அநேகமாய் எனக்கு விதிக்கப்போகிற தண்டனை அதிகபட்சமாய் இருக்கக்கூடும் என்றும், என்னை வேலையை விட்டே எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் என் சிநேகிதர்கள் சொன்னார்கள். அவர்கள் பேச்சில் முன்பு போல என்னுடன் ஒட்டுதல் வளர்க்கும் ஆர்வமோ, அன்யோன்யமோ இல்லை. எல்லாமே ஒரு கணத்தில் வடிந்துவிட்ட மாதிரி வறட்சியாகவும் பீதி ஏற்படுத்துவதாகவும் இருந்தன. என்னுடன் பேசுவதில் கூட கலவரம் கொண்டது போல் தோன்றியது. அவர்கள் முகங்களில் அழுத்தமான பய ரேகைகளைக் காணமுடிந்தது.
எது வேண்டுமானால் நிகழட்டும் என்று ஒதுங்கி உட்கார்ந்தேன் நான். என் நிலை குறித்த படபடப்புகளே சுற்றிக் கவிழ்ந்தாலும் என்னுள் சூழ்ந்த அமைதி பெருகியது. நடந்த எதுவுமே திட்டமிடப்பட்டதல்ல. நடந்துவிட்ட ஒரு நிமிஷம் முன்புகூட இப்படி நேரும் என்று சத்தியமாய் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இது குறித்து சங்கடம்தான் எனக்கும். மறுபக்கம் சம்பவத்துக்கான ஆத்திரம் மூன்று வருஷங்களுக்கு முன்பேயே நெஞ்சில் விதையாகிவிட்டது என்றும் தோன்றியது. சிறிதுசிறிதாய்ப் பெருகி முறுக்கேறி உடல்முழுக்க ஆக்கிரமித்து கருணையே இன்றி உறக்கத்தைப் பழிவாங்கி நசுக்கித் தேய்த்து விடுகிற உடல் வேதனையையும், மன வேதனையையும், சகித்துக் கொள்ள இயலவில்லை. ஒரு பொறியாய் எரியும் தீ சட்டென முரட்டுத்தனமாய் பெருகி என்னைச் சுட்டுச் சாம்பலாக்கிக் கொண்டிருந்தது. குத்திக் கிழித்த விரக்தியை விலக்கும் பலமின்றி நெஞ்சின் மேலேயே சுமந்தபடி திரிந்தேன். சகல நேரங்களிலும் ஏமாற்றமும் துக்கமும் கவிந்து வதைத்தன. எல்லாம் சேர்ந்து இப்படி ஒரு புள்ளியை நோக்கி என்னைத் தள்ளும் என்று கொஞ்சமும் நான் அறிந்திருக்கவில்லை.
கல்யாணத்துக்கென்று எடுத்திருந்த விடுப்புக் காலம் முடிந்து மீண்டும் வேலையில் இணைந்த நாளில்தான் என் வேதனை ஆரம்பித்தது. வீட்டிலிருந்து புறப்பட்ட நிமிஷத்திலிருந்து ஓர் இரவு ஓர் பகல் முழுக்க நினைத்துக் கட்டிக்கொண்டு வந்த கனவுக்கோட்டை நொறுங்கி விழுந்தது. இரக்கமேயற்ற ஒரு காட்டும் மிருகம்போல நடந்துகொண்டார் என் உயர் அதிகாரி.
