந்து திரியும் சுதந்திரத்தில் திளைக்கவைத்தது. வானத்தை, கடலை, மானுடக்கூட்டத்தை, இயற்கையை வெவ்வேறு கோணங்களில் பார்க்க வைத்தது. நான் நின்று பார்த்த கோணத்தில் எனக்குத் தெரிந்த வாழ்க்கையே என் கதைகள். என் கதைகளில் நானும் இருக்கிறேன். மற்றவர்களும் இருக்கிறார்கள். வானமும் கடலும் ஆறுகளும் அருவிகளும் செடிகொடிகளும் கூட இருக்கின்றன.