Home

Showing posts with label தமிழ்ச்சிறுகதைகள். Show all posts
Showing posts with label தமிழ்ச்சிறுகதைகள். Show all posts

Sunday, 29 June 2025

பாம்பு - சிறுகதை

 

சத்திரத்துக் கல்திண்ணையும், ரெட்டியார் வாங்கிப் போட்ட தினத்தந்தியும் பொது அறிவுப் பொக்கிஷங்களாக இருந்த நாட்கள் அவை.   வாயில் வெற்றிலையை மென்று குதப்பியபடி ரெட்டியாரும், கிராமணியும் அரசியல் பேசுவார்கள். சூடு குறையும்போதெல்லாம் சுந்தரவேலு நாயுடு குத்திக்கிளறி விடுவார். வார்த்தைகள் சரம்சரமாய் விழும். கேள்விகள், பதில்கள், எக்களிப்புகள், பரிகாசங்கள், நடுநடுவே சோடாக்கடை கிராமபோனில் புறப்பட்டு வரும் என் அபிமான நடிகரின் லட்சிய கீத வரிகள். என் ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு ஏறும். படு கிளர்ச்சியான மனநிலையில் இருப்பேன். மரத்தடியில் எவனாவது ஒருவன் அதே நடிகரின் அங்க அசைவுகளோடு ஆடிக்காட்டி வித்தை செய்வான். இறுதியில் விழும் காசுகளைக் கும்பிட்டுவிட்டு பொறுக்கிக்கொள்வான்.

Sunday, 13 April 2025

கடல் - சிறுகதை

 

 பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடலைப் பார்த்தபடி நின்றான் முட்டக்கோஸ். அருகில் யாரும் இல்லை. கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாக ஓடிவரும் அலைகள் நெஞ்சில் முட்டிமோதுவதைப்போல இருந்தது. “எனக்கு எதுவும் தெரியாது சாரு. நான் சொல்றத நம்பு சாருஎன்று அழுது கெஞ்சக் கெஞ்ச இந்தக் கரையோரமாகத்தான் அடித்து இழுத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள். இடுப்பெலும்பை முறிப்பது போல இடைவிடாது விழுந்த லத்தியடிகள் இன்னும் நினைவில் இருந்தன.   அனிச்சையாக பின்புறத்தைத் தடவிக்கொண்டன அவன் கைகள்.

Tuesday, 1 April 2025

புதிய எல்லையை நோக்கி

  

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் உருவாக்கிய கதைவடிவம் இன்னொரு வகையில் புதுமையாக அமைந்திருந்தது.  ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், ஆதவன் போன்றோர் முன்வைத்த வடிவங்கள் மற்றொரு புதிய பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தன.

Sunday, 28 July 2024

நாட்டார் கலையும் நவீன கலையும்

 

நாட்டார் பாடல்களின் ஈர்ப்புக்கு மிகமுக்கியமான காரணம்,  அவற்றின் இசைத்தன்மையும் சொற்களை அடுக்கடுக்காக முன்வைத்துச் செல்லும் போக்கும் ஆகும். தாலாட்டு, ஒப்பாரி என எல்லா வகையான பாடல்களுக்கும் இது பொருந்தும். ‘மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூச் செண்டாலே, அம்மா அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே, அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே, சித்தி அடிச்சாளோ செண்பகப்பூச் செண்டாலே’ என்னும் பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். அழும் குழந்தையை அமைதிப்படுத்தி உறங்கவைக்க ஒரு கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது. அதற்காகவே அச்சொற்கள் அடுக்கப்படுகின்றன. பாடும்தோறும் அதன் இனிமை மனத்தை மயக்குகிறது. உரைநடை என ஒன்று உருவானதுமே இந்த இசைத்தன்மை மறைந்துவிட்டது. அடுக்கிச் சொல்லும் முறை கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோய்விட்டது என்றே சொல்லவேண்டும். மரபான உரைநடைக்காலத்தில் அதன் பயன்பாடு மெல்லமெல்ல குறையத் தொடங்கி, நவீனக் கதையாசிரியர்களின் உரைநடைக்காலத்தில் முற்றிலுமாக மறைந்தே விட்டது.

