வீட்டுத் தரகன் முத்தப்பன் பேச்சோடு பேச்சாக “ராசியில்லாத வீடு” என்று குத்திக்காட்டியதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்குள் சட்டெனச் சீறியெழும் எரிச்சலையும் கோபத்தையும் சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஆனால் என் முகக்குறிப்பிலேயே அதை உணர்ந்துகொண்ட முத்தப்பன் “ஊருல அப்படி ஒரு பேச்சு பரவி இருக்குது சார். நாலு பேரயும் கலந்து பேசிட்டுத்தான கஸ்டமர் கடைசியில் நம்மகிட்ட வரான்” என்று பட்டப்பெயர் சூட்டியதில் தன் பங்கு எதுவுமில்லை என்பதைப் போலப் பின்வாங்கினான். மறுகணமே பத்து லட்ச ரூபாய் விலை மதிப்புள்ள வீட்டைப் பாதியாகவும் முக்காலாகவும் மாற்றத் தரகர்கள் வழக்கமாகக் கையாளும் தந்திரப்பேச்சுதான் இது என்று எனக்குப் புரிந்துவிட்டது. “இந்த கஸ்டமர் போனா என்ன, வேற கஸ்டமர் வந்தா பாத்துக்கலாம் முத்தப்பா” என்று பொதுவாகச் சொல்லிப் பேச்சை முடிக்கப் பார்த்தேன்.
“எத்தன கஸ்டமருங்க எத்தன வருஷம் கழிச்சி வந்தாலும்¢ இதான் சார் வெலை, இதுக்குமேல எதிர்பாக்கமுடியாது. இஷ்டமிருந்தா சொல்லுங்க. இல்லன்னா அப்புறமா பாத்துக்கலாம். ஒவ்வொரு தரமும் பாண்டிச்சேரிலேருந்து இவ்வளவு தூரம் என்னால டூவீலர்ல வந்துபோகமுடியாது சார்”. வெளிப்படையாகத் தன் சலிப்பைப் புலப்படுத்தினான் முத்தப்பன்.
“போனா போவுது விடு முத்தப்பா. வித்துத்தான் தீரணும்ன்னு எனக்கும் ஒன்னும் அவசரமில்ல. தெனம்சாயங்காலமா காத்தாட வந்து ஒக்காந்துட்டு போக எங்களுக்குன்னு ஒரு எடமா
இருக்கட்டும்”
கொஞ்சமும் தயக்கமின்றிச் சொன்னேன். முத்தப்பாவின் முகம்போன போக்கு சரியில்லை. மேற்கொண்டு ஒரு நொடியும் தாமதிக்காமல் சங்கடமான பார்வையுடன் வெளியே போனான் அவன்.
சில கணங்களுக்குப் பிறகு கூடத்திலும் வாசலிலும் உள்ள விளக்குகளை ஒளிர வைத்தேன். சுவர்களில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் வெளிச்சத்தில் பிரகாசித்தன. கொடைக்கானல் ஏரியில் படகுகள் மிதக்கும் காட்சியைக் கொண்டது ஓர் ஓவியம். திருவோண நாளில் கேரளத்தில் நடைபெறும் படகுப்போட்டிக் காட்சியைக் கொண்டது மற்றோர் ஓவியம். தைதேர்ந்த சித்திரக்காரர்களால் எழிலுடன் வரையப்பட்டவை அவை. இரண்டு ஓவியங்களிலுமே அடர்ந்த பச்சைப்பசேலென்ற மரங்களும் பனிபடர்ந்த வானமும் பின்ணியாக இருந்தன. அடுத்த கணத்திலேயே அப்படகுகள் ஓவியத்திலிருந்து இறங்கித் தரைக்கு வந்துவிடுவதைப்போலத் தோற்றம் தரும் அவற்றை ஆசைஆசையாக செகந்திராபாத்திலிருந்து வாங்கி வந்திருந்தேன். கடற்கரையைப் பார்த்தமாதிரி இருந்த காளாப்பட்டு கிராமத்தில் வெகுகாலத்துக்கு முன்னால் வாங்கிவைத்த மனையில் இந்த ஆசை வீட்டைக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்த நேரம் அது.
கொடைக்கானல் ஏரி ஓவியத்துக்கென விசேஷ இடம் என் மனத்தில் உருவாகக் காரணமிருந்தது, பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் திருமணமானதும் லலிதாவோடு உல்லாசமாக நான் போய் இறங்கிய முதல் இடம் கொடைக்கானல். ஆர்வமும் மிரட்சியும் ஒருங்கே மின்னும் கண்களுடன் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தவளுடன் கொடைக்கானல் ஏரியில் நான் செய்த படகுப்பயணம் வாழ்வில் மறக்கமுடியாத இனிய அனுபவம். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் மனத்துகுள் அசைபோட்டு வாழ்ந்து பார்க்க அந்த ஓவியம் தூண்டிக்கொண்டே இருந்தது. பல சமயங்களில் ஓவியத்திலிருக்கும் படகில் பயணம் செய்யும் காதல்ஜோடி நாமே என லலிதாவுடன் பேசும்போது சொல்லிச் சிரித்ததுண்டு.
ஓவியப்படகின் விளிம்பை விரல்களால் தடவிப் பார்த்தேன். மனநெகிழ்ச்சியில் தொடர்ந்து அங்கு நீற்க முடியவில்லை. வெளியே வந்து முன்பக்கத்துத் தோட்டத்தில் கடற்கரையைப் பார்த்தமாதிரி போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன்.
