Home

Friday 30 January 2015

’வாழ்க்கை: ஒரு விசாரணை’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எழுபதுகளின் இறுதியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து செகாவுடைய சிறுகதைத்தொகுப்பொன்றைப் படிப்பதற்காக எடுத்துவந்தேன். அத்தொகுப்பில் பச்சோந்தி என்னும் சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அக்கதையில் ஒரு பொது இடத்தில் ஒருவனை ஒரு நாய் கடித்துவிடுகிறது. தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு காவலர் அந்தச் சம்பவத்தை விசாரிக்கிறார். வெறிபிடித்த நாயை தெருவில் நடமாடவைத்ததற்காக அதன் உரிமையாளனை விசாரிக்கவேண்டுமென்றும் தண்டிக்கவேண்டுமென்றும் குரலையுயர்த்திச் சொல்கிறார். மாற்றிமாற்றி பலரும் அந்த இடத்தில் உரையாடியபடியே இருக்கிறார்கள். இடையில், அந்த நாய் அந்தத் தெருவில் வசிக்கக்கூடிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியின் வளர்ப்புநாய் என்கிற தகவலை ஒருவன் காவலரிடம் ரகசியமாகச் சொல்கிறான். உடனே காவலரின் தொனி மாறிவிடுகிறது. விறைப்பேறிய குரலில் கடிபட்டவன் ஏதேனும் சேட்டை செய்து நாயை வம்புக்கிழுத்திருக்கக்கூடும் என்றும் அதனால் நாய் கடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன வம்பு செய்தாய் என கடிபட்டவனிடமே விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒரே கணத்தில் மனம் மாறிவிடுகிற காவலரின் நடத்தை திகைக்கவைத்துவிட்டது. வழக்கம்போல தேநீர்க்கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி என் நண்பன் பழனியோடு இக்கதையைப் பகிர்ந்துகொண்டேன். அதே கடைத்தெருவின் வழியாக, பல தருணங்களில் விசாரணைக்காக கைவிலங்கிடப்பட்ட மனிதர்களை காவலர்கள் அழைத்துச் சென்ற  சம்பவங்களையும் கதையுடன் இணைத்துப் பேசிக்கொண்டோம். அவ்வழக்குகளில் எத்தனை உண்மையானவையாக இருக்குமோ, எத்தனை புனையப்பட்டவையாக இருக்குமோ என்று சொல்லி கசப்போடு சிரித்துக்கொண்டோம்.

வாழ்க்கை: ஒரு விசாரணை

வாழ்க்கை: ஒரு விசாரணைஎன்னுடைய முதல் நாவல். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1987 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியானவேர்கள் தொலைவில் இருக்கின்றனபுத்தகம் வெளிவந்து எனக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த ஆண்டில்தான் எங்களுக்கு மகன் பிறந்தான். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை வாங்கிப் படித்ததோடு மட்டுமின்றி, அதை வெளியிடுவதற்கான முயற்சியையும் முன்னெடுத்தவர் எழுத்தாளரும் என் நண்பருமான எஸ்.சங்கரநாராயணன். அவர் எப்போதும் என் நன்றிக்குரியவர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலின் மறுபதிப்பைச் சாத்தியமாக்கியவர் என்.சி.பி.எச். பொறுப்பில் உள்ள நண்பர் சரவணன். எல்லோரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.160