இப்போதிருப்பவர் அல்ல அவர். வேறு ஒருவர். குடும்பம் வைப்பதற்காக முன்வைத்த என் கோரிக்கைகளையும், கெஞ்சுதல்களையும் சிறிதுகூடப் பொருட்படுத்தாமல் உதறி வீசினார். அலட்சியமான முகபாவத்தோடு தனது சுழல் இருக்கையில் தளர்வாய்ச் சாய்ந்துகொண்டு முழுச் சுதந்திரத்துடன் போதிக்கத் தொடங்கினார். எங்கள் இலாகா நடத்தைச் சட்டத்தின் துணைப் பிரிவு, உட்பிரிவுகளையெல்லாம் மேற்கோள் காட்டி உபன்யாசம் செய்தார். இலாகா எதிர்பார்க்கும் தியாகத்தையும், கடின உழைப்பையும் மறுத்து சம்சார போகத்தில் நான் ஆழ்ந்து அழிந்து விடக்கூடாதென புத்தி சொல்லி, நான் செயலாற்ற வேண்டிய கேம்ப் விசாகப்பட்டினம் என்று கூறி அனுப்பினார். வெளியில் நண்பர்கள் கூடிக்கூடிச் சொன்ன ஆறுதலும், தத்தம் பங்குக்கு அதிகாரியை நினைத்துச் சொன்ன வசைகளும்தான் கேட்க இதமாய் இருந்தது. வெறுப்பிலும், விரக்தியிலும் அன்றிரவு மது அருந்தினேன். மனசில் சுசிலாவின் சித்திரம் அலைந்தது. நோவின் உச்சத்தில் கூவினேன். அதிகாரிகள் ஒழிக.
விசாகப்பட்டினத்தில் வழக்கம் போலவே என் அலுவல்கள். ஒருவனைக் கசக்கிப் பிழிய இவை மட்டுமே போதும். பதினேழு கிலோ மீட்டர் நீளத்துக்குப் பூமியைத் தோண்டி கேபிள் புதைத்தல்தான் வேலை. உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும், நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளும் அனுகூலத்தைச் செய்து தரும் திட்டம் அது. காலையில் சூரிய ஒளி படரத் தொடங்கியதுமே கடப்பாறையும், மண்வெட்டியுமாய் ஆண்கள் வந்து விடுவார்கள். கூட இருந்து வேலை கொடுக்க வேண்டும். பள்ளத்துக்குள் ஏற்கனவே புதைந்திருக்கிற பிற இலாக்காக்கள் சம்பந்தப்பட்ட கேபிள்களுக்கும் குழாய்களுக்கம் எந்தவித அபாயமுமின்றி வெகு ஜாக்கிரதையாய் செய்விக்கவேண்டும். அறுபது எழுபது ஆண்களுக்கும் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று சொல்லிச் சொல்லி மீள்வதற்குள் எவனாவது ஒருவன் குழாயைக் கடப்பாறையால் கிழித்து வைத்திருப்பான். கிடக்கிற வேலையெல்லாம் போட்டுவிட்டு, புகார்கள் வருவதற்குள் உடனடியாய் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்தடி பள்ளம் தயாரானதும் பிரம்மாண்டமான கேபிள் உருளையைத் தள்ளி வரவேண்டும். சகல ஜாக்கிரதையோடு அச்சு பொருத்தி சக்கரங்களிடையே ஏற்ற வேண்டும். தார் பூசிய கேபிளை மடங்கி விடாமல் நிதானமாய்ப் பிரித்தெடுத்துப் புதைக்கவேண்டும். கேபிள் மேல் சரியாய் ஓரடி மண் சமனமாய் நிரவி அதன் மேல் ஆபத்துக்கால நடவடிக்கையாய் செங்கற்கள் அடுக்கு. அப்புறமும் ஓரடி மண். அதற்கு மேல் முழுக்க மண்.
இழுத்துப் புதைத்த பின்பு சோதனை. இந்தப் பக்கத்தில் முனையில் இருந்து அனுப்பப் பெறும் அதிர்வலைகள் சிதறாமல் அதே வீச்சில் அடுத்த பக்கம் கிடைக்கிறதா என.