சுருள்சுருளாக நெளிந்து அடங்குகிற நுரை ததும்பும் அலைகள் பார்க்கப்பார்க்க வசீகரமான இருந்தன. அலையோசையின் சீரான தாளத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது.
அந்தத் தாளத்தை வெவ்வேறு விதமாக நினைத்துப் பார்த்தது மனம். உதடு குவித்து ஏற்ற இறக்கங்களுடன் ஒரு குழந்தை எழுப்புகிற ஓசையாக முதலில் மாறியது அது. பிறகு வண்ணவண்ண நூல்களால் படுக்கை விரிப்புக்கும் ஜன்னல் திரைகளுக்கும் பூக்களைப் பின்னும் தருணங்களில் லயம் பிசகாமல் லலிதா எழுப்புகிற சங்கீதமாக மாறியது. ஏதோ ஒரு கணத்தில் அந்த ஓசையும் தரகனுடைய குரலும் இணைந்தபோது என் மனஒருமை குலைந்தது. அவன் படியிறங்கியபோதே அவன் சொன்ன வார்தையும் மனத்திலிருந்த உதித்ததாக நான் கட்டியெழுப்பிக்கொண்ட நம்பிக்கை தகர்ந்து அந்த வார்த்தைகள் முகத்தில் அறைந்தன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த வீட்டைக் கட்டி முடித்துக் குடியேறியபோது வாழ்க்கையில் மிகப்பெரிய கனவொன்று நிறைவேறிய எண்ணமே மனம்முழுக்கப் பரவியிருந்தது. அப்போதெல்லாம் இருள்பிரியாத காலையில் லலிதாவுடன் அலையோசையைக் கேட்டபடி மணலில் பாதங்கள் அழுந்த நடப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். அரைமணி நேர நடை ஒரு பனந்தோப்பை நெருங்கியதும்தான் நிற்கும். வியர்வைக் கசகசப்புடன் கடலைப் பார்த்தபடி தோப்புக்கருகே இருக்கும் பாறைகளில் உட்கார்வோம். அநேகமாக அது சூரியோதயம் நிகழும் நேரமாக இருக்கும். கடலின் மடியிலிருந்து தலைநிமிர்த்திக்கொண்டு எழுகிற சூரியனின் தோற்றத்தைப் பார்ப்போம். சிவப்பும் மஞ்சளாகக் கணத்துக்குக் கணம் நிறம் மாறி ‘நாலைந்து நிமிடங்களில் வெளுத்து மேகங்கள் நடுவே புகுந்துவிடுவதைப் பார்த்தபிறகு இருவரும் கரையோரம் செல்வோம்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயமொன்றில் ரத்தப் பரிசோதனை செய்த மருத்துவர் கடற்கரைக்காற்றின் ஈரப்பதத்தில் தொடர்ந்து இருப்பது நல்லதல்ல என்று சொன்னார். அதனால் உடனடியாக வாடகைக்கு வேறொரு வீடு மாற வேண்டியிருந்தது. ஓய்வு நேரங்களில் நான்மட்டும் வந்துபோகிற இடமாக கடலோர வீட்டை மாற்றிக்கொண்டேன். ஆறேழு மாதங்களில் லலிதா உடல்நலம் தேறியெழுந்தாள். கடலோர வீட்டுக்குச் செல்வதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் அதைச் சிரித்துக்கொண்டே நிராகரித்துவிட்டார். உடனே பிள்ளைகளும் மெல்லமெல்ல பள்ளிக்குப் போய்வருவதில் இருக்கிற சங்கடங்களையும் பிரதான சாலைக்கும் வீட்டுக்கும் இடையே இருக்கிற தொலைவையும் சுட்டிக்காட்டிக் கடற்கரை வீட்டை ஒதுக்கினார்கள். வீட்டையும் தோட்டத்தையும் சுத்தப்படுத்திப் பராமரிப்பதற்காக தூரத்துச் சொந்தக்காரன் ஒருவனை நியமித்துவிட்டு வாடகை வீட்டுக்கே நானும் செல்லவேண்டியதாயிற்று. காலை நடைகளில் வெகுதொலைவிலிருந்து கடலோர வீடு ஒரு சதுர அடுக்காகத் தெரிவதைப் பார்ப்பதே பெரிய விஷயமானது. விடுமுறை நாளொன்றில் அதிகாலை நடையில் தோட்டத்தைப் பார்க்கும் ஆசையில் உள்ளே நுழைந்தபோது யாரோ ஒரு இளஞ்ஜோடி கூடத்தில் காப்பி குடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து உறைந்துபோனேன். சொந்தக்காரப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் தப்பித்து ஓடிப்போனான்.
“எதுக்குங்க அந்த வீடு? வித்துட்டு வேற எங்காவது வாங்கிக்கலாமே?” என்றாள் லலிதா. அவள் அப்படிச் சொல்லக்கூடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நான். என் கனவுகளையும் ஆசைகளையும் அறிந்தவள் அவள். அங்கு வாழ்ந்த நாள்களையும் இன்பமயமாக்கியதில் பெரிய பங்கை வகித்தவள் அவள். அவள் கருத்துக்கு எதிராக எந்தச் சொல்லையும் சொல்ல மனம் விரும்பவில்லை.
