Home

Tuesday 10 January 2023

முதல் பெண்கள்

 

படித்த சிறுகதைகளை அடிக்கடி நினைத்துக்கொண்டு, அதிலேயே திளைத்திருப்பேன். அப்படி ஒரு பழக்கம் இளமையிலிருந்தே தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் நடைப்பயிற்சித் தருணங்களிலும் தனியாக பயணம் செய்யும் தருணங்களிலும்  என் நெஞ்சில் கதைகளின் நினைவுகள்தான் ஓடிக்கொண்டே இருக்கும். மொத்த சிறுகதையையும் ஒரு நாடகக்காட்சியாக மாற்றி, அதை நெஞ்சுக்குள் அரங்கேற்றுவேன். சில சமயங்களில் அந்தக் கதை நிகழும் களம் சார்ந்து பிறர் எழுதிய கதைகளையும் நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்வேன். எல்லாமே ஒரு விளையாட்டைப்போல நிகழும்.

நேற்று மாலை நடைப்பயிற்சி மைதானத்துக்கு வெளியே ஒரு பன்னீர் மரத்தடியில் இளநீர்க்குலைகள் அடுக்கப்பட்ட ஒரு தள்ளுவண்டியைப் பார்த்தேன். இதற்குமுன் அப்படி ஒரு தள்ளுவண்டி அந்த இடத்தில் நின்றதை நான் பார்த்ததில்லை என்பதால், அந்தக் காட்சி புதுமையாக இருந்தது. அந்த வண்டிக்கு அருகில் நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள். நடைப்பயிற்சியை முடித்துவிட்டு இளநீர் அருந்தச் சென்றவளாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.  வண்டிக்கு அருகில் ஒருவரும் தென்படாததால் கடைக்காரரின் வருகைக்காகக் காத்திருக்கிறாள் போலும் என்றும் நினைத்தபடியே அடுத்த சுற்று நடக்கத் தொடங்கிவிட்டேன். அச்சுற்றை முடித்துக்கொண்டு மீண்டும் அதே இடத்துக்கு வந்தபோதுதான் என் எண்ணம் பிழையெனப் புரிந்தது. இளநீரைச் சீவி விற்பனை செய்பவளே அவள்தான் என்பதை, வண்டிக்கு அருகில் நின்றிருந்த இருவருக்கு அவள் தன் கத்தியால் இளநீரைக் கொத்தியெடுத்து சீவிக் கொடுக்கும் காட்சியைப் பார்த்து புரிந்துகொண்டேன்.

பூ விற்கும் பெண், வேர்க்கடலை விற்கும் பெண், காய்கறிகளையும் கிழங்குகளையும் விற்கும் பெண், தேநீர்க்கடை வைத்திருக்கும் பெண் என பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். இளநீரை வெட்டிச் சீவி விற்கும் பெண்ணை முதன்முதலாக அன்றுதான் நான் பார்த்தேன். நிறைமாத வயிற்றுடன் அவள் சற்றே சாய்ந்த கோலத்தில் நின்றபடி கத்தியால் இளநீரை வெட்டிச் சீவும் காட்சி என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. என்னால் அக்காட்சியை வெகுநேரம் பார்த்துக்கொண்டு நிற்க இயலவில்லை. என்னமோ தெரியவில்லை. ஒரு விதமான துயரமும் பதற்றமும் பொங்கியபடி இருந்தன. சங்கடத்தோடு பார்வையைத் திருப்பிக்கொண்டு மறுசுற்றுக்காக நடக்கத் தொடங்கிவிட்டேன்.

இப்படி இளநீர் விற்பனை செய்யும் பெண்மணி யாருடைய சிறுகதையிலாவது பாத்திரமாக வந்திருக்கிறாளா என்று என் சிந்தனையை வேறு பக்கம் திருப்பினேன். பெண் உழைப்பாளிகளைப்பற்றிய பலருடைய சிறுகதைகள் நினைவுக்கு வந்தன. ஆனால் எந்தச் சிறுகதையிலும் இளநீர் சீவும்  பெண் பாத்திரத்தைப் படித்த நினைவே இல்லை. ஒருவேளை நான் படிக்காத கதைகளில் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.

