Home

Tuesday 22 December 2015

பூமியின் மடியில் - கட்டுரை

பள்ளியிறுதி நாட்களில் குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் ஒருவித வேடிக்கையுணர்வும் ஆச்சரியமும் படர்ந்து மலைக்கவைத்துவிடும். ஆளை வெளியே தள்ளுகிற மலைப்பு அல்ல அது. உத்வேகமூட்டி தன்னைநோக்கி ஈர்த்துக்கொள்கிற மலைப்பு. ஒருவகையில் காந்தம்போல. இன்னொருவகையில் விதவிதமாக கதைகளை விதவிதமான கோணங்களில் புனைந்து சொல்கிற ஒரு மூதாட்டியைப்போல. குறுந்தொகையின் பாடல்களை அப்போது பாதியளவில்கூட உள்வாங்கிக்கொள்ள முடியாததாகவே இருந்தது. ஆனாலும் மூதாட்டியின் கைவிரல்களைப்போல அந்த வரிகள் மனத்தைத் தொட்டு வருடிக்கொண்டே இருப்பதில் ஒருவித மகிழ்ச்சியும் பரவசமும் கிட்டின.
குறுந்தொகையின்  நானுறு பாடல்களும் முதன்மையாக நானு¡று விதமான உரையாடல்கள். தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி ஆகியோரில் யாரோ ஒருவர் மற்றொருவரிடம் அந்த உரையாடலை  நிகழ்த்துகிறார். அதாவது தலைவன் தன்னுடைய மனஉணர்வை உடனடியாகப் பார்க்கக் கிடைக்கும் தோழி  அல்லது பாங்கனிடம் வெளிப்படுத்துகிறான். செவிலி தலைவியிடமோ அல்லது தோழியிடமோ தன் ஆதங்கத்தைச் சொல்லி ஆற்றிக்கொள்கிறாள். இப்படி ஒருவரிடம் இன்னொருவர் சொல்லிக்கொள்வதற்காகவே ஏராளமான தருணங்கள் உருவாக்கப்படுகின்றன. எல்லா உரையாடல்களிலும் உரை நிகழ்த்துகிறவர்மட்டுமே இடம்பெறுகிறார். உரையை காதுகொடுத்துக் கேட்பவரின் இருப்பு குறிப்பால் மட்டுமே உணர்த்தப்படுகிறது. 
ஒவ்வொரு பாடலும் கிட்டத்தட்ட ஐந்து முதல் எட்டு வரிகளுக்குள் முடிந்துவிடும். பல தருணங்களில் அவற்றில் பாதி வரிகள் அல்லது முக்கால் பங்கு வரிகள்  விளிப்பதற்கே செலவழிகின்றன. எந்த உரையாடலும் எடுத்த எடுப்பிலே நாடனே, ஊரனே என்று சொல்லி நேரிடையாக தொடங்குவதில்லை. மாறாக, மிகநீண்ட விளி பயன்படுத்தப்படுகிறது. "வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட" என்றோ அல்லது "கழனி மா அத்து விளைந்து உகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்" என்றோதான் அழைக்கப்படுகிறது. என் ஆச்சரியத்துக்கான முதல் காரணம் இதுதான். தனக்கு முன்னால் நிற்கிற ஒரு ஆணிடம் அல்லது பெண்ணிடம் பேசுவதற்கு இவ்வளவு நீண்ட முன்னுரை ஏன் என்பது எனக்குள் ஒரு விடையறியமுடியாத கேள்வியாக விஸ்வரூபம் கொண்டது. இந்த அளவுக்கு முன்னுரை சொல்லி அழைத்தபிறகு, சொல்லவருகிற செய்தி மிகச் சாதாரணமாக ஒற்றை வரியிலோ அல்லது