Home

Sunday, 28 August 2022

எஸ்.ஆர்.சுப்பிரமணியன் : துன்பம் துடைத்தூன்றும் தூண்

 

இந்தியச் சமூகத்தில் தீண்டாமைப்பழக்கத்தை அழித்தொழிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் காந்தியடிகள் 30.09.1932 அன்று தேசிய அளவில் தீண்டாமைக்கு எதிரான செயல்திட்டங்களைக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கினார். நாளடைவில் அந்த அமைப்பே  அரிஜன சேவா சங்கம் என பெயர்மாற்றம் பெற்றது. தொடக்கத்தில் அதன் தலைவராக கன்ஷியாம் தாஸ் பிர்லாவும் செயலராக அம்ரித்லால் தக்கரும் பணியாற்றினர்.  நாடெங்கும் அதன் கிளைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் பங்கெடுத்துக்கொண்ட தொண்டர்கள் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர்.

தீண்டாமைக்கு எதிரான பரப்புரையில் காந்தியடிகள் தினமும் ஈடுபட்டார். தீண்டாமையை இச்சமூகத்திலிருந்து விலக்குவதன் வழியாக சாதியின் அடிப்படையிலான ஏற்றத்தாவை உதறிவிட்டு அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கான வழி பிறக்குமென காந்தியடிகள் ஒவ்வொரு மேடையிலும் அறிவித்தார். சாதிய அடக்குமுறைகள் அகல அகல, நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் திரும்பும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. அவருடைய தேச நிர்மாணப்பணிகளின் பட்டியலில் தீண்டாமை ஒழிப்பு முக்கியமான இடத்தைப் பெற்றது.

மதத்தையும் சாஸ்திரத்தையும் காரணமாகக் காட்டி தாழ்த்தப்பட்டோர்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பவர்களை காந்தியடிகள் கடுமையாகவே சாடினார். மானுடர் அனைவரும் இறைவனின் படைப்பாக இருக்கும் நிலையில், தன் ஆலயத்துக்குள் நுழைவதற்கு மனிதர்களில் ஒரு பிரிவினரை அனுமதித்துவிட்டு, மற்றொரு பிரிவினரைத் தடுக்கும் அளவுக்கு இறைவன் ஒருபோதும் கருணையற்றவராக இருக்கமுடியாது என்றும் தெரிவித்தார். தாழ்த்தப்பட்டோர் நலவாழ்வுக்குப் பாடுபடுவதும் நன்கொடை வழங்குவதும் உயர்சாதியைச் சேர்ந்த ஒவ்வொருவருடைய கடமையென்றும் அதன் வழியாகவே அவர்கள் இப்பிறவியில் ஆற்றிய பாவங்களிலிருந்து மீட்சி பெறமுடியும் என்றும் உரையாற்றினார். அவருடைய கருத்துக்கு  ஆதரவு இருந்ததைப்போலவே எதிர்ப்பும் இருந்தது. ஆயினும் அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தீண்டாமை எதிர்ப்புப் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டார். தன் கருத்தை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவும் தாழ்த்தப்பட்டோர் நலவாழ்வுக்கான நிதியைத் திரட்டுவதற்காகவும் இந்தியா முழுமையும் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செய்தார். உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கும் முன்பு காந்தியடிகளின் தங்குமிடமாக இருந்த சபர்மதி ஆசிரமம், அவர் பட்டியலிட்ட நிர்மாணப்பணிகளின் மையமாகச் செயல்படத் தொடங்கியது. 

தீண்டாமை யாத்திரையின் ஒரு பகுதியாக 17.02.1934 அன்று காந்தியடிகள் புதுச்சேரிக்கு வந்தார். ஏறத்தாழ பத்தாயிரம் பேர் திரண்டிருந்த ஒதியஞ்சாலை திடலில் மேசை மீது அமர்ந்தபடி அவர் உரையாற்றினார். அன்று அவர் ஆற்றிய உரையை ஜெ.சவரிநாதன், வ.சுப்பையா ஆகிய தலைவர்களுடன்  முதல்வரிசையில் அமர்ந்திருந்த பதினெட்டு வயதுடைய இளைஞரொருவரும் கேட்டுக்கொண்டிருந்தார். புதுச்சேரி அரிஜன சேவா சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, அதன் எல்லாச் செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர். தம் மேடைப்பேச்சுகளால் பார்வையாளர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட அவருடைய பெயர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் என்கிற எஸ்.ஆர்.எஸ்.

நல்ல குரல்வளமும் பாடும் திறனும் கொண்ட எஸ்.ஆர்.எஸ். ஒவ்வொரு மேடையிலும் சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்களைப் பாடி மக்களை எளிதாகத் திரட்டினார்.  தீண்டாமைக்கு எதிரான அவருடைய பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தன் வயதையொத்த இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று ஒவ்வொரு நாளும் மாலை வகுப்புகள் வழியாக சிறுவர் சிறுமியருக்கு எழுத்தறிவைப் புகட்டினார். கதர்ப்பிரச்சாரத்திலும் மது ஒழிப்பு பிரச்சாரத்திலும் அவர் ஆர்வம் காட்டினார்.