நவீன உலகில் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை. எல்லாத் தொழில்களிலும் அவர்களுடைய பங்களிப்பு இருக்கிறது. புதிதாக கிடைக்கும் ஒரு வேலைவாய்ப்பை, அதில் இருக்கும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் போராடும் பெண்கள் காலம்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  அத்தகைய பெண் பாத்திரங்கள் அனைவருமே தமிழ்ச்சிறுகதைகளுக்குள் இடம்பெற்றுவிட்டனர் என்று சொல்லமுடியாது. வெகுசிலரே பாத்திரங்களாக சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று தோன்றியது.

ஒரு புதிய வேலை வாய்ப்பு உருவானதுமே, அதைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் பெண்கள், எந்தெந்த சிறுகதைகளிலெல்லாம் உடனடியாக பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் விதமாக என் யோசனை திரும்பியது. பல சிறுகதைகள் நினைவில் எழுந்தன. ஒரு பாத்திரத்தை புதியது என்ற முடிவுக்கு வரும்போதே, அதே விதமான பாத்திரம் இடம்பெற்றிருக்கும் பிற கதைகளும் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு கதையாக கண்டுபிடிப்பதும் தள்ளுவதுமாக இருந்த நேரத்தில் அசோகமித்திரன் எழுதிய ஒரு கதையில் மனம் குவிந்தது.

அந்தக் கதையின் தலைப்பு ’பார்வை’. அறுபதுகளில் எழுதப்பட்ட கதை. வாசனைத்திரவியம், பிஸ்கட்கள், சோப்பு, சலவைத்தூள், சமையலுக்கு உதவும் சின்னச்சின்ன கருவிகள் போன்றவற்றை நகரத்துக்குள் பரவலாகும் விதமாக, வீடு வீடாகச் சென்று அவற்றை அறிமுகப்படுத்தும் உத்தியை வணிகர்கள் மேற்கொண்டனர். அதற்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பவர்கள், தடுப்பூசி போடுபவர்கள் என அரசு சார்ந்த துறைகளிலிருந்து மட்டுமே ஊழியர்கள் வீடு வீடாகச் செல்வது வழக்கத்தில் இருந்தது. வணிகத்துறை அத்தொழில்நுட்பத்தை உடனே தனக்குரியதாக மாற்றிக்கொண்டு, தன் விற்பனைப்பொருட்களை  விளம்பரம் செய்வதற்கு முயற்சி செய்தனர். சேம்பிள் எனப்படும் மாதிரிப்பொட்டலங்களை வீடுவீடாக எடுத்துச் சென்று விற்பனையைப் பெருக்க நினைத்தனர். அப்போதுதான் விளம்பரப்பிரதிநிதி என்னும் புதிய வேலைமுறை உருவானது. பள்ளியிறுதிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டோடு இருக்கும் பல பெண்கள் இந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டனர். அவர்களுக்கு அது புதிய அனுபவம். அதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு பிரகாசமான ஓர் இடத்துக்குச் சென்றுவிடலாம் என்னும் தன்னம்பிக்கையில் பல பெண்கள் விளம்பரப்பிரதிநிதியாக நகரெங்கும் வலம்வரத் தொடங்கினார்கள்.

சலவைத்தூள் விளம்பரப்பிரதிநிதியாகச் செல்லும் ஒரு பெண் ஒரு வீட்டுக்குள் சந்திக்கும் அனுபவங்களின் தொகுப்புதான் அச்சிறுகதை. விற்பனைப்பெண்ணும் வீட்டில் இருக்கும் பெண்மணியும் நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாகவே கதை நிகழ்கிறது. இவ்விருவரையும் தவிர இன்னொரு பெண்ணும் இக்கதையில் இருக்கிறாள். ஆனால் அம்மாவின் கேள்விகளுக்கு அறைக்குள் இருந்தபடியே பதில் சொல்லும் குரலாகவே அவள் சித்தரிக்கப்படுகிறாள்.

