Home

Monday 28 November 2016

கனவு நனவான கதை - (புத்தக அறிமுகம்)


ஆறாம் வகுப்பில் எங்களுக்கு ஆசிரியராக இருந்த ராமசாமி சாரை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு அவர் எடுக்காத பாடமே இல்லை. தமிழ் நடத்துவார். கணக்கும் சொல்லித்தருவார்.  ஆங்கில எழுத்துகளை கூட்டி உச்சரிக்கும் விதங்களில் இருக்கும் வேறுபாட்டை, மரங்களில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் புளியம்பழங்களைக் குறிபார்த்து அடிக்கச் சொல்லித் தருகிற லாவகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது. ஒவ்வொரு நாளும் எங்கள் முன்னால் விலைமதிப்பற்ற புதையல்களை அவர் அள்ளிப்போட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பாடங்களையெல்லாம் நடத்துகிற சமயத்தில் கொஞ்ச நேரம் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு. ஆனால், சரித்திரம், பூகோளம் நடத்துவதற்கு எந்தப் புத்தகத்தையும் புரட்டிப் பார்க்கிற அவசியமே இருந்ததில்லை. அப்படியே நேரிடையாக நினைவிலிருந்து அருவிபோலப் பொழியத் தொடங்கிவிடுவார்.

Wednesday 23 November 2016

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் - வசனம்


எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். கடைவேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்வார். பிறகு விறகு வெட்டுவார்.  அருகில் ஓடும் துங்கபத்திரை கால்வாயிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். துணிதுவைக்கும் வேலையில் மனைவிக்கு உதவியாக இருப்பார். அடிக்கடி அவர் சொல்லும் ‘காயகவே கைலாச’ என்னும் தொடருக்கு, ஒருநாள் அவரிடமே பொருள்சொல்லும்படி கேட்டேன். உழைப்புதான் கைலாசம் என்று சொன்னார் அவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தமிழிலும் ஒரு தொடர் உண்டு என்றேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.

Friday 18 November 2016

ஞானியின் பார்வை- விதையும் உரமும்


1957ஆம் ஆண்டில் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரை குமுதம் இதழில் க.நா.சு. எழுதினார். பிறகு அமுதநிலையம் அக்கட்டுரைகளை ஒரு நூலாக வெளியிட்டது.  வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், எஸ்.எம்.நடேச சாஸ்திரியின் தீனதயாளு, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாட்சி ஆகிய நாவல்களை முன்வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அந்தக் காலத்தில் நாவல் கலை என்பது தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தரமுயன்றவர்கள் இந்த நாவல்களின் படைப்பாளிகள். இலக்கியத்திலே எந்த ஒரு முயற்சிக்கும் மரபு என்பதுதான் ஆணிவேர். இன்று தமிழ்க்கலையுலகில் நாவல் என்னும் ஆலமரம் எல்லாத் திசைகளிலும் விழுதுவிட்டு வேரூன்றி உறுதியாக நிற்கிறது. அதற்கு வழிசெய்து கொடுத்தவர்கள் இந்த நாவல் முன்னோடிகள் என்கிற மதிப்புள்ளவராக இருந்தார் க.நா.சு. அவர்களுடைய முயற்சிகளை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்தத் தொடரை எழுதியதாக அந்தப் புத்தகத்துக்காக எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் க.நா.சு. 

காலபைரவனின் கதைகள் - கட்டுரை



சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளரும் என் நண்பருமான அ.முத்துலிங்கம் ஒரு வாசகனுக்கு பல நூல்களைப்பற்றிய அறிமுகங்கள் ஒரே தருணத்தில் கிடைக்கும்வண்ணம் ஒரு தொகுதியை உருவாக்க எண்ணினார். அதையொட்டி ஒவ்வொரு எழுத்தாளரிடமும் அச்சமயத்தில் தான் படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அனுப்பும்படி கேட்டார். தற்செயலாக அப்போதுதான் காலபைரவனின் முதல் சிறுகதைத்தொகுதியான ‘புலிப்பாணி ஜோதிடர்’ புத்தகத்தைப் படித்துமுடித்திருந்தேன். உடனே அதைப்பற்றி ஒரு கட்டுரையை விரிவாகவே எழுதி அனுப்பினேன். ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் அ.முத்துலிங்கம் அத்தொகுதியைக் கொண்டுவந்தார்.

