”உங்களுக்குக் காதில் விழுகிறதா? என் குரல் கேட்கவில்லையென்றால் அது என் குறையல்ல. அது ஒலிபெருக்கியின் குறைபாடு” என்று மென்மையோடு கேட்கிறது ஒரு குரல். அது காந்தியடிகளின் குரல். இந்தியா விடுதலையடைவதற்கு முன்னால் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுதில்லியின் நடைபெற்ற ஆசிய ஒற்றுமை மாநாட்டில் காந்தியடிகள் தன் உரையை இதுபோன்ற கேள்வியோடு
தொடங்குகிறார். ஒருகணம் மகிழ்ச்சி ஆரவாரத்துக்குப் பிறகு பார்வையாளர் அரங்கில் அமைதி நிலவுகிறது.
ஒரு மேடைப்பேச்சாளருக்குரிய எந்தப் பண்பும் இல்லாதவர் காந்தியடிகள். அவர் ஆவேசமாக முழங்கியதில்லை. குரலில் ஏற்ற இறக்கம் காட்டிப் பேசியதுமில்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர் குரல் எழுவதில்லை. நெஞ்சின் ஆழத்திலிருந்து சொற்களைத் திரட்டி நிதானமாகப் பேசும் பழக்கமுள்ளவர் என்பதால் ஒருபொழுதும் குரலை உயர்த்திப் பேசியதுமில்லை. மாறாக, அமைதியாகவும் மெதுவாகவும் பேசக்கூடியவர் அவர். அவர்தான் அன்று இப்படிப்பட்ட குறிப்போடு தன் உரையைத் தொடங்கி நிகழ்த்தினார். ஒரு நகைச்சுவைக்குறிப்பு என்பதைக் கடந்து அச்சொற்களுக்கு அன்று எந்தப் பொருளுமில்லை. ஆனால், 30.01.1948 அன்று அவர் கொல்லப்பட்ட பிறகு, அச்சொற்களுக்கு தானாகவே ஒரு படிமத்தன்மை பிறந்துவிட்டது. அதன் பொருள் வேதனையளிக்கக்கூடியதாக மாறிவிட்டது.
அவர் சொன்ன சொற்கள் எதுவும் நம் காதில் விழவில்லை. நாம் அவருடைய உருவத்தைத்தான் பார்த்திருந்தோமே தவிர, அவர் சொற்களை போதிய கவனத்துடன் கேட்கவே இல்லை. அவர் வலியுறுத்திய அகிம்சைக்கொள்கையையும் அன்பையும் பின்பற்ற விரும்பாதவர்களாகவே வாழ்ந்தோம். ”உங்களுக்குக் காதில் விழுகிறதா?” என்னும் சொற்களுக்கான பொருள் மெல்ல மெல்ல எடைமிக்க பாறைகளாக நெஞ்சின்மீது உருண்டுவந்து விழுகிறது.
காந்தியடிகள் என்னும் ஆளுமையை பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் பிரிட்டன் ஒலிபரப்பு நிலையம் (பி.பி.ஸி.) தன் வரலாற்றிலேயே முதன்முதலாக ஓர் ஒலிச்சித்திர நிகழ்ச்சியை ஒலிபரப்பியபோது இப்படித்தான் காந்தியடிகளின் குரலுடன் தொடங்கியது. அந்நிகழ்ச்சியை தயாரிக்கும் திட்டத்தை பி.பி.சி. முதன்முதலில் 1952ஆம் ஆண்டில் தொடங்கியது. அடுத்து காந்தியடிகளைப்பற்றிக் கேள்விகள் கேட்டு பதில் பெறும் வகையில்
இந்தியாவிலும்
பிரிட்டனிலும்
வாழும் அறுபத்துநான்கு ஆளுமைகளின் பெயர்களைக் கொண்ட ஒரு பெரிய பட்டியலைத் தயாரித்தது. நேரு, ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, கிருபளானி, அம்பேத்கர், சுசிலா நய்யார், ராஜகுமாரி அம்ரித்கெளர், மீராபென், தேவதாஸ் காந்தி, காகா காலேல்கர், இர்வின், ஹோரெஸ் அலெக்ஸாண்டர், ஹென்றி போலக், எல்வின், லூயி ஃபிஷர், மெளண்ட்பேட்டன் போன்றோர் அடங்கிய பெரிய பட்டியல் அது.
