மாலை ஏந்திய தாதியைத் தொடர்ந்து வாயில் திரையை விலக்கியபடி மண்டபத்துக்குள் நுழைந்தாள் தமயந்தி. அதுவரை நிலவியிருந்த மண்டபத்தில் சலசலப்பு சட்டென்று அடங்கிப் பேரமைதி உருவானது. அனைவருடைய கண்களும் தமயந்தியின் பக்கம் திரும்பின. காலமெல்லாம் நதிக்கரையிலும் தோட்டத்திலும் மட்டுமே தோழிகள் சூழப் பொழுதைக் கழித்துப் பழகியவளுக்கு அந்நிய ஆட்கள் நிறைந்த மண்டபத்தில் நிற்பதே சங்கடமான செயலாக இருந்தது. அக்கணம் மிகவும் வலியும் பரவசமும் கலந்ததாகத் தோன்றியது. முதலில் இந்தச் சுயம்வரம் எவ்வளவு பெரிய அவஸ்தை என்ற எண்ணம் எழுந்தது. உடனடியாக, நளனின் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் பளிச்சிட்டன. சட்டென ஆனந்தம் புரளத் தொடங்கியது. தட்டுடன் நின்றிருந்த தாதி தமயந்தியை நெருங்கித் தோளைத் தொட்டாள். “நிற்க வேண்டாம், வாருங்கள்” என்றாள்.
மண்டபத்துக்குள் நளனை அவள் கண்கள் தேடின. அவள் பார்வையைத் திருப்பிய பக்கம் அவன் தென்படவில்லை. மனத்துக்குள் அவன் முகத்தை மறுபடியும் ஞாபகத்துக்குக் கொண்டு வந்தாள். அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடிய முகமில்லை அது. இளமை துள்ளும் முகம். குறும்பு மிகுந்த கண்கள். துறுதுறுப்பான தோள்கள். இறுக்கமான மார்பு, உதடுகளில் எப்போதும் தேங்கி நிற்கும் சிரிப்பு. அச்சிரிப்பை உடனடியாகப் பார்த்து மனத்தை நிரப்பக்கொள்ள வேண்டும்போல இருந்தது. சுயம்வர மண்டபத்தில் இளவரசியாக நிற்பவள் பார்வையைச் சுழற்றுவது நாகரிகமான
செயலாக இருக்காது என்கிற எண்ணமே அவள் கண்களைக் கட்டுப்படுத்தியது. சாதாரண ஆசையைக் கூட நினைத்தபடி செயல்படுத்திக் கொள்ளாத இளவரசி அந்தஸ்து பாரமான ஒரு அணிகலன் என்று நினைத்தாள் தமயந்தி.
திடீரென கால்களில் ஒருவித வலி எழுந்தது. நிற்க முடியாமல் விழுந்து விடுவோமோ என்று அச்சம் கொண்டாள். மண்டபத்தில் நிறைந்திருந்த அமைதிக்கு நேர்மாறாக அவள் மனம் இரைச்சல்களாலும் அலறல்களாலும் அடர்ந்திருந்தது. அந்த ஓசைக்குச் செவி மடுக்காமல் நடக்கச் சிரமப்பட்டாள்.
“இவர் புருஷோத்தமன். நாளந்தாவிலிருந்து வந்திருப்பவர்” என்றால் தாதி. தமயந்தின் கண்கள் அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தன. நல்ல தேகக்கட்டு. மார்பில் ஒளிவீசும் ஆரம். சுருண்ட முடி. செதுக்கியதைப்போன்ற கன்னங்கள். திட்டமான மீசை. கண்களில் மிதமிஞ்சிய ஆசை. அக்கண்களிலிருந்து ஒரே சமயத்தில் ஆயிரம் அம்புகள் புறப்பட்டு அவளைத் தாக்கியதைப்போல இருந்தது. அப்பார்வை அவள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரித்தது. இதயம் வெகுவேகமாகத் துடித்தது. உதட்டைக் கடித்தபடி ஒருகணம் குனிந்தாள். மறுகணம் காதோர முடியை விரல்களால் நீவியபடி பக்கவாட்டில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தந்தையைப் பார்த்தாள். “ஏன் இந்த அவஸ்தை தந்தையே?” என்று தன் வேதனையைப் பார்வையாலேயே தெரியப்படுத்தினாள். உள்ளூர அந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டவர்போலத் தலையை மேலும் கீழும் அசைத்துத் தொடர்ந்து நடக்கும்படி சமிக்ஞை தந்தா£ அவர். எதையுமே யோசிக்கமுடியாதபடி தமயந்தி அடுத்த இருக்கையைநோக்கி நடந்தாள்.