Thursday 10 November 2016

இருவேறு தோற்றங்கள் - மா.அரங்கநாதனின் சிறுகதைகள்


ங்கள்  இளம்பருவத்துநாட்களில் விழாக்கால மகிழ்ச்சிக்கு ஒருநாளும் குறைவந்ததே இல்லை. ஒவ்வொரு விழா சமயத்திலும் ஒரு புதுவிதமான விளையாட்டுப்பொருள் எங்கள் கைக்குக் கிடைத்துவிடும். ’அவன் கையில் இருந்ததுபோலவே எனக்கும் வேண்டும்என்று வீட்டுப் பெரியவர்களிடம் அழுது அடம்பிடித்து எல்லோருமே வாங்கிவிடுவோம். ஆட்டப்பொருளின் கவர்ச்சி தீரும்வரைக்கும் கீழே வைக்கவே மனம் வராமல் ஆடித் தீர்ப்போம். விழாக்காலக் கடைகளில் எங்களுக்காகவே புதுப்புது விளையாட்டுப்பொருள்கள் வந்தபடியிருக்கும்.

Tuesday 8 November 2016

புதிய கதைகள் புதிய அனுபவங்கள் (கட்டுரை)

என் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. விடுமுறை நாளில் எங்கள் ஆசிரியர் மிதிவண்டியிலேயே உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வார். இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள், ஏரிகள், பறவைகள் சரணாலயங்கள், கோவில்கள் எல்லா இடங்களையும் அவர்தான் எங்களைப் பார்க்க வைத்தார். ஒரு முறை வீடூரில் உள்ள அணைக்கட்டுக்கு அழைத் துச் சென்றிருந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முறையாக ஒரு அணைக்கட்டை நேருக்கு நேர் பார்க்கிறோம். அணைக்கட்டில் அப்போது நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. வெயியில் வெள்ளிக்குழம்புபோல மின்னியது நீர். கடலெனக் கொந்தளித்துப் பொங்கும் அப்பரப்பை நாங்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த் தோம். காற்று எங்களை அப்படியே அள்ளிச் சென்று தண்ணீருக்குள் வீசிவிடுமோ என்றொரு அச்சம் நெஞ்சில் படர, ஆசையாக சுவர்களில் மோதும் அதன் அலைகளைப் பார்த்தோம். எவ்வளவு தண்ணீர், எவ்வளவு தண்ணீர் என்று வாய் ஓயாமல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம். அணைக்கட்டு ஓரமாகவே உரை யாடியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுது போக்கினோம். ஓரமாக நிழலில் உட்கார்ந்து எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.

புதிய கதைகள் புதிய அனுபவங்கள் (கட்டுரை)

என் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. விடுமுறை நாளில் எங்கள் ஆசிரியர் மிதிவண்டியிலேயே உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வார். இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள், ஏரிகள், பறவைகள் சரணாலயங்கள், கோவில்கள் எல்லா இடங்களையும் அவர்தான் எங்களைப் பார்க்க வைத்தார். ஒரு முறை வீடூரில் உள்ள அணைக்கட்டுக்கு அழைத் துச் சென்றிருந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முறையாக ஒரு அணைக்கட்டை நேருக்கு நேர் பார்க்கிறோம். அணைக்கட்டில் அப்போது நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. வெயியில் வெள்ளிக்குழம்புபோல மின்னியது நீர். கடலெனக் கொந்தளித்துப் பொங்கும் அப்பரப்பை நாங்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த் தோம். காற்று எங்களை அப்படியே அள்ளிச் சென்று தண்ணீருக்குள் வீசிவிடுமோ என்றொரு அச்சம் நெஞ்சில் படர, ஆசையாக சுவர்களில் மோதும் அதன் அலைகளைப் பார்த்தோம். எவ்வளவு தண்ணீர், எவ்வளவு தண்ணீர் என்று வாய் ஓயாமல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம். அணைக்கட்டு ஓரமாகவே உரை யாடியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுது போக்கினோம். ஓரமாக நிழலில் உட்கார்ந்து எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.

