Home

Thursday, 25 August 2022

கு.அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 2

 

இன்னொரு முக்கியமான சித்திரம் சந்திப்பு கதையில் இடம்பெறும்

சின்னம்மா. காவேரிப்பாட்டியைப் போலவே இவளும் ஓர் அபலை.

சின்ன வயதில் துடிப்பாகவும் செழிப்பாகவும் வாழ்ந்தவள்தான் அவள்.

பக்கத்துவீட்டுக் குழந்தை என்றுகூடப் பாராமல் பாசத்தை மழையாகப்

பொழிந்தவள். அவளுடைய பாசமழையில் நனைந்த ஒருவன் பதினைந்து

ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய நினைவுகளைச் சுமந்தபடி அந்தச்

சின்னம்மாவைப் பார்க்கவருகிறான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவன் பார்ப்பதுமுற்றிலும் வேறொரு சின்னம்மாவை. காலத்தாலும்

மனிதர்களாலும் வஞ்சிக்கப்பட்டவளாக விதவைக்கோலத்தில் இருக்கிறாள்

அவள். சொத்தையெல்லாம் சொந்தக்காரர்களிடம் பறிகொடுத்துவிட்டு

கூலிவேலை செய்து பிழைக்கிறாள். யாரோ ஒருவனுடைய வீட்டின்

பின்புறத்தில் ஒரு சின்னஞ்சிறு குடிசையில் தனிமையில் வாழ்ந்துவருகிறாள்.

அவனுக்கு இருக்கும் பரபரப்பும் ஆர்வமும் அவளிடம் துளிகூட இல்லாமல்

காணாமல்போன கோழிக்குஞ்சைப் பற்றி சம்பந்தாசம்பந்தம் இல்லாமல்

பேசுகிறாள். பிறகு அடையாளம் கண்டு அழுகிறாள். தேள்கடியிலிருந்து

தன்னால் காப்பாற்றப்பட்ட குழந்தை பெரிய மனிதனாகத் தன்முன்னால்

நிற்பது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவன் பணம்கொடுக்க

முன்வந்தபோது அவள் வாங்க மறுக்கிறாள். வலுக்கட்டாயமாக நோட்டுகளை

அவள் கையில் திணித்துவிட்டுத் திரும்புகிறான். நீயே கொண்டுபோ

என்று சொன்னபடி அவனைப் பின்தொடர்கிறாள் அவள். அவனோ

திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடிவந்து ரயிலில் உட்கார்ந்துவிடுகிறான்.

பின்தொடர்ந்து அவள் ஏன் வந்தாள் என்னும் கேள்வி முக்கியத்துவம்

வாய்ந்தது. பணம் அவளுக்குத் தேவையான ஒன்றுதான். அதைவிடவும்

முக்கியமான தேவை ஆறுதல், துணை. தேடி வந்தவனால் அப்படி

ஒரு துணை தனக்குக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான் அவளை

முதலில் பேசவைத்திருக்கவேண்டும். ஆனால் அவன் பணத்தைக்

கொடுத்துவிட்டுப் புறப்பட்டதால் எழுந்த ஏமாற்றமும் பதற்றமும் அவனைப்

பின்தொடர்ந்து செல்ல அவளைத் தூண்டியிருக்கக்கூடும்.

காலகண்டி சிறுகதையில் ஒரு தெருக்கூத்து நடக்கிறது. அரிச்சந்திரனின்

மனைவி சந்திரமதி ஒரு வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள்.

அந்த வீட்டின் சொந்தக்காரிதான் காலகண்டி. காலகண்ட ஐயரின் மனைவி

என்பதால் அந்தப் பெயர் அமைந்துவிட்டது. காலகண்டி வேடம்

புனைந்திருப்பவர் அந்த வேடத்துக்கே பெயர்போன குழந்தைவேலுப்

பண்டாரம். ஐயர் மனைவிக்கே உரிய உடல்மொழியும் பேச்சுமொழியும்

அந்தப் பாத்திரத்தை இன்னும் நம்பகத்தன்மை உள்ளதாக ஆக்குகிறது.

கணத்துக்குக் கணம் சந்திரமதியைக் கொடுமைப்படுத்துகிறாள் காலகண்டி.

வசைவார்த்தைகள். மிரட்டல்கள், சாபங்கள். அடிகள். எல்லாம்

மெல்லமெல்ல எல்லை மீறிப் போய்க்கொண்டே இருக்கின்றன. நடிகர்கள்

தம் நடிப்புத் திறமையால் சந்திரமதியையும் காலகண்டியையும் தம்

கண்முன் நம்பும்படி நிற்கவைத்திருக்கிறார்கள் என்பதையே பார்வையாளர்கள்

மறந்துவிடுகிறார்கள். நடப்பது கூத்து என்பதையும் நடிப்பவர்கள் நடிகர்கள்

என்பதையும் மறந்துவிடுகிறார்கள். ஏதோ ஒரு மாபெரும் கொடுமை

தம் கண்முன்னால் நடைபெறுவதாகவும் அதைத் தடுத்து நிறுத்தி

சந்திரமதியைக் காப்பாற்றுவது தம் கடமையென்றும்

எண்ணிக்கொள்கிறார்கள். காலகண்டியைப் பார்த்துத் திடீரென்று

எதிர்வசைகள் பொழிகிறார்கள். சாபமிடுகிறார்கள். இது கதையில் ஒரு

பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. பார்வையாளர்களிடையே

காலகண்டியாக நடிப்பவனின் தாயாரும் உட்கார்ந்திருக்கிறாள். அவள்

மட்டும் எல்லாவற்றையும் மௌனத்தோடும் வேதனையோடும்

பார்த்துக்கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் அனைவரும் பண்டாரத்தை

