கற்பதன் வழியாக நாம் அடைவது கல்விஞானம். விடாமுயற்சியும் ஊக்கமும் அதற்கு அவசியம். சொந்தமாகக் கற்க இசைவான வாய்ப்புகள் இல்லாத நிலையில் மற்றவர்கள் வழியாக சிறுகச்சிறுக அறிந்துகொள்வது கேள்விஞானம். அதற்கு பொறுமையும் நட்பார்ந்த சூழலும் அனைவரோடும் நெருங்கிப் பழகும் நல்லிணக்க மனமும் அவசியம். வாழ்வில் தானே நேரில் கண்டதும் கேட்டதுமான நிகழ்ச்சிகள் வழியாகவும் பிறர் சொல்லக் கேட்ட நிகழ்ச்சிகள் வழியாகவும் எங்கெங்கோ துணுக்குத்துணுக்காகப் படித்தும் கேட்டும் தெரிந்துகொண்டவை வழியாகவும் நாம் அடைவது அனுபவஞானம். மூன்று வழிகளும் முக்கியமானவை. மூன்றுமே நம் மனவிரிவுக்கு வழிவகுப்பவை. மனம் விரிந்தால்தான் நம் பார்வை விரியும். மனம் சுருங்கினால் வாழ்க்கையே சுருங்கிவிடும்.
சிவகுமார் தான் அடைந்த மனவிரிவின் விளைவாக
சமீப காலமாக இலக்கியத்தையும் வாழ்க்கைநெறிகளையும்
இணைத்துப் பார்க்கும் பார்வையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். கம்பராமாயணத்தையும் மகாபாரதத்தையும்
முன்வைத்து அவர் ஆற்றிய உரைகள், அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. தற்போது அவருடைய கவனம்
திருக்குறள் மீது திரும்பியிருக்கிறது. தீராத தேடல் கொண்ட அவருடைய மனம் தற்போது தன்
வாழ்க்கையனுபவங்களையும் திருக்குறளையும் இணைத்துப் பார்ப்பதில் முனைந்திருக்கிறது.
அந்த முயற்சியில் தன் அகம் மலர்ந்த தருணங்களை பொருத்தமான கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருக்கிறார்.
அல்லயன்ஸ் அதைச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.
இத்தொகுதியில் ஊராருக்கு குடிநீர் கொடுத்து
உதவிய பேச்சியம்மாள் என்னும் பெண்மணியைப்பற்றி மன எழுச்சியூட்டும் வகையில் சிவகுமார்
எழுதியிருக்கும் கட்டுரை மிகமுக்கியமானது. மின்சார வசதி இல்லாத காலத்தில் கிணற்றுநீர்ப்
பாசனத்தின் உதவியோடு விவசாயம் செய்துகொண்டிருந்தது பேச்சியம்மாளுடைய குடும்பம். ஒருபக்கம்
கிணற்றிலிருந்து வாய்க்கால் வழியாக விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும்
சமயத்தில் இன்னொரு பக்கத்தில் குடிநீருக்காக குடங்களோடு தொலைதூரத்திலிருந்து நடந்துவரும்
பெண்மணிகளுக்காக இருபதடி நீளமும் பத்தடி ஆழமும் ஐந்தடி அகலமும் கொண்ட பெரிய தொட்டியில்
நீரை நிரப்பி வைத்திருப்பார் பேச்சியம்மாள். தண்ணீர் தீரத்தீர தொட்டியை நிரப்பிவைத்துக்கொண்டே
இருப்பார் அவர்.
அந்த வட்டாரத்திலேயே அவருடைய கிணற்றைத்தான்
மக்கள் தேடி வருவார்கள். அடுத்தடுத்த தோட்டங்களில் கிணறுகள் இருந்தாலும் தோட்ட உரிமையாளர்கள்
பிறரை தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. யாராவது குடத்துடன் வருவதைப் பார்த்ததுமே அங்கே
வேலை செய்பவர்கள் மாட்டுசாணத்தை எடுத்து அந்தத் தொட்டித்தண்ணீரில் கலந்துவிடுவார்கள்.
