Home

Sunday, 29 May 2022

அழிவின் சித்திரம்

 

கடந்த நூற்றாண்டின் முப்பதுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாடானைக்குக் கிழக்கே வலையக்குடிகள் வாழ்ந்த காட்டுப்பகுதியான பண்ணவயல் என்னும் சிற்றூருக்கு உழைப்புக்குத் தயங்காத பொய்யார் என்னும் பெயருடைய இளைஞரொருவர் குடியேறினார். கள்ளிக்காட்டையும் கருவேலங்காட்டையும் அழித்து தன் உழைப்பால் மண்ணை உயிர்பெறச் செய்தார். அவருடைய கொடிவழியினர் அனவரையும் அந்த ஊருக்கு வரவழைத்தார். அவரால் பண்ணவயல் செழித்தது. அவர் குடும்பமும் செழித்து ஓங்கியது. தக்க பருவத்தில் தன்னைப்போலவே உழைப்புக்குப் பின்வாங்காத பெண்ணைப் பார்த்து மணம்புரிந்துகொண்டார் பொய்யார். அவருக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களானார்கள். படித்த பிள்ளைகள் பண்ணவயலைவிட்டு வெளியேறி அருகிலிருக்கும் நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றார்கள். படிப்பில் நாட்டமின்றி பெற்றோருடன் விவசாயத்தைமட்டுமே பழகியவர்கள் பண்ணவயலிலேயே தங்கி அப்பாவுக்குத் துணையாக பயிர்த்தொழிலிலேயே ஈடுபட்டனர்.

அந்த இரண்டாம் தலைமுறையினருக்கு மூன்றாம் தலைமுறையினர் பிள்ளைகளாகப் பிறந்தபோது பண்ணவயலில் விவசாயத்தின் நடைமுறை மாறிவிட்டது. அதுவரை வாழ்க்கையாக இருந்த விவசாயம் ஒரு தொழிலாக மாறியது. அந்த அணுகுமுறை கொஞ்சம்கொஞ்சமாக நிலத்தை அழித்தது. விவசாயத்தையே நம்பியிருந்த குடும்பங்களையும் அழித்தது. மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த துரைசாமி என்னும் இளைஞன் மனம் பேதலித்து நாடோடியாக ஊரைவிட்டே வெளியேறிவிட்டான். பண்ணவயலுக்குப் பெருமை சேர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு பண்ணவயலில் வாழ வழியில்லாமல் போய்விட்டது. மூன்று தலைமுறைக் காலத்துக்குள் நாடோடியாகத் தொடங்கிய ஒரு வாழ்க்கை நாடோடியாகவே முடிவடைந்துவிடுகிறது. பண்ணவயல் என்னும் அச்சிற்றூரின் பெயரிலேயே, அந்த மூன்று தலைமுறை வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார் துரை.அறிவழகன். ஒரு புரிதலுக்காக, நாவலின் கதையமைப்பை ஒரு கோட்டோவியமாக இப்படி நான் சொன்னாலும், நாவல் இப்படி நேர்க்கோட்டின் அமைப்பில்  எழுதப்படவில்லை. காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி, சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி, சொல்லாத பல மெளனங்களோடு நாவலை எழுதியிருக்கிறார் அறிவழகன்.

விவசாயம் சார்ந்த பல நுண்தகவல்கள் நாவலில் வந்தபடி இருக்கின்றன. கலப்பையால் உழும் காலம், விதைக்கும் காலம், பயிர் முளைவிடும் காலம், விளைச்சல் விளைந்து நிற்கும் காலம், அறுவடை நிகழும் காலம், பயிர்களின்றி வெட்டவெளியாக நிற்கும் காலம் என ஒவ்வொரு காலத்திலும் நிலத்திலிருந்து எழும் மணத்தை ஆழ்ந்த லயிப்புடன் அறிவழகன் எழுதியிருக்கும் சிறுசிறு குறிப்புகள் கவித்துவத்துடன் உள்ளன. அவருடைய  விவசாய ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது.

