என் கையில் அபிஷேகக்கூடை இருந்தது. கடையிலிருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித்திருப்பி ரசித்துக்கொண்டிருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வரும்போதெல்லாம் பொம்மைக்கடைகளில் நிற்பதும் வேடிக்கை பார்ப்பதும் பழகிவிட்டது. எடுப்பாள். ரசித்துப் பார்ப்பாள். விலைகேட்பாள். பிறகு ஒரு பெருமூச்சோடும் கசந்துபோன புன்னகையோடும் வைத்துவிடுவாள். ”வாங்கு அண்ணி” என்று நானும் பல முறை தூண்டிப் பார்த்துவிட்டேன். ”ஐயையோ, அதெல்லாம் வேணாம், வா” என்று வேகமாக தலையாட்டி மறுத்துவிடுவாள். ”இதுக்கெல்லாம் செலவாச்சின்னு கணக்கெழுதனேன்னு வை, ஒங்கண்ணன் அப்படியே உரிச்சி தொங்கபோட்டுட்டுதான் மறுவேல பாப்பாரு” என்று சொல்லும்போது பதற்றத்தில் அவள் தலை இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடும்.
தலையில் மயிலிறகோடு சிரித்துக்கொண்டிருந்தது குழந்தைக்கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப்போல பொம்மைக்கண்களில் ஈரம் ததும்பியிருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப்போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. வீசிக் கொண்டிருந்த காற்றில் கன்னத்தில் உரசியபடி நெளிந்து சுருளும் முடியைக் காதோரமாக ஒதுக்கியபடி “இந்த பொம்ம எவ்வளோ அழகா இருக்கு பாருடா தண்டபானி”
என்று என்னிடமும் காட்டினாள்.
”எடுத்துக்கோ தாயி, பத்து ரூபாதான். ரெண்டா எடுத்துகினு பதினெட்டு குடு” தள்ளுவண்டிக்
கடைக்காரர் இன்னொரு மூலையில் படுத்தவாக்கில் இருந்த பிள்ளையார் பொம்மையை உட்காரவைத்து, துடைத்தபடியே சொன்னதைக் கேட்டதுமே உதட்டைப் பிதுக்கியபடி பொம்மையை வைத்துவிட்டாள் அண்ணி. “பத்து ரூபாயா?” பட்டும் படாமல் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பொம்மைக்காரர் பார்வையைத் திருப்பினார்.
”தவளகுப்பத்திலேருந்து வண்டிய வெயில்ல தள்ளிகினு வரம்மா. பத்து ரூபாய்க்கு கூட விக்கலைன்னா நான் எப்படி பொழைக்கறது சொல்லு?”
அண்ணி இப்படி ஒரு பதில்கேள்வியை கடைக்காரரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. சங்கடத்தோடு நெளிந்தபடி சில கணங்கள் நின்றிருந்தாள். என் தோள்களில் அவள் விரல்கள் கொடுத்த அழுத்தத்திலிருந்து அவள் அடைந்த பதற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
”எவ்ளோதான் குடுப்ப சொல்லும்மா”
“இருக்கட்டும் கடக்கார, இன்னொரு நாளைக்கு வரேன்” என்றபடி திரும்பிவிட்டாள் அண்ணி. ‘எந்த வெலையில வேணுமின்னு சொன்னா, அதுக்கு தகுந்தாப்புல காட்டுவன்” என்ற கடைக்காரரின் சொற்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் நடக்கத் தொடங்கினோம். அண்ணியின் முகத்தில் படர்ந்திருந்த வெளிச்சம் சட்டென்று வடிந்துவிட்டது. சிறிது தொலைவு நடந்து, இலவசப் பாதுகாப்பகத்திலிருந்து காலணிகளை வாங்கி அணிந்துகொண்டோம். “எட்டு ரூபாய்க்கு பேசி வாங்கிடலாம்ண்ணி” என்று நான் சொன்னதுகூட அவள் காதில் விழவில்லை. அப்படியே அமைதியில் ஆழ்ந்துவிட்டாள். பேச்சே இல்லாமல் கூட்டத்தையே வேடிக்கை பார்த்தபடி நடந்தாள். கோயில் தெருவைத் தாண்டி, பூக்காரத் தெருவைக் கடந்து, ஐயனார் குளத்தை நெருங்கியபோது இயல்பாகிவிட்டிருந்தாள். விலகிபோயிருந்த துடிப்பும் அழகும் மீண்டும் படிந்து அவள் முகத்தில் சுடர்விட்டன. கலகலப்பான கேள்விகளால் என்னை அந்தச் சம்பவத்தையே மறக்கவைத்துவிட்டாள்.