தொடக்கத்தில் அந்தப் பெண் வீட்டு வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருவதையே விரும்பாதவளாக இருக்கிறாள் வீட்டுக்காரப் பெண்மணி. அடுத்து, மாதிரிப் பொட்டலங்களை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு சொல்கிறாள். பயன்படுத்தும் விதத்தை செயல்முறை விளக்கங்களோடு எடுத்துரைக்கவேண்டும் என்று சொல்கிறாள் விற்பனைப்பெண். துவைத்துக் காட்ட ஏதேனும் ஒரு துணியைக் கொண்டு வருமாறு அவள் கேட்கும்பொழுது எட்டு கெஜம் புடவையொன்றை கொண்டு வந்து கொடுக்கிறாள் பெண்மணி. அவ்வளவு பெரிய புடவையையும் சலவைப்பொடியைப் பயன்படுத்தி அழுக்கு போக துவைப்பது எப்படி என செய்து காட்டுகிறாள் விற்பனைப்பெண். அவள் பெயர் என்ன என்பதைக்கூட தெரிந்துகொள்ள விருப்பாத பெண்மணி, அவளுடைய மதம், படிப்பு, சம்பளம் போன்ற விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்வதில் ஆர்வமுடன் இருக்கிறாள். அவள் மதம் மாறிய விதத்தை விரிவாகக் கேட்டு தெரிந்துகொள்கிறாள். பார்வையிழந்துவிட்ட தன் தங்கைக்கு பார்வை திரும்ப மத நம்பிக்கையும் பிரார்த்தனையும் உதவிய விதத்தை அவளும் விரி்வாகவே சொல்கிறாள். தங்கையின் பார்வை இழப்புச் சூழல் அவளை ஒரு விற்பனைப்பிரதிநிதியாக்கிவிட்டது. அப்படி ஒரு முடிவை அடைவதற்கு, கதையின் தலைப்பும் கட்டமைப்பும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்துவிடுகின்றன. ஆயினும் கதைக்கு அதைக் கடந்த வேறொரு கோணமும் உள்ளது. பெண்கள் ஒருவரையொருவர் பார்க்கும் விதத்துக்கும் அசோகமித்திரனின் கதை இடம் தருகிறது.

ஒரு விளம்பரப்பிரதிநிதி பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறவளாக அவளை அசோகமித்திரன் சித்தரிக்கிறார். வீட்டுக் கதவை மென்மையாக திறக்கும் முறை, மனம் கோணாமல் உரையாடும் முறை, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தகவல்களை முழுமையாகத் தெரிவிக்கும் முறை என எல்லாவற்றிலும் அவர் கவனமாக இருக்கிறார். கடைசியில் சத்தமெழாமல் கதவைச் சாத்திக்கொண்டு செல்வது வரை அவள் மிகவும் பக்குவமுடன் நடந்துகொள்கிறாள். முதல் பெண் விளம்பரப்பிரதிநிதி இந்த மண்ணில் காலடி எடுத்துவைத்த  காலத்திலேயே அசோகமித்திரன் அவளைப் பாத்திரமாக வடிவமைத்துவிட்டார்.

அசோகமித்திரனின் சிறுகதையை அடுத்து சுந்தர ராமசாமி எழுதிய ஒரு சிறுகதை நினைவுக்கு வந்தது. அது இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் கூடைப்பந்தாட்டப்போட்டிக்கு நடுவராக செயல்படும் ஓர் இளம்பெண்ணைப்பற்றிய சிறுகதை. தொண்ணூறுகளில் வெளிவந்த அச்சிறுகதையின் தலைப்பு ’மேல்பார்வை’.

ஒரு பள்ளி மைதானத்தில் ஒருநாள் காலைப்பொழுதில் இரண்டு அணிகளுக்கிடையில் கூடைப்பந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. அப்போட்டிக்கு நடுவராக இருப்பவள் ஓர் இளம்பெண். அவளும் ஒரு விளையாட்டு வீராங்கனை. அவளுடைய உறுதியான உடல்வாகே அதற்குச் சான்றாக உள்ளது. அவள் பெயர் பொற்கொடி. பல காலமாக ஆடி ஆடி தேர்ச்சி பெற்று நடுவராகப் பொறுப்பேற்று கண்காணிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறாள். நடைப்பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அந்த விளையாட்டை கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரத்துக்குச் செல்லவிருந்த கூடைக்காரப் பெண்கள் கூட அந்த விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு நெருங்கி நிற்கிறார்கள். வீரர்களுக்கு இணையாக குறுக்கும் நெடுக்குமாக மின்னலென ஓடுகிறாள் பொற்கொடி. வீரர்கள் மீது விரல் கூட பட்டுவிடாதாபடி அவர்களிடையில் காற்றைப்போல ஊடுருவிப் புகுந்து மேற்பார்வை செய்கிறாள். தேவைப்படும் நேரங்களில் விசில் ஊதி ஆணைகள் பிறப்பித்து விளையாட்டைக் கட்டுப்படுத்துகிறாள்.