காலகண்டியாக நினைத்துப் பேசும்போது அவள்மட்டுமே அவனைத்

தன் மகனாகவே எண்ணிப் பேசுகிறாள். மற்றவர்களைப் பார்த்து

காலகண்டிக்காகப் பரிந்து பேசுகிறாள். இடையில் ஏதோ ஒரு கணத்தில்

பேச்சு முற்றிப் பார்வையாளர்கள் சேர்ந்து அந்தப் பெண்மணியை

அடித்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் உண்மையின் வழியில் நடக்க நினைத்த

அரிச்சந்திரன் தன் மனைவியைப் பிரிய நேர்கிறது. வரித்துக்கொண்ட

பாத்திரத்துக்கு உண்மையாக இருந்த குழந்தைவேலுப் பண்டாரம் தன்

தாயை இழக்கிறான். உதைபடும் தருணத்தில்கூடத் தன் மகன்மீது

எந்த வசைச்சொல்லும் சாபமும் படிந்துவிடக்கூடாது என்று மன்றாடுகிறாள்

அந்தத் தாய். இரண்டு கதைகளின் முடிவிலும் ஒரு தாயின் அன்பும்

ஆவேசமும் பல வடிவங்கள் பூண்டு வெளிப்பட்டபடி இருக்கின்றன.

அவர்கள் காட்டும் அன்பால் எந்தப் பயனும் விளையவில்லை. ஆனால்

அன்புமட்டும் வெளிப்பட்டபடி இருக்கிறது. எங்கோ காட்டில் கொட்டும்

அருவிபோல.

தெய்வமும் மனிதர்களும் சந்திக்கும் கதைகளை எழுதிப் பார்க்காத

எழுத்தாளர்களே அந்தக் காலத்தில் இல்லையென்று சொல்லிவிடலாம்.

சிலர் அந்தச் சந்திப்பைச் சுவையான விவாதக் களமாக்கியிருக்கிறார்கள்.

சிலர் தெளிவுக்கான விளக்கங்களை வெறும் சம்பவங்களாக

வடித்திருக்கிறார்கள். அழகிரிசாமியும் அப்படிப்பட்ட ஒரு சிறுகதையை

எழுதியிருக்கிறார். ஆனால் அந்தச் சந்திப்புதான் விசித்திரம் நிறைந்தது.

இறைவனைச் சந்திப்பவர் எளிய பாத்திரமல்ல. இசைஞானம் மிகுந்த

மேதையான தியாகையர். காலமெல்லாம் ஒவ்வொரு பாட்டிலும் அவர்

உருகி உருகி வர்ணித்த ராமன் தன் மனைவி ஜானகியோடு திருவையாறுக்கு

வந்து தியாகையரைச் சந்திக்கிறான். பக்தர்களுக்காக வேண்டி தெய்வாம்சம்

மனிதவெளிக்கு இறங்கிவருகிறது. மனிதாம்சம் தெய்வநிலையை எட்டித்

தொடுகிறது. இருவரும் சந்தித்துக்கொண்ட மத்திய உலகமும் தெய்வ

உலகமும் மனித உலகமும் ஒன்றாகிவிடுகின்றன. அதைத் திரிவேணி

சங்கமம் என்றே அழைத்தல் வேண்டும். இந்தச் சங்கமத்தில் மனிதனும்

தெய்வமும் மட்டுமல்ல, விலங்கினங்களும் தாவரங்களும்கூட வந்து

கலந்துவிடுகின்றன.

எண்ணற்ற வாழ்க்கைப்பாடங்களை உய்த்துணரும் வழிகளாக கு.

அழகிரிசாமியின் காட்சிச் சித்தரிப்புகள் அமைந்துள்ளன. புத்தி அவருடைய

முக்கியக் கதைகளில் ஒன்று. தந்தை கிருஷ்ணசாமி ஐயர். மகன் வைத்தி.

கதைப்பரப்பில் இரு விளிம்புகள் இவர்கள். வியாபார வேலை என்று

பொய்சொல்லிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு சென்னைக்கு ஓடிவந்து

அறையெடுத்துத் தங்கி எல்லாவிதமான தீய பழக்கங்களையும் கற்று

அவற்றிலேயே அமிழ்ந்துகிடக்கிறான் மகன். மகனைத் திருத்தி ஊருக்கு

அழைத்துச் சென்றுவிடலாம் என்று இடைவிடாது ஐயர் செய்யும்

முயற்சிகளுக்கு இரண்டுமுறை வெற்றி கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து

கிராமத்தில் அவனைத் தங்கவைத்துக்கொள்ள அவரால் இயலவில்லை.

பழக்கங்களின் சுவை அவனை மீண்டும்மீண்டும நகரைநோக்கி இழுத்தபடி

உள்ளது. ஒவ்வொரு முறையும் உறவினர் வீட்டில் தங்கி முயற்சிகளில்

ஈடுபடும் ஐயர் தன் தோல்விகள் உலகத்துக்குத் தெரிந்துவிடக்கூடாது

என்பதற்காக முதன்முறையாக விடுதியில் அறையெடுத்துத் தங்குகிறார்.

மகனைத் திருத்த நினைத்தவர் துரதிருஷ்டவசமாக மகனைப்போலவே

எல்லாப் பழக்கங்களுக்கும் அடிமையாகிவிடுகிறார். செய்தியைக்

கேள்விப்பட்ட மகன் துடித்தபடி ஓடி வருகிறான். தான் ஈடுபடும்போது

தீயவை என்று தோன்றாத பழக்கங்களுக்கு அப்பா அடிமைப்பட்டுக்

கிடப்பதைக் காணும்போது தீயவையாகத் தோற்றமளிக்கின்றன. ஆகவே

அவரிடம் பேசி மனத்தை மாற்ற விரும்புகிறான். ஊருக்குக் கிளம்பிச்

சென்றுவிடும்படி மன்றாடுகிறான். ஆனால் அவன் கெஞ்சுதலுக்கு எந்தப்

பயனும் விளையவில்லை. அவனை விரட்டியடித்துவிடுகிறார் அவர். நல்லதை

ஒரு காந்தத்துண்டாகவும் தீயதை இன்னொரு காந்தத்துண்டாகவும்

கற்பனை செய்துகொள்ளலாம். புத்தி என்னும் புலத்தைநோக்கி இரு

காந்தத் துண்டுகளும் சமதொலைவில் வைக்கப்பட்டிருப்பதாகவும்

நினைத்துக்கொள்ளலாம். எந்தக் காந்தத்துண்டு புத்தியை இழுக்கும்?

