Home

Saturday, 20 August 2022

எப்பிறப்பில் காண்போம் இனி - முன்னுரை

   

காந்திய ஆளுமைகளைப்பற்றி நான் எழுதிவரும் கட்டுரைகளை  முன்வைத்து நண்பரொருவர் பேசிக்கொண்டிருந்தார். காந்திய ஆளுமைகளின் மன உறுதியையும் தியாகத்தையும் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் மெய்சிலிர்ப்பதாகக் குறிப்பிட்டார் அவர். அந்த ஆளுமைகளுடைய வாழ்க்கை இன்று ஒரு பேசுபொருளாக அமைவதற்கு அவர்களுடைய சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்புணர்வும் மிகமுக்கியமான காரணங்கள். நம்மால் வாழமுடியாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு மனிதனாக வாழ்வது எப்படி என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது. மகத்தான வாழ்க்கை, மகத்தான மனிதர்கள் என்று சொல்லிவிட்டு ஒரு கணம் பேச்சை நிறுத்தினார்.



இடையில் கேள்வியெதுவும் கேட்காமல் நான் அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  ஒருமுறை த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டிவிட்டு பெருமூச்சு வாங்கினார். பிறகு தனக்குள் எழுந்த எண்ணத்தை மறுப்பதுபோல தலையை அசைத்துக்கொண்டார். அதற்குப் பின் ஒரு புன்னகையுடன் மீண்டும் பேசத் தொடங்கினார். அந்தக் காலத்திலும் பொருளியல் வெற்றிகளும் வசதிகளைப் பெருக்கிக்கொண்டு வாழும் ஆசைகளும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களுக்கு நடுவில் இப்படிப்பட்ட அபூர்வமான தியாக தீபங்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அத்தீபங்கள் எண்ணற்ற ஏழை எளியோர் வாழ்க்கையில் வெளிச்சம் படர்வதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் ஒருவகையில் அத்தீபங்களின் வரிசையை நம் கண்முன்னால் நிழலாட வைக்கின்றன. பேசும் உற்சாகத்தில் இப்படி துண்டுதுண்டாக சொல்லிக்கொண்டே சென்றார் அவர்.

திடீரென பெயரளவில் தான் அறிந்துவைத்திருக்கும் காந்திய ஆளுமைகளின் பெயர்களை நினைவிலிருந்து ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார். அவர்களைப்பற்றிய கட்டுரைகளையெல்லாம் ஒவ்வொன்றாக இனிமேல்தான் எழுதிச் சேர்க்கவேண்டும். வரலாற்றில் அத்தகையோரின் பெயர்கள் எப்படியோ விடுபட்டுப் போய்விட்டன. அவர்களைப்பற்றிய விரிவான சித்திரங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குத் தெரிவிக்கவேண்டும். என்னால் முடிந்த அளவு உங்களுக்குத் தகவல்களைத் திரட்டியளிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத் திட்டத்தைப்பற்றிய பேச்சிலிருந்து விலகி மீண்டும் கட்டுரைகளை ஒட்டி அவர் பேச்சு தொடங்கியது.   ”ஒவ்வொரு கட்டுரையும் காந்தியிலிருந்து தொடங்கி காந்திய ஆளுமையை நோக்கிச் சென்று முடிவடைகிறது. அந்த அமைப்பு கட்டுரைக்கு ஓர் அழகையும் ஒருமையையும் கொடுக்கின்றன” என்றார். தொடர்ந்து “அது அப்படித்தான் இருக்கவேண்டும். அதுதான் சரி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டவராக “ஒரு தீபம் ஆயிரம்  தீபங்களைச் சுடரவைப்பதுபோல ஒரு காந்தி ஆயிரம் காந்திகளை உருவாக்கியிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.

அவர் பேச்சு எங்கெங்கோ அலைந்தாலும் இறுதியாக தொடவேண்டிய புள்ளியைச் சரியாகத் தொட்டு நின்றுவிட்டதைப் பார்க்க வியப்பாகவே இருந்தது. ஆயிரம் காந்திகள் என்னும் சொல்லை ஒருமுறை நானும் மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அழகான சொல். ஓடிப் பிடிக்கிற விளையாட்டில் திசைகளை மாற்றிமாற்றி ஓடித் தடுமாற வைக்கும் தோழனை சட்டென லாவகமாக எட்டிப் பிடித்துத் தொட்டுவிடும் சிறுவனைப்போல, தொடக்கத்தில் அவருடைய பேச்சு எதைஎதையோ தொட்டுத்தொட்டுச் சென்றாலும் இறுதியில் சரியான புள்ளியில் வந்து நின்றுவிட்டது.