அவளுடைய திறமையான மேற்பார்வையைப் பார்த்து வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் மெச்சி கைதட்டுகிறார்கள். இடைவேளை சமயத்தில் அவளை நெருங்கி தன்னிச்சையாக உரையாடுகிறார்கள் அவர்கள். ஒரு கட்டத்தில் தோல்வியச்சத்தில் ஓர் அணியைச் சேர்ந்த ஒருவன் மாற்று அணியைச் சேர்ந்த மற்றொருவனுடைய காலை இடறி கீழே தடுமாறி விழச் செய்கிறான். அதைப் பார்த்துவிட்ட பொற்கொடி ஒரு நடுவர் என்கிற வகையில் அவனை அழைத்துக் கண்டிக்கிறாள். அவன் தான் செய்த தவற்றை மறுத்ததோடு மட்டுமன்றி அவளோடு விவாதத்தில் இறங்குகிறான். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டம் அவளுக்கு ஆதரவாக திரண்டு வந்து பிழை செய்தவனைப் பார்த்து கண்டனக்குரலை எழுப்புகிறது. அவன் இடறிவிட்டதை தாம் அனைவருமே கண்ணால் கண்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஆயினும் எதையும் காதுகொடுத்துக் கேட்க மனமின்றி அந்த அணியினர் தொடர்ந்து கூச்சல் எழுப்புகிறார்கள். அந்த நிலையில் போட்டி நிறைவுற்றதற்கு அடையாளமாக விசிலை ஊதுகிறாள் பொற்கொடி.  அதுவரை அதிக புள்ளிகள் பெற்றிருந்த அணியை வெற்றி பெற்ற அணியாக துணிச்சலோடு அறிவிக்கிறாள்.

ஒரு விளையாட்டுப்போட்டியின் நடுவரான வீராங்கனை பாத்திரத்துக்கு இசைவான உடல்மொழியைக் கொண்டவளாக பொற்கொடியைச் சித்தரிக்கிறார் சுந்தர ராமசாமி. அவள் ஓடும் விதம், திரும்பும் விதம், விசிலை ஊதி கட்டுப்படுத்தும் விதம் என ஒவ்வொரு அசைவையும் கச்சிதமாக முன்வைக்கிறார். மைதானத்தில் நிகழும் விளையாட்டை பொற்கொடி மேற்பார்வை செய்வதுதான் கதையின் இழை என்றபோதும், மைதானத்துக்கு வெளியே அவளுக்கு தன்னிச்சையாக திரண்டு பெருகும் ஆதரவை இன்னொரு இணை இழையாக பின்னிக்கொண்டே செல்கிறார் சுந்தர ராமசாமி. ஒரு கட்டத்தில் வீரர்களை நடுவரான பொற்கொடி மேற்பார்வை செய்வதும், விளையாட்டை வெளியேயிருக்கும் பெண்கள் மேற்பார்வை செய்வதும் ஒன்றோடொன்று இயைந்துபோகிறது. மைதானத்துக்குள்ளே இருக்கும் ஒரு பொற்கொடி, மைதானத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான பொற்கொடிகளாக உருமாறி மேற்பார்வை செய்வதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் எழுவதே கதையின் உச்சம்.  

ஒரு  பெண்ணுக்குத் திரண்டுவரும் ஆதரவு என்பது, ஆடுபவளும் பெண் பார்ப்பவளும் பெண் என்பதால் மட்டுமல்ல, அவளிடம் இயற்கையாகவே வெளிப்படும் திறமையும்  நேர்மையும்தான் முக்கியமான காரணங்கள். பொற்கொடியிடம் அவை இயல்பாகவே குடிகொண்டிருப்பதை அவர்கள் கண்டுணர்ந்ததாலேயே விளையாட்டின் தன்மையையே அறிந்திராதபோதும் ஆரவாரம் செய்து தம் ஆதரவை வழங்குகிறார்கள். பொற்கொடியே தமிழ்ச்சிறுகதையுலகில் முதல் பெண் நடுவர் பாத்திரம்.