அதைத்தொடர்ந்து ஒரு கையேடுபோல உரையாடுவதற்குத் தகுதியான வெவ்வேறு தலைப்புகளை எழுதித் தொகுத்துக்கொண்டது.
பிறகு பிரான்சிஸ் வாட்ஸன், மாரிஸ் பிரெளன் குழுவினரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. அவர்கள் 1955 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து பல இடங்களில் பயணம் செய்து திட்டமிட்டபடி எல்லா ஆளுமைகளையும் சந்தித்து, அவர்கள் பேசிய அனைத்தையும் பதிவு செய்துகொண்டார்கள்.
நிகழ்ச்சித்தொகுப்பாளர்களுக்கே மலைப்பூட்டும் வகையில் ஏறத்தாழ பத்தொன்பது மணி நேரம் ஒலிபரப்பக்கூடிய அளவுக்கு அப்பதிவின் தொகுப்பு அமைந்துவிட்டது. மொத்தம் எழுபத்தெட்டு ஒலிநாடாப்பெட்டிகள்.
பேச்சுகளைப் பதிவு செய்த ஒலிநாடாவின் நீளம் பதினைந்தரை மைல்கள். அடுத்த கட்டமாக ஒலிப்பதிவான பேச்சுகளெல்லாம் தட்டச்சு வழியாக முதலில் . எழுத்து வடிவத்துக்கு மாற்றப்பட்டது. பிறகு கருத்துகள் சார்ந்து தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கி இணைத்துத் தொகுக்கும் வேலை நிகழ்ந்தது. இறுதிக்கட்டமாக, எழுத்துத்தொகுப்பை முன்வைத்து அதற்கு இசைவாக ஒலித்தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு ஒலிபரப்புக்கு ஏற்றவகையில் அத்தொகுப்பை கவனமுடன் நான்கு பகுதிகளாகப் பிரித்தார்கள். முதல் பகுதி
காந்தியடிகளின்
குணாதிசயங்களைப்பற்றிய
பேச்சுகள். இரண்டாம் பகுதி காந்தியடிகள் இந்திய மக்களின் மனத்தில் இடம் பிடித்ததைப்பற்றிய பேச்சுகள். மூன்றாம் பகுதி இங்கிலாந்தில் காந்தியடிகளின் போக்கும் அலுவல்களும் பற்றிய பேச்சுகள். நான்காம் பகுதி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்டு காந்தியடிகள் கொலயுண்டது பற்றிய பேச்சுகள். மிகக்குறைந்த பகுதி என்பது 70 நிமிடங்கள் நீளும் தொகுப்பு. மிகநீண்ட பகுதி என்பது 150 நிமிடங்கள் நீளும் தொகுப்பு.
அனைவரும் கூடி ஒரே அரங்கில் பேசுவதுபோன்ற அமைப்பில் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. அதுதான் அந்த நிகழ்ச்சியின் வசீகரம். ”உங்களுக்குக் காதில் விழுகிறதா?” என்று கேட்கும் காந்தியடிகளின் குரலுடன் முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. அவருடைய குரலின் தன்மையைப்பற்றி நேரு, ராஜகுமாரி அம்ரித்கெளர், இந்திரா காந்தி போன்றோர் சொன்ன சொற்கள் அடுத்தடுத்து தொடர்கின்றன. ஒன்றையடுத்து ஒன்றாக பேச்சு வரிசைப்படுத்தப்படும்போது இயல்பாகவே அதற்கொரு உரையாடலின் அமைப்பு உருவாகிவிடுகிறது.
குரலைப்பற்றிய பேச்சு அடுத்ததாக காந்தியடிகளின் தோற்றத்தைப்பற்றியதாக மெல்ல மெல்ல மாற்றமடைகிறது. லூயி ஃபிஷர், மீரா பென், எல்வின் போன்றோர் தம் எண்ணங்களைச் சொல்கிறார்கள். பிறகு அவருடைய குணநலன்களைப்பற்றியதாக பேச்சு திரும்புகிறது. அப்போது ரூம்பீல்ட் என்பவர் தாம் அகமதாபாத்தில் பணியாற்றிய காலத்தில் தம்மிடம் பணிபுரிந்த காவல்துறை அதிகாரி தனியொருவராக காந்தியடிகளின் ஆசிரமத்துக்கே சென்று உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி
கைது செய்து அழைத்துவந்ததைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். சட்டத்தை மதித்து நடக்கும் அவருடைய பண்பைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார். பிறகு ராஜேந்திர பிரசாத், எம்.ஆர்.ஜெயகர் என ஒவ்வொருவரும் தமக்கு நினைவிலிருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படி ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியின் சாயலில் அனைவருடைய பேச்சுகளும் தொகுக்கப்படுகிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மாறும் தருணத்தில் மட்டும் அச்சூழலுக்குப் பொருத்தமாக தொகுப்பாளர் சில வரிகளைப் பேசுகிறார். அவர் பேச்சு அடுத்தடுத்த தளங்களை இணைக்கும் கண்ணியாக அமைகிறது.