“இவர் ராஜசிம்மன். வங்க தேசம்” என்றாள் தாதி. அவ்வளவாக ஆர்வமின்றி அவனைப் பார்த்தாள் தமயந்தி. முற்றுகையிட்டுத் தாக்கி வசப்படுத்த விழையும் ஒருவித வெறியை அக்கண்களிலும் கண்டாள். அப்பார்வை ஒரு ஈட்டியைப்போல அவள் நெஞ்சில் தைத்தது-. தாதி தொடர்ந்து எதை எதையோ சொல்லிக்கொண்டே போனாள். எதுவுமே தமயந்தியின் கவனத்தில் பதியவில்லை. கேட்பவள்போல அங்கே நின்றிருந்தாலும் அவள் மனம் எதிலும் லயிக்காமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. உடனடியாக நளனைப் பார்க்காவிட்டால் இதயம் வெடித்துச் சிதறிவிடும்போலத் தெரிந்தது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்திருக்கிற இளைஞர் பட்டாளத்தைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்தை யோசித்து மெதுவாக நடந்தாள்.
மண்டபமே அமைதியாக இருந்தது. எய்யப்பட்ட ஈட்டிகளைப் போல ஆண்களின் பார்வைகள் தைக்க, ஒவ்வொருவரின் புராணத்தையும் வீரப்பிரதாபங்களையும் விருதுச் சரித்திரங்களையும் பொறுமையாகக் கேட்டபடி நடந்தாள். வேறொரு புறத்திலிருந்து பாணர்கள் யாழை மீட்டி மெல்லிய இசையை அலையலையாக மிதக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இசையின் வேகம் மீண்டும் அவள் மனத்தை நளனைத் தேடிக் கண்டடைய உள்ளூரத் தூண்டியபடி இருந்தது.
கடக்க நேர்ந்த இளைஞர்களின் நிராசை ததும்பும் பார்வை முதுகில் படர்வதை அவள் உணர்ந்தாள். அதில் ஒருவித நிறைவு ஊறிப் பெருகுவது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தச் சுயம்வரத்துக்கு அவர்களாகப் பங்கேற்க வரவில்லை. அழைப்பின் பேரில்தான் வந்துள்ளார்கள். மதித்து வந்திருப்பவர்களைத் தூசாகக் கருதும் அளவுக்குப் பேதையாக தன்னை மாற்றியது எது என்று தன்னையே கேட்டுக்கொண்டாள். நளனின் காந்தக் கண்கள் முன்னிலையில் வந்திருப்பவர்களின் அந்தஸ்து, ராஜ்ஜியம், படைபலம், கல்வி எதுவுமே பொருட்படுத்தத் தக்கதல்ல என்கிற எண்ணம் எழுந்தது.- தொடக்கத்தில் அன்னம் வந்து உரைக்கஉரைக்க நெஞ்சில் உருவான அந்தச் சித்திரத்தை அவளால் ஒருபோதும் அழித்தெழுத முடிந்ததில்லை. அவனாகவே வருவான், அழைத்துச் செல்வான் என்றுதான் பொழுதெல்லாம் காத்திருந்தாள். அன்னத்தின் ஒவ்வொரு பேச்சும் அவளுக்குள் அளவற்ற கனவுகளை வளர்த்தன. எவ்வளவோ பகல்களும் இரவுகளும் அக்கனவுகளுடனேயே கழிந்தன. அப்போதுதான் சுயம்வரச் செய்தி அந்தப்புரத்தில் பரவியது. தோழிகளின் கிண்டல் மொழி என்று ஒதுக்கிவிட்டு கனவுகளில் மூழ்கிக் கிடந்தவள் முன்னால் செய்தியைச் சொல்ல ஒருநாள் தந்தையே வந்து நின்றார். அமைதியும் எதிர்பார்ப்பும் நிறைந்த குரலில் சுயம்வர ஏற்பாடுகளைச் சொன்னார். நேரிடையாக அவரே வந்ததில் அவளுக்குள் வெட்கம் படர்ந்தாலும் “சரி தந்தையே, உங்கள் விருப்பம்போல நடக்கட்டும்” என்றாள். எல்லாத் தேசங்களுக்கும் செல்லும் சுயம்வரச் செய்தி நிடத நாட்டின் மாவிந்த நகருக்கும் செல்லும், அனைவரையும் போலத் தன் மனத்தைக் கவர்ந்த நளனும் கலந்து கொள்வான் என்கிற எண்ணமே அவளை இறக்கை முளைத்த பறவையாகச் சுழல வைத்தது. வானம் ஒரு பெரிய காதல்வெளி. அங்கே அவள் வட்டமிட்டுப் பறந்து நீந்தினாள். திடுமென அங்கே நளனும் ஒருபறவையாக வந்து சேர்ந்தான். இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்துகொண்டார்கள். இணைந்து வானில் நீந்தினார்கள். வாழ்நாளில் முதல்முறையாக ஓர் ஆணைப்பற்றிய எண்ணம் அவளுக்கு அளவற்ற ஆனந்தத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது. இனம்புரியாத புல்லரிப்பில் ஒருவிதமான குதூகலம் அருவியாகப் பொங்கி நெஞ்சில் வழிந்தது. அந்த எண்ணம் சந்தோஷ மழையாக அல்லும்பகலும் பொழிந்தபடி இருந்தது. அவனுடைய சிரிப்பு. இனிப்பான வார்த்தைகள். ரத்தத்தை அக்கினியாகக் கொதிக்க வைக்கும் முத்தங்கள். நளன் அழகான இளைஞன். அவன் பேச்சில் அன்பு வழியும். காதல் பொங்கும்.
