முகம் துடைக்க வீட்டுக்குள் நுழைந்தபோது அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். முகம் உள்பட முழு தேகத்தையும் போர்வைக்குள் சுருட்டிக்கொண்டு அவள் படுத்திருந்த கோலம் அவனுக்குள் சிரிப்பை உண்டாக்கியது.
கல்யாணமான ஆரம்ப தினங்களில் ‘பூதம் தூங்குது... பூதம் தூங்குது’ என்று செய்த கிண்டல்களையும் ‘இது இன்னா பழக்கம், கொழந்த மாதிரி?’ என்ற கேள்விகளையும் சிணுங்கலோடு ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிறகும் கொஞசம்கூட மாறாமல் ‘சின்ன வயசுப் பழக்கம், உடமுடியல’ என்று அப்படியே இருந்தது.
அவளின் இந்த சுபாவம் போர்வையோடு கன்னத்தையோ மூக்கையோ கிள்ளி விளையாட்டோடும் சந்தோஷத்தோடும் அந்தப் பொழுதைத் தொடங்குவதற்குக் கைகள் துறுதுறுத்தன. கிள்ளலாம் என்று கை கூட நீண்டு விட்டது. ஆனாலும், அந்த வசதி குறைவான புதிய வீட்டுக்குக் குடிவந்த இந்த நாலு நாட்களில் அளவுக்குமீறி நிறைய சிரமப்பட்டுக் களைத்திருக்கிறவளைத் தொல்லை செய்ய மனசில்லாமல் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். சட்டையைப் போட்டபடி சத்தம் இல்லாமல் கதவை சாத்திக்கொண்டு வாசலுக்கு வந்தான்.
இன்னும் நிறைய இழைகளில் ஒட்டிக்கொண்டிருந்தது இருள். ஆகாயத்திலும், மரத்திலும், வீட்டுக் கூரையிலும், தரையிலும் சாக்கடையிலுமாய்ப் பரவியிருந்த கால் வெளிச்சம் கவர்ச்சியாய் இருந்தது. வாசல் முழுக்க சிதறியிருந்த பழுத்த வேப்பிலைகள் மிக மெதுவாய் வீசிக்கொண்டிருந்த காற்றில் நடுங்குவதும் நகர்வதுமாய் இருந்தன. சாக்கடையில் விழுகிற இலைகள் படகுமாதிரி கொஞ்சம் தூரத்துக்கு நீந்தி, அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ ஒதுங்கி அசைந்தன. வடக்குப் பக்கமாய் ரிப்பேர் செய்யப்படாத முனிசிபாலிட்டி தண்ணீர்க்குழாய் அனாதையாய் இருந்தது.
சாக்கடையைத் தாண்டி தெருவுக்குள் நடக்கத் தொடங்கினான். மனித வாசனையில்லாத நீளமான அந்தத் தெருவில் தனியாய் நடப்பது நாலைந்து நாட்களில் நல்ல அனுபவமாகவே பட்டது. தரமான ஒரு ரசிகனுக்குத் தன் ஓவியங்களின் நுணுக்கத்தைச் சொல்கிற சித்திரக்காரன்மாதிரி தனது அழகையெல்லாம் தெரு திறந்து காட்டியது. வரைமுறையில்லாது ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் ஒரு சாண் அகலத்துக்கு ஓடுகிற சாக்கடை, குப்பை, முழுத்தெருவிலும் சிதறிக் கிடக்கும் மீன் செதில்கள், முட்டை ஓடுகள், கருப்பஞ்சக்கை, குழிகள் அனைத்தையும் மீறி வசீகரமாகவே இருந்தது தெரு.
இந்தத் தெருவில் வாடகை வீட்டைப் பிடித்துக் குடிவந்தது ரொம்பவும் எதேச்சையான விஷயம். ஒரே வாரத்தில் மூன்று தபால்கள் எழுதிய அம்மாதான் அடிப்படைக் காரணம். தங்கச்சி புருஷனுக்குத் தையல் கடை வைத்துத் தர ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது என்பது தான் தபால்களின் மூல விஷயம். முதல் தபால் வைத்துத் தந்தால் நல்லது என்று அபிப்பிராயம் சொல்கிற விதத்தில்; இரண்டாவது தபால் வைத்துக் கொடுத்தால் நம் பாரம் கழியும் என்கிற விதத்தில்; மூன்றாவது தபால் இடமெல்லாம் பார்த்தாயிற்று, உடனே பணம் அனுப்பவும் என்கிற விதத்தில்.
