(
கே.நல்லதம்பி நேர்காணல் )
உரையாடல் : பாவண்ணன்
( கன்னடப் படைப்புகளை தமிழ் மொழியிலும் தமிழ்ப்படைப்புகளை கன்னட மொழியிலும் மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையில் நல்லதொரு உறவுப்பாலமாக விளங்குபவர் கே.நல்லதம்பி. மொழிபெயர்ப்புப் பிரிவின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமி விருதாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கன்னட எழுத்தாளரான நேமிச்சந்திர எழுதிய யாத் வஷேம் என்னும் நாவலை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்ட இந்நாவல் 2020ஆம்
ஆண்டில் எதிர் வெளியீடாக வெளிவந்து வாசககவனத்தைப் பெற்றது. எழுத்தாளர் லங்கேஷ் எழுதிய
சில குறுங்கவிதைகளின் மொழிபெயர்ப்புத்தொகுப்பாக 2013 வெளிவந்த மொட்டு விரியும் சத்தம்
என்னும் தொகுதியே நல்லதம்பியின் முதல் முயற்சியாகும். அதைத் தொடர்ந்து கடந்த பத்து
ஆண்டுகளில் 16 கன்னட நூல்களை தமிழுக்கும் பத்து தமிழ் நூல்களை கன்னட மொழியிலும் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலும்
கன்னடத்திலுமாக இன்னும் பதினைந்து புத்தகங்கள் வெளிவரவிருக்கின்றன. அவருடைய நேரடிப்
படைப்பாக்க முயற்சியாக அத்தர் என்னும் சிறுகதைத்தொகுதி 2022இல் வெளிவந்தது. தற்போது
பல தலைமுறைகளைப்பற்றிய கதைகளைக் கொண்ட புதியதொரு நாவலை எழுதி வருகிறார். சாகித்திய
அகாதெமி விருது அறிவுப்புக்குப் பிறகு கடந்த 23.12.2022 அன்று பெங்களூரில் எழுத்தாளர்
கண்மணியின் இல்லத்தில் கே.நல்லதம்பியைச் சந்தித்தபோது நிகழ்ந்த உரையாடலின் பதிவு )
தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் இலக்கியப்படைப்புகளை வாசிக்கவும் எழுதவும் மொழிபெயர்க்கவும் தெரிந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள். இது ஓர் அபூர்வமான திறமை.
உங்கள் வாழ்வில் இந்த இருமொழிகளும் எப்படி இணைந்து அறிமுகமாயின? அது சார்ந்த உங்கள் இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?
எங்கள் குடும்பத்தின் மூத்தோர்களைப்பற்றிய குறிப்பிலிருந்து தொடங்கினால்தான் இந்தக் கேள்விக்கான பதிலை எளிதாகச் சொல்லமுடியும். நாங்கள் வணிகக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பெயர் காளிமுத்து. தேவகோட்டைக்கு அருகில் அவருடைய தாய்மாமனுக்குச் சொந்தமான பெரிய மளிகைக்கடையொன்றில் பணிபுரிந்து வந்தார். பணியாளராகவே தொடர்ந்தால் வாழ்வில் உயரமுடியாது என்றும் தனித்து புதிதாக ஒரு வணிகத்தில் ஈடுபட வேண்டுமென்றும் விரும்பினார். அதன் வழியாக வெற்றியீட்டிவிடமுடியும் என்று அவர் நினைத்தார். அதனால் குடும்பத்தில் இருந்த தாத்தா, பாட்டி, தம்பிகள், தங்கைகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தேவகோட்டையிலிருந்து இடம்பெயர்ந்து செல்லும் முடிவையெடுத்தார். கடந்த நூற்றாண்டில் நாற்பதுகளையொட்டிய காலகட்டம் அது. அப்போது அவருக்குத் தெரிந்த யாரோ சில நண்பர்கள் பெங்களூர் வாய்ப்புகளைப்பற்றிச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டிவிட்டனர். எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்று தன்னம்பிக்கை கொண்ட அப்பா பெங்களூருக்கு வந்து சேர்ந்தார். இப்போது காமராஜர் சாலை என்று அழைக்கப்படுகிற பழைய கேவல்ரித் சாலையில் குடிபுகுந்தார். அந்த இடத்தைச் சுற்றி அக்காலத்தில் பல ஆங்கிலக்குடும்பங்களும் தமிழ்க்குடும்பங்களும் இருந்தன. சுத்தமான நெய்யைக் காய்ச்சி, வீடுவீடாகச் சென்று விற்பனை செய்யும் வேலையைத் தொடங்கினார் அப்பா. அது ஓரளவு அவருக்கு வெற்றியை அளித்தது. சித்தப்பாக்களும் குடும்பத்தினரும் அவரோடு துணைநின்றனர்.
