Home

Sunday, 15 January 2023

விஸ்வநாததாஸ் : நாடகங்களும் நாட்டுப்பற்றும்

  

இந்தியாவில் நிலையாகத் தங்கி, வாழ்நாள் முழுதும் தாய்நாட்டுக்குத் தொண்டாற்றும் எண்ணத்துடன் காதியடிகள் தன் மனைவியுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு 09.01.1915 அன்று பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கினார். இந்தியாவுக்கு வந்ததுமே ஒரு கத்தியவார் சட்டை, தலைப்பாகை, பஞ்சக்கச்சமாக வைத்துக் கட்டப்பட்ட வேட்டி ஆகியவற்றை அணியத் தொடங்கிவிட்டார். கோகலேயின் ஆலோசனையின் பேரில் இந்தியாவின் சிக்கல்களை முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு நாடு தழுவிய ஒரு பெரிய பிரயாணத்தை உடனடியாக மேற்கொண்டார். பல நகரங்கள் வழியாக 17.04.1915 அன்று சென்னைக்கு வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்றைய தலைவர்கள் பலரும் அவரை வரவேற்று தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி வாழ்த்திப் பேசினர். பயணத்தின் ஒரு பகுதியாக 01.05.1915 அன்று தில்லையாடிக்குச் சென்றார் காந்தியடிகள். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து அங்கு வாழ்ந்துவந்த சத்தியாகிரகிகளின் குடும்பங்களைச் சந்தித்து உரையாடினார்.




தரங்கம்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, தாழ்த்தப்பட்டோரின் சார்பாக படித்துக் கொடுக்கப்பட்ட வரவேற்பில் அவர்கள் எடுத்துரைத்த குறைகளைக் கேட்டு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினார் காந்தியடிகள்.  தாழ்த்தப்பட்டோர் அனைவரும் உயர்ந்து சமமான உரிமைகளைப் பெறும் வரை, அவர்களுக்காக அனைவரும் பாடுபடவேண்டும் என்று தம் உரையில் குறிப்பிட்டார். அடுத்து மாயவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சமயத்திலும் தாழ்த்தப்பட்டோர் கோரிக்கையை முன்வைத்து மேலும் சில கருத்துகளைத் தெரிவித்தார். ’பண்டிதனோடும் பாமரனோடும் வேறுபாடின்றி சமநிலைப்பார்வையோடு பழகுபவனே உண்மையான பிராமணன்’ என்னும் கீதையின் வரியை நினைவூட்டினார். பிராமணர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் சமமாகப் பழகத் தொடங்கினால், மற்ற வகுப்பினரும் அவர்களைப் பின்பற்றி பழகத் தொடங்குவார்கள் என்றும் தங்களுடைய தற்காலப் பெருமை பூர்வீகத் தவவலிமையால் தலைமுறைக் கொடையாகக் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால், அவர்களே தேசத்தின் அழிவுக்குக் காரணமாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். தீண்டாதார்கள் என ஒரு வகுப்பே இல்லாத அளவுக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவருடைய உரை செய்தித்தாட்கள் வழியாக தமிழகமெங்கும் பரவி விவாதத்தைத் தொடங்கிவைத்தது. கூத்து, நாடகம், பாட்டு என பல தளங்களில் மனம் போன போக்கில் செயல்பட்டபடி மதுரையில் வசித்துவந்த துடிப்பான முப்பது வயதையொட்டிய இளைஞரொருவர் அச்செய்தியைப் படித்துவிட்டு காந்தியடிகள் மீது நாட்டம் கொண்டார். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக எழுந்த காந்தியடிகளின் குரல் அவரை உடனடியாக ஈர்த்தது. சிறுவதிலேயே தீண்டாமையின் கசப்பான அனுபவங்களுக்கு ஆளானவர் அவர். பிறந்த ஊரான சிவகாசியில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவைக் காணச் சென்ற தருணத்தில் ஒருமுறை நண்பர்கள் அளித்த உற்சாகத்தின் விளைவாக தேரில் ஏறி நின்று பாட்டு பாடினார். அதைக் கண்ட ஊர்ப்பெரியவர்கள் தேருக்குத் தீட்டாகிவிட்டது என்று சொல்லி, அதை நீரூற்றி கழுவ ஏற்பாடு செய்தனர்.  எங்கிருந்தோ ஓடோடி வந்த அவருடைய தந்தையார் ஊராரிடம் மன்னிப்பு கேட்டு அவரை மீட்டார். எங்கெங்கும் கசப்பான அனுபவங்களே காத்திருக்கும் சூழலில் காந்தியடிகளின் ஆதரவுக்குரல் அவருக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்தது. அக்கணமே காந்திய வழியில் நடப்பதையே தன் வாழ்நாள் பணியாக வரையறுத்துக்கொண்டார் அந்த இளைஞர். அவர் பெயர் விஸ்வநாததாஸ்.