“ஒவ்வொரு வீட்டுக்கு அடியிலும் ஒரு தேவதை உண்டு லலிதா. சிலரை அது விரும்பிக் குழந்தைகள்போலத் தாங்கிக்கும். சிலரைத் தாங்கிக்கொள்ள விருப்பமில்லாம தள்ளிடும். பாரம் தாங்காத வண்டி குடைசாய்ந்து விழுவதைப்போல”
அவள் பதில் சொல்லாமல் என் முகத்தையே பார்த்தபடி இருந்தாள். “கன்னியாத்தா கோயிலுக்குத் தெற்கே இருக்கிற ஆலமரம் நானூறு ஐந்நூறு வருஷங்கள் மூத்ததா இருக்குமில்லயா? அதுவே ஒரு குட்டித் தோப்பு மாதிரி இருக்குது. ஆனால் எந்தச் சங்கடமும் இல்லாம பூமிக்கடியில இருக்கிற தேவதை ஒரு பூவைத் தாங்கிக்கிறமாதிரி அதைத் தாங்கிக்கறா. அதே கோயிலுக்குப் பக்கத்தில ஒரு வேப்பங்கன்னை நட்டு வளக்கறதுக்கு எத்தன தரம் வச்சிவச்சிப் பாத்தாங்க. ஒரு தரமாவது மொளைச்சிதா? நாணல்செடி மாதிரி மெலிசான கன்னு அது. ஆனா தேவதைக்கு அதுவே பெரிய பாரமா போய்டுச்சி. மண்ணுக்கு அடியில இருக்கிற ரகசியத்த நம்மால தெரிஞ்சிக்கவே முடியாது லலிதா. எந்த இடம் கடலுக்குரியது, எந்த இடம் நீருக்குரியது, எந்த இடம்
மரம் செடிகொடிகளுக்குரியது, எது புதையலுக்குரியது, எல்லாமே பரம ரகசியம் லலிதா”. செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.
அப்புறம்தான் வாடகைக்கு யாரையாவது நல்ல குடும்பமாகக் குடியமர்த்தும் எண்ணம் வந்தது. வீட்டுத்தரகன் முத்தப்பன்தான் குடும்பங்களை அழைத்து வந்தான். துரதிருஷ்டவசமாக எநதக் குடும்பமும் நிலைந்து அந்த வீட்டில் குடும்பம் நடத்தவில்லை. முதலில் வந்த குடும்பத்தினர் பயணம் செய்த வாகனம் மலையனூர் சென்று திரும்பும் வழியில் விபத்துக்குள்ளானது. மற்றொரு குடும்பத்தில் குடிவந்த ஆறேழு மாதங்களில் மனைவிக்குப் புத்தி பேதலித்துவிட்டது. இப்படியே நாலைந்து குடும்பங்கள் வந்துபோய்விட்டன. யாரும் நிலைத்து நிற்கவில்லை. எல்லாப் பழிகளையும் வீடு ஏற்றுக்கொண்டு அப்பாவியாகக் கடலைப் பார்த்து நின்றது.
“பேசாம வித்துடுங்க சார். உழவர்கரைக்குப் பக்கத்தில தென்னந்தோப்பு ஒன்ன ப்ளாட் போடப்போறாங்க. நீங்க ம்ன்னு ஒரு வார்த்த சொல்லுங்க. கார்னர் ப்ளாட்டா ரெண்டு வாங்கிப் போட்டம்ன்னா இதவிட பத்துமடங்கு சூப்பரா நான் வீடு கட்டித் தரேன் சார். இத விக்கறதபத்தி நீங்க கவலப்படக்கூடாது. நான் வித்துத் தரேன். இன்னிய தேதிக்கு உழவர்கரையில் இருக்கற மாதிரியான வசதிங்க எங்கயும் ஒங்களுக்குக் கெடைக்காது”. ஒருநாள் பேசவந்தபோது கோரிக்கையை முன்வைத்தான் முத்தப்பன்.
“எல்லாம் இருக்கும் முத்தப்பா. ஆனா கடல் இருக்காது.”
என் ஏக்கம் அவனுக்குப் புரியவில்லை. “நானும் எத்தனையோ தரம் சொல்லிப் பார்த்தாச்சிங்க. அவர் யாரு வார்தையையும் கேக்கறமாதிரி¢ இல்ல. நீங்க சொல்லியாவது கேக்றாரா பாப்பம்“ என்று நாளுக்கு நாள் லலிதாவும் சேர்ந்து கொள்ளத் தொடங்கினாள். அப்படி நேரும்போதெல்லாம் “எல்லாரும் ஒன்னு சேந்துட்டீங்களா? ஏதாவது செஞ்சிக்குங்க. என்ன ஆள உடுங்கப்பா. தலைக்குமேல வேலை இருக்குது எனக்கு” என்று நான் அதை உடனடியாக ஒரு நகைச்சுவையாக மாற்றிவிட்டு வெளியேறுவதை வழக்கமாய் பின்பற்றத் தொடங்கினேன். என் குற்ற உணர்ச்சியைத் தூண்டும் வார்தைகளை என்னால் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க முடிவதில்லை.