தீயவை என்னும் காந்தத்துண்டுதான் புத்தியை உடனே இழுக்கும்.

தீயவற்றுக்கு அடையாளமாக காந்தத்துண்டுக்கு மற்ற காந்தத்துண்டைவிட

ஒரே ஒரு விழுக்காடு கூடுதல் ஆற்றல் இருக்கிறது. வாழ்க்கை சொல்லித்

தரும் பாடம் மிக எளிமையானது. கிருஷ்ணசாமி ஐயர் அதனால்

இழுபட்டதில் ஆச்சரியமே இல்லை.

நல்லவைக்கும் தீயவைக்கும் இடையே ஒரே ஒரு விழுக்காடுதான்

வேறுபாடு என்பதைப்போலவே மானத்துக்கும் அவமானத்துக்கும் இடையில்

உள்ள வேறுபாடும் ஒரே ஒரு விழுக்காடுதான். முருங்கைமர மோகினி

கதையில் இடம்பெறும் நல்ல பெருமாள் பிள்ளையின் வாழ்வில் அதை

உணரும் தருணம் ஒருமுறை வாய்க்கிறது. உணவுக்கடை வைத்து

மானத்தோடு ஊரில் பிழைப்பு நடத்துபவர் அவர். மரணப்படுக்கையில்

நோயாளியாகக் கிடந்து மூன்று மாத மருத்துவத்துக்குப் பிறகு பிழைத்தவர்.

மூன்று மாத படுக்கைவாசம் கையிருப்பைச் சுத்தமாகக் கரைத்துவிடுகிறது.

படுத்துவிட்ட வியாபாரத்தைத் தூக்கி நிறுத்தவும் கரைந்துபோன செல்வத்தை

மீண்டும் சம்பாதிக்கவுமான தேவை அவருக்கு இருக்கிறது. காலைக்

குளியலுக்குக் கவுண்டர் தோட்டம் வழியாகச் செல்வதுதான் அவர்

வழக்கம். வழியில் என்றும் கண்ணில் படாத முருங்கைமரம் அன்று

கண்ணில் படுகிறது. காய்களும் இலைகளின் வளப்பமும் அவருடைய

மனத்தில் ஆசையைத் தூண்டுகின்றன. மனத்தில் ஒரு மூலை எடு,

பறி என்கிறது. மறுமூலை சீச்சி என்று கேலிசெய்கிறது. இரண்டு மூன்று

நாட்களாக இதே ஊசலாட்டம். அவமானத்துக்கு அஞ்சுகிறது அவர்

மனம். மூன்றாம் நாள் ஆசையின் தூண்டுதலுக்குக் கட்டுப்பட்டு

அதிகாலையிலேயே சென்று காய்களைப் பறித்துவிடுகிறார். காய்களையோ

இலைகளையோ பறிப்பவன் தன் மானத்தை நினைத்துக்கொள்ளவேண்டும்

என்று குறிப்புணர்த்தும் பொருட்டு அங்கே தொங்கவிடப்பட்ட செருப்பு

அவருடைய கண்ணை உறுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்க அது

தொங்கவிடப்பட்டிருக்கும் கயிற்றை இழுத்து அறுக்கமுனைகிறார். அப்போது

எதிர்பாராத விதமாகக் கிளை முறிகிறது. அஞ்சி ஓடும்போது கீரைப்

பாத்தியில் வழுக்கிச் சேற்றில் விழுகிறார். முதலில் மானத்தைப்பற்றி

எண்ணிப் பார்க்காத மனம் இக்கணத்துக்குப் பிறகு மானத்தைப்பற்றி

ஏராளமாக யோசிக்கிறது. மதிய உணவுக்கு முருங்கைக்காய் சாம்பாரை

மனைவி ஊற்ற வரும்போது வேண்டாமென மறுத்துவிடும் அளவுக்கு

அந்த யோசனை ஆழமாக அவர் நெஞ்சில் பதிந்திருக்கிறது.

கற்பனைக்கும் எதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளியை உய்த்துணரவும்

மனிதர்களின் அடிப்படை உணர்வுகளை அடையாளம் காணவும் வசதியாக

அழகிரிசாமியால் முன்வைக்கப்படும் சம்பவத்தருணங்கள் அமைந்துள்ளன.

மிகச்சில தருணங்களில் மட்டுமே நன்மையின் பக்கமும் மற்ற தருணங்களில்

தீமையின் பக்கமும் சாய்ந்திருக்கும் மனமுள்ளின் குணவிசித்திரத்தைத்

தொட்டுக்காட்டியபடியே செல்கின்றன அழகிரிசாமியின் படைப்புகள்.

சுயரூபம் அழகிரிசாமியின் முக்கியமான கதைகளில் ஒன்று. வேப்பங்குளம்

என்னும் கிராமம் கதை நிகழும் களம். முருகேசன் பிள்ளை என்பவர்

உணவுக்கடை வைத்திருப்பவர். பழம்பெருமைகளில் மிதந்தபடி தினசரித்

தேவைக்கும்கூட அல்லாடிக்கொண்டிருப்பவர் மாடசாமித்தேவர்.

சாதிப்பெருமை அவர் நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு

நாள் காலை குளியலுக்குப் பிறகு, சல்லிக்காசுகூட இல்லாமல் முருகேசன்

பிள்ளையின் கடையில் சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்து

உட்கார்ந்திருக்கிறார். வெறும்பயல் என்று இவரைப்பற்றி அவர் எண்ணுகிஷீர்.

