Home

Monday 7 December 2015

பேயும் தெய்வமும் – கட்டுரை

சின்மயா மருத்துவமனைத் தெருவின் இறுதியில் இருக்கும் கிருஷ்ணன் கோயில்வரை சில ஞாயிறு மாலைகளில் நடந்துசெல்வதுண்டு.  சாலையின் இருமருங்கிலும் அடர்ந்திருக்கும் மழைமரங்களும் மேமலர் மரங்களும் அந்தச் சாலைக்கே குடை பிடிப்பதைப்போல இருக்கும். அச்சாலையில் நடந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு தோப்புக்குள் நடக்கும் உணர்வை அடைந்திருக்கிறேன். பல பெயர் தெரியாத பறவைகள் ஏதோ ஒரு திசையிலிருந்து வந்து அம்மரங்களின் கிளைகளில் உட்கார்ந்திருக்கும் காட்சி, பகல்பொழுதின் அலுப்பைக் கழிப்பதற்காக அவையும் எங்கிருந்தோ பறந்துவந்து மனிதர்களையும் மரங்களையும் வேடிக்கை பார்ப்பதைப்போலத் தோன்றும். பல வீட்டு முற்றங்களில் நந்தியாவட்டைகளும் செம்பருத்திகளும் பூத்திருக்கும். கட்டடப்பணி தொடங்காத காலி வீட்டுமனைகளில் அஞ்சுமல்லி புதர்புதராகப் பூத்திருக்கும். கோயில் வாசலில் நாலைந்துபேர் பூக்கூடைகளுடன் உட்கார்ந்து பூ விற்றுக்கொண்டிருப்பார்கள். இன்னொரு விளிம்பில் இளநீர்க்குலைகளைக் குவித்துவைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலேயே கரும்புச்சாறு வியாபாரமும் பேல்பூரி வியாபாரமும் நடக்கும். நின்றகொண்டோ அல்லது அங்கங்கே சிதறிக்கிடக்கிற கற்களின்மீது உட்கார்ந்தோ சிறிது நேரம் பொழுதைப்போக்க எந்தத் தடையுமில்லை. பொழுது சாயும் வேளையும் இதமான காற்றும் உரையாடும் மனநிலைக்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.  மனைவியோடு அல்லது நண்பர்களோடு செல்லும்போது அந்த இடத்தில் சற்றே நின்று உரையாடாமல் திரும்ப மனமே வராது. துணைக்கு யாரும் இல்லாத தருணங்களில்கூட அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்த்தபடி சிறிதுநேரம் நின்றிருந்துவிட்டுத்தான் திரும்புவேன்.

    பளபளவென சலவைக்கற்களாலான கோயில் வளாகம்.   கண்ணாடிக் கூண்டாலான கருவறைக்குள் கருநிற வண்ணத்தில் கிருஷ்ணனின் கோலம். மாபெரும் பாம்பு ஒன்றின் தலையுச்சியில் நின்று சிரிக்கும் காட்சி. முதன்முதலாக அக்கற்சிற்பம் உருவாக்கிய மனஎழுச்சி மறக்கமுடியாத மாபெரும் அனுபவம். அக்காட்சிப் பின்னணிக்கான புராணக்கதையைக் கடந்தும் அத்தோற்றத்துக்கு பல பொருள்கள் இருப்பதை உணர்ந்தேன். பாம்பு எங்கோ வெளியே இருக்கும் ஒன்றல்ல. நம் மனத்துக்குள்ளேயே இருக்கும் உயிர்தான். யாருடைய மனமும் அச்சுஅசலான பூஞ்சோலை அல்ல. பூக்கள் உண்டு என்றபிறகு, சருகுகளுக்கும் குப்பைகளுக்கும் பாம்புகளுக்கும் இடமுள்ள சோலைதான் மனம். ஆபத்தில்லாத வரைக்கும் பாம்பைப்பற்றிய அச்சமில்லை. ஆபத்து நிச்சயம் என்னும் நிலையில் அந்தப் பாம்பை நாம் எப்படி வெல்கிறோம் என்பதுதான் பிரச்சனை. பாம்பை வெற்றிகொள்பவனே ஆரோக்கிய மனமுடையவன். ஒருவகையில் தெய்வத்தன்மை கொண்டவன். அப்படி வெல்லமுடியாதவன் சாதாரணமானவன் அல்லது அதற்கும் கீழானவன். கிருஷ்ணனின் கரிய உருவத்தைப் பார்க்கும்தோறும் வெற்றியின் ரகசியச் செய்தி கசிவதைப்போல இருக்கும்.
