Home

Sunday 8 May 2022

நினைவுக்கு அப்பால் - சிறுகதை

 

ஏழாம் எண்  பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் அது நடந்தது. ஏற்கனவே நின்றிருந்த பேருந்து கடக்கும்வரை காத்திருக்கும் பொறுமையற்ற ஆட்டோ ஒன்று பக்கவாட்டில் என் பக்கமாக வேகமாக சட்டென இறங்கி சிறிது தொலைவு ஓடி மீண்டும் தார்ச்சாலையில் வளைந்த நிலையில் ஏறிப் பறந்தது. ஆட்டோவுக்குள் யாரோ இளைஞனொருவன் கைநிறைய புகைப்படங்களைப் புரட்டியபடி இருந்ததை மட்டுமே நான் ஒரே ஒரு கணம் பார்த்தேன். ஆனால் முகமோ, அணிந்திருந்த ஆடைவிவரமோ எதுவுமே என் மனத்தில் பதியவில்லை. ஆட்டோவின் எதிர்பாராத நடத்தையால் என் மனம் அச்சத்தில் ஒடுங்கியது. மறுகணம் அதன் குலுக்கலால் அந்த இளைஞனின் பிடியிலிருந்து நழுவிய ஒரு புகைப்படம் காற்றில் அலைந்துஅலைந்து அடுத்த கணத்தில் என் மார்பில் வந்து படிந்தது.

நிற்காமலேயே போய்விட்ட வாகனத்தை வெகுநேதம் பார்த்திருந்தபின்னர் அந்தப் புகைப்படத்தைத் திருப்பிப் பார்த்தேன். அருவிக்குளியலில் திளைக்கும் இளம்பெண் ஒருத்தியின் படம் அது. அதிர்ச்சி ஓர் அலையாக என் மனத்தில் மோதியது. உடனே அதை மூடினேன். சட்டெனத் திரும்பி நிறுத்தத்தில் நின்றிருந்த அனைவரையும் ஒரு கணம் பார்த்தேன். யாருடைண கவனமும் என்மீது படிந்திருக்கவில்லை என்றறிருந்தும் ஒருவித நிம்மதி படர்ந்தது. உள்ளூர ஒரு பரபரப்பு பெருகத் தொடங்கினாலும் எதையும் காட்டிக் கொள்ளாதாபடி மெல்ல நடந்து நிறுத்தத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். என் விரல்கள் தாமாக அப்படத்தை மறுபடியும் திருப்பின.

சேலையை மார்போடு ஏற்றிக் கட்டிய நிலையில் அருவியில் நனைந்த அவள் தோற்றம் பார்வையைச் சுண்டி இழுத்தது. அருவியெங்கும் படிந்திருந்த ஈரச்சாரலும் புகையின் அலைதலும் படத்தில் அழகாகப் பதிந்திருந்தன. நீண்ட கூந்தல் கீழிறங்கி நெளிய அவள் உச்சந்தலையைத் தீண்டும் அருவி நாலு திசைகளிலும் தெறிந்துக் கொண்டிருந்தது. அக்காட்சியின் துல்லியம் அப்படத்தில் நுட்பமுடன் வெளிப்பட்டிருந்தது. அப்பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்முன்னால் அருவி பொழிவதை உணரமுடிந்தது. முதலில் யாரோ சுற்றுலா போன பெண்ணாக இருக்கக்கூடும் என்ற நினைத்தேன். பார்க்கப்£ர்க்க அவள் போரழகியாக புலப்படத் தொடங்கினாள். பேரானந்தத்தில் லயித்து மூடியிருந்தன அவள் கண்கள். நெற்றியில் விழும் நீர்முத்துக்கள் சிதறித் தெறிக்கும் அழகு நெஞ்சை கொள்ளையடித்துக்கொண்டு போனது. பிரிந்த உதடுகளிடையே வெண்மை பளீரிடும் பற்களில் அருவியின் வெண்மை மின்னியது. இளமை சுடாவிடும் அந்தத் தோள்களில் அழகின் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.

ஏழாம் எண் பேருந்து நிறத்தத்துக்கு வந்தபோதும் இருக்கையைபிவட்டு எழ மனமின்றி அப்படத்திலேயே மூழ்கியிருந்தேன். என் மனமே அக்காடாகவும் அருவியாகவும் மாறுவதைப்போல இருந்தது. புகைப்படத்திலிருந்த பெண் ஒருகணம் கண்திறந்து என்னைப் பார்த்ததைப்போல ஓர் உணர்வெழுந்தது- பதற்றத்தில் சட்டென எழுந்து நின்றுவிட்டேன். மீண்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். விழிகள் இமைத்ததையும் உண்மையென்றே என் மனம் நம்பியது. பொய்யென்று அக்காட்சியை புறந்தள்ளிவிடாதே என்று கெஞ்சியது மனம்.