ஒப்பந்த ஊழியர் என்பது நம் நாட்டில் இரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான ஒரு புதிய வேலை வாய்ப்பு. அதற்கு முன்பு பெரிய துறைகளான ரயில்வே துறை, தொலைபேசித் துறை, அஞ்சல் துறை ஆகியவற்றில் தற்காலிக ஊழியர்களாக சிலர் பணியாற்றியதுண்டு. ஆனால், இரண்டாயிரத்துக்கு முன்பாகவே அவர்கள் அனைவரும் நிரந்தர ஊழியர்களாக மாற்றப்பட்டுவிட்டனர். இரண்டாயிரத்துக்குப் பிறகு ஏராளமான தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. அதற்குப் பிறகு ஏராளமான கணிப்பொறி நிறுவனங்கள் உருவாகி நிலைகொண்டன. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் செய்பவர்களே அந்த நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டனர். அவர்களே ஒப்பந்த ஊழியர்கள்.

நாளடைவில் வீடுகளில் சின்னச்சின்ன வேலைகளைச் செய்துகொடுக்கும் ஒப்பந்த ஊழியர் முறை அறிமுகமானது. வயது முதிர்ந்த பெற்றோர்கள் ஒரு புறமாகவும் பிள்ளைகள் வேறொரு புறமுமாக வாழ நேர்ந்த நகரங்களில் பெற்றோர்களுக்கு உதவியாக நம்பகமான சேவையாளர்கள் தேவைப்பட்டபோது, அதை ஈடுகட்டும் வகையிலும் ஒப்பந்த ஊழியர் முறை விரிவானது. அந்த வாய்ப்பை சில ஏஜென்சிகள் கைப்பற்றி, வருமான வாய்ப்புக்காக தம்மைத் தேடி வரும் பெண்களை ஊழியர்களாக அனுப்பிவைக்கத் தொடங்கின. முதலே இல்லாமல் வருமானமீட்டும் ஒரு தொழிலாக ஒப்பந்தத்தொழில்முறை மாற்றமடைந்துவிட்டது.

தெரிந்தவர்கள், சுற்றத்தார்கள் என அறிமுகமுள்ளவர்களின் வழியாக வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்ட காலம் இன்று மலையேறிவிட்டது. தொலைபேசியில் அழைத்து தேவையைத் தெரியப்படுத்தி ஒரே ஒருமுறை பேசினால் போதும், அடுத்து ஒரு மணி நேரத்தில் வீட்டு வாசலில் பணியாளர் வந்து நிற்கும் காலம் வந்துவிட்டது.

மாறிவிட்ட காலத்தில், அட்டெண்டர் என்னும் பெயரில் ஒப்பந்த ஊழியராக ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்த மீனாட்சி என்னும்  பெண்ணின் கதையை  ’பிணத்துக்குச் சொந்தக்காரி’ என்னும் சிறுகதையில் சித்தரிக்கிறார் எழுத்தாளர் இமையம். தனிமையில் வாழும் வயது முதிர்ந்த ஒரு பெரியவரின் தேவைகளைக் கவனித்துக்கொண்டு அதே வீட்டில் மற்றொரு அறையில் தங்கிக்கொள்ளும் அட்டெண்டராக இருக்கிறாள் மீனாட்சி. பெரியவரின் மகனும் மகளும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். உடன்பிறந்த சகோதரி நகரத்திலேயே வேறொரு பகுதியில் இருக்கிறாள். எல்லோரும் தத்தம் இடங்களிலிருந்து கைப்பேசி வழியாக அட்டெண்டரை அழைத்து நலம் விசாரித்துக்கொள்வதோடு சரி.

ஒரு புதுமையான வாழ்க்கைமுறை தொடக்கத்தில் அவளுக்குக் குழப்பம் தருவதாக இருந்தாலும் நிலையான வருமானத்துக்கு ஒரு வழியாக இருப்பதால் அந்த வாழ்க்கைமுறைக்கு அவள் மனம் பழகிவிடுகிறது. அவள் இளம்வயதிலேயே விதவையானவள். மேல்நிலைப்பள்ளி வரைக்கும் படித்ததுமட்டுமே அவளுக்கு இருக்கும் ஒரே தகுதி. இரண்டு குழந்தைகளோடும் வயதான தாயாரோடும் கிராமத்தில் வாழ்க்கையை நடத்த வழியறியாமல் நகரத்தில் ஏற்கனவே அட்டென்டராக வேலை செய்து பிழைக்கும் தோழியின் ஆலோசனைக்கு இணங்கி நகரத்துக்கு வந்துவிட்டாள். குழந்தைகளைப் பிரிந்து வாழ்வது சிற்சில சமயங்களில் அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது. ஆனாலும் புதிய வாசலைத் திறந்திருக்கும் அட்டெண்டர் வேலையைத் துறக்க அவளுக்கு மனம் வரவில்லை.

