Home

Sunday, 1 May 2022

காலம் வகுத்தளித்த கடமை

  

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து காந்தியின் வழியில் மக்களுக்குச் சேவையாற்றியவர் ஸ்லேட் மேடலின் என்கிற மீரா பெஹன். இமயமலையைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் என நம் நாட்டுக்கு விடுதலை கிடைத்ததுமே எடுத்துரைத்தவர் அவர். அவர் அப்போது ரிஷிகேஷ் படுகையில் தன் ஆசிரமத்தை அமைத்திருந்தார். எதிர்பாராமல் கங்கையில் பெருகிவந்த வெள்ளத்தில் அந்த ஆசிரமம் சேதமடைந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மீரா பெஹன் வெள்ளத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்டார். இமயமலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஏராளமான ஓக் மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. மரங்களை வெட்டி பணமீட்டும் முதலாளிகள் ஆண்டுக்கணக்கில் அவற்றை வெட்டியெடுத்தபடி இருந்தனர். அதற்கு ஈடாக வேகமாக வளரக்கூடிய பைன் மரங்களை நட்டு வளர்த்தனர். தொலைவிலிருந்து பார்க்கும் கண்களுக்கு காடு அப்படியே நிலைத்திருப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை அது தந்தது.

ஓக் மரத்திலிருந்து மண்ணில் விழும் இலைகளுக்கும் பைன் மரத்திலிருந்து விழும் இலைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இந்தியாவுக்கு முதன்முதலாக மீரா பெஹனே கண்டறிந்து அறிவித்தார். ஓக் இலைகள் மழை நீரை உள்வாங்கி மண்ணுக்குள் அனுப்பும் ஆற்றல் உள்ளவை. பைன் இலைகளுக்கு அந்த ஆற்றல் இல்லை. அவை வழவழப்பான பிளாஸ்டிக் தாட்களைப் போன்றவை. தம் மீது விழும் மழைநீரை அப்படியே மண்மீது வழிந்தோடச் செய்துவிட்டன. மழை பெருகி வெள்ளம் வந்ததற்கு அதுதான் காரணம்.

தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இமயமலையைப் பாதுகாப்பது பற்றி சொல்லிக்கொண்டே இருந்தாலும் சேரவேண்டியவர்களின் காதுகளுக்கு அது எட்டவில்லை. மீரா பெஹன் சலிப்போடு இந்தியாவைவிட்டு வெளியேறினார். ஆயினும் அவர் குரல் வழியாக பொதுமக்களிடையில் ஒரு விழிப்புணர்ச்சி நிலைத்து நீடித்தது. மீரா பெஹன் நாட்டைவிட்டு அகன்றபோதும் இமயமலையைப் பாதுகாக்கும் மனிதர்கள் சிறுகச்சிறுக சேர்ந்து இயக்கமாக வளர்ந்தனர். சுந்தர்லால் பகுகுணா அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கினர். காந்திய வழியில் அவர் முன்னெடுத்த பல முயற்சிகளால் இமயமலையில் ஏற்படும் பாதிப்புகள் ஓரளவு குறைந்தன.

துரதிருஷ்டவசமாக, மரங்களை வெட்டும் முதலாளிகளின் இடத்துக்கு கனிமவளத்துக்காக இமயமலையையும் கங்கையையும் மாசுபடுத்தும் நிறுவனங்கள் வந்து சேர்ந்தன. மீண்டும் காந்தியர்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. சின்னச்சின்ன வெற்றிகளால் சற்றே ஆறுதல் பெறும் தருணங்களில் புதிய புதிய நிறுவனங்கள் புதிய புதிய வழிகளில் இமயத்தையும் கங்கையையும் பாழாக்கி அழிக்க முற்பட்டன.

கடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஹரித்துவாருக்கு அருகில் உள்ள மத்ரி சதன் என்னும் ஆசிரமத்தைச் சேர்ந்த நிகமானந்தா என்னும் துறவி கங்கையைக் காக்கும் முயற்சில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 114 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தார்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அதே கோரிக்கையுடன் சாது ஸ்வரூப் சதானந்த் என்பவரும் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தார். அவர்கள் வழியிலேயே மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆத்ம போனந்த் என்னும் துறவியும் உண்ணாநோன்பிருந்து மறைந்தார். கால்நூற்றாண்டு காலமாக கங்கைக்கரையோரத் துறவிகள் நடத்திய சட்டப்போராட்டத்துக்கு போன மாதம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியது. கங்கைக்கரையோர கனிமநிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. காந்தியம் இம்மண்ணில் இன்னும் உயிர்தரித்திருக்கிறது என்பதற்கும் காந்தியவழியில் வெற்றிபெற முடியும் என்னும் நம்பிக்கையை மக்களிடம் ஊட்டுவதற்கும் இந்தத் தீர்ப்பே ஒரு பெரிய சான்று.