மூன்று
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரிலிருந்து மைசூருக்கு மீண்டும் இடம்பெயர்ந்தனர்.
அங்கும் நெய்வணிகத்தை அவர் தொடர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அப்பாவுக்குத் திருமணம்
நடைபெற்றது. அம்மா ஜெயலட்சுமி. பெங்களூரைச் சேர்ந்தவர். நான் மைசூரில் பிறந்தேன். அப்போது
நாங்கள் மைசூரில் செலுவம்மா அக்ரஹார பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். எங்களைப்போலவே
அக்கம்பக்கத்தில் முப்பது நாற்பது குடும்பங்கள் குடியிருந்தன. என் வயதையொத்த பலர் அங்கே
இருந்தார்கள். எங்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று
குடும்பத்தில் இருந்த பெரியவர்கள் நினைத்தார்கள். அதனால் கும்பகோணத்திலிருந்து சீனிவாச
ஐயங்கார் என்னும் ஆசிரியரை வரவழைத்தார்கள். அவர் எங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே
இடம் பார்த்துத் தங்கிக்கொண்டு எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு பிள்ளைக்கும்
ஒரு மாதத்துக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என்ற கணக்கில் அவர்களே பணத்தைத் திரட்டி
அந்த ஆசிரியருக்குச் சம்பளமாகக் கொடுத்தனர். ஐந்தாறு ஆண்டுகள் அவர் எங்களுக்குக் கற்பித்தார்.
பிறகு அவரே சிறுவர்களுக்கான ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கி நடத்தினார்.
பள்ளிக்கூடத்தில்
கன்னட மொழியும் தனிவகுப்பில் தமிழ் மொழியுமாக எங்கள் கல்வி தொடர்ந்தது. பள்ளிப்பாடங்கள்
அனைத்தையும் கன்னட மொழி வழியாகவே கற்றுக்கொண்டோம். தொடக்கக்கல்வியை முடித்ததும் சத்வித்யா சம்ஸ்கிருத நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். பிறகு
மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். அங்கு தமிழ் இரண்டாம் பாடமாக இருந்தது. பிறகு மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்தபோது
அங்கும் தமிழ் இரண்டாம் பாடமாக கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி, என் கல்விப்பருவம் முழுதும்
தமிழையும் கன்னடத்தையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தேன்.
அதனால் எனக்கு இரு மொழிகளிலுமான பயிற்சி எளிதாகக் கிடைத்தது.
மொழியறிமுகம் என்பது வேறு. இலக்கிய அறிமுகம் என்பது வேறு. இரு மொழிகளிலும் இலக்கியம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
எங்கள்
அப்பாவுக்கு செய்திப்பத்திரிகைகளைப் படிப்பதிலும் தொடர்கதை படிப்பதிலும் ஆர்வம் இருந்தது.
அதனால் தினத்தந்தி, தினமணி போன்ற பத்திரிகைகளையும்
குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களையும் தொடர்ந்து வாங்கினார். சிறுவனாக இருந்த
நானும் அவற்றைப் படித்தேன். சித்திரக்கதைத் தொடராக வெளிவந்த கன்னித் தீவு கதையை விரும்பிப் படித்தேன். வாசிக்கிற
ஆர்வம் அங்கிருந்துதான் தொடங்கியது. படிக்கும்
பயிற்சி பழகியதும் குமுதம்,
ஆனந்தவிகடன்
இதழ்களில் வந்த கதைகளையும் சின்னச்சின்ன கட்டுரைகளையும் படிக்கத் தொடங்கினேன். கல்கியில் தொடராக வந்த பொன்னியின் செல்வன் தொடரை அந்தக் காலத்தில் ஆர்வத்தோடு காத்திருந்து
படித்திருக்கிறேன். சரிவர முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து படித்துவந்தேன்.
பள்ளிப்படிப்பை
முடிக்கவிருந்த சமயத்தில் மைசூரில் வித்யாரண்யபுர பகுதியில் வசித்துவந்த ஸ்ரீகாந்த்
என்னும் நண்பருடைய அறிமுகம் கிடைத்தது. அவர் எழுத்தாளர். வயதில் மூத்தவராக இருந்தபோதும்
வித்தியாசம் பார்க்காமல் என்னிடம் அன்போடு பழகினார். மிக அழகான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் அதையெல்லாம்
நான் விரும்பிப் படித்தேன். அவர் ஒருமுறை
எனக்கு ஸ்ரீகாந்தா என்ற சரத்சந்திர சட்டர்ஜியின் கன்னட மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கக் கொடுத்தார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல். மணியனின் பயணக் கட்டுரைகளையும் அக்காலத்தில் நான்
விருப்பத்தோடு படித்திருக்கிறேன். அப்போது
மைசூரில் அனந்தமூர்த்தி, கிருஷ்ண ஆலனஹள்ளி, சிவதீர்த்தன், சதுரங்க போன்ற எழுத்தாளர்களும்
வசித்துவந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக ஸ்ரீகாந்த் செல்லும்போதெல்லாம் அவர் என்னையும்
தன்னோடு அழைத்துச் செல்வார். நான் அவர்களுடைய உரையாடல்களைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன்.