வெளியேறிவிடும் அத்தருணங்களில் கால்கள் தளரும் வரையில்
வெயிலையும் மழையையும் பார்க்காமல் அரைநாளாவது நடந்து தீர்ந்தால்தான் சலிப்புணர்ச்சியிலிருந்து விடுதலையுறும் மனம். திரும்பிய பிறகு அப்படிக் கிளம்பிச் சென்றதை நினைத்து வருத்தமாக இருக்கும். பேச்சுவார்தையை மறுபடியும் எப்படித் தொடங்குவது என்று கூச்சமாக இருக்கும். அநேகமாக அதுபோன்ற சமயங்களில் ஒரு சகஜத்தன்மையை உருவாக்குவதில் சின்னவன் செல்வத்துக்கு அசாத்தியத் திறமை இருந்தது. “அப்பா, இந்தக் கிரிக்கெட் பேட்டுக்கு ரப்பர் ஹேண்டில் போட்டு தரியப்பா?” என்று நீட்டுவான். உடைந்துபோன ஒரு யானைப் பொம்மைய நீட்டி “டிக்ஷனரியை எடுக்கும்போது கை தவறிப் பட்டு கீழே உழுந்து கால் ஒடைஞ்சிட்டுதுப்பா. நான் சேத்துப் புடிச்சிக்றேன். நீங்க ஒட்டுங்கப்பா” என்பான். இல்லையென்றால் “நாளைக்கு ஸ்கூல் எக்ஸிபிஷன்ல என் பிசிக்ஸ் ப்ராஜெக்ட்தாம்பா டெமான்ஸ்ட்ரேஷனுக்கு வைக்கறாங்க. வாட்டர் கலர்ல டைட்டில் பேனர் எழுதித் தாங்கப்பா” என்றபடி நெருங்குவான். உறவுப் பாலத்தைச் சீராக்கிக்கொள்ள எனக்கும் ஏதேனும் ஒரு சாக்குபோக்கு தேவையாக இருக்கும். அமைதியாக அவன் சொல்வதைச் செய்யத் தொடங்குவேன். ஆனால் என் கைக்கு வாட்டர்கலர் கிடைக்கும். பிரஷ் கிடைக்காது. உடைந்த காலை ஒட்ட ஃபெவிக்விக் கிடைக்கும், சுற்றுவதற்கு இன்சுலேஷன் டேப் கிடைக்காது. ரப்பர் ஹேண்டிலுக்கு சைக்கிள் டியூப் கிடைக்கும். நறுக்குவதற்குக் கத்திரிக்கோல் கிடைக்காது. “இருப்பா, அம்மாவ கூப்பிடறேன், அவுங்கதான் நம்ம வீட்டு சி.ஐ.டி.” என்பான். பிறகு “சி.ஐ.டி., சி.ஐ.டி. இங்க வாங்க சி.ஐ.டி.” என்று கூறிக் கொண்டே உள்ளறைக்கோ சமையல் கட்டுக்கோ செல்வான். சில கணங்களுக்குப் பறிகு லலிதா மட்டும் வருவாள். தேடிக் கிடைக்காததும் பார்வையில் படாததும் மாயமாய் ஒரு நொடியில் அருகே வந்துவிடும். “எங்க அந்தப் பையன்?” என்பேன் நான். “சமையல் கட்டுல மாம்பழத்த பார்த்தபிறகு கொரங்கு வெளியே வருமா?” என்று சிரிப்பாள் லலிதா. அவள் சிரிக்கும்போது தெரியும் தெத்துப்பல்லின்மீது அப்படியே நிமிர்ந்து ஒரு முத்தம் கொடுக்கலாம்போல இருக்கும், “சரிசரி, இங்க கொஞ்சம் புடி” என்பேன். அவளும் நானுமாக சேர்ந்து வேலையை முடித்தபிறகு சகஜமாகிவிடும் வீடு.
கடலோர வீட்டுக்கு ஒரு வாடகைதாரரை அழைத்து வந்த பிறகே மறுவேலை என்று முடிவெடுப்பதைப்போல அலைந்தான் முத்தப்பா. “எதுக்கு முத்தப்பா இந்த அலைச்சல்? சும்மாதான் கெடக்கட்டுமே” என்று கேட்ட லலிதாவிடம் தலையைச் சொரிந்தபடி “மூவாயிரம் ரூபாய் வாடகைன்னா ஒரு மாச வாடகை எனக்கு கமிஷனா கெடைக்குமேம்மா. பெரிய பொண்ண மதகடிப்பட்டுல எஞ்சினீயரிங்க‘க் சேத்துருக்கேன். செலவுக்குப் பணம் வேணுமே” என்று சொன்னது கேட்டது. நாலைந்து வாரங்களில் “ஆந்திராவிலிருந்து நம்ம யுனிவர்சிட்டில வேலை கெடைச்சி வந்திருக்காரு” என்று ஒரு குடும்பத்தைக் கூட்டிவந்து நிறுத்தினான். கணவன், மனைவி, இரண்டு சிறுவர்கள். “மண்ணுக்குள்ளே இருக்கற தேவத எத்தன தரம்தான் தள்ளிக்கிட்டே இருப்பா? இவுங்களயாவது ஏத்துக்குவாளா?” என்று காதருகே வந்து முணுமுணுத்தாள் லலிதா. அவர்களைக் கடலோர வீட்டுக்குச் செல்லுமாறும் சில நிமிடங்களில் தொடர்ந்து வருவதாகவும் சொல்லி அனுப்பி வைத்தேன்.
“அந்தப் பொண்ணு பாக்கறதுகு கன்னத்தில் முத்தமிட்டால் சிம்ரன் மாதிரி இருக்கா” என்றால் லலிதா. “அவர் எப்படி, சரத்குமாரா?” என்றேன். உடனே “ஐயோ அப்பாவுக்கு நடிகருங்க பேருகூட தெரியலை. மாதவனுக்கும் சரத்குமாருக்கும் வித்தியாசம் தெரியாம பேசறாரு” என்று சிரித்தான் சின்னவன். “ஏண்டா ஒரு படத்துல காதலியோட கடலோரமா மீன்காரங்க குப்பத்துல வந்து தங்கிப் பாட்டுல்லாம் பாடுவாரே, அது சரத்குமார்தானடா” என்றபோது குடும்பமே சிரித்தது. “போதும் போதும் உங்க சினிமா ஞானம். முதல்ல போயி அவுங்களுக்கு ஊட்டக் காட்டிட்டு வாங்க. அப்புறம் பேசிக்கலாம்“ என்று அனுப்பி வைத்தாள் லலிதா.