1935ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்ற தருணத்தில், காங்கிரஸ் பொன்விழாச்சங்கம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார் எஸ்.ஆர்.எஸ். தன்னுடன் பணிபுரிந்த இளைஞர்களை அந்த அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்தார். தீண்டாமை ஒழிப்பு, கதராடைகளுக்கான ஆதரவைத் திரட்டுவது, மது ஒழிப்பு ஆகியவை அந்த அமைப்பின் முக்கியமான இலக்குகளாக இருந்தன. நூல் நூற்பதும் கதராடை அணிவதும் தேச முன்னேற்றத்துக்கு எவ்வகையிலும் பயனளிக்கப்போவதில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் எஸ்.ஆர்.எஸ்.ஐப் பார்த்து ஏளனம் செய்து பேசினர். ஆயினும் அச்சொற்களை எஸ்.ஆர்.எஸ். கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. அமைதியாக தன் வழியில் பரப்புரையில் ஈடுபட்டுவந்தார். நூல் நூற்பதும் கதரணிவதும் ஒரே சமயத்தில் சுதேசி அடையாளமாகவும் பொருளீட்டும் வழியாகவும் அமைந்திருப்பதை அவர் பல எடுத்துக்காட்டுகள் வழியே விளக்கினார்.

அப்போது புதுச்சேரியில் ஜவானா ஆலை, ரோடியர் ஆலை, கப்ளே ஆலை என மூன்று பஞ்சாலைகள் செயல்பட்டு வந்தன. அவற்றில் ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அத்தகு சூழலில், கையால் நூல் நூற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவது எளிதான செயலல்ல. தடையில்லாமல் பஞ்சு கிடைப்பதையும் நூற்றுமுடித்த நூல் சிட்டங்களுக்கான வருமானம் சீரான கால இடைவெளியில் கிடைப்பதையும் உறுதிப்படுத்திய பிறகே அவருக்கு அந்த வெற்றி கிடைத்தது. தாழ்த்தப்பட்டோருக்கு தம் சொந்தக்காலில் நிற்பதற்கான வழியாக அது அமைந்தது.

பொதுமக்கள் வாசிப்புக்காக ஒரு நூல்நிலையத்தையும் எஸ்.ஆர்.எஸ். தொடங்கினார். தேசிய நாளேடுகளும் பல நூல்களும் மக்கள் வாசிப்புக்காக  வாங்கி வைக்கப்பட்டன. படிக்கும் காலத்திலிருந்தே பாரதியார் மீது எஸ்.ஆர்.எஸ். பற்று கொண்டிருந்தார். பெரும்பாலும் பாரதியார் பாடல்களையே அவர் மேடையில் பாடினார். அந்த அளவுக்கு அவை அவருக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்தன. பாரதியாரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஸ்ரீசுப்பிரமண்ய பாரதி கவிதாமண்டலம் என்னும் பெயரில் ஓர் இலக்கியப்பத்திரிகையைத் தொடங்கினார். பாரதியாரின் மாணவரான பாரதிதாசனைச் சந்தித்து அப்பத்திரிகைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பாரதியார் பெயரில் நடைபெறும் பத்திரிகை என்பதால் அவரும் தன் இசைவைத் தெரிவித்தார். பல நல்ல படைப்புகள் அப்பத்திரிகையில் வெளிவந்தன.

அந்தக் கால விதிமுறையின்படி பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து மறையும் நேரம் வரை வேலை செய்துவந்தனர். அதை பத்துமணி நேரமாகக் குறைப்பதற்காகவும் மேலும் சில உரிமைகளுக்காகவும் அரிசன சேவா சங்கப் பொறுப்பில் இருந்த வ.சுப்பையா தொழிலாளர்களை ஒருங்கிணைத்தார். அவருக்கு உதவியாக எஸ்.ஆர்.எஸ். செயல்பட்டார். மூன்று மாத கால போராட்டத்துக்குப் பிறகு ஆலை நிர்வாகம் சற்றே இறங்கிவந்தது. ஆயினும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை அளிக்க மறுத்தது.  மேலும் தொழிலாளர் நலச்சட்டங்களை நிறைவேற்றவும் நிர்வாகம் தயாராக இல்லை.

மேடைப்பேச்சாளரான எஸ்.ஆர்.எஸ். நிர்வாகம் நிறைவேற்ற மறுத்த கோரிக்கைகள் குறித்து தொழிலாளர்களிடையில் தொடர்ந்து உரையாற்றி, மற்றொரு போராட்டத்தைத் தொடங்குவதற்கான மன எழுச்சியை ஊட்டினார். தொழிலாளர்களின் வேண்டுகோள்களைப் புறக்கணிக்கும் ஆளுநரின் போக்கைக் கண்டித்துப் பேசவும் அவர் தயங்கவில்லை. அவருடைய உரைகளின் சுருக்கத்தைக் குறிப்பெடுத்த உளவுத்துறையினர் அவற்றை ஆளுநராக இருந்த பரோன் என்பவரின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். எஸ்.ஆர்.எஸ்.ஐ உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க ஆளுநர் விருப்பம் கொண்டிருந்தாலும், தொழிலாளர்கள் ஒன்றிணைய அதுவே ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுமோ என அஞ்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிறிதுகாலம் அமைதியாக இருந்தார். எனினும், நாளுக்குநாள் எஸ்.ஆர்.எஸ்.சின் மேடையுரைகளுக்குப் பெருகிவந்த வரவேற்பை அறிந்துகொண்டதும், அவரை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக செய்தியனுப்பினார்.