    தற்செயலாக ஒருநாள் கோயில் வாசலில்  கடைபோட்டிருப்பவர்களிடமும் நின்றுகொண்டிருப்பவர்களிடமும் மிகவும் இயல்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அலங்கோலமான ஒரு பெண்ணைப் பார்த்தேன். "யாரோ பைத்தியக்காரி. பாவம், இங்க வந்து சேந்திருக்குது..."  என்று பக்கத்தில் உரையாடிக்கொள்வதும் கேட்டது.  அந்தப் பெண் அழுக்குப் புடவையோடும் சிக்குப் பிடித்த தலைமுடியோடும் கன்னடத்திலும் தெலுங்கிலும் உரையாடியவளாக பார்க்கிறவர்களிடம் எல்லாம் காசுக்கும் பிச்சைக்கும் கையேந்தினாள். யாரோ ஒரு சுற்றுலாப் பயணி கொடுத்துவிட்டுப் போன ஸ்வெட்டரை தலைகீழாகப் போட்டுக்கொண்டிருந்தாள். எல்லாரிடமும் அவளுக்கு நல்ல அறிமுகம் இருந்தது. பார்க்கும் அனைவரிடமும் வாய் ஓயாமல் பேசினாள். திடீரென யாரோ ஒருவர் முன்னால் போய் ஒருகணம் உறைந்து நின்று நாக்கை மடித்துக் கடித்த நிலையில் கண்களை அகல விரித்து "நான் பேய், நான் பேய்...." என்று உடல்விறைக்க கர்ஜனை செய்தாள். மறுகணம் தரையில் கிடந்த ஒரு சின்ன இலைக்கொத்தை எடுத்து, அடிக்கமுனைபவளைப்போல கையை ஓங்கிக்கொண்டு நின்றாள். "நான் பேய், நான் பேய்..." என்று அவள் வாய் ஓயாமல் முணுமுணுத்தபடி இருந்தது. அத்தோற்றம் கொடுத்த அச்சம்தான் அவளைக் கவனிக்கும் எண்ணத்தை  எனக்குள் து¡ண்டியது. அவள் செய்கைகள் ஆளை நிலைகுலையவைப்பவையாக இருந்தாலும் பழக்கத்தின் காரணமாக யாரும் அச்சத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. பையிலிருந்து கொஞ்சம் சில்லறைகளை எடுத்துக் கொடுத்தார்கள். ஆத்திரத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அவள் முகம் அதே கணத்தில் இயல்பான நிலைக்குத் திரும்பி சிரிப்பைக் காட்டியது. கிடைத்த சில்லறையோடு இன்னொரு முனையை நோக்கி நடந்தாள் அவள்.
    நான் சற்றே பதற்றத்துடன் வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தேன். கருத்த உருண்ட முகம். கலைந்த தலை. கிழிந்த அவள் மேலாடை காற்றில் அசைந்தது.  இலக்கில்லாமல் நடந்தவாறிருந்தவள் திடீரென ஒருவர் முன்னால் நின்று மீண்டும்மீண்டும் "நாந்தான் பேய்...." என்று கூவினாள். அவர் சட்டென அஞ்சி நகர்பவரைப்போல " ஐயோ பேய், பேய், ஓடியாங்க, ஓடியாங்க, காப்பாத்துங்க...." என்று சத்தமிட்டார். அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் குடிகொண்டிருப்பதை அவர் கண்கள் காட்டின. ஒருகணம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு கடகடவென்று சிரித்து "என்ன பேய் நீ? கிராமத்துப் பேயா? நகரத்துப் பேயா? காத்திலயே மிதந்து வந்தியா? இல்ல, கார்ல வந்தியா?"  என்று கேட்டார். தன் அருகே நின்றிருந்த நண்பர்களிடம் கையைநீட்டி, "டேய், நவுந்து நில்லுங்கடா, பேய் வர வழியில நின்னா அடிச்சி தொவைச்சிடும்டா" என்று எச்சரிப்பதைப்போல சொல்லிவிட்டு கட்டுப்படுத்த முடியாதபடி சிரிக்கத் தொடங்கினார். அவர் சிரிப்போடு மற்றவர்கள் சிரிப்பும் சேர்ந்துகொண்டது. நிற்கமுடியாமல் வயிறுகுலுங்க சிரித்தார்கள். சிரிக்காத ஒருவர்மட்டும் சட்டைப்பையிலிருந்து ஏதோ சில்லறையை எடுத்துக்கொடுத்து "போ...போ...போய்டு..." என்று அவளை அனுப்பிவைத்தார். அவள் கோயிலைச் சுற்றி ஓடினாள்.