வந்தவர்களுக்கு வீடு பிடித்துவிட்டது. எல்லாவற்றையும் முத்தப்பனே பேசி முடித்துவிட்டான். நான் போனதுமே “புதுசா ஒயிட்வாஷ்லாம் வேணாம் சார். நீங்களே புதுசுபோலத்தான் வச்சிருக்கீங்க. வர பதினஞ்சாம் தேதி வந்து பால் காச்சிக்கறம்“ என்றார் புதியவர். என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே அவரும் “நான் ருத்ரமூர்த்தி” என்று கையை நீட்டிக் குலுக்கினார்.
“இந்த யூனிவர்சிட்டில லேப் அஸிஸ்டென்ட்£ சேர்ந்திருக்கேன்”.
“சொந்த ஊரு?”
“விசாகப்பட்டினம். ஆனா படிச்சதெல்லாம் சென்னையிலதான். இது என் மனைவி தாட்சாயிணி. இவுங்க சொந்த ஊரும் சென்னைதான்.”
குடிவந்த பிறகு அவர்களை நாங்கள் ஒருநாள் விருந்துக்கு அழைத்தோம். அவர்களுடைய பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளோடு நன்றாக ஒட்டிக்கொண்டார்கள். சின்னவன் அவர்களை அப்போதே தன் அறைக்கு அழைத்துச் சென்று தன் சேமிப்பு ரகசியங்கிடங்கைத் திறந்து காட்டி நட்பைச் சம்பாதித்துக்கொண்டான். வார விடுப்பில் எல்லாரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்கள். அவர்கள் புதுசாக வாங்கிய சிடி ப்ளேயரில் ஒருநாள் எல்லாரும் “அன்பே சிவம்“ பார்த்தோம்.
ஆறேழு மாதங்கள் கடந்ததே தெரியவில்லை. ஒருநாள் மாலை நடையாகக் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது அவர்கள் மணற்பரப்பில் ஆடிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் அழைத்தார். “க்ளைமேட் இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்குது” என்று சிரித்தார். பிறகு “வாங்களேன், தண்ணில நிக்கலாம்“ என்று அழைத்தார்.
என்னால் அந்த அழைப்பை மறுக்க முடியவில்லை. அவர் மனைவியையும் குழந்தைகளையும் தனியே விட்டுவிட்டு நாங்கள் மட்டும் தண்ணீரை நோக்கிச் சென்றோம். ஜில்லென்ற நீரலைகள் பாதத்தைத் தழுவியபோது இதமாக இருந்தது. ஈரமண்ணில் பாதங்கள் அழுந்தியதும் மிதக்கும் உணர்வு எழுந்தது. வானம் ஒருநொடி வளைந்து நிமிர்ந்ததைப்போல ஓர் உணர்வு.
கடலின் முன்னிலையில் நிற்கும்போதெல்லாம் என் மனம் தயக்கமும் தடுமாற்றமும் கொள்ளும். பார்வையால் அளக்கமுடியாத அகலமும் நீளமும் கொண்ட கடலை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருக்கமுடியாது. கண்கள் தத்தளிக்கத் தொடங்கிவிடும். பார்வை வழியே அக்கடல் உடலுக்குள் இறங்கி படீரென ஒரு அலையாக மோதும். ரத்தம் துள்ளியடங்கும். கடலுக்குள் இறங்கி அலையோடு அலையாக மாறிவிடத் துடிக்கும். ஆழ்மனத்திலிருந்து ஒரு கட்டளை பிறந்து எக்கணமும் என்னைத் தூண்டிவிடக்கூடும் என்று தோன்றும். அந்தத் தடுமாற்றம் மிகவும் பழகிய ஒன்று. உடனே கவனத்தை வேறு திசையில் திருப்பிவிடுவேன். நல்ல வேளையாக நான் பேச முயற்சி செய்த தருணத்தில் அவரே பேசத் தொடங்கினார்.
“எங்க பிள்ளைங்கள பத்தி என்ன நெனைக்கறீங்க சார்?-”
அக்கேள்வியின் தொனி எனக்குப் புரியவில்லை. “ரொம்ப அழகா சுறுசுறுப்பா இருக்காங்க. எந்தத் தயக்கமும் இல்லாம சட்டுனு ஒட்டுதலா அவுங்க பேசறது சந்தோஷமா இருக்குது” என்றேன்.
“பாக்கறதுக்கு அவுங்க யார் சாயல்ல இருக்காங்க?”
உடனடியாக அக்கேள்விக்குப் பதிலை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சற்றே நிதானித்து “ஏன் ருத்ரமூர்த்தி, உங்கள மாதிரிதான் இருக்காங்க” என்றேன். அவர் சிரித்தபடி “நோ...நோ... சின்னவன் வேணுமின்னா என்னக் கொண்டிருக்கலாம். பெரியவன நல்லா பாருங்க. அவன்கிட்ட என் சாயலா தெரியுது?” என்று மறுபடியும் கேட்டார்.
சில கணங்களின் தயக்கத்தைத் தொடர்ந்து பெரியவன் பக்கம் என் பார்வையைப் படரவிட்ட பிறகு “ஒங்க சாயல்தான் இருக்குது ருத்ரமூர்த்தி” என்றேன்.