தெருவோரம் கூடாரத்தில்தான் இரவுகளில் என் வாசம். உழைப்பில் சோர்ந்துபோய் முடங்கும்போது என்னைப் பிளந்து துவம்சம் செய்தது என் வேட்கை. மணமேடையில் சுசிலாவின் அருகாமை மட்டுமேயளித்த புதுவித மணம் நெஞ்சில் கிளம்பி அலைக்கழித்தது. வெளியில் கேட்டுவிடாத குரலில் சுசிலாவுடன் பேசினேன். எட்டுப் பக்கத்துக்கு நீண்ட கடிதம் எழுதினேன். ‘என்ன செய்ய முடியும் சுசிலா? சகலத்தையும் என் வசதிக்கேற்ப கற்பனை செய்து ஏமாந்து விட்டேன். அதிகாரமும் அதிகாரிகளும்தான் நம் குடும்ப வாழ்வைத் தீர்மானிக்கிற சக்தி என்கிற நிஜம் மிகத் தாமதமாகவே என் நெஞ்சில் உறைக்கிறது. எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா? ஓர் ஆறுமாச காலம் நிரந்தரமான கேம்ப் என்றாலும் பரவாயில்லை சுசிலா. தாம்பத்யத்தைத் தொடங்கி விடலாம். பாவி அதிகரிரிகள் தருகிற வேலைகள் எல்லாமே ஓரிரு மாச வேலைகள். அதற்கு நடுவிலும் அது வாங்க, இது கொடுக்க என நித்தமும் முன்னேற்பாடாற்ற டூர்கள். கொஞ்சம் பொறுத்துக் கொள்ள...’
தூக்கம் வரவில்லை. கூடாரத்தை விட்டு வெளியே வந்தேன். அடுத்த கூடாரங்களில் கூலி ஆள்களின் நிம்மதியான தூக்கம். பனியும், நிலா வெளிச்சமும் ஒருவித குளுமையையளித்தது. அழுகை பெருகியது எனக்கு. ரொம்ப நேரம் பாலத்துக் கட்டையில் உட்கார்ந்து அழுதேன். ஒவ்வொரு இரவிலும் என் அழுகை கூடியது. அழுத கண்ணீர் உலர்ந்து வரிகளாகப் பலமுறை அப்படியே தூங்கவும் செய்தேன். தொலைவிலிருந்து வரும் சுசிலாவின் மூச்சுக்காற்றே இசையாகி என்னைத் துயில வைப்பதாய் நினைத்துக்கொண்டேன். என் அதிகாரி மனசு வைக்காமல் ஒரு நிரந்தர கேம்ப் அமையாது என்ற நிலை புரிந்ததும் நான் கெஞ்சிக் கேட்கத் தயாராய் இருந்தேன். இரவில் தினசரி வேலை நடப்பைப் பற்றித் தொலைபேசியில் தகவல் சொல்லும் போதெல்லாம் கடைசியில் மிகத் தாழ்மையான குரலில் என் கோரிக்கையை ஞாபகப்படுத்தத் தொடங்கினேன். ‘பார்க்கலாம்’ என்பதே அவர் பதிலாக இருந்தாலும், அதன் விளைவை நல்ல அர்த்தத்தில் மாத்திரம் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருந்தேன். கொஞ்சம்கொஞ்சமாய் வேலைகள் நடந்து வெற்றிகரமாய் முடிந்து உள்ளூர் கண்காணிப்பு இலாகா வசம் பரிபூரணமாய் ஒப்படைக்க
இரண்டரை மாசமானது. இதற்குள் துரும்பாய் இளைத்து விட்டேன் நான். கூடாரங்களை அவிழ்த்து வண்டியில் ஏற்றிக் கொண்டு தலைமையகம் வரும்போது ரொம்பவும் பரபரப்போடு இருந்தேன். என் எதிர்பார்ப்பு என்னைப் புதிய ஆளாய் ஆக்கி விட்டது. ஆனாலும் குப்புறத் தள்ளி மிதிக்கிறமாதிரி விஜயவாடர் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டார் அதிகாரி. நான் அவரது வாக்குறுதியையெல்லாம் ஞாபகப்படுத்திக் கெஞ்சினேன். ஆணவமான குரலில் என்னை அடக்கினார் அவர். அதுமட்டுமன்றி அதிகாரிகள் சொற்படி நடப்பதுதான் அரசாங்க உத்தியோகஸ்தனின் கடமை என்றும் ஒரு நல்ல அதிகாரிக்கு வேலையில்தான் கண் இருக்குமேயொழிய, வேலை செய்கிறவர்களின் அம்மா, அப்பா, பெண்டாட்டி, பிள்ளை எனத் தனிப்பட்ட விவகாரங்களைப் பற்றி யோசிக்கமுடியாது என்றும், அந்த மாதிரியான யோசனைகள் அரசாங்கத் திட்டங்களைத் தோல்வியுறச் செய்து ஸ்தம்பிக்க வைத்துவிடும் என்றும் ஞானோபதேசம் செய்து வெளியே அனுப்பினார்.
