26.12.1926 முதல் 28.12.1926 வரை கெளஹாத்தியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் நாற்பத்தொன்றாம் மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். சீனிவாச ஐயங்கார் தலைமை தாங்கிய அந்த மாநாட்டில் காங்கிரஸில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாக கதர் அணிபவராக இருத்தல் வேண்டும் என்னும் சிறப்புத்தீர்மானம் நிறைவேறியது. இந்து சீர்திருத்த இயக்கத்தில் பங்காற்றியவரும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டாற்றியவருமான சுவாமி சிரத்பவானந்தர் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத சிலரால் கொலைசெய்யப்பட்டதை ஒட்டி இன்னொரு தீர்மானமும் நிறைவேறியது. 09.01.1927 அன்று காசியில் நடைபெற்ற சிரத்பவானந்தருடைய மறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் நிகழ்ச்சியில் காந்தியடிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். பிறகு நூல் நூற்பதைப்பற்றியும் கதராடைகள் அணியவேண்டியதன் அவசியத்தைப்பற்றியும் பிரச்சாரம் செய்தபடி அங்கிருந்தே பீகாரை நோக்கி தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு முழுதும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையில் கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என அவர் மனம் விரும்பியது.
பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம்
ஆகிய மாநிலங்களில் பயணத்தை முடித்துக்கொண்டு மே மாதத்தில் கர்நாடகப் பகுதிக்குள் அடியெடுத்து
வைத்தார். தொடர்ச்சியான பயணத்தின் காரணமாக
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் குறைந்தபட்சமாக நான்கு மாதங்களாவது அவர்
ஒரே இடத்தில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டார். இதனால் நந்தி குன்றில்
அவர் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்யபட்டது. அந்த நீண்ட ஓய்வுக்குப் பிறகு
26.08.1927 அன்று கிருஷ்ணகிரி வரைக்கும் சென்று மக்களிடம் உரையாடிவிட்டு மீண்டும் பெங்களூருக்குத்
திரும்பினார்.
இரு தினங்களுக்குப் பிறகு, 30.08.1927
அன்று பெங்களூரிலிருந்து ரயில் வழியாக காந்தியடிகள் காட்பாடிக்கு வந்தார். அன்று மாலை
காப் நினைவுச்சின்ன மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஏராளமான அளவில் கல்லூரி மாணவர்கள்
கலந்துகொண்டனர். காந்தியடிகள் தன் உரையில் கதராடைகளைப் பயன்படுத்துவது பற்றி எடுத்துரைத்தார்.
கதர்ப்பயன்பாட்டைப் பரவலாக்குவதற்கும் தேசத்தின் விடுதலைக்கும் உள்ள தொடர்பை அனைவரும்
புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது. மாணவர்கள் பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியேறி
பொதுவாழ்க்கையில் ஈடுபடும்போது இந்நாட்டு எளியவர்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர்களாகிறார்கள்.
நம் மொழிகளில் மாணவன் என்னும் சொல்லுக்கு பிரம்மச்சாரி என்கிற பொருளுமுண்டு. உண்மையை
நாடுகிறவன், கடவுளை அணுகுவதற்குரிய வழியில் நடக்கிறவன் என்பதுதான் அதன் பொருள் என்று
குறிப்பிட்டார். அந்த உரை அங்கே கூடியிருந்த ஏராளமான இளைஞர்களின் நெஞ்சில் அழுத்தமாகப்
பதிந்தன. எளியவர்களுக்கு உதவியாக இருப்பதை அந்த இளைஞர்கள் தம் வாழ்நாள் இலட்சியமாக
அமைத்துக்கொள்ள உறுதி பூண்டனர். அந்த இளைஞர் கூட்டத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே
படித்துவிட்டு தன் அப்பாவுக்குத் துணையாக வணிகத்தில் ஈடுபட்டிருந்த எளிய கிராமத்து
இளைஞரொருவரும் இருந்தார். காந்தியடிகளின் சொற்களை வாழ்நாள் இலட்சியமாக வகுத்துக் கொண்டவர்களில்
அவரும் ஒருவர். அவர் பெயர் வெங்கடாசலம்.