அப்படி ஒரு காலம். சில கிணறுகளின் தண்ணீர் அருந்துவதற்குத் தகுதியுடையதாக இருக்காது.
ஊருக்கு ஒரு பொது நீர்த்தேக்கத்தொட்டி வரும் காலம் வரைக்கும் ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கும்
மேலாக அக்கம்பக்கத்து கிராமங்களில் வசித்த மக்களின் தண்ணீர்த்தேவையை நிறைவுசெய்த பேச்சியம்மாள்
நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்து மறைந்தார். பேச்சியம்மாளின் வாழ்க்கைக்குறிப்பைப் பகிர்ந்துகொள்ளும்
சிவகுமார், அவருடைய சித்திரத்தை ”ஊருணி நீர்நிறைந்தற்றே
உலகவாம் பேரறிவாளன் திரு” என்னும் திருக்குறளோடு இணைத்திருக்கும் விதம் நன்றாக உள்ளது.
தன் ஓவிய நண்பரான மனோகர் தேவதாஸ் பற்றி
இன்னொரு கட்டுரையில் சுருக்கமான ஓர் அறிமுகத்தை அளித்திருக்கிறார் சிவகுமார். மனோகர்
கோட்டோவியங்கள் வரைவதில் திறமை மிக்கவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்தியும்
சென்னை நகரில் உள்ள பழைய காலத்துக் கட்டடங்களை முன்னிலைப்படுத்தியும் அவர் வரைந்த கோட்டோவியங்கள்
எண்ணற்றவை. அவையனைத்தும் கருப்புவெள்ளைக் கோடுகளைக் கொண்ட அற்புதமான காவியம் என்றே
சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவரிடம் பார்வைக்குறைபாடு உண்டு. மதுரை வரலாற்றின் பக்கங்களை
மனைவி மகிமா படித்துக்காட்ட, பூதக்கண்ணாடி உதவியுடன் அவர் அக்காட்சிகளை ஓவியங்களாக
வரைவார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஒருமுறை அவர் தன் மனைவியுடன் காரில் பயணம் செய்தபோது
நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் அவர் மனைவியின் உடல் கழுத்துக்குக் கீழே செயல்படாத நிலைக்குச்
சென்றுவிட்டது. அந்த நிலையிலும் மனம் தளராத மனோகர் தேவதாஸ் தன் காதல் மனைவி மகிமாவுக்கு
அவரே ஒரு தாயைப்போல ஆண்டுக்கணக்கில் எல்லாச் சேவைகளையும் செய்தபடியே ஓவியத்திலும் சாதனை
புரிந்தார். தாய்மை நிறைந்த அக்கலைஞனைச் சந்தித்த அனுபவத்தைப்பற்றிய சிவகுமாரின் குறிப்பு
மனத்தை நெகிழவைக்கிறது.
அப்துல்கலாம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது
சிவகுமார் பழையபுத்தகம் வாங்கி விற்கும் ஒரு கடைக்காரரைப்பற்றி அளித்திருக்கும் சின்னஞ்சிறு
தகவல் மனிதர்களைப்பற்றி நாம் வைத்திருக்கும் முன்முடிவுகளைக் கலைத்துவிடுகிறது. மிகக்குறைந்த
விலைக்கு வாங்கி, முடிந்த அளவுக்கு கூடுதல் விலைக்கு விற்க முயற்சி செய்வார்கள் என்பதுதான்
பழைய புத்தகக்கடைக்காரர்களைப்பற்றி பொதுமக்களின் மனத்தில் பதிந்திருக்கும் எண்ணம்.
ஆனால் அப்துல் கலாம் சந்தித்த மூர் மார்க்கெட் புத்தகக்கடைக்காரர் அப்படிப்பட்டவரல்ல.
அப்துல் கலாம் அப்போது குரோம்பேட்டை
எம்.ஐ.டி.யில் ஏரோனாடிக்ஸ் என்ஜினீரிங் படித்துவந்த காலம். அச்சமயத்தில் தமிழகத்தைச்
சூழ்ந்த கடும்புயல் ராமேஸ்வரத்தை அதிக அளவில் தாக்கி சீரழித்துவிட்டது. அவருடைய குடும்பத்துக்குச்
சொந்தமாக இருந்த படகுகளும் வீடும் கடலில் மூழ்கிவிட்டன. அவருடைய அப்பா அந்தச் செய்தியை
அவருக்கு கடிதம் வழியாகத் தெரிவித்தார். கல்லூரி மாணவராக இருந்த கலாமுக்கு உடனடியாகச்
சென்று பெற்றோரையும் சகோதரர்களையும் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று மனம் துடிக்கிறது.