நல்ல குரல்வளம் கொண்ட விஸ்வநாததாஸ் தென்பாண்டிச் சீமையில் பல ஊர்களில் மேடை நாடகங்களை அரங்கேற்றினார். தொடக்கத்தில் மதுரையில் இயங்கி வந்த சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நாடகக்குழுவில் நடித்த அனுபவப்பின்னணியோடு பல குழுக்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்தார். மக்களிடையில் அவருக்கு ஆதரவு பெருகியதும், சொந்தமாகவே ஒரு குழுவைத் தொடங்கி நடத்தத் தொடங்கினார். நாடகத்தில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் உரையாடல்களையும் பாடல்களையும் பெரும்பாலும் அவரே அந்தந்த நேரத்துக்குத் தகுந்தபடி உருவாக்கிக்கொண்டார்.  பாத்திரத்துக்குரிய உரையாடலுக்கு அப்பால் சென்று, ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகளைச் சாடும் சொற்களையும் காந்தியக்கொள்கைகளுக்கு ஆதரவான சொற்களையும் தன் உரையாடலுடன் இணைத்துக்கொள்ளும் போக்கினைக் கடைபிடித்தார். நாடகத்தருணங்களுடன் பொருந்திப் போகும் நுட்பங்களுக்கெல்லாம் அவர் காத்திருந்ததில்லை. மையத்திலிருந்து விலகிச் செல்லும் அப்போக்கை பார்வையாளர்களும் பிழையாகக் கருதவில்லை. அவருடைய குரலும் பாட்டும் அந்த அளவுக்கு ஈர்ப்புமிக்கதாக இருந்தன.

சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் நடத்தப்படும் விதம் குறித்து அவருக்குள் ஆறாத துயரமிருந்தது. அதை வெளிப்படுத்தும் விதமாக அவரே ஒரு பாடலை எழுதி வைத்திருந்தார்.

”தாழ்த்தப்பட்ட சகோதரரை தாங்குவாருண்டோ

தாங்குவாருண்டோ - மண்ணில்

ஓங்குவாருண்டோ

வீழ்த்தப்பட்டு வாடுகின்றார்

வெம்பியே திண்டாடுகின்றார்

பாழ்த்துமனப் பாவியர் செய் பாதகத்தாலே

பாதகத்தாலே

இந்த மேதினி மேலே

இருக்கவும் இடமில்லை நிற்கவும் நிழலில்லை

என நொந்து வாடியழுகிறார்”

என்று தொடங்கும் அப்பாடல் மூன்று கண்ணிகளை உடையது. மேடையில் அவர் தோன்றி நடிக்கும் ஏதேனும் ஒரு காட்சியில் அந்தப் பாட்டை மனமுருகப் பாடி பார்வையாளர்களின் நெஞ்சில் அக்கருத்து பதியும்படி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் விஸ்வநாததாஸ்.

வெகுகாலமாக காந்தியடிகளை நேரில் சந்திக்கவேண்டும் என விரும்பிய விஸ்வநாததாஸின் ஆசை 27.03.1919 அன்று நிறைவேறியது. மதுரை வழியாக அன்று காந்தியடிகள் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார். ரயில்நிலையத்திலிருந்து அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எஸ்.இராஜகோபால் இல்லம் வரைக்கும் அலங்கரிக்கப்பட்ட தெருக்கள் வழியாக பொதுமக்கள் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அன்று மாலை மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சத்தியாகிரகம் பற்றியும் நிர்மாணப்பணிகள் பற்றியும் காந்தியடிகள் தன் உரையில் எடுத்துரைத்தார். அச்செய்திகளை தொண்டர்களே கிராமங்கள் வரைக்கும் கொண்டுசென்று பரப்பவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் சில பக்திப்பாடல்களையும் தேசியப்பாடல்களையும் பாட விஸ்வநாததாஸுக்கு அனுமதி கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியோடு விஸ்வநாததாஸ் ஏற்கனவே பாடிப்பாடி பயிற்சி பெற்ற பாடல்களை அன்று காந்தியடிகளின் முன்னிலையில் பாடினார். மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய ‘காந்தியோ பரம ஏழை, சந்நியாசி’ என்னும் பாடலும் அவற்றில் ஒன்று. விஸ்வநாததாஸின் வசீகரமான குரல்வளம் காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் விஸ்வநாததாஸை அருகில் அழைத்து பாராட்டினார் காந்தியடிகள். அவருடைய குரலினிமையில் மனம் பறிகொடுத்த காந்தியடிகள், விஸ்வநாததாஸை சுதந்திரப் போராட்டத்தின் கருத்துப் பிரச்சாரத்துக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, நாடக நடிகர் என்பதால் ஆடம்பரமான பட்டுடைகளோடும் காதிலும் கழுத்திலும் விரல்களிலும் தங்க ஆபரணங்களோடும் காணப்பட்ட அவருடைய தோற்றம் மக்களை அணுக பெரிதும் தடையாக இருக்குமென்றும் முடிந்தவரை எளிமையாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும் எடுத்துரைத்தார். அக்கணமே தான் அணிந்திருந்த ஆபரணங்களை அகற்றி காந்தியடிகளிடமே நன்கொடையாக அளித்துவிட்டார் விஸ்வநாததாஸ். வீட்டுக்குத் திரும்பியதும் பட்டாடைகளை விலக்கிவிட்டு கதராடைகளை அணியத் தொடங்கினார்.