பெர்னியரின் கண்கள் - (புத்தக அறிமுகம்)

ன் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ காரணங்களை அடுக்கி விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பத்தை அவருக்காக எழுதிக் கொடுக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடுவார். என் முணுமுணுப்புகளை அவர் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அந்தப் பத்து நாட்களில் ஊர் சுற்றிய அனுபவத்தை அவர் விவரித்துச் சொல்வதைக் கேட்டு மனம் மயங்கி அவருக்காக அந்த வேலையைச் செய்துகொடுப்பேன். ஊர்சுற்றுவதும் திரிந்தலைந்த சங்கதிகளை விவரிப்பதும் அவரைப் பொறுத்த அளவில் மகத்தான அனுபவங்கள். பொருள்செலவு, சம்பள இழப்பு, மற்றவர்கள் உரைக்கும் மதிப்பற்ற சொற்கள் எதையுமே அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார். இன்னொரு நண்பர் இவருக்கு நேர்மாறான குணமுடையவர். அவசர வேலை என்று சொல்லி நான்கு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு செல்வார். ஆனால் இரண்டே நாள்களில் வேலையை முடித்துக்கொண்டு அலுவலகத்துக்குத் திரும்பிவிடுவார். அதற்கென்று ஒரு கடிதம் எழுதி, எடுக்காத விடுப்பு நாள்களை மீண்டும் கணக்கில் இணைத்துக்கொள்ளக் கோரும் கடிதத்தையும் அவருக்கு நான்தான் எழுதவேண்டும். காரணம் இல்லாமல் ஊரில் எதற்காக அலையவேண்டும்? அலுவலகத்துக்கு வந்தால் வேலையாவது பார்க்கலாமே என்று சொல்வார். இருவருமே இரண்டு துருவங்கள். ஒருவருக்கு பயணம் என்றால் கொள்ளை ஆசை. இன்னொருவருக்கு பயணம் என்பதே வீண்வேலை. பயணங்களை முன்வைத்து உலகோர் அனைவரும் இப்படி இருபிரிவாகத்தான் பிரிந்திருக்கிறார்கள். பயணம் என்பது ஒரு மகத்தான அனுபவம். அது ஒரு கனவு. தேடல். அறிதல்முறை.

Friday 4 November 2016

சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)


 மகாகவி பர்த்ருஹரியின் சுபாஷிதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதிநூல். மதுமிதா இந்த நீதிநூலை சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சுபாஷிதத்தில் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று பெரும்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பத்து உட்பிரிவுகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள். ஒவ்வொரு சதகத்திலும் நூறு பாடல்கள் என்கிற கணக்கின்படி சுபாஷிதத்தில் முன்னூறு பாடல்கள் உள்ளன. படித்து முடிப்பதற்கான பாடல்கள் அல்ல இவை. நினைக்கும்போதெல்லாம் எடுத்து மீண்டும்மீண்டும் படித்துப்படித்து அசைபோடத்தக்க பாடல்கள். திருக்குறளைப் படிப்பதுபோல எங்கிருந்துவேண்டுமானாலும் தொடங்கி நாலைந்து பகுதிகளைமட்டும் படித்துவிட்டு மூடிவைத்துவிடலாம். அந்த வாசிப்பில் மனத்தைத் தொடும் வரிகள்வழியாக ஒட்டியும் வெட்டியும் விரிவடையும் எண்ணங்களின் தொகுப்பே அவை வழங்கும் அனுபவம். அந்த அனுபவம் ஒரு புதையல். சில சமயங்களில் நேரிடையாகவே கண்களில் தென்படும். சில சமயங்களில் ஒவ்வொன்றையும் விலக்கிவிலக்கி நடையாய் நடந்தபிறகுதான் கண்டடையமுடியும். சுபாஷிதம் வாசிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு புதையலைக் கண்டெடுக்கலாம்.

Thursday 3 November 2016

தன்னம்பிக்கையின் வெற்றி - (புத்தக அறிமுகம் )


இறந்துபோன தன் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டி நின்ற ஒரு தாயிடம் மரணமே நிகழாத ஒரு வீட்டிலிருந்து கடுகு வாங்கி வரும்படி சொல்கிறார் புத்தர். ஆவலோடு ஒவ்வொரு வாசலிலும் நின்று கடுகுக்காக யாசிக்கிறாள் அந்தத் தாய். ஆனால் எந்த வீட்டிலிருந்தும் அவளால் கடுகைப் பெறமுடியவில்லை. எல்லோருடைய வீடுகளிலும் ஏதோ ஒருவகையில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அத்தருணத்தில் பிறப்பைப்போலவே இறப்பும் இயற்கையானது என்பதையும் மரணத்தைத் தடுப்பது சாத்தியமற்ற செயல் என்பதையும் அந்தத் தாய் புரிந்துகொள்கிறாள். அன்றுமுதல் கடுகு என்பது மரணத்தோடு தொடர்புள்ள ஒரு குறியீடாக நிலைத்துவிட்டது. கடுகு வாங்கி வருவது என்பது, மரணத்திலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு நிகரானது.