பாதிச் சம்பளத்தை பைசா குறையாது வீட்டுக்கு அனுப்பி விட்டு, மீதியில் இழுக்க & பறிக்க என்று ஆள்பரிச்சயம் இல்லாத ஊரில் குடித்தனம் செய்கிற சந்தர்ப்பத்தில், இதுதான் கடைசி தரம்... கடைசி தரம் என்று ஒவ்வொரு தரமும் வருகிற அம்மாவின் தபால்கள் ரொம்பவும் கசப்பானவை. சரியான திசையில் வாழ்வை நடத்திச்செல்லத் தெரியாத தங்கச்சி. நாலு வருடத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, வீட்டு மாப்பிள்ளையாய், வேளாவேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, ஊதாரித்தனமாய்த் திரிகிற புத்திகெட்ட புருஷன், மாய்ந்துமாய்ந்து இந்த இரண்டு பேர் மேலும் பிரியத்தைப் பொழிந்து தள்ளுகிற அம்மா & எல்லோருமே கசப்பைத் திணிப்பவர்களாகவே இருந்தார்கள். அவனும் மகன்தான். அவனுக்கும் கஷ்டம் உண்டு என்று இதமாய் நினைக்கிறவர்கள் யாரும் இல்லை. இதம் இல்லாததாலேயே மறுத்துவிடுவானோ என்று அம்மா கடைசி தரமாய் இருக்கட்டும் என எழுதியிருந்தாள். வைத்துத் தந்த கடையைப் பத்தே நாளில் நாசம் செய்துவிட்டு அரை விலைக்கும் முக்கால் விலைக்கும் சாமான்களை விற்று, கண்காணாமல் மெட்ராசுக்கு ஓடிப்போய் விட்டது முதல் தரம். அழுது, அடம் பிடித்து கடைவைக்க அறுநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அடுத்த ஊரில் இடம் தேடுகிறேன் பேர்வழி என்று பெங்களூர் போய் சுற்றிவிட்டு பணத்தை அழித்து வந்தது இரண்டாம் முறை. அந்த உத்தம மருமகனுக்கு மீண்டும் கடை வைத்துத் தரவேண்டி இப்போது கேட்பது மூன்றாம் முறை. அம்மாவின் வார்த்தைப்படி கடைசி தரம் ‘சாமியிடம் வரம் கேட்கிற மாதிரி கேட்கிறேன். கடைசித் தரமாய் அனுப்பித் தா’ என்பதுதான் தபாலின் நிஜ வாசகம். இந்த வார்த்தை தைத்தது; இந்த வேண்டுதல் நடுங்க வைத்தது. சிலாம்பு இறங்கியமாதிரி வலித்தது. வெடிகுண்டு கணக்கில் மனசுக்குள் போய் வெடித்தது. கோபம் கரைந்து பரிதாபம் ஊறியது. அலைந்துஅலைந்து பார்த்தான். ஆயிரம் தேறவில்லை. ஐந்நூறுதான் புரண்டது. அதுவும் வட்டிக்கு வாங்கி அனுப்பிய பின்பு கடன் அடைப்பது பிரச்சனையாயிற்று. சம்பளத்தின் எந்த பாகத்திலும் இதற்கு வழியில்லை. இருநூறு ரூபாய் வாடகைக்குப் பதில் நூறு ரூபாய்க்கு எங்கேனும் வீடு தேடிப் போனால் மீதி நூறில் கடன் அடைக்கலாம். அந்த யோசனைக்கு அவளும் சரி என்ற ஒற்றை வார்த்தையில் உடன்பட்டாள். அப்புறம் தெருத்தெருவாய்த் திரிந்ததில் இந்த வீடு சிக்கியது.