’சிதறல்கள்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் நான் புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஆப்பரேட்டராக வேலை செய்துகொண்டிருந்தேன். தொலைபேசி நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்கள் வீடு. பெரும்பாலும் நான் மாலைநேரப்பணி அல்லது இரவுநேரப்பணியையே தேர்ந்தெடுத்துச் செய்துவந்தேன். அதிகாலையில் ஆறரைமணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே உள்ள தேநீர்க்கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, வீட்டுக்கு நடந்து செல்வதுதான் என் வழக்கம். அதிகாலைக்காற்று வீசியபடி இருக்க, ஊரையே மூடியிருக்கும் இருளின் போர்வையை விலக்கும் சூரியனின் கைவிரல்கள் பட்டதுமே மண்மீதிருந்த ஒவ்வொன்றின்மீதும் ஒளி சுடர்விடத் தொடங்கும். நடமாட்டம் குறைந்த தெருக்களின் வாசல்தோறும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் விதவிதமான வண்ணக்கோலங்களைப் பார்த்தபடியே நடப்பேன். அழகான கோலங்கள். அழகான செடிகள். அழகான மரங்கள். அழகான சாலைகள். காலைநேரம் அந்த அழகைப் பலமடங்காகப் பெருக்கி கண்களுக்கு விருந்தாக்கிவிடும்.
அந்த விருந்து அதிகநேரம் நிலைத்திருக்காது. ஒதியஞ்சாலையைக் கடந்து, கம்பன் கலையரங்கத்தை நெருங்கும்போது  மக்கள் நடமாட்டம் பெருகத் தொடங்கிவிடும். ஒரு காரணம் அருகில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம். இன்னொரு காரணம் ஆலைகளில் அது ஷிப்ட் மாறும் நேரம். எங்கெங்கும் மிதிவண்டிகள் காணப்படும். ஆலையின் சுற்றுச்சுவர்களை ஒட்டியிருந்த சின்னச்சின்ன பெட்டிக்கடைகளில் விதவிதமான வியாபாரம் நடக்கும். திருவிழாவுக்கு வந்த ஒரு பெரிய கூட்டத்தைப்போல எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதர்கள் தெரிவார்கள். பாட்டுச்சத்தம். பேச்சுச்சத்தம். சிரிப்புச்சத்தம். வசைகளின் சத்தம். வாகனங்களின் சத்தம்.  நெல்லித்தோப்பு திரும்பும்வரைக்கும் அந்தக் கோலத்தில் மாற்றமே இருக்காது. ஒவ்வொரு நாளும் அந்தச் சாலையைக் கடப்பது திருவிழாவுக்குள் புகுந்து வெளியே வருவதுபோல இருக்கும். நெல்லித்தோப்பைக் கடந்ததுமே, சாலைகளின் மெளன அழகு மறுபடியும் பார்வையில் விழத் தொடங்கும்.

சிதறல்கள்

சிதறல்கள் நாவல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நெசவாலைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் கதையமைப்பைக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை கையைவிட்டுப் போகும்போது, அவ்வேலையுடன் வெகுகாலம் வாழ்ந்து பழகிவிட்ட எல்லா வகையான தொழிலாளர்களின் வேதனையையும் அடிச்சரடாக இந்த நாவல் கொண்டிருந்தது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மறுபதிப்பு சாத்தியமானது. நாவலை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்துக்கு நன்றி.


புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.140

’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும், அவ்வேலைக்கான பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை, ஆண்டுக்கு சில முறைகள் என்கிற கணக்கில் அவ்வப்போது ஊருக்குச் சென்றுவந்தபடியே இருக்கிறேன். ஊரை மறந்து ஒருநாளும் இருந்ததில்லை. என் சிறுவயதில் நான் பார்த்த ஊர் இப்போது இல்லை. இப்போது இருப்பது அதன் இன்னொரு வடிவம். எல்லாமே மாறிவிட்டது. பழைய ஊர் என் மனத்தில்மட்டுமே உள்ளது. படிப்பதற்குத் தகுந்த மனநிலயைக் கொடுத்த தோப்புகள் எதுவுமே இன்று இல்லை.  திறக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்து மூடும் சமயத்தில் வெளியே வரும்வரை பசிகொண்ட என் மனத்துக்கு விருந்தளித்த நூலகம் திறந்திருந்தாலும் வருவதற்கு ஆளற்று இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாங்கிகளில் நிறைந்து வழிந்த புத்தகங்களைக் கொண்ட நூலக அறையில் தூசு படிந்து அழுக்கும் கூளமும் நிறைந்திருக்கின்றன.