அச்சந்திப்பையடுத்து, விஸ்வநாததாஸ் தன் நாடகங்களில் இடையிடையே தேசபக்திப்பாடல்களையும் கதர்ப்பிரச்சாரப்பாடல்களையும் பாடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

”தேசாபிமானிகளே – உண்மை

தெய்வீக ஞானிகளே – தமிழ்

பாஷாபிமானிகளே – ஜென்மப்

பாரத தியானிகளே”

என்று தொடங்கும் பாடலும்

“கதர்க்கப்பல் தோணுதே

கரம்சந்தர மோகனதாஸ் காந்தி இந்திய சுதேச

கதர்க்கப்பல் தோணுதே

அதற்கப்பால் ஞானாகாசம்

அதிலே பாரதவாசம்

இதற்குள் சிவப்ரகாசம்

இனிநமக்குச் சந்தோசம்”

என்று தொடங்கும் பாடலும் மிகவேகமாக மக்களிடையில் பரவின.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான குரல்களும் சுதந்திரத்தை வேண்டும் குரல்களும் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கின. அத்தகு குரல்களை ஒடுக்கவும் ஆங்கிலேய அரசுக்கு எதிரான சதிகளை முறியடிக்கவும் செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய ரெளலட் என்பவர் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சந்தேகத்துக்குரிய ஒருவரை இரண்டாண்டுகள் வரைக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணை எதுவுமில்லாமல் சிறையில் அடைக்க அந்தச் சட்டம் அரசுக்கு அதிகாரமளித்தது. இச்சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் ரெளலட் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. 13.04.1919 அன்று அமிர்தசரஸில் ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை டயர் என்னும் ராணுவ அதிகாரியின் குழு துப்பாக்கியால் சுட்டது. தோராயமாக 380 பேர் மரணமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலைச் செய்தி நாடெங்கும் பரவி அனைவரையும் கொதித்தெழ வைத்தது. பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் படித்துவிட்டு மனம் கொதித்தார் விஸ்வநாததாஸ். படுகொலையைக் கண்டிக்கும் விதமாக அவரே பாடலொன்றை எழுதி கிராமங்களுக்குச் சென்று பாடினார்.

”கொடுமை கொடுமை கொடுமையே

பஞ்சாபில் நடந்த கொடுமை கொடுமையே

அடிமையாக அவதிப்பட்டோம்

நிர்வாணமாய் பெண்களை நிறுத்தி

நினைக்கமுடியாத அவமானப்படுத்தி

நெஞ்சால் கடத்தி வீதி கிடத்தி

நிசிரச் சவுக்கால் அடித்தான் துரத்தி

பட்டோம் பட்டோம் துயரமென்றே

பார்லிமெண்டார் கூப்பிட்டுச் சொன்னோம்

சுட்டேன் சுட்டேன் சுட்டேன் என்றான்

சுடுமருந்துள்ள மட்டும் சுட்டேன் என்றான்

பஞ்சாப் படுகொலை இது பாரில் மிகப்பெரும் கொடுமை”

என்று தொடங்கும் அவருடைய பாடலுக்கு மக்களிடையில் நல்ல வரவேற்பு இருந்தது. அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடும்படி கேட்டு துயரம் தாங்காமல் பெருமூச்சு விட்டனர். அவருடைய பக்திப்பாடல்களுக்கு இணையான மதிப்பும் செல்வாக்கும் அவருடைய விழிப்புணர்வுப்பாடல்களுக்கும் கிடைத்தன.