“நல்லா பாத்து சொல்லுங்க சார். அவசரமே இல்ல”. அவர் சிரிப்பு எனக்குச் சங்கடமாக இருந்தது. வசமாக மாட்டிக் கொண்டதைப்போல இருந்தது.
“எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உங்க சாயல்தான்.” அப்பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். உடனடியாகப் பேச்சை வேறு திசையில் செலுத்திச் சென்றேன். கால்மணி நேரத்துக்குப் பிறகு விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன்.
இரவு தூங்குவதற்கு முன்னால் லலிதாவிடம் மெதுவாகச் சொன்னேன். அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“சரியான பைத்தியக்காரனா இருப்பாம்போல தெரியுதே, எந்த ஊர்லியாவது ஒரு பெத்த அப்பனே இப்படிப் பேசுவானா?”
“ஏதாவது பிரச்சனையாயிடுமோன்னு பயமா இருக்குது லலிதா”.
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எதைஎதையோ யோசிச்சி மனச போட்டுக் கொழப்பிக்காம அமைதியா தூங்குங்க. பூமிக்கடியில இருக்கற உங்க தேவதை எல்லாத்தையும் கவனிச்சிக்குவா”. அவள் சிரித்தபடி நெருங்கிவந்து என் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து மாலையிலாவது அல்லது இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகாவது ஒருமுறை வீட்டுப்பக்கம் ஒரு நடை நடந்து வருவது பழக்கமானது. லலிதா கிண்டல் செய்யாத நாளில்லை. நிம்மதியான இரவுத் தூக்கத்துக்கு அந்த நடை எனக்குத் தேவையாக இருந்தது.
எல்லாமே வீண் பிரமை என்கிற முடிவுக்கு நானே மெல்லமெல்ல திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் விபரீதமான செய்தி வந்தது.
நள்ளிரவு பதினொன்றரை மணிக்குமேல் ஒருநாள் வீட்டு அழைப்புமணியை யாரோ தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருப்பது கேட்டது. விளக்கைப் போட்டுவிட்டு எழுந்திருப்பதற்குள் கதவுகளை வேகவேகமாக தட்டும் ஓசை பெரிதாகக் கேட்டது. தூக்கம் முற்றிலுமாகக் கலைந்தவனாக் கதவைத் திறந்தேன். யாரோ ஒரு சைக்கிள்காரன் நின்றிருந்தான்.
“சார், ஒங்க ஊட்டுல குடுத்தனம் வந்தவங்களுக்குள்ள ஒரே சண்டை. அடிச்சிக்கறாங்க. கையில கத்தி வச்சிகிட்டு அந்த பொம்பளைய ஊட்டுக்குள்ளயே தொரத்தி தொரத்தி அடிக்கறாரு அவரு. எல்லாக் கதவுங்களயும் ஜன்னல்ங்களயும் உள்பக்கம் பூட்டியிருக்காரு. எங்களால எதுவும் செய்ய முடியல. ஒரே கராமுரான்னு சத்தம். நீங்க உடனே போங்க. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறேன்.”
அடுத்த நொடியே அவன் சைக்கிளுடன் பறந்து போனான். அந்தச் சத்தத்தில் லலிதாவும் பிள்ளைகளும் எழுந்துவிட்டார்கள். “இப்ப எதுக்குங்க அந்த எடத்துக்கு? நாளைக்கு விடிஞ்சப்புறம் பாத்துக்கலாமே” என்றால் லலிதா.
“கவலப்படாதம்மா. கால்மணிநேரத்துல வந்துடறேன்”
உள்ளேபோய் துணிமாற்றிக்கொண்டு தெருவில் இறங்கினேன். கடற்கரையில் மகனிடம் தன் சாயல் இருக்கிறதா என்று கேட்ட ருத்ரமூர்த்தியின் முகம் மனத்தில் மிதந்து வந்தது. அந்தக் கண்களின் அடியில் குரூரம் ஒளிந்து கிடந்திருக்கும் என்று நம்பவே முடியவில்லை.
நான் சென்று சேர்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. “சொல்லு சொல்லு. யாருடி இந்தப் பையனுக்கு அப்பன்?” என்றபடி விரட்டிவிரட்டித் தாட்சாணியையும் மூத்த சிறுவனையும் இளநீர் வெட்டும் கத்தியால் வெட்டிக் கொன்றுவிட்டு தன் கழுத்தையும் அறுத்துக்கொண்டு செத்ததை ஜன்னல் கண்ணாடி வழியே செய்வதறியாமல் பார்த்தபடி நின்றதை சுற்றியிருந்த மக்கள் சொன்னார்கள். உயிருடன் இருந்த சிறுவன் வீட்டைச்சுற்றி ஒழுகி உறைந்துகிடக்கிற ரத்தத்தையும் உடல் உறுப்புகளையும் பார்த்து கதறிக்கதறி மயங்கிக் கிடந்தான். கதவைத் திறப்பதற்கு என்னிடம் சாவியில்லை. எனக்குத் தலையே வெடித்துவிடும்போல இருந்தது.