சுக்கு நூறாய் உடைந்துபோனேன். கடைசி நிமிஷத்தில் என் ஆசை உருக்குலைந்ததில் பெரிதும் நொந்துபோய் இருந்தேன். அதிகாரிகள் நம்பத் தக்கவர்கள் அல்லர் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். சொல்லியாற்றிக் கொள்ளவும் நண்பர்கள் யாரும் தலைமையகத்தில் இல்லை. அவரவர்களும் வேலை நிமித்தம் தென்னிந்தியா முழுக்க வேறு கேம்ப்களுக்குச் சென்றிருந்தார்கள். அவர்கள் பிரச்சினையற்ற பிரம்மசாரிகள். கும்பலில் முதலில் கல்யாணமானவன் நான். எனக்குத்தான் எல்லா வேதனையும், இம்சைகளும்.
விஜயவாடா முகவரிக்கு வந்த சுசிலாவின் கடிதங்களுக்கு நிறையச் சமாதானங்கள் எழுதினேன். நிஜமென்ன என்றால் என்னை ஆக்ரமித்துக் குலைக்கும் தவிப்புகளுக்கு எனக்கு நானே சொல்லிக் கொண்ட அசட்டுச் சமாதானங்கள் அவை. எழுநூறு, எண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கையாலாகாத என்னைப் போன்றவனுக்கு வேறு கதியில்லை. இந்த சுய பரிதாபமும், புலம்பலும், சமாதானங்களும்தான் பொங்கிச் சீறும் சமுத்திரத்தையும், ஆரவாரமாய் உயரும் அலைகளையும் கடக்கக் கிடைத்த மரக்கட்டைகள் என்று நினைத்துக் கொண்டு, அதே நினைவில் என்னை இழந்து தூங்கப் போனேன்.
விஜயவாடா வேலை முடிய நான்கு மாசமானது. தீபாவளி அப்போது. பல தடவை கெஞ்சிக் கேட்டு பத்து நாள்கள் விடுப்பு
எடுத்தேன். ஏறத்தாழ முக்கால் வருஷத்துக்குப் பிறகு சுசிலாவின் முகத்தைப் பார்க்கப் போனேன். பிரயாணத்திலேயே போக ஒரு நாள், வர ஒரு நாள். மிச்சம் எட்டு நாள்தான். சிறுகச் சிறுகப் பெருகிய விழைவுகளைச் சுமந்து வந்த என் எதிர்பார்ப்புகள் எதையுமே பொருட்படுத்தாமல் இரண்டு வீட்டுப் பெரியவர்களும் கல்யாண சமயத்திலேயே விடுபட்டுப் போன உறவுக்காரர்கள் வீட்டுக்கெல்லாம் அவரவர்கள் லெளீக கோபதாபங்களைத் தவிர்ப்பதற்காகப் போய்வர அனுப்பினார்கள். அலுப்பும் சலிப்புமான பஸ் பிராயணங்களும் உறவின் நெருக்கடிகளும். ஆனந்தமாய்க் கனவுகண்ட எளிமையான சந்தோஷம் கூட வாய்க்கவில்லை. பெட்டிக்குள் துணிகளை அடுக்கிக்கொண்டு புறப்படும் போது பிடரியில் விழுந்த கண்ணீர்த் துளியின் சூட்டில் திரும்பிப் பார்த்தேன். சுசிலாவின் நனைந்த கண்களைப் பார்க்க இரக்கமாய் இருந்தது. அழுகைக்கான காரணத்தை நான் கேட்பதற்குள் ‘எப்ப இட்டும் போவீங்க?’ என்று கேட்டாள் அவள்.