அறுவடை ஓய்ந்த நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் சித்திரம் நாவலில் விரிவாகவே இடம்பெற்றிருக்கிறது.  அது நிலத்துக்குத் தேவையான இயற்கை உரத்துக்கு வழிவகுக்கிறது. மற்றொரு புறத்தில் வெவ்வேறு சமூகத்தினரிடையே நல்லுறவு பேணவும் வழிவகுக்கிறது.  ஒவ்வொரு பருவத்துக்கும் வந்து கிடைபோடும் கிட்ணன் ஒவ்வொரு முறையும் தன் ஆடுகளின் கழிவுகளால் உரம்பெறும் மண்ணில் பயிர் விளைந்து நிற்கிற காட்சியைப் பார்க்க விழைவதையும் ஒவ்வொரு முறையும் அதற்குரிய வாய்ப்பு அமையாமல் போவதையும் குறிப்பிடுவது கவித்துவம் நிறைந்த ஒரு காட்சி. அந்த வரியை யாரும் புன்னகையின்றி படித்துவிட்டு கடந்துவிட முடியாது.

கிடைபோடும் விவசாயம் என்னும் சங்கிலித்தொடர் நாற்று நட வருபவர்கள், களையெடுக்க வருபவர்கள், அறுவடை செய்ய வருபவர்கள் என எண்ணற்றோரை இணைத்து ஒரு கூட்டுச்சமூகமாக மலரவைக்கிறது. விவசாயத்தின் இயங்குமுறை மாறியபோது முதலில் பலியானது இந்தச் சமூகத்தின் கூட்டமைப்புதான். கூட்டை உடைத்து ஒவ்வொருவரையும் அது தனி ஆளாக மாற்றி ஒவ்வொரு திசையை நோக்கித் தள்ளிவிட்டது. இறுதியில் உதிரிகளின் சமூகமாக நிறுத்திவிட்டது. நாவலில் பொய்யார் ஒரு  கூட்டுச்சமூகத்தின் அடையாளமாக மாறிநிற்க, துரைசாமி உதிரிச்சமூகத்தின் அடையாளமாக எஞ்சுகிறான்.

அறிவழகன் தன் நாவலின் வரைபடத்தை பண்ணவயலோடு சுருக்கிக்கொள்ளவில்லை. அங்கிருந்து இந்தியாவின் வடகோடியில் உள்ள தனுஷ்கோடியையும் இலங்கையின் வடகோடியில் அமைந்த நகரங்களையும் இணைத்துக்கொண்டு நீண்டு செல்கிறது. பொய்யாரின் மனைவிவழி சொந்தங்கள் யாழ்ப்பாணத்தில் மீன் மார்க்கெட் நடத்துபவராகவும் கொழும்பில் தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்பவராகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ நினைக்கும் பொய்யார்  தனுஷ்கோடியில் வசிக்கும்  ஒரு மீனவக்குடும்பம் வழியாக மீன்களை ஒவ்வொரு நாளும் படகுகள் வழியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். அந்த வணிகநிமித்தமாக தனுஷ்கோடிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அடிக்கடி அவர் பயணம் செய்யவேண்டியிருக்கிறது. இருப்பினும் அவர் மனத்தில் பண்ணவயலிலேயே நிறைந்திருக்கிறது.