அண்ணனைத் திருமணம் செய்துகொண்டு வந்த தினத்திலிருந்தே விருப்பங்களையெல்லாம் மென்று விழுங்கும் கலையில் அண்ணி நல்ல தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு எழுதிவைத்துக் காட்டத் தூண்டும் அண்ணனின் கட்டாயங்கள், துண்டு விழுகிற பாக்கிக்காக அவர் நிகழ்த்தும் ஆயிரம் குறுக்கு விசாரணை, “சிங்கிள் டீக்கு நாய் பேயா அலஞ்சிருக்கேன் தெரியுமா?” என்று ஆரம்பித்துக் கொட்டுகிற புலம்பல்கள், “அப்பன் பாட்டன் எவனும் எனக்கு சம்பாதிச்சி வச்சிட்டு போவல. ஒவ்வொரு காசயும் நான் லோல்பட்டு லொங்கழிஞ்சி வேர்வய சிந்தி சம்பாதிச்சிது” என்கிற வகையிலான புத்திமதிகளைக் கேட்டுக்கேட்டு அவள் சுருங்கிப் போயிருக்கவேண்டும். அண்ணனின் அன்புமுகம் புதிராக மாறி வெப்பத்தைக் கொட்டும் கணங்கள் அவளையும் உருக்கி உருமாற்றிவிட்டது.
நான் அண்ணியை முதன்முதலாகப் பார்த்தது மூன்று மாதங்களுக்கு முன்னால்தான். அம்மா அப்பாவுக்கு நாங்கள் மொத்தம் பத்துப் பிள்ளைகள். நான் கடைசிப்பையன். வண்டிமாடு இருந்தது. மதகடிப்பட்டு சந்தைக்கும் புதுச்சேரிக்கும் மூட்டைகளை ஏற்றிச் செல்வதும் கொண்டுவருவதுமாக ஒரு காலகட்டம். பட்டினியில்லாமல் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. எங்கெங்கோ ஓடுகிற டெம்போவும் மினிலாரியும் மதகடிப்பட்டுக்கும் வந்தபோது வண்டிமாடு
படுத்துவிட்டது. அப்பா திகைத்து நின்றுவிட்டார். அந்தக் குழப்பத்துக்குப் பிறகு அவர் எடுத்த முடிவுகள் தாறுமாறான விளைவுகளையே உருவாக்கின. வண்டிமாட்டை விற்று பால்மாடு வாங்கினார். அது சரிப்படாதபோது சைக்கிள்கடை வைத்தார். பிறகு பெட்டிக்கடை போட்டார். அப்புறம் தள்ளுவண்டியில் பழங்கள் விற்றார். கிடைத்த வருமானத்தில் ஒருவேளைக் கஞ்சிக்கே திண்டாட்டமாக இருந்தது. அப்போதுதான் தனபால் அண்ணன் புதுச்சேரிக்குப் போனார். மூன்று வருஷ காலம் வீட்டுப்பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லை. இரண்டாவது அண்ணன் திருப்பூர் பக்கம் சென்று ஒரு பனியன் கம்பெனியில் சேர்ந்துவிட்டார். இன்னொரு அண்ணன் எங்கள் ஊருக்கு போர்போட வந்திருந்த ஒரு வடநாட்டு லாரியில் கூட்டத்தோடு கூட்டமாக வண்டியேறிப்
போய்விட்டார். யாருமே ஊர்ப்பக்கம் திரும்பவில்லை. அந்தக் கோபமும் இயலாமையும் ஒன்று சேர்ந்துகொண்டதில் ஒருவர்மீது ஒருவர் பழிசுமத்தி அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டைபோட்டுக் கொண்டார்கள். அந்த ஆங்காரம் அளவுமீறும்போதெல்லாம் நாங்கள் மாறிமாறி அடிபட்டோம்.
ரெட்டியார் வீட்டில் மாட்டுத்தொழுவத்தைச் சுத்தப்படுத்திவிட்டு தூக்குவாளியில் கஞ்சி வாங்கிக்கொண்டு திரும்பிவந்த நாளொன்றில் திண்ணையில் உட்கார்ந்திருந்தவரைக் கண்டு முதலில் மிரண்டுபோனேன். படிய வாரிய தலை. மீசை. வெளுத்த ஆடை. சீருடை இல்லாமல் வந்த ஒரு போலீஸ்காரரின் தோற்றம். முதல்கணம் குழம்பி, பிறகு பின்வாங்கி மரத்தடியின் பக்கமாகப் போனேன். இருட்டுமூலையிலிருந்து வெளிப்பட்ட அம்மா சிரித்துக்கொண்டே “டேய் தண்டபானி, நில்லுடா. அண்ணன்டா, ஏன் பயப்படற, வா” என்று இழுத்து நிறுத்தினாள். வேகமாக ஓடி அம்மாவின் முதுகுப்பக்கமாக மறைந்தபடி எட்டிப் பார்த்தேன். “ஒன்ன பாத்து ரொம்ப பயப்படறான்டா” என்றாள் அம்மா.
