தமிழ் மொழியில் வற்றாத படைப்பூக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் சங்க இலக்கியம், இலக்கண நூல்கள், காப்பியங்கள், நவீன கவிதை, உரைநடை, ஆய்வு என விரிந்துகிடக்கும் பல்வேறு துறைகளைக் கற்றுத் தேர்ந்து, அவற்றில் தனக்குகந்த களத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக தன் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் படைப்பாளர்கள் பலர் நம் சூழலில் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது ஒரு வகையான தமிழ்த்தொண்டு. சங்ககாலம் முதல் எழுதப்பட்ட படைப்புகளையெல்லாம் தன் சமகாலத்தில் வாழும் மக்களிடையில் அறிமுகப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அறிமுகக்கட்டுரைகள் எழுதியும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் பரப்பிவந்த ஆளுமைகளும் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது இன்னொரு வகையான தமிழ்த்தொண்டு.
தமிழில்
எழுதப்பட்ட படைப்புகளை புதிய தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்தி, அவற்றை ஒரு பேசுபொருளாக
மீண்டும் மீண்டும் எழுதியும் பேசியும் நிறுவுவதற்கு அத்தகு தொண்டுகள் தேவைப்படுகின்றன.
அத்தகு உழைப்பைக் கொடுப்பவர்கள் அனைவரையும் ஒருவகையில் தொண்டர்கள் என்றே குறிப்பிடலாம்.
கடந்த
இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழிக்கென உழைத்த எண்ணற்ற தொண்டர்களைப்பற்றி அரிதின்
முயன்று தகவல்களைத் திரட்டித் தொகுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் புதுவைப்
பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன். அவர் எழுதிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள்
இணையதளத்தில் இன்றும் காணக் கிடைக்கின்றன. அத்தொண்டர்களின் பட்டியலில் உலகமறிந்த அறிஞர்களும்
உண்டு. கேள்விப்பட்டிராத அறிஞர்களும் உண்டு. இன்று அவர்கள் மீதும் அவர்கள் ஆற்றிய தொண்டின்
மீதும் வெளிச்சம் விழாதிருக்கலாம். ஆயினும் காலம் என்றேனும் அவர்கள் ஆற்றியிருக்கும்
பங்களிப்புக்குத் தக்க நன்றிக்கடனைச் செலுத்தி வணங்கக்கூடும். அந்த நாள் விரைவில் வரும்.
இந்நூலை
வாசிப்பவர்களில் ஒருவராலும் மறக்க முடியாத ஓர் அறிஞரின் பெயர் திருக்குறள் பெருமாள்.
புதுவையைச் சேர்ந்த மூர்த்திக்குப்பம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் அவர். அந்தக் காலத்தில்
இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்வியை அவரால் பெற முடிந்தது. பிறகு தன் தந்தைக்குத்
துணையாக விவசாயத்தில் ஈடுபட்டபடியே பிற அறிஞர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கேட்டு
தன் ஞானத்தை வளர்த்துக்கொண்டார். சொந்த முயற்சியால் திருக்குறளைப் படித்துத் தேர்ச்சி
பெற்றார். படிக்க வாய்ப்பில்லாத தம் சிற்றூர்ச் சிறுவர்களைச் சேர்த்து அவர்களுக்குக்
கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.
திருக்குறளை
மனப்பாடம் செய்ததோடு மட்டுமன்றி, அதை மக்களிடையில் பரப்பும் வகையில் பல இடங்களில் உரை
நிகழ்த்தியதாலும் மக்கள் அவரைத் திருக்குறள் பெருமாள் என்றே அழைத்தனர். திருக்குறள்
வீ.முனுசாமி நடத்திய குறள்மலர் என்னும் இதழில் பணியாற்றும் வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக்கொண்டார்.
அவருடைய சுறுசுறுப்பையும் தொண்டாற்றும் முனைப்பையும் கண்ட பாவேந்தர் பாரதிதாசன் அவரைப்
பெரிதும் பாராட்டி உற்சாகமளித்தார். சிறிது காலம் பாரதிதாசன் நடத்திவந்த அச்சகத்திலும்
பெருமாள் பணியாற்றினார். தமிழ்த்தொண்டு என்றே காலமெல்லாம் அலைந்துவந்த பெருமாள் தன்
நாற்பத்துமூன்றாம் வயதில் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். பரிதிமாற்கலைஞர்
சூரியநாராயண சாஸ்திரியாரின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தனக்குப் பிறந்த முதல்
மகனுக்கு சூரியநாராயண மூர்த்தி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.
