Home

Monday 30 January 2023

ஆவணப்பெட்டகம் - புத்தக அறிமுகக்கட்டுரை


மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தொழிற்சங்கத் தோழரான ஆர்.பட்டபிராமன் தமிழில் எழுதி வெளிவந்த ’நேருவின் மரபு’ என்னும் புத்தகம் ஒரு போராளியாக சுதந்திரப்போராட்டத்தில் நேரு ஆற்றிய  பங்களிப்பையும் ஒரு பிரதமராக சுதந்திரமடைந்த தாய்நாட்டை உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயர்த்துவதற்காக ஆற்றிய பங்களிப்பையும் பற்றிய தெளிவை அளித்தது. நேருவின் சாதனைகளை இளையோர் அறிந்துகொள்ள அன்று அது ஒரு கைவிளக்காக இருந்தது. அதையடுத்து 1940-1964 கால இடைவெளியில் நேருவும் இந்திராகாந்தியும் எழுதிப் பகிர்ந்துகொண்ட கடிதங்களின் தொகைநூலாக ஆங்கிலத்தில் வெளிவந்த      TWO ALONE TWO TOGETHER  என்னும் நூல் நேருவுக்கு இருந்த பற்பல துறைகள் சார்ந்த அக்கறைகளையும் ஈடுபாடுகளையும்  கனவுகளையும் வெளிப்படுத்தியது. கசப்பும் வெறுப்பும் மண்டிய இன்றைய சூழலில் கசப்புகளுக்கு அப்பால் கடந்து சென்று மானுடத்தை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே வாழ்க்கைமுழுதும் உழைத்து மறைந்த அன்றைய மகத்தான ஆளுமைகளை நினைத்துக்கொள்வதும் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதும் படிப்பதும் மிகவும் அவசியமாகின்றன.

குத்துக்கல்லும் சாய்வு நாற்காலியும்

  

கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேண்டீனில் இட்லி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து நிற்கும் பத்ரி நாராயணன் என்கிற பெரியவர் புத்தகக்கடையை வேடிக்கை பார்க்கிறார். கல்கியின் மரணத்தையொட்டி ஆனந்தவிகடன் அவரைப்பற்றிய அஞ்சலிக்கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. அதைத் தெரிவிக்கும் விளம்பரத்தாட்கள் கடைகளில் தொங்குகின்றன. செய்தித்தாள் விற்கும் கடைவாசலில் விற்பனைக்குரிய இதழ்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 1955ஆம் ஆண்டுக்குரிய புதிய காலண்டர்கள் வேறொரு வரிசையில் விற்பனைக்குத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. தன் சொந்த ஊரான ஸ்ரீராஜபுரத்துக்குச் செல்லும் ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறார்.

Sunday 22 January 2023

தியாகத்தின் பாதை

  

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 09.01.1915 அன்று திரும்பி வந்தார். கோகலேயின் சொல்லை ஏற்று இந்திய மக்களைப் புரிந்துகொள்வதற்காக இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்தார். பிறகு அவுரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்ப்ராணுக்குச் சென்று போராட்டத்தைத் தொடங்கினார். அகிம்சைவழியிலான அவருடைய சத்தியாகிரகப் போராட்டத்தை ஒரு புதுமையான அணுகுமுறையாக நாடே உற்று நோக்கியது. மெல்ல மெல்ல அந்த அணுகுமுறைக்கு ஆதரவு பெருகியது.

சமூகத்தின் பார்வையும் இலக்கியத்தின் பார்வையும்

  

உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை, ஒருவராலும்  வரையறுத்துச் சொல்லமுடியாத அம்சமாக காமம் விளங்குகிறது. ஒரே நேரத்தில் எள்முனையளவு சிறிதாகவும் மலையளவு பெரிதாகவும் தோன்றி மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது காமம்.  சூறாவளியென சுழற்றியடிக்கும் அதன் விசையிலிருந்து ஒருசிலர் எப்படியோ தப்பித்துவிடுகிறார்கள். இன்னும் ஒருசிலர் அந்த விசையில் சிக்கி, அது இழுத்துச் செல்லும் திசையிலெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு கரையோரமாக ஒதுங்கி வாழ்நாளைக் கழிக்கிறார்கள்.

கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்

  

குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது.  என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது.  ”நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”, “நீயாகியர் என் கணவன், ஞானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே”  என்பவைபோன்ற வரிகள் ஊட்டிய மன எழுச்சியால் என் மனச்சித்திரம் மேலும்மேலும் அழுத்தம் பெற்றிருந்தது.  ஆனால், எதார்த்த உலகில், எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கணவன்மார்களிடம் அடிவாங்கிய வேதனையில் ஒப்பாரிவைக்கிற, கலங்கிய கண்களோடு கைப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அகால வேளையில் தாய்வீட்டுக்கு ரயிலேறிச் செல்கிற பெரியம்மாக்களையும் சின்னம்மாக்களையும் அத்தைகளையும் பார்த்தபோது இச்சித்திரம் சிதைந்துவிட்டது. லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் இருந்த முரண் என்னை அசைத்துக் கீழே தள்ளியது. அக்காலத்தில் நான் படிக்க நேர்ந்த மூன்று சிறுகதைகள் இந்த முரண் எவ்வளவு கூர்மையானது என்பதை எனக்கு உணர்த்தின.  ஒன்று மெளனியின் சிறுகதை.  இன்னொன்று புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை.  மூன்றாவது சிறுகதை சுஜாதா எழுதியது.

Sunday 15 January 2023

நயனக்கொள்ளை - சிறுகதை

  

காலை நடைப்பயிற்சியை பூங்காவில் முடித்துவிட்டு திரும்பும் வழியில் வழக்கம்போல அப்பாவைப் பார்த்து உரையாடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அருணாசலம் மாமா. ஒரு காலத்தில் இரண்டு பேரும் வருஷக்கணக்காக ஒன்றாக நடந்து சென்றவர்கள். ஆறு வருஷங்களுக்கு முன்பாக பக்கவாதத்தால் அப்பா பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. நடப்பதற்கு மாமா மட்டும் தனியாகச் செல்வார். முடித்துவிட்டு திரும்பிவரும் சமயத்தில் அப்பாவிடம் பேசுவதற்காக வீட்டுக்கு வருவார். இரண்டு பேரும் நேரம் போவதே தெரியாமல் அரசியலிலிருந்து சினிமா வரைக்கும் பேசுவார்கள்.

விஸ்வநாததாஸ் : நாடகங்களும் நாட்டுப்பற்றும்

  

இந்தியாவில் நிலையாகத் தங்கி, வாழ்நாள் முழுதும் தாய்நாட்டுக்குத் தொண்டாற்றும் எண்ணத்துடன் காதியடிகள் தன் மனைவியுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு 09.01.1915 அன்று பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கினார். இந்தியாவுக்கு வந்ததுமே ஒரு கத்தியவார் சட்டை, தலைப்பாகை, பஞ்சக்கச்சமாக வைத்துக் கட்டப்பட்ட வேட்டி ஆகியவற்றை அணியத் தொடங்கிவிட்டார். கோகலேயின் ஆலோசனையின் பேரில் இந்தியாவின் சிக்கல்களை முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு நாடு தழுவிய ஒரு பெரிய பிரயாணத்தை உடனடியாக மேற்கொண்டார். பல நகரங்கள் வழியாக 17.04.1915 அன்று சென்னைக்கு வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்றைய தலைவர்கள் பலரும் அவரை வரவேற்று தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி வாழ்த்திப் பேசினர். பயணத்தின் ஒரு பகுதியாக 01.05.1915 அன்று தில்லையாடிக்குச் சென்றார் காந்தியடிகள். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து அங்கு வாழ்ந்துவந்த சத்தியாகிரகிகளின் குடும்பங்களைச் சந்தித்து உரையாடினார்.

Tuesday 10 January 2023

நயனக்கொள்ளை - முன்னுரை

  

ஒருமுறை அருணகிரிநாதர் கனவில் முருகன் தோன்றினார் என்றும்  ஒரு புதிய பாடலைப் பாடுவதற்கான தொடக்கம் சரியாக அமையாது கலக்கத்தில் மூழ்கியிருந்த அருணகிரிநாதருக்கு ’முத்து’ என்றொரு சொல்லை எடுத்துக் கொடுத்தாரென்றும், அதையே தொடக்கச்சொல்லாகக் கொண்டு அவர் ’முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண ‘என்று பாடலை எழுதத் தொடங்கிவிட்டதாகவும் ஒரு நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.