சாக்கடை சாக்கடையாய்த் தாண்டி, பதினைந்து நிமிடங்கள் நடந்த பிறகு மெயின் ரோடு வந்தது. சிவப்பாய் பூக்களை உதிர்த்திருந்த மரங்களைக் கடந்து மேலும் நடந்தான். ஃபயர் ஆபீஸ் நெருங்கியபோது அரை வெளிச்சம் வந்தது. முழுக்க முழுக்க பார்வைக்கு வசப்படுகிற விதமாய் சகல இடங்களும் சகல பொருட்களும் இருந்தன. காலைப்பூசைக்கு மனிதர்களை சுமந்தபடி ஓடுகிற இரண்டு ரிக்ஷாக்கள். தலை முண்டாசோடு டீக்கடைக்கு போகிற ஆண்கள், தண்ணீர்க்குடம் தூக்கிப் போகிற பெண்கள், இரண்டு பக்கமும் குடங்கள் தொங்குகிற கேரியர் சைக்கிளை அழுத்தி மிதிக்கிற ஆண்கள், எல்லோரும் பூமிக்கு விழிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். எல்லாரையும் பார்த்தபடி போய்க்கொண்டே இருந்தான் அவன். இந்நேரத்துக்கு அவள் எழுந்திருப்பாளோ என்னவோ என்று அவள் மேல் இரக்கமாய் இருந்தது.
அவளுக்குத்தான் புது வீட்டில் நிறைய சிரமங்கள் இருந்தன. தண்ணீருக்குக் கஷ்டம், பாத் ரூமுக்குக் கஷ்டம், கக்கூசுக்குக் கஷ்டம், துணி துவைக்கக் கஷ்டம், அலுத்து சலித்து படுக்கப் போனால், கொசுக்கள் மத்தியிலும் ஈக்கள் மத்தியிலும் கஷ்டம், நிமிஷத்துக்கு நிமிஷம் கஷ்டம் அனுபவிப்பது அவள்தான். நாற்பது நிமிஷம் போக, நாற்பது நிமிஷம் வர என்று ஆபீசுக்கு போய்வர நடப்பதில் ஏற்படுகிற கஷடம் தவிர அவனுக்கு அதிகம் இல்லை. பழைய வீட்டில் இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் கிடையாது. கல்யாணத்துக்குப் பின்பு இரண்டு வருஷகாலம் அங்கு வசித்துவிட்டு இங்கு வந்திருப்பதே மகா பிரச்சனையாய் இருந்தது. ஒரு குடம் தண்ணீருக்கு நாலு தெரு தாண்டி வரிசையில் காத்திருந்து அடித்து நிரப்பி சுமந்து வருவது அவளுக்கு ரொம்பவும் புது விஷயம். அதுவே கஷ்டமாய் இருந்தது. காலிலும் இடுப்பிலும் வலி புரண்டது. தூங்கி எழுந்து முகம் கழுவ என்று தண்ணீரின் துணையோடு ஆரம்பிக்கிற ஒவ்வொரு தினத்துக்கும் பாத்திரம் கழுவ, வீடு கழுவ, குளிக்க, துணி துவைக்க, சமைக்க, குடிக்க என்று எப்படிப் பார்த்தாலும் பதினைந்து, பதினாறு குடம் தண்ணீர் தேவைப்பட்டது. அத்தனைத் தேவைக்கும் நடையாய் நடந்து சுமையாய் சுமந்து வருவதில் அவளுக்கு பாதி ஜீவன் போகிறது. நிதர்சனமாகவே இந்த நாலு நாட்களிலும் அவள் கஷ்டத்தைப் பார்க்க நேர்ந்தபோது பரிதாபமாக இருந்தது. நேற்று ராத்திரி தூங்க நேர்கையில், மிகச் சாதாரணமாய் வயிற்றுப் பக்கம் கையைச் சரியவிட்ட தருணத்தில் பதறி “இன்னிக்கு வேணாங்க ரொம்ப வலிக்குது” என்று கெஞ்சியதும் அழுகையே வந்துவிட்டது. அழுகையை அடக்கியதில் நாசியில் நீர் கோர்த்தது. இதயத் துடிப்பு ஜாஸ்தியானது. மெல்லத் தட்டிக் கொடுத்து
அவளைத் தூங்க வைத்து விட்டு, ரொம்ப நேரம் விரக்தியான யோசனையில் இருக்க நேர்ந்தது.