”நீ எனது மகள்” என்றுரைத்து ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தருணத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ளும் மீராபென் ”அவர் ஒருநாளும் தம்மை உயர்ந்தவர் என்றோ புரிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய சக்தி மிக்கவர் என்றோ எண்ணியதில்லை” என்று சொல்கிறார். ”நான் அவரை மகாத்மா என்று அழைத்ததே இல்லை. பெருமை தரும் இப்பட்டத்துக்கு அவர் தகுந்தவரே இல்லை” என்று சொல்கிறார் அம்பேத்கர். ‘எதிர்ப்புக்கு இடம்கொடுத்து பொறுமையுடன் செவிசாய்க்கும் சான்றாண்மை மிக்கவராக காந்தியைத் தவிர வேறு யாரையும் பார்த்ததே இல்லை” என்று பதிலளிக்கிறார் ராஜா ஹத்தீச்சிங். ”எப்படிப்பட்ட இக்கட்டான தருணத்திலும் மிகவும் பொறுமையோடு ஒரு செய்தியை அணுகும் மனப்போக்கு உள்ளவர் காந்தியடிகள்” என்கிறார் எல்வின்.
ஆங்கில அரசால் காந்தியடிகள் ஆறுமுறை கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை மட்டுமே அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதைப்பற்றிய ஒரு சித்தரிப்பு அவரை விசாரித்த நீதிபதியான ராபர்ட் ப்ரூம்ஃபீல்டின் சொற்கள் வழியாகவே விரிந்திருக்கிறது. அகமதாபாத்தில் 17.03.1922 அன்று அந்த விசாரணை நிகழ்ந்தது. இது இந்தியாவில் ‘பெரிய விசாரணை’ என்று அழைக்கப்பட்டது. தன்னிச்சையான வகையில் கலகமும் வன்முறையும் உருவானதால் அவர் ஒத்துழையாமைத் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த காலம் அது.
அன்று நீதிமன்றத்துக்கு வந்து கூண்டில் நிற்கிறார் காந்தியடிகள். நீதிமன்றத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நிற்கிறார்கள். விசாரணை தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் காந்தியடிகள் தான் எழுதி எடுத்து வந்த நீண்ட அறிக்கையொன்றைப் படிப்பதற்கு அனுமதி வேண்டுமென கேட்கிறார். . அது அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறார் நீதிபதி. அதே சமயத்தில் ஏதேனும் அரசியல் பிரச்சாரமாக இருந்தால்
என்ன செய்வது என்றும் ஒருகணம் அவர் தவிக்கிறார். இருப்பினும் தன் அறிக்கையைப்
படிப்பதற்கு காந்தியடிகளுக்கு அனுமதியளிக்கிறார் அவர்.
நீதிபதிக்கு
நன்றி கூறிவிட்டு காந்தியடிகள்
அந்த அறிக்கையைப் படிக்கத் தொடங்குகிறார். முதற்பகுதியில் அதுவரை அரசுக்காக தாம் ஆற்றிய சேவைகள் அனைத்தையும் பட்டியலிட்டு கவனப்படுத்துகிறார். பிறகு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டவில்லையென்று குற்றம் சுமத்துகிறார், அரசுக்கு யாரும் பணிந்துசெல்லத் தேவையில்லை என்றும் சொல்கிறார். விரும்பினால் அந்த நீதிபதியும் பதவி விலகலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
அவர் படிக்கத் தொடங்கிய பிறகுதான் நீதிபதி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்கிறார். காந்தியடிகளின் சொற்கள் எதுவும் தனிப்பட்ட முறையில் தனக்காகச் சொல்லப்பட்டவை அல்ல என்பதும் நீதிமன்றத்தைச் சூழ்ந்துகொண்டு நின்றிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை நோக்கிச் சொல்லப்பட்டவை என்பதும் அவருக்கு விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஏழாண்டு காலத்துக்குள் அவரை நம்பித் திரண்டெழுந்திருக்கும் கூட்டத்தினரை அரசுக்குச் சுட்டிக்காட்டுவதும் “ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றி பெறாது என்பதை நீதிமன்றத்தைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்தினருக்குச் சுட்டிக்காட்டுவதும் அந்த
வாசிப்புக்குப்
பின்னாலிருந்த
நோக்கம் என்பதையும் அந்த நீதிபதிக்குப் புரிந்துகொள்கிறார்.