இத்தருணத்துக்கு முன்பாகவே ஒருமுறை
14.08.1920 அன்று வேலூரில் காந்தியடிகளின் உரையைக் கேட்ட அனுபவம் வெங்கடாசலத்துக்கு
இருந்தது. அன்று, காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை ஒட்டி மக்களிடம் ஏற்பட்டிருக்கும்
ஐயங்களை அகற்றி தெளிவுபடுத்தினார். படிப்போ, பதவியோ இல்லாத தன்னால் எந்த அளவுக்கு அந்த
இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கமுடியும் என்கிற ஐயம் ஒரு பக்கம் இருந்தபோதும், ஏற்கனவே
தன் தந்தை ரங்கசாமியின் வழியாக அவர் நெஞ்சில் நிறைந்திருந்த தேசபக்தியும் சுதந்திரவேட்கையும்
காந்தியடிகளின் சொற்களைக் கேட்ட பிறகு மேலும் பல மடங்காகப் பெருகியது. கதராடை அணிவது,
தீண்டாமையுணர்வுக்கு நெஞ்சில் இடமளிக்காமல் அனைவரோடும் அன்புடன் சரிசமமாகப் பழகுவது,
மதுவை விலக்குவது ஆகிய கொள்கைகளை வெங்கடாசலம் தன் தந்தையின் வழியில் பின்பற்றிவந்தார். அந்த மூன்று உணர்வுகளையும் மற்றவர்களிடம் விதைப்பதை
அவர் தன் வாழ்வில் முக்கியமான கடமையெனவும் வரையறுத்துக்கொண்டார்.
வெங்கடாசலத்தின் அப்பா ரங்கசாமி எளிய விவசாயி. தனக்குச் சொந்தமான
முக்கால் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார். விவசாய
வேலைகள் இல்லாத சமயங்களில் அவர் வணிகத்திலும் ஈடுபட்டு வந்தார். நகரத்தில் பெருவணிகர்களிடமிருந்து
துணிகளை மொத்தவிலைக்கு எடுத்து வந்து கிராமப்புறங்களில் சில்லறை விலைக்கு விற்பதுதான்
அவர் தொழில். அவருக்குச் சொந்தமாக ஒரு மாட்டுவண்டி இருந்தது. அந்த வண்டியில் துணிகளையெல்லாம்
ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு கிராமமாக சென்று விற்று வருவார். அக்கம்பக்கத்தில் இருக்கும்
ஊர்களில் சந்தை கூடும் தருணங்களில், சந்தையிலேயே கடைபோட்டு விற்பதும் உண்டு. காந்தியடிகளின்
சொற்கள் மீது ஈடுபாடு பிறந்த பிறகு, அயல்நாட்டுத்துணிகளை வாங்குவதையும் விற்பதையும்
அவமானம் தரும் செயலாகக் கருதி, அக்கணமே விட்டொழித்தவர் அவர். அவரும் குடும்பத்தினரும்
கதராடைகளையே எப்போதும் அணிந்து வந்தனர். கதராடைகளை ஊரூராக எடுத்துச் சென்று விற்பனை
செய்தார்.
ஒருமுறை கள்ளிறக்கும் தென்னை மரங்களைக்
கணக்கிடுவதற்காக ஓர் ஆங்கிலேய அதிகாரி அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தார். வரி வசூல்
கணக்குக்காக ஒவ்வொரு மரத்துக்கும் முத்திரையிட வேண்டியிருந்தது. அதனால் அந்த அதிகாரியும்
அவருடன் வந்திருந்த ஊழியர்களும் தோப்புக்கு அருகிலேயே கூடாரம் அடித்துத் தங்கி வேலையைப்
பார்த்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகு வேலை முடிவடைந்ததும் கூடாரத்தைப் பிரித்து மூட்டை
கட்டி எடுத்துச் செல்லவேண்டியிருந்தது. அதற்கு அவர்களுக்கு ஒரு வண்டி தேவைப்பட்டது.
அந்த ஊரிலேயே வண்டி வைத்திருந்த ஒரே நபர் வெங்கடாசலத்தின் தந்தை ரங்கசாமி மட்டுமே.
அந்த அதிகாரி மிகுந்த அதிகார தோரணையுடன் ரங்கசாமியிடம் வண்டி அனுப்பும்படி கட்டளையிட்டார்.
தன் வயலுக்கு அருகிலேயே ஒரு கூட்டம்
காந்தியடிகளின் கொள்கைக்கு எதிராக கள்ளுண்பதை ஊக்கும் வகையில் செயல்படுவதைக் கண்டு
மனம் வெறுத்து உள்ளூர கசந்திருந்த ரங்கசாமி வண்டியை அனுப்பமுடியாது என முகத்துக்கு
நேராகச் சொல்லிவிட்டார். அதைக் கேட்டு சீற்றம் கொண்ட அதிகாரி தன் கையில் இருந்த பிரம்பாலேயே
ரங்கசாமியை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினார்.