இரண்டு வரிகளிலோ அடங்கிவிடுகிறது. இது என்னுடைய இரண்டாவது ஆச்சரியம். "மழைக்காலம் வந்துவிட்டது, ஆனாலும் வருவதாகச் சொன்னவர் வரவில்லை" என்கிற அளவிலோ அல்லது "உன் களவுச்செய்தி எல்லாருக்கும் தெரிந்துவிட்டது, விரைவாக நீ மணம்புரிந்துகொள்ள ஏற்பாடு செய்"  என்கிற அளவிலோதான் அந்த உரையாடல் சுருக்கமாக இருக்கும். ஒரு பாடலின் அமைப்பை ஒரு விளியும் ஒரு வேண்டுகோளும் இணைந்த சட்டகம் எனத் தோராயமாக வகுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. குறுந்தொகையின் பாடல்களை இந்த சட்டகத்தின் வெவ்வேறு வகைமாதிரிகளாக என் இளம்வயது மனம் உள்வாங்கிக்கொண்டது. அதே தருணத்தில் என் முடிவில் ஏதோ முக்கியமான ஒன்றை நான் தவறவிடுவதாகவும்  தோன்றியது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு காய்கறிகள் வாங்கிவர கடைத்தெருவுக்குச் சென்றிருந்தேன். பழக்கம் காரணமாக என்னைப் பார்த்ததுமே "என்ன இன்னைக்கு அம்மா வரலைங்களா? தனியா வந்துட்டீங்க?" என்று சிரித்தவண்ணம் கடைக்கார அம்மா புதுசாக வந்திறங்கிய எல்லாக் காய்கறிகளிலும் கொஞ்சம் எடுத்து ஒரு பையில் நிரப்பத் தொடங்கினார். அதுவரை அந்த அம்மாவின் தொடையில் உட்கார்ந்திருந்த அவருடைய பேரக்குழந்தை சட்டென ஓரடி நகர்ந்து அருகில் இருந்த உருளைக்கிழங்கு மூட்டைக்குள்  கையைவிட்டு கிழங்குகளைத் தொட்டு உருட்டியது.  "என் தங்கக்கட்டி, கொஞ்ச நேரம் இருடா"  என்று  காய்கறிகார அம்மாவின் கெஞ்சுதல்களையும் மீறி அக்குழந்தை கிழங்கு மூட்டைக்குள் தன் பிஞ்சுக்கைகளைவிட்டுத் துழாவியது. அவர் தன்னைநோக்கி அக்குழந்தையை இழுப்பதும் அது விலகி கூடையைநோக்கி ஓடுவதும் ஒரு நாடகத்தைப்போல நடந்தது. தன் விரல்களால் மூட்டையைப் பற்றி எடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் நழுவவிட்டது குழந்தை.  நழுவவிடும் ஒவ்வொரு முறையும் தன் உதடுகளைக் கடித்தபடி மறுபடியும் வேகம் கொண்டு கூடையை நெருங்கியது. "என்னம்மா, பேரக்குழந்தையா?" என்று நான் கேட்ட கேள்விக்கு "ஆமாங்கய்யா, வர வாரம் கோயில் திருழா வருதில்ல. அதுக்காக ஊரிலேருந்து பொண்ணும் மாப்பிள்ளயும் வந்திருக்காங்க. கொழந்தைய எங்கிட்ட கொண்டாந்து உட்டுட்டு ரெண்டும் சினிமாவுக்கு போயிட்டுதுங்க" என்றார் கடைக்கார அம்மா.