“நீங்கள் என்னைத் தலைவனாகத் தேர்வு செய்வதும் செய்யாமல்
விடுவதும் உங்கள் முடிவு. நீங்கள் விரும்பினால்
என் தலையைக்கூட வெட்டிவிடலாம். ஆனால் நான் உங்களுக்குத் தலைவனாக இருக்கும் வரை பல கட்டுப்பாட்டு
விதிகள் இருக்கத்தான் செய்யும்”
என்று சொல்வது காந்தியடிகளின் வழக்கமென்றும் அவருடைய எஃகு போன்ற உறுதியான கொள்கைப்பிடிப்பு மிக்க உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்படுவதும் வழக்கமென்றும் சொல்கிறார் நேரு.
கோகலேவுக்கும் தனக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலொன்றை விவரிக்கிறார் எம்.ஆர்.ஜெயகர். 1915 ஆம் ஆண்டில் காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பியதுமே கோகலேயைச் சந்திக்கச் செல்கிறார். அன்று மட்டுமல்ல, அடுத்தடுத்த நாட்களிலும் செல்கிறார். அங்கு சென்ற ஒவ்வொரு நாளிலும் அங்கிருந்த கழிப்பறைகளையெல்லாம் சுத்தம் செய்கிறார். யாரோ புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் ஒருவர் கழிப்பறைகளையெல்லாம் சுத்தமாக்கிப் பராமரிக்கிறார் என அங்கு வந்திருப்பவர்களெல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் அந்தச் செய்தி கோகலேயிடம் சொல்லப்படுகிறது. உடனே அவர் அந்த வேலையை நிறுத்துமாறு காந்தியடிகளுக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால் காந்தியடிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது ஜெயகர் அங்கே இருக்கிறார். இருவரிடையே நிகழும் செய்திப் பரிமாற்றங்களைக் கவனித்து அவர் ஆச்சரியப்படுகிறார். காந்தியடிகள் புறப்பட்டுச் சென்றபிறகு “இந்தப் புதிய மனிதனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் கோகலே?” என்று கேட்கிறார். கோகலே சற்றும் தயங்காத குரலில் “அவரா? நாமெல்லாம் போன பிறகு அவரே இந்த நாட்டுக்குத் தலைவராக வரப்போகிறார்” என்று பதில் சொல்கிறார். அந்த வாக்கு பத்தாண்டு கால இடைவெளியிலேயே உண்மையான வரலாற்றை
ஜெயகர் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்கிறார்.
1930 ஆம் ஆண்டில் உப்புசத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. காந்தியடிகளும் நாடுமுழுதும் ஏராளமான தொண்டர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விடுதலை பெற்ற காந்தியடிகளுக்கும் வைசிராயான இர்வினுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மூன்று வார இடைவெளியில் எட்டு அமர்வுகளாக இருவரும் பேசினார்கள். முடிவில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தேசமெங்கும் சிறைசென்ற அரசியல் கைதிகள் அனைவரையும்
விடுதலை செய்யவும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களுடைய உடைமைகளைத் திருப்பித் தரவும் உப்பு மீதான வரியை ரத்து செய்து உப்பு உற்பத்தி செய்யும் உரிமையை இந்தியர்களுக்கு வழங்கவும் காங்கிரஸ் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அவசரகாலச் சட்டங்களை விலக்கிக்கொள்ளவும் கள்ளுக்கடைகளின் முன்னாலும் துணிக்கடைகளின் முன்னாலும் கூடி நின்று மறியல் செய்யும் உரிமையை வழங்கவும் ஆங்கில அரசு ஒப்புக்கொண்டது. அதேபோல சட்டமறுப்பைக் கைவிடவும் இங்கிலாந்தில் திட்டமிடப்பட்டிருக்கும் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஒத்துக்கொண்டது காங்கிரஸ். முடிவுகள் அனைத்தும் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் காந்தியும் இர்வினும் கையெழுத்திட்டார்கள். அதற்குப் பின் குறுகிய இடைவெளியிலேயே இர்வினுடன் இன்னொரு பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் காந்தியடிகள். மூன்று நாட்கள் நீண்ட அந்தப் பேச்சுவார்த்தையைப்பற்றி இர்வின் நேரிடையாகப் பகிர்ந்துகொள்ளும் சொற்கள் இந்த உரைத்தொகுப்பில் உள்ளன. அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பதைப்பற்றி நிலவும் பல ஊகங்களுக்கு இந்த உரைமொழி சான்றாக உள்ளது.
