Home

Monday, 17 July 2023

இளம்பாரதி நேர்காணல் - முதல் பகுதி சந்திப்பு : பாவண்ணன்

                          

(இளம்பாரதி என்கிற ருத்ர.துளசிதாஸ், 02.07.2023 அன்று தொண்ணூறு வயதைக் கடந்து தொண்ணூற்றியொன்றாம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் தன் அயராத உழைப்பின் விளைவாக, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் வழியாக எண்ணற்ற படைப்புகளை மொழிபெயர்த்து நம் தமிழ்ழொழிக்கு வளம்சேர்த்துக்கொண்டிருக்கிறார். கோவில்பட்டி சார்ந்த இளையரசனேந்தல் என்னும் சிற்றூரில் பிறந்து திருநெல்வேலியில் பள்ளிக்கல்வியும் மதுரையில் இளநிலை பட்டப்படிப்பும்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்து சிவகங்கை கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு புதுச்சேரியில் வசித்து வருகிறார். 


சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற தேசிய நிறுவனங்கள் சார்பாக பல நூல்களை மொழிபெயர்த்த அனுபவம் உள்ளவர். தொடக்கத்தில் கவிதை, சிறுகதை, நாவல் என படைப்பிலக்கிய முயற்சிகளிலும் அறிவியல் நூல்கள் எழுதுவதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தாலும் மொழிபெயர்ப்பே அவருடைய ஆளுமையை வெளிப்படுத்தும் ஊடகமாக மாறிய பிறகு, இன்றுவரை மொழிபெயர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு மொழியின் புதுக்கவிதையுலகின் முக்கியமான ஆளுமையான சி.நாராயண ரெட்டி என்பவரின் கவிதைகளைத் தாங்கி அன்னம் பதிப்பகத்தின் வெளியீடாக பிரசுரமான அனல்காற்று என்னும் கவிதைத்தொகுதி இவருடைய ஆரம்பக்கால மொழிபெயர்ப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தியச் சுதந்திரப்போராட்டம் ஆந்திரப்பிரதேசத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு கிராமத்துக் குடும்பவாழ்க்கையில் உருவாக்கிய சிதைவுகளையும் மனித உறவுகளின் விசித்திரத்தன்மையையும் முன்வைத்து ஒரு விவாதத்தை உருவாக்கிய கெளசல்யா (தெலுங்கு மூலம்: போலோப்ரகட சத்யநாராயாண மூர்த்தி) என்னும் படைப்பே முதல் மொழிபெயர்ப்பு நாவல். இன்று வரை வெளிவந்த இளம்பாரதியுடைய மொழிபெயர்ப்புநூல்களின் பட்டியலில் தெலுங்கிலிருந்து பதினெட்டு நூல்களும் மலையாளத்திலிருந்து ஒன்பது நூல்களும் கன்னடத்திலிருந்து ,மூன்று நூல்களும் இந்தியிலிருந்து நான்கு நூல்களும் அடங்கும். இன்னும் சில நூல்கள் வரவிருக்கின்றன.

மய்யழிக்கரையோரம் என்ற மலையாள நாவல் மொழிபெயர்ப்பு 1998ஆம் ஆண்டில் அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற காரணமாக இருந்தது.கறையான்கள் என்னும் தெலுங்குச் சிறுகதைத்தொகுதிக்கு 2005ஆம் ஆண்டுக்கான நல்லி-திசையெட்டும் மொழிபெயர்ப்புப் பரிசும் திருப்பூர்த் தமிழ்ச்சங்கப் பரிசும் கிடைத்தன. கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக புதுச்சேரியில் வசித்துவருகிறார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சு மொழிப் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான வெங்கட சுப்புராய நாயகர்  இளம்பாரதியின் இலக்கியப்பங்களிப்பைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாக ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்து 04.03.2023 அன்று புதுச்சேரியில் வெளியிட்டார். அதன் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது இளம்பாரதியை அவருடைய வீட்டில் சந்தித்து அவருடைய படைப்புலகம் சார்ந்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலின் முழுமையான பதிவு இது. இந்த நேர்காணலின் சுருக்கமான வடிவத்தை ஏப்ரல் மாதம் வெளிவந்த புத்தகம் பேசுது இதழ் வெளியிட்டது. )



தற்சமயம் நீங்கள் தமிழகமறிந்த ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும், தொடக்கத்தில் நீங்கள் சிறுகதை, கவிதை எழுதுவதில் இருந்துதான் தொடங்கியிருக்கிறீர்கள்.உங்கள் முதல் சிறுகதையை எப்படிப்பட்ட சூழலில் எழுதினீர்கள்?

 

1950ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று, பூஜை முடிந்து குடும்பத்தில் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கள் பெரியப்பா மகன் அப்பாசாமி என்பவர் என்னைவிட சில வயதுகளே மூத்தவர். நான். அவரும் நானும் படிப்பறையில் பேசிக்கொண்டிருந்தோம். எதிர்பாராதவிதமாக என் மனத்தில் கதைக்கான ஒரு கரு உதித்தது. உடனே அண்ணனை அப்படியே சற்று தள்ளி உட்கார வைத்துவிட்டு ஒரே மூச்சில் வேகமாக அக்கதையை எழுதிமுடித்தேன். அண்ணன் அந்தக் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு ”ரொம்ப நல்லா இருக்குதுடா” என்று பாராட்டினார். வேறொரு நாளில் அக்கதையை மீண்டும் செழுமைப்படுத்தி ’சந்திப்பு’ என்று தலைப்பு கொடுத்து ’தாஜ்மகால்’ என்கிற பத்திரிகைக்கு அனுப்பிவைத்தேன். 1951ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் அந்தச் சிறுகதை பிரசுரமானது.அதுதான் என் முதல் சிறுகதை.

 

உங்கள் அனுபவம் சார்ந்த கதையா அல்லது கற்பனையா?

 

கற்பனைதான்

 

உங்கள் தந்தையார் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற காந்தியவாதி என்பதை நீங்கள் ’சர்வோதயம் மலர்கிறது’ இதழில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த பிறகே தெரிந்துகொண்டேன். அவரைப்பற்றி உங்கள் மனத்தில் பதிந்திருக்கும் சித்திரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? .