“வாடா இங்க” அண்ணன் கையை நீட்டி என்னை அழைத்தார். நான் தயக்கத்தோடு அவரருகே சென்றேன். அவர் தன் பையிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்தார். அதை வாங்கிய பிறகு என் மனத்தில் தெம்பு பிறந்தது.
“என்னடா வாளியில?”
”சோறு.”
அதற்குமேல் அண்ணன் ஒன்றும் கேட்கவில்லை. அம்மாவை நிமிர்ந்து பார்த்தார். கூடத்தில் இலை தைத்தபடி உட்கார்ந்திருந்த அக்காக்களையும் பார்த்தார். பிறகு மெளனமாக எழுந்து வெளியே போனார். ஒரு மணிநேரத்துக்குப் பிறகு ஒரு வாடகை சைக்கிளில் அரைமூட்டை அரிசி கொண்டுவந்து இறக்கினார். அப்புறம் அம்மாவிடம், “மாசாமாசம் அரமூட்ட அரிசிக்கு நான் ஏற்பாடு பண்றேன். பசங்கள பசியில்லாம பாத்துக்கோ. சிக்கனமா குடும்பம் நடத்து” என்றார்.
ஒரு வருஷம் கழித்து அண்ணன் திருமணம் நடந்தது. அவரே பார்த்துப் பேசி முடித்துக்கொண்டார். மணக்குள விநாயகர் கோயிலில் திருமணம். எங்களையெல்லாம் பஸ்ஸில் அழைத்துச் சென்றார் அம்மா. பிரயாணம் முழுக்க அப்பா அண்ணனைத் திட்டிக்கொண்டே வந்தார். “சரியான கஞ்சப்பையன்டி ஒன் புள்ள. சாதி சனத்த உட்டுட்டு அனாதயாட்டமா கோயில்ல
தாலி கட்டறான் பாரு. செலவுக்கு பால்மார்றான்டி” அம்மாவும் பேச்சுக்குப் பேச்சு பதில் சொன்னபடி வந்தார். “அவ்வளோ சமுத்தும் வக்கும் இருக்கற ஆளா இருந்தா நீ முன்னால நின்னு செய்யறதான? ஒன் கைய புடிச்சி யாரு தடுத்தா? என்னமோ அவன் கஷ்டம் அவனுக்கு. அதயெல்லாம் நாம எதுக்கு கிண்டணும்?”
கோயில் வந்தபிறகுதான் இருவரும் அமைதியானார்கள். அண்ணி பக்கத்திலிருந்து பத்து பேர் வந்திருந்தார்கள். தாலி கட்டி முடித்ததும் அண்ணனும் அண்ணியும் எல்லோருடைய கால்களிலும் விழுந்து ஆசி வாங்கினார்கள். கோயில் தெருவில் இருந்த மெஸ்ஸில் எல்லோரும் கல்யாண விருந்து சாப்பிட்டோம். பிறகு ஊருக்குத் திரும்பிச் செல்ல அம்மாவிடம் பணம் கொடுத்து அனுப்பினார் அண்ணன்.
அடுத்த மாதத்தில் அரிசி வாங்கிக் கொடுக்க ஊருக்கு வந்தபோது அண்ணன் தனியாகவே வந்தார். துணிமணிகள் அடங்கிய பெரிய பையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு “எல்லாருக்கும் துணி வாங்கிக் குடுத்தா. வச்சிக்க” என்றார். பிறகு “இதுக்கே ரெண்டாயிரம் ரூபா கரஞ்சி போச்சி” என்று மெதுவாகச் சொன்னார். அம்மா அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
“அவளயும் கையோட கூட்டாரக்கூடாதா? ஒம் மருமவள கண்ணுல காட்டக்கூடாதான்னு அக்கம்பக்கம் உள்ளவங்க கேக்காத நாளே இல்ல. எவ்வளோ நாளுதான் சால்ஜாப்பு சொல்லமுடியும், சொல்லு” துணிமணிகளைப் பிரித்துப் பார்த்தபடியே கேட்டாள் அம்மா.
“சொல்றது சுலபம்மா. செய்யறதுதான் கஷ்டம். வந்து போற செலவுக்கு அவுங்களா பணம் குடுக்க போறாங்க? நாமதான் போடணும்? அப்பறம் நம்ம செலவுக்கு ஓணும்னா பிச்சதான் எடுக்கணும்.” வாசலில்
சைக்கிளைத் துடைத்துக்கொண்டிருந்த அப்பாவைப் பார்த்தபடி சொன்னார் அண்ணன். அப்பா குனிந்த தலை நிமிராமல் “கஞ்சத்தனமா இருந்து என்னத்த வாரிக்கப் போறம்? நாலுபேரு நம்மள பாத்து சந்தோஷப்படவேணாமா?” என்று முணுமுணுத்தார். “வள்ளலா இருந்தாமட்டும் வாரி வீசிடமுடியுமா? போய் வேலய பாருப்பா, இதெல்லாம் ஒரு பேச்சுனு பேச வந்துட்ட? என்று தலைகுனிந்தபடி பதில் சொன்னார் அண்ணன். கிளம்பும்போது அம்மாவிடம் “சின்னவன நான் இட்டும் போறன். அங்க தங்கி படிக்கட்டும். அவளுக்கும் ஒரு தொண வேணுமில்ல? அவன் துணிமணிங்களயெல்லாம் ஒரு பையில போட்டுக் குடு” என்றார். மறுபடியும் படிக்கப் போகிரோம் என்றதுமே எனக்குக் கண்கள் தளும்பின. “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி” என்ற மனப்பாடச் செய்யுள் வரி சட்டென நெஞ்சில் ஓடியது.