விஸ்வநாததாஸ் நடிக்கும் நாடகங்களுக்கு பொதுமக்களிடையில் வரவேற்பு பெருகியது. கூட்டம்கூட்டமாக மக்கள் திரண்டு வந்து அரங்கை நிறைத்தனர். அவர் பாடும் ஆங்கிலேய அரசு எதிர்ப்புப்பாடல்களுக்காகவே அந்தக் கூட்டம் சேர்ந்தது. நாளுக்கு நாள் பெருகும் கூட்டத்தைக் கண்டு ஆட்சியாளர்கள் சற்றே கலவரம் கொண்டனர். விஸ்வநாததாஸை அழைத்து அரசுக்கு எதிராக அவர் பாடும்  பாடல்களைப் பாடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அன்று இரவு நடைபெற்ற நாடகத்தில் அவர் வழக்கமான பாடல்களைத் தவிர்த்து முற்றிலும் புதிதாக ஒரு பாடலை இயற்றிப் பாடினார்.

”ஆங்கிலப் பேய்கள் திரண்டு கொண்டாடுவது லண்டனிலே

ஓங்கும் சுயாட்சி படைகண்டு

திமிறி வெறி ஏறுது மண்டையிலே

டயரென்ற பேர் படைத்த ஒரு பேய்

டம்பமாய் பேசுதங்கே

படாரென்ற உத்தரவை சர்ச்சில் போர்

போட்டு மிரட்டுதங்கே

லண்டனை ஆட்டிப்படைக்குதங்கே

பாரெட்டுத் திக்கும் போற்றும் மகாத்மாவை

பார்த்தே நடுங்குதிங்கே”

ஒன்றை வேண்டாம் என்றால் இன்னொன்றைப் பாடுவது, அதையும் வேண்டாமென்றால் மற்றொன்றைப் பாடுவது என்னும் தந்திரத்தைக் கையாளும் விஸ்வநாததாஸ என்ன செய்வது என்று புரியாமல் காவலர்கள் தொடக்கத்தில் தடுமாறினர். ஒருமுறை அவரை நேரில் சந்தித்து நாடகத்துக்குப் புறம்பாக எதையும் பாடவோ பேசவோ கூடாது என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

அன்றைய சூழலில் பாஸ்கரதாஸ் ஆங்கிலேயர் ஆட்சியை அங்கதத் தொனியுடன் விமர்சித்து எழுதிய கொக்கு பாடல் எல்லா மேடைகளிலும் பாடப்பட்டு வந்தது. பாரதியாரின் பாப்பா பாட்டின் சாயலில் அமைந்த அப்பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