எங்கள் அப்பா பெயர் ருத்ரப்பசாமி. காந்தியச் சிந்தனை உள்ளவர். பி.ஏ.பி.ட்டி. படித்தவர். ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ளவர். காந்தியடிகளுடைய அகிம்சைப்போராட்டத்தின் வழியாகத்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்பதில் அவர் உறுதியாக நம்பிக்கை வைத்திருந்தார். வாழ்நாள் முழுக்க அவர் கதராடைகளைத்தான் அணிந்தார். காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் சில மாதங்கள் தங்கி சேவை செய்த அனுபவமெல்லாம் அவருக்கு உண்டு. ஒருமுறை அப்பாவைக் கைது செய்து பெல்லாரி சிறையில் வைத்துவிட்டார்கள். மூன்று ஆண்டு காலம் அவர் சிறைவாசம் அனுபவித்தார். வடநாட்டைச் சேர்ந்த பல தலைவர்களோடு அவர் நெருங்கிப் பழகியிருக்கிறார். அன்றிருந்த சூழலில் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே இராட்டையில் நூல் நூற்கும் பயிற்சி இருந்தது. அப்பா எங்களோடு இருந்த காலத்தைவிட, போராட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதற்காகவும் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் வெளியூர்களுக்குச் செல்வது, சிறைக்குச் செல்வது என பிரிந்திருந்த காலம்தான் அதிகம். அதனால் நானும் அம்மாவும் பெரும்பாலும் கோவில்பட்டியில் இருந்த காலத்தைவிட திருநெல்வேலியில் வண்ணார்ப்பேட்டை என்கிற இடத்தில் தாத்தா வீட்டில்தான் காலத்தைக் கழித்தோம். எனக்கு இரண்டு தம்பிகள்.ஒருவர் பெயர் பாஸ்கரன். இன்னொருவர் ராஜு.  காலையில் எழுந்ததுமே நாங்கள் இராட்டையில் நூல் நூற்போம். அந்தச் சிட்டங்களை எங்கள் தாத்தா எடுத்துச் சென்று விற்றுவிட்டு பணம் வாங்கிவருவார். அந்த வருமானத்தைக் கொண்டுதான் அம்மா வீட்டுச் செலவைச் சமாளித்தார். யாரையும் அண்டி இருக்காமல் சுயமரியாதையோடு வாழ இராட்டைப்பயிற்சி எங்களுக்கு உதவியாக இருந்தது. எங்கள் இளம்பருவ காலத்தில் எங்கள் அப்பா எங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் கல்வியின் மீதும் முன்னேற்றத்தின் மீதும் மிகுந்த அக்கறையோடு இருந்தார்.

 

பள்ளியில் சேர்க்கும்போது அப்பா என்னை தமிழ்ப்பாடத்துக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்துப் படிக்கச் சொன்னார். அவர் வட இந்திய நகரங்களுக்குச் சென்று வந்தவர். அந்தச் செல்வாக்காலோ என்னமோ அவருக்கு சம்ஸ்கிருதத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. அப்போது இந்தி வகுப்புகள் கிடையாது. அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நானும் சமஸ்கிருதத்தைப் பாடமாக எடுத்துப் படித்தேன். வகுப்பில் என்னோடு சமஸ்கிருதம் படித்த எல்லாப் பிள்ளைகளும் பிராமணக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான் மட்டும் அக்கூட்டத்தில் தனித்துத் தெரிந்தேன்.  அதனாலேயே சமஸ்கிருத ஆசிரியருக்கு என் மேல் பாசம் அதிகமாக இருந்தது. கூடுதல் அக்கறையோடு எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் அக்கறையின் காரணமாக நானும் சமஸ்கிருதத்தை விரும்பிக் கற்றேன். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, இன்ட்டர்மீடியட்  என எல்லா நிலைகளிலும் சமஸ்கிருதத்தைத்தான் படித்தேன். அந்தப் பயிற்சி எனக்கு அம்மொழியில் ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. தமிழ் மொழியை அனுபவப்போக்கில் கற்றுக்கொண்டேன்.

 

எழுத்தாளர் புதுமைப்பித்தனுடைய வகுப்புத்தோழராக உங்கள் தந்தையார் இருந்தார் என்பதை ஒருமுறை உரையாடலின்போது நீங்கள் சொன்ன நினைவிருக்கிறது. கல்லூரிப்படிப்புக்குப் பிறகு அப்பா அவருடனான நட்பை எப்படிப் பேணிவந்தார்?

புதுமைப்பித்தனும் அப்பாவும் இந்து கல்லூரியில் இன்டர்மீடியட், பி.ஏ.  வரைக்கும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். புதுமைப்பித்தனின் கதைகளையெல்லாம் அப்பா படித்திருக்கிறார். பாராட்டியிருக்கிறார். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் புதுமைப்பித்தனின் நடைமுறைப்போக்கு அப்பாவுக்கு அவ்வளவாக உடன்பாடில்லாததாக இருந்தது.கதை எழுதுகிறவர்கள் எல்லோரும் இப்படித்தான் குடும்பப் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றுவிடுவார்களோ என்கிற எண்ணத்தோடு அமைதியாக இருந்துவிட்டார்.  நான் வளர்ந்து கதை எழுதுவதைப் பார்த்ததும் அவருக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது புதுமைப்பித்தன்தான்.  இவனும் அவர் வழியில் போய்விடுவானோ என்று உள்ளூர சங்கடத்தோடு இருந்தார். அவரால் என்னை முழுமையாக உற்சாகப்படுத்தவும் முடியவில்லை. தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. ஒரு மாதிரி தத்தளித்துக்கொண்டு இருந்தார். படிப்பில் நான் பெரிய திறமைசாலியாக இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். அவர் கல்வித்துறையில் ஒரு பெரிய அதிகாரி. அவருக்கு பிள்ளையாக இருந்தும்கூட என்னால் அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள இயலவில்லை. பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, சிற்சில சமயங்களில் நான் தேர்வுகளில் தோல்வியடைந்து பின்தங்கி மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சியடைபவனாக இருந்தேன்.  அதையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் அவர் தத்தளித்தார். கதை, கவிதை என்று தொடங்கி வாழ்க்கையை வீணாக்கிக்கொள்வானோ என்றெல்லாம் யோசித்து வருத்தம் கொண்டார். ஆனால் அப்பாவுடைய நண்பர்கள் சிலர் என் படைப்புகளைப் படித்துவிட்டு அவரைச் சந்திக்கிற சமயத்தில் பாராட்டும் விதத்தில் சொல்லத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகுதான் அவருக்கு சற்றே தெம்பு வந்தது. புதுமைப்பித்தன் திருநெல்வேலியை விட்டுச் சென்ற பிறகு அவருடைய தொடர்பு நின்றுவிட்டது.