அற்பப்பயல் என்று அவரைப்பற்றி இவர் நினைக்கிறார். ஆனாலும்

ஒப்புக்குச் சிரித்தபடி இருவரும் அவ்வப்போது உரையாடிக்கொள்கிறார்கள்.

மற்ற தருணங்களில் வேடிக்கை பார்த்துப் பொழுதைப் போக்குகிறார்கள்.

வாய்விட்டுக் கேட்க தேவரின் மனம் இடம்தரவில்லை. கடனாகக் கொடுக்க

பிள்ளையின் மனமும் இடம்தரவில்லை. காலை, மதியம், மாலை எனப்

பொழுது ஏறி இறங்கி இரவைநோக்கி நகர்ந்துவிடுகிறது. கடையை இழுத்துப்

பூட்டிவிட்டு நிலாவெளிச்சத்தில் நடக்கத் தொடங்கிய பிள்ளையிடம்

மிஞ்சிப்போன இட்லிகளைத் தமக்குத் தரும்படி துணிந்து கேட்கிறார்

தேவர். ஆனால் பிடிவாதமாகக் கொடுக்க மறுத்துவிடுகிறார் பிள்ளை.

இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்துவிட கைகலப்பு

உருவாகிவிடுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கை ஓயக்

குத்திக்கொள்கிறார்கள். அடியோடு கடியும் சேர்ந்துகொள்கிறது. இருவரின்

உடம்பிலும் ரத்தச்சுவடுகள். மூச்சுப்பேச்சில்லாமல் விழுந்த நிலையில்

மன்னிப்பையும் இட்லியையும் ஒரே நேரத்தில் மறுபடியும் கேட்கிறார்

தேவர். ஒரு கட்டத்தில் எரிச்சல் தாளாமல் இட்லியை எடுத்து இந்தா

தின்னுத்தொலை என்று கொடுக்கிறார். இந்தப் பயகிட்ட நான் பிச்ச

வாங்கித் தின்னனுமா என்று பட்டென்று வீராப்பு பொங்கிவருகிறது

தேவருக்கு. அவரைத் தாக்குவதற்கு முழுப்பலத்தையும் பிரயோகித்த

பிள்ளைமீது மறுபடியும் பாய்ந்தார் தேவர். அதே வேகத்தில் பிள்ளையிடம்

குத்து வாங்கிக்கொண்டு கீழே சாய்கிறார். ஊருக்குப் போகும் பிள்ளை

தன்னைப்பற்றி என்னென்ன கதைகள் கட்டிப் பரப்புவாரோ என்றெல்லாம்

யோசனை எழுந்தாலும் அற்பப்பயல் கொடுத்ததை வாங்கித் தின்னாமல்

மானம் காத்ததே பெரிய விஷயம் என்றெண்ணி ஆறுதல் தேடிக்கொண்டபடி

தள்ளாடி நடக்கிறார் தேவர். மனிதனின் அடையாளம் என்பது என்ன?

அவனது குணமா? அவன் சேர்த்துவைத்திருக்கும் பணமா? அவன்

வாழும் விதமா? அல்லது அவன் பிறந்த சாதியா? மாடசாமித் தேவரின்

நெஞ்சில் இரண்டு உணர்வுகள் விஸ்வரூபம் கொள்கின்றன. ஒன்று பசி

என்னும் உணர்வு. இன்னொன்று சாதி என்னும் உணர்வு. இரண்டு

விஸ்வரூப கோலங்களும் ஒரே ஆளில் நெஞ்சில் எழுச்சி கொள்கின்றன

என்பதுதான் முக்கியமான புள்ளி. ஒன்றையொன்று வெல்லத் துடித்து,

இறுதியில் சாதியின் விஸ்வரூபம் வெற்றிபெறுகிறது. மனிதன் சாதியால்

கட்டமைக்கப்பட்ட ஒரு விலங்கு என்பதுதான் சுயரூபம்.

மனிதனின் சுயரூபத்தை முன்வைக்கும் இன்னொரு சிறுகதை ரசவிகாரம்.

இங்கே வெளிப்படுவது சாதியுணர்வு அல்ல. மாறாக பாலுணர்வு. சங்கரலிங்க

முதலியார் தன் மகனைப்போல நினைத்து தியாகராஜனை ஆதரிக்கிறார்.

தன் நிலபுலன்களையும் கடன்வழக்குகளையும் கவனித்துக்கொள்ளும்

காரியஸ்தனாக ஆக்கி, தங்கியிருக்க வீடும் கொடுத்து, தன் வீட்டிலேயே

அவனுக்கு உணவும் ஏற்பாடு செய்து தருகிறார். ஆனால் அவனுக்கும்

முதலியார் மகள் பார்வதிக்கும் இடையே எப்படியோ தொடர்பு

ஏற்பட்டுவிடுகிறது. இருட்டில் சுவர்கடந்து சென்று ஒருவரையொருவர்

சந்தித்து உறவுகொள்ளும் அளவுக்கு அந்தத் தொடர்பு முற்றிவிடுகிறது.

முதலியாரின் மனத்தில் உருவாகும் பிள்ளைப் பாசம் தியாகராஜன்

மனத்தில் தந்தைப்பாசமாக ஏன் பொங்கி வரவில்லை என்பதற்கு எதைக்

காரணமாகச் சொல்லமுடியும்? இச்சையால் வழிநடத்தப்படுகிற விலங்காக

அல்லவா இருக்கிறான் மனிதன்?