கொக்கு பறக்குதடி பாப்பா நீயும்

கோபமின்றி கூப்பிடடி பாப்பா

கொக்கென்றால் கொக்கு -நம்மைக்

கொல்லவந்த கொக்கு

எக்காளம் போட்டு நாளும் இங்கே

ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா

வர்த்தகம் செய்யவந்த கொக்கு -நமது

வாழ்வைக் கெடுக்கவந்த கொக்கு

அக்கறைச் சீமைவிட்டு வந்து -கொள்ளை

அடித்து கொழுக்குதடி பாப்பா

தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு -அது

தின்ன உணவில்லாத கொக்கு -பொல்லா

மாமிச வெறிபிடித்த கொக்கு -இங்கே

வந்து பறக்குதடி பாப்பா

என்று பல கண்ணிகளைக் கொண்ட அப்பாடல் விஸ்வநாததாஸின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலை எப்படியாவது தன் நாடகத்துக்குள் கொண்டுவரவேண்டுமென்று திட்டமிட்டார். விஸ்வநாததாஸ் அரங்கேற்றிய நாடகங்களில் மிகவும் புகழ் பெற்ற நாடகம் வள்ளித்திருமணம். அந்நாடகத்தில் வள்ளி தினைப்புனம் காக்கும் காட்சி உண்டு. தினைக்கதிர்களைத் தின்ன வரும் பறவைகளை விரட்டியடிக்க கவண்கல் எறியும்போது ஆலோலம் பாடுவது வழக்கம். ஆலோலப்பாடலைப் பாடுவதுபோல தொடங்கிய நடிகர் ஆரம்பவரிகளைக் கடந்ததும் பாஸ்கரதாஸின் கொக்கு பறக்குதடி பாப்பா பாடலைப் பாடத் தொடங்கிவிட்டார். அரங்கத்திலேயே அமர்ந்திருக்கும் காவலர்களை அக்காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயத்தில் கூடியிருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு நேரடி நடவடிக்கையில் இறங்கவும் அவர்கள் தயங்கினர். நாடகம் முடிவடையும் வரை காத்திருந்து பார்வையாளர்கள் அனைவரும் கலைந்து சென்ற பிறகு, விஸ்வநாததாஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அடுத்தநாள் காலையில் நீதிமன்ற விசாரணையில் அவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையைக் கேட்டு கிஞ்சித்தும் மனம் கலங்காதவராக சிறைக்குச் சென்றார் விஸ்வநாததாஸ். நாட்டின் விடுதலைக்காகச் செல்கிறோம் என்பதில் அவருக்குப் பெருமையாகவும் இருந்தது. ஆனால் நாடகம் நடத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவருடைய குடும்பம், பொருளாதார வலிமையை இழந்து தவிக்கத் தொடங்கியது. சிறையில் அவர் இருந்த ஆறுமாத காலத்தில் வெவ்வேறு தேதிகளில் நாடகம் நடத்துவதாகக் கொடுத்த வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற இயலாமல் போனது.

இந்திய சுதந்திரப்போராட்டம் நாடெங்கும் மெல்ல மெல்ல பரவி வேரூன்றத் தொடங்கியது. ரெளலட் சட்டத்தையும் ஜாலியன்வாலாபாக் படுகொலையையும் எதிர்க்கும் விதமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் புறக்கணிப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் புறக்கணிப்பது போன்ற செயல்கள் வழியாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அயல்நாட்டு ஆடைகளை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி, நாடெங்கும் சுதந்திர வேட்கையை உருவாக்கியது. வேகவேகமாக வளர்ந்து இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்த இவ்வியக்கத்தை, 05.02.1922 அன்று செளரிசெளரா என்னும் இடத்தில் சுதந்திரப்போராட்டக் குழுவுக்கும் காவல் துறைக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக, காந்தியடிகள் திடீரென்று நிறுத்திவைத்தார்.  அரசுக்கு எதிரான கட்டுரைகளை எழுதியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட காந்தியடிகளை 10.03.1922 அன்று காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்பாராத விதமாக அவருடைய உடல்நிலை குன்றியதன் காரணமாக 05.02.1924 அன்று அரசு அவரை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே இருந்தாலும் குறிப்பிட்ட தண்டனைக்காலம் முடியும் வரைக்கும் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை என்றும் தேச நிர்மாணப்பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்தார் காந்தியடிகள்.

1857இல் சிப்பாய்ப்புரட்சியில் எண்ணற்ற மனிதர்களைக் கொன்று குவித்த கர்னல் நீலுக்கு சென்னை நகரில் மவுண்ட் சாலையில் ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. சுதந்திரப்போராட்டத்தில் எல்லாத் தரப்பினரும் ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில் அனைவரும் நீல் சிலையை ஓர் அவமானச்சின்னமாகக் கருதினர். 1927இல் சோமயாஜுலு தலைமையில் அச்சிலையை அகற்றும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் திரண்டுவந்து அந்த சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவமானச்சின்னமாக விளங்கக்கூடிய ஒரு சிலையைக் கூட அகற்றமுடியாத சூழலை நினைத்து சீற்றம் கொண்ட விஸ்வநாததாஸ் தன் சீற்றத்தை ஒரு பாடலாக எழுதி மேடையில் பாடினார்.

”கருவம் மிகுந்த நீலன் – மகாக்

கேவலக் கொடுங்கோலன் - அவன்

உருவத்தை இந்த ஞாலம்

உடைத்தெறிவதுதான் சீலம்

தருமம் மிகுந்த சென்னையில்

சண்டாளனான நீலனின் சிலை

நிரந்தரமாய் நிற்பதோ? இந்

நிலையை நாம் சகிப்பதோ“

அவர் பாடிய பாடல் நாடகம் பார்க்கவந்த அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. மற்றொருமுறை பாடுமாறு குரலெழுப்பினர். அவர்களை நிறைவு செய்யும் வகையில் வேறு வழியின்றி விஸ்வநாததாஸ் மீண்டும் அப்பாடலைப் பாடினார். வழக்கம்போல நாடகக்காட்சி முடிவடைந்ததும் காவலர்கள் விஸ்வநாததாஸைக் கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். இப்படி நாடகக்காட்சிகளில் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் விதமாக பாடல்களைப் பாடினார் என்று குற்றம் சுமத்தி இருபத்தொன்பது முறை விஸ்வநாததாஸ் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு முறையும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரைக்கும் அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. அவர் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வறுமை சூழத் தொடங்கியது. அந்நிலையிலும் நாட்டுவிடுதலைக்காகவும் அரசுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதில் அவர் முன்னணியில் நின்றார்.