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் மீண்டும்மீண்டும் மூட்டைக்குள் கிழங்குகளை அக்குழந்தை கலைத்து விளையாடிய காட்சியே மனத்தில் எழுந்து எழுந்து மறைந்தது. எதிர்பாராத ஒரு கணத்தில் கபிலரின் குறிஞ்சித்திணைப் பாடலில் இடம்பெறும் ஒரு விளியும் நினைவுக்கு வந்தது. கபிலர் காட்டுவது கடைத்தெரு அல்ல. ஒரு காடு. மரங்களும் செடிகளும் புதர்களும் அடர்ந்து  செறிவான காடு. எங்கெங்கும் ஏராளமான பாறைகள். அப்பாறைகளின் இடைவெளியில் மயில்கள் தம் முட்டைகளை வைத்திருக்கின்றன. தற்செயலாக மரத்திலிருந்து இறங்கிவரும் கருங்குரங்கின் குட்டிகள் அந்த முட்டைகளைப் பார்த்துவிடுகின்றன. உடனே அம்முட்டைகளை உருட்டி விளையாடத் தொடங்கிவிடுகின்றன. முட்டைகளின் இயல்போ அல்லது அதன் உள்ளே துடித்துக்கொண்டிருக்கும் உயிரின் தன்மையோ, எதுவுமே அவற்றுக்குத் தெரியவில்லை. அவற்றுக்குத் தம் மகிழ்ச்சி ஒன்றே குறி. இப்படி ஒரு சித்திரத்தைக் கட்டியெழுப்புகிற கபிலர்  இந்த அளவுக்குத் தன்னை மறந்து குதியாட்டம் போடுகிற குரங்குகள் ஆடுகிற குன்ற நாடனே என்று விளிக்கிறார். இந்த விளியின் பின்னால்தான் இவ்வளவு கதை. அதன் பிறகு இடம்பெறும் பாடலின் இரண்டுவரிகளும் அப்படிப்பட்ட குன்றனுடைய நட்பைப்பற்றி உரைப்பவையாக அமைந்து முடிவடைகிறது. விளிக்குப் பின்னணியாகச் சொல்லப்படும் கதை அல்லது வரிகள் பாடலுக்கு வெளியே இருப்பதாக இத்தனை காலமும் நான் நினைத்துக்கொண்டிருந்தது எவ்வளவு பெரிய குழந்தைத்தனம் என்று அக்கணத்தில் உணர்ந்துகொண்டேன். உண்மையில் அதுதான் பாடலைத் தாங்குகிற மையம். அல்லது பாடல் மையம்கொண்டிருக்கிற இருட்பகுதியை நோக்கி நீட்டிக் காட்டப்படும் தீபம். மயில் முட்டையைப் போன்றவள் மென்மை பொருந்திய தலைவி. அதன் இயல்பு தெரியாமல் உருட்டி விளையாடும் குரங்குக்குட்டி போல விளையாட்டுக்குணம் பொருந்தியவன் தலைவன். பெண்ணின் மனத்தைப் புரிந்துகொள்ளத் தெரியாமல் அலைக்கழிக்கும் ஆண். அந்த உண்மை புரிந்ததும் பாடலின் வரிகளுக்கிடையே பயணம் செய்யும்  வழியைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியும் புல்லரிப்பும் மனத்தில் நிரம்ப அன்றிரவு முழுக்க குறுந்தொகையின் வரிகளிடையே திரிந்தேன். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐந்துவகைத் திணைகளின் பாடல்களிலும் இடம்பெற்றிருக்கும் விதவிதமான விளிகளும் அவ்விளிகளைத் தாங்கியிருக்கும் சின்னச்சின்ன அற்புதச் சித்திரங்களும் நாம் பார்த்து அனுபவிப்பதற்காக யாரோ வைத்துவிட்டுச் சென்ற ஒரு புகைப்படத் தொகுப்பைப்போல இருப்பதை உணர்ந்தேன். ஒரு பேருண்மையைக் கண்டுகொண்ட பரவசத்தில் மூழ்கித் திளைத்தது மனம்.