“இவர் மதுராவிலிருந்து வந்திருக்கிறார். பெயர் நாகராஜன். சந்திர வம்சம்”. தாதி சொல்வதை அரைகுறையாகக் கேட்டபடி தொடர்ந்து நடந்தாள். சற்றே நின்று தாதியின் காதோரமாகச் சென்று “இவர்கள் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டாள். திடுமென கேட்கப்பட்ட அக்கேள்வியின் பொருள் புரியாத தாதி “ஆமாம் இளவரசி, ஆற்றங்கரையோரம் உள்ள விருந்தினர் மண்டபத்தில்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்காகவே நூறு பேர்களை நியமித்திருக்கிறார் அரசர்...” அவள் பேச்சைக் கண்ணசைவால் நிறுத்திய தமயந்தி “அழைக்கப்பட்ட எல்லா தேசத்தவர்களும் வந்திருக்கிறார்களா?” என்று தயங்கிய குரலில் இழுத்தாள். “அநேகமாக வந்திருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது.....” என்று கேள்விக்கான காரணம் புரியாமல் முணுமுணுத்தாள் தாதி.” “தோன்றுகிறது என்ன தோன்றுகிறது? சரியாகச் சொல்லத் தெரியாதா?” என்று வினவினாள் தமயந்தி. பதில் சொல்ல எதுவுமில்லாதவள்போல அவள் முகத்தை ஏறிட்டாள் தாதி. “நளன் வந்த மாதிரியே தெரியவில்லையடி அசடே” என்று அடிக்குரலில் சொன்னபிறகுதான் தாதிக்கு உறைத்தது. வேகவேகமாக உற்சாகப் பார்வையுடன் தலையை ஆட்டியவளின் கால்விரலை அழுத்தி அமைதிப்படுத்தினாள் தமயந்தி. அதற்குள் அரசர் இருக்கையில் இருந்தபடியே “என்ன மகளே? என்ன தடை-?” என்று வினவினார். சட்டென “ஒன்றுமில்லை தந்தையே” என்ற பொருள் தொனிக்கும் வண்ணம் தலையை அசைத்தாள் தமயந்தி.
பார்க்கவேண்டிய அடுத்த இளவரசர் முன்னால் இருவரும் சென்று நின்றார்கள்.
“இவர்?”
“காந்தார தேசம். பெரிய வில்லாளி. நாழிகைக்கு நாற்பது காதம் வேகத்தில் ஓடக்கூடிய குதிரையில் இருந்தபடியே கூட குறி பிசகாமல் இலக்கை வீழ்த்தக்கூடியவர்.”