இதைக் கண்ட கிராமத்தினர் அந்த அதிகாரி தங்கியிருந்த கூடாரத்துக்கும் அவருடைய
உடைமைகளுக்கும் தீவைத்துக் கொளுத்திவிட்டனர். உடனடியாக, காவல்துறையினர் ரங்கசாமியையும்
கூடாரத்தைக் கொளுத்திய அவருடைய நண்பர்களையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
வழக்கு விசாரணையின் முடிவில் அனைவருக்கும் ஒன்பது மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. தண்டனைக்காலத்தை
அவர்கள் வேலூர் சிறையில் கழித்தனர்.
ரங்கசாமி சிறையில் இருந்த காலத்தில் வெங்கடாசலமே
விவசாயத்தையும் வணிகத்தையும் கவனித்துக்கொண்டார். அப்பாவின் வழியில் செல்லுமிடங்களில்
எல்லாம் கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தன் வயதையொத்த இளைஞர்களைத் திரட்டி
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் வேலையில் ஈடுபட்டார். வாழ்வில் மதுவையும்
தீண்டாமையையும் விலக்கவேண்டிய அவசியத்தை வீடுவீடாகச் சென்று எடுத்துரைத்து வந்தார்.
பஞ்சாபில் லாரன்ஸ் என்னும் ஆங்கிலேயக்
கொடுங்கோலனுக்கு சிலை வைக்கப்பட்டிருந்தது. நகரில் அதை ஓர் அவமானச்சின்னமாகக் கருதிய
பொதுமக்கள் அச்சிலையை அகற்ற வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொண்டனர். மெல்ல மெல்ல
அது ஓர் எதிர்ப்புக்குரலாக மாறி, 1921இல் ஒரு போராட்டமாக வளர்ந்தது. ஏறத்தாழ இரண்டாண்டுக்
காலம் நீடித்த மக்கள் போராட்டத்துக்குப் பிறகு அரசு அச்சிலையை அகற்றிவிட்டது.
பஞ்சாப் லாரன்ஸைப்போலவே சென்னையில்
கொடுங்கோலனாகச் செயல்பட்ட அதிகாரி ஜேம்ஸ் நீல். 1857இல் நிகழ்ந்த சிப்பாய்ப்புரட்சியைக்
கட்டுப்படுத்துவதற்காக சென்னை அரசால் அனுப்பப்பட்ட அதிகாரி அவர். எண்ணற்றோரைக் கொன்று
குவித்து அப்புரட்சியை அவர் கட்டுப்படுத்தினார். மகத்தான போர்வீரராக அவரைக் கருதிய
பிரிட்டன் அரசு சென்னையில் அவருக்கு ஒரு சிலையை நிறுவியிருந்தது. காந்தியடிகளின் வருகைக்குப்
பிறகு, தேசமெங்கும் சுதந்திரப் போராட்டம் பரவத் தொடங்கிய சூழலில் நீல் சிலையை மக்கள்
அவமானச்சின்னமாகக் கருதத் தொடங்கினர். பஞ்சாபில் லாரன்ஸ் சிலையை அகற்றும் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைக்
கேள்விப்பட்டதும், அதேபோன்ற ஒரு போராட்டத்தை சென்னையில் முன்னெடுக்கத் தீர்மானித்தனர்.
சென்னை மாகாண காங்கிரஸ் நீல் சிலையை அகற்றவேண்டி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான தொடர்போராட்டமும்
நிகழ்ந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.என்.சோமயாஜுலு அதற்குத் தலைமை வகித்தார்.
மதுரையைச் சேர்ந்த சுப்பராயலு, முகமது
சாலியா ஆகிய இருவரும் 11.08.1927 அன்று சென்னைக்கு வந்து நள்ளிரவில் சிலையைச் சேதப்படுத்த
முயற்சி செய்தனர். உறுதியான வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை என்பதால், சிலையின் இடுப்புப்பகுதியில்
இருந்த போர்வாளை மட்டுமே அவர்களால் சிதைக்கமுடிந்தது. அதற்குள் செய்தி கிடைத்து விரைந்து
வந்த காவலர்கள் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இருவருக்கும் மூன்று மாத
காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.