ஏரிக்கரை முழுக்க முட்செடிகள் முளைத்திருக்கின்றன. அதன்மீது நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையின் தடமே இல்லை. இதமான காற்று உடலைத் தழுவ, கரையை ஒட்டி விளைந்து நிற்கிற பசுமையான வயல்வெளிகளைப் பார்த்தபடி அந்தப் பாதையில்தான் காலையிலும் மாலையிலும் நானும் என் நண்பன் பழனியும் பேசிக்கொண்டே நடப்போம். அப்போதெல்லாம் ஏரிக்கரைதான் எங்கள் புழங்குதளம். ஒருபக்கம் கல்கி, சாண்டில்யன் நாவல்கள். இன்னொரு பக்கம் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி நாவல்கள். மாறிமாறிப் படிப்பதும் உலவும் நேரங்களிலெல்லாம் அவற்றைப்பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதுமாக இருப்போம். வாசிப்பும் பேச்சும் எங்களை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த உலகத்திலிருந்து மீள்வதற்கு மனமே இருக்காது. ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கும் நடையை ஒருபோதும் பத்துமணிக்கு முன்னால் நிறுத்தியதில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது.

பாய்மரக்கப்பல்

பாய்மரக்கப்பல்நாவல் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இலக்கியச்சிந்தனை அமைப்பால் பாய்மரக்கப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கியது. வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்திய சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி காவ்யா பதிப்பகம் மறுபதிப்பாக கொண்டுவந்தது.


நாவல் கிடைக்குமிடம்:

காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாவது குறுக்குத்தெரு
டிரஸ்டுபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை-24.
விலை.ரூ.180

Thursday 22 January 2015

ஒளிவட்டம்


போ போ, வேற ஊடு போயி பாரும்மா. ஒரு தரம் சொன்னா காதுல உழாதா? இங்கயே நின்னுகினு தொணதொணக்காத. போஎன்று பிச்சைக்காரியை விரட்டும் தாத்தாவின் குரல் நடுக்கூடம்வரை கேட்டது. அப்போது ஆங்கிலப் புத்தகத்துக்கு நடுவில் வைத்திருந்த நாடக நோட்டீஸ்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். எல்லாமே சித்தப்பா கொண்டுவந்து கொடுத்தவை. ஒருகணம் கண்களை உயர்த்தி வாசல்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் நோட்டீஸ்கள்மீது பார்வையைத் தாழ்த்தினேன். பள்ளிக்கூடப் பாடங்களைவிட அவற்றின்மீதுதான் எனக்கு ஆசை அதிகம். அவற்றை நான் உயிருக்குயிராக நேசித்தேன். ஆயிரம் முறை பார்த்த நோட்டீஸைக்கூட ஆயிரத்தோராவது முறை பார்க்கும்போது புதுசாகப் பார்ப்பதுபோலவே தோன்றும். அவற்றில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விதவிதமான புராணப் பாத்திரங்களின் படங்கள் என்னுடன் பேசுவதுபோலவும் என்னைப் பார்த்துப் புன்னகைப்பதுபோலவும் இருக்கும். அவர்கள் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தோற்றத்தைப் பார்த்ததுமே, அந்தத் தோற்றத்துக்குப் பொருத்தமான உரையாடல்களை புதுசுபுதுசாக மனம் உருவாக்கும். கற்பனையிலேயே அதை எனக்குள் பேசிப் பார்த்துக்கொள்வேன்.
சைக்கிள் மணிச்சத்தத்தால் என் கற்பனை கலைந்தது. மீண்டும் கண்களை உயர்த்தி வாசல் பக்கமாகப் பார்த்தேன். தபால்காரர் கொடுத்த கடிதத்தை தாத்தா திண்ணையிலிருந்து எழுந்துபோய் கைநீட்டி வாங்கிக்கொள்வது தெரிந்தது. கடிதத்தை அவர் முன்னும் பின்னும் திருப்பித்திருப்பிப் பார்ப்பதையும் கவனித்தேன். பிறகு எப்படியோ என் கவனம் மீண்டும் நோட்டீஸ்கள்மீது குவிந்துவிட்டது. அப்போது திண்ணையிலிருந்து தாத்தா அழைத்ததை காதுகள் உள்வாங்கிக்கொண்டாலும் மனம் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  நாடக நோட்டீஸ்களின் விதவிதமான வண்ணத்திலும் படங்களின் வசீகரத்திலும் மனம் லயித்திருந்தது.

