Home

Sunday 30 July 2023

போட்டி - கட்டுரை


நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கள் அப்பாவின் உடல்நலம் குன்றியது. உள்ளூர் மருத்துவர்கள் அளித்த மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை. சென்னைக்குச் சென்று பெரிய மருத்துவமனைகளில் காட்டுமாறு சொந்தக்காரர்கள் சொல்லத் தொடங்கினர். சென்னையில் எங்கள் அத்தை இருந்தார். அதனால் எங்கள் பெரியப்பா, அப்பாவை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றார். அத்தையின் துணையோடு பெரிய மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பிவிட்டார்.

எஸ்ஸார்சியின் கதையுலகம் : ஆவணப்படுத்தும் கலை

  

அரிச்சந்திரன் கதையை அறியாதவர்களே இருக்கமுடியாதுஒரு பக்கத்தில், சத்தியத்தின் உறைவிடமாக இருக்கிறான் அரிச்சந்திரன். எதை இழந்தாலும் சத்தியத்தின் மீது தான் கொண்டிருக்கும் பற்றை அவன் துறப்பதில்லை. அதற்காக மலையளவு துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்கிறான் . இன்னொரு பக்கத்தில் முனிவர் விசுவாமித்திரர் சத்தியத்தின் வழியிலிருந்து அவனை விலகவைக்க தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கிறார். அறத்தொடு நிற்றல் என்பது அரிச்சந்திரன் இயல்பாகவே இருப்பதால் அவருடைய முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியடைகின்றன. இரு விசைகளுக்குமிடையில் வெற்றி தோல்வி மோதல் இறுதிவரைக்கும் நீண்டுகொண்டே போகிறது. 

Monday 24 July 2023

எழுத்து என்பது என் பொழுதுகளைப் பொருளுடையதாக மாற்றுகிறது

 

 ( கே.நல்லதம்பி நேர்காணல் )

உரையாடல் : பாவண்ணன்

( கன்னடப் படைப்புகளை தமிழ் மொழியிலும் தமிழ்ப்படைப்புகளை கன்னட மொழியிலும் மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையில் நல்லதொரு உறவுப்பாலமாக விளங்குபவர் கே.நல்லதம்பி. மொழிபெயர்ப்புப் பிரிவின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமி விருதாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கன்னட எழுத்தாளரான நேமிச்சந்திர எழுதிய யாத் வஷேம் என்னும் நாவலை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

Sunday 23 July 2023

அந்தரத்தில் மிதக்கும் இசை

  

ஒருமுறை நானும் மறைந்த எழுத்தாளர் பாரதிமணியும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, குறித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே புறப்பட்டு மண்டபத்தை அடைந்துவிட்டோம். மண்டபத்துக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று காப்பி அருந்தியபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகுதான் மண்டபத்துக்குச் சென்றோம்.

அ.இராமசாமி : முழுமை பெற்ற சித்திரம்

  

நான் அல்சூரில் வசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் (1989), தாமோதர முதலியார் தெருவில் இயங்கிவந்த திருக்குறள் மன்றம் என்னும் நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்களை எடுத்துப் படித்துவந்தேன். காந்தியடிகள் தொடர்பான பல முக்கியமான நூல்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காந்தியடிகளின் கடிதங்கள், உரைக்குறிப்புகள், கட்டுரைகள், பயணக்குறிப்புகள் ஆகியவை அடங்கிய ஆறு பெருந்தொகுதிகளை அங்கேதான் முதன்முதலில் பார்த்தேன்பச்சை நிறத்தில் ஒரு பெரிய பேரேடுபோல உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்பு உறுதியாகவும் அழகாகவும் இருந்தன. எல்லாமே அறுபதுகளில் வெளிவந்தவை. நான் அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். தற்செயலாக எனக்கு அப்போது இன்னொரு புதையல் கிடைத்தது. அது .ராமசாமி என்பவர் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' என்னும் புத்தகம். அதுவும் அறுபதுகளில் வெளிவந்த புத்தகம்

