கடந்த காலத்தைப்பற்றிய நினைவுச்சித்திரங்களையும் அனுபவக்குறிப்புகளையும் குறைவான சொற்களில் செறிவாக எழுதும் ஆற்றல் நிறைந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர். அவருடைய பல கட்டுரைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதொரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கும். தமிழுக்கு வளம் சேர்க்கக்கூடிய கட்டுரையாசிரியர்களில் அவர் முக்கியமானவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்து தமிழ் திசை நாளேட்டில் ஆன்மிக இணைப்பிதழான ‘ஆனந்த ஜோதி’யில் ‘அகத்தைத் தேடி’ என்னும் தலைப்பில் அவர் ஒரு தொடரை எழுதினார். நாம் அறியாத பல ஞானியரைப்பற்றியும் உயர்ந்த மனிதர்களைப்பற்றியும் அரிதின் முயன்று தேடியடைந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் அவருடைய கட்டுரைகள் அமைந்திருந்தன.
அவர்கள்
அனைவரும் சாதி, சமயம், பாலினம் என எல்லாப் பிரிவினைகளையும் கடந்து சத்தியத்தையும் விடுதலைக்கான
வழிகளையும் தேடியலையும் மனம் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சமயம் என்னும் கூட்டிலிருந்து
ஆன்மிகத்தை விடுவித்து அதை மக்களைத் தழுவிய ஒன்றாக கட்டமைத்த பெருமைக்குரியவர்கள் என்பதால்
அவர்கள் அனைவருமே முக்கியமானவர்களாகத் தெரிகிறார்கள். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு
நூலைப் படித்த நிறைவை அளிக்கிறது. அக்கட்டுரைகளின் சிறப்பு கருதி அந்நாளிதழ் தன் பதிப்பகத்தின்
வழியாகவே அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது.
இன்று
புத்தக வடிவில் அக்கட்டுரைகளைப் படிக்கும்போது, ஒவ்வொரு கட்டுரைக்கான தகவல்களைத் திரட்டித்
தொகுக்க தஞ்சாவூர்க் கவிராயர் எவ்வளவு பாடுபட்டிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்தப் புத்தகங்களையெல்லாம் அவர் எங்கிருந்து தேடிக் கண்டடைந்தார் என்று வியப்பாகவும்
இருக்கிறது. அவருடைய அர்ப்பணிப்புணர்வு மகத்தானது.
இந்நூலில்
மானாமதுரைக்கு அருகிலுள்ள கட்டிக்குளம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி சுவாமிகள்
என்பவரை முன்வைத்து ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மண்பாண்டம் செய்யும் தொழிலைச் செய்துவரும்
குடும்பத்தில் பிறந்தவர் அவர். வீட்டில் பரம்பரைச் சொத்தாக வைக்கப்பட்டிருந்த வைத்திய
நூல்கள், ஓலைச்சுவடிகள், சித்தாந்த நூல்களைப் படித்து தனக்கேயுரிய வழியில் ஞானத்தை
அடைந்தார். அன்பு ஒன்றே இவ்வுலகில் மாமருந்து என்பதையே தன் போதனையாக இந்த உலகுக்குத்
தெரிவித்தார்.
ஒருமுறை
கருங்குளம் என்னும் ஊரைச் சேர்ந்த பட்டணத்துப்பிள்ளை என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
கைகால்களில் விலங்கு பூட்டிய நிலையில் அவரை ஓர் அறையில் அடைத்துவைத்திருப்பதாகவும்
ஒரு செய்தி அவரை வந்தடைந்தது. அதைத் தெரிந்துகொண்டதும் கட்டிக்குளத்திலிருந்து புறப்பட்டு
அவருடைய வீட்டைத் தேடிச் சென்றார். அந்த வீட்டாரிடம் பேசி பட்டணத்துப்பிள்ளை அடைத்துவைக்கப்பட்டிருந்த
அறையைத் திறக்கவைத்து உள்ளே சென்றார். பட்டணத்துப்பிள்ளையின் கைகளிலும் கால்களிலும்
பூட்டப்பட்டிருந்த விலங்குகளை அகற்றினார். அந்த வீட்டாரிடம் ஒரு தட்டில் சோறு எடுத்துவருமாறு செய்து, அதைப் பிசைந்து ஒவ்வொரு கவளமாகத் தானும்
உண்டு, அவருக்கும் ஊட்டிவிட்டார். சாப்பிட்டு முடிந்ததும் அவருடைய வாயைத் துடைத்து
கழுவிவிட்டு முதுகில் தட்டிக் கொடுத்து ஆரத் தழுவிக்கொண்டார். அதுவரை உம்மென்றிருந்த
நோயாளியின் கண்களில் ஒரு தெளிவு தோன்றியது. அவரையும் பிறரையும் பார்த்து புன்னகைத்தார். அன்பு மட்டுமே ஒரு நோயாளிக்கு மருந்தாகும் என்று
அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் மாயாண்டி சுவாமிகள். இப்படி
ஒரு கட்டுரை அமைந்துள்ளது. புத்தகத்தைப் படிக்கப்படிக்க இதுபோன்ற தகவல்கள் வந்துகொண்டே
இருக்கின்றன.