09.09.1937 அன்று ஆளுநரைச் சந்திப்பதற்காக வழக்கம்போல கதர்க்குல்லாய் அணிந்த கோலத்தில் எஸ்.ஆர்.எஸ். சென்றார். அந்தக் காலத்தில் ஆளுநரைச் சந்திக்கச் செல்பவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்தால், அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு குனிந்து வணங்குவது மரபாக இருந்தது. அந்த மரபைக் கடைபிடிக்க விரும்பாத எஸ்.ஆர்.எஸ். வழக்கமாக மற்றவர்களுக்கு கைகுவித்து வணக்கம் சொல்வதுபோலவே ஆளுநருக்கும் வணக்கம் சொன்னார். அந்தச் செய்கையைப் பார்த்து ஆளுநர் சீற்றம் கொண்டார். “சபையில் வணங்கும் முறையைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா?” என்று நேரிடையாகவே எஸ்.ஆர்.எஸ்.ஐப் பார்த்துக் கேட்டார் ஆளுநர். தலையில் அணிந்திருக்கும் குல்லாயைக் கழற்றிவிட்டு வணங்கும்படி கட்டளையிட்டார். அதற்கு அடிபணிய மறுத்தார் எஸ்.ஆர்.எஸ். குல்லாய் அணிந்தபடியே வணங்குவதையே தாம் மரபாகக் கடைபிடித்துவருவதாகத் தெரிவித்தார். குல்லாய் பற்றிய விவாதம் அவர்களிடையே முடிவின்றி நீண்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஆளுநர் இருக்கையிலிருந்து எழுந்து “நீங்கள் குல்லாயை எடுக்காவிடில், நானே அதைத் தட்டிவிடுவேன்” என்று சீற்றமுடன் உரைத்தார். “என் குல்லாயை நீங்கள் தட்டிவிட்டால், உங்களுடைய ஆளுநர் பதவியையே நீங்கள் இழக்க நேரிடும்” என்று அமைதியாக பதில் சொன்னார் எஸ்.ஆர்.எஸ். பதற்றமில்லாத அவருடைய பதில் ஆளுநரைச் சினம்கொள்ளத் தூண்டியது. சட்டென எஸ்.ஆர்.எஸ்.ஐ நெருங்கிவந்து அவர் தலையில் அணிந்திருந்த குல்லாயைத் தட்டிவிட்டார். அதைத் தடுக்கும் முயற்சியில் எஸ்.ஆர்.எஸ். கையை உயர்த்தியபோது, ஆளுநரின் கைகளைப் பிடித்துத் தடுக்கும்படி நேர்ந்தது. அதற்குள் குல்லாய் கீழே விழுந்துவிட்டது. அத்தருணத்தில் அந்த இடத்துக்கு ஓடோடி வந்த மெய்க்காவலர்கள் எஸ்.ஆர்.எஸ்.ஐப் பிடித்து விலக்கிவிட்டனர்.

கசப்பான அனுபவத்துடன் வீட்டுக்குத் திரும்பிய எஸ்.ஆர்.எஸ். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியை விரிவாக எழுதி காங்கிரஸ் கிளை அலுவலகத்துக்கும் தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பிவைத்தார். அந்த நிகழ்ச்சியைப்பற்றிய செய்தி அடுத்தநாளே எல்லாச் செய்தித்தாட்களிலும் வெளிவந்து மக்களிடையில் பரவியது. 11.09.1937 அன்று தினமணியில் ஒரு தலையங்கக்கட்டுரை வெளியானது. இந்து நாளிதழ் செய்தியை வெளியிட்டதோடு நிற்காமல் ஒரு தேசபக்தனின் சூளுரையை நிறைவேற்ற வேண்டியது காங்கிரஸ் இயக்கத்தின் கடமையாகும் என ஒரு குறிப்பையும் சேர்த்து எழுதியது.

சேவாகிராமத்தில் தங்கியிருந்த காந்தியடிகள் அச்செய்தியைப் படித்ததும், அந்த விவரத்தை ஒரு கடிதம் வழியாக அப்போது இங்கிலாந்துக்குச் சென்றிருந்த நேருவுக்குத் தெரிவித்தார். ஒரு சாதாரணத் தொண்டனுக்கும் கதர்க்குல்லாய்க்கும் நேர்ந்த அவமதிப்பை அவர் தனக்கு நேர்ந்த அவமதிப்பாகவே கருதினார். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் பிரான்சில் இறங்கிய நேரு, அங்கிருந்த அதிகாரிகளிடமும் ஆட்சி மேலிடத்திலும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டார். ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் கூடி அப்பிரச்சினையைப்பற்றி விவாதித்தனர். மறுநாளே, புதுச்சேரி ஆளுநரைத் திரும்ப அழைக்கும் ஆணையை பிரெஞ்சு அரசு அறிவித்தது.  நேரு இந்தியாவுக்குத் திரும்பும் முன்பே ஆளுநர் பரோன் இந்தியாவை விட்டு வெளியேறினார். இளைஞரான எஸ்.ஆர்.எஸ். தொழிலாளர்களிடையில் செல்வாக்கு பெற்ற தலைவராக உயர்ந்தார்.