அதையடுத்து நீல் சிலையகற்றும் சத்தியாகிரகப்
போராட்டம் உருவெடுத்தது. சோமயாஜுலுவின் அழைப்புக்கு இணங்கி தமிழகத்தின் பற்பல மாவட்டங்களிலிருந்து
எண்ணற்றோர் சென்னைக்குச் சென்று அந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். இரக்கமில்லாத ஒவ்வொரு
நாளும் சிலைக்கு முன்னால் திரண்டு நிற்கும்
தொண்டர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துக்கொண்டே இருந்தது. எனினும் வற்றாத
ஊக்கத்துடன் தினந்தோறும் தொண்டர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்து பங்கெடுத்துக்கொண்டே
இருந்தனர். இச்செய்தியை பத்திரிகைகளில் படித்துத்
தெரிந்துகொண்ட வெங்கடாசலம் தன் நண்பர்கள் சிலருடன் கே.வி.குப்பத்திலிருந்து சென்னைக்குப்
புறப்பட்டுச் சென்றார். அன்று, காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை. மாறாக, தடியடி
நடத்தி கூடியிருந்தவர்களைக் கலைத்து விரட்டியது. இதனால் அடிபட்ட காயங்களுடன் வெங்கடாசலமும்
நண்பர்களும் கிராமத்துக்குத் திரும்பி வந்தனர்.
1930இல் காந்தியடிகள் நடத்திய உப்பு
சத்தியாகிரகத்துக்குப் பிறகு தேசமெங்கும் எண்ணற்றோர் சிறைபுகுந்தனர். சில மாதங்களுக்குபிர
பின் காந்தியடிகளுக்கும் இர்வினுக்கும் இடையில் நிகழ்ந்த பேசுவார்த்தையின் விளைவாக,
ஓர் ஒப்பந்தம் உருவானது. இதன் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ், சட்டமறுப்பு இயக்கத்தைக்
கைவிடவும் லண்டனில் நிகழ்விருந்த வட்டமேசை மாநாட்டைக் கைவிடவும் ஒப்புக்கொண்டது. சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச்
சென்ற அனைவரையும் விடுவிப்பதாகவும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத்
திரும்ப ஒப்படைப்பதாகவும் உப்பு வரியை ரத்து செய்து, இந்தியர்களுக்கு உப்பு உற்பத்தி
செய்ய அனுமதியளிப்பதாகவும் கள்ளுக்கடைகளின் முன்பும் துணிக்கடைகளின் முன்பும் போராட்டக்காரர்களுக்கு
அனுமதி அளிக்கவும் காலனிய அரசு ஒப்புக்கொண்டது.
காங்கிரஸ் தொண்டர்கள் நெஞ்சில் ஒருவித
வெற்றியுணர்வும் பெருமித உணர்வும் முதன்முதலாகத் தோன்றின. காங்கிரஸ் தலைவர்களுக்கும்
தொண்டர்களுக்கும் பொதுமக்களிடையில் மதிப்பும் வரவேற்பும் கிடைத்தன. அயல்நாட்டுத்துணிகளை
விற்பனை செய்யும் கடைகள், கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் முன்னிலையில் தொண்டர்கள் கூடி
அறவழியில் மறியல் செய்தனர். மறியல் நடைபெறாத கள், சாராயக்கடைகளே இல்லை என்று சொல்லக்கூடிய
அளவுக்கு மறியல் வெற்றி தமிழ்நாடு முழுக்க
பரவிவிட்டது. அப்போது வியாபாரத்துக்குத் தேவையான சரக்குகளை வாங்குவதற்கு தந்தையும்
மகனும் குடியாத்தத்துக்கும் வேலூருக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் . அங்கேயே
இரண்டு மூன்று நாட்கள் தங்கி வேலையை முடித்துக்கொண்ட பிறகே கிராமத்துக்குத் திரும்புவார்கள்.
அதனால், குடியாத்தம், வேலூர் பகுதிகளில் நடைபெற்ற சாராயக்கடை மறியல் போராட்டத்தில்
ரங்கசாமியும் வெங்கடாசலமும் பங்கேற்றனர். கடைகளின் முன்னால் நின்று கள்ளினால் உடல்நலத்துக்கும்
குடும்பத்துக்கும் ஏற்படும் தீமைகளைப்பற்றி தொடர்ந்து எடுத்துரைத்தனர்.
கள் வணிகம் குறையத் தொடங்கியதும் கடை
முதலாளிகள் சீற்றம் கொண்டனர். கைக்கூலிகளை ஏவி தொண்டர்களுக்குத் துன்பம் விளைவித்தனர்.