Sunday, 19 May 2024

உண்மையும் வருத்தமும்

 

வளவனூரிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துகளிலும் செல்லலாம். ரயிலிலும் செல்லலாம். விழுப்புரத்திலிருந்து ஒவ்வொரு பத்து நிடத்துக்கும் ஒருமுறை வரும் ஏதேனும் ஒரு பேருந்து புதுச்சேரிக்குச் செல்வதாகத்தான் இருக்கும். அது வளவனூரிலும் நின்று செல்லும். ஆனால் பல சமயங்களில் நின்றபடி பயணம் செய்யக்கூட அந்தப் பேருந்துகளில் இடம் இருக்காது. ஆனால் அவசரத்துக்கு வேறு வழியில்லை. அதில்தான் செல்லவேண்டும். எவ்விதமான அவசரமும் இல்லையென்றால் ரயிலில் வசதியாகச் செல்லலாம். ஆனால் காலையில் பத்துமணிக்கு ஒரு ரயில் வரும். பிறகு மாலையில் ஐந்தரை மணிக்கு ஒரு ரயில் வரும். அதற்குப் பிறகு சேவை கிடையாது.  அது ஒன்றுதான் குறை. ஆயினும் எனக்கு பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் பிடிக்கும். அதனால், பல நேரங்களில் அந்த நேரத்துக்குக் காத்திருந்து ரயிலில்தான் செல்வேன்.

Sunday, 25 February 2024

சுஜாதா - நம்பமுடியாத விசித்திரம்

 

சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். நாற்பத்தைந்து-நாற்பத்தாறு ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது.

Sunday, 21 May 2023

கண்காணிப்புக் கோபுரம் - சிறுகதை

 

கண்காணிப்புக் கோபுரம் இருந்த குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பாதையின் நாலாவது திருப்பத்தில் நொச்சிமரத்தடியில் வழிமாறிச் சென்றுவிட்ட எருமையொன்று குழப்பத்தில் நான்கு திசைகளிலும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைத் திருப்பி கண்ணாடிக்கோளம்போல மின்னும் கரிய விழிகளை உருட்டி ‘ம்மே’ என்று முதலில் சத்தமிட்டது. பிறகு, அதை நெருங்காமலேயே விலகி நின்றுவிட்ட என் திகைப்பை உணர்ந்து நான் அதனுடைய மேய்ப்பனல்ல என்பதைப் புரிந்துகொண்டு, மற்ற திசைகளின் பக்கம் தலையைத் திருப்பி பலவீனமான குரலில் மீண்டும்மீண்டும் ‘ம்மே ம்மே’ என்றது. அதன் கழுத்து வேகமாக அசையும்தோறும் மணியசைந்து ஓசை எழுந்தது.

Sunday, 12 March 2023

ஒட்டியும் ஒட்டாமலும்

  

பிரபாகரின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கிராமவாழ்க்கை என்னும் தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறவுநிலை என்பதைத் தாண்டி சமூக உறவுநிலையே இக்கதைகளின் மையமாக உள்ளது. ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் மேல்சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அப்பண்ணையில் வேலை பார்க்கும் அடிமட்டச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான உறவின் பல பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறார் பிரபாகர்.

Sunday, 20 November 2022

மரணம் - சிறுகதை

 

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்  கிடந்தது.

Sunday, 2 October 2022

கி.ராஜநாராயணன் : மகத்தான ரசிகர்

 

1989இல் ஒருநாள் வழக்கம்போல புதுவையிலிருக்கும் நண்பரோடு தொலைபேசியில் பேசியபோதுஒரு முக்கியமான விஷயம் சொல்றேன். கேட்டுக்கோ. எழுத்தாளர் கி.ரா. இங்க பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு விசிட்டிங் ப்ரொஃபசரா வந்திருக்காருஎன்றார். ”ஜாய்ன் பண்ணிட்டாரா?” என்று ஆவலுடன் கேட்டேன். “ஜாய்னிங்லாம் முடிஞ்சது. லாஸ்பேட்டைக்கு பக்கத்துல வாடகைக்கு வீடு எடுத்திருக்காரு. நான் அடுத்த வாரம் போய் பார்க்கலாம்ன்னு இருக்கேன்என்று சொன்னார். அதைக் கேட்டதும் அந்தக் கணமே வண்டி பிடித்துச் சென்று அவருடைய வீட்டு முன்னால் நிற்கமாட்டோமா என்று இருந்தது.