தமிழ் நாடக உலகில் வேறெந்த நடிகரும் சந்தித்திராத சிக்கலை விஸ்வநாததாஸ் சந்திக்க நேர்ந்தது. மேடையில் அவருக்கு இணையாக நடிக்க பெண்நடிகை ஒருவரும் முன்வரவில்லை. நல்ல நடிகர். நல்ல பாடகர். ஆயினும் சாதியில் தாழ்ந்தவர் என்பதைக் காரணமாகக் காட்டி அனைவரும் பின்வாங்கினர். ஆண்களே பெண்வேடமிட்டு நடித்த காலம் மறைந்து பெண்களே நேரிடையாக மேடையில் தோன்றி நடிக்கத் தொடங்கிவிட்ட காலத்தில் கூட அவருடன் இணைந்து நடிக்க ஒருவரும் தயாராக இல்லை. அது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலைக் கொடுத்தது. ஆயினும் தம் இலட்சியத்தை முக்கியமாகக் கருதிய விஸ்வநாததாஸ் பெண்வேடமிட்ட ஆண் நடிகர்களோடு சோர்வில்லாமல் தொடர்ந்து நடித்துவந்தார். 1930களின் தொடக்கத்தில் கே.பி.ஜானகியம்மாள் என்னும் நடிகை விஸ்வநாததாஸுடன் இணைந்து நடிக்க முன்வந்தார். பல நாடகங்களில் பல ஆண்டுகள் அவருடன் தொடர்ந்து நடித்தார். அவருடன் பழகிப்பழகி,  ஜானகியம்மாளும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் சுதந்திர எழுச்சிப் பாடல்களைப் பாடுகிறவராகவும் மாறினார். மது ஒழிப்பு, அயல்நாட்டு ஆடை புறக்கணிப்பு, தீண்டாமை போன்ற பல கொள்கைகளை மையமாகக் கொண்ட பாடல்களை இருவரும் பாடி மக்களிடையில் புதிய கருத்துகளைப் பரப்பினர்.

”ஆசாரம் தனைவிடுத்து ஆங்கிலத்தைப் படித்தோம்

அயல்நாட்டு நடையுடையை ஆசையுடன் பிடித்தோம்

கூசாமல் மதுவகையைக் குடல்நிறையக் குடித்தோம்

கொடியவருடன் கைகோர்த்து குளிர்நிலவில் நடித்தோம்

நேசானு பூதி தெய்வ நிந்தனையில் தடித்தோம்

நெஞ்சார பொய்யுரைத்து நீதிமன்றை இடித்தோம்

காசாசையால் பலதுர்க்காரியங்களை முடித்தோம்

குடையரென்றே நம்மில் சிலரைக் கடிந்துவிழுந்தடித்தோம்”

என்று இருவரும் இணைந்து பாடிய பாடலுக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமானது.  பிரபலமான மற்றொரு பாடல் காக்கா பாட்டு. அதைப் பாடத் தொடங்கியதுமே மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். மீண்டும் மீண்டும் பாடுமாறு கேட்டு குரலெழுப்பினர்.

”காக்கா காக்கா கடைகெட்ட காக்கா

காக்கரட்டைக் காயைப்போல மூக்கெடுத்த காக்கா

ஒங்க வீட்டுமேலே கடலுண்டு காக்கா- அது

வெள்ளைக்கொக்கு செய்த மாயம் காக்கா – மேல்

நாட்டு மோகம் கொண்டு அலையும் காக்கா – சொந்த

நாட்டுச் சகோதரரைக் காட்டிக் கொடுத்துவரும் காக்கா

காத்தாய் பறக்கிறாயே காக்கா – மகாத்மா

காந்தி சொன்னபடி கேளு காக்கா – வந்த

மாற்றானுக்கு இடம்கொடுத்த காக்கா

மண்டையிலே மூளையின்றி

சண்டையின்றி கெட்டழியும் காக்கா”

1937-ம் ஆண்டு தூத்துக்குடி ஹார்வி ஆலையில் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. நிர்வாக அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் அடியாட்களின் உதவியோடு வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயற்சி செய்தார். அதைக் கேள்விப்பட்ட விஸ்வநாததாஸ் அந்தச் செய்தியை மதுரை வைத்தியநாத ஐயர், மட்டப்பாறை வெங்கட்ராமையர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலான காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து சென்னைக்குச் சென்று, முதலமைச்சரான ராஜாஜியைச் சந்தித்தனர். ஆலையைத் திறக்க தடைகோரினர். அவ்வாறே தடைவிதிக்கப்பட்டது.  மேலும் ஆலையில் பணிபுரியும் பட்டியில் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வீட்டு வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர்.