சிலர் மறைந்திருந்து தொண்டர்கள் மீது கற்களை எறிந்தனர். சில குடிப்பிரியர்கள் வாயில்
கள்ளையும் சாராயத்தையும் கொப்பளித்து தொண்டர்கள் முகத்தில் துப்பினார்கள். ஆயினும்
தொண்டர்கள் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அசையாமல் நின்றிருந்தனர். சில முதலாளிகள்
கடைவளாகத்தின் அமைதியை காங்கிரஸ் தொண்டர்கள் கெடுப்பதாக காவல்துறையிடம் பொய்ப்புகாரளித்து
காவலர்களை வரவழைத்தனர். பிறகு கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு தொண்டர்களிடையில் புகுந்து
பிரச்சினையை உருவாக்க வைத்து, அமைதியை நிலைநாட்டும் சாக்கில் காவலர்கள் வழியாக தடியடி
நிகழ்த்தவைத்து கூட்டத்தைக் கலைத்தனர். ஒவ்வொரு நாளும் கடைமுதலாளிகள் செயற்கையான கலவரங்களை
உருவாக்கி தொண்டர்களை நிலைகுலைய வைக்க முயற்சி செய்தனர்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக, குடியாத்தம்
கள்ளுக்கடை கொட்டகைக்கு யாரோ தீவைத்துவிட்டனர். இறுதியாக அந்தப் பழி, அங்கே மறியலில்
ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது விழுந்துவிட்டது அமைதியை நிலைநாட்ட வந்த காவலர்கள்
தொண்டர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். தடியடியின் போது எதிர்பாராத விதமாக,
காவலரின் தடிநுனியில் பதிக்கப்பட்டிருந்த கொக்கி நுனி வெங்கடாசலத்தின் இடது கண்ணின்
ஓரமாகக் கிழித்ததால் ரத்தம் கசியத் தொடங்கியது. ஆயினும் வேதனையைத் தாங்கிக்கொண்டு வந்தே மாதர முழக்கத்துடன் காவல்துறை வண்டியில் அவர்
ஏறிச் சென்றார். விசாரணைக்குப் பிறகு அனைவருக்கும் மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ரங்கசாமி வேலூர் சிறையிலும் வெங்கடாசலம் அலிப்புரம் சிறையிலும் அடைபட்டனர்.
அலிபுரம் சிறைவாசம் இளைஞரான வெங்கடாசலத்துக்கு
ஒரு பயிற்சிக்கூடமாக அமைந்துவிட்டது. அந்தச் சிறையில் வேறொரு வழக்கில் கைதான காந்தியத்
தொண்டரான வி.வி.கிரி அடைக்கப்பட்டிருந்தார். சுற்றுப்புறத்தூய்மை தொடர்பாக சில விஷயங்களை
கிரியின் வழியாக வெங்கடாசலம் கற்றுக்கொண்டார். அலிப்புரம் சிறையில் ஒரு பகுதியில் அறுநூறுக்கும்
மேற்பட்ட அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அவ்வளவு பேரும் பயன்படுத்துவதற்கு
அந்த வளாகத்தில் வெறும் ஐந்து கழிப்பறைகளே இருந்தன. அவற்றை கைதிகளே பராமரித்துக்கொள்ளவும்
வேண்டியிருந்தது. கழிப்பறையை முன்வைத்து ஏதேனும் பிரச்சினை முளைத்து கைதிகளுக்கு இடையில்
தானாகவே ஒரு மோதல் எழும் என்று காவல்துறை எதிர்பார்த்தது. அந்த மோதலையே காரணமாகக் காட்டி,
காங்கிரஸ் தொண்டர்களின் தண்டனைக்காலத்தை இன்னும் அதிகமாக நீட்டிக்கலாம் என்று சிறைக்காவலர்கள்
நினைத்தனர்.
அந்த நெருக்கடியை தொண்டர்களின் ஒத்துழைப்போடு
வி.வி.கிரி மிகவும் திறமையாகச் சமாளித்தார். சுற்றுப்புறத்தையும் கழிப்பிடத்தையும்
தூய்மையாக வைத்துக்கொள்வதற்காக, அரசியல் கைதிகளிலிருந்து ஆர்வம் கொண்ட இளந்தொண்டர்களை
ஒருங்கிணைத்து அவர் ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழுவில் முப்பத்திரண்டு இளைஞர்கள்
இருந்தனர். அவர்களில் வெங்கடாசலம் முதல் வரிசையில் இருந்தார். கழிப்பிடங்களில் மலக்குழியின்
அடித்தளத்தில் தகரத்தால் செய்யப்பட்ட மூன்றரை அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட
தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவை நிரம்பியதும் அவற்றை எடுத்து பெரிய டிரம்களில் கொட்டி
உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பிறகு தகரத்தட்டுகளை சுத்தமாகக் கழுவி சூரிய ஒளியில்
உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு மறுநாள் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
எல்லா வேலைகளும் அடுத்தடுத்து குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற வேண்டும். சிறிது நேரம்
தாமதித்தாலும் துர்நாற்றம் பரவத் தொடங்கிவிடும். வி.வி.கிரியின் வழிகாட்டலில் வெங்கடாசலம்
குழு சிறப்புறச் செயல்பட்டது. அதன் விளைவாக தொற்றுப்பிரச்சினை இல்லாமல் சுற்றுப்புறத்
தூய்மை பேணப்பட்டது. வீண் குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் இடமில்லாத வகையில் திறம்பட
நிர்வகிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுதலை பெற்று தந்தையும்
மகனும் கிராமத்துக்குத் திரும்பி மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினர். வழக்கம்போல வண்டியில்
துணிமணிகளையும் தானியங்களையும் பழவகைகளையும் ஏற்றிச் சென்று விற்றனர். பகல் முழுதும்
வியாபாரத்தில் செலவழிந்தபோதும், வீட்டுக்குத் திரும்பியதும் இரவு வேளையில் தெருமுனையில்
தீவட்டி வெளிச்சத்தில் கள்ளின் தீமையை மக்களுக்கு எடுத்துரைத்தனர். கதர்ப்பிரச்சாரமும்
செய்தனர்.