ஒரு முப்பதாண்டு காலம் அவருடைய வாழ்க்கை உயர்வை நோக்கிய பயணமாகவே அமைகிறது. தனுஷ்கோடிப் பயணத்தின் விளைவாக பசுவதி என்னும் இளம்பெண்ணுடன் உருவான புதிய நெருக்கம் அவருடைய நெஞ்சுக்கு இனிமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அறுபதுகளின் நடுவில் வங்கக்கடலில் எழுந்த புயல் சீற்றத்தின் விளைவாக இலங்கையின் வடபகுதியும் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த தனுஷ்கோடியும் சிதைந்துவிடுகின்றன. இலங்கையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி வல்லங்களும் கணக்கிலடங்காத உயிர்களும் அழிந்துவிடுகின்றன. உயிரோடு இருந்தவர்களின் நெஞ்சை அது உடைமுள்ளாகக் குத்திப் புண்படுத்தியது. தனுஷ்கோடியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் கடலுக்கு இரையாகிறார்கள். பள்ளிக்கூடம், தேவாலயம், புகைவண்டி நிலையம் என எண்ணற்ற கட்டடங்கள் சிதைந்து அழிகின்றன. ஒரு முழுநீள புகைவண்டிப் பெட்டிகளையே கடலலைகள் இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றன. காந்தமதனா பருவதம், ஆதாம் பாலம், அரியமான் கடற்கரை என மக்கள் விரும்பிய பல இடங்கள் மறைந்துவிடுகின்றன. மீன் ஏற்றுமதி ஒப்பந்தம் செய்துகொண்ட நம்பிநாரியும் பொய்யாரின் மனத்தை நிறைத்த பசுவதியும் தனுஷ்கோடியின் புயலிலிருந்து தப்பிவிடுகின்றனர் என்றபோதும் சித்தம் கலங்கி அடுத்து என்ன செய்வது என்று தோன்றாமல் செயலிழ்ந்து நின்றுவிடுகின்றனர். அவர்களைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவுக்கு வேறுவிதமான சொந்தத் துயரங்களில் மூழ்கியிருக்கிறார் பொய்யார்.

தனுஷ்கோடி புயல் மூலமாக பொய்யாரின் வாழ்வில் உருவாகத் தொடங்கிய அழிவின் சித்திரம், அதற்குப்பிறகு சிறுகச்சிறுக வளர்ந்துகொண்டே போகிறது. ஆட்டுக்கிடைகளின் வருகை நின்றபோது இயற்கை உரங்களின் பயன்பாடு குறைந்துபோகிறது. மெல்ல மெல்ல கடைகளில் விற்கும் உரங்கள் மண்ணோடு கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக மண்ணின் வளத்தை வற்றச் செய்கின்றன. ஆறுகளில் நீர்வரத்து குறைந்து ஒடுங்கி நூல்போல ஓடத் தொடங்குகிறது. மண் வறண்டு வளங்குன்றியதும் பனைமரங்களில் காய்ப்பு நின்றுவிடுகிறது. அரசு சட்டத்தின் விளைவாக கள் இறக்கும் தொழிலை பலரும் கைவிட்டு வேறு தொழிலை நாடிச் செல்லத் தொடங்குகின்றனர். கள்ளுக்கடை முதலாளிகள் சூளை முதலாளிகளாக மாறுகின்றர். காய்ப்பு நின்ற பனைமரங்களை பணம் கொடுத்து வாங்கி வெட்டி அறுத்து சூளையை எரிக்கப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இருபதாண்டுகள் கழித்து இலங்கையில் எண்பதுகளின் தொடக்கத்தில்  தொடங்கிய இனக்கலவரம் எண்ணற்றோரின் உயிரைப் பலிவாங்குகிறது. அங்கேயே பிறந்த, அங்கேயே வளர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு மறைகின்றனர். பண்ணவயலிலும் விவசாயம் இல்லாமல் பல குடும்பங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறத் தொடங்குகின்றன.  தண்ணீர் வரத்து இல்லாமல் கால்வாய்கள் வறண்டுவிடுகின்றன. பூமி வானம் பார்த்து நிற்கிறது. எங்கெங்கும் சிள்வண்டுகளின் ரீங்காரம் மட்டும் ஒலித்தபடி இருக்கிறது. புல்வெளியெல்லாம் அழிந்து எங்கெங்கும் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்கின்றன. முதன்முதலாக பண்ணவயலுக்குள் பொய்யார் காலடி எடுத்துவைத்தபோது எப்படி காட்சியளித்ததோ, அதே தோற்றத்துக்கு ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் திரும்புகிறது. அப்படி ஒரு வரலாறு மீண்டும் நிகழும் என அவர் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ஆனாலும் அது அப்படித்தான் நிகழ்கிறது. பல மரங்கள் உலர்ந்து காற்றில் சாய்கின்றன.  தெருவையே அடைத்தபடி ஓங்கி வளர்ந்திருந்த ஓர் அரசமரம்  எதிர்பாராமல் வீசிய ஒரு காற்றின் வேகத்துக்குத் தாக்குப்பிடித்து நிற்கமுடியாமல் சரிந்து விழுகிறது. அதே தினத்தில் பொய்யாரும் இந்த உலகத்தைவிட்டு மறைகிறார்.