Monday 17 July 2023

மொழி என்னும் அடையாளம்

 

மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலத்துக்கும் சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை நடுநாடு என்று பெயரிட்டு அழைத்தார்கள். தெற்கே வெள்ளாறு. வடக்கே தென்பெண்ணை. கிழக்கே வங்கக்கடல். மேற்கே திருவண்ணாமலை. இவற்றை உத்தேசமான எல்லைப்பகுதிகள் என்று ஒரு கோட்டை இழுத்துக்கொள்ளலாம். கரிசல் தமிழ், குமரித்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல நடுநாட்டில் புழங்கிய தமிழ் நடுநாட்டுத்தமிழ் என்று அழைக்கப்பட்டது. எல்லா வட்டாரங்களிலும் தனித்துவமான வழக்குச்சொற்கள் அமைந்திருப்பதுபோல, நடுநாட்டு வட்டாரத்திலும் தனித்துவமான வழக்குச்சொற்களும் மரபுத்தொடர்களும் அமைந்திருக்கின்றன.

எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன் அஞ்சலி

  

15.07.2023 அன்று காலையில் நண்பர் வளவ.துரையன் வழியாக எழுத்தாளர் ஜீவகாருண்யன் அவர்களின் மறைவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். ஒருகணம் அவர் முகம் என் நினைவில் மின்னி மறைந்தது.  குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியிலும் திசையெட்டும் சார்பில் சென்னையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியிலும் நெய்வேலி நகரத்தில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியிலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஏராளமான தலைமுடியுடன் கூடிய அவருடைய முக அமைப்பை ஒருவராலும் மறந்துவிட முடியாது. 

மிகையுமின்றி குறையுமின்றி

  

சிற்றூரில் பள்ளியிறுதி வரைக்கும் படிக்கும் இளைஞனான ஆறுமுகம் புகுமுக வகுப்பில் சேர்ந்து படிப்பதற்காக கிராமத்தைவிட்டு வெளியேறி திருநெல்வேலிக்கு வருகிறான். பொருநை நாவலின் முதல் காட்சி அப்படித்தான் தொடங்குகிறது. 

இளம்பாரதி நேர்காணல் - சந்திப்பு : பாவண்ணன் - இரண்டாம் பகுதி

 

மொழிபெயர்க்கும் முயற்சியில் எப்படி ஈடுபட்டீர்கள்?

 

ஐதராபாத்திலிருந்து மதுரைக்கு வந்த பிறகும்கூட தெலுங்கு மொழியில் வெளிவந்துகொண்டிருந்த யுவ பத்திரிகையை தொடர்ந்து தேடித்தேடி படித்தேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த இதழில் நல்ல நல்ல கதைகள் வெளிவந்தன.ஒருமுறை அவற்றைப் படித்துக்கொண்டிருந்த போது இருப்பதில் சிறப்பான ஒரு கதையை நானே தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியது.  

இளம்பாரதி நேர்காணல் - முதல் பகுதி சந்திப்பு : பாவண்ணன்

                          

(இளம்பாரதி என்கிற ருத்ர.துளசிதாஸ், 02.07.2023 அன்று தொண்ணூறு வயதைக் கடந்து தொண்ணூற்றியொன்றாம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் தன் அயராத உழைப்பின் விளைவாக, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் வழியாக எண்ணற்ற படைப்புகளை மொழிபெயர்த்து நம் தமிழ்ழொழிக்கு வளம்சேர்த்துக்கொண்டிருக்கிறார். கோவில்பட்டி சார்ந்த இளையரசனேந்தல் என்னும் சிற்றூரில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளிக்கல்வியும் மதுரையில் இளநிலை பட்டப்படிப்பும்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்து சிவகங்கை கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு புதுச்சேரியில் வசித்து வருகிறார். 