பளீரென நெஞ்சில ஒரு மின்னல் வெட்டியது. சக்திவேல் மாமாவின் கடிதவரிகள் நினைவுக்கு வந்தன. அவற்றை நம்ப மனமின்றி சிரித்த நாள்களும் பொங்கிப் புரண்டன. இப்போது அவ்வார்த்தைகளை நமபலாம் என்று தோன்றியது. ஆனால் என் நமபிக்கையைத் தெரிந்துகொள்ள சக்திவேல் மாமாதான் இல்லை. சொல்ல இயலாத துக்கத்தில் ஆழ்ந்ததது மனம். மீண்டும் அப்படத்தைப் பார்த்தேன். ஒயிலாக நிற்கும் அப்பெண்ணின் தோற்றம் யாரையும் பைத்தியமாக்கிவிடும் என்று தோன்றியது. அவள் கண்கள் மூடியே காணப்பட்டன. அவள் கண்திறந்து பார்க்கவேண்டும் என்ற தீராத எண்ணமே அவளை அந்த நிலையில் காட்சியளிக்கவைத்துவிடுகிறது என்று தோன்றியது. ஆசையின் உத்வேகம் கட்டியெழுப்பக்கூடிய காட்சிகளுக்குத் தகுந்தபடியெலலாம் அவளை அடிபணிய வைத்துவிடமுடியும் என்று தோன்றியது. கட்டற்ற ஒரு பேரழகை உருவாக்கி அதிலேயே திளைக்கவிரும்புகிற போதையில் எல்லாமே சாத்தியமென்று தோன்றியது.

பீறிட்டுக் கிளம்புகிற எண்ணங்களால் சில நாள்களாக விடைகிட்டாத புதிராக இருந்த பல விஷயங்களைப் புரிந்து கொள்ளமுடிந்தது. முதலில் சக்திவேல் மாமாவின்மீது உலகமும் காலமும் போர்த்திவிட்ட பைத்தியக்காரன் என்னும் அழுக்குப் போர்வையை எடுத்து வீசியெறியமுடிந்தது.

சக்திவேல் மாமா என் அம்மாவின் தம்பியானாலும் எனக்கும் அவருக்கும் ஐந்துவயதுதான் வித்தியாசம். முதுகலை கணிதப்பிரிவில் நானும் தமிழிலக்கியப்பிரிவில் அவரும் பட்டதாரிகளாக ஒரே கல்லூரியிலிருந்து வெளியேவந்து ஊரை வலம்வந்தபோது அந்த ஐந்து வயது வித்தியாசம் கரைந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது. ஒருவரையொருவர் இணைபிரியாத நல்ல நண்பர்களாக காலத்தை ஓட்டினோம். எந்த நேரமும் சிரிப்பும் கதைகளுமாகவே திரிந்தோம். நாலைந்து மாதங்களுக்குள்ளேயே என் கணிதப்பிரிவின் தகுதி தலைநகரைநோக்கி என்னை இழுத்துக்கொண்டதுபோல அவரை இழுக்கவில்லை. நாலு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே ஏரி, அஅதே தோப்பு, அதே வயல்வெளி வரப்புகள் என சுற்றிக்கொண்டிருந்தார். ஆண்டுக்கு நான்கைந்து முறை நகரத்துக்கு வருவார். பத்துநாள்கள் கூடவே தங்கியிருந்து ஊர் கதைகளையெல்லாம் சுவைகுன்றாமல் எடுத்துச் சொல்வார். நிறைய புத்தகங்களை வாங்கிவந்து படிப்பார். சந்தோஷமாக எல்லா இடங்களிலும் சுதந்திரமாகத் திரிவார். திடீரெந ஒருநாள் நகரம் அலுத்தது ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிடுவார்.

எப்போதும் இல்லாதவகையில் சக்திவேல் மாமாவிடம் கடிதம் எழுதும் பழக்கம் அரும்பியது. சராசரியாக வாரம் ஒரு கடிதம் வந்தது. என் பதில்களைச் சற்றும் எதிர்பாராமல் தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அவர் எழுதிக் கொண்டே இருந்தார். வேலையற்ற காரணத்தால் பார்ப்பவர்கள் முன்னால் சங்கடத்துடன் நெளிந்து மறைந்துவிடுபவரிடம் ஊற்றைப் போல கற்பனைவளம் மிகுந்த சொற்கள் பொங்கிப் பெருக்கெடுப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. மாமாவின் ஞாபகம் வந்தபிறகு, நிறுத்தத்தில் என்னால் வெகுநேரம் நிற்க முடியவில்லை. அக்கடிதங்களை இன்னொருமுறை படிக்கும் விருப்பம் எழுந்ததைக் கட்டுப்படுத்த இயலவில்லை. திரும்பி அறையை நோக்கி நடந்தேன். என் விரல்கள் அருவிப்பெண்ணின் புகைப்படத்தைப் பாதுகாப்பாக பற்றியிருந்தேன். முதல்முறையாக மாமாவின் வார்த்தைகளில் எனக்கு ஒரு பிடிமானம் கிடைத்ததைப் போல இருந்தது.

அறையை அடைந்ததும் வெளிச்சம் தாராளமாக படியும்வகையில் கதவுகளையும் ஜன்னல்களையும் முழுஅளவில் திறந்துவைத்தேன். கட்டிலில் சரிந்தபடி அந்தப் புகைப்படத்தே மறுபடியும் பார்த்தேன். மெல்லமெல்ல என் நாடிநரம்புகளில் அந்த மங்கையின் நிழல் ஓர் ஓடம்போல மிதக்கத் தொடங்கியது.

முரட்டுவேகத்துடன் ஓடிவரும் வெள்ளம் மோதிமோதி மண்சுவரைச் சிதைத்துக் கரைப்பதைப்போல என் உறுதியைக் குலைத்தது. ஒருவித தடுமாற்றமும் ஊசலாட்டமும பெருகின. நினைத்த கணத்தில் நெஞ்சுக்குற் உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே தோன்றியது அருவி.

