Home

Tuesday 22 December 2015

பூமியின் மடியில் - கட்டுரை

பள்ளியிறுதி நாட்களில் குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் ஒருவித வேடிக்கையுணர்வும் ஆச்சரியமும் படர்ந்து மலைக்கவைத்துவிடும். ஆளை வெளியே தள்ளுகிற மலைப்பு அல்ல அது. உத்வேகமூட்டி தன்னைநோக்கி ஈர்த்துக்கொள்கிற மலைப்பு. ஒருவகையில் காந்தம்போல. இன்னொருவகையில் விதவிதமாக கதைகளை விதவிதமான கோணங்களில் புனைந்து சொல்கிற ஒரு மூதாட்டியைப்போல. குறுந்தொகையின் பாடல்களை அப்போது பாதியளவில்கூட உள்வாங்கிக்கொள்ள முடியாததாகவே இருந்தது. ஆனாலும் மூதாட்டியின் கைவிரல்களைப்போல அந்த வரிகள் மனத்தைத் தொட்டு வருடிக்கொண்டே இருப்பதில் ஒருவித மகிழ்ச்சியும் பரவசமும் கிட்டின.

மழைமரம் - கட்டுரை

பெங்களூருக்கு நான் குடிவந்த நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த மரங்கள். ஒரு மாபெரும் தோப்புக்கு இடையே உருவான ஊராக இதை நினைத்துக்கொள்வேன். மரங்கள் இல்லாத தெருவே இருக்கமுடியாது. எத்தனை கடுமையான கோடையாக இருப்பினும் அதன் கடுமையை சற்றும் உணராத வகையில் இம்மரங்கள் காப்பாற்றின. கோடைச் சூரியனின்  ஒளிக்கற்றைகள் பூமியை நேரிடையாக தொட்டுவிடாதபடி எல்லா மரங்களும் தம் கைகளால் முதலில் அவற்றை வாங்கிக்கொள்ளும்.  அவற்றின் விரல்களிலிருந்து கசிகிற வெப்பம்மட்டுமே மெதுவாக நிலத்தைத் தொடும். அந்த வெப்பம் உடலுக்கு இதமாக இருக்கும். வியர்வையைக் கசியவைக்காத வெப்பம். அதெல்லாம் ஒரு காலம். இந்த ஊரை ஒரு பெருநகரமாக மாற்றிவிடத் துடித்த மானுடரின் அவசரம் இன்று எல்லாவற்றையும் சின்னாபின்னமாகச் சிதைத்துவிட்டது. குளிர்காலத்தில்கூட குளிர்ச்சியற்ற காற்று வீசும் நிலை ஏற்பட்டுவிட்டது.

Monday 7 December 2015

மலைமீது கட்டிய வீடு - கட்டுரை



    இரண்டு ஊர்களுக்கிடையே தொலைபேசிக் கேபிள் புதைக்கும்  வேலையில் ஈடுபட்டிருந்தபோது அங்கங்கே வெட்டவெளிப் பிரதேசங்களில் கூடாரமடித்துத் தங்கியிருந்த இளமை நாட்களின் அனுபவங்கள்  ஒருபோதும் மறக்கமுடியாதவை. ஒருமுறை ஹொஸஹள்ளி என்னும் இடத்தில் நாங்கள் முகாமிட்டிருந்தோம். நானும் நண்பர்களும் சகஊழியர்களுமாக ஏழு கூடாரங்கள். சுற்றுவட்டாரத்தில் ஏழெட்டு மைல் நீளத்துக்கு ஒரே வெட்டவெளி. சில இடங்களில் மட்டும் விளைந்தும் விளையாததுமாக சோளவயல்வெளிகள். மழையைமட்டுமே நம்பிப் பயிரிடப்பட்டவை.

பேயும் தெய்வமும் – கட்டுரை

சின்மயா மருத்துவமனைத் தெருவின் இறுதியில் இருக்கும் கிருஷ்ணன் கோயில்வரை சில ஞாயிறு மாலைகளில் நடந்துசெல்வதுண்டு.  சாலையின் இருமருங்கிலும் அடர்ந்திருக்கும் மழைமரங்களும் மேமலர் மரங்களும் அந்தச் சாலைக்கே குடை பிடிப்பதைப்போல இருக்கும். அச்சாலையில் நடந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு தோப்புக்குள் நடக்கும் உணர்வை அடைந்திருக்கிறேன். பல பெயர் தெரியாத பறவைகள் ஏதோ ஒரு திசையிலிருந்து வந்து அம்மரங்களின் கிளைகளில் உட்கார்ந்திருக்கும் காட்சி, பகல்பொழுதின் அலுப்பைக் கழிப்பதற்காக அவையும் எங்கிருந்தோ பறந்துவந்து மனிதர்களையும் மரங்களையும் வேடிக்கை பார்ப்பதைப்போலத் தோன்றும். பல வீட்டு முற்றங்களில் நந்தியாவட்டைகளும் செம்பருத்திகளும் பூத்திருக்கும். கட்டடப்பணி தொடங்காத காலி வீட்டுமனைகளில் அஞ்சுமல்லி புதர்புதராகப் பூத்திருக்கும். கோயில் வாசலில் நாலைந்துபேர் பூக்கூடைகளுடன் உட்கார்ந்து பூ விற்றுக்கொண்டிருப்பார்கள். இன்னொரு விளிம்பில் இளநீர்க்குலைகளைக் குவித்துவைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலேயே கரும்புச்சாறு வியாபாரமும் பேல்பூரி வியாபாரமும் நடக்கும். நின்றகொண்டோ அல்லது அங்கங்கே சிதறிக்கிடக்கிற கற்களின்மீது உட்கார்ந்தோ சிறிது நேரம் பொழுதைப்போக்க எந்தத் தடையுமில்லை. பொழுது சாயும் வேளையும் இதமான காற்றும் உரையாடும் மனநிலைக்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.  மனைவியோடு அல்லது நண்பர்களோடு செல்லும்போது அந்த இடத்தில் சற்றே நின்று உரையாடாமல் திரும்ப மனமே வராது. துணைக்கு யாரும் இல்லாத தருணங்களில்கூட அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்த்தபடி சிறிதுநேரம் நின்றிருந்துவிட்டுத்தான் திரும்புவேன்.