Tuesday 11 July 2023

அந்திமழை இணைய இதழ்நேர்காணல்

 

வாசகர்கள் யாரும் புத்தகத்தை எரிப்பதில்லை. ஆனால் பிழையான புத்தகத்தை ஒதுக்கி விடுகிறார்கள்

 அந்தி மழை நேர்காணல்

சந்திப்பு: அபூர்வன்

5 Jul, 2023,

பதிவுகள் - இணைய இதழ் நேர்காணல்

எழுத்தாளர் பாவண்ணனுடன் ஒரு நேர்காணல்: "கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கைஅந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்அதுவே என் எழுத்தின் வழி." - பாவண்ணன்

நேர்காணல் கண்டவர் எழுத்தாளரும், 'பதிவுகள்இணைய இதழ் ஆசிரியருமான ..கிரிதரன்

நாள் : 01 ஜூலை 2023

Sunday 2 July 2023

பூமியின் மடியில் - கட்டுரை

 

     பள்ளியிறுதி நாட்களில் குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் ஒருவித வேடிக்கையுணர்வும் ஆச்சரியமும் படர்ந்து மலைக்கவைத்துவிடும். ஆளை வெளியே தள்ளுகிற மலைப்பு அல்ல அது. உத்வேகமூட்டி தன்னைநோக்கி ஈர்த்துக்கொள்கிற மலைப்பு. ஒருவகையில் காந்தம்போல. இன்னொருவகையில் விதவிதமாக கதைகளை விதவிதமான கோணங்களில் புனைந்து சொல்கிற ஒரு மூதாட்டியைப்போல. குறுந்தொகையின் பாடல்களை அப்போது பாதியளவில்கூட உள்வாங்கிக்கொள்ள முடியாததாகவே இருந்தது. ஆனாலும் மூதாட்டியின் கைவிரல்களைப்போல அந்த வரிகள் மனத்தைத் தொட்டு வருடிக்கொண்டே இருப்பதில் ஒருவித மகிழ்ச்சியும் பரவசமும் கிட்டின.

பிள்ளைப் பருவத்தில் - கட்டுரை

  

     கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வழக்கம்போல அருணாவும் சிவக்குமாரும்  குழந்தை அரூப் சித்தார்த்தோடு பெங்களூருக்கு வந்திருந்தார்கள். பார்ப்பவர்களின் கவனத்தை ஒரே கணத்தில் தன்னைநோக்கி ஈர்த்துவிட வல்ல குழந்தை அரூப். பரபரப்பும் துடிப்பும் நிறைந்த அவன் பேச்சும் சற்றும் எதிர்பாராதவிதமாக பெரிய மனிதத் தோரணையோடு அவன் சொல்லும் அபூர்வமான சில சொற்கலவைகளும் அவனோடு உடனடியாக ஒட்டவைத்துவிடும். அவர்கள் வந்திருந்த சமயத்தில் நான் ஊரில் இல்லை. ஒரு வேலையாக நாகர்கோயிலுக்குச் சென்றிருந்தேன். அதற்கு மறுநாள்தான் சுனாமிப் பேரலைகளின் சீற்றத்துக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் கன்னியாகுமரிக் கடற்கரையில் பலியாகின. உயிரற்ற சடலங்களைப் பார்க்கப்பார்க்க பைத்தியம்பிடித்துவிடும்போல இருந்தது. இனம்புரியாத வேதனையில் தத்தளித்தது மனம். ஒருகணம்கூட அந்த ஊரில் நிற்கமுடியாதுபோலத் தோன்றியது. எப்படியோ வண்டிபிடித்து மறுநாள் மதியவேளையில் வீட்டுக்குத் திரும்பினேன். சோர்வில் துவண்டிருந்தது மனம். குழந்தை அரூப்பின் சிரிப்பும் பேச்சும் கலகலப்பும் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டக்கூடும் என்று நினைத்தேன்.