கடைகளில்
கணக்கு எழுதும் வேலை, மின்பணி, துறைமுகப்பணி, உழவுத்தொழில், கொத்துவேலை, அச்சகவேலை
, சங்கிலி பிடித்து நிலம் அளக்கும் வேலை என பல்வேறு வேலைகளில் பெருமாள் மாறிமாறி ஈடுபட்டுவந்தார்
என்றபோதும் திருக்குறள் மீது கொண்ட ஈடுபாட்டை மட்டும் அவர் இறுதிவரைக்கும் விடவில்லை.
நீண்ட கால அலைச்சலைத் தொடர்ந்து அஞ்சல்நிலையத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றும் வாய்ப்பு
எதிர்பாராத விதமாகக் கிடைத்தது. ஓய்வு பெறும்
வரைக்கும் அந்த வேலையையே செய்துவந்தார். அப்போதும் மாலையில் கிடைக்கும் ஓய்வுப்பொழுதுகளில்
மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் திருக்குறள் ஈடுபாட்டை உருவாக்கும் முயற்சிகளில்
ஈடுபட்டு வந்தார். அவருடைய ஈடுபாடு காரணமாகவே அவரை மக்கள் அனைவரும் திருக்குறள் பெருமாள்
என அழைத்துவந்தனர். அவருடைய பண்புகளையும் தமிழார்வத்தையும் முன்வைத்து கவிஞர் பெருஞ்சித்திரனார்
அவரைப்பற்றி நீண்டதொரு பாடலை எழுதிப் பதிவு செய்திருக்கிறார். அவருடைய கனிச்சாறு தொகைநூலில்
அந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது.
பெருமாளைப்போலவே
வறிய விவசாயப் பின்னணியிலிருந்து தோன்றிய இன்னொரு அறிஞர் கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப்
புலவர். அவர் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பமொன்றில் 08.03.1907 அன்று
பிறந்தார். ஏழாம் வகுப்பு வரை சொந்த ஊரில் படித்துவிட்டு, தொடர்ந்து படிப்பதற்காக சிதம்பரத்துக்குச்
சென்றார். எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கிய கடும்காய்ச்சல் அவருடைய செவித்திறனைப்
பறித்துவிட்டது. எனினும் இலக்கியப் பிரதிகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வாசிப்பிலும் எழுதுவதிலும் தொடர்ந்து
ஈடுபட்டு புலமை பெற்றார். பிறர் நம்பிக்கையைப் பெற்ற பிறகு தமிழ்ப்பதிப்புப் பணிகளில்
ஈடுபடத் தொடங்கினார். கருப்பக்கிளர் என்னும் ஊரைச் சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டு, அந்த
ஊரிலேயே தங்கி வாழத் தொடங்கிவிட்தால் அவருடைய பெயரோடு அந்த ஊரின் பெயர் முன்னொட்டாக
அமைந்துவிட்டது.
இருநூறுக்கும்
மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டார் அவர். ஆர்வத்தின் காரணமாக, சூளாமணி, பிரபுலிங்கலீலை,
இரங்கேச வெண்பா, முதுமொழி வெண்பா ஆகிய நூல்களுக்கும் உரை எழுதினார்.
அவருக்கு
நான்கு பிள்ளைகள் இருந்தபோதும், அவருடைய குடும்பத்தின் மீது கவிந்திருந்த வறுமையின் காரணமாக அவர்கள் அனைவரும் கல்வியில் மிகவும் பின்தங்கிவிட்டனர்.
அதனால் கருப்பக்கிளர் தாம் எழுதிய நூல்களையும் தம்மிடமிருந்த நூல்களையும் தம் மறைவுக்கு
முன்பேயே திருமடங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.