எழுந்து மேசை இழுப்பறைக்குள் அடுக்கிவைத்திருந்த சக்திவேல் மாமாவின் கடிதங்களைப் பார்த்தேன். ஒருகணம் குபீரென நெஞ்சம் பொங்கி அடங்கியது. வாய்க்குள்ளாகவே மாமாவென்று முனகினேன். கையிலிருந்த புகைப்படத்தை மேசைமீது வைத்துவிட்டு, கடிதக்கட்டிலிருந்து நாலு கடிதங்களைத் தோராயமாக உருவியெடுத்துக்கொண்டு மீண்டும் கட்டிலில் சாய்ந்தேன். ஒரு கடிதத்தைப் பிரித்து மனத்துக்குள் படிக்கத் தொடங்கினேன்.

*

................. ரகு, கடந்த ஒரு வாரமாக பகல்நேரம் முழுவதையும் அடுத்த ஊரிலிருந்தும் பச்சைக்குன்றின்மீதுதான் கழந்துவருகிறேன் தெரியுமா? இத்தனை காலமும் நாம் நம் ஊரிலிருந்தும் ஏரியையும் தோப்பையும் சொர்க்கமென்று நம்பிவந்தது மிகப் பெரிய குழந்தைத்தனம் என்று புரிகிறது. மிக அழகான குன்று இது. பச்சை நிறத்தை மட்டுமே கொட்டித் ட்டிய சித்திரத்தைப் போல அக்குன்று நின்றிருந்தது. எங்கெங்கும் விதம்விதமான மரங்களின் கிளைகள் காற்றில் நெளிந்தபடி காணப்பட்டன. இலைகளை ஊடுருவி வெளிப்படும் சூரியக்கதிர்களின் வட்டங்கள், தரைமுழுக்கச் சிதறிய முத்துகளாகக் கிடந்தன. எப்போதோ வீசிய காற்றில் வேர்கள் புலப்படும்படி முரிந்து கீழே விழுந்துகிடந்த மரங்கள் விசித்திரமான தோற்றத்தைக் கொண்டிருந்தன. அணில்களும் முயல்களும் குறுக்காக புகுந்து ஓடின. எல்லாவற்றையும் ரசித்தபடி உச்சியை நோக்கிச் சென்றேன். மனிதர்களின் விரல்படாத பல பாறைகள் இருபுறங்களிலும் ஏராளமாக சிதறிக்கிடந்தன. ஏதோ வேதனையை உட்ட்கார்ந்து பேசிப் பகிர்ந்துகொள்ளும் பழங்காலப் பெரியவர்களைப் போல அவற்றின் தோற்றம் காணப்பட்டது.

உச்சியில் ஆலமரமொன்று தலையாட்டியபடி நின்றிருந்தது. அதன் வேரடியில் ஒரு பாழ்மண்டபம். அங்கங்கே சுவர்களும் தூண்களும் சரிந்து குவியல்குவியலாகக் கிடந்தன. ஒரு மூலையில் உடையாத கல்தூண் சாய்ந்திருந்தது. நெருங்கிப் பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போனேன். எந்தச் சேதாரமும் இல்லாமல் ஒரு புராதரனப் பெண்ணின் உருவம்

அத்தூணில் செதுக்கப்பட்டிருந்து. சிற்பக்கலையின் சாதனை என்றே அதைச் சொல்ல வேண்டும். வெயில்படாத இருட்டிலேயே காலம்காலமாக நின்றிருந்ததில் வழவழப்பு குறையாத ஒரு பொலிவு தாமாகவே அமைந்திருந்தது. தூண் நின்றிருந்தபோது சிலையும் நின்ற தோற்றத்தில் அமைந்திருக்கக்கூடு. சரிந்து விழுந்தபிறகு தூணில் ஒருக்களித்தவாக்கில் அப்பெண் படுதிருப்பதைப்போலத் தோன்றியது. விசித்திரமான அழைப்பொன்று அவள் விழிகளிலிருந்து வெளிப்படுவதைப்போல உணர்ந்தேன். பட்டமான முகம். கழுந்து நிறைய நகைகள். திரண்ட தோள்கள். மெலிந்த இடைஅவள் சிற்பம் என்பதையே என் மனம் நம்ப மறுத்து. புல்லறுக்கவந்த யாரோ ஒரு காட்டுப்பெண் படுத்து இளைப்பாறுவதாக எண்ணும்படி இருந்தது அத்தோற்றம். எல்லா ஓசைகளும் அடங்கி ஒரேகணத்தில் உலகம் முழுக்க உறைந்து போனதைப் போல தோன்றியது. முதல்முறையாக தனிமை எனக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரிவாரி வழங்கியது. அருகிலேயே உட்கார்ந்து அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தேன்.