1937இல் நடைபெற்ற தேர்தலில் பல மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. தமக்கிருந்த அதிகாரத்தின் எல்லைக்குட்பட்டு பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாகாணங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் விவசாயிகள் நலன் சார்ந்த பல திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றினர். கடன் சுமையைக் குறைக்கவும் நிலவரிப் பிரச்சினையைக் குறைக்கவும் அந்த அரசுகள் பாடுபட்டன. அதன் பின்னணியில் செயல்பட்டவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். காந்தியக் கருத்துகளுடன் இணைந்த சோசலிச வழிமுறைகள்  எஸ்.ஆர்.எஸ்.சைப் பெரிதும் கவர்ந்தன. ஜெயப்பிரகாஷின் வழியில் புதுச்சேரித் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பாடுபடும் எண்ணம் அவருக்குள் மேலும் வளர்ந்தது. 

எஸ்.ஆர்.எஸ்.சின் மேடைப்பேச்சைக் கேட்பதற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் கூட்டமாகத் திரண்டு வருவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.  தீண்டாமை ஒழிப்பையும் தொழிலாளர் நலனையும் ஒட்டியே அவருடைய உரைகள் பெரும்பாலும் அமைந்திருந்தபோதும், அவருக்குப் பெருகிவரும் ஆதரவைக் கண்டு புதிய ஆளுநர் சற்றே கலக்கம் கொண்டார். எஸ்.ஆர்.எஸ்.ஐ ஏதேனும் வழக்கில் சிக்கவைத்து, அவரைத் திசைதிருப்பவேண்டும் என்று திட்டமிட்டார். தமக்குக் கிடைத்த ரகசியக்குறிப்புகளின் அடிப்படையில் எஸ்.ஆர்.எஸ்.மீது பல வழக்குகளைத் தொடர்ந்தார். ஆளுநருக்கு உதவியாக வழக்கறிஞர் செல்லான் நாயக்கர் என்பவர் செயல்பட்டார். தம் மேடைப்பேச்சுகளில் அடிக்கடி வழக்கறிஞர்களின் நேர்மையின்மையையும் தன்னலத்தையும் சுட்டிக்காட்டிப் பேசும் எஸ்.ஆர்.எஸ்.சின் போக்கினால் ஏற்கனவே எரிச்சலில் மூழ்கியிருந்த செல்லான் நாயக்கருக்கு தம் சீற்றத்தைத் தணித்துக்கொள்ள அது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதனால்  எஸ்.ஆர்.எஸ்.மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளில் அவருக்குத் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்பட்டார்.

வழக்கறிஞர்களை நேர்மையற்றவர்களாகச் சித்தரிப்பவர் என்ற முத்திரையைக் குத்திப் பெரிதாக்கி, எல்லா வழக்கறிஞர்களையும் தமக்கு ஆதரவாகத் திரட்டி, புதுச்சேரி வழக்குமன்றத்தில் ஒருவரும் எஸ்.ஆர்.எஸ். சார்பாக வாதிட முன்வராதபடி செய்தார் செல்லான் நாயக்கர். ஆனால் காந்தியத்தொண்டரான சவரிநாதன் என்னும் வழக்கறிஞர் அந்த அணியில் சேர விரும்பவில்லை. ஒருவர் இன்னொருவர் மீது நேர்மையற்றவன் என குற்றம் சுமத்தும்போது, இந்த உலகுக்குத் தம் செயல்பாடுகள் வழியாக தம் நேர்மையை நிறுவிக்காட்ட வேண்டுமே தவிர, குற்றம் சுமத்தியவரைத் தந்திரமாக வீழ்த்த நினைப்பது ஒருபோதும் முறையல்ல என்பது அவருடைய நிலைபாடாக இருந்தது. இன்னொரு கோணத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையானது என அவரே அச்செய்கையின் வழியாக நிறுவுவதுபோல ஆகிவிடும் என்று அவர் கருதினார். அதனால்  தொழிலாளர்கள் நலனுக்காகவும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகவும்  பாடுபடும் எஸ்.ஆர்.எஸ்.சின் பக்கம் வழக்கறிஞர் சவரிநாதன் உறுதியாக நின்றார். எஸ்.ஆர்.எஸ். சார்பாக எல்லா வழக்குகளிலும் அவரே வாதாடினார். ஆனால், பல மாதங்கள் நீண்ட அந்த வழக்கு விசாரணை ஒரு முடிவுக்கு வந்தபோது அவருக்கு தோல்வியே கிடைத்தது. எல்லா வழக்குகளையும் சேர்த்து எஸ்.ஆர்.எஸ்.க்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார் நீதிபதி. 15.06.1939 அன்று எஸ்.ஆர்.எஸ். சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பைக் கேட்டு குலைந்துபோகாத வழக்கறிஞர் சவரிநாதன் அத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி பிரான்ஸ் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டதால் ஆறுமாத தண்டனையோடு, அந்த ஆண்டு இறுதியில் எஸ்.ஆர்.எஸ். விடுதலை செய்யப்பட்டார்.