ஒருநாள் திடீரென அந்தப் பெரியவருடைய உடல்நலம் சீர்குலைகிறது. அவரை என்ன செய்வது என்பதைக்கூட அவள் கைபேசி வழியாக மகனிடம் கலந்து பேசிவிட்டே செய்கிறாள் அவள். உடனே அவசர ஊர்தியை வரவழைத்து அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச்  செல்கிறாள். ஆயினும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெரியவர் இறந்துவிடுகிறார். அதைத் தொடர்ந்து, இறந்துபோனவருக்கு எந்த உறவுமற்ற அவள் ஓர் உறவுக்காரிக்கு இணையாக பல வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. ஆளாளுக்கு ஒரு மூலையிலிருந்து அவளுக்கு கைபேசி வழியாக ஆணைகளை வழங்கியபடி இருக்கிறார்கள். அனைத்தையும் ஒரு பொம்மையைப்போல அவள் செய்கிறாள். பிணத்துக்குச் சொந்தக்காரி அவளல்ல. ஆனாலும் கையெழுத்து போட்ட வகையில் அவளே சொந்தக்காரி. உண்டு, அதே சமயத்தில் இல்லை. இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் அட்டெண்டர் நிலையை மீனாட்சி வழியாக கச்சிதமாகச் சித்தரித்திருக்கிறார் இமையம்.

ஒரு கட்டத்தில் பணமீட்டுவதற்காக பெற்ற தந்தையைப் புறக்கணித்துவிட்டு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் பற்றி ஒரு கசப்பான எண்ணம் மீனாட்சியின் நெஞ்சில் ஓடுகிறது. அடுத்த கணமே, அதே பணத்தை ஈட்டுவதற்காக அல்லவா கிராமத்தில் பிள்ளைகளை விட்டு தாம் நகரத்துக்கு வந்து வேலை செய்கிறோம் என்ற எண்ணம் எழுந்து, அவள் நெஞ்சில் உருவான கசப்பைத் துடைத்துவிடுகிறது. சமநிலை பேணும் அக்கணம் கதையில் அது ஒரு முக்கியமான கணம். மீனாட்சி என்னும் பெயர் கொண்ட தெய்வம் இந்த உலகத்தையே காப்பாற்றுபவளாக நம்பப்படும் சூழலில், மீனாட்சி என்னும் பெயர்கொண்ட அபலைப்பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அட்டெண்டராக அல்லற்படுவதை நம்பகமான வகையில் முன்வைத்திருக்கிறார் இமையம்.

என் தோளைத் தொட்டு நிறுத்தி “என்னங்க சார், ஆழ்ந்த சிந்தனையா? ரொம்ப நேரமா கூப்படறேனே, கேக்கலையா?” என்றார் ஒரு நண்பர். அக்கணமே நடப்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன். என் சிந்தனை கலைந்தது. “ஆமாம், ஏதோ யோசனை” என்று மையமாகப் புன்னகை செய்தேன். “சரி சரி, வாங்க நடக்கலாம். ஏன் நின்னுட்டீங்க” என்றபடி நடக்கத் தொடங்கினார். நானும் அவருக்கு அருகில் நடக்கத் தொடங்கினேன். உடனே அன்று காலையில் அவர் தன் மகள் வீட்டுக்குச் சென்றுவந்த கதையைச் சொல்லத் தொடங்கினார். அக்கணமே ஆழ்மனத்தில் அதுவரை பின்னிக்கொண்டே வந்த கதைகளின் வரிசையைக் கலைத்துவிட்டு, அவர் சொற்களைக் கேட்கத் தொடங்கினேன்.

(ஜனவரி 2023-  சங்கு காலாண்டிதழ்)