இப்படி பரந்துபட்ட வாசிப்பின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் எனக்கு அறிமுகமானது.
இளமை முதல் இலக்கிய அறிமுகம் இருந்தபோதும் உங்களுடைய முதல் மொழிபெயர்ப்பு 2013இல்தான் வெளிவந்தது? ஏன் அப்படி நிகழ்ந்தது? ஏதேனும் குறிப்பிடத்தக்க காரணம் உண்டா?
குறிப்பிடத் தக்க காரணம் என்று எதுவும் கிடையாது. வாசிப்பு அனுபவத்துக்காகவே இலக்கியப்படைப்புகளை
தொடர்ந்து வாசித்துவந்தேன். ஆனால் எழுதவேண்டும் என்னும் ஆர்வமாக அது மலரவில்லை. படிப்பு, குடும்பம், வேலை என வாழ்க்கை இன்னொரு திசையை
நோக்கி என்னை இழுத்துச் சென்றது. தனியார் நிறுவன வேலை. அதுவும் சந்தைவாய்ப்புகளை விரிவாக்கிக்கொண்டே
செல்லும் வேலை. அதன் பின்னால் செல்லவேண்டிய நெருக்கடியில் நான் இருந்ததால், அதைப்பற்றிய
யோசனையும் என்னுள் எழவில்லை. பணிக்காலம் முடிவடைந்த பிறகே நான் அதைப்பற்றி யோசித்தேன்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுக்காலம் கழிந்துவிட்டது. ஆனால் ஏற்கனவே பழகிய வீணைப்பயிற்சியைத்
தொடங்குவதுபோலவே எந்த சிரமமும் இல்லாமல் வாசிப்புக்குள் வந்துவிட்டேன். என் மொழித்திறமையை
நானே சோதித்து அறியும் முயற்சியாகவே முதலில் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.
மொழியை வெற்றிகரமாக கையாளமுடியும் என்கிற நம்பிக்கை உருவான பிறகு நேரடிப் படைப்புமுயற்சிகளில்
இறங்கலாம் என்றும் நினைத்துக்கொண்டேன். பணிக்காலத்துக்குப் பிறகு கிடைத்த ஓய்வை இப்படிச்
செலவழிப்பதை எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவே நான் நினைத்துக்கொண்டேன். தொடக்கத்தில் கன்னட எழுத்தாளர் லங்கேஷ் அவர்களின் குறுங்கவிதைகளை மொழிபெயர்த்தேன். அதை பிரசுரித்த போது நல்ல வரவேற்பு இருந்தது. அந்த ஊக்கத்தால் அடுத்தடுத்து
மொழிபெயர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டியிருந்தது.
உங்கள் கல்லூரிக்காலத்திலாகட்டும், பணிசார்ந்த பயணங்களிலாகட்டும், எப்போதாவது இலக்கியப்படைப்பாளிகளை நேருக்கு நேர் சந்தித்து உரையாடியிருக்கிறீர்களா?
மைசூரில்
வசித்த எழுத்தாளரும் நண்பருமான ஸ்ரீகாந்த் அவர்களை அடிக்கடி சந்தித்து உரையாடிக்கொண்டிருப்பேன்.
அவர் வழியாக மைசூருக்கு வரும் எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடியதுண்டு. ஒருமுறை எங்கள்
கல்லூரியில் ஒரு மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு புகழ்பெற்ற கன்னடக் கவிஞரான த. ரா. பேந்த்ரே
வந்திருந்தார். அவரை கவனித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. அப்போது அவருடன் இரண்டு நாள் தங்கி இருந்து உரையாடியது மறக்க முடியாத அனுபவம்.
கன்னடத்தில் நீங்கள் விரும்பிப் படித்த எழுத்தாளர் யார்? எந்தப் படைப்பு முதன்முதலாக உங்கள் மனத்தைத் தொட்டது?
ஆரம்ப காலத்தில் நான் விரும்பிப் படித்த கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி அவருடைய சம்ஸ்கார நாவல் எனக்கு மிகவும் பிடித்த படைப்பு. அடுத்து எஸ். எல். பைரப்பாவின் நாவல்களையும் விரும்பிப்
படித்திருக்கிறேன். அவர் எழுதியவற்றுள் தர்மஸ்ரீ, தப்பலியு நீனாதெ மகனே இரண்டும்
எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்து பி. ஜி. எல் சுவாமி எழுதிய ஹசிரு ஹொண்ணு என்னும்
நாவலுக்கும் ஸ்ரீகாந்த எழுதிய பூமி கம்பிசலில்லா, பாபு –புட்டு
நாவல்களுக்கும்
என் நெஞ்சில் எப்போதும் இடமுண்டு.