Wednesday, 7 September 2022

கடலோர வீடு - சிறுகதை

 வீட்டுத் தரகன் முத்தப்பன் பேச்சோடு பேச்சாகராசியில்லாத வீடுஎன்று குத்திக்காட்டியதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்குள் சட்டெனச் சீறியெழும் எரிச்சலையும் கோபத்தையும் சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஆனால் என் முகக்குறிப்பிலேயே அதை உணர்ந்துகொண்ட முத்தப்பன்ஊருல அப்படி ஒரு பேச்சு பரவி இருக்குது சார். நாலு பேரயும் கலந்து பேசிட்டுத்தான கஸ்டமர் கடைசியில் நம்மகிட்ட வரான்என்று பட்டப்பெயர் சூட்டியதில் தன் பங்கு எதுவுமில்லை என்பதைப் போலப் பின்வாங்கினான். மறுகணமே பத்து லட்ச ரூபாய் விலை மதிப்புள்ள வீட்டைப் பாதியாகவும் முக்காலாகவும் மாற்றத் தரகர்கள் வழக்கமாகக் கையாளும் தந்திரப்பேச்சுதான் இது என்று எனக்குப் புரிந்துவிட்டது. “இந்த கஸ்டமர் போனா என்ன, வேற கஸ்டமர் வந்தா பாத்துக்கலாம் முத்தப்பாஎன்று பொதுவாகச் சொல்லிப் பேச்சை முடிக்கப் பார்த்தேன்.

Sunday, 28 August 2022

தீ - சிறுகதை

 அநேகமாய் எனக்கு விதிக்கப்போகிற தண்டனை அதிகபட்சமாய் இருக்கக்கூடும் என்றும், என்னை வேலையை விட்டே எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் என் சிநேகிதர்கள் சொன்னார்கள். அவர்கள் பேச்சில் முன்பு போல என்னுடன் ஒட்டுதல் வளர்க்கும் ஆர்வமோ, அன்யோன்யமோ இல்லை. எல்லாமே ஒரு கணத்தில் வடிந்துவிட்ட மாதிரி வறட்சியாகவும்  பீதி ஏற்படுத்துவதாகவும் இருந்தன. என்னுடன் பேசுவதில் கூட கலவரம் கொண்டது போல் தோன்றியது. அவர்கள் முகங்களில் அழுத்தமான பய ரேகைகளைக் காணமுடிந்தது.

Thursday, 25 August 2022

கு.அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 2

 

இன்னொரு முக்கியமான சித்திரம் சந்திப்பு கதையில் இடம்பெறும்

சின்னம்மா. காவேரிப்பாட்டியைப் போலவே இவளும் ஓர் அபலை.

சின்ன வயதில் துடிப்பாகவும் செழிப்பாகவும் வாழ்ந்தவள்தான் அவள்.

பக்கத்துவீட்டுக் குழந்தை என்றுகூடப் பாராமல் பாசத்தை மழையாகப்

பொழிந்தவள். அவளுடைய பாசமழையில் நனைந்த ஒருவன் பதினைந்து

ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய நினைவுகளைச் சுமந்தபடி அந்தச்

சின்னம்மாவைப் பார்க்கவருகிறான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவன் பார்ப்பதுமுற்றிலும் வேறொரு சின்னம்மாவை. காலத்தாலும்

மனிதர்களாலும் வஞ்சிக்கப்பட்டவளாக விதவைக்கோலத்தில் இருக்கிறாள்

அவள். சொத்தையெல்லாம் சொந்தக்காரர்களிடம் பறிகொடுத்துவிட்டு

கூலிவேலை செய்து பிழைக்கிறாள். யாரோ ஒருவனுடைய வீட்டின்

Sunday, 7 August 2022

சட்டை - சிறுகதை

 தனபாலுக்கு சட்டைதான் பெரிய பிரச்சனை.

வேறு ஏதாச்சும் சொல்லி கலாட்டா செய்தால் கூட பரவாயில்லை. கழுதை, குதிரை, தீவட்டி என்று கிண்டல் செய்தால் கூட பதிலுக்குப் பதில் மாடு, பன்றி, புண்ணாக்கு என்று கிண்டல் செய்துவிட்டு விடலாம். பதில் கிண்டல் செய்வதில் இஷ்டம் இல்லாவிட்டால் கூட போனால் போகட்டும் என்று தாங்கிக் கொள்ளலாம். ஆனால்போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ்என்று கூப்பிட்டு கலாட்டா செய்வது தான் தாங்கமுடியாத அசிங்கமாயும் ஆத்திரமாயும் இருந்தது. அதுவும் கண்ட கண்ட பேப்பர்களையெல்லாம் மடித்து தபால் போடுகிற மாதிரி சட்டைக் கிழிசலுக்குள் கை விட்டு பிள்ளைகள் போடும் போது அளவுக்கு மீறி வேதனையாய் இருந்தது