 

சற்றே வடநாட்டுச் சாயல் கொண்ட துளசிதாஸ் என்னும் பெயரை உங்கள் தந்தையார் உங்களுக்குச் சூட்ட ஏதேனும் காரணம் உள்ளதா?

நான் 02.07.1933 அன்று பிறந்தேன்.அப்போது அப்பா சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரோடு பெரியசாமித் தூரனும் சிறையில் இருந்தார். ஒருவரோடு ஒருவர் உரையாடி இருவரும் நண்பர்களாகிவிட்டனர். தம் குடும்ப விவரங்களை ஒருரோடொருவர் பகிர்ந்துகொள்கிற அளவுக்கு நெருக்கம் இருந்தது. அப்போது வனமலர் சங்கம் என்கிற பெயரில் ஒரு சங்கத்தை  பெ.தூரனும் அவருடைய வேறு சில நண்பர்களும் சேர்ந்து நடத்திவந்தனர்.  சுதேசி இயக்கம், விடுதலைப்போராட்டம், தமிழிலக்கியம் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக தூரனும் அவருடைய நண்பர்களும் அச்சங்கத்தை நடத்தி வந்தார்கள். அவர்கள் பித்தன் என்கிற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்திவந்தனர். அந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுடைய குடும்பங்களில் குழந்தை பிறந்தால், அந்தச் சங்கத்தின் சார்பாக பெயர்சூட்டி மகிழ்வார்கள். அப்படி ஒரு பழக்கம்.  இப்படி வனமலர் சங்கத்தைப்பற்றி பெருமையாக அப்பாவிடம் பேசிப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் தூரன். தூரன் அதைச் சொன்ன சமயத்தில் அப்பா அவரிடம் “வீட்டுல எனக்கும் கூட பையன் பொறந்திருக்கான். இன்னும் பெயர் கூட வைக்கலை. நான் இப்படி சிறைக்கு வந்துட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து  “குழந்தைக்கு பொருத்தமான ஒரு நல்ல பெயரை நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள். நான் அதையே அவனுக்குச் சூட்டிவிடுகிறேன்’ என்றும் சொல்லியிருக்கிறார். “அப்படியா” என்று ஒரு கணம் யோசித்துவிட்டு “துளசின்னு பெயர் வைங்களேன். ரொம்ப நல்ல பேர். மங்களகரமான பெயர்” என்று சொல்லியிருக்கிறார் தூரன். “நல்ல பேர்தான். ஆனா பெண்குழந்தைக்கு வைக்கிற பெயர் மாதிரி இருக்கிறதே, எனக்கு பிறந்திருப்பது பையன் அல்லவா?” என்று கேட்டிருக்கிறார் அப்பா. “அதனால் என்ன கவலை? தாஸ்னு ஒரு சொல்லை அத்தோடு சேர்த்துட்டா பையன் பெயராயிடும். துளசிதாஸ். எப்படி இருக்கிறது பெயர்?” என்று சொல்லியிருக்கிறார் தூரன். நாலைந்து முறை சொல்லிப் பார்த்துவிட்டு “துளசிதாஸ் நல்ல பெயர்தான். அதையே வச்சிடறேன்” என்று அப்பா தெரிவித்திருக்கிறார். அப்படித்தான் துளசிதாஸ் என்னும் பெயரை எனக்கு சூட்டினார் எங்கள் அப்பா.

 

பள்ளிப்பருவத்தில் கோடைக்கால விடுமுறைக் காலத்தில் எல்லோரும் ஊர்ப்பயணங்கள் செல்லும் பருவத்தில் காந்தி ஆசிரமங்களுக்கும் கல்விமையங்களுக்கும் சென்று ஆடித் திரிந்து பொழுதுகளைக் கழித்ததைப்பற்றி ஒருநாள் என்னிடம் குறிப்பிட்ட நினைவிருக்கிறது. அதைப்பற்றி விரிவாகச் சொல்கிறீர்களா?

 