அச்சமயத்தில் இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டிருந்தது. பிரிட்டனும் பிரான்சும் ஒரே அணியில் இருந்தன. ஜெர்மனியும் இத்தாலியும் மற்றொரு அணியில் இருந்தன. இந்தியர்களின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவை போரில் இணைக்க பிரிட்டன் முற்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக 12.12.1939 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் மாகாண ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகியது. நெருக்கடியான அச்சூழலில் 13.03.1940 அன்று ராம்கர் என்னுமிடத்தில் கூடிய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தால் மட்டுமே பிரிட்டனுக்கு இந்தியா உதவி செய்யும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பிரிட்டனில் பிரதமராக இருந்த சேம்பர்லின் அரசு வாக்கெடுப்பு ஒன்றில் தோல்வியுற்றதால் அரசரின் ஆணைக்கிணங்க வின்ஸ்டன் சர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்கமுடியாது என திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இந்தியாவை இழந்துவிட்டால், பிரிட்டன் வல்லரசாக நீடிக்கமுடியாது என்பது அவர் என்ணமாக இருந்தது.  சர்ச்சிலின் முடிவை 08.08.1940 அன்று இந்தியாவின் வைசிராயாக இருந்த லின்லித்கோ அறிவித்தார். அதன் விளைவாக நாடெங்கும் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. வினோபா தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். எஸ்.ஆர்.எஸ்.சின் முழு கவனமும் தாழ்த்தப்பட்டோர் நலனின் திசையில் திரும்பியது.

நண்பர் வி.ஆர்.இராதாகிருஷ்ணனின் உதவியுடன் யுத்த எதிர்ப்புப் பிரசுரங்களை எழுதி அச்சிட்டு புதுச்சேரிப் பகுதிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளிலும் மக்களிடையில் ரகசியமாக விநியோகிக்கத் தொடங்கினார் எஸ்.ஆர்.எஸ். அப்போது தலைமறைவாக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் ’அனைத்துப் போராட்ட வீரர்களுக்கு’ என்ற தலைப்பில் கடிதவடிவில் சிறுசிறு பிரசுரங்களை எழுதி நம்பகமான நண்பர்கள் வழியே தம் எண்ணங்களைப் பரப்பிவந்தார். ஜெயப்பிரகாஷின் நம்பிக்கையைப் பெற்ற எஸ்.ஆர்.எஸ்.க்கும் அப்பிரசுரங்கள் கிடைத்தன.  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பிரசுரங்களை எஸ்.ஆர்.எஸ்.சின் ஆருயிர் நண்பரான இராமரத்தினம் என்பவர் தமிழில் மொழிபெயர்க்க, இன்னொரு நண்பர் ஏ.கே.கோபாலன் அச்சிட்டுக் கொடுத்தார்.  அவற்றை வி.ஆர்.இராதாகிருஷ்ணன் என்னும் மற்றொரு நண்பரின் துணையோடு தமிழகப்பகுதிகளிலும் புதுச்சேரிப்பகுதிகளிலும் ரகசியமாகப் பயணம் செய்து பொதுமக்களிடையே விநியோகித்தார் எஸ்.ஆர்.எஸ்.  அவருக்காக ரகசிய வானொலி நிலையத்தை நிறுவி இயக்குவதிலும் பங்கேற்றார்.

அச்சமயத்தில்  எதிர்பாராதவிதமாக கோவை பஞ்சாலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திவந்த என்.ஜி.இராமசாமி என்னும் காந்தியத்தொண்டர் சிறையில் அடைக்கப்பட்டார். தொழிலாளர்களின் போராட்டம் தொய்வின்றி நடைபெறும் விதமாக ஒத்துழைப்பதற்காக எஸ்.ஆர்.எஸ். கோவைக்கு சென்று சிறிதுகாலம் தங்கியிருக்க நேர்ந்தது.

14.07.1942 அன்று வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் பிரிட்டன் அரசு இந்தியாவின் அதிகாரத்தை இந்தியரிடம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும் என்றும் ஒப்படைக்காவிட்டால் காந்தியடிகளின் தலைமையில் அகிம்சை வழியில் போராட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. செயற்குழுவின் தீர்மானத்தை 08.08.1942 அன்று பம்பாயில் கூடிய காங்கிரஸ் பொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய காந்தியடிகள் “இந்திய நாட்டை விடுவிப்போம் அல்லது அம்முயற்சியில் அனைவரும் வீரமரணம் அடைவோம்” என்றும் சூளுரைத்தார்.

