நாடோடியாகத் திரிந்த மக்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலைத்து நின்று வாழத் தொடங்கியபோதுதான் ஒரு பெரிய சமூகம் உருவானது. அச்சமூகத்தைக் காக்கவும் பேணவும் மென்மேலும் மேம்படச் செய்யவும் சிறிய சிறிய அரசுகள் உருவாகி, பிறகு கால ஓட்டத்தில் சிற்றரசுகள் இணைக்கப்பட்டு பேரரசுகள் உருவாகின. கூடி வாழ்ந்த ஒவ்வொரு சிறு சமூகத்திலும், ஒருங்கிணைந்து வாழ அவசியமான சில விதிகள் இருந்தன. மக்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற அவர்களுக்கிடையே ஒரு பொதுப்புரிதலுக்கான அவசியம் இருந்தது. அந்த அவசியத்தை ஒட்டி சில நெறிகள் வகுத்துப் பின்பற்றப்பட்டன. அவையே அச்சமூகத்தின் நீதியாக இருந்தது. பல இனக்குழுக்கள் இணைந்து இணைந்து சமூகம் விரிவடைந்து பெருகும்போது, பெரிய சமூகத்தின் இயக்கத்துக்கு துணைநிற்கும்வகையில் பொதுநீதியும் விரிவாக்கம் செய்யப்பட்டது. சமூகம் விரிவடையும்தோறும் சமூகநீதியும் விரிவடைந்து வளர்ச்சி பெற்றது. நெறிகள் என்பவை நீதியின் குரல். இந்த நீதி அரசாட்சியின் குரலாக வெளிப்பட்டபோது சட்டமாக மாறியது. வாழ்வியலின் குரலாக வெளிப்பட்டபோது பழமொழியாகவும் தொடர்களாவும் மாறின. பழமொழிகள் ஒருவகையில் எழுத்துக்கு வராத இலக்கியம். வாய்வழியாகவே புழங்கி வந்தவை. மானுட குலத்துக்கான ஒரு பொது அறத்தை முன்வைக்க அவை முற்பட்டன.
பேரரசுகள் நிலைபெற்றபோது, பேரிலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. சங்க காலத்தில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் அப்படி தொகுக்கப்பட்ட தொகைநூல்களாகும். சங்கம் மருவிய காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கும் பதினெண்மேல்கணக்கும் தொகுக்கப்பட்டன. மூன்றறையர் என்னும் சமணமுனிவரால் இயற்றப்பட்ட பழமொழி நானூறு என்னும் நூல் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகைநூலில் ஒன்றாகும். இந்த நூல் வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகளையும் அறத்தையும் வலியுறுத்தும் நானூறு பழமொழிகளை உட்கிடையாகக் கொண்டு இயற்றப்பட்ட நானூறு வெண்பாக்களின் தொகுப்பாகும். அனைத்தும் ஒழுக்கநெறிக் குறிப்புகள். போர்ச்சமூகமாக இருந்த ஒரு சமூகம் போரைத் துறந்து அமைதியான வாழ்வை விரும்பும் சமூகமாக தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் போக்கில் பல நெறிகள்வழியாக தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. கொல்லாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, முயற்சி, நன்றி, கல்வி, அவையறிதல், இல்வாழ்க்கை, அறம், ஈகை, வாய்மை என பலவிதமான ஒழுக்கநெறிகள் சமூக ஆக்கத்துக்கு தேவையாக இருந்தன. இக்கருத்தாக்கத்தை வலியுறுத்தும் பழமொழிகளை மக்களின் வாய்வழியாகக் கேட்டுத் தொகுத்து, அவை பாடல்கள் வழியாகவும் பதிவு செய்துவைக்கப்பட்டன. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மேலான நெறியை உணர்த்துகிறது.
நெறிகளாக இல்லாது, வாழ்வின் பொது உண்மைகளை முன்வைக்கும் விதமாகவும் பழமொழிகள் உருவாகின. பல நூற்றாண்டுகளாக வாய்வழியாக மட்டுமே புழங்கி வந்த அந்நாடோடிச்செல்வத்தை உ.வே.சா.வின் மாணவரான கி.வா.ஜ. தமிழுலகத்துக்கு நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அந்த மாபெரும் செல்வத்திலிருந்து மருத்துவம் சார்ந்த சில பழமொழிகளைமட்டும் பிரித்தெடுத்து, தெளிவான விளக்கங்களோடு இந்த நூலை உருவாக்கியளித்துள்ளார் மருத்துவர் செல்வம்.