இரண்டாவது வட்டமேசைக்குச் சென்ற காந்தியடிகள்
ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். இந்தியாவில் இர்வினுக்குப் பதிலாக பதவியேற்றிருந்த
வெலிங்க்டன் அரசு காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது. நாடெங்கிலும் பல தலைவர்களும்
சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை செல்வதைவிட மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஏதேனும் செய்யவேண்டும்
என நினைத்த வெங்கடாசலம் வி.வி.கிரியைச் சந்தித்து ஆலோசனை கேட்டார். அவர் ஆர்வமுள்ள
உழைப்பாளிகளைத் திரட்டி, ஒரு சர்க்கா சங்கத்தைத் தொடங்குமாறு கூறினார்.
கிராமத்துக்குத் திரும்பிய வெங்கடாசலம்
முதலில் கிராமத்தைச் சேர்ந்த சிலரைத் திரட்டி
அவர்களுக்கு இராட்டையில் நூல் நூற்கும் பயிற்சியை அளித்தார். அடுத்து, அவர்கள் நூற்கும்
நூலை விற்பதால் கிடைக்கும் வருமானம் அவர்களையே சென்று சேரும் வகையில் செய்தார். காந்தியடிகள்
இராட்டையை தன்னிறவடைந்த கிராமியப் பொருளாதாரத்தின் சின்னமாகக் கண்டார். அதன் விளைவை
வெங்கடாசலம் நேருக்கு நேர் மக்களுக்கு உணர்த்தினார். நூல் நூற்பதை வருமானத்தை ஈட்டுவதற்குச்
சிறந்த வழியாக இருப்பதை கிராமத்தினரும் புரிந்துகொண்டனர். பிறகு ஒவ்வொருவராக வெங்கடாசலத்தை
நாடிவரத் தொடங்கினர்.
போதுமான எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டதும்,
ராஜாஜி சர்க்கா சங்கம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார் வெங்கடாசலம். வி.வி.கிரியே
நேரில் வந்து அந்தச் சங்கத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார். ஒவ்வொரு வாரமும் நூற்ற நூலை திருப்பூர் சங்கத்தில்
கதராடைகளை நெய்வதற்குக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்று வந்து உறுப்பினர்களுக்குப்
பிரித்துக்கொடுக்கும் பொறுப்பை வெங்கடாசலமே ஏற்றுக்கொண்டார். ஒருசில மாதங்களிலேயே சங்கம்
பெரிதாக வளர்ந்தது. ஆசனம்பட்டு, காங்குப்பம், வேப்பனேரி, பசுமாத்தூர், கவசம்பட்டு,
குடியாத்தம் என பல ஊரிகளில் கிளைகள் தொடங்கப்பட்டன. உறுப்பினர்கள் பயன்படுத்த மேலும்
இராட்டைகள் தேவைப்பட்டன அதனால் வெங்கடாசலம் நெருங்கிய நண்பர்களிடம் பணம் திரட்டி ஆயிரம் இராட்டைகள் வாங்கி அனைத்துக் கிளைகளையும்
சார்ந்த எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கி உதவினார். வறுமை நிலையிலிருந்து மீண்ட பல
குடும்பங்கள் சொந்தக் காலில் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கின.
1937இல் சென்னை மாகாணத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் இராஜாஜியின்
தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. காங்கிரஸ் எண்ணற்ற புதிய தொண்டர்களைத் தன்பால் ஈர்த்தது.