அரவிந்தருக்கு
ஒரு சீடர் இருந்தார். அவர் பெயர் அமிர்தா. இயற்பெயர் அமுதன். படிப்பதற்காக புதுவை வந்தவர்
அரவிந்தரைச் சந்தித்து அவருடைய சீடராகிவிட்டார். ஏறத்தாழ ஐம்பதாண்டு காலம் அரவிந்தரின்
அன்புக்குரியவராக ஆசிரமத்திலேயே தங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. அரவிந்தரோடு
உரையாடிப் பெற்ற அனுபவங்களை ‘அமிர்தாவின் குறிப்புகள்’ என ஒரு நூலாகவே எழுதியிருக்கிறார்.
அந்த நூலைத் தேடிப் படிக்கவேண்டும் என்கிற ஆவலை தஞ்சாவூர்க்கவிராயரின் கட்டுரை ஏற்படுத்துகிறது.
ஜெர்மனியைச்
சேர்ந்த லூசி என்னும் சிறுமி ஒருநாள் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தபோது,
அதில் அச்சாகியிருந்த சிவபெருமானின் ருத்ரதாண்டவ ஓவியத்தைப் பார்த்து பரவசம் கொண்டார்.
அந்த உருவம் இந்தியாவில் வழிபடக்கூடிய சிவபெருமானின் வடிவம் என்பதைத் தன் தாய் வழியாகத்
தெரிந்துகொண்டார். அந்த உருவம் அவரை ஆட்கொண்டது. சிவதாண்டவக்காட்சியை அவருடைய அகம்
உணர்ந்துகொண்டது. அவர் வளர்ந்து பெரியவளானார். எழுத்தாளராகவும் ஆனார். ஆனாலும் அந்த
அகத்தேடல் அவரை விடவில்லை.
இரண்டாம்
உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தற்செயலாக ஒரு காட்டுக்குள் பயணம் சென்றிருந்த
சமயத்தில் ஒரு குடிசையில் அவர் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவருடைய வீட்டில் ரமணரின்
படத்தைப் பார்த்தார். அவரைப்பற்றிய செய்திகளையும் அந்தப் பெண்மணி வழியாகத் தெரிந்துகொண்டார்.
அப்போது, அவருக்குத் தான் செல்லவேண்டிய திசை எது என்பது புரிந்துவிட்டது.
ரமணரைப்பற்றி
மேலும் தெரிந்துகொள்வதற்குத் தமிழறிவு முக்கியமானது என்பதை உணர்ந்து, பான் பல்கலைக்கழகத்தில்
சேர்ந்து தமிழ் படித்தார். தமிழிலிருந்து மொழிபெயர்க்கும் அளவுக்குத் தன் ஆற்றலை வளர்த்துக்கொண்டார்.
ரமணரின் உபதேசங்களை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து, அப்பிரதியுடன் ஒருநாள் திருவண்ணாமலை
ஆசிரமத்துக்கு வந்துசேர்ந்தார். ஆசிரமவாசிகள் அவரை அன்னையாகவே ஏற்றுக்கொண்டு லூசிமா
என அழைக்கத் தொடங்கினர். அப்போது ரமணர் மறைந்து ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்டிருந்தன.
சத்தியமயி என்னும் புனைபெயரில் அவருடைய ஜெர்மன் மொழியாக்க நூல்கள் வெளிவந்தன. ரமணரின்
வாழ்க்கை வரலாற்றையும் அவரே ஜெர்மன் மொழியில் எழுதினார். 91 வயது வரை ஆசிரமத்துக்கு
அருகிலேயே ஒரு குடிலமைத்துத் தங்கி பல்வேறு புத்தகங்களை எழுதிய பிறகு இயற்கையெய்தினார்.
அக்கட்டுரையைப் படிக்கும்போது தன் வாழ்க்கையை அவர் பொருள்பொதிந்ததாக அமைத்துக்கொண்டதைப்
புரிந்துகொள்ள முடிகிறது.