கலெக்டர் ஆபீஸ் ரோடைத் தாண்டி புதுசாக ஆரம்பித்த காலனி ரோட்டுக்குள் நடந்தான். இரண்டு பக்கமும் ஆதரவாய் நின்றிருந்த வேப்ப மரங்கள் முக்கால் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன. மிக இதமான காற்று சீராக வீசியது. அநேகமாக எல்லார் வீட்டு வாசல்களிலும் விழிப்பு வந்துவிட்டது. சாணம் தெளிக்கிற பெண்கள், கோலம்போடுகிற பெண்கள், பாதை ஓரத்தில் பிள்ளைகளை மலம் கழிக்க உட்கார வைத்துவிட்டு காவல் காக்கிற பெண்கள், தண்ணீர் சுமக்கிற பெண்கள் எல்லாரும் அன்றைய தினத்தை சுபாவத்தின் காரணமாகவே வெகு சுலபமாய் ஆரம்பித்து விட்டதைப் பார்த்தபடி முன்னால் நகர்ந்தான். பெண் ஜென்மமே இந்த நேரத்தில் பாவப்பட்டது என்று நினைத்துக் கொண்டான்.
நாலு ரோடுகளும் கூடுகிற இடத்தில் வழக்கமான கம்பத்துக்கருகே வந்து நின்றபோது அவனுக்கு முன்பேயே இன்னும் சில பேர்கள் நின்றிருந்தார்கள். அதற்குள் வந்துவிட்ட காலைத் தினசரியை வாசித்தபடி, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடி, ராத்திரி பார்த்த சினிமாவை விமர்சித்தபடி, ஒன்றுமே பேசாமல் வீதியை வெறித்தபடி திட்டுத்திட்டாகவே நின்றிருந்தார்கள். அனைவர்க்கும் பால் வழங்குகிற வேன்தான் இன்னும் வரவில்லை.
வேன் இன்னும் வராததில் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது இவனுக்கு. அவன் வருகையை தப்பவிடக்கூடாது என்கிற காரணத்துக்காகவே இத்தனை தூரம் இத்தனை காலையில் தூக்கம் கெட்டு வரவேண்டியதாய் இருந்தது. நகரத்துக்குள் இருந்த பழைய வீட்டில் இந்தப் பிரச்சனை இல்லை. சைக்கிளில் வந்து கதவைத் தட்டி ஊற்றிவிட்டுப் போவான். தினசரி காலை டீ குடிப்பது அத்தியாவசியமாகப் போய்விட்ட பிறகு, எந்தப் பால்காரனும் இத்தனை சந்து பொந்துகளில் புகுந்து வந்து விற்கிற பழக்கம் இல்லை என்பதையறிந்து, பாலுக்காகவே காலை நேரத்தில் இவ்வளவு தூரம் நடந்து வருவதுகூட இந்த வீட்டில் சகித்துக்கொள்ளவேண்டிய ஒரு கஷ்டமாய் நினைத்தாள்.
பணமெல்லாம் சாத்தியமில்லை என்றுகூட பதில் எழுதி இருக்கலாம்; யாரும் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. ஆனால் ‘வரம் மாதிரி கேட்கிறேன்’ என்று எழுதிய அம்மாவின் வார்த்தை & ஒத்தாசை என்று வருகிற சமயத்தில் நல்லவனா கெட்டவனா
தோழனா துரோகியா என்றெல்லாம் மூல ஆராய்ச்சி இல்லாது சட்டென்று இளகிக் கரைந்துவிடுகிற இயல்பான சுபாவம் இந்த ஒரு கட்டத்திலாவது நிஜமாகவே முன்னேறி தமக்கென்று ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கிக்கொண்டால் ஏதாவது ஒரு கோணத்தில் தங்கச்சி பற்றிய பாரம் இறங்காதா என்கிற நப்பாசை எல்லாமாகக் கூடித்தான் அனுப்பச் செய்தது. அதற்காகவே இத்தனை சிரமங்களையும் ஏற்கவேண்டியதாய் இருந்தது.