வாழ்த்துகள் ஜெயமோகன்



ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா இடங்களுக்கும் அவை வருகின்றன. படுத்திருப்பவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொள்வதிலோ, அல்லது படுத்திருப்பவன் மேலேயே ஏறி ஓடுவதிலோ அவற்றுக்கு கொஞ்சம்கூட தயக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு சுதந்திரமான எலிகள். கதையில் முழுக்கமுழுக்க அந்த எலிகளின் நடமாட்டத்தைப்பற்றிய சித்தரிப்புகளே இடம்பெற்றிருந்தன. உயிரோட்டம் மிகுந்த அந்த விவரணைப்பகுதிகளை நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கதையைப் படித்துமுடித்த பிறகுதான் அந்த எலிகள் அக்கதையில் இடம்பெற்றிருந்த ஒரு பாத்திரத்தின் அலைமோதும் நினைவுகளின் குறியீடாக இருப்பதை அறிந்தேன். இருட்டு அறையில் சுதந்திரமாகத் திரிந்தலையும் எலிகள் ஒருபுறம். குழம்பிய
மனத்தில் திக்குதிசை தெரியாமல் அலைகிற நினைவுகள் மறுபுறம். அந்த எழுத்துமுறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ரஷ்யக்கதையைப் படித்ததுபோல சந்தோஷமாக இருந்தது.

Thursday 15 January 2015

ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்

கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை.
ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் பாய்ந்தது. வேகம், வெப்பம், நேசம், நெருக்கம், கொஞ்சல், வெட்கம் எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. பரலி சு.நெல்லையப்பரால் வெளியிடப்பட்ட கண்ணன் பாட்டும், நாட்டுப்பாட்டும் புதியதாக அரும்பிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதை மாளிகைக்கு அடிக்கற்களாக விளங்கின.

என் மின்னஞ்சல் பேட்டி

பாவண்ணன்:  பள்ளிப்பருவத்தில் ஒரு வாசகனாகவே இருந்தேன். என் படிப்பார்வத்தைப் பார்த்துவிட்டு, என் பள்ளி நூலகரும் எங்கள் கிராமத்து நூலகரும் நான் கேட்கும் புத்தகங்களை உடனுக்குடன் எடுத்துக்கொடுத்தார்கள். எங்கள் பள்ளியில் தமிழாசிரியர்களாக இருந்த ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் இருவருமே என்னை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அதிலும் ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு நான் செல்லப்பிள்ளை. பாடமெடுக்காத நேரத்தில் பாரதியார் பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் படித்துக்காட்டி பொருள் சொல்வார். சாம்பசிவம் ஐயா ராமாயணத்திலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் பாடல்களைப் படித்து பொருள் சொல்வார். எனக்குள் கவிதையார்வத்தை விதைத்தவர்கள் அவர்கள். நான் எழுதும் சின்னச்சின்ன கவிதைகளை புன்னகையுடன் திருத்திக் கொடுப்பார்கள். அவர்களின் தொடர்ச்சியைப்போல கல்லூரியில் 1976 ஆம் ஆண்டில் நான் சேர்ந்தபோது, ம.இலெ.தங்கப்பா அவர்கள் எனக்கு ஆசிரியராகக் கிடைத்தார். பாடத்திட்டத்துக்கு அப்பால் அவர் சங்கப்பாடல்களை நடத்தினார்.

http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_8.html

http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_9.html

‘யானைச் சவாரி’ தொகுப்பிலிருந்து சில பாடல்கள்




1.குறும்புக்காரி

ஆட்டக்காரி பாட்டுக்காரி
ஆடி வருகிறாள்
அக்கம்பக்கம் பொருளையெல்லாம்
தள்ளி வருகிறாள்