காந்தியடிகள் அகிம்சைக்கொள்கையிலும் அறம்சார்ந்த பார்வையிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். அவையிரண்டும் அதுகாரத்துக்கு எதிராக நிற்கநேரும் அதிகாரமற்ற மக்களின் கேடயங்களாக விளங்கும் ஆற்றலுள்ளவை என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.  சாதி, மதம், இனம், மொழி என எல்லாவிதமான அடையாளங்களையும் கடந்து மனிதர்களை நேசிப்பவராக இருந்தார் அவர். அவருடைய அன்பும் பன்மைத்துவப்பார்வையும் எல்லையற்றவையாக இருந்தன. அவர் எப்போதும் திறந்த மனம் கொண்டவராக இருந்தார். பிறருடன் உரையாடுவதற்கும் பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எப்போதும் தயாராகவே இருந்தார். தம்மை நெருங்கிவரும் தொண்டர்கள் நெஞ்சில் இவ்வெண்ணங்களையே ஆழமான விதைகளாக ஊன்றினார். 

அத்தகு விதைகள் விழுந்து வேர்விட்டு வளர்ந்த இடங்களிலெல்லாம் காந்திகள் முளைத்தெழுந்து வந்தார்கள். காந்திகளைப்போலவே எளிய மக்களை நேசித்தார்கள். அவர்கள் முன்னேற்றத்துக்காக சேவையாற்றினார்கள்.  காந்திய ஆளுமைகளைப்பற்றிய புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம் இந்த எண்ணம் எனக்குள் மென்மேலும் உறுதியடைந்துகொண்டே வருகிறது. அவர்களைப்பற்றிய சித்திரங்களையே இந்தக் கட்டுரைத்தொகுதி வரிசையில் நான் எழுதிவருகிறேன்.

இந்த ஆயிரம் காந்திகளிலிருந்து இன்னும் ஆயிரமாயிரம் காந்திகள்  உருவாகியிருக்கக்கூடும். புகழையோ பெயரையோ விரும்பாத அவர்கள் இதே மண்ணில் எங்கோ அமைதியாக மக்களுக்குத் தொண்டாற்றிக்கொண்டிருக்கக்கூடும். தன்னால் இயன்ற அளவு இன்னும் ஆயிரம் காந்திகளை உருவாக்கிக்கொண்டிருக்கவும்கூடும். இன்று நம் விழிகளில் அவர்கள் தென்படவில்லை என்பதற்காக, அவர்கள் இந்த மண்ணில் இல்லை என்று முடிவுகட்டிவிட முடியாது. அவர்களைப்பற்றியும் எழுதும் தருணம் எதிர்காலத்தில் வரும். 

இந்தக் கட்டுரைகளை எழுதும் காலத்தில் நான் விரும்பிய பல புத்தகங்களை எனக்காகத் தேடிக் கொடுத்து உதவிய நண்பர்கள் மயிலாடுதுறை மருதசாமி, நரசய்யா, கமலாலயன், அமரரான ஈரோடு டாக்டர் ஜீவாவின் சகோதரி ஜெயபாரதி, காந்தி கல்வி நிலையம் சரவணன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த எல்லை சிவக்குமார், உழவர்கரை குப்புசாமி, கதிர்காமம் தமிழ்மணி, இராணிப்பேட்டை இராஜாராமன், கடலூர் ஜெயஸ்ரீ, பெங்களூரு விஜயன், சேலம் சூரியநிலா அனைவரையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் வழக்கம்போல நண்பர்கள் பழனியும் கே.பி.,நாகராஜனும் முதல் வாசகர்களாக வாசித்து தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்த உரையாடல்கள் எனக்கு எல்லா வகைகளிலும் ஊக்கமூட்டுவதாக இருந்தன. அவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

காந்திய ஆளுமைகளைப்பற்றிய கட்டுரைகளை நான் எழுதத் தொடங்குவதற்கு எல்லா வகையிலும் மூலவிசையாக இருந்தவர் சர்வோதயத்தொண்டரான க.மு.நடராஜன். எல்லோராலும் அண்ணாச்சி என அன்புடன் அழைக்கப்படும் அவர் சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கட்டுரையை வெளியிட்டு வந்தார். மின்னஞ்சலில் நான் அனுப்பும் ஒவ்வொரு கட்டுரையையும் படித்ததுமே, தொலைபேசியில் அழைத்து நீண்ட நேரம் உரையாடுவது அவருடைய வழக்கம். ஜே.சி.குமரப்பா, செளந்திரம் அம்மாள், கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன், கக்கன், மதுரை என்.எம்.ஆர்.சுப்பராமன், வினோபா என பல ஆளுமைகளுடன் அவர் நெருங்கிப் பழகியவர். அவர்களைப்பற்றிய கட்டுரைகளைப் படித்ததுமே அவர்களோடு பழகிய பழைய நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்துவிடும். நட்பால் விளைந்த அந்த இனிய அனுபவங்களையெல்லாம் நினைவிலிருந்து சொல்வார். அவற்றையெல்லாம் விரித்தெழுதினால் செறிவான கட்டுரைகளாக அமைவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும் உரையாடலில் ஆர்வமிருந்த அளவுக்கு, அவருக்கு எழுத்தில் ஆர்வம் இருந்ததில்லை. எழுதக் கோரும் என் வேண்டுகோள்களை ஒவ்வொரு முறையும் தன் புன்னகையால் கடந்துவிடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