தளர்ந்து சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். அரைமணி நேரத்தில் காவல் துறையினர் வந்து கதவை உடைத்துகொண்டு சென்றார்கள். மூர்ச்சையாகிக் கிடந்த சின்னக் குழந்தையை முதல் உதவிக்காக உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். பிறகு சடலங்களை வேறொரு வாகனம் மூலம் பிணக்கிடங்கு பரிசோதனைச் சாலைக்கு அனுப்பினார்கள். விடியவிடிய அங்கேயும் பிறகு நிலையத்திலும் விசாரணை நடந்தது. வீட்டு சொந்தக்காரன் என்கிற முறையில் நான் பலகட்ட விசாரணைகளுக்கு உட்படவேண்டியிருந்தது. அவர்கள் கூப்பிட்டு அனுப்பிய சமயங்களில் எல்லாம் எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சென்று சொல்லிவிட்டு வருவது என் கடமையாயிற்று. ஏறத்தாழ இரண்டு வாரங்கள் வீட்டிலும் மாறிமாறிச் சோதனைகள் நடந்தன. காவலரின் பிடியிலிருந்து வீடு கைக்குத் திரும்பியதும் முதல் வேலையாகக் கதவைப் பழுது பார்க்க வேண்டியிருந்தது. ருத்ரமூர்த்தியின் பெற்றோர்கள் விசாகப்பட்டினத்திலிருந்து வந்து சிறுவனை அழைத்துக் கொண்டு போனார்கள். வயதில் மூத்த அந்தப் பெரியவர் எங்களுக்கு நேர்ந்த எல்லா இடர்ப்பாடுகளுக்கும் மகன் சார்பாகத் தான் மன்னிப்புக் கேட்பதாகப் பேசியபோது செவிசாய்ப்பதற்கே சங்கடமாக இருந்தது.
என் மனப்பாரம் வெகு நாள்களுக்கு இறங்கவே இல்லை. மனிதர்கள் ஏன் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்ற குழப்பத்துக்குப் பதிலே இல்லை. புறத்தோற்றத்தில் புலப்பட்டுவிடாத அந்தரங்கமான ஒரு முகத்துடன் மனிதர்கள் எச்சரிக்கையாக இயங்குகிறார்கள். நமக்குத் தெரிவதைத் தாண்டி ஒரே ஒரு அம்சமாவது தெரிந்துகொள்ள இயலாத ஒன்றாக முடிவில் எப்போதும் எஞ்சி விடுகிறது.
பெஞ்சைவிட்டு எழுந்தேன். நன்றாக இருட்டிவிட்டது. தோட்டத்தின் மதிலோரமாக இருந்த மரமல்லிகை பூத்து மணந்து கொண்டிருந்தது. பாத்தி பிடித்ததைப் போல மதிலோரம் நட்ட சாமந்திச்செடி வரிசையில் மஞ்சள் சாமந்திகளின் சிரிப்பு இருட்டில் வசீகரமாகக் காட்சியளித்தது. வெளியே கடலோரம் செல்லவேண்டும்போல இருந்தது. இந்தப் பூக்களும் வீடும் கடலும் என்னால் புரிந்துகொள்ள முடியாத புதிர்களாக மாறிவிட்டன என்கிற விஷயம் எனக்குத் தளர்வைக் கொடுத்தது. என் பார்வையின் எல்லைக்கப்பால் இருக்கிற விஷயங்களை¢ அறிந்துகொள்ளும் வழியே இல்லை.
விளக்குளை நிறுத்திய பின்னர் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தேன். சுற்றுச்சுவர் கதவுகளை இரும்புச் சங்கிலியால் இணைத்துக்கட்டிப் பூட்டிச் சாவியைப் பையில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். தொலைவில் அலைகளின் ஓசை துல்லியமாகக் கேட்டது. காதருகே அந்த அலைகளே உயர்ந்து தாழ்வதுபோல. அந்த ஓசை மனத்தின் பள்ளங்களிலெல்லாம் நிரம்பித் தளும்பியது. அதனால் மீட்டப்படுகிற நரம்புகள் அதிர்வதை உணரமுடிந்தது.
தெருவில் இறங்கியதும் முதலில் கரையை நோக்கிக் கால்கள் தாமாக நடந்தன. சில கணங்களுக்குப் பிறகு நின்று பெருமூச்சோடு கடலைப் பார்த்தேன். ஒரு பெரிய ராட்சசன் அரக்கப்பரக்க எழுந்து வர கைகால்களை அசைத்துக் கொண்டிருப்பதான தோற்றம் இரவின் கருமையில் சற்றே அச்சத்தை ஊட்டியது. என் குழப்பமான புதிர்களுக்கான ரகசிய விடைகளை அறிந்தவை அந்த அலைகள் மட்டுமே என்று தோன்றியது. அவற்றை அறிந்துகொள்ளும் வழிதான் எனக்குத் தெரியவில்லை. மறுகணமே திரும்பி வீட்டைநோக்கி நடந்தேன். இந்த வீட்டை எவ்வளவு ஆசையாகக் கட்டினேன். என் கனவே இதுதான் என்பதுபோலச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். ஆனால் எனக்கு அங்கு வாழக் கொடுத்துவைக்கவில்லை. தங்க வந்தவர்களும் கொடுத்துவைக்காதவர்களாகிப் போனார்கள். தொடமுடியாத வானைத் தொட்டபடி பரவியலையும் விரிந்த கடல் கோடிக்கணக்கான ரகசியங்களின் உறைவிடமாகக் காட்சியளித்தது. எங்களையும் எங்கள் வீட்டையும் எங்கள் தலைமுறையையும் தாண்டி ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கப்போவதும் இன்னும் பலகோடி ரகசியங்களை உள்வாங்கி உறையப்போவது இந்தக் கடல்தான் என்று தோன்றியது.