“சரி” என்றாள் தமயந்தி. தொடர்ந்து நடந்தாள். நேற்று இரவு உப்பரிகையில் நின்றபடி முழுநிலவின் அழகிலும் நளனின் நினைவிலும் மாறிமாறித் தோய்ந்தபடி இருந்த சமயத்தில் நடந்ததை மறுபடியும் ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். மெல்ல மெல்லக் குழப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்நியர்கள் யாருமே உள்ளே நுழையமுடியாத அந்த உப்பரிகையில் நளன் வெளிப்பட்டதுமே அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. கனவா நனவா என்று புரியாத தவிப்பில் அவனையே இமைகொட்டாமல் பார்த்தாள். அப்படிப் பார்ப்பதை வெட்கம் தடுத்த போதும் ஆசையே அக்கணம் வென்றது. ஈரம் மின்னும் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. உதடுகள் சிவப்பாகச் செதுக்கியதைப் போலிருந்தன. சிரிக்கும்போது அவன் கன்னம் மேலேறிப் பாதிக் கண்கள் மூடின. முகமே சிரிப்பது போலிருந்தது.- முன்பின் பார்க்காதவளின் அறையில் வந்து நிற்க நேர்ந்த கூச்சமும் சங்கடமும் அவன் முகத்தில் தெரிந்தன. தயங்கியபடியே நெருங்கி வந்து “நான் நளன்” என்றான். தெரிகிறது. “நாளை கண்டிப்பாக வருவீர்கள் என்று உள்ளூர நம்பியிருந்தேன். இன்றே உங்களைப் பார்க்க முடிந்ததில் சந்தோஷம்” என்றாள். தொடர்ச்சியாக அவளால் பேசமுடியவில்லை. பேச நினைத்திருந்த ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சின் ஆழத்தை நோக்கிச் சரசரவென்று இறங்கிவிட அர்த்தமிழந்த ஏதோ சொற்களை உதிர்க்க நேர்ந்ததில் கூச்சம் கொண்டாள் தமயந்தி. இந்த அரண்மனை, இந்த உப்பரிகை, இந்த மஞ்சம், நான் எல்லாமே நாளை இதே நரத்தில் இந்த நளனுக்குச் சொந்தமாகிவிடும். உரிமையோடு என் நளனைக் கண்ணாரப் பாத்தபடி இருப்பேன். ஆசையும் காதலும் சுரக்கும் அக்கண்களின் இமைகளில் என் முதல் முத்தத்தைக் கொடுப்பேன். அவன் மார்பில் புதைந்து கொள்வேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவன் தழுவலில் மயங்கியிருப்பேன். தமயந்தி என்று அவன் வாய் முணுமுணுக்கும் போதெல்லாம் நெஞ்சம் உருகிக் குழைந்து விடுவேன். ஆயிரம் முறை பெயர் சொல்லிக் கூப்பிடும்படி கேட்டுக்கொண்டே இருப்பேன். தமயந்தி தமயந்தி என்று என்னை அழைக்கும் குரல் ஒரு இசைத்துணுக்காக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டு இந்த உப்பரிகைகையும் வானத்தையும் நிரப்பிவிடும். எதற்கெடுத்தாலும் சிரிப்பு வழியும் அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுவேன். கோபிப்பதுபோல வேடமிடுவேன். அவன் தொட்டுச் சமாதானப்படுத்தும்போது மனத்துக்குள் சந்தோஷப்படுவேன். வேறு எதுவுமே எங்களுக்குத் தேவையில்லை என்றெல்லாம் எண்ணங்கள் புரண்டபடி இருந்த நிலையில் “தமயந்தி, ஒரு தகவலைத் தெரிவிக்கத் தூதனாக வந்திருக்கிறேன்” என்றான் நளன்.
“என்ன வேடிக்கை செய்கிறீர்களா?” என்று கேட்டபடி வானில் அடர்ந்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள் தமயந்தி.
“இல்லை தமயந்தி, உண்மையைத்தான் சொல்கிறேன்” பொறுமையான குரலில் சொன்னான் நளன்.
“காதலின் தூதனாக வந்திருப்பதாகச் சொல்லப் போகிறீர்கள், அதுதானே? என்று சிரித்தாள் தமயந்தி. இல்லை என்று தலையசைத்தான் நளன்.
“அப்படியென்றால் இன்பமென்னும் சொர்க்கத்தின் தூதனாகவா?” என்று மறுபடியும் சிரித்தாள். அவள் உடல் குலுங்கியது. மெல்ல நடந்து அவன் அருகில் சென்று நின்றாள். அவன் உடலிலிருந்து எழுந்த மணம் அவளைக் கிறக்கியது. “அதுவும் இல்லை தமயந்தி, நான் சொல்வதைக் கேளேன்” என்று பொறுமையாகக் சொன்னான் நளன்.
“அப்படியென்றால்.....” இழுத்தாள் தமயந்தி. முதன்முறையாக அவனது முகக்குறிப்பு அவளுக்கு அச்சத்தைத் தந்தது. பரிதாபமாக அவன் கண்களை நோக்கினான். ஆழம் அளவிடமுடியாத கடலாக அது இருந்தது.
“தமயந்தி, உன் அழகின் பெருமை உனக்கே தெரியாது. மண்ணுலகத்தில் மட்டுமல்ல, விண்ணுலகத்திலும் உன் அழழு பற்றிய பேச்சுதான். இந்திரன், அக்கினி, யமன், வருணன் எல்லாருமே உன்னை மணக்க விரும்புகிறார்கள்.”