ரகு, உடனே அவளுக்கு ஒரு பெயர் சூட்டவேண்டும் என்று வேகமெழுந்தது. செண்பகக்குழலி என்கிற பெயர் சட்டென என் உதடுகளின் நுனிவரை வந்துவிட்டது. எப்படி இந்தப் பெயரை என் மனம் தேர்ந்தெடுத்தது என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது- யாருடைய பெயர் இது தெரியுமா? நம் கல்லூரியில் முதுகலை ஆகில இலக்கியம் படித்த பெண். தட்டாஞ்சாவடியிலிருந்து எப்போதும் விதம்விதமான நீலக்சூடிதாரில் வருவாளே அவள்தான். ஒரு சிற்பத்தைப்போல அவள் நடந்துவந்த நடையில் நம் கல்லூரி வளாகமே கிறங்கிக் கிடந்ததை மறந்திருக்கமாட்டாய் என்று நம்புகிறேன். இந்தக் காட்டுமோகினியின் தோற்றமும் கிட்டத்தட்ட அவளையே ஒத்திருந்தது. இனிமேல் அவளை அதே பெயரைக்கொண்டு அழைப்பதென்று முடிவெடுத்தேன். செண்பகக்குழலி செண்பகக்குழலி என்று அவள் அருகில் சென்று ஆசை ததும்ப கூப்பிட்டேன். என் மனம் அப்படியே தளும்பிவிட்டது. நெருங்கி அவள் காதுக்குழையைத் தொட்டு வருடினேன். மெல்ல என் விரல்கள் காதுமடல்களின் பின்புறம் நகர்ந்தன. சதை திரண்ட கழுத்தில் பதிந்ததைப்போல என் உடலில் வெப்பம் பரவியது. குனிந்து அவள் புருவங்களின் இடையில் முத்தமிட்டேன். பிறகு படபடக்கும் மார்பைப் பிடித்தபடி விலகிவந்து உட்கார்ந்துவிட்டேன்.

ரகு, என் செண்பகக்குழலியை நீ அவசியம் பார்க்க வேண்டும்.

அடுத்தமுறை விடுப்பில் வரும்போது நாலைந்து நாள்கள் தங்கும்படி வா. என் செண்பகக்குழலியைப் பார்க்காமல் நீ போகக்கூடாது. இங்கே நான் யாருக்கும் இதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லை.  உன்னிடம் மட்டும்தான் சொல்கிறேன். உனக்குமட்டும் அவளைக் காட்டுவேன்.

*

................. எனக்குள் ஏற்படும் மாற்ங்களை என்னாலேயே நம்பமுடியவில்லை ரகு, நாளுக்குநாள் செண்பகக்குழலியின் மீதான மோகம் கூடிக்கொண்டே போகிறது. இப்போதெல்லாம் விடிந்ததுமே வேகவேகமாக குன்றைநோக்கி ஓடிவந்து விடுகிறேன். மழையாக இருந்தாலும் சரி, வெயிலாக இருந்தாலு சரி, அவளைப் பார்க்காமல் ஒருகணம்கூட என்னால் இருக்கமுடியவில்லை ரகு. வீட்டில் அக்காவுக்கும் மாமாவுக்கும் என்மீதுள்ள கசப்பு வளர்ந்துகொண்டே போகிறதே தவித, குறைந்தபாடில்லை. அதைத் தவிர்க்கிற வழி எனக்கும் தெரியவில்லை. ஒருக்களித்துப் படுத்திருப்பது போன்ற செண்பகக்குழலியின் தோற்றம் ஒருகணம் காலம்காலமாக எனக்காகக் காத்திருக்கும் எண்ணத்தைத் தருகிறது. மறுகணம் ஊடலால் முகம் திருப்பிப்படுத்தவள் போல உள்ளது. அதற்கு அடுத்த கணத்திலேயே ஏதோ கனவில் லயத்திருக்கும் அழகியைப்போலத் தெரிகிறது.

இன்று காலை அவளிடம் எதைப்பற்றியோ சொல்லிக் கொண்டிருந்தேன். வார்த்தைகளின் வர்ணனைகள் என் கட்டுப்பாட்டை மீறி சுதந்தரமாக வெளிப்பட்டபடி இருந்தன. அவளிடம் எனக்கு எவ்விதமான கூச்சமும் இல்லை. பேசிப் பழகி அவளோடு ஒருவித நெருக்கமான சகஜ உணர்வு பிறந்துவிட்டது. இன்று பேசிக் கொண்டிருந்தபோது சட்டென வார்த்தைகள் உறைந்து தடுமாறினேன். செண்பகக்குழலியின் கண்கள் மெல்லத் திறந்ததுதான் காரணம். வசீகரமான அவள் விழிகள் என்னையே விழுங்குவதைப்போலப் பார்த்தன. அதைக் கண்டதும் ஒருவித அச்சமே என்னை முதலில் தாக்கியது. சட்டென எழுந்துவிட்டேன். நகர நினைத்தேன் என்றாலும் கால்கள் உறுதியான தூண்களைப்போல நின்றுவிட்டன. அவள் கண்களைக் கண்ட அதிர்ச்சியில் குழம்பிப்போயிருந்த என் பார்வையை அவளிடமிருந்து அகற்றவே முடியவில்லை. கனவா, நினைவா என்று ஆயிரம் முறைகள் மனத்துக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன். ஆனந்ததத்தில் என் இதயம் ஒருபுறம் நிரம்பி வழிவதைப்போல இருந்தது. செண்பகக்குழலி என்று அழைத்தபடி  அவளை நோக்கி ஆசையோடு அடியெடுத்துவைத்தேன். அவளைப் போலவே நான் தரையில் ஒருக்களித்தவாக்கில் சாய்ந்தேன். ரகு, இப்போது அவள் கண்களுக்கு நேராக என் கண்கள். அவை கண்களல்ல ரகு, கடல். காலவெளியைத் தாண்டி என்னை அழைத்துச்செல்ல வந்த கடல். அசையும் அவள் கண்களோடு சுயபிரக்ஞையே இன்றி பேசிக்கொண்டே இருந்தேன்.