கடலோர வீடு என்பதில் கொண்ட பெருமைகளையெல்லாம் சிதைத்து உதிர்த்தபடி நடந்தபோது காலம் காலமாக நான் நடந்த பல நடைகள் நினைவில் மோதின. ஏரிக்கரையின் பாதையில் குளுகுளுவென்று வீசும் மரங்களின் காற்றை அனுபவித்தபடி நடந்த இளமையின் நடைகள். வயல்வெளிகளையும் வேப்பந்தோப்புகளையும் முந்திரித்தோப்புகளையும் கடந்து வளையலோசையையும் சிரிப்புச் சத்தத்தையும் தாவணிகள் உரசும் ஓசையையும் கேட்டபடி நடந்த கல்லூரிக்கால நடைகள். என் இனிய லலிதாவின் மெல்லிய விரல்களைக் கோர்த்தபடி கொடைக்கானல் ஏரிக்கரையிலும் பிறகு நாடெங்கிலும் உள்ள முக்கிய சுற்றுலா நகர்களிலும் நடந்த நடைகள். “கதை சொன்னபடி நடந்துநடந்தே அந்தச் சொர்க்கத்துக்கே நீங்கள் அழைத்துச் சென்றுவிடுவீர்கள்” என்று
அவள்தான் சொல்வதுண்டு. நடைகளுக்கிடையே இளைப்பாறும் இடமாக மாறிப்போனது வீடு என்று தோன்றியது. ருத்ரமூர்த்தி கொலைகாரனாக மாறிய இரவில் அவரும் தாட்சாணியையும் இதே கடற்கரையில் ஒருவர் மடியில் ஒருவராகப் படுத்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இரவு உணவுக்குப் பிறகு காலாற நடந்துவிட்டு வருவதாகக் கிளம்பியபோது அன்று கடற்கரைக்குச் செல்லும் எண்ணமே இல்லை. வேறு திசைகளில் செல்லலாம் என்றுதான் நினைத்திருந்தேன். யோசனைகளின் அழுத்தத்தில் மனம் ஏதோ ஒன்றை பற்றியிருந்தாலும் பழக்கத்தின் காரணமாகக் கால்கள் கடற்கரைப் பக்கம் திரும்பிவிட்டன. வேகமாக வந்தவன் நெருக்கத்தில் அருகருகே அவர்கள் இருவரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் ஒதுங்கிவிட்டேன்.
“தாட்சாயிணி, அந்த மேகத்தைப் பாத்தியா? எவ்வளவு அழகா இருக்குது?”
“வெள்ளை வெளேர்னு பால கொட்டனமாதிரி இப்படிப்பட்ட மேகங்கள் நான் பாத்ததேயில்லிங்க. பாக்கப்பாக்க மயக்கமா வருது. ஒரு ஆலமரம் வேரோட விழுந்து கெடக்கறமாதிரி இருக்குது ஒரு மேகம். இன்னொன்னு யானை படுத்திருக்கறமாதிரி இருக்குது. இடையில இருக்கறது ஓடற குதிரைமாதிரி இருக்குது”.
“அந்த மேகத்தோட மேகமா மெதக்கலாம்போல இருக்குது எனக்கு”-
“அங்க பாருங்க. புதுசா இருக்குதுங்க இந்தப் பறவைங்க. கொக்காவும் இல்லாம நாரையாகவும் இல்லாம. இப்படிப்பட்ட பறவைங்க எந்த நாட்டுலேர்ந்து வருதோ தெரியயலையே. இந்த நடுஜாமத்துல எங்க போவுதுங்க?”
“அமைதி இல்லாத ஆத்மா அலையறமாதிரி இருக்குது”.
“மனிதர்களுக்குத்தான் மனசு. எண்ணங்கள். கவலை. துக்கம். சந்தோஷம். பறவைகளுக்கென்ன? கடவுள்போல அதுங்க”.
“நெஜம்தான் தாட்சாயிணி. அதோ பாரு. அந்த அலைகளின் ஓசை கேக்குதா? அது அதனுடைய மனசின் ஓசைதானே?”
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“உனக்கும் தெரியம் தாட்சாயிணி. நல்லா உத்துக்கேளு. அந்த ஓசையாலேயே நம்ம நெஞ்ச நெரப்பிக்கணும். நெஞ்சு நெறையநெறைய அந்த ஓசை தானாப் புரியும்.”
இருவரும் சட்டென ஒருகணம் அமைதியாகி அலைகளைக் கவனிப்பவர்களாக மாறிவிட, அதற்குமேல் கவனிக்க விரும்பாமல் திரும்பி வந்துவிட்டேன். “என்ன ஒரு மாதிரி இருக்கறீங்க? என்ன ஒரு மாதிரி இருக்கறீங்க?” என்று கேட்ட லலிதாவின் குரல் மட்டும் கேட்டபடி இருந்தது. வீட்டுக்குத் திரும்பிய பிறகும் அக்குரல் என்னைத் தூங்கவிடாமல் அடித்தது. மனத்தின் இரைச்சலை அடக்கி அமைதிப்படுத்தும் முகமாக கணிப்பொறியை இயக்கி இணைய தளத்துக்குள் நுழைந்தேன். மின் அஞ்சல்கள், தளங்கள், பாடல்கள் என்று ஒரு மணிநேரத்தைப் போக்கியபிறகுதான் கண்களில் சோர்வு கவிந்தது. கழிப்பறைக்குச் சென்று திரும்பியபிறகு படுத்து உறங்கத் தொடங்கினேன். இதற்கப்புறம் இரண்டரைமணிநேரம் கழித்துத்ததான் கதவுகள் தட்டப்பட்டன.
(அமுதசுரபி, ஏப்ரல் - 2004)