குறும்புக்கார் சிரிப்புக்காரி
குதித்து வருகிறாள்
அழுக்குக் கையை நல்ல துணியில்
துடைத்துச் சிரிக்கிறாள்

பேச்சுக்காரி தளுக்குக்காரி
ஓடி வருகிறாள்
அம்மா தரும் பாலை மட்டும்
அருந்த மறுக்கிறாள்

வம்புக்காரி வார்த்தைக்காரி
வளைய வருகிறாள்
அங்குமிங்கும் போக்குக்காட்டி
தப்பி விடுகிறாள்

‘யானை சவாரி’ பாடல் தொகுதிக்கு எழுதிய முன்னுரை



எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் இருக்கின்றன. செவ்வக வடிவம் கொண்ட பூங்காவின் விளிம்பையொட்டி போடப்பட்டிருக்கும்  அகலமான பாதை நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உரியது. ஒரு சுற்று என்பது ஏறத்தாழ நானூறு மீட்டர் நீளமிருக்கும். பாதைக்கு இடைப்பட்ட பகுதி முழுக்க புல்வெளியாலும் பூச்செடிகளாலும் நிறைந்திருக்கும். இடையிடையே சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவதற்கான ஊஞ்சல்களும் சறுக்குமரங்களும் ஏறி இறங்கும் ஏணிகளும் வளைந்து நெளிந்து போகும் வாயகன்ற குழாய்களும் பொருத்தப்பட்டிருக்கும். மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான பிள்ளைகள் பெற்றோர்களின் துணையுடன் இங்கே வந்து விளையாடுவார்கள். சற்றே வளர்ந்த பிள்ளைகள் பந்து விளையாடுவார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். ஒரே சமயத்தில் நாற்பது ஐம்பது பிள்ளைகள் விளையாடமுடியும். நடைப்பயிற்சி முடிந்த பிறகு, ஒரு மரத்தடியிலோ அல்லது சிமெண்ட் பெஞ்சிலோ உட்கார்ந்துகொண்டு அச்சிறுவர்களின் விளையாட்டுகளை நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மாலை நேரங்களில் எனக்குள் பரவும் உற்சாகத்துக்கு ஈடு இணையே இல்லை.

யானை சவாரி – சிறுவர் பாடல்கள் தொகுப்பு



கடந்த மூன்றாண்டுகளாக அவ்வப்போது நான் எழுதிய சிறுவர் பாடல்கள்யானை சவாரிஎன்னும் தலைப்பில் புதியதொரு தொகுப்பாக இப்போது வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பாட்டுக்கும் அழகான ஒரு கோட்டோவியத்தை ஓவியர் ராமமூர்த்தி வரைந்தளித்துள்ளார். இந்த ஓவியங்கள் தொகுப்புக்கு அழகைச் சேர்க்கின்றன. இந்தத் தொகுதியில் 64 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில  பிரசுரமானவை. பெரும்பாலான பாடல்கள் பிரசுரமாகாதவை.

Thursday 8 January 2015

பாக்குத்தோட்டம் தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை




நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் முதலாவது மாடி வாசலில் ஒரு ஆள் தனியாக நடக்கும்போது தாராளமாகவும் இரண்டு ஆட்கள் இணைந்து நடக்கும்போது நெருக்கிக்கொண்டும் நடக்கிற அளவுக்குத்தான் இடம் இருக்கிறது. இடம் சின்னதாக இருக்கிறதே என்பதற்காக, செடி வளர்க்கிற ஆசையையும் கனவையும் ஒதுக்கித் தள்ளிவிடவா முடியும்?  எங்கெங்கோ தேடி, இறுதியாக மொட்டை மாடியில் துவைத்த துணிகளை உலர்த்துகிற கொடிக்குக் கீழே சுவரோரமாக  தொட்டி வைக்க ஒரு சின்ன இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாள் என் மனைவி.  ரோஜாவுக்கு இரண்டு தொட்டிகள், கற்பூரவல்லிக்கு ஒரு தொட்டி, சோற்றுக்கற்றாழைக்கு ஒரு தொட்டி, துளசிக்கு ஒரு தொட்டி என மொத்தமாக ஐந்து மண்தொட்டிகள். தண்ணீர் ஊற்றப் போன ஒரு நாள் மாலை நான் அவற்றுக்கு பஞ்சபாண்டவர் தொட்டி என்று பெயர் சூட்டினேன்.  அதைக் கேட்டுரொம்ப நல்லா இருக்குதேஎன்று அவள் சிரித்துக்கொண்டே  சுவரையொட்டி சாய்ந்தபடி காதுத் தொங்கட்டான்கள் அசைய நின்ற கோலம் என் மனத்தில் அப்படியே ஒரு புகைப்படம்போல பதிந்துவிட்டது. தொட்டியை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம்  அந்தக் காட்சியும் ஒரு கணம் நெஞ்சில் மின்னி மறைகிறது.