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். எனக்கு அந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்திருந்தது. பள்ளியில் இருந்து திரும்பியதுமே எதையாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு அண்ணியோடு பேசியிருப்பதும் பாடம் படித்து அவரிடம் ஒப்பிப்பதும் பிடித்திருந்தன. சுங்கரைக்காய் ஆட்டத்திலும் பல்லாங்குழியிலும் அண்ணியை ஒருநாளும் ஜெயிக்கமுடியாது. படிப்பு வேலை முடிந்தபிறகு பல சுவாரஸ்யமான கதைகளைச் சொன்னாள் அண்ணி.
சம்பாதிப்பதில் ஒரு ரூபாயைக்கூட வீணாகச் செலவுசெய்யக்கூடாது என்பதில் அண்ணன் கறாராக இருந்தார். தினசரிச் செலவுகளையெல்லாம் கணக்கு
எழுதிவைத்து அவருக்குக் காட்ட வேண்டும். துணியலமாரியில் ஒரு பெட்டிக்குள் இரண்டுரூபாய் நோட்டுகளாக சில்லறை மாற்றி நூறு ரூபாய்க்கும் மேல் வைத்திருப்பார். அதிலிருந்துதான் செலவுக்கு எடுக்க வேண்டும். உடனடியாக அதை மறக்காமல் எழுதிவைக்கவேண்டும். இரவு நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியதும் கணக்கு நோட்டைச் சரிபார்ப்பார். கணக்கில் குழப்பமிருந்தால் கோபத்தில் கொதித்துவிடுவார். “என்ன செலவாச்சி? சொல்லு, சொல்லு” என்று குடைந்துகுடைந்து கேட்பார். அந்த வேகத்தையும் கோபத்தையும்
பார்த்ததுமே அண்ணிக்கு பாதி மறதி வந்துவிடும். சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசி, திட்டு வாங்குவாள். அந்தக் கணக்கை நேர்ப்படுத்தும்வரை குத்திக்குத்திப் பேசியபடியே இருப்பான். எழுபத்தைந்து ரூபாய்க்கு ஒரு பாவாடையை எடுத்துவிட்டதற்காக பொங்கியெழுந்து சத்தம் போட்டார் அண்ணன். “இருக்கறதே ரெண்டே ரெண்டுதான். ஓரமெல்லாம் பிஞ்சி இத்துபோச்சி. எத்தினி நாளுதான் ஊக்கு குத்தி கட்டமுடியும்?” என்ற பதிலை அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. “மூக்க சிந்தாதடி கழுத. ஒன்ன வாங்காதன்னு யாரு சொன்னா? உள்ளார கட்டிகிற பாவாடைக்கு ஏன் இவ்வளோ பணம் செலவு செய்யணும்? முப்பது ரூபாய்க்கி ஒன்னுன்னு ஆல வாசல்ல கூவிகூவி விக்கறான் தெரியுமா?” என்று எரிந்து விழுந்தார். அன்று
இரவு முழுக்க அண்ணி அழுதபடியே இருந்தாள். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. வீட்டு நிலை சரியாகி, இயல்பான நிலைக்குத் திரும்ப ஒரு வாரமானது. இந்த வம்பே வேண்டாம் என்று பணத்தையே தொடாமல் இருந்தால் அதற்கும் சலித்துக்கொண்டார் அண்ணன். செலவுக்கணக்கை முன்வைத்து அடிக்கடி வீட்டின் சமநிலை பிசகுவதும் பிறகு சரியாவதும் பருவகால மாற்றங்களைப்போல மாறிமாறி நிகழ்ந்தபடி இருந்தன.