அழகிரிசாமியின் விமர்சனப் பிரக்ஞையை உணர வழிவகுக்கும் கதைகள்

பல இருக்கின்றன. நக்கீரன் எரிபட்ட கதையை விவரிக்கும் வெந்தழலில்

வேகாது சிறுகதையை முக்கியமான ஒன்றாகச் சொல்லவேண்டும். தன்

பாடலில் குற்றம் இருக்கிறது என்று சொன்ன நக்கீரனின் சொல் உருவாக்கிய

வெப்பம் சுந்தரரின் உடலையும் மனத்தையும் அனலாகக்

கொதிக்கவைக்கிறது. நெற்றிக்கண்ணைத் திறந்து நக்கீரனைச் சுட்டுச்

சாம்பலாக்கிய பிறகும்கூட அது தணியவில்லை. மறுபிறப்பு

வழங்கியபிறகும்கூட அந்த வெப்பம் குறையவில்லை. இரவெல்லாம்

நெருப்பாக வெந்துகொண்டிருக்கிறது அவர் உடல். தொடக்கத்தில் அந்த

வெப்பம் தன் பாட்டில் குற்றம் இருப்பதாக ஒரு மானுடக்கவிஞன்

சொல்லிவிட்டானே என்கிற அகங்காரத்தால் வெளிப்படுகிறது. பிறகு,

மெல்லமெல்ல, நக்கீரன் தரப்பிலிருந்த நியாயத்தை அவர்

புரிந்துகொள்கிறார். ஒரு விஷயம் உண்டு அல்லது இல்லை என இரு

பிரிவுகளாகப் பிரியும்போது, அதன் தரப்பில் நின்று அதை நிரூபிப்பதுதான்

சரியான வழியாக இருக்குமேயொழிய, என் பாட்டில் குற்றம் கண்டுபிடிக்க

நீ யார் என்று அகங்காரக் குரலெழுப்புவது எவ்வகையிலும் சரியில்லை

என்கிற நியாயம் புரிகிறது. நான் இறைவன், நீ மானுடன் என்கிற

வேறுபாட்டை முன்வைத்து விவாதத்தைத் திசைதிருப்பியதை அருவருப்பாக

அவர் மனம் உணர்கிறது. விவாதத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்காமல்

அதிகாரத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்த பிழையை நினைத்துக்

குற்றவுணர்வு பெருகுகிறது. அந்தக் குற்றவுணர்வுதான் வெந்தழலால்

வேகாமல் எஞ்சியிருக்கிறது. நக்கீரனின் உண்மை நாட்டத்துக்கும்

உண்மையை ஒளிக்காமல் உரைக்கும் மனவுறுதிக்கும் எடுத்துக்காட்டாகச்

சொல்லப்படும் புராணக்கதை கலையுலகத்தில் கலைக்குப் புறம்பான

செல்வாக்கு நுழைந்து ஓங்கி வளர்ந்துவிடும் அதிகாரம் கொள்கிற குற்ற

உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.

குற்றவுணர்வு சுந்தரரிடம் உச்சம் பெறும் கணம் முக்கியமானது.

ஏழைக்கவிஞன் தருமிக்காகத்தான் சுந்தரர் அப்பாட்டை எழுதியளிக்கிறார்.

சங்கக் கட்டடத்தைவிட்டு சுந்தரர் வெளியேறிய பிறகு, அங்கு நடந்த

விஷயங்களையெல்லாம் முழுக்கமுழுக்க தருமிவழியாகத்தான் அவரை

அடைகின்றன. சுந்தரரின் ஆளாகவே இருக்கிறான் அவன். இரவு முழுக்க

குற்றவுணர்வால் மனம்நொந்து, உறக்கமின்றிப் புரண்டு தவித்து,

அதிகாலையில் படுக்கையைவிட்டு வெளியேறி வந்ததும் வாசலில்

வைக்கப்பட்டிருந்த பொற்கிழியைத்தான் முதல்முதலாகப் பார்க்கிறார்

சுந்தரர். அக்கணம் அவரை நிலைகுலையவைத்துவிடுகிறது. புலமையில்

கடைசிப்புள்ளியில் உள்ள கவிஞன் தருமி. சுந்தரரின் அதிகாரத்துக்கும்

செல்வாக்குக்கும் கட்டுப்பட்டவன் தருமி. அதிகாரத்துக்குக் கட்டுப்படும்

குணம் இருந்ததாலேயே சங்கத்தில் கபிலர், பரணர், கீரன் என மற்ற

புலவர்களிடையே நடந்தேறிய உரையாடல்களையெல்லாம் கேட்டுவந்து

தகவல் சொன்னான் தருமி. ஆனால் இறுதிக்கணத்தில் அவனும் புலவர்கள்

அணியில் இருக்க விரும்பி பொற்கிழியைப் புறக்கணித்துவிட்டு மௌனமாக

மறைந்துபோய்விட்டான். வெந்தழலால் வேகாதது கல்விச்செல்வம்

மட்டுமல்ல, குற்றவுணர்வும்கூட.

அனந்தராம பாகவதரிடம் நேரடிச் சீடனாக இருந்து இசையை நுட்பமாகக்

கற்றுத் தேர்ந்தவன் கிட்டு. இயற்கையான திறமையும் முறையான பயிற்சியும்

அவனை மிக உயரத்துக்குக் கொண்டுசெல்கின்றன. நகரத்தில் மிகச்சிறந்த

இசைக்கலைஞனாக அவன் மலர்கிறான். அவன் பாடும் அரங்குகள்

ஒவ்வொரு நாளும் நிரம்பி வழிகின்றன. பத்திரிகைகள் பாராட்டி

எழுதுகின்றன. இசை ரசிகரான ஜம்புநாதன் அவனுடைய ஒவ்வொரு

கச்சேரிக்கும் வந்து சுவைத்திருந்துவிட்டு வானளாவப் புகழ்கிறார். அழகன்,

குணசாலி, ஈடுஇணையற்றவன், மேதாவிலாசம் மிகுந்தவன், அவதார

புருஷன் என்றெல்லாம் வாயாரப் புகழ்கிறார். ஆனாலும்

அப்படிப்பட்டவனுக்கு தன் மகளை மணம் செய்விக்க அவர் ஒப்புதல்

தர மறுக்கிறார். இசையை ஒரு வரம் என்று வாய்ஓயாமல் புகழ்கிறார்.