அடுத்தநாள் முதல் நாடெங்கும் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். எஸ்.ஆர்.எஸ். போன்றவர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினர். காங்கிரஸ் தடைசெய்யப்பட்டது. அதனால் வேறொரு பெயரில் 1943இல் தர்மபுரியை அடுத்துள்ள மாரண்டஹள்ளி என்னும் சிற்றூரில் இளைஞர் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதுவரை தலைமறைவாக இருந்த எஸ்.ஆர்.எஸ். போன்றவர்கள் வெளிப்பட்டு முதல்முறையாக அம்மாநாட்டில் உரையாற்றினர். ருக்மணி லட்சுமிபதி, வி.ஆர்.இராதாகிருஷ்ணன் போன்றவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பம்பாய் மாநாட்டில் காங்கிரஸ் பொதுக்குழு நிறைவேற்றிய ’வெளையனே வெளியேறு’ தீர்மானத்தை எஸ்.ஆர்.எஸ். அம்மாநாட்டில் கலந்துகொண்ட இளைஞர்களிடையில் உரத்த குரலில் படித்தார். அதைத் தொடர்ந்து, இந்திய நாட்டின் விடுதலையைப் பிரகடனம் செய்யும் அத்தீர்மானத்தைத் தாங்களும் ஆதரிப்பதாக மற்றொரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். தடைசெய்யப்பட்ட ஒரு கட்சியின் சட்டத்துக்குப் புறம்பான ஒரு தீர்மானத்தை இளைஞர் மாநாட்டில் படித்ததாகக் குற்றம் சுமத்தி எஸ்.ஆர்.எஸ். மீது அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு சிறைத்தண்டனை விதித்தார். தருமபுரி கிளைச்சிறையில் எஸ்.ஆர்.எஸ். அடைக்கப்பட்டார். இரு மாதங்களுக்குப் பிறகு அவர் பிணையில் வெளியே வந்தாலும் அவருடைய வழக்கு ஓராண்டுக்கு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் எஸ்.ஆர்.எஸ்.க்காக கட்டணம் எதுவும் வாங்காமல் வாதாடியவர் வழக்கறிஞர் ஆர்.வெங்கடராமன். இராஜதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என்றிருந்த சூழலில் தம் வாதத்திறமையால் ஆர்.வெங்கடராமன் வெற்றி பெற்று எஸ்.ஆர்.எஸ்.க்கு விடுதலை பெற்றுத்தந்தார்.

இந்திய விடுதலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், அருணா ஆசப் அலி, அசோக் மேத்தா முதலான தலைவர்கள் 1948இல் சோசியலிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். ஏற்கனவே ஜெயப்பிரகாஷுடன் நட்பு பூண்டிருந்த எஸ்.ஆர்.எஸ்.சும் அவருடன் இணைந்து, தமிழ்நாடு மாநில சோசியலிஸ்ட் கட்சிச்செயலாளராகப் பணியாற்றினார். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பயணம் செய்து கட்சிக்கிளைகளைத் தொடங்கி தம் உத்வேகமூட்டும் உரைகளால் எண்ணற்ற இளைஞர்களை இயக்கத்தின்பால் ஈர்த்தார். ஜெயப்பிரகாஷ் தமிழகப்பகுதிகளில் பயணம் செய்தபோதெல்லாம் அவரோடு சேர்ந்து எஸ்.ஆர்.எஸ்.சும் பயணம் செய்தார். ஜெயப்பிரகாஷின் மேடைப்பேச்சை அவரே தமிழில் மொழிபெயர்த்தார். ஒருமுறை மேட்டூரிலிருந்து சேலத்துக்குப் பயணம் செய்தபோது, எஸ்.ஆர்.எஸ். அடைக்கப்பட்டிருந்த தர்மபுரி சிறையைப் பார்ப்பதற்காகவென பயணத்திட்டத்திலிருந்து விலகி தர்மபுரிக்குச் சென்றார் ஜெயப்பிரகாஷ். அந்த அளவுக்கு இருவருக்குமிடையில் உயர்ந்த நட்பு நிலவியது.

ஐதராபாத்துக்கு அருகிலிருக்கும் சிவரம்பள்ளி என்னுமிடத்தில் நடைபெற்ற சர்வோதய மாநாட்டுக்கு நாக்பூர்லிருந்து நடைபயணமாகவே வந்த வினோபா, மாநாடு முடிவடைந்த நிலையில் விவசாயிகள் கலவரம் நிகழ்ந்துகொண்டிருந்த போச்சம்பள்ளி என்னும் சிற்றூருக்கு 18.04.1951 அன்று நடைபயணமாகவே சென்றார். அங்கு விவசாயிகளிடம் மனம்விட்டு உரையாடி அவர்களுடைய பிரச்சினையைப் புரிந்துகொண்டார். தற்செயலாக அக்கூட்டத்திலிருந்த ராமச்சந்திர ரெட்டி என்பவர் தனக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பதாகத் தெரிவித்தார். மனமாற்றத்தைத் தூண்டும் வகையில் ஒருவரோடு ஒருவர் உரையாடுவதன் வழியாக நிலப்பிரச்சினையை ஓரளவு தீர்க்கமுடியும் என்ற முடிவுக்கு வந்த வினோபா, தன் ஆசிரமத்துக்குத் திரும்பாமல் இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடையை ஓர் இயக்கமாகவே மாற்றினார். பூதான இயக்கத்தின் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஏழைகளுக்குக் கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இது கிராமதானமாக வளர்ந்தது.