அண்ணன் வீட்டில் தங்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே அந்த நீக்குப்போக்கு புரிந்துவிட்டது. அண்ணியைக் காப்பாற்றும் ஆலோசனைகள் தாமாகவே என் மனத்தில் முளைத்தன. கடைக்குப் போகும்போது, வழியில் கரும்புச்சாறு குடிப்போம். அந்தச் செலவைக் காய்கறிச் செலவில் சேர்த்து எழுதவைத்து அண்ணியைக் காப்பாற்றிவிடுவேன். அண்ணிக்கு அந்தத் திட்டம் மிகவும் பிடித்திருந்தது. பொட்டு, ஹேர்பின், நகபாலீஷ் என அண்ணி தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளவும் அந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நினைவுகளில் அமிழ்ந்தவளைப்போல பேசாமலேயே நடந்துவந்த அண்ணி “அடுத்த வாரமும் அந்த பொம்மகாரன் வருவானில்ல?” என்று கேட்டாள். “அதான் ஒவ்வொரு வாரமும் வந்துகினுதான இருக்கான். நாமளும் ஒவ்வொரு தடவயும் பாத்துகினுதான இருக்கறம்? வராம எங்க போவப்போறான்?” என்று சொன்னேன் நான். “அந்த பொம்ம கண்ணுமுன்னாலயே நிக்கறமாதிரி இருக்குதுடா தண்டபானி” என்று
நாக்கு சப்புக்கொட்டினாள்.
“எனக்கும் ரொம்ப புடிச்சிருக்குதுண்ணி. சாமி மாடத்துல வச்சா எடுப்பா இருக்கும்”
அண்ணி ஒருகணம் நின்று பார்த்தாள். பிறகு, “எடுப்பாதான் இருக்கும். அப்பறம் ஒங்கண்ணன் துடிக்கத்துடிக்க குடுப்பாரே, அத யாரு வாங்கறது?” என்றாள். அவளைமீறி சிரிப்பு வெளிப்பட்டுவிட்டது. கண்களில்
ஈரம் கட்டும்வரை இடைவிடாமல் சிரித்தாள்.
“அப்பறம் எப்படிதாண்ணி காபந்து பண்றது?” குழப்பத்தோடு அவளைப் பார்த்தேன்.
“அவரு பார்வையிலயே படாத எடமா பாத்துதான்டா வைக்கணும். சமையல்கட்டு டப்பாவுக்குள்ள, அரிசி அண்டாவுல, அலமாரிக்குள்ள, பொட்டிக்குள்ளன்னு எங்கனா மறச்சிதான் வைக்கணும்.” என்னைப் பக்கத்தில் இழுத்து தலையைக் கோதிவிட்டாள் அண்ணி. தோள்பக்கத்து சட்டைச் சுருக்கத்தை நீவிநீவிச் சரிப்படுத்தினாள். “பாக்கணும்னு
தோணும்போதுமட்டும் எடுத்து பாத்து ரசிச்சிக்கணும். மத்த நேரத்துல மறச்சிதான் வச்சிக்கணும்”
”தப்பித்தவறி அண்ணன் கண்ணுல பட்டுட்டா?”
“மொதல்ல பொம்ம சுக்குநூறா ஒடஞ்சி உருளும். அப்பறமா நம்ம தல உருளும்….” அண்ணியின் சிரிப்பைப் பார்க்க பாவமாக இருந்தது. அந்த நேரத்தில் எப்படியாவது அண்ணியை அந்தப் பொம்மையை வாங்கிவிடும்படி செய்யவேண்டும் என்று தோன்றியது. “வாண்ணி,
எட்டு ரூபாவுக்கு கேட்டுப் பாக்கலாம். குடுத்தாலும் குடுப்பாரு” என்றபடி அவள் கையைப் பிடித்து இழுத்தேன்.
அண்ணி ஒருகணம் நடையை நிறுத்தினாள். “எட்டு ரூபாய்க்கு என்னடா கணக்கு எழுதமுடியும்?” அவள் குரலில் அச்சமும் ஆவலும் கலந்து வெளிப்பட்டன.
“ஏதாச்சிம் காய் வாங்கணம்ன்னு எழுதலாமா?” நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதை மறுத்தாள் அண்ணி.
“எனக்கு நோட்டு வாங்கிக்குடுத்த வகைன்னு எழுதமுடியாதா?”
“போன வாரம் அவருதானடா ஒனக்கு நோட்டு வாங்கியாந்து குடுத்தாரு. அதுக்குள்ள மறந்துடுவாரா என்ன?”
மாற்றிமாற்றி ஆலோசனைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கும்போதே “துணி தொவைக்கற சோப்பு வாங்கனதா எழுதலாமா?” என்று இழுத்தேன். அந்த ஆலோசனை பொருத்தமாக இருந்தது. அதற்குப் பிறகுதான் கிளம்பியபோதிருந்த பிரகாசத்தை மீண்டும் அண்ணியின் முகத்தில் பார்க்கமுடிந்தது. கடையை நோக்கி தைரியமாகத் திரும்பி நடந்தோம்.
டீ கிளாஸை உறிஞ்சியபடி “தெரியும், தெரியும், நீங்க வருவிங்கன்னு தெரியும்” என்று சிரித்தார் கடைக்காரர். ஏதோ சொந்தக்காரர்களைப் பார்த்துச் சிரிப்பதுபோலச் சிரித்தார்.