அவன் ஏதோ கதை கட்டுகிறான் என்கிற எண்ணத்தில் “கிண்டல் பேச்சுக்கு இதுவா நேரம்? நாளை சுயம்வரத்தில் என் கையைப் பற்றப் போகிறவர் நீங்கள். இப்படிப் பேசுவது உங்களுக்கே அழகாக இருக்கிறதா?” என்றாள். மெல்ல முகத்திலடிக்கும் குளிர்க் காற்றையும் மீறி அவள் உடலில் வெப்பம் படர்ந்தது. ஏக்கத்துடன் நளனைப் பார்த்தாள்.
“உண்மையைத்தான் சொல்கிறேன். தமயந்தி. நாளை என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் மீது நம்பிக்கை கொண்டு என்னைத் தூதனாக அவர்கள் ஏவியபோது தட்டமுடியாமல் போய்விட்டது. அவர்கள் அனைவருமே உன்னை விரும்புகிறார்கள். இவர்களில் ஒருவரை வரிப்பது எனக்கு நல்லது. அதைச் சொல்லவே வந்தேன்.”
அந்த வார்த்தைகள் அவளைச் சுட்டன. ஒருகணம் நளனைப் பிடித்துக் கீழே தள்ளிவிடவேண்டும் என்று மனம் துடித்தது.
மறுகணமே ஆசைக் காதலனின் இருதலைக்கொள்ளி எறும்பின் மனநிலை புரிந்து அமைதியானாள். உதடுகளைக் கடித்துக்கொண்டாள். கைகளைப் பிசைந்தாள். மூச்சு முட்டும் வரை கச்சை இறுக்கினாள். விழியோரம் அரும்பிய ஒரு துளிக் கண்ணீரை சாளரைத் திரையின் பக்கம் திரும்பி மறைவாகத் துடைத்துக்கொண்டாள். எல்லாம் நினைத்தபடியே கூடிவரும் நேரத்தில் இது என்ன சோதனை என்று உள்ளூரக் குழம்பினாள்.
“நான் மறுத்தால்?”
“அது உன் விருப்பம் தமயந்தி. சொல்ல வேண்டியது தூதனாக வந்தது என் கடமை.”
ஒருகணம் கடுமையான அமைதி அங்கே நிலவியது. அவன் சொற்களால் அவள் மனம் பொங்கியது. பிறகு அடங்கியது. அவன் புறப்பட முனைந்தான்.
“கொஞ்சம் நில்லுங்கள்” அவள் குரல் அவனை நிறுத்தியது.
“தூதனாக இல்லாமல் என் ஆசைக் காதலன் நளனாக என்னிடம் ஒருகணம் பேசுவீர்களா?”
அந்தக் குரல் அவனைக் கரைத்தது. மனத்துக்குள் செயற்கையாக அவன் இதுவரையில் கூட்டி வைத்திருந்த உறுதியெல்லாம் குலைந்தது-
“பேசுகிறேன் தமயந்தி, பேசுகிறேன். என்ன வேண்டும் கேள்?”
அவள் முகத்தில் பிரகாசம் கூடியது. அவள் எதிர்பார்த்தது இந்த நெகிழ்ச்சியைத்தான். ஆர்வத்தைத்தான். தமயந்தியின் மனம் விம்மியது. உப்பரிகையின் விளிம்பை நோக்கி வந்தாள். வானில் தனியாய்த் தவழும் நிலவைப் பார்த்தபடி “உங்களுக்கு என் மீது ஆசையில்லையா?” என்று கேட்டாள்.
“உன்னைத் தவிர எதன் மீதும் எனக்கு ஆசையில்லை தமயந்தி. உன்னைப்பற்றி அன்னம் எடுத்துச் சொன்ன கணத்திலேயே என் உள்ளத்தைப் பறிகொடுத்தவன் நான். என்னிடம்.....”
தொடர்ந்து அவனைப் பேச விடாத தமயந்தி “நாளைக்கு நீங்களும் சுயம்வர மண்டபத்துக்கு வருவீர்கள் அல்லவா?” என்று கேட்டாள். “அவசியம் வருவேன் தமயந்தி” என்றபடி கையசைத்துவிட்டுப் புறப்பட்டு சென்றுவிட்டான் நளன்.