பிறகு யஷ்வந்த் சித்தாள, எஸ். திவாகர், ஜயந்த் காய்கிணி, கோபாலகிருஷ்ண அடிக,
டிவிஜி, நேமிசந்தரா, விவேக் ஷான்பாக், ஸ்ரீநிவாச வைத்யா
என
பல எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் குறிப்பிடவேண்டும். இன்னும் பலருடைய பெயர்களும்
படைப்புகளும் மனத்தில் நிழலாடுகின்றன. உடனடியாக நினைவுக்கு வரும் சில பெயர்களைத்தான்
இப்போது சொல்லியிருக்கிறேன். மனத்தைத் தொட்ட மிகச்சிறந்த படைப்புகள்
என்றால் சம்ஸ்காரா, காச்சார் கோச்சர், ஹள்ள பந்து ஹள்ள ஆகிய நாவல்களைக் குறிப்பிட்டுச்
சொல்லலாம்.
தமிழில் யாருடைய படைப்புகளையெல்லாம் நீங்கள் படித்திருக்கிறீர்கள்?
உங்கள் மனத்தைக் கவர்ந்த படைப்புகளாக எதைச் சொல்வீர்கள்?
தமிழில் புளியமரத்தின் கதை, மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி, அபிதா, காகித மலர், ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், மாதொருபாகன் போன்ற நாவல்களைப் படித்திருக்கிறேன்.
புதுமைப் பித்தன், மௌனி, கி.ரா., அசோகமித்ரன் போன்ரோரின் கதைகளையும்
படித்திருக்கிறேன். உங்கள்
சிறுகதைகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். இன்னும் பலருடைய சிறுகதைகளையும் நாவல்களையும்
படித்திருக்கிறேன். சொல்லத் தொடங்கினால் பெரிய பட்டியலாக மாறிவிடும் என்பதால் இத்துடன்
நிறுத்திக்கொள்கிறேன். படித்தவற்றில் மனத்தைத்
தொட்ட படைப்புகளைச் சொல்லவேண்டுமென்றால் தி.ஜானகிராமனுடைய மோகமுள் நாவலையும் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை
நாவலையும்தான்
நான் குறிப்பிடுவேன்.
உங்கள் வாழ்வில் வாசிப்பில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படைப்பு என ஏதேனும் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால் எந்தப் புத்தகத்தைக் குறிப்பிடுவீர்கள்? அந்தப் படைப்பு உங்கள் பார்வையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது?
கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை The Man from Lebanon என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் Barbara Young என்பவர் எழுதியிருக்கிறார். அதை வாசிக்க
நேர்ந்த தருணத்தை பொன்னான ஒரு வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். என்னை மிகவும் சிந்திக்க வைத்த நூல் அது. ஒரு வந்தேறியான எழுத்தாளனும், ஓவியனும் வாழ்க்கையில் அனுபவிக்கும்
சிரமங்களும், அப்படி சிரமங்களை அனுபவிக்கும் போது அவனுக்கு உதவியாக வரும் மேரி ஹெஸாக்கியல்
என்ற தன்னலமற்ற பெண்மணியும் மிக அற்புதமான பாத்திரங்கள். இருவரும் என்னை கலங்க வைத்துவிட்டனர். இந்தப்
புத்தக வாசிப்பு என் மனதை
இளக வைத்தது மட்டுமல்லாமல், என்னையும் சிலருக்கு
உதவத் தூண்டியது.
துயரமும் கவலையும் ஏற்படும் போது அதை தத்துவார்த்தமாகவும், ஆன்மிக நோக்குடனும் அணுகும் பாடத்தையும் கற்றுத் தந்தது.
கவிதை, சிறுகதை, நாவல் பிரிவுகளில் எந்தப் பிரிவைச் சேர்ந்த படைப்புகளை நீங்கள் விரும்பிப் படிப்பீர்கள்?
ஆரம்பத்தில் கவிதைதான் எனக்கு மிகவும் விருப்பமான துறையாக இருந்தது. இன்றும் நேரம் கிடைக்கும் போது விரும்பி எடுத்து வாசிப்பது தமிழில் பாரதியார் கவிதைகளைத்தான். பிறகு நகுலன் கவிதைகளையும் மனுஷ்யபுத்திரன் கவிதைகளையும் வாசிப்பேன். கன்னடத்தில் கோபால கிருஷ்ண அடிக, நரசிம்மசுவாமி கவிதைகளை வாசிப்பேன். இந்தியில் குல்ஜாரின் கவிதைகளையும் சில உருது ஷைரிகளையும் விரும்பிப் படிப்பேன்.