தொல்காப்பிய
உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்ற அறிஞர் ஆ.சிவலிங்கனார் என்பவரைப்பற்றி முனைவர் மு.இளங்கோவன்
எழுதியிருக்கும் கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. கடலூர் நகரில் புதுவண்டிப்பாளையம்
என அழைக்கப்படுகிற கரையேறிவிட்ட குப்பம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நெசவுத்தொழிலைக்
குடும்பத்தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் 30.11.1922 அன்று அவர் பிறந்தார். கடலூர் நகராட்சிப்பள்ளியில்
கற்ற கல்வியைத் தொடர்ந்து ஞானியார் மடத்தில் சேர்ந்து இருபதாம் வயது வரை சிவசண்முக
மெய்ஞான சிவவாக்கியார் சுவாமிகள் வழியாகப் பாடங்களைக் கேட்டு கல்வியறிவைப் பெருக்கிக்கொண்டார்.
அதைத்
தொடர்ந்து திருவையாறு கல்லூரியில் சேர்ந்து படித்து புலவர் பட்டம் பெற்றார். சிறிது
காலம் வீரவநல்லூரில் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பிறகு மயிலம் தமிழ்க்கல்லூரில்
வேலையில் சேர்ந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். அதற்குப் பிறகு தாம்
பிறந்த ஊரான கடலூருக்கே திரும்பி வந்து ஞானியார் மடத்தில் சேர்ந்து மடாலயப்பணிகளில்
ஈடுபட்டார். சமயநூல்களைப் பதிப்பிப்பதிலும் இலக்கிய இலக்கண ஆய்வுகளில் ஈடுபடுவதில்
வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆய்வுகளைப் பாராட்டி உலகத் தமிழாராச்சி நிறுவனம் அவருக்குத்
தொல்காப்பியச் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
பண்ணுருட்டியைச்
சேர்ந்த இரா.பஞ்சவர்ணம் என்னும் தமிழ்த்தொண்டரின் பங்களிப்பு மகத்தானது. தமிழ் இலக்கியங்களில்
இடம்பெற்றுள்ள தாவரங்களைப்பற்றிய தகவல்களையெல்லாம் திரட்டி நூல்களை எழுதியவர் இவரே.
இவர் பண்ணுருட்டியில் 04.07.1919 அன்று பிறந்தவர். பள்ளியிறுதி வரை பண்ணுருட்டியிலேயே
படித்து கடலூர் கல்லூரியில் புகுமுகப் படித்தார்.
அந்த
ஊர் நகராட்சித் தலைவராகப் பணியாற்றியபடியே தமிழிலக்கியங்களில் தாவரங்கள் பற்றிய செய்திகளைத்
தேடித்தேடிச் சேகரித்தார். தாவரங்களை அறிமுகப்படுத்தும்போது அவற்றின் அறிவியற்பெயர்,
வழக்குப்பெயர், வளரியல்பு, மருத்துவப்பயன்பாடு, சித்தமருத்துவத் தொகைப்பெயர் என பல தரப்பட்ட செய்திகளையும் இணைத்து
முன்வைப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. தாவரத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி,
தமிழ்நூல்கள் பலவற்றை ஏற்படுத்தி, ஆய்வுநோக்கில் தொகுத்து வெளியிட்டார். அவர் பிரபஞ்சமும் தாவரங்களும் என்பது அவர் எழுதிய
முக்கிய நூலாகும். ஏறத்தாழ 252 தாவரங்களைப்பற்றிய தகவல்களைத் தொகுத்திருக்கிறார்.
இத்தொகைநூலின்
இன்னொரு முக்கியமான ஆய்வாளர் பாவலர் மணி என அழைக்கப்பட்ட ஆ.பழநி. காரைக்குடியைச் சேர்ந்தவர்.
வறுமை சூழ்ந்த விவசாயப் பின்னணியில் தம் பெற்றோருக்கு ஒன்பதாவது பிள்ளையாக
07.11.1931 அன்று பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அவரால் கல்வி கற்கமுடிந்தது.