ஆனால் பயணச்செலவுக்கு அவரிடம் பணமில்லை. ஒருமுறை அவரை கல்லூரியில் சிறந்த மாணவனாகத்
தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏரோ ஸ்ட்ரக்ச்சர்ஸ் அண்ட் ஏரோ எலாஸ்டிசிட்டி
என்ற அபூர்வமான புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அந்தப் புத்தகத்தை தன் மேசை
மீது இருப்பதைப் பார்த்ததும் அவருக்குச் சட்டென ஒரு திட்டம் உதித்தது. உடனே அப்புத்தகத்தை
எடுத்துக்கொண்டு மூர் மார்க்கெட்டுக்கு ஓடி அறிமுகமான புத்தகக்கடைக்காரர் முன்னால்
நின்றார். அப்புத்தகத்தை நானூறு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அந்தப் புத்தகத்தைப் புரட்டியதுமே அதன் மதிப்பைப் புரிந்துகொண்டார் புத்தகக்கடைக்காரர்.
அதே சமயத்தில் அந்த மாணவரின் நெருக்கடியான நிலையையும் புரிந்துகொண்டார்.
லாபம் மட்டுமே குறிக்கோள் என இயங்கும்
சாதாரணமான புத்தகக்கடைக்காரராக இருந்தால், சத்தம் போடாமல் அவர் கேட்ட தொகைக்கு புத்தகத்தை
வாங்கிவைத்துக்கொண்டு இரண்டுமூன்று மடங்கு கூடுதலான விலைக்கு அப்புத்தகத்தை விற்றுப்
பணம் பார்த்திருக்கமுடியும். எனினும் அந்தக் கடைக்காரருக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை.
அந்தப் புத்தகத்தை அடமானமாக வைத்துக்கொள்வதாகவும் தற்சமயம் அறுபது ரூபாய் தருவதாகவும்
பிறகு எப்போதாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்து மீட்டுக்கொண்டு செல்லும்படியும் சொல்லிவிட்டு
பணத்தைக் கொடுத்தனுப்பினார். எதிர்பாராத விதமாக அவர் நடந்துகொண்ட முறை அப்புத்தகத்தையும்
காப்பாற்றியது. அவரையும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது.
சிவகுமார் தன் நண்பரான சீனு என்பவரைப்பற்றி
எழுதும்போது அவருடைய மனைவி உஷாவைப்பற்றியும் சேர்த்து எழுதியிருக்கிறார். அதன் பின்னணியில்
உள்ள வலிமையான காரணத்தை குறிப்பிட்ட அத்தியாயத்தைப் படித்து முடித்ததும் புரிந்துகொள்ள
முடிகிறது. பத்தாவது படிக்கும்போது நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் காலை இழந்தவர் சீனு.
செயற்கைக்காலோடு வாழப் பழகிவிட்டார். கடுமையாக முயற்சி செய்து சி.ஏ. முடித்து ஆடிட்டராகப்
பணிபுரிந்தார். ஒரு நாடக சபாவின் செயலாளர் என்கிற முறையில் நாடக ஒப்பந்தம் செய்வதற்கு
வந்தபோதுதான் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். அந்தப் பழக்கம் நாளடைவில் நல்ல நட்பாக
வளர்ந்தது. கால் இழந்த தன் நண்பனுக்குத் திருமணம் செய்து வைக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்
சிவகுமார். அவர் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சீனுவும் தனக்கு திருமணம் நடக்க
வாய்ப்பே இல்லை என்று நினைத்து சோர்வில் மூழ்கிவிட்டார்.
ஆறு மாத இடைவெளியில் சீனுவுடைய உடற்குறையை
அறிந்துகொண்ட நிலையில் ஒரு பெண் அவரைத் திருமணம் செய்துகொள்ள தானாகவே முன்வந்து அறிவித்தார்.