தன்னை அழித்துக்கொண்டு எதிர்கால இயற்கை அழிவுகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் இலட்சியவாதிகளை இம்மண்ணில் காந்தியம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, இத்தகு இலட்சியவாதிகளைப்பற்றிய செய்திகள் ஒரு சிறு கட்டுரையாகக்கூட சமூக வலைதளங்களிலோ, ஊடகங்களிலோ வெளிவருவதில்லை. வெள்ளப் பேரழிவால் கிராமங்கள் மூழ்கி மிதப்பதை பக்கம்பக்கமாக படம்பிடித்து வெளியிடுகிற ஊடகங்கள், வெள்ளத்திலிருந்து மக்களையும் சுற்றுசூழலையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் சட்ட முயற்சிகளைப்பற்றியும் தியாகங்களையும் குறிப்பிடுவதில்லை. தப்பித்தவறி சில நல்ல உள்ளங்கள் பெட்டிச்செய்தியாக அவற்றை வெளியிடும்போது, பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் படிப்பதில்லை. எதிர்மறைச் செய்திகளுக்கு அவர்கள் ஆழ்மனம் அளிக்கும் முக்கியத்துவத்தைப்போல நேர்மறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.  ஆயினும் எல்லாத் தடைகளையும் மீறி காந்தியம் இந்த மண்ணில் வெற்றி ஈட்டிக்கொண்டே இருக்கிறது.

திங்களைப்போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று இயற்கையாற்றலை வணங்கும் விதமாக  மங்கலவாழ்த்துப்பாடலோடு சிலப்பதிகாரம் தொடங்குவதைப் போல,  காந்திய ஆளுமைகளைப்பற்றி அறிமுகத்தை வழங்கும் கட்டுரைகளையும் காந்தியக்குரலை ஒலிக்கும் புத்தக அறிமுகக்கட்டுரைகளையும் கொண்ட இத்தொகுதிக்கு முனைவர். சு.முத்துஇலக்குமி காந்தியம் போற்றுதும் என்று பெயர்சூட்டியுள்ளார். காந்தியம் இந்த மண்ணில் வேரூன்றி தழைக்க வேண்டும் என்கிற அவருடைய ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். நீண்ட காலம் நீடித்தது என்றபோதும் கங்கைநதிப் பாதுகாப்புப் போராட்டத்துக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி காந்திய வழியில் ஈட்டிய வெற்றிகள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

இத்தொகுதியில் பல புதிய தகவல்களை நமக்காகத் திரட்டி அளித்திருக்கிறார் முத்துஇலக்குமி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற ஒன்பது பெண்களைப்பற்றிய பெண்களைப் பற்றிய சித்திரங்கள் இக்கட்டுரையில் காணப்படுகின்றன. அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊரில் இத்தனை பெண் ஆளுமைகளை காந்தியம் உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாரதியார் எழுதிய ‘பெண்களின் விடுதலைக்கும்மி’ பாடல் நினைவுக்கு வருகிறது. ’ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி  வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்’ என்று அக்காலகட்டத்தில் மாறத் தொடங்கிவிட்ட பெண்கள் நிலைமையை இந்த உலகுக்கு பாரதியாரே முதலில் அறிவித்தார். பிறகு பெண்கள் சார்பாக ’பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என்று அவர்கள் அடைந்த உயர்நிலையையும் அவரே அறிவித்தார். கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் அவர் அறிவித்த உண்மை அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திலும் உண்மைச்செய்திகளாக மாறின. அதற்கு காந்திய இயக்கமே முழுமுதல் காரணம்.

பத்மாசினி அம்மாள், தாயம்மாள், சொந்திரம் அம்மாள், சொர்ணத்தம்மாள், பர்வத வர்த்தினி, மகாலட்சுமி பாரதி, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அகிலாண்டத்தம்மாள், சீத்தாலட்சுமி சிதம்பரபாரதி ஆகியோரின் பங்களிப்பையும் பெருமையையும் முத்துஇலக்குமியின் கட்டுரை முன்வைக்கிறது. தமிழக அளவில் இத்தகு பெண்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம். இந்திய அளவில் இன்னும் மிகுதியாக இருக்கலாம். இவர்களை நினைத்துப் பெருமைப்படுவது என்பது இன்னொரு வகையில் காந்தியத்தை நினைத்துப் பெருமைப்படுவதற்குச் சமமாகும்.