“சரி, குடுக்கற வெலைய சொல்லுங்க…” வண்டியை நெருங்கி கண்ணன் பொம்மையை எடுத்தாள் அண்ணி.
“நான் சொல்றத அப்பவே சொல்லிட்டன். இனிமே நீங்கதான் சொல்லணும்..” கடைக்காரர் கிளாஸை ஓரமாக வைத்தார்.
“ஒரே வெலதான். எட்டு ரூபா” அவள் விரல்கள் பொம்மையை வருடிக் கொடுத்தன.
“எத்தினி வேணும், ரெண்டா மூணா?” அவன் அண்ணியைப் பார்த்துக் கேட்டான்.
“ஒன்னே ஒன்னு போதும்” அண்ணி ஒற்றைவிரலை நீட்டினாள்.
“சரி, சரி குடுங்க” கடைக்காரர் பொம்மையை ஒரு தாளில் சுற்றி காகிதப்பைக்குள் வைத்துக் கொடுத்தார். அதை வாங்கி அபிஷேகப் பைக்குள் வைத்தாள் அண்ணி. பிறகு பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அதில் அற்புதமான நிம்மதியுணர்வு படர்ந்திருந்தது. அவள் கண்களில் பரவியிருந்த திருப்தியைப் பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. வீடு
சென்று சேர்கிறவரைக்கும் சின்ன வயசிலிருந்து தான் நேசத்தோடு வைத்திருந்த விதவிதமான பொம்மைகளைப்பற்றியும் அவற்றோடு சம்பந்தப்பட்ட கதைகளைப்பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தாள் அண்ணி. வீட்டுக்குள் வந்ததுமே முதல் வேலையாக அதை அலமாரியில் புடவை அடுக்குக்குக் கீழே மறைத்துவைத்தாள். பிறகு மெதுவாக கணக்கு நோட்டை உருவி எடுத்து சோப்பு வாங்கிய வகையில் எட்டு ரூபாய் செலவு என்று எழுதி மூடினாள்.
இரவுச் சாப்பாடு முடிந்ததுமே வழக்கம்போல செலவு நோட்டை எடுத்து கணக்கைச் சரிபார்த்தார் அண்ணன். உருளைக்கிழங்கு, வெங்காயம்,
மின்சாரக்கட்டணம், வத்திப்பெட்டி, தேங்காய், பூ, பழம், கற்பூரம் என்று விரல்களை நகர்த்திக்கொண்டே வந்தவன் சோப்பு என்கிற இடத்தில் நிறுத்திவிட்டு அண்ணியை அழைத்தான். பாத்திரம் கழுவி அடுக்கியபடி இருந்த அண்ணி பதற்றத்தோடு வந்து அவனெதிரில் நின்றாள். ”என்ன இது?” என்று விரலால் சுட்டிக் காட்டினார் அண்ணன். தொண்டை உலர்ந்துபோனதுபோல எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் அண்ணி. “சோப்புங்க” மென்று விழுங்கியபடி சொன்னாள். “படிக்கத் தெரியாத முண்டமா நான்? சோப்புனு எழுதியிருக்கறத படிக்கத் தெரியாதா? அதத்தான் ஏன் வாங்கனன்னு கேக்கறன்? மாஸ லிஸ்டுலயே சோப்பு வாங்கியாச்சியில்ல? அப்பறமா எதுக்கு புதுசா? அண்ணனின் குரலில் படிந்திருந்த கடுமை அச்சத்தைத் தந்தது.
அண்ணி ஒருகணம் குழம்பி நின்றாள். பிறகு தயக்கத்தோடு என்னைப் பார்த்தாள். மெதுவாக தைரியத்தைத் திரட்டிக்கொண்டு “போர்வ தலகாணியில ஊரப்பட்ட அழுக்கு. அந்த மாச சோப்புக்குலாம் மசியுதா என்ன? தேச்சிதேச்சி தோள்பட்டயே இத்து போச்சி. இத வாங்கி தேச்சப்பறம்தான் கொஞ்சமாச்சிம் வெளுக்கமுடிஞ்சிது……” என்று இயல்பான குரலில் சொல்லி முடித்தாள். முகவாயில் விரல்களால் சொரிந்தபடி அண்ணியையே உற்றுப் பார்த்தார் அண்ணன். பிறகு மெதுவாக மற்ற கணக்கைப் படித்துவிட்டு நோட்டை மடித்துவைத்தார்.
