Home

Monday 28 March 2016

அப்பாவும் மகனும் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)



தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன். அந்த நாவல் வழங்கிய அனுபவம் நெஞ்சில் இருக்கும்போதே, ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘பூனைகள் நகரம்’ என்னும் ஜப்பானியச் சிறுகதையை அடுத்து படித்தேன். (மூலம்: ஹாருகி முரகாமி) அசோகமித்திரன் கட்டியெழுப்பும் சீரான தந்தை-மகன் உறவு சார்ந்த படைப்புகளை தராசின் ஒரு தட்டில் வைத்தால், அதன் மற்றொரு தட்டில் மேற்சொன்ன படைப்புகளை வைக்கலாம் என்று தோன்றுகிறது. துரதிருஷ்டவசமாக சிதைந்த உறவை முன்வைக்கும் படைப்புகளின் சுமையால் தராசுத்தட்டு தரையை விட்டு மேலெழ வாய்ப்பே இருக்காதோ என்று நினைக்கிறேன்.

Thursday 24 March 2016

தேவதேவனின் கவிதை வரிகள்


நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த நல்ல வாசகர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என தேடித்தேடிப் படிப்பவர். படைப்புகளின் அழகைப் பேசிப்பேசி தம் குடும்பத்தினர் அனைவரையும் இலக்கிய வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்டவர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேவதேவன் கவிதைகளில் மூழ்கியிருந்தார்.

Thursday 17 March 2016

சொர்க்கவாசல் (சிறுகதை)


வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நான்கு மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்துவந்த ஒரு பாட்டி இறந்துவிட்டாள். கம்பங்கள் நட்டு துணிக்கூரை விரித்து பாதையை அடைத்தபடி நீண்ட கண்ணாடிக் குளிர்ப்பெட்டிக்குள் அவளுடைய உடலை வைத்திருந்தார்கள். நடந்துசெல்ல மட்டும் இரண்டடி அகலத்துக்கு இடைவெளி இருந்தது. கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி நூறு நூற்றைம்பது நாற்காலிகள் போடப்பட்டு உறவுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். காரை எடுக்க வழியே இல்லை. 

Tuesday 8 March 2016

நெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’


லங்கேஷ் பிரகாஷண என்னும் பதிப்பகம் கன்னட மொழியில் மிகச்சிறந்த புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் முக்கியமானதொரு அமைப்பாகும். மறைந்த கன்னட எழுத்தாளர் லங்கேஷுக்குச் சொந்தமான  பதிப்பகம். சமீபத்தில் அப்பதிப்பகம் தொண்ணூறு வயதைக் கடந்த எச்.எஸ்.தொரெஸ்வாமி என்னும் காந்தியவாதியின் தன்வரலாற்று நூலை வெளியிட்டது. புத்தகத்தின் தலைப்பு ‘நினைவுச்சுருளைப் பிரித்தபோது’. 1942ஆம் ஆண்டில் நந்தி மலைத்தொடர் விருந்தினர் விடுதியில் ஓய்வெடுப்பதற்காக காந்தி தங்கியிருந்தபோது இருபத்தி நான்கு வயதே நிரம்பிய இளைஞனான தொரெஸ்வாமி ஒருநாள் காலை பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தியைச் சந்தித்தார். அவருடைய எளிமையான தோற்றமும் உரையும் அவரைக் கவர்ந்தன. அவரைப் பின்பற்றி நடக்கும் தீர்மானத்தை அக்கணத்திலேயே அவர் முடிவு செய்துவிட்டார். காந்தியக்கொள்கைகள் அவருடைய வாழ்க்கைக்கும் கொள்கைகளாகிவிட்டன. தன்னுடைய வாழ்க்கையையே அக்கொள்கைகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக வகுத்துக்கொண்டார். அறுபதாண்டுக்கும் மேலான பொதுவாழ்வில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்தப் புத்தகம் அமைந்திருந்தது. காந்தியத்தின் தொடர்ச்சி காந்தி இல்லாத இந்தியாவில் எவ்வாறு நிலைகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கு இது ஒரு நல்ல புத்தகம்.

Tuesday 1 March 2016

கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு



இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நேஷனல் புக் டிரஸ்டு வழியாக ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவருடைய ‘பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துத் தோழியும்’ நாவல்கள் அவரை இந்தியாவின் எல்லா மொழி வாசகர்களிடமும் கொண்டு சேர்த்தது. மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட முயற்சியால் வெளிவந்த ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ ‘மதில்கள்’ ஆகிய இரு நாவல்களும் இந்திய இலக்கியத்தில் பஷீருடைய இடம் எத்தகையது என்பதை  அழுத்தம் திருத்தமாக வரையறுத்தது. மானுடரின் இதயங்களில் கருணை சுடர்விடும் மாபெரும் தருணங்கலின் தொகுப்பாக இருக்கிறது பஷீரின் படைப்புலகம். அவர் பாதை வற்றாத கருணையின் பாதை. கனிவின் பாதை.