*

................ ரகு, இத்தனை காலமும் நான்தான் அவள்மீது பைத்தயமாக அலைகிறேன் என்று எண்ணியிருந்தேன். முதன்முறையாக அவளும் என்மீது பைத்தியமாக காத்திருக்கிறாள் என்பதை இன்று அவள் வார்த்தைகள் வழியாகவே அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். வீட்டில் ஒருபோதும் எனக்குக் கிட்டாத சந்தோஷத்தை அவள் மூலம் கிட்டும்படி காலம் வழிசெய்துவிட்டது.

ரகு, இப்போதெல்லாம் வீட்டில் யாரும் என்னோடு பேசுவதுகூட இல்லை தெரியுமா-? பேசினாலும் ஒரு வார்த்தை. அல்லது இரண்டு வார்த்தை. அவ்வளவுதான். அதற்குமேல் செல்வதில்லை. ஆனால் என் முதுகுக்குப் பின்னால் என்னை மோசமான முறையில் வசைபாடுவதை அவர்கள் அதிகரித்துக் கொண்டார்கள். ஆனால் ரகுஇ எல்லா இழப்புகளையும் செண்பகக்குழலி ஈடுகட்டிவிட்டாள். என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து பேசிப்பழக இந்த உலகத்தில் ஓர் உயிராவது இருக்கிறது என்பதை போகப்போக எல்லாருமே தெரிந்துகொள்ளத்தான் போகிறார்கள். ஏதோ காரணங்களால் நான் செல்லாத இரண்டு நாள்கள்ல உண்டான துக்கத்தை சொல்லிச்சொல்லி அவள் கண்ணீர் சிந்தியதை என்னால் பார்க்கவே முடியவில்லை. ஒருபுறம் சந்தோஷமாகவும் இருந்தது. மறுபுறம் துக்கமாகவும் இருந்தது. இனிமேல் ஒருநாளும் என் வருகை தவறாது என அவளிடம் சத்தியம் செய்துவிட்டேன். ரகு, ஒன்றைச் சொல்லட்டுமா? ஒரு பெண்ணிடம் செய்யும் சத்தியம் அவளுக்குமட்டு ஆனந்தத்தைக் கொடுப்பதல்ல. ஆணுக்கும் அளவுகடந்த ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடியது. தெரிந்துகொள்.

*

....................ரகு, என் ஆனந்தத்தை உனக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசரத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். இன்றும் அவளை ஆசையோடு நெருங்கினேன். முதலில் அவள் கண்கண் திறக்கவே இல்லை. “செண்பகக்குழலி இப்படித் தவிக்கவிடாதேடிஎன்று கெஞ்சினேன். கருமையும் வழவழப்பும் கூடிய அவள் கன்னங்களில் புன்னகையின் கோடுகள் நெளிந்தன. பிறகு அவள் கண்கள் மெதுவாகத் திறந்தன. சட்டென ஒரு புள்ளியிலிருந்து ஒளிவெள்ளம் பீறிட்டு நனைப்பதைப் போலிருந்தது. கண்களில் தொடங்கிய அசைவு மெள்ளமெள்ள அவள் உடல்முழுது பரவி, ஒரு பூவைப்போல மலர்ந்தாள். மநுகணமே என்னைத் தாவித் தழுவிக்கொண்டாள். காற்றும் இடைபுகாதர தழுவலில் நாங்கள் காலத்தை மறந்து கட்டுண்டு கிடந்தோம். மூச்சுவாங்கவும் உதடுகளை இடம்மாற்றவும் விலக நேரு சில கணங்களைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாததாகிவிட்டது. அவள் முத்தங்களால் உடல் கொதக்கத் தொடங்கியது. வெடிக்கப்போகிற கொதிகலனைப்போல இதயததின் அழுத்தம் அதிகரித்தது. உள்ளே துடிப்புகள் அதிர்ந்தபடி இருந்தன. உச்சியிலிருந்து திடீரெந உருட்டப்பட்ட பாறையைப்போல மனம் கட்டுபாடின்றி உணரத் தொடங்கியது.

ஒருகணம் அவள் தன் முகத்தை என் நெஞ்சோடு அழுத்திக்கொண்டாள். விரிந்த அவள் தலைமுடியையும் தோளையும் தொட்டு ஏற்றுக்கொண்டேன். காதோரமாக ஒரு கொஞ்சல். அப்புறம் சில முத்தங்கள். பிறகு அழுத்தமான ஒரு முனகல். ஒரே இசையின் வெவ்வேறு தாளக் கூட்டுகளைபபோல பிதற்றும் அர்த்தமற்ற சொற்கள். மீண்டு மீண்டும் அவள் விரல்கள் தலைமுடிக்குள் விளையாடியபடியே இருந்தன. என்னை இழுத்துத் தழுவி ஒன்றான கணத்தில் குபீரென நெற்றியின்மீது பனிப்பாறை உடைந்ததைப்போல உடலில் நடுக்கஅலை பரபிவயது. இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அவள் என்னை மீண்டும் நெஞ்சோடு கிடத்தி மெல்ல தட்டித்தந்தாள். குனிந்து என் நெற்றியில் உதடுகளை அழுத்தமாகப் பதித்து ஒரு முதம் தந்தாள். ரகு, அது ஓர் ஆனந்தப் பரிசு. இன்பமென்னும் வானவெளியில் சிறகடிஙத்துப் பறந்த மனப்பறவைகள் கூட்டுக்குத் திரும்பி வந்தடைந்த கணம் அது.