ஒருமுறை ஜீவா நடத்திவந்த ‘ஜனசக்தி’ பத்திரிகை கடும் பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது, திண்டுக்கல்லில் 19.6.1938 அன்று நாடகம் நடத்தி, ஒருநாள் வசூலை ‘ஜனசக்தி’க்கு அன்பளிப்பாக அளித்தார். 

விசுவநாததாஸின் அரசியல் ஈடுபாடு, அவருடைய குடும்பத்தை வறுமையில் தள்ளிச்  சீர்குலைத்தது. எந்த நாடகத்தில் நடித்தாலும் எந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தாலும் சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடிச் சுதந்திர உணர்ச்சியூட்டுவதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தார் விஸ்வநாததாஸ்.  அவர்  கைது செய்யப்படுவதும்  சிறைக்குச் செல்வதும் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருந்தது. குடும்பம் வறுமையில் சிக்கி  கடன்சுமைகள் பெருகிக்கொண்டே போவதை அவர் உணர்ந்திருந்தார் என்றபோதும், இளம்வயதில் தன் மனத்தில் விதையென விழுந்துவிட்ட  இலட்சியநோக்கை அவரால் உதறமுடியவில்லை. சிறைக்கொடுமையைவிட வறுமை மிகப்பெரிய கொடுமை என்றபோதும், விஸ்வநாததாஸ் வறுமையை இன்முகத்துடன் எதிர்கொண்டார்.  

இரண்டாம் உலகப்போரில்  இந்தியர்களின் அனுமதியில்லாமல்  இந்தியாவை யுத்தத்தில் ஈடுபடச் செய்ததை காந்தியடிகள் கண்டித்தார். யுத்த நடவடிக்கையில் இந்தியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவித்தார். சத்தியாகிரகிகள் நாடெங்கும் யுத்த எதிர்ப்புப்பிரச்சாரம் செய்து சிறைக்குச் சென்றனர். அப்போது யுத்தத்துக்கு ஆதரவாகப் பேசி நிதி திரட்டுக் கொடுப்பதற்காக பல கலைஞர்களை அன்றைய சென்னை ஆளுநர் எர்ஸ்கின், அணுகினார். அவ்வகையில் விஸ்வநாததாஸோடு தொடர்பு கொண்டு யுத்தத்தை ஆதரித்து மேடையில் பாடும்படி கேட்டுக்கொண்டார். தன் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால், விஸ்வநாததாஸுக்கு ஆயுள் முழுவதும் அரசு சார்பாக ஒரு பெருந்தொகை வழங்கப்படும் என்று ஆசை காட்டினார்.  தன் இலட்சியத்துக்கு மாறான செயலைச் செய்ய விரும்பாத விஸ்வநாததாஸ் கவர்னர் எர்ஸ்கினின் வேண்டுகோளைப் புறக்கணித்தார்.

இதேபோல மற்றொருமுறையும் அரசு சார்பாக ஓர் அதிகாரி ஒரு கோரிக்கையுடன் விஸ்வநாததாஸைச் சந்தித்து உரையாடினார். கடன் சுமையின் காரணமாக விஸ்வநாததாஸின் வீடு அப்போது ஏலத்துக்கு வர இருந்தது. எல்லாவற்றையும் இழந்த விஸ்வநாததாஸின் கடைசிச் சொத்தாக அந்தப் பரம்பரை வீடு மட்டுமே எஞ்சியிருந்தது. வீட்டை மீட்பதற்குத் தேவையான பணத்தைத் தருவதாகவும் அதற்கு ஈடாக அவர் நாடகங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட பாடல்களைப் பாடுவதை நிறுத்துக்கொள்ளவேண்டுமென்றும் காங்கிரஸைவிட்டு விலகிவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு உடன்பட மறுத்தார் விஸ்வநாததாஸ்.