மருத்துவப் பழமொழிகள் மருத்துவ மூலிகைகளின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. அவை தீர்த்துவைக்கிற நோய்களைப்பற்றிய தகவல்களையும் உரைக்கின்றன. அழகான இனிய தொடர்போல அமைந்துள்ள அப்பழமொழிகள், சற்றே கவிதைத்தன்மையையும் கொண்டுள்ளன என்று சொல்லலாம். ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்னும் பழமொழியைக் கேட்கும்போது, காதுக்கு இனிமையாக உள்ளது. இளைத்தவன், கொழுத்தவன் என்ற எதிர்ப்பதங்களும், தற்செயலாக எதுகையழகோடு அமைந்துபோன எள்ளு, கொள்ளு என்ற சொற்களும், அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. எள்ளு, கொள்ளு ஆகிய இரண்டு தானியங்களின் மருத்துவ குணத்தையும் அவற்றின் பயன்களையும் செல்வம் விரிவான குறிப்புகளோடு எழுதியிருக்கிறார். உண்ணும் உணவு அன்னச்சாறாக இருந்து, பிறகு செந்நீராக மாறி, அதன் பிறகு கொழுப்பாக பிரிந்து உடலில் தங்கி நல்விளைவுகளை உருவாக்கும் எள், அடிப்படையில் உடலளவில் இளைத்துப்போனவர்களுக்கு உதவுகிறது. குறைவான கொழுப்பைமட்டுமே உடலில் தங்கவைக்க அனுமதிக்கிற கொள்ளு, அடிப்படையில் உடலளவில் கொழுத்திறுப்பவர்களுக்கு நற்றுணையாக இருக்கிறது. செல்வத்தின் வரிகளில் இவற்றைப் படிக்கும்போதே இத்தகவல்கள் மனத்தில் பதிந்துவிடுகின்றன. தானியங்களைப்பற்றியும் மருத்துவக் குணங்களைப்பற்றியும் சொன்னதோடுமட்டும் நிறுத்திக்கொள்ளாமல் எள், கொள் சார்ந்து சில முக்கியமான விவசாயத்தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறார். நிலத்தில் போதுமான சத்து இல்லாத தருணங்களில் எள்ளை விதைத்து அறுவடை செய்தால், எள்ளின் சத்து நிலத்தில் ஊறி, அதிக மகசூல் பெற உதவியாக இருக்கும். இப்போது மகசூல் எதுவும் வேண்டாம் என நினைக்கிற விவசாயி, நிலத்தை தரிசாக விடாமல், சும்மா கொள்ளாவது தூவிவைப்போம் என்று விதைத்துவைப்பார்கள். கொள்ளுப்பயிர் நிலத்தோடு கரைந்துள்ள மிகையாற்றலை சமநிலைப்படுத்தி, மறுபோகத்துக்கு தயார் செய்துவைக்கிறது. செல்வம் பகிர்ந்துகொள்ளும் விவசாயத்தகவல்
மண்ணுக்கும் மனித உடலுக்கும் உள்ள இணைப்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
’யானைக்கண்ணன் ஒரு பிடி, அசுரர் விரோதி ஒரு பிடி, தாயக் காத்தான் ஒரு பிடி. தாயக்கொன்றான் தனிச்சாறு ஒரு பிடி. இதைக் கொடுத்தால் பெரும்பாடு என்னும் நோய்நீங்கும்’ என்பது செல்வம் தொகுத்தளித்துள்ள ஒரு பழமொழி. யானைக்கண்ணன், அசுரர் விரோதி, தாயக் காத்தான், தாயக் கொன்றான் என அமைந்துள்ள தொடர்கள் எல்லாம், பார்வைக்கு பண்புத்தொகைச் சொற்கள்போலத் தோற்றமளித்தாலும், உண்மையில் இவை ஒவ்வொன்றும் ஒரு மூலிகையின் பெயரைச் சுட்டுபவை. யானைக்கண்ணன் என்பது யானையின் கண்களை ஒத்த அத்தி இலை. அசுரர் விரோதி என்பது முருகன் வேல் என்றாகி, பிறகு வேலங்கொழுந்து என்றாகிறது. தாயைக் காத்தான் என்பது ஆலமரத்து விழுது. தாயைக் கொன்றான் என்பது வாழை. சொற்களின் அழகும் ஒவ்வொன்றுக்கும் செல்வம் எழுதிச் செல்லும் விளக்கமும் அழகாக உள்ளன.