எண்ணங்களை அசை போட்டபடியும் தன் பரபரப்பு வெளியே புலப்பட்டுவிடாதபடியும் முடுக்கிவிடப்பட்ட எந்திரத்தைப்போல ஒவ்வொருவர் முன்பும் நின்றுநின்று விவரத் தொகுப்புகளைக் கேட்டபடி ஒவ்வொருவராகக் கடந்து நடந்தாள் தமயந்தி. ஒரு வரிசை முடிந்து மறுபுறமிருந்த வரிசையைநோக்கி தாதி திரும்பினாள். அவள் தட்டிலிருந்த மலர்மாலையின் மணம் மண்டபத்தையே நிறைத்தது. இசை மழை தொடர்ந்தது. அதுவரை இசைத்துக்கொண்டிருந்த பாணியை மாற்றி வேறொரு பாணியில் இசைக்கத் தொடங்கினர் பாணர்கள்.
வரிசையில் முதல் ஆளாக நின்றபடி புன்னகைத்த உருவத்தின் மீது அவள் பார்வை பட்டதும் அவள் உடல் ஒருமுறை சிலிர்த்தடங்கியது. வயிற்றில் ஈரம் வேகவேகமாகப் படரத் தொடங்கியது. நளன். அதே உருவம். அதே சிரிப்பு. அதே உதடு. அதே கண்கள். பாணர்களின் இசையில் ஏதோ புதியவிதமான பொருள் படிந்திருந்ததைப்போலத் தோன்றியது. மனம் நெகிழ்ந்தது. அவன் கண்கள் அவளைத் தொட்டு மீண்டன.
“இவர் நளன். நிடத நாட்டின் மாவிந்த ராஜ்ஜியத்தின்.....” சொல்லிக்கொண்டிருந்த தாதி முடிக்கமுடியாமல் தடுமாறினாள். தற்செயலாக அடுத்த ஆசனத்தின் பக்கம் திரும்பிய அவள் பார்வை அவளை நிலைகுலைய வைத்தது. வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறிக் கண்களாலேயே அடுத்த இருக்கையைப் பார்க்கும்படி தமயந்தியிடம் கண்களால் சுட்டினாள் தாதி. அத்திசையில் பார்வையை ஒட்டிய தமயந்தியும் அதிர்ச்சியில் உறைந்தாள். அங்கும் நளன் வீற்றிருந்தான். அதே முகம். அதே சிரிப்பு. அதே உதடு. அதே கண்கள். அவள் தடுமாறிக் குழம்பினாள். கால்கள் நடுங்குவதைப்போலிருந்தது. நளனின் உருவம் மறுபடியும் மனத்துக்குள் படர்ந்தது. தவிக்கும் தமயந்தியின் தோளைத் தொட்ட தாதி அடுத்தடுத்த இருக்கைகளையும் காட்டினாள். மேலும் மூன்று நளன்கள். தமயந்திக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. இந்த சுயம்வரம் சந்தோஷத்தை தரப்போவதில்ல என்ற குரல் வெறுப்புடன் எழுந்தது. கசப்பும் விரக்தியும் வேகவேகமாக மனத்தை ஆக்கிரமித்தத் தொடங்கியத் துவள வைத்தன. அதே கணத்தில் முதல் நாள் இரவு இந்திரன், யமன், வருணன், அக்கினியின் சார்பாக நளன் முன்வைத்த கோரிக்கை நினைவுக்கு வந்ததும் தேவர்களின் மாறுவேடத்துக்கான நோக்கம் புரிந்தது. உடனே அவர்கள் தந்திரத்தைக் கட்டாயம் வெல்லவேண்டும் என்ற எண்ணம் ஆவேசமாகப் பொங்கி எழுந்தது. குழம்பித் தவிப்புடன் நிற்கும் தாதியின் தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினாள்.