நாடெங்கும் நிகழ்ந்த கைது சம்பவங்களிலும் சிறைகளிலும் காவல்துறையினர் சத்தியாகிரகிகளிடம் கடந்த இரண்டாண்டுகளில் மிகக்கொடுமையான முறையில் நடந்துகொண்டதாகவும் தம் அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் சொன்ன காந்தியடிகள் அச்செயல்களைப்பற்றி ஒரு விசாரணையை வெளிப்படையான வகையில் அரசு நடத்தவேண்டும் என்றொரு கோரிக்கையை முன்வைக்கிறார். பேச்சளவில் இதை இர்வின் ஏற்றுக்கொண்டாலும் செயலளவில் இது பயனளிக்காது என்ற தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார் இர்வின். சம்பவங்கள் நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் யாருக்கும் எதுவுமே முழுமையாக நினைவிருக்க வழியில்லை என்றும் அரசாங்கமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, தத்தம் தரப்பை வலிமைப்படுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் பொய்சாட்சிகளைத்தான் உருவாக்குவார்கள் என்றும் சொல்லி தன் தயக்கத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள போராட்டங்களை அடக்கவும் வழிக்குக் கொண்டுவரவும் காவல்துறையையே அரசு நம்பியிருக்கும் நிலையில் அவர்களுக்கு எதிராக அரசே இயங்கினால் அது அவர்களுடைய மன உறுதியைப் பாதித்துவிடும் என்பதாலும் காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் இர்வின். இறுதியில் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை முழுக்கமுழுக்க பகத்சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறித்ததாகவே இருக்கிறது. இதற்குமுன் தான் எழுதிய கடிதத்தின் நீட்சியாக தன் பேச்சுவார்த்தையை அமைத்துக்கொள்கிறார் காந்தியடிகள். சுதந்திரப் போராட்ட வீர்ரான லாலா லஜபதி ராயின் மரணத்துக்குக் காரணமாக இருந்த காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்ட பகத்சிங்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவருடைய மரணதண்டனையை உறுதிப்படுத்தும் வகையில் கையெழுத்து பெறுவதற்காக ரகசியக் கோப்பொன்றை
சிறைத்துறை இர்வினுக்கு அனுப்பியிருந்தது. இர்வினும் அக்கோப்பில் கையெழுத்திட்டு சிறைத்துறைக்கு அனுப்பிவிட்டார். இவை அனைத்தும் ரகசிய நடவடிக்கைகளாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னரே நிகழ்ந்துமுடிந்துவிட்டன. இந்தத் தெளிவை இர்வினுடைய பேச்சின் வழியாக பெறமுடிகிறது. இவை எதுவும் தெரியாத நிலையிலேயே இரண்டாம் நாள் பேச்சுவார்த்தையில் காந்தியடிகள் பங்கெடுத்துக்கொண்டார். அன்று முழுவதும் பகத்சிங்கின் உயிருக்காக காந்தியடிகள் இர்வினிடம் மன்றாடுகிறார். ஆனால் நியாயத்துக்கும் சட்டத்துக்கும் இடையில் குறுக்கிடமுடியாது என்ற நிலைபாட்டை எடுத்துவிடும் இர்வின், காந்தியடிகளின் கோரிக்கையை தொடர்ந்து மறுக்கிறார்.