‘சுண்ணாம்பிலே இருக்கிறது சூட்சுமம்’ என்பது வசீகரமான இன்னொரு பழமொழி. இயல்பாகவே உடலில் சூடு இருக்கும்போதும் இரவில் அதிக நேரம் கண்விழிக்கும்போதும் கண்கள் சிவந்து காணப்படுவது இயற்கை. சிவந்த கண்கள் இயல்பான நிலைக்கு வருவதற்கு காலின் கட்டைவிரல் மீது சுண்ணாம்பைத் தடவவேண்டும். இடது கண் சிவந்திருந்தால் வலது கால் கட்டைவிரல்மீது தடவவேண்டும் என்பது செல்வம் தரும் விளக்கம். சுண்ணாம்பில் இருக்கிற சூட்சுமத்தைத் தாண்டி, இந்த உடல் உறுப்புகளுக்கிடையே உள்ள உறவின் சூட்சுமம் வியப்பூட்டுகிறது. ’வெந்து கெட்டது முருங்கைக்கீரை, வேகாமல் கெட்டது அகத்திக்கீரை’ என்னும் பழமொழியில் சமையல் தொடர்பான ஒரு முக்கியக்குறிப்பு இருப்பதைப் பார்க்கலாம். எது குறைவாக வேகவேண்டும், எது மிகையாக வேகவேண்டும் என்பதில் இருக்கிற சூட்சுமமும் வியப்பூட்டுகிறது.
‘பணம் இருப்பவனுக்கு குங்குமப்பூ, பணம் இல்லாதவனுக்கு முருங்கைப்பூ’ என்னும் பழமொழி நோயைப்பற்றியும் மருந்தைப்பற்றியும் பேசும் அதே நேரத்தில் வசதியைப்பற்றியும் பேசும்போது, ஒரு முதிர்ச்சியான அணுகுமுறை தெரிகிறது. குங்குமப்பூ, முருங்கைப்பூ ஆகிய இரண்டுமே இரத்தசோகை நோய்க்கு மருந்தாகும். பயன் ஒன்றுதான். ஆனால் வசதி இருந்தால் குங்குமப்பூ சாப்பிடலாம். வசதி இல்லாவிட்டால் முருங்கைப்பூ சாப்பிடலாம். செல்வம் தரும் விளக்கம் நம் உதடுகளில் புன்னகையை அரும்பவைத்தாலும், மொழியின் ஆழமும் பொருளும் நெஞ்சில் அழுத்தமாகப் பதிகின்றன.
’வாத்தியார் பிள்ளை முட்டாள், வைத்தியன் பிள்ளை நோயாளி’ என்னும் பழமொழியை செல்வம் அணுகியிருக்கும் முறையில் ஒரு புதுமை தெரிகிறது. பள்ளியில் படிக்கவரும் பல பிள்ளைகளுக்கு பாடங்களைச் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து, தன் சக்தியையெல்லாம் செலவழித்துவிட்டு, வெறும் ஓடாக வீட்டுக்குத் திரும்பும் ஆசிரியருக்கு, வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித்தர நேரம் இருப்பதில்லை. அதனால் அவர்கள் பிள்ளைகள் மந்தமாக இருப்பார்கள் என்பதும் இதைப்போலவே கவனிக்க நேரமில்லாத காரணத்தால் வைத்தியரின் பிள்ளை நோயால் நலிந்திருப்பார்கள் என்பதும் பொதுவாக நிலவுகிற ஒரு நம்பிக்கை. இந்தப் பழமொழியை முன்வைத்து விளக்கம் தரும் செல்வம், இந்த நம்பிக்கைக்கு நேர் எதிராக ஒரு பார்வையை முன்வைக்கிறார். பிள்ளைகளின் முன்னேற்றம்பற்றியே எப்போதும் யோசித்தபடி இருக்கும் ஆசிரியர், படிக்காத மாணவர்களைப்பற்றிய ஒரே சிந்தனையிலேயே மூழ்கியிருக்கும் ஆசிரியர் உடலுறவில் ஈடுபடும்போதும் அதே சிந்தனையிலேயே இருப்பது இயற்கையாகும். சிந்தனையில் உள்ள பிம்பமே கருவாக உருவாகும். அப்படி உருவாகும் கருவில் உள்ள குழந்தையைத்தான் வாத்தியார் பிள்ளை முட்டாள் என்கிறோம் என செல்வம் புதுவிளக்கம் கொடுக்கிறார். சிறந்த வைத்தியன் நிலையும் இதைப்போன்றதே ஆகும். கொடிய நோய்களோடு தினந்தினமும் போராடும் ஒருவனை, அந்நோய்களிலிருந்து விடுவிக்கும் வழிதேடி சிந்தனையிலேயே மூழ்கியிருக்கும் வைத்தியர் உடலுறவில் ஈடுபடும்போதும் அதே சிந்தனையிலேயே இருக்கிறார். அவருடைய கருவில் உருவாகும் குழந்தையும் பிணிகளால் பீடிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