ஆனாலும் அப்படிப்பட்டவனுக்குத் தன் மகளை மணம் செய்விக்க

அவர் ஒப்புதல் தரமறுக்கிறார். இசையை ஒரு வரமென்று வாய் ஓயாமல்

புகழ்கிறவர், இசைக்கலைஞனை மருமகனாக ஏற்றுக்கொள்ள மறுப்பதில்

உள்ள புதிர் முக்கியமானது. சமூகம் தன் அளவுகோல்களை எப்படியெல்லாம்

மாற்றிமாற்றிப் பயன்படுத்துகிறது என்பது அக்கணம் அம்பலப்பட்டுவிடுகிறது.

பாகவதரின் குமுறலுக்கு இணையான அளவில் திரிபுரம் கதையில்

இடம்பெறும் சிரிப்பு உள்ளது. பசிக்கு இரக்கம் காட்டாத உலகம் உடலை

எடுத்துக்கொண்டு கட்டணமாகப் பணத்தைக் கொடுக்கத் தயாராக

இருக்கிறது. பிச்சைக்காரியாக அலைந்து திரிந்தாலும் சல்லிக்காசுகூடப்

பெறமுடியாத இந்த உலகத்திலிருந்து ஒரே இரவில் பத்துரூபாய்

சம்பாதித்துவிடுகிறாள் வெங்கட்டம்மாள். முதல்நாள் அந்த ஸ்டேஷனில்

வந்து இறங்கும்போது யாராவது ஏதாவது தரமாட்டார்களா என்று எதிர்ப்படும்

முகங்களையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தவர்கள் கையில் இன்று

பத்துரூபாய் சேர்ந்துவிடுகிறது. இந்த எண்ணமும் விசித்திரமும்தான்

வெங்கட்டம்மாவுக்குச் சிரிப்பைத் தந்தன. மனிதன் கட்டியெழுப்பிய

ஒழுக்கத்தையும் ஒழுக்கக்கேட்டையும் பார்த்துச் சிரித்த சிரிப்பு அது.

நாகரிகத்தையும் அநாகரிகத்தையும் பணக்காரர்களையும் ஏழைகளையும்

ஆண்களையும் பெண்களையும் பஞ்சத்தையும் இப்படி எத்தனையோ

அடங்கிய உலகத்தையும் நோக்கிய சிரிப்பாக இருக்கிறது அது.

இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பைப்பற்றிய பார்வை

அழகிரிசாமியிடம் எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள முயற்சி

செய்யலாம். 17ஆம் நம்பர் வீட்டு நாய் என்னும் கதையில் அது மிகவும்

வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாய்களிடையே

நிகழும் உரையாடலை ஒரு நடைச்சித்திரமாக இக்கதையில்

முன்வைத்திருக்கிறார் அழகிரிசாமி. ஒரு தெருவில் 17ஆம் நம்பர் வீட்டில்

ஒரு நாய் இருக்கிறது. அது அவர்களுக்குச் சொந்தமான நாய் அல்ல.

அது தானாகவே அங்கே வந்து குடியேறிவிட்டது. வைத்துச்

சீராட்டுகிறவர்களும் இல்லை. விரட்டி வெளியேற்றுகிறவர்களும் இல்லை.

எப்போதாவது சாப்பாடு வைக்கிறார்கள். அவ்வளவுதான். அது

குரைத்துக்கொண்டு வீட்டை வளையவளையச் சுற்றிவருகிறது. 26ஆம்

நம்பர் வீட்டில் இன்னொரு நாய் உள்ளது. அது அவர்களுடைய வளர்ப்புநாய்.

வேளாவேளைக்கு அதற்கு உணவு உண்டு. பாதுகாப்பும் உண்டு. இரண்டு

நாய்களும் ஒரு நாள் சந்தித்துக்கொண்டு உரையாடிக்கொள்கின்றன.

வேளாவேளைக்கு உணவில்லாவிட்டாலும் குரைக்கிற சுதந்திரம் தனக்கு

இருப்பதாக மார்தட்டிக்கொள்கிறது ஒரு நாய். குரைக்கும் சுதந்திரம்

இல்லாவிட்டாலும் வேளாவேளைக்கு உணவுண்ணும் சுதந்திரம் தனக்கு

இருப்பதாகச் சொல்கிறது இன்னொரு நாய். விவாதம் நீண்டுகொண்டே

செல்கிறது. சாப்பாட்டு வேளை நெருங்குகிறது. உரிமையாளர் அழைத்ததும்

கூண்டுநாய் ஓடோடி அவர் பின்னாலேயே செல்கிறது. அடுத்த நாய்

தெருவிலேயே நிற்கிறது. முதல் வாசிப்பிலேயே இது நாய்களைப்பற்றிய

கதையல்ல என்று வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியும். சிறுகதைக்குரிய

சமத்காரமோ, நுட்பமோ எதுவும் இக்கதையில் இடம்பெறவில்லை. ஆனால்

வீசிய வேகத்தில் இலக்கைத் தொட்டு விழுகிற கல்லைப்போல நம்

மனம் குவியவேண்டிய புள்ளியைநோக்கி கதை உயர்ந்து நின்றுவிடுகிறது.

மாதச்சம்பளக்காரர்களுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்கும் எப்போதோ

ஒருமுறை பணத்தைப் பார்க்கும் நாடோடிகளின் வாழ்க்கைக்கும் உள்ள

முரண்கள் விமர்சனமாகத் தெறிக்கின்றன. உலகம் யாருக்கு என்னும்

கதையில் இந்த விமர்சனம் இன்னும் வெளிப்படையாகவே

முன்வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பேருந்து நிலையத்தைச்

சேரவேண்டுமே என்கிற பதற்றத்தில் பேருந்துக்குள் அமர்ந்திருக்கும்

பயணிகள் பதற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு விதமான முக்கியமான வேலை அதற்குப் பிறகு காத்திருக்கிறது.