கவிஞர்கள் உண்மையில் சுட்டிக்காட்ட நினைப்பது எதை? அந்த உணர்வையா? மானுடப் பாத்திரங்கள் வரவழைத்துக்கொள்கிற துயரத்தையா? அவர்கள் கண்டடைகிற மகிழ்ச்சியையா? காதலையா? காதலின் வலியையா? காமத்தையா? அதில் விரும்பியும் விரும்பாமலும் பொசுங்கி நுகரும் ஆனந்தத்தையா? மீண்டும்மீண்டும் கேள்விகள் நெஞ்சில் பெருகிக்கொண்டே இருந்தன. காதலோ அல்லது காமமோ, அது கடலைவிட ஆழமானது என்றும் வானத்தைவிட  உயர்ந்தது என்றும் மண்ணுலகைவிட விரிவானது என்றும் உணர்ந்து அதன் கைகளிடையே நம்மை ஒப்படைத்து ஒடுங்கும் புள்ளியையே அக்கவிஞர்கள் நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள் என அப்போதைக்கு ஒரு விடையை வரையறுத்துக்கொண்டேன். அப்புள்ளியில் இருந்து நோக்கும்போது அக்கவிஞர்கள் அனைவரும் மாபெரும் கலைஞர்கள் என்பதையும் சுவைஞர்கள் என்பதையும் பெருமையோடு உணர்ந்துகொண்டேன். ஒரு விளி, அதற்குத் தொடர்பான ஒரு சித்திரம் என ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றித் தள்ளியிருக்கமுடியும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. குறுந்தொகையில் ஒரே ஒரு பாடலை இயற்றிய கவிஞரும் இடம்பெற்றிருக்கிறார். ஏழெட்டுப் பாடல்களை இயற்றிய கவிஞரும் இடம்பெற்றிருக்கிறார். கற்பனையால் புனைவதல்ல, கவிமனத்தால் கண்டடையப்படுவதே மாபெரும் சித்திரம். இத்தனை நு¡ற்றாண்டுகள் கழிந்த பின்னரும் அதன் சுடர் அணையாமல் இருப்பதற்குக் காரணம் அது ஒரு கவிஞன் தன் ஆழ்மனத்தால் கண்டடைந்த படிமம் என்பதுதான். ஒரே ஒரு நல்ல படிமத்தைக் கண்டடைய ஒரு கவிஞன் தன் வாழ்நாள் முழுதையும் செலவழிக்கலாம். அந்த ஒரு கவிதை அவனை உலகம் உள்ள அளவும் அவனைப்பற்றிப் பேசவைக்கும்.
குறுந்தொகைப் பாடல்களை இன்று படிக்கும்போது இன்னும் கூடுதலான வெளிச்சத்தைநோக்கி நகரமுடிகிறது. காதல் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு காமமும் உண்மை. ஆனந்தம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு வேதனையும் உண்மை. இரண்டையும் தள்ளித்தள்ளி வெவ்வேறு திசையில் வைத்துவிட்டு ஒன்றைமட்டும் பார்ப்பதில் உண்மை புரிவதில்லை. இரண்டும் அருகருகேயே வாழத்தக்கவை. ஒன்றின் இருப்பு இன்னொன்றைப் புறக்கணிப்பதில்லை. மாறாக, இரண்டுக்கும் இடையே ஒரு மாறாத சமநிலை விகிதம் இயங்கி இரண்டுக்குமான இருப்புக்கும் நியாயத்தைக் கற்பிக்கிறது. இந்தச் சமநிலையைக் கண்டடைந்தவன்தான் குறுந்தொகைக்கவிஞன் என்று தோன்றுகிறது.
இப்படி எனக்கு நானே சொல்லிக்கொண்ட பிறகு, தற்செயலாக புறஉலகில் காணநேர்ந்த பல காட்சிகள் குறுந்தொகைச் சித்திரங்களைப்போலவே இருப்பதை உணர்ந்தேன்.  கவிதை, ஏட்டில் மட்டுமில்லை, வாழ்க்கையிலும் சுடர்விடுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சற்றே பிசகினாலும் கண்களைவிட்டு அகன்றுவிடக்கூடிய பல அசாதாரணக் காட்சிகள் இந்த மண்ணுலகில் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன. வீதியோர விளக்குக்கம்பங்களைப்போல.   வாழ்க்கையின் ஆதார உண்மையை வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு அலைவரிசைகளில் இந்த மானுட குலத்துக்கு அவை முன்வைத்தபடி உள்ளன.