    சங்கடமான மெளனத்துடன் அவள் ஓடும் திசையையே  பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் அவள் மறைந்துவிட்டாள். பைத்தியம் என்பது எல்லா விருப்பங்களிலிருந்தும் விலகி நகர்ந்துவிட்ட மனநிலை. ஒருவிதமான விடுதலை நிலை. சகஜ மனநிலை கொண்டவர்களால் ஒரேஒரு கணம்கூட இந்நிலையில் இருப்பதைப்பற்றிக் கற்பனை செய்துபார்க்கமுடிவதில்லை. அந்த நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதில்கூட எந்தப் பிழையுமில்லை. மாறாக, அதைக் குத்திக்காட்டி கிண்டல் செய்வது மிகப்பெரிய பிழையாகத் தோன்றியது. அந்த அனுபவம் மனத்தில் கசப்பைப் படரவைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத கணத்தில் அவள் என் முன்னால் ஓடிவந்து "நாந்தான் பேய்..." என்று அலறினாள்.
    “என்னம்மா வேணும்?” பொறுமையாக நான் அவளிடம் கேட்டேன்.
    “நாந்தான் பேய்."
    கைப்பையில் வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்திருந்த வாழைச்சீப்பிலிருந்து மூன்று பழங்களைப் பிட்டுக்கொடுத்தேன். அவள் ஆசையோடு அவற்றை வாங்கி ஓரமாகச் சென்று உட்கார்ந்து சாப்பிட்டாள். சில கணங்களுக்குப் பிறகு குதித்துக்கொண்டே ஓடி யாரோ ஒருவர் முன்னால் நின்று கையை நீட்டினாள்.
    “பேய்க்கு கால் தெரியவே தெரியாது, பறந்துதான் வரும்ன்னு சொல்வாங்க. நீ என்னடான்னா கன்னுகுட்டியாட்டம் துள்ளித்துள்ளி ஓடி வரியே, அது எப்படி?”
    “நாந்தான் பேய்."
    “இதுங்களுக்கெல்லாம் நல்ல ஆயுசக்கொடுத்து கடவுள் ஏன்தான் சோதிக்கறானோ? பேசாம தன்கிட்டயே அழச்சிக்கக்கூடாதா? இப்படி ஒரு கொடுமைய கண்ணால பாக்கவே முடியலையே?”
    “நாந்தான் பேய்."
    “வெள்ளையா இருட்டுலதான் பேய் நடமாடுவாங்கன்னு கேட்டிருக்கேன். இந்தப் பேய் என்னடான்னா கருப்பா வெளிச்சத்துல நடமாடுது. புதுவிதமான பேயா?”
    “நாந்தான் பேய்."
    பாவம், யார் பெத்த புள்ளையோ, பெத்தவங்க உயிரோட இருக்காங்களோ, இல்லயோ, யாருக்குத் தெரியும்? அப்பன் ஆத்தா இருந்தா இப்படி பித்துக்குளியா அலைய உடுவாங்களா?”
    “நாந்தான் பேய்..."
    அந்த ஒற்றைச்சொல்லைமட்டுமே எல்லாக் கேள்விகளுக்குமான விடையாக அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். இவ்வளவு ஏளனங்களையும் கேலிகளையும் சொற்களையும் அவள் மனம் எப்படி எதையுமே வெளிப்படுத்தாமல் ஏற்றுக்கொள்கிறது என்பது புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருந்தது. பைத்தியம் என்பது உண்மையிலேயே விடுதலையாக நிற்கும் மனநிலைதான் போலும் என்று நினைத்துக்கொண்டேன். அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்கமுடியவில்லை. இருட்டவும் தொடங்கிவிட்டதால் வீட்டுக்குத் திரும்பினேன். அவள் கரியமுகம் மனத்தில் இடைவிடாமல் எழுந்தெழுந்து அடங்கியது.