சிறுகதைகளிலும் எனக்கு விருப்பமுண்டு. தமிழிலும், கன்னடத்திலும்
பல இளம் எழுத்தாளர்கள் புதிதாக எழுத வந்திருக்கிறார்கள்.
அவற்றையெல்லாம் தேடிப் படிக்கிறேன். நண்பர்கள் யாராவது பரிந்துரை செய்யும் புனைவுகளையும் வாசிக்கிறேன்.
ஆனால் மொழிபெயர்ப்பு வேலைகள் அதிகமாக
இருப்பதால், ஒரு நாளில் மிகச்சில மணி நேரங்களை மட்டுமே வாசிப்பதற்கு ஒதுக்க முடிகிறது.
எழுத்தாளர் லங்கேஷ் தன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த கவிதைகளை நீங்கள் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டீர்கள்? லங்கேஷ் கவிதைகள் உங்களைக் கவர என்ன காரணம்?
நான் ஹைதராபாதில் பணிநிமித்தமாக பதினான்கு ஆண்டுகள் (1979-1993) இருந்தேன். அங்கே கன்னடப் பத்திரிகைகள் கிடைப்பது அரிது. அதனால் பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகை என்ற வார இதழிற்கு சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன். ஒவ்வொரு இதழிலும் லங்கேஷ் கவிதை
வெளியாகும். நான்கைந்து வரிகளால்
ஆன மிகச்சிறிய கவிதைகள். அவருடையை கையெழுத்திலேயே அக்கவிதைகள் அச்சாகி வரும். கவிதைக்குப் பொருத்தமான ஒரு கோட்டோவியத்தையும் அவரே வரைந்திருப்பார். அதுவும் அக்கவிதையோடு சேர்ந்து
வெளிவரும். நான்கைந்து வரிகளில் இருந்தாலும் மிக அழகியலுடன் நடைமுறை வாழ்க்கையையும், அதன் முரணையும், ஆழ்ந்த தத்துவத்தையும்- சில சமயம் நகைச்சுவையுடனும் சொல்லும். அவை என்னை மிகவும் கவர்ந்தன. அப்பகுதியை நான் விரும்பிப் படிப்பேன்.
அதனால் அந்தக் கவிதைகளையெல்லாம் ஒவ்வொரு வாரமும் கத்தரித்து சேகரித்து வந்தேன். மொழிபெயர்க்கத் தொடங்கலாம் என
நான் முடிவெடுத்த கணத்தில் எனக்கு அவருடைய கவிதைகள்தான் நினைவுக்கு வந்தன. அந்த இடைவெளியில்
அவருடைய கவிதைகள் எல்லாம் அச்சிட்ட தொகுதிகளாக வெளிவந்துவிட்டன. அவரும் இயற்கையெய்திவிட்டார்.
தினமும் சில கவிதைகளாக தொடர்ந்து மொழிபெயர்த்து வந்தேன். ஏறத்தாழ 400 குறுங்கவிதைகளை மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால்
ஆறு மாத காலம்
வரைக்கும் யாருக்கும் அதைக்
காட்டவில்லை. என் மனைவிதான் அக்கவிதைகளை நூலாகத்
தொகுத்து வெளியிடவேண்டும் என்று சொன்ன தூண்டுதலால் உடனடியாக நூலாக வெளியிட்டேன்.
வெவ்வேறு களங்கள் சார்ந்த நாவல்களை நீங்கள் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை என்னால் உணரமுடிகிறது. உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஓடை இந்திய விடுதலைப்போரின் ஓர் இழையிலிருந்து தொடங்கி காலம்தோறும் மாறும் மானுட உணர்வுகளின் கலையில் முடிவடையும் மிகச்சிறந்த நாவல். உலகப்போரில் இட்லர் நிகழ்த்திய கொடுமைகளைச் சித்தரிக்கும் போக்கில் மனிதர்களின் சகிப்புத்தன்மையையும் சகிப்பின்மையையும் மதிப்பிடும் கலையை நுட்பமாக உணர்ந்துகொள்ளும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் யாத்வஷேம், மனிதர்களில் உறங்கும் கீழ்மையின் பண்புகளை அம்பலப்படுத்தும் காச்சர்கோச்சர் என நீங்கள் அறிமுகப்படுத்திய ஒவ்வொரு நாவலுமே ஒவ்வொரு முக்கியத்துவம் உடையது. மொழிபெயர்ப்பதற்கான புத்தகங்களை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
உங்களைப் போல நட்பும் நெருக்கமும் கொண்ட
எழுத்தாளர்களும் வாசகர்களும் நண்பர்களும் அளிக்கும் ஆலோசனைகளின்
அடிப்படையில் சில புத்தகங்களைத் தேடியெடுத்துப் படிக்கிறேன். சிற்சில சமயங்களில் இதழ்களில் வெளியாகும் விமர்சனங்களும் என்னை வாசிக்க வைக்கின்றன. அந்த வாசிப்பில் என்னைக் கவரும்
நூல்களை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து வைத்துக்கொள்வேன். நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக
மொழிபெயர்ப்பேன். அப்படித்தான் நான் இதுவரை செயல்பட்டு
வருகிறேன். தமிழில் மொழிபெயர்த்த காச்சர் கோச்சர், ஓடை, கேலிச்சித்திர வரலாறு, உண்மை இராமாயணத்தின் தேடல் ஆகிய புத்தகங்களையும் கன்னடத்தில் மொழிபெயரத்த ஒரு
புளியமரத்தின் கதை, காந்தி கதைகள், ஜானகிராமன் கதைகள், இடபம் போன்ற புத்தகங்களையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன்.