தன்னை விரும்பாத ஒன்றை அடைய முற்படுவது எவ்வளவு பேதைமை என்று கூவ வேண்டும்போல இருந்தது. தேவர்களாக இருப்பவர்களுக்கு இதுகூட புரியாமல் போனது எப்படி என்று தோன்றியது. மானிடப் பெண்ணின் அழகை வசப்படுத்த அவர்கள் மண்ணுக்கு வந்ததே மரபு மீறிய செயலல்லவா என்ற எண்ணம் எழுந்தது. அழகின் போதையில் நிதானமிழந்து தெளிவின்றி நிற்பவர்களிடம் எந்தக் கேள்விக்கும் நியாயமான பதிலைப் பெறமுடியாது என்று நினைத்தாள். முதல் முறையாக தன் அழகின் மீதே அவளுக்கு வெறுப்பு படர்ந்தது. ஒரு மெல்லிய எதிர்ப்புணர்ச்சி அவள் மனத்தில் அழுத்தமாக எழுந்தது. அதே சமயத்தில் அந்த உணர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்திவிடக்கூடாது என்று எச்சரிக்கை கொண்டாள். எதிராளிகள் கவனமடைந்து விடாதபடி வியூகத்திலிருந்து நழுவ வேண்டும். வசமான இடத்தில் அவர்களுக்கு நெருக்குதலை உருவாக்கி அம்பலப்படுத்திவிட்டு ஒதுங்கிவிடவேண்டும். எக்கணத்திலும் தன் மன உணர்வை வெளிப்படுத்திவிடாமல் பாவனை செய்தபடியே இருப்பதுதான் நல்லது. ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அவளைப் பைத்தியமாக மாற்றிக்கொண்டிருந்தன. இளவரசி என்கிற அந்தஸ்தைத் துறந்து ஓடிவிடலாம். ஒரு விவசாயிப் பெண்ணாக, குடியானவப் பெண்ணாக, தாதியாக, பிச்சைக்காரியாகக்கூட எங்காவது வாழ்ந்து தொலைக்கலாம் என்று நினைத்தாள். அப்பொழுதும் இப்பிரச்சனை தீரும் என்று சொல்வதற்கில்லை. வேறு விதங்களில் வேறு சந்தர்ப்பங்களில் தாக்கவே செய்யும் என்று தோன்றியது.
ஒரே முக அமைப்பில் ஐந்து பேர்கள் இருப்பதை மண்டபத்தில் எல்லாருமே பார்த்துக் குழம்பினார்கள். சிலருக்கு அந்த ஆச்சரியத்தை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தத்தளித்தார்கள்.... அதுவரை அமைதியாக இருந்த மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது. நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துக்கொண்ட அரசன் சிம்மாசனத்திலிருந்து வேகவேகமாக எழுந்து வந்தான். “குழம்ப வேண்டாம் மகளே, சுயம்வரத்தை நிறுத்தி விடலாம். இதில் ஏதோ மோசடி உள்ளது. நீ அகப்பட்டுக்கொள்ள வேண்டாம். போ. உன் அந்தப்புரத்துக்கு போ. சுயம்வரத்தை வேறொரு நாளில் வைத்துக்கொள்ளலாம்” என்று படபடத்தார். பின்னாலேயே ஓடி வந்த அமைச்சரும் அதே கருத்தையே சொன்னார். பின்தொடர்ந்து வந்த அரசி “என்ன குழப்பம் மகளே, வா தந்தை சொன்னதைக் கேள்” என்றாள். நிராசையில் நிலைகுலைந்திருந்த எதிர்வரிசை இளைஞர்கள் இது கனவா, நனவா என்று நம்ப முடியாதவர்களாக எழுந்து இளவரசியைக் சூழ்ந்து கொண்டார்கள். அவள் எடுக்கப் போகும் முடிவைக் காணும் ஆவல் அவர்களிடம் எழுந்தது-
“வேண்டாம் தந்தையே, இது சோதனைதான். ஆனால் இதில் என்னால் வெல்ல முடியும்” தமயந்தியின் குரலில் உறுதி தொனித்தது. நிமிர்ந்து அங்கிருந்த ஐந்து நளன்களையும் ஒரு சேரப் பார்த்தாள்.
“எதற்கம்மா இந்த விளையாட்டு? யாரோ வீணர்கள் விளையாடுகிறார்கள் என்பதற்காக நாமும் விளையாட வேண்டுமா? சுயம்வரத்தையே தள்ளி வைத்துவிடலாம் தமயந்தி.” பதறிய குரலில் தந்தை சொன்ன வார்த்தை எடுபடவில்லை.
“தமயந்தி, ஆபத்தின் ஆழத்தை உணர்ந்துதான் பேசுகிறாயா?” அச்சம் படரக் கேட்டார் அரசர்.
“கவலைப்படாதீர்கள் தந்தையே. நல்லதே நடக்கும்.”