‘கூடிய சீக்கிரம்.’
இந்த முறையாவது ஒரு நிரந்தர கேம்ப் தந்து உதவும்படிக் கேட்டபோது, அதிகாரிக்கு முகம் போன போக்கே சரியில்லை. அளவு மீறி அவர் எரிச்சலுற்றதை முகத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. என்னைச் சுயநலமி என்றும், முரட்டுப் பிடிவாதக்காரன் என்றும் என் மறுப்பு வார்த்தைகளையெல்லாம் மீறிப் பட்டம் சுமத்திக்கொண்டு போய் என்னைப் போலச் சொந்த வாழ்வில் இச்சை கொண்டவர்கள் இது போன்ற உத்தியோகத்துக்கு வந்தே இருக்கக் கூடாது என்று சொல்லி முடித்தார். சுசிலாவுக்கு என்ன பதில் எழுத என்கிற வருத்தம் மனசில் விரியவிரிய சிலையாய் நின்றிருந்தேன் நான். ஒரு பெரிய கனைப்புடன் ஹுப்ளி போகச் சொன்ன அதிகாரியின் வார்த்தைகள் மிகத் தாமதமாகவே நெஞ்சில் உறைத்தன.
ஹுப்ளி வாசத்தின்போது இந்த அதிகாரி போய் புதிய அதிகாரி வந்தார். ஆந்திரத்தில் இருந்து வந்த இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி இரண்டு மனைவிகளுமே விவாகரத்து பெற்று விலகிப் போய்விட தனிக்கட்டையாய்த்தான் வருகிறார் என்றும், பிள்ளைகள் கூட எதுவும் இல்லை என்றும் தகவல்களைச் சிரமமின்றிச் சேகரிக்க முடிந்தது. என் வேலை இருப்பிடத்துக்கு வருகை தர இருக்கிறார் என்கிற செய்தி எனக்குத் தெம்பாக இருந்தது. இவர் காலத்திலாவது எனக்கு ஒரு சந்தோஷமான வாழ்வு வாய்க்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதிகாரி நான் நினைத்ததைக் காட்டிலும் சற்றே குள்ளமாய் இருந்தார். ஜீப்பை விட்டிறங்கி தொந்தியான வயிற்றை முன்னால் தள்ளிக் கொண்டு வந்ததுபோல நடந்து வந்து என்னுடன் கை குலுக்கினார். அவர் உள்ளங்கையையும், விரல்களும் குட்டையாகவும் உறுதியாகவுமிருந்தன. நின்றவாறே வேலை விவரங்களையெல்லாம் விசாரித்து நான் சொல்லச்சொல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘அச்சா’வுக்கும் தலை உயர்ந்து தாழ்ந்தது. என் பதிலுக்குப் பிறகு நகரத்திலேயே பெரிய ஓட்டலுக்குச் சாப்பிடக் கிளம்பினோம். சாப்பாடும் தாம்பூலமும் ஆகி அவருக்கென ஏற்கனவே பதிவு செய்திருந்த விடுதி அறையில் ஓய்வெடுக்க விட்டுவிட்டுப் புறப்படும் சமயம் நான் என் கோரிக்கையை முன் வைத்தேன். என் குரல் மிகவும் இளகிக் கரகரப்பாகியது. நான் சொன்னதையெல்லாம் பொறுமையுடன் கேட்டிருந்துவிட்டு கண்டிப்பாய் எனக்கு உதவுவதாய் வாக்குறுதி கொடுத்தார். திருப்தியோடு கூடாரத்துக்குத் திரும்பினேன் நான். வழக்கத்துக்கு மாறாக பதினாறு பக்கங்களுக்குச் சுசிலாவுக்கு நீளமான ஒரு கடிதம் எழுதினேன்.