அவர் பெயர் உஷா. சீனுவின் பக்கத்து வீட்டிலேயே
வசித்துவந்தார் அவர். சீனுவைப்பற்றி முழுமையாகத் தெரிந்தவர். உடனே அத்தகவலை சிவகுமாருக்குத்
தெரிவித்தார் சீனு. சீனு – உஷா திருமணம் இனிதே நடந்தது. திருமணத்துக்குப் பிறகு தன்
கல்வித்தகுதியை வளர்த்துக்கொண்ட உஷா ஒரு பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றினார்.
பிறகு ஒரு நிறுவனத்தில் இருபதாண்டுகளுக்கும் மேலாக சுருக்கெழுத்தாளராக பணியாற்றி ஓய்வு
பெற்றார். திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் உடற்குறையை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் இருக்கக்கூடும்.
ஆனால் உடற்குறையை அறிந்த நிலையில் மணவாழ்க்கைக்கு ஒப்புக்கொள்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள்.
உஷா அத்தகைய அரிய பெண்மணி.
தன் அறக்கட்டளை வழியாக மேல்நிலைப்பள்ளித்
தேர்வுகளில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெறுகிறவர்களுக்கு விருதும் பரிசும் கொடுப்பதை
ஒரு மரபாகப் பின்பற்றிவருவதை ஓர் அத்தியாயத்தில் விவரித்திருக்கிறார் சிவகுமார். பரிசளிப்பு
விழாத் தருணங்களை நினைவுகூரும் சிவகுமார் விழா மேடையில் ஏற்புரையாற்றிய ஒரு மாணவனைப்பற்றி
எழுதியிருக்கும் குறிப்பு மிகமுக்கியமானது. வேலூரைச் சேர்ந்தவன் அம்மாணவன். விருதுத்தொகையாக
ஐயாயிரம் ரூபாய் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது அவன் தன் ஏற்புரையில் தன் குடும்பச்சூழலைப்பற்றிச்
சொல்கிறான். பிறகு தன்னிடம் இரண்டு மேல்சட்டை, இரண்டு கால்சட்டை மட்டுமே இருக்கின்றன
என்றும் இரண்டிலும் பின்புறம் கிழிந்திருக்கும் என்பதைப்பற்றியும் சொல்கிறான். எப்போதும்
வகுப்பில் தனக்கே முதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும் விருது பெறுவதற்காக மேடையேறும்
போது இடது கையால் கிழிசலை மறைத்துக்கொண்டு வலதுகையால் பரிசு வாங்குவேன் என்றும் சொல்கிறான்.
தன் வகுப்பில் தன்னைப்போலவே கிழிந்த உடைகளை அணிந்து பள்ளிக்கு வரும் பெண்களும் இருக்கிறார்கள்
என்றும் தனக்குக் கிடைத்திருக்கும் விருதுத்தொகையில் அவர்கள் அனைவருக்கும் புதுத்துணிகள்
வாங்கிக்கொடுப்பேன் என்றும் அவன் அந்த மேடையில் தெரிவிக்கிறான். சின்னஞ்சிறு வயதில்
பிள்ளைகள் எதிர்கொள்ளும் வறுமைச்சூழலின் நெருக்கடிகளும் அவற்றையும் மீறி அவர்கள் நெஞ்சில்
இயற்கையாக நிறைந்திருக்கும் கொடைமனமும் கேட்பவர்கள் நெஞ்சில் பதிந்துவிடக் கூடியவை.
பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அத்தருணத்தை சிவகுமார் இன்னும் மறக்காமல் இருப்பதற்குக்
காரணம் அந்தக் கொடைமனம்தான்.
கொடைமனம் கொண்ட மற்றொரு பெரியவரைப்பற்றிய
ஒரு நிகழ்ச்சியை இன்னொரு அத்தியாயத்தில் நினைவுகூர்கிறார் சிவகுமார். ஒரு தம்பதியினர்
ஒரு நாள் காலை நேரத்தில் தாம் தங்கியிருக்கும் விடுதியறையைக் காலி செய்துவிட்டு காரில்
புறப்படுகிறார்கள். குழந்தைக்காக அவர்கள் வாங்கிக்கொண்ட பாலுக்கும் சேர்த்து கட்டணம்
வசூலிக்கிறார் விடுதி நிர்வாகி. பயணத்தின் நடுவே திண்டிவனத்துக்கு அருகில் அவர்களுக்கு
குழந்தையின் பொருட்டு மீண்டும் பால் தேவைப்படுகிறது.