மக்கள் தொண்டராக வாழ்ந்த ஜெயப்பிரகாஷுக்கு வினோபாவின் வழிமுறை மிகவும் பிடித்திருந்தது. 1954இல் புத்தகயா என்னும் இடத்தில் நடைபெற்ற பூதான மாநாட்டில் அவர் கலந்துகொண்டு உரையாற்றியபோது எல்லாவிதமான அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் தான் விலகப்போவதாகவும் வினோபாவின் பூதான இயக்கத்துக்கென ’ஜீவன்தானமாக’ தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேரு, இராஜேந்திரபிரசாத் போன்ற தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அதைக் கேட்டு கைதட்டி வாழ்த்தினர். ஜெயப்பிரகாஷின் வழியையே தன் வழியெனக் கொண்ட எஸ்.ஆர்.எஸ்.சும் பூதான இயக்கத்துக்காகப் பாடுபடுவதையே தன் வாழ்க்கைப்பாதையாக அமைத்துக்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் பூதான இயக்கத் தலைவராக இருந்த ஜெகந்நாதனுக்கு உறுதுணையாக நின்று நடைப்பயணங்களை மேற்கொண்டார். 1956இல் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவரோடு எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து நிலங்களைக் கொடையாகப் பெறுவதற்கு உதவி செய்தார். நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து மக்களின் நெஞ்சைக் கவரும் வண்ணம் செயலாற்றுகிற எஸ்.ஆர்.எஸ்.சின் மதிநுட்பத்தையும் திறமையையும் வினோபா நேரில் கண்டுணர்ந்த பிறகு, அவர் மீது பெருமதிப்பு கொண்டார். அதற்குப் பிறகு, எல்லா அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகி தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு சார்ந்த பணிகளிலும் பூதான இயக்கப்பணிகளிலும் மட்டும் ஈடுபட்டார் எஸ்.ஆர்.எஸ்.

எஸ்.ஆர்.எஸ்.சின் முயற்சியால்தான் தமிழ்நாட்டில் முதல் கிராமதானம் கிடைத்தது. உத்தரமேரூருக்கு அருகில் வயலூர் என்னும் சிற்றூரில் இராமகிருஷ்ண ரெட்டியார் என்பவருக்குச் சொந்தமாக 180 ஏக்கர் நிலம் இருந்தது. வினோபா மீது மிகவும் பற்றுகொண்ட அவர் தம் நிலத்தைக் கொடையாக வழங்க விரும்பினார். செய்தி கிடைத்ததும் உடனடியாக வயலூருக்குச் சென்றார் எஸ்.ஆர்.எஸ். அங்கு சென்ற பிறகுதான் நிலத்தைக் கொடையாக வழங்கும் எண்ணம் அவருக்கு மட்டும்தான் இருந்ததே தவிர, அவருடைய மனைவிக்கு சிறிதளவும் விருப்பமில்லை என்பதைப் புரிந்துகொண்டார். உடனடியாக அவர் மனைவியை நேரில் சந்தித்து மணிக்கணக்கில் பேசி அவர் மனத்தைக் கரைத்து, கொடையளிக்க உடன்படுமாறு செய்தார். அப்போது அந்த ஒரு நிலத்தை மட்டுமன்றி, அந்த ஊரையே கிராமதானமாகப் பெற்றால் நன்றாக இருக்குமென அவருக்குத் தோன்றியது. உடனே குறைவான அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் அனைவரையும் சந்தித்து கிராமதானத்துக்கு உடன்படும்படி செய்தார். அவர்கள் அனைவரும் தம் நிலப்பட்டாக்களை அங்குள்ள  கோவில் சந்நிதியில் ஒப்படைத்தனர். 02.05.1955 அன்று காந்தியடிகள் பிறந்த நாளில் கிராம மக்கள் முன்னிலையில் அந்த நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது.

1956இல் சர்வோதய மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதற்கு வினோபா வருகை புரிந்தார். அதைத் தொடர்ந்து வினோபாவை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று ஒரு பொதுநிகழ்ச்சியில் உரையாற்ற வைத்தார் எஸ்.ஆர்.எஸ். அன்று பூமிதானக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட வரவேற்புக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பாரதிதாசன்.

தமிழ்நாடு மாநில மது ஒழிப்புக்குழு செயலாளராகவும் எஸ்.ஆர்.எஸ். பொறுப்பேற்றிருந்தார். 1967இல் அதன் தேசியக்குழு அனைத்திந்திய அளவிலான மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தத் திட்டமிட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்களை நேரில் சந்தித்த எஸ்.ஆர்.எஸ். மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்தகு உயரிய நோக்கத்துக்காக நடத்தப்படும் மாநாட்டை அரசே முன்னின்று நடத்த விரும்புவதாக முதல்வர் தெரிவித்ததும், ஆச்சரியத்தில் மூழ்கினார் எஸ்.ஆர்.எஸ்.  எல்லாச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள மாநாடு கோலாகலமாக 12.04.1968 அன்று நடைபெற்றது. மதுவிலக்கு தொடர்பாக அன்று முதல்வர் சிறப்பான உரையொன்றை ஆற்றினார்.