இத்தொகுதி
வழியாகத் தெரியவருகிற இன்னொரு முக்கியமான ஆளுமை ஆவுடை அக்காள். அவர் செங்கோட்டையில்
ஓர் அந்தணக்குடும்பத்தில் பிறந்தவர். பால்ய விவாகம் செய்யப்பட்டு, சில ஆண்டுகளிலேயே
கணவன் இறந்துபோனதால் விதவைக்கோலம் பூண்டவர். ஆயினும் பிறரைப்போல மூலையில் முடங்கிவிடாதபடி
அவரிடமிருந்த கல்வியார்வம் அவரைக் காத்தது. அவருடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவருடைய
பெற்றோர் தக்க ஆசிரியர்களைக் கொண்டு அவருக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தனர்.
தற்செயலாக
தெருவில் பாடியபடி நடந்துவந்த திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளைச் சந்தித்து
அவருடைய கருத்துகளால் ஈர்க்கப்பட்டார் ஆவுடை அக்காள். அவருடைய ஆசிகளோடு தன்னைப்போன்ற
பெண்டிர் ஆன்மிக ஞானம் பெறுவதற்காக பாடல்களைப் புனையத் தொடங்கினார். சம்பிரதாயப் பாடல்களிலும்
விளையாட்டுப் பாடல்களிலும் கூட வேதாந்தக்கருத்துகள் வெளிப்படும்படி பாடி, அப்பாடல்கள்
எங்கெங்கும் பரவும்படி செய்தார். ஆன்மானபூதியில் திளைத்து பித்து பிடித்தவர்போல நடந்துகொண்ட
அவரை அந்த ஊர்க்காரர்கள் சாதிவிலக்கம் செய்ய முயற்சி செய்தனர். அதே சமயத்தில் அந்த
ஊரிலேயே இருக்கப் பிடிக்காத ஆவுடை அக்காள் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நீண்ட
காலத்துக்குப் பிறகு ஆவுடை அக்காள் திரும்பி வந்தபோது அவருடைய பாடல்களுக்கு பல நல்ல
சீடர்கள் உருவாகியிருந்தார்கள். ஒரு ஆடிமாத அமாவாசை அன்று குற்றாலம் சென்று அருவியில்
நீராடி மலைமீது ஏறிச் சென்ற ஆவுடை அக்காள் அதற்குப் பிறகு திரும்பிவரவில்லை. அவருடைய
பாடல்களைத் தொகுத்து திருக்கோவலூர் ஞானானந்த தபோவனம் வெளியிட்டிருக்கிறது.
ஆண்டவன்
பிச்சி என்பவருடைய வாழ்க்கைக்கதையும் சுவாரசியமாக உள்ளது. அவர் சென்னையைச் சேர்ந்தவர்.
அவருடைய இயற்பெயர் மரகதவல்லி. அவர் பள்ளிக்குச் சென்றதில்லை. ஆயினும் பெற்றோர் உதவியுடன்
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று தேர்ச்சி பெற்றார். எட்டு வயதிலேயே
அவர் பாடல் புனையும் ஆற்றல் பெற்றவராகவும் மாறிவிட்டார். நினைத்த மாத்திரத்தில் அவரால்
பாட முடிந்ததை அனைவரும் வியப்போடு பார்த்தனர். முருகன் மீது ஆழமான பற்று கொண்டிருந்தார்.
இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஒன்பது குழந்தைகளைப் பெற்றிருந்த போதிலும் முருகனைப்பற்றிய
சிந்தனையில் அவர் ஒருநாளும் பின்வாங்கியதில்லை.
அவருக்கு
1954இல் சந்நியாச தீட்சை அளித்து ஆசி வழங்கியவர் சுவாமி சிவானந்தா. குமரன் மீது தொடர்ந்து
பாடல் எழுதியபடி தமிழகம் மட்டுமன்றி, உடுப்பி, காசி, ரிஷிகேசம், அயோத்தி, கயை, பிருந்தாவனம்
என பல இடங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத் திரும்பினார். திரும்பும் வழியில்
சென்னை தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கதிர்காம வேலன் சந்நிதியில்
முருகனின் அழகைக் கண்டு அவர் ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல்வரிகளால் ஈர்க்கப்பட்ட
யாரோ ஒருவர் அச்சந்நிதியில் ஒரு பளிங்குக்கல்லில் அந்த வரிகளைச் செதுக்கி வைத்திருக்கிறார். அந்தப்
பாடலின் இனிமையான கட்டமைப்பின் காரணமாக அதைப் பார்த்து எழுதிச் சென்று பலரும் பல இடங்களில்
பாடியிருக்கிறார்கள்.
ஒருமுறை
பழனிக்குச் சென்றிருந்த திரைப்படப் பாடகரான டி.எம்.எஸ். ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது
ஓர் இஸ்லாமியச் சிறுவன் முருகன் பாட்டை முணுமுணுப்பதைக் கேட்டு மெய்மறந்திருக்கிறார்.