என் மனத்தில் இன்றும் பசுமையாக நினைவிலிருக்கும் ஒரு  காட்சியை உடனடியாகச் சொல்லமுடியும். ஒருமுறை குடும்பத்துடன் பீஜப்பூர் சென்றிருந்தேன். ஏராளமான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டிருக்கும் ஊர் அது. பத்தாவது நு¡ற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தாரால் விஜயபுரி என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட ஊர். பிறகு சுல்தான்கள் ஆட்சியில் பெயர்மாறி வடக்கிலிருந்து வருகிறவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக விளங்கத் தொடங்கியது. அக்காலத்தில்தான் ஏராளமான நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. உலகிலேயே மிக அகன்ற குவிமாடத்தைக் கொண்ட கோல்கொம்பஸ் இங்குதான் உள்ளது. முகம்மது அதில்ஷா என்னும் சுல்தான் காலத்தில் எழுப்பப்பட்ட மாபெரும் அதிசயம் அது. நு¡ற்றிஐம்பது அடி உயரமும் நூற்றியிருபது அடி விட்டமும் கொண்ட அக்குவிமாடத்தின் அழகு முதல் பார்வையிலேயே நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.
உள்புறத்தில் ஒற்றைத் தூண்கூட இல்லாமல் அந்தரத்தில் அம்மாடம் பிரம்மாண்டமான ஒரு தாமரைமொக்கைப்போல விண்ணைநோக்கிக் குவிந்திருக்கிறது. அதைச் சுற்றி வருவதற்காக நூறடி உயரத்தில்  உள்முகமாக ஒரு வட்டப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பாதையில் எந்தப் புள்ளியில் நின்று குரல் எழுப்பினாலும் பதினோருமுறை எதிரொலித்து அடங்கும். அம்மா என்று நாம் அழைக்கும் குரல் மீண்டும்மீண்டும் நம் காதிலேயே பதினோருமுறை மோதி அடங்கும். அந்த இசையின் அதிர்வுகள் நம் உடலை ஊடுருவிச் செல்வதுபோல இருக்கும். உள்வட்டப்பாதையில் சுவரோரமாக உதடு குவித்து நாம் ரகசியமாகச் சொல்லும் ஒரு வார்த்தை வேறொரு இடத்தில் சுவரோரமாக செவிகுவித்து காத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு மிகவும் துல்லியமாக தொலைபேசி உரையாடலைப்போல  கேட்கும் விந்தையை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. அக்குவிமாடத்துக்குள் நின்று ரகசியமாக பெருமூச்சுகூட விடமுடியாது. ஒன்று எதிரொலித்துவிடும். அல்லது மறுமுனையில் காதுகொடுத்துக் கேட்பவரின் செவியை அடைந்துவிடும். இப்படியெல்லாம் திட்டமிட்டுத்தான் இம்மாடம் கட்டப்பட்டதா அல்லது கட்டியபிறகு இந்த அதிசயங்களும் அழகுகளும் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
மாடத்தைச் சுற்றி பச்சைப்பசேலென  விரிந்திருக்கும் புல்வெளியில் எந்தப் புள்ளியில் நின்று பார்த்தாலும் பேரழகி ஒருத்தியைப் பார்ப்பதுபோலத் தோற்றமளித்தது அந்த மாடம். ஒருகணம் மனம்முழுக்க அழகில் திளைத்த பரவசம் அருவிபோலப் பொங்கிவழிந்தது. அந்த இடத்தைவிட்டுக் கிளம்புவதற்கு மனமில்லாமலேயே வெளியே வந்தோம். தற்செயலாக என் பார்வை மதிலேராமாக திரும்பியபோது பித்தனைப்போல தோற்றம் கொண்ட ஒருவன் ஒரு தூணோடு சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருக்கும் காட்சி தெரிந்தது. அழுக்கான தோற்றம். நிர்வாணக் கோலம். ஒட்டுத்துணி கூட இல்லை. பசி போலும். பேசத் தெரியவில்லை. சைகையாலேயே வயிற்றைக் காட்டி பிரயாணிகள்முன் கையை நீட்டிக்கொண்டிருந்தான். ஒருகணம் என் உடல் வேதனையில் கூனிக்குறுகியது. என் பைக்குள் மதியத்துக்காக வைத்திருந்த சோற்றுப் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். அவசரமாக வாங்கி அதைப் பிரித்து வேகவேகமாக அவன் புசிக்கத் தொடங்கினான். இந்த உலகில் அவனைத் தவிர வேறு யாருமே இல்லை என்கிற எண்ணத்தில் அல்லது ஒரு மாபெரும் காட்டில் தன்னந்தனியாக உலவ வந்ததைப்போன்ற எண்ணத்தில் அவன் இருப்பதைப்போலத் தோன்றியது. பசியைமட்டுமே உணரமுடிந்த ஓர் எளிய மனிதன்.