”எனக்குத் தெரிந்தவரை இந்த விஷயத்தில் முடிவெடுக்க மூன்று வழிகள் உள்ளன. ஒன்று சட்டம் அதன் போக்குப்படியே போகட்டும் என்று விட்டுவிடுவது. இது மிகவும் தர்மசங்கடமான நிலை. அடுத்தது பகத்சிங்கை விடுதலை செய்வது. அதைச் செய்ய என்னால் முடியாது. அடுத்தது தண்டனையை ஒத்திவைப்பது. அது நேர்மையற்ற செயலாக எனக்குத் தோன்றியது” என்று சொல்கிறார் இர்வின். காவல்துறையின் அழுத்தம், உயர்மட்ட ஆங்கில அதிகாரிகளின் அழுத்தம் நீதித்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகள் அனைத்தையும் அரவணைத்துப் போகவேண்டிய சூழலே அன்றைய தலைமைக்கு இருந்தது. கடுமையான தண்டனை ஒன்றின் வழியாகவே எதிர்காலத்தில் மக்களை அச்சத்தில்
ஆழ்ந்திருக்கும்படி
செய்ய முடியும் என்ற அரசு இயந்திரத்தின் நிலைபாட்டிலிருந்து பின்வாங்கிக்கொள்ள இர்வினுடைய மனம் இடம் தரவில்லை.
முதன்முதலாக ஒரு வைசிராயுடன் நிகழ்ந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைவதை ஒட்டி காந்தியடிகள் மிகவும் வருந்தினார். இறுதியில், “என்னால் முடிந்தவரை அந்த இளைஞனுக்காக உங்களிடம் வாதாடியதாக வெளியே சென்று சொல்லிக்கொள்ளலாமா?” என்று ஒப்புதல் கேட்கிறார் காந்தியடிகள். இர்வின் தலையசைக்கிறார். மேலும், ”என்னுடைய நிலையிலிருந்து பார்த்தால் இந்த விஷயத்தில் வேறெந்த வழியும் தெரியவில்லை என்றும் சேர்த்துச் சொல்லுங்கள்” என்றும் கேட்டுக்கொள்கிறார் இர்வின். அன்றிரவே காந்தியடிகள் கராச்சியில் நடைபெறவிருந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட நேர்கிறது. அதற்கடுத்த நாள் பகத்சிங் தூக்கிலிடப்படுகிறார். கராச்சி நகரில் “காந்தி ஒழிக”, “காந்தியே திரும்பிப்போ” என்ற முழக்கங்களுடன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
காந்தியடிகள் மிக அளவாக உணவு உட்கொள்ளும் வழக்கமுள்ளவர். அவர் அருந்தும் ஒவ்வொரு அவுன்ஸ் உணவுக்குப் பின்னாலும் ஒரு கணக்கிருக்கும். அவர் இந்த மண்ணில் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழவேண்டும் என்று ஆசைகொண்டிருந்தார். அவருடைய உணவு முறையின்படி அது சாத்தியமான செயல் என்றே சொல்லவேண்டும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இந்துக்களும் முஸ்லிம்களும் ஆத்திரமும் பகையும் கொண்டு ஒருவரையொருவர் தலையை வெட்டிக்கொண்டிருந்த காரணத்தினால் அவருக்கு வாழவேண்டும் என்னும் ஆசையே போய்விட்டது. அவர் தம் பிரார்த்தனைக் கூட்டங்களில் “நான் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழ ஆசை கொண்டிருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் இப்போது எனக்கு வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் போய்விட்டது” என்று அடிக்கடி சொல்லத்தொடங்கினார்.
1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சி தொடங்கியதுமே காந்தியடிகள் கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால் தேசமெங்கும் நடைபெற்ற கிளர்ச்சிகளும் வன்முறைகளும் அவரை மிகவும் பாதித்தன. வீடுகளையும் பொதுக்கட்டடங்களையும் கொளுத்துவதும் மனிதர்களைத் தாக்குவதும் கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்தது. சிறையில் அவரைச் சந்திக்கச் சென்ற லூயி ஃபிஷர் அவர் அடைந்திருந்த துயரத்தைப் பதிவு செய்கிறார். அவரைச் சந்தித்த மற்றொரு வெள்ளையரான ஹோரெஸ் அலெக்ஸாந்தரும் அதே கருத்தை வெளிப்படுத்துகிறார். 1944 ஆம் ஆண்டில் அவர் விடுதலை பெற்றதும் தேசம் முழுதும் பயணம் செய்து எங்கெங்கும் அமைதி நிலவச் செய்கிறார். ஆனால் அதுவும் அதிக காலம் நீடிக்கவில்லை. 02.09.1946 அன்று நேருவைப் பிரதமராகக் கொண்டு வேல்ஸ் ஓர் இடைக்கால அரசை அமைக்கிறார். அதே ஆண்டில் மதக்கலவரம் மூண்டதும் அவர் முற்றிலும் அமைதியிழந்தவராக மாறிவிடுகிறார். ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள்ர். உடமைகளை இழந்து தெருவில் உறங்குகிறார்கள். உறவினர்களை இழந்து அனாதைகளாக ஆதரவற்று நிற்கிறார்கள். ஒருவரையொருவர் கொன்று குவிக்க, தேசமே ரத்தக்களறியாகிறது.