மீரா பெஹனைப்போலவே காந்தியத்தால் கவரப்பட்ட அயலக மகளிரில் ஒருவர் பெட்ராகரீன் கெல்லி. அவரைப்பற்றி விரிவான தகவலைக் கொண்ட ஒரு கட்டுரை இத்தொகுதிக்கு பெருமை சேர்க்கிறது.

நூலறிமுகக்கட்டுரை வரிசையில் முனைவர் அ.பிச்சை எழுதிய ’காந்தி என்கிற காந்தப்புலம்’ புத்தகத்தைப்பற்றிய கட்டுரை மிகமுக்கியமானது. அரிய பல தகவல்களைக் கொண்ட அப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை சிறப்பாகவே உணர்த்தியிருக்கிறார் முத்துஇலக்குமி. பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட காந்தியடிகளின் புகைப்படங்களை நாம் வெவ்வேறு பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் பார்த்திருக்கக்கூடும். குனிந்து கண்களைச் சுருக்கி நுண்ணோக்கி வழியாக எதையோ பார்க்கும் காந்தியடிகளின் முகத்தை பெரிய அளவில் காட்டும் படம், தொலைபேசியில் காந்தியடிகள் பேசும் படம், காந்தியடிகள் தன் வீங்கிப்போன கால்களைத் தொட்டிக்குள் வைத்திருக்கும் போது கஸ்தூர் பா வெந்நீரை எடுத்து ஊற்றும் காட்சியைக் கொண்ட படம், தொழுநோயாளியான சமஸ்கிருதப்பண்டிதர் பச்சூரியின் புண்களைக் கழுவி தூய்மைசெய்யும் காந்தியடிகளின் படம் போன்றவற்றை பலர் பார்த்திருக்கக்கூடும். அவற்றை யாரோ வெளிநாட்டைச் சேர்ந்த அல்லது இந்தியாவைச் சேர்’ந்த புகழ்பெற்ற புகைப்படக்காரர் ஒருவர் எடுத்தவை என பலரும் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அப்படங்களை எடுத்து வெளியிட்டவர் காந்தியடிகளோடு ஆசிரமத்திலேயே தங்கியிருந்த அவருடைய சகோதரரின் பேரன் கனுகாந்தி என்னும் தகவலை பிச்சையின் நூலிலிருந்து எடுத்து முன்னுரிமை கொடுத்து தன் கட்டுரையில் முத்துஇலக்குமி பதிவு செய்திருக்கிறார். கனுகாந்தி புகைப்படக்கலை மீது எல்லையில்லாத ஆர்வம் கொண்டவர் என்பதையும் அவர் ஒருமுறை காந்தியடிகளைப் படமெடுக்க விருப்பம் தெரிவித்ததையும், தன் கவனத்தை ஈர்க்கும் வகையில்  திரும்பி, நில், சிரி என எந்தக் கட்டளையையும் தனக்கு இடாமல் ஒதுங்கியிருந்து எடுத்துக்கொள்ள காந்தியடிகளே இசைவளித்ததையும் மெல்ல மெல்ல எழுநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை கனுகாந்தி எடுத்துவிட்டார் என்னும் தகவலையும் திரட்டி அளித்துள்ளார்.

காந்திய வழியில் தன் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் க.மு.நடராஜன் அண்ணாச்சி. சர்வோதயம் மலர்கிறது, கிராம ராஜ்ஜியம் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து, ஒரு கிரியாஊக்கியைப்போல தொடர்ந்து தன்னை எழுதத் தூண்டிக்கொண்டே இருந்த அவருடைய அன்பையும் பண்பையும் முத்துஇலக்குமி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். நம்மிடையே இன்றும் வாழும் காந்திய ஆளுமையான கிருஷ்ணம்மாள் பற்றிய கட்டுரையும் முக்கியமானது.

காந்தியக்கொள்கைகளை முன்னெடுத்தவர்களைப்பற்றியும் நிகழ்காலத்தில் முன்னெடுப்பவர்களைப்பற்றியும் நம் மண்ணில் மீண்டும் மீண்டும் பேசுவதன் வழியாகவே சமூகத்தின் கவனத்தை நாம் ஈர்க்கமுடியும். காந்தியத்தை நம்பும் அனைவருக்கும் அந்தக் கடமையை ஆற்றும் பொறுப்பு இருக்கிறது. அத்தகு சமூகப்பொறுப்பின் வெளிப்பாடாகாவே முத்துஇலக்குமியின் இக்கட்டுரைத்தொகுதியை நான் கருதுகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(முனைவர் சு.முத்துஇலக்குமி எழுதி, விரைவில் வரவிருக்கும் ’காந்தியம் போற்றுதும்’ கட்டுரைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)