அண்ணாதுரையின் எதிர்பாராத மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.கருணாநிதி 31.08.1971 அன்று மதுவிலக்குச் சட்டம் நீக்கப்படும் என்று அறிவித்தார். அதைக் கேட்டு செய்வதறியாமல் திகைத்த இராஜாஜி, எஸ்.ஆர்.எஸ். போன்ற தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து மதுவிலக்குச்சட்டத்தை நீக்கவேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். எனினும் மதுவிலக்குச் சட்டத்தை நீக்குவதில் மிகவும் உறுதியாக இருந்தார் முதல்வர். மது ஒழிப்புக்காக இளமையிலிருந்து குரல்கொடுத்து வந்த எஸ்.ஆர்.எஸ். மதுவுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் வகையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார். எண்ணற்ற சர்வோதயத் தொண்டர்கள் அவருடன் இணைந்துகொண்டனர். வழியெங்கும் மதுவிலக்குக் கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டபடி அப்பயணம் நடைபெற்றது. ஆனால் தன் முடிவில் அரசு உறுதியாக இருந்தது. வேறு வழி தெரியாமல், எஸ்.ஆர்.எஸ். 1972இல் தன் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இரு தினங்களுக்குப் பிறகு அவரது உண்ணாவிரதத்தைத் தற்கொலை முயற்சி என்று கூறி காவல்துறை எஸ்.ஆர்.எஸ்.ஐக் கைது செய்து சில நாட்கள் சிறையில் அடைத்தது.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வெவ்வேறு விதமான அறப்போராட்டங்கள் வழியாக மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்தபடி இருந்தார் எஸ்.ஆர்.எஸ். இரண்டாண்டுகளுக்குப் பிறகு மனமிரங்கிய முதல்வர் 30.08.1974 அன்று மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்தார். ஆயினும் 1981இல் இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மதுவிலக்குச் சட்டத்தை நீக்கினார். மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் ஐந்துலட்சம் பேருடைய கையெழுத்துகளை வாங்கிய எஸ்.ஆர்.எஸ். அதை அரசிடம் கொடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆயினும் அரசு தொடர்ந்து பாராமுகமாக இருந்தது. வேறு வழியில்லாமல் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சர்வோதயத் தொண்டர்களுடன் கன்னியாகுமரியிலிருந்து சென்னையை நோக்கி ஒரு நடைப்பயணத்தை மேற்கொண்டார். வழியெங்கும் பல ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மதுவின் கொடுமைகளை விளக்கி உரையாற்றினார். ஆயினும் அரசின் கல்மனத்தை ஒருவராலும் கரைக்கமுடியவில்லை.  மெல்ல மெல்ல மக்களும் அதை எதிர்க்கமுடியாமல் மதுவுக்கு ஆதரவு அளிப்பவர்களாக மாறத் தொடங்கினர். சிறிதும் மாற்ற இயலாத சூழலைக் கண்டு செய்வதறியாமல் ஆறாத் துயரத்தில் மூழ்கி வாழ்க்கையைக் கழித்தார் எஸ்.ஆர்.எஸ்.

அரிசன சேவா சங்கத்தில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தொண்டாற்றி, தீண்டாமை ஒழிப்புக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்ட எஸ்.ஆர்.எஸ். 1951இல் சேத்துப்பட்டு ரயில்வே மேம்பாலத்தை ஒட்டியுள்ள இடத்தில் மகளிர் விடுதியொன்றைத் தொடங்கினார். கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் சென்னை போன்ற மாநகரத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப்பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடமாக அது அமைந்தது. நன்கொடைகள் வழியாக இயங்கும் அந்த விடுதி தொடக்கத்தில் ‘அரிசன மாணவிகள் இல்லம்’ என்று அழைக்கப்பட்டது. பானைகளை வாங்கி அழகாக வர்ணம் பூசி அக்கம்பக்கத்தி வீட்டுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு வருவார்கள். ஒவ்வொரு நாளும் சமைக்கும்போது அந்த வீட்டுப்பெண்கள் ஒரு கை அரிசியை அந்தப் பானையி போட்டு வைப்பார்கள். மாதத்துக்கு ஒருமுறை மீண்டும் அந்த வீட்டுக்குச் சென்று நிறைந்த பானைகளை எடுத்துவருவார்கள்.  இப்படி திரட்டப்பட்ட அரிசி வழியாக விடுதியின் உணவுத்தேவையை சமாளித்தார் எஸ்.ஆர்.எஸ். நிரந்தரமான நன்கொடையாளர்கள் அமையும் வரைக்கும் இப்படி பல புதுமையான வழிகளில் நிதியைத் திரட்டி விடுதியை நடத்தினார் அவர். 

நாளடைவில் ஆதரிக்க யாருமில்லாத ஏழைப்பெண்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப்பெண்களும் விடுதியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதனால் விடுதியின் பெயர் ’சென்னை மாநகர மகளிர் விடுதி’ என மாற்றம் பெற்றது. தன்னுடைய இறுதிமூச்சு வரைக்கும் இவ்விடுதியின் முன்னேற்றத்துக்காகவே உழைத்த  எஸ்.ஆர்.எஸ்.சின் பெயரை இந்த உலகத்துக்கு அறிவிக்கும் விதமாக  ’எஸ்.ஆர்.எஸ். பெண்கள் விடுதி’ என்ற புதிய பெயருடன் அந்த விடுதி வெற்றிகரமான முறையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஆகஸ்டு 2022)