அழிவின் சித்திரங்களால் நிறைந்துவிட்ட நாவலில் இடம்பெற்றிருக்கும் பல மாந்தர்களைப்பற்றிய நினைவுகள், நாவலை வாசித்த பிறகும் நம் நெஞ்சில் நீடிக்கின்றன. அந்த அளவுக்கு ஒவ்வொரு சித்திரமும் உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

வெள்ளையாபுரத்திலிருந்து முன்னூறு ஆடுகளையும் அவற்றுக்குக் காவலாக இராஜபாளையத்து நாயையும் ஓட்டிக்கொண்டு வரும் கீதாரி கிட்ணன் முக்கியமான பாத்திரம். ஆட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் உள்ள பொருளை நுட்பமாக உணர்ந்துகொள்ளும் அவருடைய அறிவாற்றல் வியக்கவைக்கிறது. பொய்யாரின் குலதெய்வ வழிபாட்டுக்கு தன்னுடைய கிடாவொன்றை வழங்கும் அவருடைய பெருந்தன்மையும் நட்புணர்வும் நெகிழவைக்கிறது.

கிடையாடுகள் வருவதற்கு முன்னாலேயே வெள்ளாடுகளுக்கு ஒரு கூடாரம் செம்மறி ஆடுகளுக்கு ஒரு கூடாரம் கருசுமந்த ஆடுகளுக்கு ஒரு கூடாரம், குட்டியீன்ற ஆடுகளுக்கு ஒரு கூடாரம் என பார்த்துப் பார்த்து கூடாரங்களைக் கட்டிவைக்கும் கரையான் பாத்திரம் நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பொய்யாரின் வலதுகரம் போல செயல்படும் இப்பாத்திரத்தின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும் நம்பிக்கையும் ஆழ்ந்த அன்பிலிருந்து பிறப்பதை நாவலை வாசிக்கும் போக்கில் நம்மால் புரிந்துகொள்ள முடியும்