நாள்கள் நகர்ந்தன. என் நெஞ்சம் உருகத் தொடங்கியது. ஞாபகங்களில் சுசிலாவின் உருவமே கோயில் சிற்பமாய் உறைந்து கிடந்தது. சுசிலாவின் கடிதங்களையும் நினைவுகளையுமே ஆகாரமும். தண்ணீருமாய்ப் புசித்துக் கொண்டிருந்தேன்.
மறுபடியும் அதிகாரியைப் பார்த்தேன். எதுவுமே நடக்கவில்லை என்பது குறித்து என் ஏமாற்றத்தைச் சூசகமாய்த் தெரிவித்துக் கவலையைச் சொன்னேன். மையமாய் சிரித்துக் கொண்டே ‘ஆவட்டும் பார்க்கலாம்’ என்றார் அதிகாரி. பழைய அதிகாரியின்
பழைய பதில்தான். என் வெறுப்பை என்னால் மறைக்க முடியவில்லை. எரிச்சல் பொங்கும் முகத்துடன் அவரை முறைத்து விட்டு வந்து கூரைமுகட்டை அண்ணாந்து பார்த்துக் கிடந்தேன். விரக்தியின் முள்காட்டில் தலைக்குப்புற விழுந்தேன். ஏமாற்றம் பெருகப் பெருக முறுக்கேறும் நரம்புகள் அறுந்து ஆவி பிரிந்துவிடும் என்று நம்பினேன். கற்பனையிலும் கனவிலும் மூழ்கிப் போனேன். என் கனவுக் காட்சியில் எல்லாம் ஒரு நிரந்தரமான கூரையும், கூரையின் கீழே அன்பே உருவான சுசிலாவும்.
மீண்டும் தீபாவளி விடுப்பில் ஊர்ப்பயணம். என்னைக் கண்டதும் சுசிலாவின் முகத்தில் தூண்டிவிட்ட விளக்கு மாதிரி பிரகாசம் படர்ந்தது. வாசலில் வந்து நின்ற என்னைக் கண்டு ஓடிவந்து பெட்டியை வாங்கினாள். அவள் கண்கள் தளும்பின.
‘என்னதா சொல்றாரு ஒங்க அதிகாரி?’
‘அதே பழய பாட்டுதா.’
எட்டு நாள்கள் தூசுமாதிரி பறந்து விட்டன. புறப்படும் நேரம் வந்ததும் அவள் அழுதாள். மனசு பதறினாலும் காரணம் புரிந்திருந்ததில் சிலையாய் நின்றிருந்தேன். ஆயினும் அவள் தோளைத் தொட்டுச் சமாதானப்படுத்தினேன்.
‘தனியா இருக்க முடியலிங்க.’
‘கொஞ்சம் பொறுத்துக்க சுசிலா.’
ஹுப்ளியிலிருந்து திருப்பதி, தாவன்கெரே, நிஜாமாபாத், கோட்டயம் என மூலைமுடுக்கெல்லாம் விரட்டினார் அதிகாரி. விவேகமற்ற செயல்தான் எனினும் நானும் கேட்பதை நிறுத்தவில்லை. ஒரு சடங்குமாதிரி தொடர்ந்து இதைத் செய்தேன். அதிகாரிகளின் பாசாங்கான போலி முகங்களைக் கிழித்துத் தொங்கவிட நினைத்தேன்.
சும்மா இருக்கும்போதெல்லாம் யோசனைகள் நெஞ்சை அரித்தன. மூன்று வருஷத்தில் மூன்று தீபாவளிகள். முப்பது நாள்கள். அதுவும் பிரயாண நாள்கள் நீங்கலாக மனைவியோடு வாழ்ந்திருக்கிறேன். வாழ்வுக்கு என்ன அர்த்தம். சரியா தப்பா இது? சரி என்றால் கவலை எதற்கு? தப்பு என்றால் என் நிலைமை என் இப்படி ஆனது? கேள்விகள் ஒவ்வொன்றும் பாம்புகளாய் வளைத்துக் கொத்தின. விஷக்கடுப்பேறி தவித்தேன். வெறி தலைக்கேறி இருந்தது. வேலையை நிறுத்திவிட்டு அதிகாரியைப்
பார்க்க வந்தேன்.