‘அரசனை நம்பி புருஷனை கைவிட்டேன்’ என்னும் பழமொழிக்கு செல்வம் வழங்கும் விளக்கமும் புதுமை நிறைந்தது. ஆண்பெண் கள்ள உறவைப்பற்றிச் சொல்வதாகவே இப்பழமொழியைப் பற்றி உலகம் நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் செல்வத்தின் விளக்கம் வியப்பைத் தருகிறது. அரசமரத்தைச் சுற்றும்போது பிராண வியான வாயுக்கள் சமச்சீரான முறையில் உடலை அடைகின்றன. பெண்களின் கருப்பையைத் தகுதியான முறையில் வைத்திருக்க இக்காற்று உதவுகிறது. ஆனால், கருப்பை கருவை ஏற்க, கணவன் துணை அவசியம். காற்றின் துணைமட்டும் போதுமென நினைத்து, கணவனை நிராகரிக்கும் போக்கைச் சாடும் முறையில்தான் இப்பழமொழி உருவாகியிருக்கிறது என்பது செல்வம் தரும் விளக்கம்.
‘தாசி வீடு சென்ற தறுதலைக்கு செம்மையாய் தருக செருப்படிதான்’ என்கிற பழமொழியில் பொதிந்திருக்கும் மருத்துவ உண்மையை அழகாக முன்வைத்திருக்கிறார் செல்வம். இந்தப் பழமொழிக்கான பொருளை ’தாசி வீடு சென்று தவறிழைத்தவனுக்கு செருப்பால் அடித்து தண்டனை தரவேண்டும்’ என்கிறவகையில்தான் ஒவ்வொருவரும் புரிந்துவைத்திருக்கிறோம். அது பிழையான புரிதல் என்று சுட்டிக் காட்டுகிறார் செல்வம். செருப்படி என்பது ஒரு மூலிகை. அதற்கு நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தி இருக்கிறது. பால்வினை வியாதிகளால் வரக்கூடிய தோல்நிறமாற்றம், படைகள், வெள்ளை, வெட்டைச்சூடு ஆகிய குணங்களை நீக்கக்குடியது. செருப்படி இலைகளை எடுத்து கல்லையும் மண்ணையும் நீக்கி அலசி இடித்துப் பிழிந்து சாறு எடுத்து சீரான இடைவெளிகளில் கொடுத்துவரும்போது, நோயைக் குணப்படுத்திவிட முடியும்.
இந்த நூலில் ஒவ்வொரு பழமொழியையும் செல்வம் புதிய நோக்கில் பார்த்து விளக்கம் அளித்திருக்கிறார். அவ்விளக்கம் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, மருத்துவச் செய்திகளையும் அறிந்துகொள்ளவும் உதவியாக உள்ளது. மிகக்குறைவான அளவிலான பழமொழிகளைமட்டுமே எடுத்துக்கொண்டு செல்வம் இந்த நூலை உருவாக்கியுள்ளார். நம் பழமொழிச் செல்வத்தில் இப்படிப்பட்ட புதையல்கள் இன்னும் பல இருக்கக்கூடும். அவற்றைச் சேகரித்து, இப்படிப்பட்ட மருத்துவ விளக்கங்களை இணைத்துத் தொகுக்கும் முயற்சியில் செல்வம் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும் என்பது என் விருப்பம். மருத்துவத்துறையில் இருக்கிறோம், ஏதோ ஒரு புத்தகம் எழுதினோம் என்று அவர் ஒருபோதும் ஓய்ந்துவிடக் கூடாது. இடைவிடாமல் இத்திசையில் அவர் பணியாற்றவேண்டும். அது, இலக்கியத்துக்கு மட்டுமல்ல, மருத்துவத்துறைக்கும் அவர் செய்யக்கூடிய அரும்பெரும் சேவையாக அமையும். நண்பர் செல்வத்துக்கு என் அன்பான வாழ்த்துகள்.
(மருத்துவர் செல்வம் எழுதிய ’மருத்துவப்பழமொழிகள்’ நூலுக்கு எழுதிய முன்னுரை)