பேயும் தெய்வமும் - கட்டுரை

 

     சின்மயா மருத்துவமனைத் தெருவின் இறுதியில் இருக்கும் கிருஷ்ணன் கோயில்வரை சில ஞாயிறு மாலைகளில் நடந்துசெல்வதுண்டு.  சாலையின் இருமருங்கிலும் அடர்ந்திருக்கும் மழைமரங்களும் மேமலர் மரங்களும் அந்தச் சாலைக்கே குடை பிடிப்பதைப்போல இருக்கும். அச்சாலையில் நடந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு தோப்புக்குள் நடக்கும் உணர்வை அடைந்திருக்கிறேன். பல பெயர் தெரியாத பறவைகள் ஏதோ ஒரு திசையிலிருந்து வந்து அம்மரங்களின் கிளைகளில் உட்கார்ந்திருக்கும் காட்சி, பகல்பொழுதின் அலுப்பைக் கழிப்பதற்காக அவையும் எங்கிருந்தோ பறந்துவந்து மனிதர்களையும் மரங்களையும் வேடிக்கை பார்ப்பதைப்போலத் தோன்றும். பல வீட்டு முற்றங்களில் நந்தியாவட்டைகளும் செம்பருத்திகளும் பூத்திருக்கும். கட்டடப்பணி தொடங்காத காலி வீட்டுமனைகளில் அஞ்சுமல்லி புதர்புதராகப் பூத்திருக்கும். கோயில் வாசலில் நாலைந்துபேர் பூக்கூடைகளுடன் உட்கார்ந்து பூ விற்றுக்கொண்டிருப்பார்கள். 

வாசிப்பும் வாழ்க்கையும்


அரசர்களின் காலத்தில் ஆநிரை கவர்தல் என்னும் சாகசம் அடிக்கடி நிகழ்ந்ததுண்டு. ஆநிரை கவர்தல் என்பது ஒரு போருக்கான அறைகூவல். ஒரு படை அடுத்த நாட்டின் எல்லைக்குள் புகுந்து, அங்கு வளர்க்கப்படும் பசுக்களை கூட்டம்கூட்டமாக கவர்ந்துகொண்டு வந்துவிடுவதும் அதை அவமானமாகக் கருதிய அந்த நாட்டு அரசன் தனது படைகளுடன் சென்று போரிட்டு, மீட்டுக்கொண்டு வருவதும் அக்காலத்தில் வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது. பசுக்களைமட்டுமல்ல, அவை மேயும் மேய்ச்சல் நிலங்களை அழிப்பதும் அவை நீரருந்தும் நீர்நிலைகளைச் சிதைப்பதும் கூட போருக்கான அறைகூவல்கள். மேய்ச்சல் சமூகத்துக்கு பசுக்கள் மாபெரும் செல்வம். அவற்றைத் தக்கவைக்க தொடர்ந்து போரிட்டபடியே இருந்தார்கள் மக்கள். 

காந்தி நினைவுகள்

 

மாபெரும் சமூக ஆளுமைகளைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை, அந்த ஆளுமை வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் படம்பிடித்து எழுதியிருக்கிறார்கள். எழுதாதவர்கள் சொற்களால் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தியைப்பற்றி எழுதவும் சொல்லவும் அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரிடமும் ஏராளமான செய்திகள் இருக்கக்கூடும். காந்தியைப்பற்றி அரசியலாளர்களும் சேவையாளர்களும் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உண்டு. அவற்றில் எண்ணற்ற சம்பவங்கள் காணக் கிடைக்கின்றன. ஆயினும், ஒரு சிறுவனின் பார்வையில் காந்தியைப்பற்றி எழுதப்பட்ட பதிவுகள் என்கிற வகையில் நாராயண் தேசாயின் புத்தகம் மிகமுக்கியமானது. பாரதியாரின் வரலாற்றைத் தொகுத்துக்கொள்வதில் தன் பால்யகாலத்து நினைவுகளை மீட்டிமீட்டி எழுதியிருக்கும் யதுகிரி அம்மாளின் பதிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு நாராயண் தேசாயின் பதிவுகளும் மிகமுக்கியமானவை.