    அடுத்த வாரமும் அவளை அந்த வளாகத்தில் பார்த்தேன். அதே கோலம். ஓட்டம். சிரிப்பு. பிச்சை. பேல்பூரிகாரரிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன ஒரு தகவல் விசித்திரமாக இருந்தது. ஒருநாள் காலை கோவிலுக்கு  யாரோ தம்பதிகள் வந்திருந்தார்கள். தத்தித்தத்தி நடக்கிற குழந்தை ஒன்றையும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்த சமயத்தில் யாரோ ஒரு பழைய நண்பரின் குடும்பம் எதிர்ப்பட்டது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துப் பேசிக்கொண்டிருந்ததில் குழந்தை நடந்துநடந்து நடுச்சாலைக்குச் சென்றுவிட்டது. யாருடைய கவனமும் குழந்தைமேல் இல்லை. இந்தப் பக்கத்திலிருந்து ஒரு பேருந்தும் எதிர்த்திசையிலிருந்து இன்னொரு பேருந்தும் ஒரே நேரத்தில் வேகமாக நெருங்கிவிட்ட அத்தருணத்தில் அவள்மட்டுமே குழந்தையைப் பார்த்தாள். கொஞ்சம்கூட யோசிக்காமல் ஓட்டமாக ஓடிக் குறுக்கில் பாய்ந்து குழந்தையை அப்படியே வாரி நெஞ்சோடு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டாள். பேருந்து ஓட்டுநர்களின் வசைகளையும் அவளே வாங்கிக் கட்டிக்கொண்டாள். காப்பாற்றப்பட்டது தன்னுடைய குழந்தைதான் என்பது குழந்தையின் பெற்றோர்களுக்கே தாமதமாகத்தான் உறைத்தது. அந்தக் குழந்தையின் தாய் அன்று அப்பைத்தியத்தின் காலில் விழுந்து வணங்கினாள். வாகனத்தில் வைத்திருந்த ஒரு புதுப்புடவைப் பொட்டலத்தை அப்படியே அவளிடம் எடுத்துக்கொடுத்தாள். "ராத்திரில அதத்தான் போத்திக்கும். மத்தபடி அதோ அந்த மரத்து சந்தில வச்சிக்கும்..." என்று சுட்டிக்காட்டினார் அவர்.  
    அதற்கடுத்த வாரம் நான் கோயிலை நெருங்கும்போது நேரம் ரொம்பவும் தாமதமாகிவிட்டது. கோயிலைச் சுற்றி சின்னச்சின்ன கும்பலாக நின்றிருந்தவர்களிடையே அவள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். பழைய அழுக்குப் புடவை போய் இன்னொரு அழுக்குப் புடவையைச் சுற்றிக்கொண்டிருந்தாள். திடீரென யாருமே எதிர்பாராத ஒரு கணத்தில் சிலர் முன் நின்று "நான்தான் பேய்..." என்று அலறினாள். சிலர் கைச்சைகையாலே நகர்ந்துபோகுமாறு சொன்னார்கள். சிலர் சில்லறை கொடுத்தார்கள். ஆட்களின் தொடர்ச்சியாக அவள் இளநீர்க்காரன்முன் சென்று "நாந்தான் பேய்..." என்றாள். அந்த இளநீர்க்காரன் பழைய ஆள் இல்லை. யாரோ புது ஆளைப்போல தெரிந்தது. "கிட்ட வாடி , பேய்க்குப் பல் இருக்குதா இல்லையா பாக்கறேன்" என்று சீண்டினான் அவன். அவள் மீண்டும் "நாந்தான் பேய்..." என்று இன்னும் கூடுதலான அழுத்தத்துடன் திரும்பத்திரும்ப அலறினாள்.
    ”போ போ, ஒன் வேலையையெல்லாம் வேற யாருகிட்டயாவது வச்சிக்கோ. இங்க ஒன்னும் கெடைக்காது. போ..."
    அருகில் நின்றிருந்த பலரும் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாருடைய பார்வைகளும் "ஒரு பைத்தியத்திடம் போய் இந்த அளவுக்கு இவன் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறானே.." என்னும் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன.
    ”பேயயே கல்யாணம் பண்ணகிட்டு குழந்தைகுட்டி பெத்து குடும்பம் நடத்தக்கூடிய ஆளு நானு, தெரியுமா? எங்கிட்ட இந்த மூடநம்பிக்கை விஷயமெல்லாம் வேணாம். பேசாம போயிடு. பேய் கீய்னு இங்க நின்னுகிட்டு ஒன்னும் டிராமா பண்ணாத.." எரிச்சலாகவும் அசட்டையாகவும் சொன்னான் அவன். அவன் சொன்னதையே காதில் வாங்காதவளைப்போல அவள் மறுபடியும்     "நாந்தான்  பேய்" என்று மறுபடியும் அலறினாள்.