திருமங்கலத்துக்கு அருகில் கல்லுப்பட்டி என்னும் இடத்தில் அப்போது ஒரு ஆசிரமம் இருந்தது.இன்னும் அது இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. சிதம்பரம் அருகில் கீழமூங்கிலடி என்னும் சிற்றூரில் விநாயகம் என்னும் காந்தியவாதி இன்னொரு ஆசிரமத்தைத் தொடங்கி நடத்திவந்தார். அந்த ஆசிரமங்களோடு அப்பாவுக்கு நல்ல தொடர்பு இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்தில் நீண்ட விடுமுறை அறிவித்துவிட்டால், என்னையும் அண்ணனையும் அங்கே அழைத்துச் சென்று விட்டுவிடுவார். அவரைப்போலவே பலரும் தத்தம் பிள்ளைகளை அங்கே ஏதோ சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதுபோல அழைத்து வந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். நாங்கள் அனைவரும் அங்கே சேர்ந்து விளையாடுவோம். அங்கே தூய்மைப்பணி செய்யும் தொண்டர்களோடு இணைந்து நாங்களும் தூய்மைப்பணி செய்வோம். கிணற்றிலிருந்து நீர் எடுத்து வருவோம்.தோட்டவேலை செய்வோம். இராட்டையில் நூல் நூற்போம். பிரார்த்தனை வகுப்புகளில் கலந்துகொண்டு பாட்டு பாடுவோம். ஆசிரமத்தில் நல்ல நூலகம் இருக்கும்.அங்கே சென்று செய்தித்தாட்களும் புத்தகங்களும் எடுத்துப் படிப்போம்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.சில சமயங்களில் எங்களுக்குள் கதை சொல்லிக்கொள்வோம்.பல பிள்ளைகள் ரயிலையே பார்த்ததில்லை என்று சொல்வார்கள். கோவில்பட்டியில் எங்கள் தோட்டத்துக்கு முன்னால் தினமும் ரயில் செல்லும். அதைப் பார்த்த அனுபவத்தில் நான் அவர்களுக்கு ரயிலைப்பற்றி இன்னும் கற்பனையத் தூண்டும் வகையில் பல கதை சொல்வேன். நாங்களே கூடிப் பேசி ஒரு கதையைத் தீர்மானித்து நாடகம்கூடப் போடுவோம்.எங்களுக்குள் உள்ள படைப்பூக்கத்தைக் கூர்மைப்படுத்திக்கொள்ள அந்த ஆசிரமவாசம் மிகவும் உதவியாக இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த  பல தலைவர்களை நான் அந்த ஆசிரமங்களில் பார்த்திருக்கிறேன். கல்லுப்பட்டி ஆசிரமத்திலிருந்த ஜே.சி.குமரப்பாவை எனக்குத் தெரியும். அவர் எல்லாக் குழந்தைகளோடும் சிரித்துப் பேசுவார். சில சமயங்களில் கதைகூடச் சொல்வார். எங்களைப் பொறுத்தவரையில் அந்த ஆசிரமப்பயணங்கள் எங்கள் இளமைக்காலத்தில் எங்களுக்குக் கிடைத்த இனிய அனுபவங்கள்.

 

பாடப்புத்தகங்களுக்கு அப்பால் இலக்கிய வாசிப்பின் மீது ஆர்வம் எப்படிப் பிறந்தது? எப்படி வளர்ந்தது? இளமையில் எந்த வகையான நூல்களை விரும்பிப் படித்தீர்கள்?

பள்ளிக்கூடக் காலத்திலேயே புத்தகம் வாசிக்கிற பழக்கம் வந்துவிட்டது.ஆசிரமங்களுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்போம்.அந்தப் பழக்கத்தில் ஊருக்குத் திரும்பி வந்த பிறகு, ஊரில் இருக்கும் கிளைநூலகத்துக்குச் சென்று புத்தகம் எடுத்துப் படிக்கிற பழக்கம் தானாக வந்துவிட்டது. அதுபோலவே தினசரிப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை எல்லாவற்றையும் தேடிப் படிப்பேன். கண்ணன், அம்புலிமாமா எல்லாம் எங்கள் நூலகத்தில் கிடைக்கும். அதை ஒரு பக்கம்கூட விடாமல் ஆர்வத்தோடு படித்துவிடுவேன். திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் பள்ளியில் படிக்கும்போது நானும் நண்பர்களும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி நடத்தினோம். அதுதான் என் இலக்கிய முயர்சியின் தொடக்கம். நானும் நண்பர்களும் ஆளாளுக்கு ஒரு கதை எழுதினோம். கல்லூரிப்படிப்புக்காக மதுரைக்கு வந்த பிறகு அந்த வாசிப்பு வேகம் மேலும் சூடு பிடித்துவிட்டது. சிறுவர் பத்திரிகை, பெரியவர் பத்திரிகை என்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் கைக்குக் கிடைக்கிற எல்லாப் பத்திரிகைகளையும் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். பிரசண்ட விகடன், பூஞ்சோலை, டிங்டாங், காவேரி, உமா, அமுதசுரபி, அமுதம், விநோதன்,இமயம், சிவாஜி, சந்திரோதயம், கலைவாணி என எண்ணற்ற பத்திரிகைகளைப் படித்தேன். சாக்லெட், ரவி, கலைச்சுடர், சந்திரிகா என்கிற பெயரிலெல்லாம் பத்திரிகைகள் அந்தக் காலத்தில் வெளிவந்தன. இலங்கையிலிருந்து வந்த வீரகேசரியைக்கூட தொடர்ந்து படித்து வந்தேன். புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வாசிக்கவைத்தது. வாசிப்பினால் உண்டான மனக்கிளர்ச்சி எழுதத் தூண்டியது. எப்படியோ, இரண்டும் என்னை ஊக்கமுடன் வைத்திருந்தன. நான் அவ்வப்போது எழுதும் கதைகளையும் கவிதைகளையும் அந்தப் பத்திரிகைகளுக்கு  தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தேன். சில பிரசுரமாகும்.சில திரும்பி வரும்.ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்தேன்.

 

கவிதையில் எப்படி ஆர்வம் பிறந்தது?

 

தொடக்கத்தில் சிறுவர்களுக்கான பாடல்கள் சிலவற்றை  தாளக்கட்டோடு எழுதிப் பார்த்தேன். பாடுவதற்கு இசைவாக இருந்தால் அது நல்ல பாட்டு என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.அப்படி ஒரு மொழியோட்டத்துடன் அவ்வப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது நாங்கள்  திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தோம். அதற்கு எதிரிலேயே எங்கள் மாமா வீடு இருந்தது. தாத்தா வீடு சிறியது.பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இன்டர்மீடியட் வகுப்புக்கு வந்தபோது அந்தச் சின்ன வீட்டில் இடம் போதவில்லை. அதனால் தாத்தா வீட்டிற்கு எதிரில் இருந்த  மாமா வீட்டுக்கு படிப்பதற்காகச் செல்லத் தொடங்கினேன்.