பிறகு வட்டிக்கடையிலும் துணிக்கடையிலும் பல்பொருள் அங்காடியிலும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அதைத் தொடர்ந்து எட்டாண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். ஆயினும்
எத்தருணத்திலும் கல்வியின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை மறக்காமல் தொடர்ந்து பயின்று
யாரோ ஒருவருடைய உதவியால் பள்ளியிறுதித்தேர்வை எழுதித் தேர்வு பெற்றார். அதற்குப் பிறகு
மேலைச்சிவபுரி கல்லூரியில் சேர்ந்து பயின்று புலவர் பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டில்
காரைக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளியில் தமிழாசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அதற்குப்
பிறகே அவருக்குச் சீரான வாழ்க்கை அமைந்தது. பேராசிரியர் தமிழண்ணல், பாவலர் முடியரசன்
போன்றோருடன் பழகி தன் அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக்கொண்டார். அவரே அனிச்ச அடி என்னும்
செய்யுள் நாடகத்தை எழுதினார். எண்ணற்ற இலக்கியக்கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும்
எழுதி வெளியிட்டார்.
குறிப்பிட்டுச்
சொல்லப்படவேண்டிய இன்னொரு முக்கியமான ஆய்வாளர் பேராசிரியர் அடிகளாசிரியர். தம் தொல்காப்பியப்
பதிப்புகள் வழியாக உலகப்புகழ் பெற்றவர். இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தொல்காப்பியர்
விருதைப் பெற்றவர். அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூகையூர் என்னும் சிற்றூரில்
1910இல் பிறந்தார். இளம்வயதிலேயே தந்தையாரை இழந்ததால் தாய்மாமன் வீட்டில் தங்கி தமிழும்
வடமொழியும் கற்றார். தாய்மாமன்கள் மருத்துவத்திலும் சோதிடத்திலும் வல்லவர்களாக இருந்ததால்,
அவர்களிடமிருந்தே அவ்விரண்டையும் கற்றுத் தேர்ச்சியடைந்தார். தன் ஆர்வத்தின் காரணமாக
தமிழ் நூல்களைத் தேடித்தேடிக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இருபத்தைந்து வயதுக்கு மேல்
தனித்தேர்வராக தேர்வெழுதித் தேறி சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து புலவர்
பட்டம் பெற்றார். மயிலம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலை செய்யத் தொடங்கினார். சில
ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை பல்கலைக்கழகத்திலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும்
பணியாற்றினார். அங்கு பணிபுரிந்த போது தொல்காப்பிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தவண்ணம்,
பல தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டார். தொல்காப்பியத்தை முன்வைத்துச்
செய்த ஆய்வுநூல்கள் மட்டுமன்றி, இருபதுக்கும் மேற்பட்ட பழைய நூல்களுக்கு உரையெழுதி
வெளியிட்டார். இருபதுக்கும் மேற்பட்ட படைப்பிலக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
இத்தகு
42 ஆளுமைகளின் பங்களிப்புகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் இளங்கோவன். தமிழ்நூற்கடல்
என அழைக்கப்படும் கோபாலய்யர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பாவலர்
செ.இராசு, புதுவை இரா.திருமுருகன், பேராசிரியர் தமிழண்ணல், முருகு சுப்பிரமணியன், கா.செல்லப்பன்,
ம.இலெ.தங்கப்பா, த.கோவேந்தன் போன்ற ஒவ்வொரு ஆளுமையும் ஒவ்வொரு விதத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியிருக்கிறார்கள்.
தன்னலம்
கருதா இத்தகு தொண்டர்களால் கட்டி உருவாக்கப்பட்டதுதான் தமிழ் என்னும் மாளிகை. அவர்களைப்பற்றிய
தகவல்களைத் திரட்டி கட்டுரைவடிவில் தொகுத்து நூலாக்கியதன் வழியாக முனைவர் மு.இளங்கோவன
ஒருவகையில் இந்த அறிஞர்களுக்கு தமிழுலகம் சார்பாக நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கிறார்
என்றே சொல்லத் தோன்றுகிறது. அவருடைய பணி தமிழுலகத்தின் வணக்கத்துக்குரியது.
(தகைசால் தமிழ்த்தொண்டர்கள். முனைவர் மு.இளங்கோவன்,
வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர்
மாவட்டம் 612901. விலை. ரூ.350)
(புக் டே – இணைய தளம் – 08.01.2026)