முதல் பெண்கள்

 

படித்த சிறுகதைகளை அடிக்கடி நினைத்துக்கொண்டு, அதிலேயே திளைத்திருப்பேன். அப்படி ஒரு பழக்கம் இளமையிலிருந்தே தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் நடைப்பயிற்சித் தருணங்களிலும் தனியாக பயணம் செய்யும் தருணங்களிலும்  என் நெஞ்சில் கதைகளின் நினைவுகள்தான் ஓடிக்கொண்டே இருக்கும். மொத்த சிறுகதையையும் ஒரு நாடகக்காட்சியாக மாற்றி, அதை நெஞ்சுக்குள் அரங்கேற்றுவேன். சில சமயங்களில் அந்தக் கதை நிகழும் களம் சார்ந்து பிறர் எழுதிய கதைகளையும் நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்வேன். எல்லாமே ஒரு விளையாட்டைப்போல நிகழும்.

Tuesday 3 January 2023

குற்றவாளிகளின் மறுபக்கம்

 

ச.து.சு.யோகியார் எழுதிய எனது சிறைவாசம் புத்தகம் கிடைக்குமா என்றுதான் நூலகத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஆறேழு அடுக்குகளில் அரைமணி நேரமாக தேடியபோதும் அந்தப் புத்தகம் என் கண்ணில் தென்படவில்லை. அதற்கிடையில் நூலகப் பொறுப்பாளர் இரண்டுமுறை எனக்கு அருகில் வந்து மெல்லிய குரலில் நூலக நேரம் முடியவிருப்பதை நினைவூட்டிவிட்டுச் சென்றார்.  அதற்குமேல் தேடல் வேட்டையைத் தொடர்வதில் பொருளில்லை என்று எனக்கும் தோன்றத் தொடங்கியது.  திரும்பிவிடலாம் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அடுக்கிலிருந்த ஒரு புத்தகத்தின் மீது என் பார்வை படிந்தது. ஆறுமாதம் சிறையில் இருந்தேன் என்பது அப்புத்தகத்தின் தலைப்பு. நான் தேடிய சிறைவாசம் வேறு. கிடைத்த சிறைவாசம் வேறு என்றபோதும், அதை எடுத்துக்கொண்டு நூலகரிடம் வந்து பதிவிடுவதற்காகக் கொடுத்தேன். ”கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக யாருமே எடுக்காத புத்தகத்தை எடுத்து வந்திருக்கிறீர்கள்” என்று புன்னகைத்தபடியே அந்த நூலகர் பதிவிட்டுக் கொடுத்தார்.

அ.மாசில்லாமணிப்பிள்ளை : உண்மையும் ஊக்கமும்

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலத்திலிருந்தே காந்தியடிகள் எளிய கதராடைகளைப் பயன்படுத்துவதை சமத்துவத்தின் அடையாளமாகவும் தேசியத்தின் உருவகமாகவும் முன்வைத்து உரையாடி வந்தார்.  முழுமனத்துடன் கதர்ப்பயன்பாட்டை ஏற்றுக்கொண்டு சத்தியாகிரக வழியில் போராடுவதன் வழியாக மட்டுமே சுதந்திரத்தை அடையமுடியும் என்பதை அவர் உறுதியாக நம்பினார்.   கதர்ப்பயன்பாட்டைப் பரவலாக்கும் விதமாக பல தன்னார்வலர்களையும் தொண்டர்களையும் நாடெங்கும் உருவாக்கினார். நாடு முழுதும் ஒவ்வொரு தொண்டரும் கதராடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் கைராட்டையில் நூல்நூற்று தன் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

அழகிரிசாமி வந்திருக்கிறார்

  

நவீன தமிழ்ச்சிறுகதையாசிரியர்களில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி ஆகியோரின் அடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் எழுத்தாளராக மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். அவருக்கு இசையிலும் கம்பராமாயணத்திலும் எல்லையற்ற ஆர்வம் இருந்தது. காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோருடன் அவர் இறுதிவரைக்கும் தொடர்பில் இருந்தார். பாரதியார், தியாகராஜர், கவிமணி தேசியவினாயகம் பிள்ளை போன்றோர் எழுதிய சில பாடல்களை ஸ்வரப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தைப் பதிப்பித்தார். கம்பராமாயணத்தின் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். மேடையில் நடிக்கத்தக்க அளவில் கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் ஆகிய நாடகங்களை எழுதியிருக்கிறார். கார்க்கி நூல்களை தமிழில் மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். டி.கே.சிதம்பரம் முதலியாரின் வழியில் சிறந்த ரசனைக்கட்டுரைகளையும் எழுதினார். 1942இல் எழுதத் தொடங்கிய அவர் 1970இல் மறைவது வரைக்கும் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.