என் கைகளால் அவளை அள்ளியெடுத்து ஆரத் தழுவிக் கொள்ளும்போது துள்ளித்துள்ளியோடிவரும் கன்றுக் குட்டியைப்போல நாடிநரம்புகளெங்கும் ரத்தம் ஓடிஓடிப் பாய்ந்து தளும்பியது. பொங்கப் பாய்கிற காம அருவியில் நனைந்தது உயிர். எங்கெங்கும் நண்பகல் வெயில் பரவத் தொடங்கியபோது நாங்கள்  எழுந்து நடக்கத் தொடங்கினோம். அருகில் ஆயிரமாயிரம் விழுதுகள்விட்டு பிரம்மாண்டத் தோற்றத்தோடு நின்றிருந்தது அந்த ஆலமரம். பருவ மழைக்குக் கட்டியம் கூறியபடி பூத்துக் குலுங்கி அசைந்தது தேக்குமரங்களின் வரிசை, வேறொரு பக்கம் புன்னைமரங்கள். மூங்கில்கள். மரங்களுக்கு நடுவே பின்னித் தழுவி ஏற்க் காற்றிலாடிய கொடிகள். கொடிபோல அவள் என்னைத் தழுவிய நிலையில் காடுமுழுக்க நடந்தோம். அவள் உடல் மீது பட்டுபரவும் என் பார்வை தீராத தாகத்தையும் ஆனந்தத்தையும் மாற்றிமாற்றி உணரவைத்தது. குனிந்து அவள் புருவங்களிலும் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிடும் ஆசை எழுந்தது.

ரகு, உதடுகளைக் குவித்து பதிக்கும் முத்தம் உண்மையில் ஒரு பெரிய திரை அகலும் தருணம். உயிரின் ஆனந்த நடன தரிசனத்தில் திளைக்கும் நேரம். தூண்டிக்கொண்டே இருக்கப்படும் ஒரு சுடர்போல எங்கிருந்தோ எழும் வேகம் உதடுகளை இயக்கின,. காதோரக் குறுமுடிகளில்தான் முதலில் அவை பதிந்தன. பிறகு காதுமடல்களில் படிந்து அமைதி அடைந்தன. மறுகணமே இறங்கி கழுத்தைத் தொட்டன. முன்கழுத்தில் படர்ந்தபோது பின்கழுத்தில் முத்தமிடத் தோன்றியது. பின்கழுத்தை நெருங்கியபோது முன்கழுத்தை முத்தமிடத் தோன்றியது- ஒரே கணத்தில் ஏன் எங்கெங்கும் முத்தமிடமுடியாமல் போகிறது? அறியமுடியாத தவிப்பில் அலைபாய்ந்தன உதடுகள்.

*

சக்திவேல் மாமாவின் கடிதங்கள் தொடக்கத்தில் ஆர்வமூட்டுபவையாக இருந்தாலும் போகப்போக ஒருவித  அச்சத்தைக் கொடுக்கத் தொடங்கின. அவர் வார்த்தைகளில் தென்பட்ட வேகமும் கற்பனையும் என் பீதியை அதிகரித்தன. அவதை அணுகும் விதம் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது. இக்கட்டத்தில் அவரிடமிருந்து கடிதங்கள் வருவது திடீரென நின்றது. ஓய்வு ஒழிச்சலற்ற வேலை நெருக்கடிகளில் என்னாலு விசாரித்து எழுத இயலாமல் போனது. செண்பகக்குழலியின் மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கக்கூடும என்றும் சந்தேகம் முளைவிட்டடது. ஒருநடை ஊருக்குச் சென்று பார்த்துவந்தால் நல்லது என்று நினைத்தேன். விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தபோது மாமாவின் மரணச்செய்தி வந்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓர் இரவும் பகலு முழுக்க பயணம் செய்தபிறகுதான் ஊரை  அடையமுடிந்தது. அதற்குள் சக்திவேல் மாமாவின் அடக்கம் முடிந்திருந்தது. அழுது களைத்த முகங்களுடன் அனைவரும் ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர். மாலை சார்த்தப்பட்ட சக்திவேல் மாமாவின் படத்துக்கருகே நின்றபோது என் கால்கள் நடீங்கின. புலன்கள் எல்லாம் வலிவிழந்துவிட்டன. மாமா என்ற தேம்பினேன். என் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சுயநினைவின்றி வெகுநேரம அப்படியே நின்றிருந்தேன்.

இரவுநேரம். எல்லாருமே அறைக்குள் படுக்கப் போய்விட்டார்கள். தூக்கம் வராமல் நான் எழுந்து திண்ணைக்கு வந்தேன். ஓரமாக இருந்த கட்டிலை இழுத்து வெளியே போட்டுக்கொண்டு சாய்ந்தேன். வானில் பாதிநிலா பொழிந்தபடி இருந்தது. எதிரில் புறிமரங்கள் காற்றில் கிளைகளை அசைத்தன. மாபெரும் மௌனத்துடன் என்னை உற்றுப்பார்க்கும் ஒரு ஞானியைப்போல விரிந்துகிடந்தது வானம். சக்திவேல் மாமாவின் ஞாபகம் உடைத்துகொண்டு பொங்கியெழுந்தது. மாமாவின் நினைவில் அழுதுவிடுவேன் என்று தோன்றியது. அதே நேரத்தில் புடவை சரசரக்கும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அம்மா வந்து அருகில் நின்றாள். ஏதோ சொல்லவந்தவளைப்போல காணப்பட்டாள். ஆறுதலாக அவளிடம் சில வார்த்தைகளைச் சொல்லி அவளுக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்தேன்.