செய்தித்தாளில் மூழ்கி இருந்த அதிகாரியின் முகம் என்னைக் கண்டு வியந்தது. ஆச்சரியமுடன் தொண்டையைச் சரி செய்துகொண்டு என் பக்கம் திரும்பினார். அறையின் சூழல் நிசப்தமாய் இருந்தது.
“பாதி வேலைல எதுக்கு வந்தீங்க?’’
”முக்கிய விஷயம் ஒன்னு பேசணும்.’’
”அங்கேர்ந்தே பேசியிருக்கலாமே...’’
”நேர்லதான் பேசணும்.’’
”என்ன?’’
”எனக்கும் பர்மனன்ட் கேம்ப் வேணும்.’’
”அப்புறமா பார்க்கலாம்ன்னுதா சொன்னன்ல-?-’’
”எத்தினி வருஷமா கிளிப்பிள்ள மாதிரி இதயே திருப்பித் திருப்பிச் சொல்வீங்க?’’
எனக்குக் கோபம் வந்தது. குரல் தடித்தது. நான் ஓரடி முன்னேறினேன். அதிகாரி முஷ்டியை உயர்த்தி மேசைமேல் குத்தியபடி என்னை வெளியே போகச் சொன்னார். நான் மேலும் ஓரடி முன்னால் வைத்தேன். அதிகாரியின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.
”எனக்குப் பர்மனன்ட் கேம்ப் வேணும்.’’
”ஒங்க நடத்த சரியில்ல மிஸ்டர், பின்னால ரொம்ப அனுபவிக்க வேண்டிதா இருக்கும். மரியாதையா போய்டுங்க.’’
பேசியபடியே கைக்கருகில் இருந்த அழைப்பு மணியைத் தொடர்ந்து அழுத்தினார். வாசல் ஸ்கீரினைத் தள்ளிக் கொண்டு நுழைந்த ஏவலாளைப் பார்த்து என்னைச் சுட்டிக் காட்டி ‘‘வெளியே தள்ளு இந்த ஆள’’ என்றார். ஏவலாள் என்னை நெருங்கும் தருணத்துக்குள் நான் செயல்பட்டு விட்டேன். வேகமும் கொதிப்பும் என்னை உந்தித் தள்ளியது. அதிகாரியின் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்துக் கன்னங்களில் மாறிமாறி அறைந்தேன்.
ஏவலாள் என்னை விலக்கினார். அவரையும் மீறிக் கொண்டு திமிறினேன். கைக்கு அகப்பட்ட அதிகாரியின் முடியை இழுத்து இன்னொரு தரம் அறைந்தேன். ஏவலாள் சட்டெனக் குனிந்து
தோள்களை என் இடுப்புக்கு முட்டுக் கொடுத்து குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். சட்டென முழு அலுவலகமும் ஸ்தம்பித்து மனசின் சூடு தணிய இதெப்படி என்று பிரமித்தேன். நடந்து விட்டதை மீண்டும் நினைத்துக் கொண்டேன். மனசு லேசாய் இருந்தது. சிரிப்பு வந்தது.
சிரிப்பைக் கண்டதும் நாலைந்து மணி நேரமாய் சுற்றி நின்றிருந்த ஊழியர்களும் சிநேகிதர்களும் வினோதமாய்ப் பார்த்தார்கள். மீண்டும் பீதி அவர்கள் முகங்களில்.
”அதிகாரி ஒங்களை வரச் சொல்றார்.’’
ஏவலாள் வந்து சொல்ல நான் எழுந்தேன். தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்ப்பதுபோல் அனுதாபத்தோடு பார்த்த நண்பர்களை அமைதியாய் வணங்கிவிட்டு நடந்தேன். மஞ்சள் பூக்களிட்ட வாசல் ஸ்கீரினை விலக்கியபடி கேட்டேன்.
”மே ஐ கமின்?’’
(அரங்கேற்றம் 1992)