வழியில் ஒரு டீக்கடைக்கு அருகில் வண்டியை
நிறுத்திவிட்டு பால் கேட்கிறார்கள். அவர்களையும் அவர்கள் மடியில் குழந்தை இருப்பதையும்
பார்க்கிறார் டீக்கடைத்தாத்தா. அவர்களிடமிருந்து
பாட்டிலை வாங்கிச் சென்று முதலில் வெந்நீர் விட்டு தூய்மையாகக் கழுவுகிறார். பிறகு
சுத்தமான பாலை சூடில்லாதபடி ஆற்றி நிரப்பிக் கொடுக்கிறார். தம்பதியினர் பணம் கொடுக்க
முன்வரும்போது வாங்க மறுத்துவிடுகிறார். “குழந்தைக்குக் கொடுக்கிற பாலுக்கு பணம் வாங்குவதில்லை”
என தாம் கடைபிடிக்கும் மரபை எடுத்துச் சொல்கிறார். அவர்கள் எவ்வளவோ சொல்லி வற்புறுத்தியும்
பணத்தை அவர் மறுத்துவிடுகிறார். “நூறு குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டியதாக் இருந்தாலும்
பாலை இலவசமாகத்தான் கொடுப்பேனே தவிர பணம் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று சிரித்துக்கொண்டே
சொல்லி அனுப்பிவைக்கிறார். “குழந்தைக்கு பால் தர்றது சாமிக்கு நைவேத்தியம் பண்றமாதிரி”
என்று அவர் சொன்ன சொல் எல்லோருடைய நெஞ்சிலும் பதிந்துவிடுகிறது.
கோவில் திருவிழாவில் தனியாக அழுதுகொண்டிருந்த
சிறுமியை பழத்தைக் கொடுத்து அழுகையை நிறுத்தி பக்கத்திலேயே உட்காரவைத்துவிட்டு கயிற்றிலேறி
நின்று வித்தை காட்டும் சிறுமியின் நடைக்குத் தகுந்தபடி மேளமடிக்கும் கொடைமனம் கொண்ட
கழைக்கூத்தாடியைப்பற்றிய விவரத்தை இன்னொரு அத்தியாயத்தில் அளிக்கிறார் சிவகுமார்.
சிவகுமார் தன் நினைவுச்சுரங்கத்திலிருந்து
பகிர்ந்துகொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அரிதான மானுடச்சித்திரங்களும் அரிதான வாழ்க்கைத்தருணங்களும்
நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அதற்குப் பொருத்தமான திருக்குறளைக்
குறிப்பிட்டு இரண்டைப்பற்றியும் இணையாக யோசிக்கத் தூண்டுகிறார் அவர். திருக்குறளை,
காலம் காலமாக அதற்கு எழுதப்பட்டிருக்கும் பல்வேறு உரைகளோடு பொருத்திப் பார்த்துப் படிப்பது
ஒரு வழிமுறை. தன் வாழ்க்கையில் கண்ட அரிய பழைய நிகழ்ச்சிகளையும் சந்தித்த மனிதர்களையும்
அசைபோட்டு அவற்றின் வழியாக திருக்குறளின் சாரத்தைத் தொட்டு உணர்வது இன்னொரு வழிமுறை.
இரண்டாவது வழிமுறையில் செயல்படும் சிவகுமாரின் அறிவுத்தேடல் அனைவரும் பின்பற்றத்தக்க
முன்னுதாரணமாகும்.
(திருக்குறள்
50: சிவகுமார். அல்லயன்ஸ் வெளியீடு. ப.எண்.244, ராமகிருஷ்ணா மடம் சாலை, தபால் பெட்டி
எண் 617, மயிலாப்பூர், சென்னை – 600004)
(புக் டே - 04.08.2022 )