Home

Sunday, 3 May 2026

நலிவு - சிறுகதை

  

அருமாத்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சை வர்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது. போகன்வில்லாவும் நந்தியாவட்டையும் வளர்ந்திருக்கிற வாசலுக்கு மேல் சின்ன பெயர்ப்பலகை. பஸ்ஸில் போகிற எந்தப் பிரயாணியும் படிக்கிறமாதிரி பளிச்சென்றுதான் எழுதி இருக்கிறது. ஆனால் பஸ்காரன் மாத்திரம் நிறுத்துவதில்லை. கெஞ்சிப் பார்த்தால்கூட ரொம்ப தூரம் தள்ளி சுல்தான்பேட்டையில்தான்  நிற்கிறது. முனகியபடியே  லூசி  இறங்குகிறாள்.

இறங்கியதும் நடக்காமல் பக்கத்தில் இருந்த தந்திக் கம்பத்தைப் பிடித்தபடி நின்றுகொள்கிறாள். புழுதிக்குப் பயந்து கைக் குட்டையால் வாயையும் மூக்கையும் மூடுகிறாள். கீரைக் கூடையோடு நடுவயசுப் பெண், பர்தா போட்ட தாட்டிகமான முஸ்லீம் பெண், ‘யே அல்லா...’ என்று மூச்சு வாங்கியபடி ஒரு கிழவர்,  இரண்டு கான்வென்ட் சிறுமிகள்  எல்லாரையும் இறக்கிவிட்டு  பஸ் போன பிறகும் கொஞ்சம் நேரம் புழுதி அலைந்தபடிதான் இருக்கிறது.

இறங்கிய பிறகுதான்  பார்த்தமாதிரி  லூசிக்குப்  பக்கத்தில்  இரண்டு சிறுமிகளும் வந்து  நிற்கின்றார்கள்.

குட்மார்னிங் மிஸ்...’

குட்மார்னிங்

வரலிங்களா மிஸ்

நீங்க போங்கம்மா, வரன்

ஓகே மிஸ்

சிறுமிகள்  நகர்ந்த கொஞ்ச நேரத்தில் புழுதி அடங்குகிறது .  அடங்கியதும் நடக்கத் தொடங்குகிறாள் லூசி.

வாந்தி  வருகிறமாதிரி  இருக்கிறது.   உள்ளுக்குள் குமட்டிக் கசக்கிறது. வேகமாய் நடக்கமுடியாமல் பலவீனமாயும் இருக்கிறது.  இந்த நோயில் இருந்து விடுதலையே இல்லையா மாதாவே என்று நொந்துகொள்கிறாள். தினப்படி ஆஸ்பத்திரிக்குப்போய் மருந்து வாங்கிச் சாப்பிட்டிருந்தால் ஒரு வேளை குணமாகி இருக்கும். இல்லையென்றால் செபஸ்டின் கம்பௌண்டர் சொன்னமாதிரி பெரிய ஆஸ்பத்திரியில் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ பெட்டில் இருந்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தாலாவது சரியாகி இருக்கும்.   சரி லூசி,  நீ பெட்ல இருந்து பாத்துக்கோ. பையன நா கவனிச்சிக்கறன்என்று ஜோசப் தைரியமாய்  ஒரு  வார்த்தை சொன்னால் பரவாயில்லை,  சேர்ந்துவிடலாம். செபஸ்டின் கம்பௌண்டர் சொன்னதையெல்லாம் சொல்லிப் பதிலுக்குக் காத்திருந்தபோது ஒன்றுமே பேசாமல் இருந்தான் அவன்.  துண்டு பீடியை அவசரமாய்த் தரையில் தேய்த்து அணைத்துவிட்டு விறுவிறுவென்று எழுந்து வெளியே போய்விட்டான். அதற்குப் பிறகு  நாலு நாளைக்கு வீட்டுப் பக்கமே வரவில்லை.