 

மாமா வீட்டு மாடியில் கூரை வேய்ந்த ஒரு அறை இருந்தது. அங்கே மேசை நாற்காலி போட்டிருக்கும்.அது படிப்பதற்கு வசதியாக இருக்கும். அதனால் அங்கே தங்கிப் படிப்பேன். அந்தக் கூரைவீட்டுக்குள் நாலைந்து குருவிக்கூடுகள் இருந்தன.மாலையில் கூட்டுக்குத் திரும்பும் குருவிகள் கீச்கீச்சென்று ஓயாமல் ஓசையெழுப்பியபடி இருந்தன.அவற்றின் எச்சம் பல சமயங்களில் கூட்டிலிருந்து சிதறி தரையை நனைத்துவிடும். ஒருநாள் திடீரென என் அத்தை எதையோ என்னிடம் கொடுப்பதற்காக மாடியறைக்கு வந்தார். அப்போது தரை இருந்த அலங்கோலத்தைப் பார்த்து அவர் முகம் சுளித்தபடி “என்னடா, இந்த நாற்றத்துக்கு நடுவில எப்படி இருக்கே நீ?” என்று கேட்டுவிட்டுச் சென்றார். அடுத்த நாளே நான் கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில் யாரோ ஆளை வரவழைத்து கூடுகளையெல்லாம் கலைத்துவிட்டு, தரையையெல்லாம் சுத்தம் செய்து வைத்துவிட்டார். மாலையில் நான் அறைக்கு வந்தபோது குருவிச்சத்தம் எதுவும் இல்லாமல் அறையே நிசப்தமாக இருந்தது. அப்போதுதான் கூரையை அண்ணாந்து பார்த்து கூடுகள் கலைக்கப்பட்டுவிட்டதைக் கவனித்தேன்.

 

எனக்கு அந்த அமைதி எனக்கு ஒருவித சங்கடத்தைக் கொடுத்தது. குருவிகளின் வாழ்வில் துன்பம் ஏற்பட நான் ஏதோ ஒரு விதத்தில் காரணமாகிவிட்டேனே என நினைத்து குற்ற உணர்வில் தவித்தேன். அந்த அமைதி என் நிம்மதியைப் பறித்துவிட்டது. கூட்டைக் காணாமல் போன குருவி என்ன துன்பத்தை அனுபவிக்கிறதோ என நினைத்து நான் துன்பத்தில் தவித்தேன். அப்போது தன்னிச்சையாக சில வரிகள் என் மனத்தில் உதித்தன. அவற்றை துணையாகக் கொண்டு அப்போது நான் ஒரு கவிதை எழுதினேன். ‘கூடு கட்டும் குருவிகளே, உமக்கு வீடுவேறு இல்லையோ பாரினிலே’ என்று அந்தக் கவிதை தொடங்கும். ஒரு பக்க அளவில் நீண்ட கவிதை அது. இராமாயணம் எழுத வால்மீகிக்கு கிரெளஞ்சபட்சி ஊற்றாக அமைந்தது என்று சொல்வதுண்டு. அது உண்மையாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்வதுபோல நான் ஒரு கவிதை எழுத அந்தக் குருவிகள் ஒரு காரணமாக அமைந்துவிட்டன.அந்தக் கவிதையை மேசை மீதிருந்த புத்தகங்களுக்கு நடுவில் வைத்திருந்தேன்.

 

ஒருநாள் மாமா முறை கொண்ட சங்குப்பட்டி சீனிவாசன் என்கிற இன்னொரு உறவினர் அந்த வீட்டுக்கு வந்தார். என் அறைக்கு வந்து அங்கே வைத்திருந்த கவிதையையும் தொலைந்த பேனா என்னும் கட்டுரைக்கதையையும் எடுத்துப் படித்துவிட்டார். அக்கவிதையும் கட்டுரையையும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டன. உடனே வீட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்தச் செய்தியைச் சொல்லி, அந்தக் கவிதையையும் படித்துக் காட்டிவிட்டார். எப்போதோ ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்தபோது அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிடமும் பாராட்டாகச் சொல்லிவிட்டார். அப்பா என்னைக் கண்டிக்கவும் இல்லை. அழைத்து பாராட்டவும் இல்லை. சுதந்திரமாக அப்படியே விட்டுவிட்டார். அந்தச் சுதந்திரம் என்னை இலக்கியத்தில் மேலும் ஆழமாக ஈடுபட வைத்தது. யாருக்கும் கிடைக்காத சாதகமான சூழல் எனக்குக் கிடைத்தது. குடும்ப ஒத்துழைப்பு, நண்பர்கள் ஊக்கம், அங்கீகாரம், எல்லாமே எனக்குக் கிடைத்தன.

 

வேதியியல் பட்டதாரியான நீங்கள் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக தமிழாசிரியரைச் சந்தித்து இலக்கணம் கற்றுக்கொண்டதாக ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. அதைப்பற்றி விரிவாகப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