கரையானின் இளமைக்காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியாக தனியொரு அத்தியாயம் தைலம்மாவின் கதை என்னும் தலைப்பின் கீழ் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. தனியொரு சிறுகதையைப்போலவே கருதத்தக்க அளவுக்கு இப்பகுதி அமைந்துள்ளது. பாலபருவத்தில் தன் சொந்த ஊரான கீழத்துவாலையில் குருவிகளின் பின்னால் கூடுகளைத் தேடித்தேடி அலைகிற கரையானையும் அவன் மீது கொண்ட அன்பினால் அவன் அழைத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லும் தைலம்மாவையும் நாம் அப்பகுதியில் அறிந்துகொள்ள முடியும். தெய்வம் குடியிருக்கும் மரம் என்று நம்பப்படுகிற ஒரு மரத்திலேறி, அம்மரத்திலிருக்கும் கூட்டிலிருந்து முட்டைகளை எடுத்துவந்து சுட்டுத் தின்கிறான். அவனுக்குப் பின்னாலேயே அலையும் தைலம்மாவும் அவனோடு பங்குபோட்டுக்கொண்டு அந்த முட்டைகளைத் தின்கிறாள். சில நாட்களுக்குப் பிறகு பருவமடைந்த தைலம்மாள் தீராத வயிற்றுவலியால் துன்பப்படுகிறாள். அந்த வலிக்கு தெய்வம் குடியிருக்கும் மரத்தில் கூடு கட்டியிருக்கும் குருவியின் முட்டையைத் தின்றதுதான் காரணம் என குறிபார்த்துச் சொல்கிறாள் ஊர்க்கிழவி. கரையானுடன் கூட்டு சேர்ந்ததற்காக தைலம்மாவை வசைபாடுகிறது குடும்பம். ஊர்க்கிழவியின் ஆலோசனையைக் கேட்டு, மரத்தில் குடியிருக்கும் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு படையல் போட்டு ஆறுதல் அடைகிறார்கள் அவர்கள். வலியால் துடித்த தைலம்மாவின் முகத்தைப் பார்க்க மனம் பொறுக்காமல் கீழத்தூவல் கிராமத்தையே விட்டு வெளியேறி பண்ணவயலில் குடியேறி பொய்யாரின் குடும்பத்தோடு சேர்ந்துகொள்கிறான் கரையான். ஒரு காவியப்பாத்திரத்தைப்போல வாசிப்பவர்களின் நினைவில் படிந்துவிடுகிறாள் தைலம்மா.

கூடைக்குள் பதனீர் பானையையும் இடையிடையில் கள்ளு மொந்தைகளையும் மறைத்துவைத்து சுமந்துவந்து வயற்காட்டில் வேலை செய்பவர்களிடம் விற்றுவிட்டுச் செல்லும் செகப்பியின் சித்திரம் புதுமையானது.

மனைவி, மகள், மருமகன் அனைவரையும் கடலுக்குப் பலியாகக் கொடுத்துவிட்டு பேத்தியோடு வாழ்கிற கூனனைப்பற்றிய சித்தரிப்பைப் படிக்கும்போது ‘கடலும் கிழவனும்’ நாவலில் வரும் சாண்டியாகோ கிழவனின் நினைவும் வருகிறது. அவனைப்போலவே மன உறுதி கொண்டவன் கூனன். பேத்தியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கடலுக்குள் மூன்று நாள்கள் பயணம் செய்து முத்துச்சிப்பிகளைக் கொண்டுவரும் அவனுடைய சாகசப்பயணம் மனத்தில் பதிந்துவிடுகிறது.

பொய்யாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்களை முன்வைக்கும் போக்கில் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த பல மனிதர்களின் வாழ்க்கைச்சித்திரங்களையும் இணைத்துத் தொகுத்து எழுதியிருக்கிறார் அறிவழகன். அனைவரும் அவருக்கு இணையாக வைத்து கருதத்தக்கவர்களே. அனைவருக்கும் அவரவர்க்கே உரிய தனி வாழ்க்கை என ஒன்றிருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் பொய்யாருடன் இணைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தால் விளைந்த அழிவுக்கும் பொய்யாரின் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து மெல்ல மெல்ல சரிந்ததற்கும் ஏதோ ஒரு விதத்தில் சாட்சிகளாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது.  

ஒரு பழைய வழக்குக்குத் தொடர்புடைய ஆவணங்களை முடிந்த அளவுக்கு தேடியெடுத்துத் தொகுத்து, அந்த வழக்குக்கு ஒரு முகத்தைக் கொடுப்பதுபோல அறிவழகன் தீட்டிக் காட்டியிருக்கும் பண்ணவயலின் சித்திரம் தமிழ்நாவல் உலகத்துக்கு ஒரு முக்கியமான வரவு.

 

(பண்ணவயல். துரை.அறிவழகன். நாவல். அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞாவூர் -613007. விலை. ரூ.200)

 

(புக் டே – 23.05.2022)