அடுத்தநாள் ஞாயிறு என்பதால் அண்ணனுக்கும் எனக்கும் எண்ணெய்க்குளியல். தோசை சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனுடன் கடைக்குப்போய் கறி வாங்கிவந்தேன். சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிய அண்ணன் அங்கே தொங்கிய சிலந்திவலையைக் கலைப்பதற்காக துடைப்பத்தால் தட்டினார். சட்டென அதன் தொடர்ச்சியாக ஒட்டனை அடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நகர்த்தச் சொன்னதை நகர்த்துவது, கேட்டதை எடுத்துக் கொடுப்பது, அதுதான் என் வேலை. இரண்டுமணிநேரம் ஓடியதே தெரியவில்லை. குப்பைகளையெல்லாம் வாரி ஒரு பிளாஸ்டிக் பைக்குள் நிரப்பி எடுத்துச் சென்று தெருக்கடைசியில் வாய்க்கால் ஓரமாகக் கொட்டிவிட்டு வந்தேன். அறைகள் புதுக்கோலம் பூண்டு புதுவீடு போலக் காணப்பட்டது. பிரித்த துணிக்கொடிகளை மீண்டும் கட்டி பழையபடி ஆக்கினோம். நடுக்கூடத்துக்கு வந்துவிட்ட அலமாரியை மீண்டும் பின்னால் நகர்த்திச் சென்று சுவரோரமாகத் தள்ளிவைத்தோம். பலமுறை அது குலுங்கிக்குலுங்கி அடங்கியது.
“ரேவதி, அந்தச் சாவிய எடு. அலமாரிக்குள்ள துணிங்கள்ளாம் சரிஞ்சி கெடக்கும். தெறந்து அடுக்கி வச்சிடறம்”
சமையல்கட்டிலிருந்து அண்ணி வேகமாக வந்து நின்றாள். “போதும் உடுங்க. சாப்பாட்டு நேரத்துல இன்னும் என்ன வேல? நான் அப்பறமா பாத்துக்கறேன்” என்று
அவசரமாகச் சொன்னாள்.
”நீ வச்சா என்ன? நான் வச்சா என்ன? எல்லாமே வேலதான? சாவிய குடு” அண்ணியின் முகம் பீதியில் உறைந்துவிட்டது. கலவரத்தோடு என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி சாவியை எடுத்துக் கொடுத்தாள். சமையல் கட்டுக்குள் சென்றவள் மறுகணமே மீண்டும் வந்து அண்ணன் எதிரில் நின்றாள். அப்போதுதான் ஆபத்து என் மூளையில் உறைத்தது. ஐயையோ, கண்ணன் பொம்மையைக் காப்பாற்றவேண்டுமே என்னும் பதற்றம் நெஞ்சில் படிந்தது.
“நீ போ. தொணைக்கி இவன் இருக்கறானில்ல, நாங்க பாத்து அடுக்கிவைக்கறம் போ” சொல்லிக்கொண்டே அண்ணன் கதவைத் திறந்தார். அண்ணி கண்களை மூடிக்கொண்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள். அவர் சொன்னதுபோலவே துணிமணிகள் முன்னோக்கிச் சரிந்திருந்தன. நடுத்தட்டில் அண்ணியின் புடவைகள். அவற்றின் அடியில்தான் கண்ணன் பொம்மை இருந்தது.
அடித்தட்டில் சில தட்டுமுட்டுச் சாமான்கள் குவிந்திருந்தன. அவற்றின்மீது அண்ணனின் கண்கள் முதலில் படிந்தன. முதலில் எல்லாவற்றையும் வாரி வெளியே வைத்தார். பிறகு நான் துடைத்து கொடுக்கக்கொடுக்க வாங்கி உள்ளே தட்டில் அடுக்கினார். என் இதயத்துடிப்பு கூடியபடி இருந்தது. மறுபடியும் ஊருக்குச் சென்று ரெட்டியார் வீட்டில் மாட்டுச்சாணம் வாரப்போகும் வாழ்க்கை வெகுதொலைவில் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.
எதிர்பாராத கணத்தில் விளக்கு மாடத்தில் இருந்த அண்ணனின் கைப்பேசி ஒலித்தது. பார்த்த நாள்முதலே என்பதுதான் அண்ணன் வைத்திருக்கும் அழைப்புப்பாட்டு. நாலுவரி பாடிவிட்டு மீண்டும் தொடக்கத்திலிருந்து பாடியது பாட்டு. “யாருடா அது , எடுத்துப் பாரு” என்றார் அண்ணன். வேகமாக எழுந்து சென்று அதை எடுத்துப் பார்த்தேன். மஞ்சளொளிச் சதுரத்தில் சுடர்விட்ட எழுத்துகளைக் கூட்டிப் படித்தபிறகு “சண்முகம்ண்ணே” என்று சொன்னேன். “அவனா, தோ வரேன்…” என்றபடி அண்ணன்
எழுந்துவந்து கைப்பேசியை வாங்கிக்கொண்டு, வாசல்பக்கமாகச் சென்றார். அதே கணத்தில் அலமாரியின் பக்கம் ஓடி அவசரமாக கண்ணன் பொம்மையை எடுத்து பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடப் பைக்குள் போட்டு மூடினேன். அதற்குப் பிறகுதான் என்னால் நிம்மதியாக மூச்சுவிடமுடிந்தது. பிறகு
இயல்பாக உட்கார்ந்து மறுபடியும் சாமான்களை அடுக்குவதில் ஈடுபட்டேன். பேச்சை முடித்துக்கொண்டு திரும்பிய அண்ணனும் மீண்டும் வேலையில் மூழ்கினார். அடித்தட்டு, மூன்றாம் தட்டு, இரண்டாம் தட்டு, முதல்தட்டு என ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி, துணிமணிகளைச் சரியாக அடுக்கிவைத்தோம். கணக்கு நோட்டையும் பணப்பெட்டியையும் வழக்கம்போல துணிவரிசைக்கு நடுவில் மறைத்துவைத்துவிட்டுத் திரும்பினார்.