அப்போது மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் நான் வேதியியல் துறையில் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்த காலம். ஒருநாள் எங்கள் உறவினர் ஒருவர் என் கவிதைகளைப் படித்துவிட்டு உன் கவிதைகள் படிப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றன, ஆனால் யாப்பிலக்கணம் சரியாகப் படிந்துவரவில்லையே என்று குறைபட்டுக்கொண்டார். அது என்ன யாப்பிலக்கணம் என்று  புரியாமல் திகைத்தேன் நான். பள்ளிக்கூடம், உயர்நிலைப்பள்ளி, இன்டர்மீடியட் என எல்லா இடங்களிலும் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவன் நான். என் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக பத்திரிகைகள் வழியாகவும் புத்தகங்கள் வழியாகவும் தமிழைப் படித்துத் தெரிந்துகொண்டேன். அதனால் இலக்கணம் பற்றியெல்லாம் எதுவும் விவரமாக எனக்குத் தெரியாது. எனவே அவர் குறிப்பிட்ட குறையைப்பற்றி ஒருநாள் அப்பாவிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னேன். அவர் கல்வி அதிகாரி என்பதால் பல ஆசிரியர்களிடம் இலக்கணப்புலமை மிக்க ஆசிரியர் யார் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டார். எல்லோருமே அ.கி.பரந்தாமனார் என்னும் பேராசிரியரைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் ஒரு விடுமுறை நாளில் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அ.கி.பரந்தாமனார்  அப்போது தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் இலக்கணத்தில் பெரிய அறிஞர். ’நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’, ’கவிஞராக’, ’தமிழ் இலக்கியம் கற்க’ போன்ற நூல்களையெல்லாம் எழுதியவர். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு என் விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தார் அப்பா. அவர் என்னிடம் “நீ எங்கே படிக்கிறாய்? என்ன படிக்கிறாய்?” என்றெல்லாம் கேட்டார். நான் அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் படித்துக்கொண்டிருக்கும் செய்தியை அவரிடம் தெரிவித்தேன். வேதியியல் படிக்கிற பையனுக்கு எதற்கு இலக்கணம் என்று அவர் கேட்டார். நான் கவிதைகள் எழுதிவைத்திருந்த நோட்டுப்புத்தகத்தை வாங்கி அப்பா அவரிடம் கொடுத்துவிட்டு ”இதுதான் காரணம்” என்று சொன்னார். அவர் அதில் இருந்த கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு புன்னகையோடு ”அப்படின்னா அவசியம் கத்துக்க வேண்டியதுதான்” என்று சொன்னார். பிறகு நான் வரவேண்டிய நேரம் பற்றியெல்லாம் என்னிடம் விளக்கமாகச் சொன்னார்.தேமா புளிமாவிலிருந்து அவரிடம் நான் முறையாக அவரிடம் யாப்பிலக்கணம் கற்றுக்கொண்டேன். 

 

அந்தப் பயிற்சி தொடங்கிய காலகட்டத்தில்  கண்ணில் படும் திரைப்படச்சுவரொட்டிகள் முதல் செய்தித்தாள் தலைப்புச்செய்திகள் வரை எல்லா வாக்கியங்களையும் சகட்டுமேனிக்கு தேமா புளிமா பிரித்துப் பார்த்து வகைப்படுத்துவது மனத்துக்குப் பிடித்தமான ஓர் இனிய விளையாட்டாக இருந்தது. நாளடைவில் நான் எழுதிய கவிதைகள் எல்லாமே இலக்கணப்படி சரியாக அமைந்துவிட்டன. இதற்கு முன்பு என் கவிதைகளை திருப்பி அனுப்பிய பத்திரிகைகள் எல்லாம் என் கவிதைகளைப் பிரசுரிக்கத் தொடங்கின. காவேரி, அமுதசுரபி, தினமணி, வீரகேசரி என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் வெளிவந்தன. அந்த மாற்றம் எனக்கு உற்சாகத்தை அளித்தது. அ.கி.பரந்தாமனார் அவர்களிடம் அப்பத்திரிகைகளைக் காட்டுவேன்.அவர் அவற்றைப் படித்துவிட்டுப் பாராட்டுவார். கவிதைக்கு அடித்தளம் உணர்வும் ஊக்கமும்தான். அவை உன் கவிதைகளில் உள்ளன என்று பாராட்டிச் சொல்வார். ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபோது கல்லூரியில் தன்னிடம் படிக்கும்  சில மாணவர்கள் கூட அருமையான விதத்தில் கவிதைகள் எழுதுகிறார்கள் என்றும் அவர்களுடைய கவிதைகள்கூட பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன என்றும் சொன்னார்.  அப்போது அப்துல் ரகுமான், ராஜேந்திரன், மேத்தா, நா.காமராசன் என்று சிலருடைய பெயர்களைச் சொன்னார். பிற்காலத்தில் மீரா எனக்கு அறிமுகமாகி நெருக்கமான நண்பராக மாறிய பிறகு “அ.கி.ப. ஐயாவிடம் நாங்கள் வகுப்புக்குள் கற்றுக்கொண்டோம், நீங்கள் வகுப்புக்கு வெளியே கற்றுக்கொண்டீர்கள்” என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அ.கி.ப. அளித்த பயிற்சியைத் தொடர்ந்து எண்சீர் விருத்தம் பழகுவதற்காக பாரதிதாசன் கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.அதேபோல அறுசீர் விருத்தம் பழகுவதற்கு அழகின் சிரிப்பு படித்தேன்.ஒவ்வொன்றையும் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கிட்டுச் சொல்லமுடியாது. அத்தனை முறை படித்தேன்.

 

உங்கள் கவிதைத்தொகுதியைப் படித்தபோது, மாணவப்பருவத்தில் நீங்கள் எழுதியிருந்த கவிதையைப் படித்துவிட்டு மதுரைக்கு வந்த பாரதிதாசன் உங்களைப் பாராட்டி எழுதிக் கொடுத்த சான்றிதழைப் படித்திருக்கிறேன். பாரதிதாசனுடைய தொடர்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? உங்கள் கவிதைகளில் அவருடைய எழுத்தின் தாக்கம் இருக்கிறதா?

மதுரையில் பாரதி புத்தக நிலையம் என்கிற பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. சுவாமிநாதன் என்பவர் அதை நடத்திவந்தார். கனகசபாபதியின் சகலப்பாடி அவர். மீனாட்சி புத்தக நிலையம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அந்தக் கடை இருந்தது. அவர் கடையில்தான் அபபோது எழுத்தாளர்கள் கூடிப் பேசுவது வழக்கமாக இருந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம் பாரதிதாசன் அந்தக் கடைக்கு  வந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவர் ஒருமுறை சுவாமிநாதனிடம் இந்த ஊரில் இலக்கியம் பற்றி பேசுவதென்றால் யாரிடம் பேசுவது என்று கேட்டிருக்கிறார். அவர் உடனே ”ஓ, இங்கே இளம்பாரதின்னு ஒரு இளைஞர் இருக்கிறார். ரொம்ப துடிப்பானவர். நல்ல கவிதைகள் எழுதக் கூடியவர். இங்கே அடிக்கடி வந்து போகக்கூடியவர்” என்று சொன்னாராம். அத்தோடு வீட்டுக்கு செய்தி அனுப்பி என்னை உடனே வரச் சொல்லிவிட்டார். நான் அப்போதே கிளம்பி கடைக்குப் போனேன். அங்கே பாரதிதாசன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஒருகணம் நான் திகைத்துவிட்டேன். மகிழ்ச்சியில் மனம் நிறைந்துவிட்டது.

