Home

Sunday 24 April 2022

பாதை - சிறுகதை

 

 எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில் நிறுத்திவைத்திருக்கும் மிதிவண்டியில் வேகவேகமாக பத்து நிமிடம் மிதித்துச் சென்றால்தான் கடவுள் வாழ்த்து தொடங்குவதற்குள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையமுடியும். இந்த இணைப்புச்சங்கிலியில் ஏதாவது ஒரு கண்ணி அறுந்துபோனாலும் தலைமையாசிரியரின் வாழ்த்துப்பாட்டுக்கு தலைகுனிந்து நிற்கவேண்டும். அந்த அவமானம் நாள்முழுக்க நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கும். அதில் முன் அனுபவங்கள் ஏராளமாக உண்டு. அவையனைத்தும் எச்சரிக்கைமணிபோல காலைவேளையில் ஒவ்வொரு கணமும் புற ஊக்கியாக ஒலித்து என்னை வீட்டைவிட்டுத் தள்ளிவிடும்.

Sunday 17 April 2022

கன்று : சிறுகதை

 

 அருணாசலக் கவுண்டரின் வம்சம் உருத்தெரியாமல் சுக்கு நூறாகச் சிதைந்து மண்ணாகிவிட்டது. ஏதோ சாபத்தின் விளைவு என்றுதான் பேச்சு. கையில் ஒரு பிள்ளையும் இடுப்பில் இன்னொரு பிள்ளையுமாய் பிச்சை கேட்டு வந்த யாரோ ஒரு கர்ப்பிணிப் பெண் பசிக்குச் சோறு போடாத கல் வீட்டைப் பார்த்து வயிறெரியமண்ணோடு மண்ணாகப் போகட்டும்என்று சொல்லிவிட்டுப் போனாள்.

ஜீவானந்தம் : இந்தியாவின் சொத்து

 

1920இல் டிசம்பர் மாத இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் முன்வைத்த ஒத்துழையாமைப் போராட்டத் திட்டங்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களை விலக்கவேண்டும், சட்டமன்றங்களை விலக்கவேண்டும், வெளிநாட்டுத் துணிகளை விலக்கவேண்டும் என்ற மூன்று விலக்குகளும் காந்தியடிகளுடைய தாரக மந்திரங்களாக இருந்தன. 1921 ஆம் ஆண்டு முழுதும் காந்தியடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஓய்வில்லாமல் பயணம் செய்து  மக்களுடைய கவனத்தை ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்த்தார். அவருடைய சொற்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குத் துடித்துக்கொண்டிருந்த மக்களுடைய மனப்பாங்கை மாற்றியது. நாட்டுக்காக தியாகம் செய்யத் தயங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஏதேனும் ஒரு வகையில் நாட்டுக்குத் தொண்டாற்றும் எண்ணத்தை ஊட்டியது.

Sunday 10 April 2022

யாகூப் ஹசன் : போராட்டமும் சிறைவாசமும்

 

முதல் உலகப்போரின் முடிவில் 05.06.1918 அன்று பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜும் இந்திய வைசிராயும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டனர். பிரிட்டன் அரசு ஒருபோதும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்காது என்றும் துருக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் துருக்கியிடமிருந்து கைப்பற்றப்படமாட்டாது என்றும் இஸ்லாமியப் புண்ணியத்தலங்கள் இஸ்லாமியர்கள் நிர்வாகத்தின் கீழேயே தொடர்வதில் எவ்விதமான இடையூறும் இருக்காது என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் போர் முடிவடைந்ததும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் பிரிட்டன் அரசு துருக்கியின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்க முனைந்தது. துருக்கியின் ஆசியப்பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன.

காணிக்கை - சிறுகதை

  

அடுப்பாக நெருக்கிவைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக்கட்டியை வைத்த சாரதா ஐயனார் கோயில் இருந்த திசையின்பக்கமாக முகம்திருப்பி கண்மூடி ஒருகணம் வணங்கினாள். பிறகு திரும்பி தீக்குச்சியை உரசி கற்பூரத்தைச் சுடரவிட்டாள். உலர்ந்த மிளார்களை அதைச் சுற்றி அடுக்கி தீயை மூட்டினாள். அப்புறம் பொங்கலுக்கான பானையைத் தூக்கி அதன்மீது வைத்தாள்.

Sunday 3 April 2022

ஒருநாள் ஆசிரியர் - சிறுகதை

 

”கட்டுரைநோட்டு திருத்தும்போதுலாம் ஏன் உங்க மூஞ்சி பேதிமருந்து குடிச்சமாதிரி மாறுது?” என்று பல ஆண்டுகளுக்குமுன்பாக மாதவி வேடிக்கையாகச் சொன்ன வார்த்தைகள் என் மனத்தில் எதிரொலிக்காத நாளே இல்லை.  இப்போதுகூட ஒரு நோட்டை எடுத்துப் பிரிக்கும்போது அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நோட்டைத் திறக்கும்போதே கசப்புகள் முட்டிக்கொண்டு வருகின்றன. கசப்புகளுக்கு ஒருநாளும் இடம் தந்துவிடக்கூடாது என்று எனக்குள் ஆயிரம்முறை சொல்லிக்கொண்டாலும் மூன்றாவது நோட்டைத் திருத்தி முடிப்பதற்குள் வெறுப்பும் சலிப்பும் நெஞ்சில் நிறைந்துவழியத் தொடங்கிவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒவ்வொரு வாக்கியத்திலும் பிழைகள் மலிந்திருந்தால் என்னதான் செய்யமுடியும்?. ஒவ்வொரு நோட்டும் பிழைகளின் களஞ்சியம்.

கல்தொட்டி - சிறுகதை

 

பால்கணக்கு எழுதுவது என்னுடைய காலைவேலைகளில் ஒன்று. அது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். ஆனால் அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. “படிக்கற புள்ளய இதுல இழுத்து உட்டு கெடுக்காதன்னு சொன்னா காதுல ஏறுதா? நாலு எழுத்து படிச்சாதான நல்ல வழிக்கு போவமுடியும்?” என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். உடனே சத்தமாக அப்பா ”வாய மூடிகிட்டு சாணிய அள்ளுடி போ. ஊரு உலகத்த சுத்தி பாத்தவளாட்டம் புத்தி சொல்லிகினே இருக்காத. எது நல்ல வழி, கெட்டவழின்னு எல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல்லி அடக்கிவிடுவார். அந்த உரையாடல்கள் எதுவுமே என் காதில் விழவில்லை என்பதுபோல வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றிவிட்டு  கணக்கு எழுதுவதில் மூழ்கியிருப்பேன் நான்.