எந்தக் கணத்திலும் அவர் வெடித்து கோபம்கொள்ளக்கூடும் என்கிற அச்சத்தில் அண்ணி வெளியே வரவே இல்லை. அண்ணனை அருகில் வைத்துக்கொண்டு அவளுக்கு சைகை காட்டிப் புரியவைக்கும் அளவுக்கு சூழல் சரியாக இல்லாததால் நான் அமைதியாகவே இருந்தேன்.
அலமாரியின் பக்கத்தில் இரண்டு தாங்கிகள் இருந்தன. அவற்றையும் சுத்தம் செய்தோம். அண்ணி மெதுவாக வெளிப்பட்டு கூடத்தை நோட்டமிட்டாள்.
”என்ன, சமையல் வேல முடிஞ்சிதா?”
”ம்” என்றபடி அண்ணி தலையசைத்தாள்.
“தலகாணி ஒறய தொவச்சிப் போட்டன்னு சொன்னியே, எங்க அது? எடுத்துக் குடுத்தா அதயும் மாத்திருவமில்ல….”
அண்ணி பேசாமல் துணிமூட்டையிலிருந்து தேடி எடுத்துக் கொடுத்தாள். பளிச்சென்று நீலநிறக் கோடு விழுந்த அந்த உறைகளை வாங்கி மூலைப்பகுதியில் இருந்த சுருக்கங்களையெல்லாம் நீவினார் அண்ணன். பிறகு தனக்குள்ளாகவே
பேசிக்கொள்வதுபோல “இந்த
வெளுப்புக்கு எட்டு ரூபா தெண்டச்செலவா?” என்று முணுமுணுத்தபடி தலையணையை ஒவ்வொரு உறையிலும் நுழைத்து நாடா கட்டி ஓரமாக வைத்தார். அண்ணி நிலைகொள்ளாமல் தவித்தாள். அண்ணனுக்கும் எனக்கும் பரிமாறும்போதுகூட அவள் முகத்தில் குழப்பமே படிந்திருந்தது. சாப்பிட்ட பிறகு அண்ணன் படுத்துவிட்டார். நான் சிறிது நேரம் வீட்டுப் பாடம் எழுதினேன். பாத்திரம் கழுவிவிட்டு வந்த அண்ணியோடு பிறகு பல்லாங்குழி ஆடினேன்.
நான்கு மணிக்கு எழுந்த அண்ணனுக்கு டீ போட்டுக் கொடுத்தாள் அண்ணி. அதைப் பருகிய பிறகு அண்ணன், “வில்லினூரு வரிக்கும் போய்ட்டு வரேன்” என்றபடி
கைப்பேசியை எடுத்துக்கொண்டு சைக்கிளில் கிளம்பிச் சென்றார். அவர் தெருவைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தாள். பிறகு அவசரமாக “ஒலகத்துல அவரு கண்ணுலேருந்து எதுவுமே தப்பிக்க முடியாதுடா. கழுகு கண்ணு அவருக்கு. பாத்தாரா? பாக்கலையா?” என்று கேட்டாள். நான் புன்னகைத்தபடி ”அந்த அளவுக்கெல்லாம் உட்டுடுவனா அண்ணி” என்று சொல்லிக்கொண்டே மெதுவாக என் பள்ளிக்கூடப் பையைத் திறந்து கண்ணன் பொம்மையை எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த பிறகுதான் அண்ணியின் முகத்தில் படிந்திருந்த குழப்பம் விலகியது. அதை மறைத்த சாகசக்கதையைச் சொல்லச் சொல்ல அவள் கண்கள் கலங்கின. புன்னகையோடு என் தோளைத் தட்டிக்
கொடுத்தாள். கண்ணன் பொம்மையை ஒருகணம் இரு கைகளுக்கிடையே ஏந்தி ஆசையோடு உற்றுப் பார்த்தாள். பிறகு நெஞ்சோடு இறுக்கியபடி சில கணங்கள் வைத்திருந்தாள். அப்புறம் நிதானமாக புடவைஅடுக்குக்குக் கீழே மறைத்து மூடிவிட்டுத் திரும்பினாள். “வா, இப்ப நிம்மதியா பல்லாங்குழி ஆடலாம்” என்று சிரித்தபடி என் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.