அந்தப் பாடலைப்பற்றிய விவரத்தைக் கேட்டபோது அச்சிறுவன் யாரோ ஒரு வழிப்போக்கர் தனக்கு
அப்பாடலை எழுதிக் கொடுத்ததாகவும் அதை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டு பாடி வருவதாகவும்
தெருவித்தான். முழுப்பாடலையும் அச்சிறுவனிடமிருந்து எழுதி வாங்கிக்கொண்டு சென்னைக்குத்
திரும்பிய டி.எம்.எஸ். அப்பாடலுக்கு தாமே இசையமைத்துப் பாடி கிராமபோன் இசைத்தட்டாக
பதிவு செய்து வெளியிட்டார். ’உள்ளம் உருகுதய்யா’ என்கிற அந்தப் பாடல் தமிழ்நாடெங்கும்
பிரபலமானது.
பல ஆண்டுகளுக்குப்
பிறகு காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றபோது அந்தப் பாடல் பிரகாரத்தில் ஒரு கல்வெட்டில்
செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியப்பில் மூழ்கினார் டி.எம்.எஸ். அவ்வரிகளின் கீழே
ஆண்டவன் பிச்சி என்னும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததையும் அவரே இந்த உலகுக்குத் தெரிவித்தார்.
பிறகு அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாறு சார்ந்த தகவல்களைத் திரட்டிய ஆர்வலர்கள் மிகச்சிறிய
நூலாக அதை வெளியிட்டனர்.
சூரி
நாகம்மா என்பவர் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். நான்கு வயதில் தந்தையை இழந்தார்.
பத்து வயதில் தாயையும் இழந்தார். பால்யவிவாகம் செய்துவைக்கப்பட்டு பன்னிரண்டு வயதிலேயே
விதவைக்கோலம் பூண்டுவிட்டார். வீட்டிலிருந்த
பெரியவர்களின் துணையோடு அவர் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஒரு பாறை மீது அமர்ந்தபடி
தன்னை கருணையோடு பார்க்கும் ஒரு பெரியவரின் சித்திரம் அடிக்கடி அவர் கனவில் வந்துகொண்டிருந்தது.
அவர் யார் என்று தெரியாமலேயே அவர் மீது பற்று கொண்டார் நாகம்மா.
ஒருநாள்
அவருடைய சகோதரர் அவரை திருவண்ணாமலையில் ரமணரின் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே வழிபாட்டுக்கு அமர்ந்திருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த ரமணரைப் பார்த்தபோது,
அடிக்கடி தன் கனவில் வந்த பெரியவரே அங்கு அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. அவரை நேரில்
பார்த்த கணத்தில் நாகம்மாவின் மனத்தில் அமைதி பெருகியதை உணர்ந்தார். தன்னிச்சையாக அவருக்குள்
கவிதை புனையும் வேகம் உருவாகி, ரமணர் மீது சில பாடல்களை இயற்றி அவர் முன் வைத்தார். அவற்றை எடுத்த ரமணர் அருகில் நின்றுகொண்டிருந்த
ஒருவரிடம் கொடுத்து தம் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அவரைப் பார்த்து
புன்னகைத்தார். அன்றுமுதல் நாகம்மா அந்த இடத்திலேயே தங்கிவிட்டார். ஆசிரமத்தில் தங்கி,
ஒவ்வொரு நாளும் பகவான் கூறும் உபதேசங்களையும் தினசரி நிகழ்ச்சிகளையும் கடிதங்களாக தன்
சகோதரருக்கு எழுதி அனுப்பினார். பிற்காலத்தில் அக்கடிதங்கள் ‘லேகுலு’ என்னும் தலைப்பில்
ஐந்து தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற்றன.
இப்படிப்பட்ட
நாற்பத்தாறு ஞானியர் பற்றிய அறிமுகத்தை இந்தத் தொகுதி வழியாக தமிழுலகத்துக்கு அளித்திருக்கிறார் தஞ்சாவூர்க் கவிராயர். அவருடைய அக்கறையும் உழைப்பும்
பாராட்டுக்குரியவை. அக்கட்டுரைகளை நாளேட்டில் வெளியிட்டதோடு மட்டுமன்றி, அழகிய நூலாகவும்
வெளியிட்டிருக்கும் இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் பணியும் பாராட்டுக்குரியது.
(அகத்தைத் தேடி. தஞ்சாவூர்க் கவிராயர். இந்து
தமிழ் திசை, அண்ணா சாலை, சென்னை – 2. விலை. ரூ 200)
( புக் டே – இணைய தளம் – 02.01.2026)