இதனால் மக்களிடையே கதராடைகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. நூலுக்கான தேவையும்
மதிப்பும் பெருகின. சர்க்கா சங்கத்தில் இணைந்திருந்த குடும்பங்கள் தன்னிறைவுடன் வாழ்ந்தன.
மதுவிலக்குச்சட்டம், ஆலய நுழைவுச்சட்டம் என மக்களுக்குப் பயனளிக்கும் பல சட்டங்கள்
அடுத்தடுத்து நிறைவேறின. எதிர்பாராத விதமாக 03.09.1939 அன்று இரண்டாம் உலகப்போர் மூண்டது.
காங்கிரஸ் கட்சியையோ, அமைச்சர்களையோ கலந்தாலோசிக்காமல் பிரிட்டனுக்காக இந்தியாவும்
போரில் கலந்துகொள்ளும் என தன்னிச்சையாக பிரிட்டன் அரசு அறிவித்தது. இந்த எதேச்சிகாரப்போக்கைக்
கண்டித்த காங்கிரஸ் இப்போரில் கலந்துகொள்வதன் மூலம் இந்தியா தன் மனித ஆற்றலை வீணடிக்காது
என எதிர்ப்பு தெரிவித்துவிட்டு ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகியது. ஆங்கில அரசின் போக்கைக் கண்டிக்கும் விதமாக 1940இல்
காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளும் ஆவலில் தலைமைக்கு
முறையான விண்ணப்பத்தை அளித்து அனுமதியைப் பெற்ற வெங்கடாசலம் தன் நண்பர்களோடு தன் கிராமத்திலிருந்து
சென்னையை நோக்கி நடந்து சென்றார். திருவள்ளூரைக் கடந்து செல்லும்போது, ஒரு மரத்தடியில்
நின்றிருந்த காவலர் மரியாதைக்குறைவாக சிட்டிகை போட்டு அழைத்தார். வெங்கடாசலமும் அவர்
நண்பர்களும் கேட்டும் கேட்காததைப்போல சென்றுகொண்டே இருந்தனர். அந்தச் செயல் அந்தக் காவலரை
வெகுவாகச் சீண்டியது. உடனே அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று
அடித்துத் துன்புறுத்தினார். வெங்கடாசலத்தின் ஆடைகளைப் பிடுங்கிக்கொண்டு பிறந்தமேனியாக
அன்றைய இரவு முழுதும் அறைக்குள் நிற்கவைத்து கொடுமைப்படுத்தினார். மறுநாள் காலையில்
அவர்களை விசாரித்த நீதிபதி திருவள்ளூரிலேயே 29 நாட்கள் சிறையில் வைத்திருக்கும்படி
தீர்ப்பளித்தார்.
தண்டனைக்காலம்
முடிவடைந்து வெளியே வந்ததும் வெங்கடாசலம் சற்றும் மனம் தளராமல் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு
சென்னைக்குச் செல்லும் பயணத்தைத் தொடர்ந்தார். அங்கு பொதுமக்களுக்கு நடுவில் நின்று
போர் எதிர்ப்புப் பிரசுரத்தை உரத்த குரலில் படித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்.
அவருடைய நண்பர்கள் அவர் சொன்ன சொற்களை மனத்தில் வாங்கித் திருப்பிச் சொன்னார்கள். அன்று
மாலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு மாத காலம் சென்னை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இச்சிறைவாசத்தின் போது வெங்கடாசலத்துக்கு மோகன் குமாரமங்கலம், ஏ.கே.சந்திரசேகர் முதலியார்,
ஆதம்பாக்கம் கிருஷ்ண ஐயர் ஆகியோரின் நட்பு கிடைத்தது.
1942இல்
காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு
ஆகாகான் மாளிகையில் ஓர் அறையில் சிறைவைக்கப்பட்டார். நேருவும் மற்ற தலைவர்களும் கைது
செய்யப்பட்டு எங்கெங்கோ சிறையில் வைக்கப்பட்டனர். இயக்கத்தை வழிநடத்த தலைவர்கள் யாரும்
வெளியே இல்லாத சூழலில் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினர். தலைமறைவாக இருந்துகொண்டு
ரயில்களைக் கவிழ்த்தல், அஞ்சல் நிலையங்களைக் கொளுத்துதல், தந்திக்கம்பிகளைத் துண்டித்தல்,
கட்டடங்களுக்குத் தீ வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். காந்தியடிகள் வலியுறுத்திய
அகிம்சைக்குப் புறம்பாக ஒரே நாளில் அவர்கள் மாறிவிட்டனர். துரதிருஷ்டவசமாக வெங்கடாசலமும்
அவர்களில் ஒருவராக இருந்தார். காவனூரில் இரயில்கள் நிறுத்தப்பட்டன. கே.வி.குப்பம் காவல்நிலையத்திலிருந்து
துப்பாக்கிகளை எடுத்துச் சென்று எங்கோ கண்மறைவாக வீசினர். தந்திக்கம்பிகள் துண்டிக்கப்பட்டன.