வாங்கிய கடன்களுக்காக விஸ்வநாததாஸுடைய பரம்பரை வீடு ஜப்தி செய்யப்பட்டு ஏலத்துக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்ட நிலையில், பணம் திரட்டுவதற்காக 1940ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னை ராயல் அரங்கத்தில் தொடர்ச்சியாக நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்தார் விஸ்வநாததாஸ். அந்த நாடக வருவாயில் கடனை அடைத்துவிடலாம் என்று அவர் நினைத்திருந்தார். குறித்த நாளில் சென்னைக்கு வந்து வண்ணாரப்பேட்டையில் தோமாஸ் என்னும் சாக்கு வியாபாரியின் வீட்டில் தங்கினார். அன்று இரவு எதிர்பாராத விதமாக அவர் உடல்நலம் குன்றியது. அதனால் முதல் மூன்று நாடகங்களில் அவரால் நடிக்கமுடியாமல் போனது. அடுத்த நாள் அவர் உடல்நிலை ஓரளவு தேறியிருந்தது. 31.12.1940 அன்று வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும் என்றும் வேலன், வேடன், விருத்தன் என மூன்று வேடங்களில் வி்ஸ்வநாததாஸ் நடிப்பார் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. அன்று இரவு அரங்கு நிறைந்துவிட்டது. பார்வையாளர்கள் அனைவரும் விஸ்வநாததாஸுடைய பாடல்களைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். ஒருவேளை அவர் அரசுக்கு எதிரான பாடல்களைப் பாடினால் கைது செய்வதற்காக காவலர்களும் வந்து காத்திருந்தனர்.

நாடகம் தொடங்கியதும் அழகிய முருகனாக மயிலாசனத்தில் அமர்ந்தபடி விஸ்வநாததாஸ் மேடையில் தோன்றினார். ’மாயா பிரபஞ்சத்திலே’ என்ற பல்லவியை தன் கணீரென்ற குரலில் பாடத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக தொடர்ந்து பாடமுடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். மேடையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

சத்தியத்தின் மீது கொண்ட பற்றுக்காக, கடலளவு துன்பங்கள் வந்தபோதும், அவற்றைப் புன்னகையுடன் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான சத்தியாகிரகியின் பண்பு என்பது காந்தியடிகளின் கூற்று. அக்கூற்றுக்கேற்ப வாழ்ந்து காட்டிய மகத்தான மனிதர் விஸ்வநாததாஸ். மீண்டும் மீண்டும் சிறை சென்றபோதும், அதைக் கண்டு சிறிதும் கலங்காது இலட்சியப்பாதையிலிருந்து விலகாதபடி அவர் அமைத்துக்கொண்ட வாழ்க்கைப்பயணம் போற்றுதற்குரியது.

 

விஸ்வநாததாஸ்

சுப்பிரமணியம், ஞானம்மாள் இணையருக்கு மகனாக சிவகாசியில் 16.06.1886 அன்று விஸ்வநாததாஸ் பிறந்தார். இயற்பெயர் தாசரிதாஸ். இளமையிலேயே அரும்பிய நாடக ஆர்வத்தால் உந்தப்பட்டு சங்கரதாஸ் ஸ்வாமிகளின் சபையில் பயிற்சி பெற்று சிறந்த மேடை நாடக நடிகராகவும் பாடகராகவும் விளங்கினார். காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாடகக்கலை வழியாக சுதந்திரப்போராட்டக் கருத்துகளை மக்களிடையில் பரப்பினார். தடையை மீறி அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினார் என்று குற்றம் சுமத்திய காவல்துறை, அவரை  இருபத்தொன்பது முறை கைது செய்து சிறைத்தண்டனை விதித்தது. தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெறுவதும் மீண்டும் நாடகங்களில் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பிய குற்றத்துக்காக கைதாகி சிறைக்குச் செல்வதுமாகவே அவருடைய வாழ்க்கை கழிந்தது. 31.12.1940 அன்று மறைந்தார். அவருடைய வாழ்க்கைவரலாற்றை 1992இல் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் என்னும் தலைப்பில் மு.செல்லப்பன் என்பவரும் 1996இல் மாவீரன் விஸ்வநாததாஸ் என்னும் தலைப்பில்  முனைவர் ந.வேலுச்சாமி என்பவரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை இப்போது எங்கும் கிடைக்கவில்லை. 2016இல் விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ் என்னும் தலைப்பில் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் என்பவரும்  2021இல் விடுதலை வேள்வியில் தியாகி விஸ்வநாததாஸ் என்னும் தலைப்பில் திருவாரூரைச் சேர்ந்த வீ.தர்மதாஸ் என்பவரும் எழுதிய நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.

 

(சர்வோதயம் மலர்கிறது – டிசம்பர் 2022 )