தமயந்தி முதல் நளனுக்கு அருகில் சென்றாள். அந்தக் கண்கள் அவளைக் குழப்பியடித்தன. காதலை வெளிப்படுத்தும் அந்தப் பார்வையில் ஏமாற்றும் நோக்கம் இருக்கும் என்பதை நம்ப முடியாமல் தவித்தாள். அடுத்த நளன் அதற்கெடுத்த நளன் என ஐந்து பேர்களின் முகங்களிலும் உற்றுஉற்றுப் பார்த்தாள். எதையோ தொலைத்ததைத் தேடுவதைப்போல தேடினாள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான கண்கள். ஒரே மாதிரியான புருவங்கள். ஒரே முகம். அவளால் எந்த வித்தியாசத்தையும் உணரமுடியவில்லை. தன் முயற்சி தோல்வியை நோக்கிச் சரிவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவள் உடல் தளர்ந்தது. சக்கையானதைப்போல பலவீனம் படர்ந்தது. நெஞ்சு வறண்டு தாகமெடுத்தது. தண்ணீர் பருகவேண்டும் போலிருந்தது. அந்த நிலையிலும் ஆசை நளனை அடையாளம் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று விரும்பினாள். அந்தப்புரத்துக்குச் செல்ல விருப்பமில்லை. அன்னத்தோடு பேசிக் கழிந்த பொழுதுகள் நினைவுக்கு வந்தன. அந்த நாட்களின் இன்பக்கணங்கள் தொலைந்து துயரம் தேங்கியதை நினைக்க வாட்டமாக இருந்தது. வாட்டமான முகத்துடன் தந்தையின் பக்கம் பார்வையைத் திருப்பியதுமே சுயம்வரத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தில் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மீண்டும் அந்த ஐந்து நளன்களையும் மாற்றிமாற்றிப் பார்த்தாள். நளனின் மீது அவளுக்குள்ள ஆசை உலகைவிடப் பெரியது. வானத்தை விடப் பெரியது. அந்த அளவுக்கு அவன் மீது ஆசையை வைத்து விட்டதால்தான் சுயம்வரத்துக்கு ஒப்புக்கொண்டாள். எங்கிருந்தாலும் சுயம்வரத் திட்டம் அவனை
அங்கே இழுத்து வந்து விடும் என்று நம்பிக்கை வைத்திருந்தாள். அவன் இல்லாமல் அவள் இல்லை. நிடத நாட்டுப் பூ என்று ஒரு முறை அன்னம் ஒரு மலரைக் கொண்டுவந்து கொடுத்ததும் அதை ஆசையோடு கையில் வாங்கியதும் அதன் இதழில் உதடு பதித்து முத்தம் கொடுத்ததைக் கண்டு தோழிகள் பகடி செய்தது “இந்த முத்தம் மலருக்கா, நளனுக்கா?” என்று வெளிப்படையாகவே கேட்டு அவர்கள் சிரித்ததும் அந்தப்புரத்துத் தோட்டம் முழுக்க ஓடி ஓடி அன்றைய பொழுதை ஆனந்தமாகக் கழித்ததும் அடிமனசிலிருந்து பொங்கியெழ அவள் நெஞ்சம் துக்கத்தில் ஆழ்ந்தது. தண்ணீர் வேட்கை அதிகமானதுபோல இருந்தது. முகம் வெளிற “கொஞ்சம் தண்ணீர் தருகிறாயா?” என்று அருகிலிருந்த தாதியொருத்தியிடம் மெல்லிய குரலில் கேட்டாள் தமயந்தி. அப்போதும் அவள் பார்வை நளனின் கண்களில் படிந்திருந்தது. ஏதாவது ஒரு தருணத்தில் உண்மைக் காதல் ததும்பும் அந்தக் கண்களைக் கண்டடைந்துவிட மாட்டோமோ என்று ஏங்கினாள்.
இதோ கொண்டு வருகிறேன் என்று தாதிப் பெண்களிடையே உருவான பரபரப்பில் மாலை ஏந்திய தங்கத் தட்டு கைநழுவி தரையில் விழுந்தது. அதன் ஓசை பேரோசையாக மண்டபம் முழுக்க அதிர்ந்தது. சட்டென எல்லாருடைய கண்களும் ஒருமுறை இமைத்தன. ஏக்கத்துடன் நளன்களுடைய கண்களின் மீதே பார்வையைப் பதித்திருந்த தமயந்தி அந்த அரைக்கண இடைவெளியில் கண்கள் இமைத்த நளனையும் இமைக்கவே இமைக்காமல் இயல்பாக இருந்த நளன்களையும் கண்டுகொண்டாள். ஆனந்தத்தில் துள்ளியது அவள் மனம். அக்கணம் வானத்தையே வசப்படுத்தியதைப் போலிருந்தது. உடலில் பரபரப்பு கூடியது. புது ரத்தம் எங்கெங்கும் ஓடிப் பரவுவதைப் போலிருந்தது. ஒரு கணத்தையும் வீணாக்காமல், உடனே பாய்ந்து குனிந்து மாலையை எடுத்து, இமைத்த நளனின் கழுத்தில் சூட்டிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் தமயந்தி. காதலையும் ஆச்சரியத்தையும் ஒருசேர வெளிப்படுத்தின நளனுடைய கண்கள்.
(பிரசுரமாகாதது - 2002)