Wednesday 7 January 2015

அர்ஷியாவின் புதிய நாவல் ‘அப்பாஸ்பாய் தோப்பு’



நாடோடிகளாகத் திரிந்தவர்கள் கூடி வாழத் தொடங்கியபோதே சமூகம் உருவாகிவிட்டது. சில சமூகங்கள் உருவான இடத்திலேயே நிலைத்து நீடித்து வேர்விட்டு தழைத்துப் பெருகும் வாய்ப்பைப் பெற்றன. வேறு சில சமூகங்களோ நிலைத்துநிற்க வழியின்றி இடம்பெயர்ந்துகொண்டே இருந்தன. போர்களால் எழுந்த அச்சம் ஒரு காரணம். எதிரிகளால் எழுந்த அச்சம் ஒரு காரணம். வாழ்வதற்குத் தேவையான வழிகளைத் தேடி அலையும் நெருக்கடியும் ஒரு காரணம். பஞ்சம் ஒரு காரணம். ஒவ்வாத இயற்கைச்சூழல்கள் ஒரு காரணம். அரசுகள் உருவாகி, மக்கள் தேவைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அணைகள், மதகுகள், சாலைகள் என புதுப்புது கட்டமைப்புகளை எழுப்ப முனையும்போதும் இடப்பெயர்வுகள் தவிர்க்கமுடியாதவையாக மாறின.  இடப்பெயர்வுக்கு இப்படி பல காரணங்களை அடுக்கிச் சொல்லலாம். வரலாற்றுப்பாதையில் இடப்பெயர்வு என்பது ஒரு சின்னஞ்சிறிய நிகழ்ச்சி. ஆனால், மானுட வாழ்க்கையிலோ, அது துயர்நிறைந்த வேதனை.
மதுரையில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு வெள்ளம் வந்தது. அப்போது நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்தபிறகு, அரசு ஒரு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஆற்றின் கரையை உயர்த்துவதும், தூர்ந்தும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியும் மறைந்துபோயிருந்த ஆற்றின் வடிகால்பகுதிகளைச் சீர்ப்படுத்துவதுமாக அந்த நடவடிக்கைகள் அமைந்தன. அதையொட்டி கரையை ஒட்டியிருந்த அப்பாஸ்பாய் தோப்பின் சில பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலப்பரப்பில் நீண்ட காலமாக சேர்ந்திருந்த சமூகம், வாழிடம் தேடி நாலாபக்கமும் கலைந்து சிதறும்படி நேர்ந்தது. ஒரு காலத்தில் அப்பாஸ்பாய் தம்மிடம் வேலை பார்க்கவந்த தொழிலாளர் குடும்பங்கள் வசிப்பதற்காகவே உருவாக்கிய இடம் அது. அதனாலேயே அது அப்பாஸ்பாய் தோப்பு என்று பெயர் பெற்றிருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்து தொழிலாளர்களும் அங்கே சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். நாலைந்து தலைமுறை கடப்பதற்குள், அந்த வரலாறே இல்லாமல் போய்விட்டது. வரலாறே வரலாற்றை அழித்துவிடும் ஆச்சரியம் நிகழ்கிறது. ஆனால், கலை ஒரு வரலாற்றை ஒருபோதும் அழிக்கவிடுவதில்லை. அதை இலக்கியமாக்கி காலத்தில் உயிர்த்திருக்கவைக்கிறது. கண்ணகியின் சீற்றத்தையும் மதுரையின் அழிவையும் உள்ளடக்கிய வரலாற்றை கலையாக்கிய இளங்கோவின் பரம்பரையில் வந்த எழுத்தாளர்கள் அத்தகு வரலாற்றை மீண்டும்மீண்டும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இதோ, கையகப்படுத்தப்பட்ட அப்பாஸ்பாய் தோப்பின் வரலாறு எஸ்.அர்ஷியாவின் எழுத்துமுயற்சியால்  கலையாக மலர்ந்திருக்கிறது.