இந்தச் செயல்களின் பின்னணியில் வெங்கடாசலத்துக்கும் பங்கு இருக்கிறது என உய்த்துணர்ந்த
காவலர்கள் அவருடைய வீட்டுக்கே சென்று எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். அகிம்சை வழியிலிருந்து
பிறழ்ந்துசெல்லும் மகனுடைய நடவடிக்கைகளைக் கண்டு மனம் குமுறினார் ரங்கசாமி. வெங்கடாசலம்
மறைந்திருந்த இடத்தைப்பற்றிய துப்பு கிடைத்ததும், அந்த இடத்துக்கே சென்று வெங்கடாசலத்தைச்
சந்தித்து அறிவுரை வழங்கி அகிம்சை வழிக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். தவறை
உணர்ந்த வெங்கடாசலம் நேரிடையாக காவல்நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். அவருக்கு
மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அச்சிறைவாசத்தில் அவரோடு சிறையில் இருந்த
தலைவர்களான காமராஜர், சத்தியமூர்த்தி, என்.எம்.ஆர்.சுப்பராயம், அவினாசிலிங்கம் செட்டியார்,
இராஜாஜி, வைத்தியநாத ஐயர் என பல முக்கியமான தலைவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு
கிடைத்தது.
1945இல்
சிறையிலிருந்து விடுதலை பெற்று வீட்டுக்குத் திரும்பிய வெங்கடாசலம் சர்க்கா சங்கத்திலேயே
தொடர்ந்து தொண்டாற்றிவந்தார். மாநில சுயாட்சி
முறையை ஏற்றுக்கொண்ட ஆங்கில அரசு 1946இல் தேர்தலை
அறிவித்தது. வெங்கடாசலத்தை தேர்தலில் போட்டியிடுமாறு காமராஜர் கேட்டுக்கொண்டார். ஆயினும்
ஆட்சி வர்க்கத்துடன் கலக்க விரும்பாத வெங்கடாசலம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.
காந்திய வழியில் எளிய மக்களுக்கு சேவையாற்றுவதிலேயே அவர் மனம் நிறைவை அடைந்தது.
பெரிய
கிராமமான கே.வி.குப்பம் ஊரில் ஊராட்சி மன்றம் செயல்பட ஓர் அலுவலகம் இல்லாதது பெருங்குறையாக
இருந்தது. அந்தத் தேவையைப்பற்றி காமராஜரிடம் தெரிவித்தார் வெங்கடாசலம். அலுவலகம் கட்டத்
தேவையான இடம் கிட்டாததால்தான் அந்தத் திட்டம் செயல்வடிவம் பெறாமலேயே இருக்கிறது என்பதை
விசாரித்துத் தெரிந்துகொண்ட காமராஜர், அச்செய்தியை வெங்கடாசலத்துக்குத் தெரிவித்தார்.
உடனே வெங்கடாசலம் காமராஜரைச் சந்தித்து, தனக்குச் சொந்தமான நிலத்தை அந்த அலுவலகத்துக்காக
எழுதிக் கொடுப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு வேலைகள் வேகவேகமாக நடைபெற்று, கே.வி.குப்பம்
ஊராட்சிமன்றக் கட்டடம் எழுந்து நின்றது.
இலட்சியப்பாதையில்
நடப்பது எளிதான செயலன்று. அதற்காக பாடுபட்டு உழைப்பவர்களுக்கு தீவிரமான அர்ப்பணிப்புணர்வு
இருக்கவேண்டும். எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடாதபடி அமைதியுடன் இருக்கப் பழகியிருக்கவேண்டும்.
ஆழ்ந்து சிந்தித்து செயல்படவேண்டும். பிழை செய்கிறவர்களை வெறுத்து ஒதுக்காமல் திருத்தி
அரவணைத்துச் செல்லும் மனப்போக்கு இருக்கவேண்டும். இத்தகு அனைத்துக் குணங்களும் கொண்டவராக
நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த வெங்கடாசலம் இறுதிமூச்சு வரை மானுடசேவைக்காகவே வாழ்ந்தார்.
(சர்வோதயம் மலர்கிறது – ஏப்ரல்
2022)