இப்போது மொழிபெயர்த்துள்ளவற்றைத் தவிர, இன்னும் ஐந்து அல்லது பத்து கன்னட நாவல்களை நீங்கள் மொழிபெயர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என நினைத்துக்கொள்வோம்? அப்போது நீங்கள் எந்தெந்த நாவல்களை மொழிபெயர்க்க விரும்புவீர்கள்? அந்தப் பட்டியலையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றிச் சொல்ல முடியுமா?
மொழிபெயர்ப்பை ஓரிரு ஆண்டுகள் நிறுத்தி வைத்து சொந்தமாக சில சிறுகதைகளையும் நாவல்களையும்
எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நினைத்திருக்கும் நேரத்தில் இது மிகவும் சிக்கலான கேள்வி என்று நினைக்கிறேன். அது போல ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நான் முக்கியமாக மூன்று கன்னட
நாவல்களை மொழிபெயர்க்க நினைக்கிறேன். முதல் நாவல் குவெம்பு எழுதிய மலையல்லி மதுமகளு. அதற்கு மலையில் மணப்பெண்
என்பது நேரடிப் பொருளாகும். காலத்தின் மாற்றத்தைக் காட்சிப்படுத்திய அழகான நாவல் அது.
அடுத்ததாக நான் மொழிபெயர்க்க விரும்பும் நாவல் எழுத்தாளர் கிரி எழுதிய கதி ஸ்திதி மத்தெல்லா என்னும் நாவல். நாட்டு நிலவரங்களும் மேலும் சில
செய்திகளும் என்பது நேரடிப் பொருளாகும். ஏராளமான நிகழ்ச்சி விவரணைகளைக் கொண்ட சுவாரசியமான
நாவல். மூன்றாவதாக நான் மொழிபெயர்க்க விரும்பும்
நாவல் எழுத்தாளர் சஹானா விஜயகுமார் எழுதிய கஷீரா என்னும் நாவல். காஷ்மீர் பின்புலத்தைக் கொண்ட நாவல்.
உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த வசுதேந்த்ர எழுதிய மோகனசாமி சிறுகதைத்தொகுதியைப் படித்திருக்கிறேன். மூன்றாம் பாலினத்தவரைப்பற்றிய அக்கதைகள் மிகச்சிறப்பானவை. அத்தொகுதியை மொழிபெயர்க்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
மூன்றாம்
பாலினத்தவரைப்பற்றிய கதைகள் என்பவை எல்லா மொழிகளிலும் ஒரு புதிய களமாக அறிமுகமாகியுள்ளன.
இதுவரை நம் நாட்டிலுள்ள மக்களை ஆண் பெண் என இரு பிரிவினராக மட்டுமே பகுத்துப் பார்க்கும் போக்கு மறைந்து, விடுதலை பெற்ற
எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தார் என மூன்று பிரிவினராக
பகுத்துப் பார்க்கும் போக்கு உருவாகியிருக்கிறது. மூன்றாம் பாலினத்தாருக்கான சமூக இடத்தை
சட்டம் அங்கீகரித்து வழங்கியுள்ளது. சகமனிதர்களின் அணுகுமுறையும் அங்கீகாரமும் எந்த
அளவுக்கு மாறியுள்ளது என்பதை வெவ்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியம் வழியாக மட்டுமே
அறியமுடியும். வசுதேந்திர அவர்களின் தொகுதி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு
தொகுதியாகும். அதை தமிழ்வாசகர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்னும் ஆவலால்தான் அந்தத்
தொகுதியை மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். தமிழ் வாசகர்கள் அத்தொகுதியின் வழியாக ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்
என்றே நினைக்கிறேன்.
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நாவலை நீங்கள் கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்? ஒரு நாவல் எழுதி வெளியான ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது. கன்னட நாவலாசிரியர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் அந்த நாவலைப்பற்றி எவ்விதமான கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்?