 

கடைக்குள் போய் நின்றதும் சுவாமிநாதன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நான் வணக்கம் சொன்னேன். ”என்ன மாதிரியான கவிதைகள் எழுதறீங்க?” என்று பாரதிதாசன் கேட்டார். நான் என்னிடம் இருந்த நோட்டுப்புத்தகத்தைத் திறந்து காட்டினேன். அவர் ஒன்றிரண்டு கவிதைகளைப் படித்துப் பார்த்தார். மிகவும் திருப்தியோடு புன்னகைத்தபடி ”உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது. விட்டுடாதீங்க. தொடர்ந்து எழுதுங்க” என்று சொன்னார். பிறகு ”என்னென்ன படிச்சிருக்கீங்க?” என்று கேட்டார். அதற்கும் பதில் சொன்னேன். அப்படியே கடைக்குள்ளேயே அமர்ந்து வெகுநேரம் பேசினோம். அன்று மாலையிலேயே மேலமாசி வீதிப்பக்கமாக வெகுதொலைவு நடந்து சென்று திரும்பினோம்.

 

புத்தகக்கடைக்குப் பக்கத்திலேயே காலேஜ் ஹவுஸ் இருந்தது. காப்பிக்கும் சிற்றுண்டிக்கும் அந்த இடம் பேர்போன இடம். அந்த கடையின் காப்பி பாரதிதாசனுக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் வழிநடையைத் தொடங்கும்போது அங்கே காப்பி சாப்பிட்டுவிட்டு நடக்கத் தொடங்குவோம். பேசிக்கொண்டே ரொம்ப தொலைவு நடப்பதுண்டு. நான் அவரைவிட வயதில் மிகவும் இளையவன். ஆனால் வயது வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் உள்ளார்ந்த அன்போடு பேசினார் அவர். அதற்குப் பிறகு பாரதிதாசன் எப்போது மதுரைக்கு வந்தாலும் சுவாமிநாதன் எனக்கு தகவல் சொல்லி அனுப்பிவிடுவார். பெரும்பாலும் திராவிடர் கழக கூட்டங்களில் பேசுவதற்காக அவர் வருவார். அப்போது சுவாமிநாதன் வீட்டில்தான் பாரதிதாசன் தங்குவார். அந்த வீடு எங்கள் வீடு இருந்த தெருவுக்கு அடுத்த தெருவில்தான் இருந்தது. உடனே நான் அவருடைய வீட்டுக்குச் சென்று பாரதிதாசனைச் சந்திப்பேன். பிறகு அவர் மதுரையிலிருந்து புதுச்சேரிக்குத் திரும்பச் செல்லும் வரைக்கும் நான் அவரோடு இருப்பேன். பொதுவான கவிதைப்போக்குகள்  பற்றி விமர்சனரீதியாகப் பேசிக்கொண்டிருப்போம். கவிதையாக்கத்தில் பொதுவாக நிகழக்கூடிய சில நடைமுறைத்தவறுகளை எடுத்துச் சொல்லி, அவற்றைத் திருத்திக்கொள்ளும் முறைகளையும் எடுத்துரைப்பார்.

 

ஒருநாள் எங்கள் வழிநடைப் பேச்சின்போது ”என்னுடைய கவிதைகளுக்கு நீங்கள் ஆசியுரை வழங்கவேண்டும். அது எனக்கு உற்சாகமாக இருக்கும்” என்று பாரதிதாசனிடம் தெரிவித்தேன். “ஓ, அதற்கென்ன. புதிதாக ஒரு கவிதை எழுதிக்கொண்டு வாருங்கள். அதைச் சார்ந்து எழுதிக் கொடுக்கிறேன்” என்றார் பாரதிதாசன். நான் அன்றிரவே உட்கார்ந்து ஒரு முழு நீளத்தாளில் ‘நிலவுமுல்லை’ என்ற கவிதையை எழுதி மறுநாள் காலையிலேயே கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். அவரும் அதைப் படித்துவிட்டு, இரண்டு இடங்களில் திருத்தங்கள் செய்துவிட்டு மனநிறைவுடன் பாரட்டினார். பிறகு அந்தக் கவிதைத்தாளிலேயே ”தோழர் இளம்பாரதி எழுதியுள்ள இப்பாட்டுகள் மிக நல்லன. பிழை இல்லாதன.கவிதையுள்ளம் உடையவர்.அண்மை எதிர்காலம் வருக கவிஞரே என இப்போதே அழைக்கிறது. தேதி 15.12.1956” என்று எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார் பாரதிதாசன்.

 

முதுநிலை பட்டப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தீர்கள் அல்லவா?உங்கள் இலக்கிய ஈடுபாட்டுக்கு அந்தப் பல்கலைக்கழகச் சூழல் உகந்ததாக இருந்ததா?

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல்  துறையில் முதுநிலை படிப்பைப் படித்துவந்த காலத்தில் அங்கே ஏராளமான இலக்கிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்றபடி இருக்கும். சில சமயங்களில் மாணவர்களின் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.சில சமயங்களில் ஆசிரியர்கள் ஏற்பாட்டிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அப்போது தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார். பல இலக்கிய ஆளுமைகளும் அரசியல் ஆளுமைகளும் வந்து உரையாற்றுவார்கள். ஆர்வமுள்ளவர்கள்   தம் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். அதற்கு அங்கே வசதி இருந்தது. நான் அங்கிருந்த நூலகத்தில் ஏராளமான நூல்களை எடுத்துப் படித்தேன்.  அது நல்ல தெளிவைக் கொடுத்தது. சேர்ந்த ஒருசில மாதங்களிலேயே நான் அங்கே கவிஞன் என்று அறிமுகமாகிவிட்டேன். ஒருமுறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கண்ணதாசன் தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து கவிதை வாசிக்கிறவகையில் அக்கவியரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். மு.அண்ணாமலை, உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஆகியோர் அங்கே ஆசிரியர்கள் அணியில் கவிதை படித்தார்கள். அக்கவியரங்கத்தில் நான் மாணவர் அணி சார்பாக கவிதை படித்தேன். கண்ணதாசன் என் கவிதையை மிகவும் பாராட்டி வாழ்த்துகள் சொன்னார்.