பால் வேன் வந்தது. அரை லிட்டர் பாக்கெட்டோடு திரும்பி நடந்தான். இளவெளிச்சம் தரை முழுக்கப் பரவி, மின்னியது. பழம், காய், கீரை சுமந்த தள்ளுவண்டிக் கடைகள் சிகரெட் பெட்டிக்கடை. சவரக்கடை, சோடாக்கடை, ஸ்வீட் ஸ்டால், அரிசி குடோன், எல்லாவற்றிலும் விழிப்பு முளைத்தது. பரபரப்பு அதிகரித்தது. அதிகாலைக்காற்றையும் மீறி, பிடறிக்கடியிலும் கழுத்திலும் அரும்பிய வேர்வையை அழுத்தித் துடைத்தான். மெயின் ரோட்டைக் கடந்து, தெருச்சந்தில் நுழைந்தபோது அங்குமிங்குமாய் ஜன நடமாட்டம் இருந்தது. மனிதர்களின் பாதங்களுக்கு கீழே மடங்கி இருந்தாலும், தெருவுக்கு வசீகரமாகவே பட்டது.
வீட்டுக்குள் அவள் உட்கார்ந்திருந்தாள். பாதிப்போர்வை, இன்னும் காலைச் சுற்றி இருந்தது. பாய், போர்வை தலையணை, கொசுவலை எல்லாம் அந்தச் சின்ன இடத்தை அடைத்திருந்தன. பால் பாக்கெட்டை மேசையில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். மெதுவாய்ப் புன்சிரித்தாள் அவள்.
‘இன்னா சிரிப்பு திடீர்னு?’
மீண்டும் அதே சிரிப்பு.
‘எதுக்கு சிரிப்பு?’
‘ஒன்னுமில்ல!’
‘ஒன்னுமில்லாததுக்கு எதுக்கு சிரிக்கணும்?’
சொல்லிக்கொண்டே கொசுவலையை அவிழ்த்து மடித்தாள். போர்வையை, பாயை உதறி மடித்து ஒழுங்கு செய்தாள். குனிந்து நிமிரும் போது மீண்டும் சிரிப்போடு முனகிக் கொண்டாள்.
‘இன்னாது, மகாராணிக்கு சிரிப்பா பொங்குது காலைலியே!’
அதற்கும் சிரிப்பே பதிலாய் இருந்தது அவளிடம். பொங்கப்
பொங்க அவள் சிரிப்பதைப் பார்த்து அவனும் சிரித்துக் கொண்டான்.
‘தண்ணிக்குப் போவலியா?’
‘அத நெனைச்சுத்தான் சிரிக்கறேன்!’
மீண்டும் அவள் மெலிதாய் சிரிக்க, அவனும் சிரித்தான்.
‘சரி, நீ டீ போடு. நான் போய் ஒரு கொடம் எடுத்தாரன்!’
‘நீங்களா?... ஐயய்யோ.. வேணாம்பா!’
‘எதுக்கு?’
‘வேணாம்னா வேணாம்!’
‘எதுக்கு வேணாம்னு சொல்லு!’
‘அந்தக் கஷ்டம்லாம் ஒங்களுக்கு வேணாம், நா போய் வரன்!’
‘அதான் எதுக்குன்னு காரணம் சொல்லு?’
‘ச் ச் ச் சொன்னா கேளுங்க! வேணாம்.’
‘இருக்கட்டும்! இருக்கட்டும்!’
‘வேணாங்க, பாக்கறவங்க ஏதாச்சும் சொல்வாங்க!’
‘கவலை இல்ல!’
குடங்களை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான். அவளோடு கஷ்டம் பகிர்வதில் நிம்மதியாகவே இருந்தது. வாசல் சாக்கடையைத் தாண்டிப் போகிற அவனையே ரொம்ப நேரம் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.
(பிரசுரமாகாதது - 1986)