ஆறேழு மாசமா அவன் ஊட்டு ஜனங்க யாரோடயும் பேசனதே இல்ல பாத்துக்கோ ரகு. திடீர்னு ஒரு மொறப்பு. திடீர்னு ஒரு சிரிப்பு. இப்படித்தான் கெடந்தான். பேச்சு பெராக்கதான் அந்த ஊர்ப்பக்கம் போறான்னுதான் நெனச்சம். காலையில போனா சாயங்காலமாதான் வருவான். சித்தம்போக்கு சிவன்போக்கு மாதிரிதான். அவன் போக்கயே புரிஞ்சிக்கமுடியலை. திடீர்னு ஆளே வராம போயிட்டான். ராவும் பகலுமா அந்த ஊரு மலைமேல கெடப்பான். என்னமோ காணாதத கண்டமாதிரி ஆளு எப்பவும் சுறுசுறுப்பா இருப்பான். யாருக்கும் அவனால தொந்தரவு இல்ல. ஆனா ஊருக்காரங்க சொல்றாங்கன்னு ஊட்டுல இருக்கறவங்களும் அவன பைத்தியம் பைத்தியம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. வெளிய விடக்கூடாதுன்னு சங்கிலி போட்டு¢கட்டி வச்சாங்க. இதே இந்த திண்ணையிலதான் ஆடமாட கட்டிப்போட்டாப்ல அவன கட்டி வச்சிட்டாங்க. அவுத்துவுடு அவத்துவுடுன்னு கெஞ்சுவான் புள்ள. காதுலயே உழாதமாதிரி இருப்பாங்க எல்லாரும். நாம எழுந்துபோனா நம்மள அடக்கறதுக்குத்தான் நூறு பேரு வந்துடுவாங்க. அந்த  நேரத்துல ஒன்று அழுவான். நமக்கு அடிவயிறே கலங்கிப் போயிரும். நானு என்ன செய்யமுடியும் சொல்லு. நீ ஒரு புள்ளமாரி அவனும் எனக்கு ஒரு புள்ளதான். பொம்பளைங்க வார்த்தைக்கு என்ன மரியத இருக்குது ஒலகத்துல. திடீர்னு ஒருநாளு அறுத்துட்டு போயிடுவான். நாலஞ்கி நாளு வரவே மாட்டான். அந்த உச்சிமலையிலதான் ஒரு ஆலமரம் இருக்குதாம். அங்கபோயிபடுத்துங்கெடப்பான். யாராச்சிம் போயி இழுத்தாந்து மறுபடியும் கட்டிவைப்பாங்க. நாலஞ்சிதரம் ஆயிடுச்சி. போனவாரம் போன ஆளு வரவே இல்ல. நான்தான் போயி பாருங்க போயி பாருங்கன்னு கெடந்து துடிச்சன். அப்புறமாதான் ஆளுங்க போனாங்க ரகு. போயி பாத்தா புள்ள பொணமா கெடக்கறாண்டா. காட்டேரி கீட்டேரி அடிச்சிருக்கணும்னு காட்டுக்காரங்க சொல்றாங்க. அவனுங்க தான் மூமங்கிலவெட்டி பாடிமாதிரி கட்டி அதில வாரிப்போட்டு இங்க தூக்கியாந்து கெடத்தனாங்க. பூமாதிரி வளத்த புள்ள. தாயில்லாத கொற தெரியாம தாய்க்கு தாயா நின்று பாத்துகிட்டேன். அவனுக்கு சோறு போட்ட கையாலியே வாய்க்கரிசி போடற நெலம வந்திருக்சி...”

அம்மா தேம்பலை நிறுத்தி மூக்கைச் சிந்தினாள். உள்ளே யாரோ எழுந்து ஸ்விட்ச் போடும் சத்தம் கேட்டது. கழிப்பறைப்பக்கம் விளக்கெரிவதும் தெரிந்தது. அம்மா முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி எழுந்து வீட்டுக்குள் சென்றாள்.

அம்மாவின் வார்த்தைகள்மூலம் செண்பகக்குழலியைப் பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது. இப்போது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி இறந்துபோனவனை மேலும் அவமானத்துக்கு ஆளாக்கிவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

விடிந்ததும் வெளியே சென்று வருவதாக தகவல் சொல்லிவிட்டு அந்த ஊரைநோக்கி நடந்தேன். அல்லும் பகலும் அகலவிடாமல் சக்திவேல் மாமாவைக் கட்டிவைத்த அந்த மலையைப் பார்க்கும் ஆவல் என்னைத் தூண்டியது. இருபக்கங்களிலும் மரங்கள் அடர்ந்த ஒற்றையடிப்பாதையில் வெகுநேரம் நடந்தேன். பல இடங்களில் தென்னந்தோப்புகள் தென்பட்டன. நிழலுக்குக் குறைவில்லாத சாலை. எங்கோ ஒருசில வீடுகள் தென்பட்டன. எல்லாமே மண்குடிசைகள். புல்வெளிகளில் மாடுகள் மேய்ந்தபடி இருந்தன.