மதக்கலவரங்கள் நிகழும் இடங்களுக்கெல்லாம் காந்தியடிகள் சென்று தங்கி அமைதி திரும்பப் பாடுபடுகிறார். கல்கத்தாவில் அவர் ஒரு முஸ்லிம் நண்பருடைய வீட்டில் தங்கியிருக்கிறார். மாலை வேளையில் சிலர் அவர் தங்கியிருந்த வீட்டை நோக்கி கற்களை வீசுகிறார்கள். ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்து சிதைக்கிறார்கள். அந்தச் சூழலிலும் அவர் அமைதி காக்கிறார். கலவரக்காரர்களைச் சந்தித்து உரையாடி நிலைமையைச் சீராக்க முயற்சி செய்கிறார். ஸோத்புர்
ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கியிருந்த சமயத்தில் ஈவான் ஸ்டீபன்ஸ் அவரைச் சந்தித்து ஒரு நேர்காணலை எடுக்கிறார். அதை நினைவுபடுத்தி அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஸ்டீபன்ஸ் அவர் உடல் பட்டுப்பூச்சியின் கூடுபோல காணப்பட்டதாகச் சொல்கிறார்.
தென்னாப்பிரிக்காவில்
நடத்திய பல போராட்டங்களைப்பற்றி நீண்ட விளக்கங்களை காந்தியடிகள்
கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார். பேட்டி முடிந்ததும் போர்வையிலிருந்து அவர் கை நீண்டு ஸ்டீபன்ஸின் கைகளைப் பற்றிக்கொள்கின்றன. எங்கெங்கும் நிகழும் கொடுமைகள் அவரை உற்சாகமிழக்கவைக்கின்றன. அனைவரும் கருணையுள்ளவர்களாகவும் மனசாட்சியின் குரலுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் தவறென காண்பதை உடனுக்குடன் கண்டித்து மாற்றியமைக்கும் உறுதியுள்ளவர்களாகவும் வாழ வேண்டும் என்பதே அவர் விருப்பம். ஆனால் அவருடைய எண்ணமும் கனவும் செயலாக மாறாமல் வெறும் பேச்சளவில் மட்டுமே நின்றுவிட்டதை ஒட்டி அவர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறார்.
செயல்வடிவில் ஒன்றைச் செய்து காட்டாமல் அவரைப் பெரிய மனிதர் என்றும் பண்பாளர் என்றும் பாராட்டி வணங்கி வருவதை உணரும்போது அவர் மனம் சோர்வில் ஆழ்கிறது. அவருடைய ஊக்கமும் குறைந்துகொண்டே போகிறது. ஒரு சமயத்தில் ஒருவர் “முஸ்லிம் சமயத்தவர்களின் உள்ளம் உண்மையிலேயே மாற்றமடையும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டதாகவும் அதற்குக் காந்தியடிகள் மென்மையான குரலில் “இவர் மனத்தை மாற்றுவது, அவர் மனத்தை மாற்றுவது என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. பிறரும் சரியானபடி செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கையில் நாம் நமது காரியத்தைச் செய்துகொண்டே போகவேண்டும்” என்று பதில் சொன்னதாகவும் நிர்மல் போஸ் பதிவு செய்கிறார்.
நவகாளியில் அவர் ஒரு சலவைத்தொழிலாளியின் வீட்டில் அவர் தங்கியிருக்கிறார். அப்போது அவருடன் சென்ற கதிர்கோஷ் அவர் அடைந்த சிரமங்களை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறார். வெறும் காலுடன் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குச் செல்லும் பாதையில் வெகுநேரமாக காந்தியடிகளைச் சந்திக்கவேண்டும் என காத்திருந்த பார்வையற்ற ஒரு பாட்டியைப்பற்றியும் அவர் காந்தியடிகளைத் தொட்டும் உரையாடியும் மகிழ்ந்ததையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.