ஒரு புளியமரத்தின்
கதை நாவலைப் படித்து முடித்ததும் அந்தக் கதையுலகத்திலேயே
நான் மூழ்கிவிட்டேன். அது அப்படியே என்னை இழுத்துக்கொண்டது. ஐம்பது ஆண்டுகள் வரையில்
அது எந்த இந்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்படவில்லை என்கிற செய்தியை அறிந்து வியப்படைந்தேன்.
எனக்கு அந்த நாவலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என முடிவெடுத்து மொழிபெயர்த்தேன்.
கன்னட நாவலாசிரியர்களுக்கு அந்த புதுமையான கதை சொல்லும் விதம் மிகவும் பிடித்திருந்தது. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்ற அதன் கதையும், கதை நடையும், கதை சொல்லும் விதமும், அதில் வரும் கதா பாத்திரங்களும், அந்தப் புளியமரமும் இலக்கிய வாசகர்களை
ஈர்த்தன. படித்தவர்கள் அனைவரும் பாராட்டினர். இதுபோன்ற ஒரு படைப்பு கன்னடத்தில் வந்ததில்லை என்றும், வாசகர்களின் மனத்தில் இடம்பிடித்துவிடக்
கூடிய வலிமையான படைப்பென்றும் பலர் பாராட்டினர். மூல எழுத்தாளரின் மனதிற்குள் புகுந்து வார்த்தைகளை எடுத்து வந்து மொழிபெயர்த்தது போல இருக்கிறது
என்று ஒரு வாசகர் குறிப்பிட்டு எழுதியிருந்தார். நாவல் வெளிவந்த காலத்தில் பல இதழ்களில்
அந்த நாவலுக்கு நல்ல விமர்சனங்கள் எழுதப்பட்டு வெளியாகின.
மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி, நீங்களே எழுதிய சிறுகதைகள் அத்தர் என்னும் பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பதைப் படித்தேன். புதிய களம். புதிய மனிதர்கள். வாழ்வைப்பற்றிய புதிய கோணம் என எல்லாமே ஆர்வமூட்டுபவையாக இருந்தன. நீங்கள் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். தற்சமயம் என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
மிக்க நன்றி.
அத்தர் சிறுகதைத் தொகுப்பு என் முதல் முயற்சி. தமிழில் எப்படி வரவேற்கப்படுமோ என்ற பயத்துடன் வெளியிட்ட நூல். என் பயத்திற்கு மாறாக நல்ல வரவேற்பு இருந்தது. அதை வாசித்த பலர் தங்கள் எண்ணங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் அத்தொகுதியைப் பாராட்டி இணையதளத்தில் எழுதிய நூலறிமுகக்கட்டுரையும்
எனக்கு மிகவும் ஊக்கமூட்டுவதாக இருந்தது.
எப்படித் தொடருவது என்று தெரியாமல் ஓரிரு சிறுகதைகள் பாதியிலேயே நிற்கின்றன. ஒரு நாவல் எழுதும் விருப்பம் உள்ளது. இரண்டு பாகங்கள் எழுதியும் இருக்கிறேன். கைவசம் இருக்கும் பணிகளை முடித்து விட்டு அப்படைப்புகளில் மட்டுமே மும்முரமாக ஈடுபட்டு தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.
மொழிபெயர்ப்பு
முயற்சியாக இருந்தாலும் சரி, சொந்தப் படைப்பு முயற்சியாக இருந்தாலும் சரி எழுத்து என்பது
என் பொழுதுகளைப் பொருளுடையதாக மாற்றுகிறது.
புற்றுநோயிலிருந்து மீண்ட ஒருவரின் அனுபவங்கள் என்னும் வகையில் உங்கள்
மொழிபெயர்ப்பில் வெளிவந்த பி.வி.பாரதியின் கடுகு வாங்கி வந்தவள் ஒரு முக்கியமான வரவு வெவ்வேறு களம் சார்ந்து தேர்ந்தெடுத்து நீங்கள் வாசிப்பது மிகவும் ஆர்வமூட்டுகிறது. இந்த நூலை எப்படி வாசிக்கத் தொடங்கினீர்கள்? மொழிபெயர்க்க ஏன் விரும்பினீர்கள்?