ஆனால் நிலையத்தைத் தொடும் முன்பேயே பரிசோதனைக் காவலர்களால்

பேருந்து நடுவழியில் நிறுத்தப்படுகிறது. பயணிகள் அனைவரும்

வண்டியிலிருந்து இறக்கிவிடப்படுகிறார்கள். ஆனால் பயணிகளோடு சேர்ந்து

பயணம் செய்த காவல்துறையினர் இருவர் இறங்க மறுத்து

அடம்பிடிக்கிறார்கள். அவர்களுடைய ஆணை தம்மைக் கட்டுப்படுத்தாது

என்று அறிவிக்கிறார்கள். நிகழவேண்டிய சோதனை நிகழாமல் போகிறது.

காவல்துறையின் இரண்டு பிரிவினர்களும் தமக்குள் யார் பெரியவர்

என்கிற விவாதத்தில் இறங்கிவிடுகிறார்கள். பேருந்தின் இயக்கம்

முடங்கிவிடுகிறது. பொதுமக்களின் தேவைகளைப்பற்றிக் கிஞ்சித்தும்

கவலைப்படாத அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

பெரிய ஆதரவுகள் எதையும் நம்பியிராமல் தம் உழைப்பை மட்டும்

நம்பி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் அழகிரிசாமியின் கதைகளில் மிகுந்த

அளவில் காணப்படுகிறார்கள். போதாமையும் வறுமையும் மட்டுமே

அவர்களிடம் இயற்கையாகக் கிடைத்த சொத்துகளாக உள்ளன. இவர்கள்

யாரும் அமைப்புக்குள்ளே இல்லை. அமைப்பின் ஓரப்புள்ளிகளில்

ஒட்டிக்கொண்டுள்ளார்கள். அமைப்பைப்பற்றி யோசிக்கக்கூட இவர்கள்

வாழ்வில் நேரமில்லை. ஆனால் அப்புள்ளியில் இருந்து விழுந்துவிடுவோமோ

என்கிற அச்சம் எழும்போதுதான் அவர்கள் அமைப்பின்

அலங்கோலத்தைப்பற்றிக் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

வெறும் நாய் சிறுகதையில் வெளிப்படும் அமைப்பைப்பற்றிய பார்வையை

இங்கு நினைத்துக்கொள்ளலாம். வெறும் நாய் என்று

அடையாளப்படுத்தப்படுபவன் ஒரு மனிதன். முனுசாமி. ஒரு நாள்

தன்னைநோக்கி கல்லெறிந்ததைத் தாங்கிக்கொள்ளாமல் சமயம் பார்த்துப்

பாய்ந்து கடித்துத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்கிறது இயற்கையான

நாய். ஆனால் பொங்கிவரும் ஆத்திரத்தை நெஞ்சுக்குள்ளேயே

அடக்கிக்கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்கிறான் முனுசாமி.

அவனுடைய எந்த உதவியையும் அவனுடைய வீட்டுக்கு அருகில் வசிக்கும்

டாக்டர் குடும்பத்தினர் நினைத்துப் பார்ப்பதில்லை. அவன் இளநீர்

விற்கும்போது, இலவசமாக அந்த டாக்டருக்கு இளநீர் வழங்குகிறான்.

வெள்ளரிக்காய் விற்கும்போதும் இலவசமாக டாக்டருக்கு வெள்ளரிக்காய்

வழங்குகிறான். அவர் வளர்க்கும் கால்நடைகளின் தேவைக்கு

விலைமலிவான நல்ல வைக்கோல் வாங்க வழிகாட்டுகிறான். அவர்

வீட்டின் ஒருபகுதியில் ஒருமுறை தீப்பிடித்துக்கொண்டதும் உயிரைப்பற்றிக்கூட

கவலைப்படாமல் ஓட்டமாக உள்ளே நுழைந்து பொருள்களையெல்லாம்

வெளியே எடுக்க உதவி செய்கிறான். ஆனால் அந்த டாக்டருக்கு இது

எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை. தீயணைக்கும் படையோடு வந்த

காவலர்கள் யார் இந்த ஆள் என்று கேட்கிற கேள்விக்கும்கூட யாரோ

பக்கத்தில் வசிக்கிற ஆள் என்று பட்டும்படாமல் பதில்சொல்கிறார்.

அவனுடைய மனைவியின் கண்வலிக்கு மருந்து தர மறுத்து

விரட்டியடிக்கிறார். முனுசாமியை மையப்படுத்திக் கதை

பின்னப்பட்டிருந்தாலும் உண்மையில் டாக்டரின் மனசாட்சியில்லாத

தன்னலத்தையும் அறமற்ற குணத்தையும் முன்வைத்தபடி செல்கிறது.

அபூர்வமான குணச்சித்திரங்களைக் கொண்ட மனிதர்களைத் தீட்டிக்

காட்டும் படைப்புகள் அழகிரிசாமியின் கதையுலகில் குறிப்பிடத்தக்க

அளவில் காணப்படுகின்றன. இதுவே அவருடைய முக்கியமான சாதனை.

புராணக்கதைகளையும் இதிகாசங்களையும் வரலாறுகளையும் நாம் எப்படி

நினைவில் பதியவைத்துக்கொள்கிறோம் என்பதை எண்ணிப்

பார்க்கவேண்டும். ராமாயணத்தையோ மகாபாரதத்தையோ ஒட்டுமொத்தக்

கதையாக நாம் நினைத்துக்கொள்வதில்லை. ராமன், சீதை, தாடகை,

சூர்ப்பனகை, இராவணன், கும்பகர்ணன், அர்ஜூனன், பீமன், திரௌபதை,

கிருஷ்ணன் எனத் தனித்தனிப் பாத்திரங்களின் வடிவங்களே முதலில்

நம் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன. அவர்கள் வழியாகக் கடந்துசெல்லும்

பாதைகளின் ஊடே நடந்துசென்றுதான் நாம் அந்த இதிகாசங்களையும்

புராணங்களையும் சென்றடைகிறோம். அழகிரிசாமியின் பாத்திரங்களும்

அப்படிப்பட்டவை. உள்நீட்சி உடையவை. ஒருவகையில் வாழ்க்கைக்குள்

நுழைந்துபார்க்கத் திறந்துவைக்கப்பட்ட கதவுகளே அப்பாத்திரங்கள்.