பாக்குத்தோட்டம்



03.01.2015 அன்று மாலை சென்னை புக்பாயிண்ட் அரங்கில் உயிர்மை பதிப்பகம் பத்து நூல்களை வெளியிடும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்தப் பட்டியலில் என்னுடைய புதிய சிறுகதைத்தொகுதியானபாக்குத்தோட்டம்தொகுதியும் ஒன்று. வெளியிட்டவர் நீதியரசர் சந்துரு. பெற்றுக்கொண்டவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். தொகுதியை அறிமுகப்படுத்தி அ.ராமசாமி உரையாற்றினார். பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் வசித்துவந்தபோது நாடகத்தன்மை உள்ள சிறுகதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை நாடகமாக அரங்கேற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பாக்குத்தோட்டம் தொகுதியில் நாடகமாக மாற்றக்கூடிய சில கதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தலைப்புக்கதையான பாக்குத்தோட்டம் பற்றி பார்வையாளர்களுடன் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். வாழ்த்துரை வழங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பில் உள்ள கல்தொட்டி, சைக்கிள் ஆகிய சிறுகதைகளை முன்வைத்து, அவை தனக்கு வழங்கிய வாசிப்பனுபவங்கள்பற்றி நெகிழ்ச்சியுடன் மிகவிரிவாகப் பேசினார்.