    வெறிகொண்டவன்போல இளநீர்க்குவியலைவிட்டு வேகமாக முன்னே வந்தான் அவன். "பேயாடி நீ, எந்தப் பேய்க்குடி இவ்ளோ பெருசா மாரு இருக்குது..." என்று சட்டென்று முன்னேறி அவள் மார்பைப்பற்றி ஒரு கணம் அழுத்தி விடுவித்தான் அவன். அவ்வளவு பெரிய கூட்டத்திடையே இப்படி நடக்கக்கூடும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒருகணம் எல்லாருடைய உடலும் உதறி அடங்கியது.  கோயிலிலிருந்து வெளியே வந்த பெண்களும் பூக்காரிகளிடம் பூ வாங்கிக்கொண்டிருந்த பெண்களும் மருந்துக்கடை, பேருந்து நிறுத்தம், தேநீர்க்கடை என அங்கங்கே நின்றுகொண்டிருந்தவர்களும் அக்காட்சியைப் பார்த்து மனம்பதைத்தவர்களாக "ஐயோ பெருமாளே..." என்று அச்சத்தில் உதடுகள்மீது விரல்வைத்தார்கள். ஒரு பூக்காரி "அட பொறம்போக்குக்கு பொறந்த நாயே, கோயில் வாசல்ல வச்சி அசிங்கத்த பண்ணிட்டடியேடா பொறுக்கி, உனக்கெல்லாம் அக்கா தங்கச்சி கெடையாதாடா?" என்று சொன்னவாறு எழுந்து அவளைநோக்கி ஓடினாள்.
    ”நாந்தான் பேய், நாந்தான் பேய்..." என்று இடைவிடாமல் சொன்னபடி அருகில் குவிக்கப்பட்டிருந்த ஒரு இளநீரை வேகமாக எடுத்து அவனை அடிக்க ஓங்கினாள். இளநீர்க்காரன் அதை ஒரு வேடிக்கையாக நினைத்துக் கள்ளச்சிரிப்பு சிரித்தான். ", நீ£ காயத் தூக்கிக் காட்டனா பயந்து செத்துடுவாங்கன்னு நெனச்சிகிட்டியா? அதுக்கெல்லாம் வேற ஆள பாக்கணும். வா வா, கிட்ட வாடி, இன்னொரு பக்கம் பாக்கியிருக்குதில்ல" என்று எகத்தாளமாகச் சிரித்தபடி லுங்கியை அவிழ்த்துக் கட்டினான்.
    யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில் அவள் அந்த இளநீர்க்காயை அவன் மார்பின்மீது படுமாறு வேகமாக வீசித் தாக்கினாள். அதை அவன் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. குழப்பத்திலும் ஆத்திரத்திலும் அவன் நிதானம் குலைந்து நம்பமுடியாமல் அவள்பக்கம் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் இன்னொரு காயை எடுத்து வீசிவிட்டாள். இம்முறை காய் அவனுடைய அடிவயிற்றைத் தாக்கியது. ஒருகணம்கூட இடைவெளி இல்லாமல் அவள் வாய்மட்டும் "நாந்தான் பேய், நாந்தான் பேய்..." என்று கூச்சலிட்டபடி இருந்தது. மெல்லமெல்ல அந்தக் கூச்சல் உச்சத்துக்குப் போனது. கூச்சலிட்டபடியே மீண்டும்மீண்டும் தொடர்ச்சியாக கைக்குக் கிடைத்த காயை எடுத்தெடுத்து விசித்திரமான உறுமலோடு அவன்மீது வீசிக்கொண்டே இருந்தாள் அவள். ஒவ்வொன்றும் அவனுடைய வயிற்றையே குறிவைத்துத் தாக்கியது. சில காய்கள் தொடையிலும் கால்மூட்டிலும் தாக்கின. அடிகளிலிருந்து தப்பிக்க ஒரு பக்கம் சாய்ந்து குனிந்து சமாளிப்பதற்குள் தடுமாறி தரையில் சரிந்தான் அவன். ஆத்திரத்தோடு எதிர்த்துத் தாக்குவதற்காக அவன் எழுந்தபோது லுங்கி தடுக்கி மீண்டும் கீழே விழுந்துவிட்டான்.