சாலை முடிந்து இடத்தில் மலை தொடங்கியது. காற்று ஒரு  சிறுமியைப்போல அதன்மீது நெளிந்துநெளிந்து ஏறி ஓடியது. மரங்களிடையே தொடர்ந்து நடந்தபடி இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு சின்னக் காட்டுக்குள் புகுந்து நடப்பதைப் போன்ற எண்ணம் எழுந்தது. சக்திவேல் மாமா நடந்து பழகிய திசை இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று உள்மனம் சொன்னது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது மாமாவின் வார்த்தைகள் நூற்றுக்குநூறு சத்தியம் என்று தோன்றியது. தொடர்ந்து அரைமணிநேரப் பயணத்துக்குப் பிறகு உச்சியை அடைந்தேன். தொட்டுவிடும் தொலைவில் மேகங்கள் நகர்ந்தன. குளிர்ந்த காற்று முகத்தில் அடித்தது. ஊர்கள் சதுரப் பாத்திகளாகவும் வீடுகள் புள்ளியாகவும் தெரிந்தன. தென்னைமரங்களும் பனைமரங்களும் சின்னச்சின்னதாக நடப்பட்ட குச்சிகளைப்போல காணப்பட்டன.

ஒரு பாறைக்குப் பின்னால் ஆலமரத்தைப் பார்த்தேன். என் உடல் அதிரத் தொடங்கியது. வேகமாக அதைநோக்கி நடந்தேன். அதன் விழுதுகள் எல்லாத் திசைகளிலும் இறங்கியிருந்தன. ஒரு விழுதில் தூக்கணாங்குருவிக்கூடு தொங்கிக்கொண்டிருந்தது- குருவிகள் எதுவும் இல்லை. உயிரற்ற ஒரு சடலத்தைப்போல காற்றில் அசைந்தது- தயங்கித் தயங்கி விழுதுகளைச் சுற்றி வந்தேன். அங்கங்கே நொறுங்கிப்போன பாறைகளின் மிச்சங்கள் மட்டுமே காணப்பட்டன. எங்கேயும் சக்திவேல் மாமா குறிப்பிட்ட பாழ்மண்டபம் இல்லை. ஒருக்களித்தவாக்கில் கண்களைச் சிமிட்டு செண்பகக்குழலி எங்கேயும் இல்லை. சிற்பத்தைப் பார்க்காமல் இறங்கிவிடக்கூடாது என்று உறுதியுடன் அலைந்து அலைந்து தேடினேன். எங்கும் எதுவும் தட்டுப்படவில்லை.

வெயில் உச்சியைத் தொட்டபோது அம்மாவின் ஞாபகம் வந்தது. தொடர்ந்து அலைவதில் எந்தப் பயனும் இல்லையென்று தோன்றியது. திரும்பிவிடடலாம் என நினைத்தபோது யாரோ பின்னாலிருந்து பார்ப்பதுபோல உணர்வு ஏற்பட்டது. உடனே திரும்பிப்பார்த்தேன். யாருமில்லை. காற்றின் வேகம் கூடி கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டிருந்தன. அப்போது ஒரு பாறையடியில் இரண்டு காலணிகள் கிடப்பதைக்கண்டேன். சந்தேகமே இல்லாமல் அவை சக்திவேல் மாமாவின் காலணிகள்தான். அப்படியென்றால் மாமா இங்கே வந்தத தங்கியிருந்தது உண்மை என்றே தோன்றியது. ஆனால் அவர் குறிப்பிட்ட கல்சிற்பம் எங்கே?

குழப்பத்துடன் கீழே வேகவேகமான இறங்கினேன்.  பக்கவாட்டில் எங்காவது தென்படக்கூடும் என்கிற நப்பாசையில் எல்லாப் பக்கங்களிலும் திரும்பித்திரும்பிப் பார்த்படி நடந்தேன். சமதரையைத் தொடும்வரையில் எதுவுமே காணப்படவில்லை. ஏமாற்றமாக இருந்தது- ஒற்றையடிப்பாதையில் நடக்கத்தொடங்கும முன்னர் ஒரு நாவல் மரத்தடியில் இளைஞனொருவன் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நெருங்கிச்சென்று தயக்கத்துடன் பேச்சுக்கொடுத்தேன். அந்த ஊர்க்காரன்தான் என்பது உறுதிப்பட்டது என் சந்தேகத்தை முன்வைத்தேன்.

எதனமும்தான் எங்க ஜனங்க மேல போய்வராங்க. நீங்க சொல்றமாதிரி எந்த மண்டமு இல்ல. கோயிலும் இல்ல. அங்கங்கே மொட்டப்பாற கெடக்குது. அவ்ளோதாங்க

அவன் உறுதியாகச் சொன்னான். பிறகு என்னைப் பற்றி கேட்கத் தொடங்கினான். வாய்க்கு வந்ததைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன். ஊர்வந்து சேர்ந்தபிறகும்கூட என் குழப்பம் தீரவே இல்லை.

கடிதங்களையும் புகைபடத்தையும் வைத்துவிட்டு படுக்கையில் சரிந்தேன். அருவிக்குளியலில் திளைக்கும் பெண்ணின் படம் மீண்டும்மீண்டும் செண்பகக்குழலியையும் சக்திவேல் மாமாவையும் நினைவூட்டியபடியே இருந்தது.

(2004)