***

கு. அழகிரிசாமியின் சிறுகதைகளை ஒருசேரப் படித்தது எனக்கு

ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. கைக்குக் கிடைத்த ஒரு தொகுப்பைப்

புரட்டிப் படிப்பதற்கும் இப்படி காலவரிசையில் தொகுக்கப்பட்ட கதைகளைப்

படிப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஒரு படைப்பாளியின் எழுத்துப்

பயணத்தில் வெளிப்படும் வேகம், தாகம், எழுச்சி, விவேகம், கலைநாட்டம்,

பற்றுகள், நோக்கங்கள் அனைத்தும் அப்படைப்பாளியை மதிப்பிடுவதற்கு

உறுதுணையாக நிற்பவை. எப்படிப்பட்ட வாழ்க்கைத் தருணங்களை

அழகிரிசாமி நமக்குக் காட்டுகிறார் என்று ஆய்ந்து பரிசீலனை செய்ய

விருப்பமுள்ளவர்களுக்கு இத்தொகுப்பு ஒரு பேருலகத்தையே சாட்சியாக

நம்முன் நிறுத்தியிருக்கிறது. எதார்த்த வாழ்க்கையில் நாம் நித்தமும்

காணக்கூடிய காட்சிகளையும் மனிதர்களையும்தான் அழகிரிசாமியின்

படைப்புகள் நமக்கு வழங்குகின்றன. ஆனால் நாம் அனைவரும் தவறவிட்ட

தருணங்கள் அவை. அவசரத்தில் தாண்டிவந்துவிட்ட மனிதர்கள் அவர்கள்.

நமக்குப் பாடம் கற்பிக்கும் பேராசானாக, மௌனமாக நம்முன் வீற்றிருக்கும்

வாழ்க்கையின் பேருருவத்தை அக்கணம் விழிவிரியக் கண்டடைகிறோம்.

இந்த அனுபவமே நம் மனத்தையும் பார்வையையும் விரிவாக்குகிறது.

வாழ்க்கையை நாம் கண்திறந்து பார்க்காத வரையிலும் மலரையும்

தளிரையும் வண்ணத்துப் பூச்சிகளையும் நிறங்களையும் வானவில்லையும்

மேகங்களையும் மழையையும் ஒருபோதும் பார்க்கமுடியாது.

கு. அழகிரிசாமியின் மீது வாசக கவனம் பெருமளவில் குவியும்வண்ணம்

தமிழ்ச் சூழலில் எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அது வருத்தத்துக்குரிய

ஒரு செய்தி. அவருடைய பன்னிரண்டு தொகுப்புகளில் பல தொகுப்புகள்

அச்சிலேயே இல்லாத நிலைதான் நீடித்திருந்தது. அவர் மறைந்து கால்

நூற்றாண்டுக்குப் பிறகு, சாகித்திய அகாதெமி வழியாக அவரைப்பற்றிய

ஒரு அறிமுக நூலொன்று வெளிவந்தது. அதை எழுதியிருந்தவர் வெளி.

ரங்கராஜன். தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகள் வரிசையில் மண்ணும்

மரபும் நூலில் ஜெயமோகன் கு. அழகிரிசாமியின் படைப்புலகத்தைப்பற்றிய

நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி,

கு.. ராஜகோபாலன் வரிசையில் வைத்துப் பாராட்டத்தக்க கு.

அழகிரிசாமியின் எழுத்துலகம் இன்னும் போதிய கவனம் பெறவில்லை

என்பது வருத்தத்துக்குரியது. இந்தப் பெருந்தொகுப்பு அவரைப்பற்றிய

ஓர் உரையாடலைத் தமிழ் இலக்கிய உலகில் தொடங்கிவைக்க கண்டிப்பாக

உதவக்கூடும். பழ. அதியமானும் காலச்சுவடும் வாசகர்களின்

நன்றிக்குரியவர்கள்.

கு. அழகிரிசாமி எழுதியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கையை வைத்துப்

பார்க்கும்போது அவரால் கச்சிதமான சிறுகதைக் கட்டமைப்பில் மிக

எளிதான வகையில் வெற்றியை அடைந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

மாறாக, பல கதைகள் கச்சிதம் பிசகியவையாகவே உள்ளன. அது

சற்றே ஏமாற்றம் தரும் உண்மை. கதையின் மையம் கோருகிற அளவுக்கும்

அதிகமாகவே பல வரிகளைக் கிரீடங்களாக்கி அதன் தலைமீது

பொருத்துகிறார் அவர். பொருந்தாக் கிரீடங்களின் சுமையால் பல கதைகள்

நிலைகுலைந்து நிற்கமுடியாமல் தடுமாறுகின்றன. அவர் படைப்புலகில்

இது ஒரு முக்கியமான பலவீனம். இதைத் தாண்டியும் தமிழ் வாசகர்களுக்கு

இன்னும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய பல படைப்புகள் கு. அழகிரிசாமியின்

உலகில் உள்ளன. அவற்றில் ஒருசிலவற்றையே இம்முன்னுரை

முன்வைத்திருக்கிறது. இதுவே அவருடைய பலம். நம்மை அவரை

நோக்கிச் செலுத்தும் விசை இதுவே.

(2011இல் காலச்சுவடு வெளியிட்ட கு.அழகிரிசாமி சிறுகதைகள் முழுத்தொகுதிக்காக எழுதிய முன்னுரை )