 

 

தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் என பிற மொழிகளை உங்கள் சொந்த முயற்சியால் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்.அந்தந்த மொழிகளில் வெளிவந்திருக்கும் இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு கடுமையாகப் பயிற்சியும் பெற்றிருக்கிறீர்கள்.மொழிகளின் மீதான் ஆர்வம் பிறந்த பின்னணியைத் தெரிவிப்பீர்களா?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நான் வேதியியல் துறையில் பி.எஸ்சி படித்து முடித்திருந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாடிப்பட்டியில் சமூகக்கல்வி அமைப்பாளராக அரசுப்பணியில் சேர்ந்தேன். அரசாங்க வரைமுறைப்படி அந்தப் பணியில் இணைபவர்கள் ஏழு மாத காலம் முறையான பயிற்சி அனுபவம் பெறவேண்டும். அந்தப் பயிற்சிப்பட்டறை ஐதராபாத்துக்கு அருகில் ஹிமயத் சாகர் என்னும் இடத்தில் இருந்தது.  அது ஒரு தேசியப்பயிற்சி நிலையம் என்பதால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சமூக அமைப்பாளர்களும் பயிற்சிக்காக வருவது வழக்கம். நான் பயிற்சிக்காகச் சென்றிருந்த நேரத்திலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகள் சார்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் வந்திருந்தனர். மொழிவேற்றுமை பாராது அவரவர் ஆற்றலுக்கு ஏற்றவாறு தகவல் பரிமாற்றம் செய்துகொண்டு எங்களுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். எங்கள் வீட்டுமொழியாக தெலுங்கு இருந்த காரணத்தால் மற்றவர்களோடு தெலுங்கில் உரையாடுவதும் கல்லூரிப்படிப்பில் பெற்ற பயிற்சியின் விளைவாக ஆங்கிலத்தில் உரையாடுவதும் எனக்கு எளிதாக இருந்தது.   அங்கிருந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, தெலுங்கு மொழியில் படிக்கவும் எழுதவும் கற்றுகொள்ளவேண்டும் என்கிற ஆசை எழுந்தது. அதனால் அங்கிருந்த தெலுங்கு நண்பர்க்ளோடு நெருங்கிப் பழகத்ட் தொடங்கினேன். அவர்கள் தெலுங்கு எழுத்துகளை நோட்டில் எழுதி எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். எங்கள் பயிற்சி நிலையத்திலிருந்து முக்கால்மணி நேரப் பயணத் தொலைவில் ஐதராபாத் நகரம் இருந்தது. ஒரு விடுமுறை நாளில் ஐதராபாத்துக்குச் சென்று தெலுங்கு அரிச்சுவடிப் புத்தகத்தை வாங்கி வந்தேன். கிடைத்த ஓய்வுபொழுதுகளில் எல்லாம் நண்பர்கள் உதவியுடன் தெலுங்கு அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டேன். பிறகு படிப்படியாக சொற்களையும் வாக்கியங்களையும் படிக்கக் கற்றுக்கொண்டேன். அதைத் தொடர்ந்து ’சந்தமாமா’ (அம்புலிமாமாவின் தெலுங்கு வடிவம்) என்ற குழந்தைகளுக்கான தெலுங்கு இதழை வாங்கிப் படித்தேன். அதைத் தொடர்ந்து ‘யுவ’ என்ற பெரியோர்களுக்கான பத்திரிகையை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். ஐந்தாறு மாத கால தொடர்ச்சியான வாசிப்பு எனக்கு மிகவும் தன்னம்பிக்கையை ஊட்டியது.  என்னை தெலுங்கு மொழி வாசகனாக மாற்றியதில் யுவ பத்திரிகைக்குப் பெரும்பங்குண்டு. பயிற்சியை முடித்துக்கொண்டு ஐதராபாத்தை விட்டுப் புறப்படுகிற சமயத்தில் பிறருடைய உதவி இல்லாமல் நானே தனிமையில் தெலுங்கு மொழியில் எழுதுவதற்கும் படிப்பதற்கும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

 

பயிற்சி முடிந்து மதுரைக்குத் திரும்பிய பிறகும்கூட சந்த்மாமாவையும் யுவ இதழையும் படிப்பதை நான் நிறுத்தவில்லை. மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பக்கத்தில் இருந்த புத்தகக்கடையில் அவ்விதழ்கள் கிடத்தன. அது மட்டுமன்றி காலேஜ் ஹவுஸ் ஓட்டல் வாசலில் இருந்த புத்தக்க்கடையிலும் அவ்விதழ்கள் கிடைத்துவந்தன. சிவகங்கையில் கல்லூரியில் பணியாற்றி வந்த காலத்தில் இவ்விதழ்களை வாங்குவதற்காகவே நான் மதுரைக்குச் சென்று வருவேன். இவ்விதமான தொடர்ச்சியான வாசிப்பு எனக்கு நல்ல மொழிப்பயிற்சியாக அமைந்துவிட்டது.

 

1992ஆம் ஆண்டில் நான் கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். மொழிபெயர்ப்பது மட்டுமே என் முழுநேரப் பணியாக இருந்தது. ஏற்கனவே தெரிந்த மொழிகளோடு கூடுதலாக ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதன் வழியாக என் ஓய்வுப்பொழுதை இன்னும் பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அரிச்சுவடியின் உதவியோடும் புத்தகங்களின் உதவியோடும் கன்னட மொழியை நானாகவே கற்றுக்கொண்டேன். நான் மொழிகளைக் கற்றுக்கொண்ட பயணமும் சரி, மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபட்ட பயணமும் சரி, இரண்டுமே நீண்ட பயணங்கள்.