அதே பயணத்தில் இன்னொரு கிராமத்தில் கணவனை இழந்த கைம்பெண்கள் கூட்டமாக வந்து காந்தியடிகளைச் சந்தித்த விவரத்தை முன்வைக்கிறார் நிர்மல்போஸ். முஸ்லிம்களால் பாதிக்கப்பட்ட இந்துகள் வாழும் தெருவில் காந்தியடிகளுடன் தொண்டாற்றியதைச் சொல்கிறார் சுஹர்வர்த்தி.
07.09.1947 அன்று அவர் தில்லியில் அமைதி முயற்சிகளை மேற்கொள்வதற்காக வந்து சேர்கிறார். அவர் வழக்கமாக தங்கும் துப்புரவாளர் குடியிருப்பு வளாகத்தில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்ததால் நகரத்துக்குள்ளேயே பிர்லாவுக்குச் சொந்தமான வீட்டில் ஒரு சிறிய அறையில் தங்குகிறார். ஏறத்தாழ நான்கு மாதகாலம் தில்லி முழுதும் அலைந்து பல இடங்களில் பலவிதமான மக்களைச் சந்தித்து அமைதி திரும்பப் பாடுபடுகிறார். அந்தக் கலவரக்காலத்தில் ஒருநாள் எதிர்பாராதவிதமாக முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்கிற பகுதிக்கு தான் அனுப்பப்பட்டதாகவும் அவர்களால் கடுமையாக வசைபாடப்பட்டதாகவும் காந்தியடிகள் ஊட்டிய அச்சமின்மையின் வழியாக அவர்களிடம் பழகி, மெல்ல மெல்ல அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றதாகவும் அமைதி திரும்ப உழைத்ததாகவும் சொல்கிறார் இந்திரா காந்தி. இறுதியாக, 30.01.1948 அன்று பிரார்த்தனைக்கூடத்தை நோக்கி வந்த காந்தியடிகள் துப்பாக்கிக்குண்டுக்கு இரையானதை நேரில் பார்த்த பி.பி.சி.நிரூபரான ராபர்ட் ஸ்டின்ஸனும் ரத்தம் கசிய காந்தியடிகள் கீழே சரிவதை பதற்றத்தோடு அருகிலிருந்து பார்த்த சாந்திவாலாவும் சித்தரிக்கும் சொற்களோடு அந்த ஒலிச்சித்திரம் முடிவடைகிறது.
நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட பிறகு தொகுப்பாளர்களான வாட்ஸனும் பிரெளனும், அந்தக் கையெழுத்துப்பிரதிக்கு நூல்வடிவம் கொடுத்து 1957இல்
வெளியிட்டனர். இருபதாண்டுகளுக்குப் பிறகு வேதாரண்யத்தைச் சேர்ந்த கஸ்தூர்பா கன்யா குருகுலம் அந்தப் புத்தகத்தை
‘ஒரு
சொற்சித்திரம்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. மொழிபெயர்த்தவர் குருகுலத்தின் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய பி.வி.ஜானகி.
காந்தியடிகளின் காலத்தில் அவரோடு பழகிய, அவரை நன்கு அறிந்த பல முக்கியப் புள்ளிகள் காந்தியடிகளைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் பல்வேறாக இருந்ததற்குச் சாட்சியாக விளங்குகிறது இச்சொற்சித்திரம். மாறாத கசப்புகளுக்கும் தீராத புன்னகைகளுக்கும் நடுவில் காந்தியடிகள் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்ததை உணர்ந்துகொள்ள இது வழிவகுக்கிறது. அவர் மறைந்து எழுபதாண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரைநோக்கி இன்னும் நெருங்கிச் செல்லத் தோன்றுகிறது. இன்னும் எழுபதாண்டுகளுக்குப் பிறகும் இந்தப் புத்தகம் இருக்கும். காந்தியடிகளை நெருங்கிச் செல்லும் தலைமுறைகளும் உருவானபடி இருக்கும்.
(2020 இருவாட்சி
பொங்கல் மலரில் வெளியான கட்டுரை )