Home

Monday, 17 July 2023

எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன் அஞ்சலி

  

15.07.2023 அன்று காலையில் நண்பர் வளவ.துரையன் வழியாக எழுத்தாளர் ஜீவகாருண்யன் அவர்களின் மறைவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். ஒருகணம் அவர் முகம் என் நினைவில் மின்னி மறைந்தது.  குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியிலும் திசையெட்டும் சார்பில் சென்னையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியிலும் நெய்வேலி நகரத்தில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியிலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஏராளமான தலைமுடியுடன் கூடிய அவருடைய முக அமைப்பை ஒருவராலும் மறந்துவிட முடியாது. 




கடந்த ஆண்டில் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து ’நடுநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்’ எனும் தலைப்பில் கதைகளைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவரும் எண்ணத்தைத் தெரிவித்தார். அத்தொகைநூலில் என்னுடைய சிறுகதையை இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வேண்டுமென்றார். மேலும் அத்தொகுதிக்கு ஒரு முன்னுரையும் எழுதியளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் அவர் கோரிக்கைக்கு உடனடியாக இசைவு தெரிவித்துவிட்டு, தாமதிக்காமல் இரண்டுமூன்று நாட்களிலேயே எழுதி அனுப்பிவிட்டேன்.

 

ஆனால் அவர் நினைத்த வேகத்துக்கு வேலை நடைபெறவில்லை. சில நடைமுறைச்சிக்கல்களால் மெதுவாகத்தான் வேலை நடக்கிறது என அவரே மாதத்துக்கு ஒருமுறை அழைத்துச் சொன்னபடி இருந்தார். ஒரு மாதத்தில் நடைபெறவேண்டிய வேலை, ஆனால் பல மாதங்களாக இழுத்துக்கொண்டே போகிறது என்று சலித்துக்கொள்வார். தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவார். நான் அமைதியாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு அவரைத் தேற்றி அமைதிப்படுத்துவேன்.

 

கடந்த இரு மாதங்களாக அவரிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. ஒரே சிக்கலைத் திரும்பத்திரும்பச் சொல்லவேண்டாம் என அவரே நினைத்து அழைக்காமல் இருக்கக்கூடும் என்று நான் நினைத்துவிட்டேன். நானும் பேசி அதைக் கிளறவேண்டாம் என நினைத்துக்கொண்டேன். நிகழும் தாமதத்தை ஒப்புக்கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிட்டவரிடம் உரையாடி அமைதியைக் கலைக்கவேண்டாம் என நினைத்து  அழைக்காமல் இருந்துவிட்டேன். கெடுவாய்ப்பாக இன்று அவருடைய மரணச்செய்தியைக் கேட்கும் வண்ணம் அமைந்துவிட்டது.

 

அவர் நெடுங்காலம் கனவு கண்ட தொகைநூலைப் புத்தகவடிவில் பார்த்த பிறகே அவருடைய மரணம் நிகழ்ந்ததாக நண்பர் தெரிவித்தார். அவருடைய தொகைநூலுக்காக எழுதிய முன்னுரையை மீண்டுமொரு முறை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பகுதியையும் கடக்கும்போது அதையொட்டி அவர் சொன்ன சொற்கள் நெஞ்சில் எதிரொலித்தபடி இருந்தது. அவர் சொல்லும் அவர் நினைவும் அவர் கனவும் என்றென்றும் நிலைத்திருக்கும். 

ஜீவகாருண்யனுக்கு என் அஞ்சலி.