அந்த சுய அனுபவ நாவலை எழுதியவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர். அவர் அந்த நூலை எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னபோது மொழிபெயர்க்கும் எந்த எண்ணமும் எனக்கு இருக்கவில்லை. வாசித்த பிறகு என்னை ஒரு பெரும் மௌனம் சூழ்ந்து கொண்டது. ஒரு சில நாட்கள் யாரிடமும் உரையாட மனம் விரும்பவில்லை. எனக்கு அறிமுகமான ஒருவருக்கு இப்படி ஒரு அனுபவம் இருப்பதை நான் பலமுறை அவரை சந்தித்திருந்தாலும் அறிந்திருக்கவில்லை. அவர் எப்போதும் சுறுசுறுப்பாகவும், கலகலவென்று பேசிக்கொண்டும் இருப்பார். அப்படி இருக்க முடியுமா என்று வியந்தேன். அவர் தனக்கு வந்த நோயை இலக்கியத்தின்
வழியாகவும் நாடக நடவடிக்கைகள் வழியாகவும் வென்று மீண்ட அனுபவத்தை தமிழ்வாசகர்களும்
அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். உடனடியாக மொழிபெயர்த்தேன். 2016இல் அந்த நூல்
என்சிபிஎச் வழியாக வெளிவந்தது. என் எண்ணம் வீண்போகவில்லை. அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு
கிடைத்தது. ஒரு சில புற்றுநோயாளிகள் படித்துவிட்டு என்னுடன்
பேசியது என்னை கலங்க வைத்தது. சிலர் அந்த நூலை வாங்கி புற்றுநோயால் அவதிப்படும் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து வாசிக்க வைத்தது எனக்கு ஆறுதலாக இருந்தது.
உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் கேலிச்சித்திர வரலாறு நல்லதொரு ஆய்வுநூல். நாவல், சிறுகதை போல அல்லாமல் அச்சு ஊடகத்துக்குள் கேலிச்சித்திரம் உருவான காலத்தின் தடத்தைத் தேடிச் சென்று தொகுத்திருக்கும் வரலாற்றுப்புத்தகம். ஆய்வுநூல் திசையில் உங்கள் ஆர்வம் சென்றது எப்படி?
புனைவு, சிறுகதை, கவிதை நூல்களை மட்டுமே வாசிக்க வேண்டுமென்று நான் என்னை குறுக்கிக் கொண்டதில்லை. வரலாறு, ஆன்மீகம், ஆய்வு என மாறுபட்ட பல தளங்கள் சார்ந்தும்
நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பேன். புத்தகக் கண்காட்சிக்களுக்கோ, புத்தகக் கடைகளுக்கோ போகும் போது விருப்பான நூல் ஏதாவது கண்ணில் பட்டால் பையில் பணமிருந்தால், முன்பின் யோசிக்காமல் வாங்கிவிடுவேன். சிற்சில சமயங்களில் வாங்கி வந்ததுமே
அந்நூல்களைப் படித்துவிடுவேன். சிற்சில சமயங்களில் படிக்கமுடியாமல் தாமதமாகிற தருணங்களும்
உண்டு. அப்படி நீண்ட காலமாக படிக்காமலேயே என் புத்தக அறையில் இருந்த புத்தகம்தான் அது.
ஒருநாள் திடீரென படிக்கத் தொடங்கி, ஒரே அமர்வில் படித்துமுடித்தேன். எனக்கு மிகவும்
பிடித்திருந்தது. ஒவ்வொரு தகவலும் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருந்தது. ஒவ்வொரு சிறுசிறு
தகவலும் ஒரு புனைவுக்கே உரிய சுவாரசியத்தோடு அமைந்திருந்தது. லாறு நூலை வாசித்தேன். பிடித்துப் போனது. அதை உடனடியாக தமிழ் வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்தும் ஆவலோடு மொழிபெயர்த்தேன். அதையடுத்து மொழிபெயர்த்த உண்மை இராமயணத்தின் தேடல் என்னும்
புத்தகத்துக்கும் அப்படி ஒரு பின்னணி உண்டு. அதுவும் ஒரு நாவலைப்போல விறுவிறுப்பாகப்
படிக்கக்கூடிய புதுமையான களத்தைக் கொண்ட ஆய்வுநூல்.
கன்னடச்சூழலில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது? ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரும் நூல்களை விரும்புகிறவர்கள் அதிகமாக உள்ளனரா? அல்லது, இந்திய மொழிகள் வழியாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரும் நூல்களை விரும்புகிறவர்கள் அதிகமாக உள்ளனரா?
கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்கள் பரவலாக வாசிக்கப்படுகின்றன. ஆங்கில மொழியிலிருந்து கன்னட மொழிக்கு மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பெண் மொழிபெயர்ப்பாளர்கள். ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வந்தாலும் இந்திய மொழிகளின் வழியாக கன்னடத்திற்கு வருபவையை வாசகர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்று நான் கருதுகிறேன். சில தனிப்பட்ட சந்திப்புகளில்
சில வாசகர்கள் வழியாக அதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய மொழிகளிலிருந்து கன்னடத்திற்கு வரும் மொழிபெயப்புகளுக்கு நல்ல வரவேற்பு
இருக்கிறது.
***
(காலச்சுவடு – பிப்ரவரி 2023)