காந்திய ஆளுமைகள் வரிசையில் புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.ஆர்.எஸ். என்கிற எஸ்.ஆர்.சுப்பிரமணியன் என்னும் சர்வோதயத்தொண்டரைப்பற்றி நான் ஒரு கட்டுரையை எழுதவேண்டும் என தொடர்ந்து அவர் நினைவூட்டிக்கொண்டே இருந்தார். நல்ல நட்போடு பழகும் குணமுடையவர் என்று அவரைப்பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார் அண்ணாச்சி. அவரைப்பற்றி எழுத நானும் ஆவல் கொண்டிருந்தேன். எங்கள் வளவனூருக்கு அருகிலிருந்த சகாதேவன்பேட்டையில் பிறந்தவர் அவர். நான் புதுச்சேரியில் படித்த காலத்தில் அவர் பெயரைத் தாங்கிய உயர்நிலைப்பள்ளியைப் பார்க்காத நாளே இல்லை. ஆனால் அவரைப்பற்றிய தகவல்களைத் திரட்டியெடுக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. எங்கும் பயணம் செல்லமுடியாதபடி இரண்டாண்டு காலத்தைத் தின்று விழுங்கிவிட்ட கொரானாவின் விளைவாக தகவலுக்காக நான் எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. அதற்கிடையில் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட அண்ணாச்சியின் மறைவு அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

சில நாட்களுக்கு முன்புதான் அண்ணாச்சி பெரிதும் விரும்பிய எஸ்.ஆர்.எஸ். பற்றிய கட்டுரையை எழுதி முடித்தேன். அக்கணத்தில் உண்மையிலேயே என் மனம் விம்மியது. நீங்கள் விரும்பிய கட்டுரையை எழுதிவிட்டேன் என்று நிறைவுடன் வானத்தைப் பார்த்துச் சொன்னேன். என் சொற்கள் அவரை எட்டியிருக்கும் என்று எண்ணுகிறேன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன் என்பதை நினைத்து என் மனம் நிறைவடைகிறது. காந்திய வழியில் மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய இக்கட்டுரைத்தொகுதியை க.மு.நடராஜன் அண்ணாச்சி அவர்களுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுதியில் அடங்கியிருக்கும் சில கட்டுரைகள் சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்யம் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பையும் நன்றியையும் இங்கு பதிவுசெய்ய விழைகிறேன். 

இந்த முன்னுரையை எழுதுவதற்காக அவ்வப்போது எழுதிய இக்கட்டுரைகளை ஒருசேரப் படித்துமுடித்தேன். காந்தியடிகளைப்பற்றியும் காந்தியிடிகளின் வழியில் தொண்டாற்றிய வெவ்வேறு ஆளுமைகளைப்பற்றியும் எழும் வியப்புக்கு அளவே இல்லை. இவர்களுக்கு இவையெல்லாம் எப்படிச் சாத்தியமானது என்று எனக்குள் நானே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் அனைவரையுமே நான் மனிதகுல மாணிக்கங்கள் என்றே அழைக்க விரும்புகிறேன். காந்தியடிகளைப்பற்றி கருத்துரைத்த அறிவியலாளர் ஐன்ஸ்டீன் எதிர்காலத் தலைமுறையினர் காந்தியடிகளைப்போன்ற ஒருவர் மக்களிடையில் ஒருவராக வாழ்ந்தார் என்பதை நம்ப மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொன்ன சொற்கள் நினைவிலெழுகின்றன. அந்த வாசகம் காந்தியடிகளுக்கு மட்டுமன்றி, அவர் காட்டிய வழியில் மக்கள் தொண்டாற்றிய அபூர்வப்பிறவிகளான ஆளுமைகளுக்கும் பொருந்தும். அவர்களைப்போன்றவர்களைக் காணும் பேறு, நமக்கு எந்தப் பிறவியில் வாய்க்குமோ, தெரியவில்லை

எப்போதும் என் எழுத்து முயற்சிகளுக்கு உந்துசக்தியாக விளங்கிவரும் என் மனைவி அமுதாவுக்கு என் அன்பு.  இந்தக் கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கு என் மனமார்ந்த நன்றி