Thursday 1 January 2015

காற்றின் தாண்டவம்


தானே புயல் வீசிய நாளில் நான் புதுச்சேரியில் இருந்தேன். அது வீசப் போகிறது எனத் தெரியாமலேயே, அதற்கு முதல்நாள் மாலையில் சிலுசிலுவென்று வீசிய காற்று உடலைத் தழுவியபடி இருக்க வழக்கமான நடைப்பயிற்சிக்காக மூலகுளத்திலிருந்து பெரம்பையைநோக்கிச் செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தேன். வழிநெடுக ஏராளமான முருங்கைமரங்களும் வேப்பமரங்களும் பூவரசமரங்களும் நின்றிருந்தன. தாறுமாறாக கைகளை வீசி நடனமாடும் பெண்ணைப்போல காற்றின் வேகத்தில் மரக்கிளைகள் வளைந்துவளைந்து ஆடின. என்னைத் தொடர்ந்து குயிலோசை வருகிறதா அல்லது குயிலோசையைத் தொடர்ந்து நான் செல்கிறேனா எனப் பிரித்தறியமுடியாதபடி வழிமுழுதும் அந்த ஓசையைக் கேட்டு மனத்தை நிரப்பியபடி நடந்தேன்.
திரும்பும்போது ஐந்து அல்லது ஐந்தரை மணிதான் இருக்கும். ஆனால், அச்சமயத்தில் ஊரே இருளில் மூழ்குவதை ஆச்சரியத்தோடு கவனித்தேன். ஒருநாளும் பார்த்திராத அதிசயம். வேகமாக ஓடோடி வந்த ஒரு சிறுமி பளிச்சென்றிருந்த ஒரு வெள்ளைத்தாளில் கருப்புவண்ணத்தை எடுத்து பூசிவிட்டதுபோல வானம் ஒரே கணத்தில் மாறிவிட்டது தெரு. இரவு எட்டு ஒன்பதுமணிபோல ஊரே இருண்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, ம்ம் என்று ஒரு மேளத்தில் இழுப்பதுபோல காற்றின் ஒலி மாறியது. மறுகணமே அந்த ஓசை, சாமியாடும் பெண்கள் கூந்தலவிழ கண்கள் நிலைகுத்தியிருக்க நாக்கைக் கடித்தபடி ம்ம் என உறுமுவதுபோல மாற்றமுற்றது. பிறகு, கட்டுகளை அறுத்துக்கொள்ள தன் சக்தியையெல்லாம் திரட்டித் திமிறும் காளையின் சத்தமாக வீறுகொண்டெழுந்தது.  அதைத் தொடர்ந்து, எட்டுத்திசையிலும் பார்வையைச் சுழலவிட்டு, வெறிகொண்டு அலையும் ஒரு வனமிருகத்தின் சீற்றம் மிகுந்த குரலாக எதிரொலித்தது.
வானத்தில் கூட்டம்கூட்டமாகச் செல்கிற யானைகளைப்போலவும் கரிய நிறக்குதிரைகளைப்போலவும் அடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்த மேகங்களைப் பார்த்த பரவசத்தில் வாசலிலேயே நிற்க ஆசையாக இருந்தது. ஆனால் நிற்கவே முடியாதபடி காற்றி தள்ளியது. ஒரு காகிதப்பந்தைப்போல அது என்னை கீழே தள்ளி உருட்டிச் சென்றுவிடும்போல இருந்தது. அக்கணத்தில் எதிர்பாராமல் மழை தொடங்கியது. முதலில் சில கணங்கள் ஊசித் தூறலாகவே இருந்தது மழை. வேடிக்கையாக கையை நீட்டி உள்ளங்கையைக் குழித்து, மழை உதிர்த்த முத்துகளை ஏந்தினேன். கைக்குழி நிரம்புவதற்குள் மழை வலுத்துவிட்டது. சடசடவென எய்யப்பட்ட ஈட்டிகளைப்போல ஒவ்வொரு தாரையும் பாய்ந்து இறங்கியது. அதன் வலிமையும் அழுத்தமும் நம்பமுடியாதபடி இருந்தன. கூர்மையான வெட்டுக்கத்திபோல உடலைத் தாக்கியது மழை. அவசரமாக படியேறி வீட்டுக்குள் செல்வதற்குள் உடல்முழுதும் நனைந்துவிட்டது. உடலைத் துவட்டிக்கொண்டு உடைமாற்றிக்கொண்டு ஜன்னலருகே வந்து வேடிக்கை பார்ப்பதற்காக நின்றேன்.

அன்புள்ள நண்பர்களே


வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்றுமுதல் இந்த இணையப்பக்கம் இயங்கத் தொடங்குகிறது. இணையப்பக்கத்துக்காகவென்றே எழுதுகிற சில படைப்புகளையும் அவ்வப்போது அச்சில் வரும் சில படைப்புகளையும் தொகுத்து இத்தளத்தில் முன்வைக்கலாம் என்பது என் விருப்பம். நிகழ்காலத்தில் இதற்கான தேவை இருந்தும், நான் சிற்சில காரணங்களால் நேற்றுவரை தயங்கி ஒதுங்கியிருந்தேன். இப்போதும் அந்தத் தயக்கங்கள் முற்றிலும் விலகிவிட்டன என்று சொல்லமுடியாது. ஒதுங்கியிருப்பது வேண்டாம் என்கிற அளவில் மட்டுமே அகன்றிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதுவேன். தற்சமயத்துக்கு வாரம் ஒருமுறை ஒரு புதிய ஆக்கத்தைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். எழுதும் வாய்ப்புகள் தொடர்ந்து கிட்டினால், அடிக்கடி எழுதுவேன்.
உங்கள் எண்ணங்களை என்னுடன் writerpaavannan2015@gmail.com என்கிற முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம்.
அன்புடன்
பாவண்ணன்
01.01.2015