அழகின் பசிகொண்டு திரள்திரளாக வந்துகொண்டிருக்கும் மனிதர்கள்முன்னால் பேரழகே உருக்கொண்டு நிற்பதுபோலத் தோற்றமளிக்கும் அதிசயக் குவிமாடம் ஒருபக்கம்.  வயிற்றுப் பசியைத் தவிர வேறெதையும் உணர்ந்துகொள்ளத் தெரியாமல் சங்கிலிகளிடையே கட்டுண்ட பித்தன் இன்னொரு பக்கம். இதில் எது உலகம்? எது வாழ்க்கை? அழகும் அவலமும் அருகருகே நின்று மானுடனுக்கு எதை உணர்த்துகிறது? எந்தச் சமநிலையை அல்லது அடிப்படையை இந்தத் தோற்றம் மானுடனைநோக்கிச் சொல்லாமல் சொல்கிறது? என் மனம் கேள்விகளால் நிரம்பத் தொடங்கியது. அருகில் நடந்துவந்த அமுதாவிடம் இரண்டு காட்சிகளையும் சுட்டிக்காட்டி என் எண்ணங்களைச் சொன்னேன்.
"அழகுக்குப் பக்கத்திலேயே இப்படி ஒரு அலங்கோலம் நிக்குதுன்னா என்ன சொல்றது? அழகையும் அலங்கோலத்தையும் எது தீர்மானிக்குது? நாம பாக்கற விதம்தானே எல்லாத்துக்கும் காரணம்? ரெண்டுக்குமே இந்த உலகத்துல இடமிருக்குது. பார்வையை மாத்திகிட்டா தானா புரியும். பசுவுக்கு என்ன இடமுண்டோ அதே இடம் இந்த உலகத்துல பாம்புக்கும் உண்டு. பலாப்பழத்துக்கு என்ன இடமுண்டோ அதே இடம் பாகல்காயுக்கும் உண்டு. பூமாதேவி மடியில எப்போதும் எந்தப் பேதமும் இல்ல.  எல்லாமே அவளுடைய படைப்புகள்" அமுதா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
"அப்படியா சொல்ற?"
"சிரிப்பு அழுகை ரெண்டுக்குமே வாழ்க்கையில இடமிருக்கறமாதிரிதான் இது. சிரிக்கும்போது அழுகையை மறந்துடக்கூடாது. அழும்போது சிரிப்பை மறந்துடக்கூடாது. ஒன்னுமாத்தி ஒன்னு வந்துகிட்டேதான் இருக்கும். பகலும் ராத்திரியும் மாறிமாறி வரமாதிரி."
என்னைவிட அமுதா மிகவும் தெளிவாக இருப்பதுபோலத் தோன்றியது. நான் ஏதோ மிகப்பெரிய உண்மை ஒன்றை அக்காட்சி உணர்த்துவதை அவளுக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்று தொடங்கினால் அதை ஏற்கனவே கண்டுகொண்டவளைப்போல அவள் சொன்னதை புன்னகையோடு அசைபோடத் தொடங்கினேன்.