    தன்னுடைய ஒற்றை வார்த்தையை ஏதோ மந்திரத்தை முணுமுணுப்பதைப்போல வேகமாகவும் அழுத்தமாகவும் சொன்னபடி அவள் அவனைக் காய்களால் அடித்துக்கொண்டே இருந்தாள். புற உலகம் என்பதே அவள் கவனத்திலிருந்து பிறழ்ந்துவிட்டதைப்போல இருந்தது. காயைக் குனிந்து எடுப்பதையும் அவனைநோக்கி வீசுவதையும் வேகவேகமாகச் செய்தாள். ஒவ்வொரு காயும் அவன் உடம்பில் மோதி உருண்டது. முதலில் "உன்னை என்ன பண்ண போறேன் பாருடி..." என்று எகத்தாளமாகக் கூவியபடி எழுந்திருக்க முயற்சி செய்த இளநீர்க்காரன் பிறகு எழமுடியாத நிலையில்  அனிச்சையாக "வேணாம் வேணாம்..." என்று கெஞ்சுதலை வெளிப்படுத்தியபடி கைகளைக் காட்டித் தடுத்தான்.
    முதல் கணத்தில் உருவான அதிர்ச்சியைத் தொடர்ந்து சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவருமே அவன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவன் செய்கையைக் கண்டு ஆவேசத்துடன் அவனைநோக்கி எழுந்து ஓடிய பூக்காரிகூட அவன் அடிபடுவதைக் கண்டதும் தயங்கி நின்றுவிட்டாள். "போடு போடு, அவன் ஆத்தாகிட்ட குடிச்ச பால இன்னைக்குக் கக்கிடணும் அந்த நாயி. பொட்டப்புள்ளன்னா இந்தப் பசங்களுக்கெல்லாம் ஒரு எளக்காரம். நல்லா புத்திவரட்டும். போடுடி.." என்று ஒதுங்கி நின்று சொல்லத் தொடங்கினாள். அடித்துஅடித்து அவனைக் கூழாக்காமல் அவள் விடப்போவதில்லை என்று எல்லாருக்குமே தோன்றியது.  அவள் ஒரு காயை உயர்த்தி அவன் தலைமீது போடுவதற்காக ஓங்கினாள். ஒரு பலி மிருகத்தைப்போல அவன் தரையில் அலங்கோலமாகக் கிடந்தான். அவன் உடையிலும் உடலிலும் பழுதி அப்பிக் கிடந்தது. அவன் கண்களில் உயிர் அச்சம் தெரிந்தது. "வேணாம், வேணாம் விட்டுடு..." என்று அலறினான். அக்கணம் அந்தக் காயை வேறொரு பக்கத்தில் வீசிவிட்டு சட்டென்று அவள் விலகினாள். அவளுக்கு மூச்சு இறைத்தது. கலைந்திருந்த தலைமுடி இன்னும் கொஞ்சம் கலைந்து நாலாபக்கமும் காற்றில் அலைந்தது. கூடியிருந்தவர்கள் அனைவருமே அவள் நடந்துசெல்ல வழிவிட்டு விலகி நிற்பதுபோலத் தோன்றியது. எல்லாருடைய கண்களிலும் மிரட்சி.  அச்சம். பக்தி.
    இளநீர்க்காய்கள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தன. புழுதியும் ரத்தமும் படிந்த உடலோடு எழுந்த இளநீர்க்காரன் தடுமாறித்தடுமாறி மிக மெதுவாக நடந்து ஒவ்வொரு காயாக எடுத்துவந்து குவித்தான்.
    வீட்டுக்குத் திரும்பும்போது அக்காட்சியை பலநு¡று முறைகள் மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். "நாந்தான் பேய், நாந்தான் பேய்" என்ற அவளுடைய உறுமல் நெஞ்சில் ஒலித்தபடியே இருந்தது. பேய் என்பது தனித்த ஒரு வடிவமல்ல என்றும் தெய்வத்தன்மையின் மாற்றுவடிவமே பேய் என்றும் சொல்லிக்கொண்டேன். அந்த வாக்கியத்தின் இறுதியில் ஒரேஒருகணம் என் மனத்தில் கோயில் கருவறையில் பாம்பின்மீது நின்றிருக்கும் கரிய கிருஷ்ணனின் சிற்பம் ஒளிர்ந்து மறைந்தது. பாம்பை வெல்லத் தெரியாமல் அடிபட்டுக் குலைந்த இளநீர்க்காரனை நினைத்தபோது சற்றே வருத்தம் படர்ந்தது.