ஜோசப்புக்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு வேலையில் இருந்து  சஸ்பென்ஷன் ஆகி இருந்தபோதுதான் யூஜின் பிறந்தான்.   யூஜின் பிறந்த கையோடுதான் இந்த வாந்தி ஆரம்பமாகியது.  நேரம் காலம் இல்லாமல் சட்சட்டென்று வாந்தி வந்தது. குடல் அறுந்துபோகிற மாதிரி வலிகண்டு  புரட்டிப்புரட்டிக்கொண்டு வந்தது. தர்மாஸ்பத்திரி மருந்துகளையெல்லாம் மீறி வருகிற வாந்தியை எதைக்கொண்டு நிறுத்துவது-?

கல்யாணமான சமயத்தில் வேலைக்கிருந்த பூச்சி மருந்துக்கடையின் வாசனை, அப்புறமாய் வேலையில் சேர்ந்த பேப்பர் பேக்டரியின் கூழ் நாற்றம், வீட்டுக்குப் பக்கத்தில் வாய்க்காலில் கலக்கிற முனிசிபல் கக்கூஸ் துர்நாற்றம் ஏதாவது ஒன்றின் கடுமையான தாக்கமாகத்தான் இந்த வாந்தி இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாள். எதிர்த்த வீட்டு மேரி அத்தை பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை ஏதாச்சும் கோளாறாகி இருக்கும் என்று சந்தேகத்தோடு சொன்னாள். அதுகூட சரியாய் இருக்கலாம். எக்ஸ்ரே ஏதாச்சும் எடுத்துப் பார்த்தால் ஒருவேளை தெரிய வரலாம். ஆனால் கால் வார்த்தையும்,  அரைவார்த்தையும் பேசிக்கொண்டு ஆக்கி வைத்திருந்தால் சத்தம் காட்டாது வந்து தின்றுவிட்டுப் போகிற புருஷனை வைத்துக்கொண்டு எதை எடுத்து எதைப் பார்ப்பது. பேசாமல் செத்துப் போகலாம். நொந்து நொந்து ஜீவனை வைத்துக்கொண்டிருப்பதைவிட சாவது நிம்மதி. சாவிலாவது வாந்தியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நிம்மதியா இருப்பியாடிஎன்று பூச்சிமருந்துக் கடைக்கும் அனாதை இல்லத்துக்கும் வந்து ஜோசப்பின் அம்மா ஏகப்பட்ட சத்தம் போட்டது. மயிரைப் பிடித்து இழுத்து அடித்தது. அம்மாக்காரியை ஜோசப் வந்து இழுத்துப்போட்டு உதைத்தது. கல்யாணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் வைத்தது எல்லாம் நேற்று நடந்த மாதிரிதான் இருக்கிறது. ஆனால் கணக்குப் பார்த்தால் மூனு வருஷம். மூனு வருஷத்துக்குள் நிறைய நடந்தாயிற்று. தனிக்குடும்பத்தின் ஆரம்ப சந்தோஷம், மாறிமாறி பார்த்த உத்தியோகங்கள், வேலையிலிருந்து சஸ்பென்ஷன், அதற்கப்புறம் டிஸ்மிஸ், கான்வென்ட்டில் தருகிற நூற்றி எண்பது ரூபாய் சம்பளத்தில் பஸ்ஸுக்கு ஐம்பது போக எஞ்சியிருக்கும் பணத்தில் சோறு, குழம்பு, குழந்தைக்குப் பால், மருந்து என்கிற சமாளிப்பு, விசனமே இல்லாமல் திரிந்துவிட்டு வருகிற ஜோசப் பீடிக்கும் சினிமாவுக்கும் காசு கேட்டுப் போடுகிற சண்டை, அம்மா வீட்டோடு அவன் மாத்திரம் ராசியாகி ஏற்படுத்திக்கொண்ட போக்குவரவு, தொடுதல் என்பது அறவே குறைந்து பேச்சுகூட காலும் அரையுமாய்க் குறைய அசுவாரஸ்யமாகிப்போன தாம்பத்யம் எல்லாம் நடந்தாயிற்று. இனிமேல் ஒன்றுமில்லை நடக்க.

நடக்கநடக்கத் தொடைகள் நடுங்குகிறமாதிரி இருக்கின்றன. மூச்சு வாங்குகிறது. புதுசாய் இது ஒரு வியாதி. இருப்பதெல்லாம் போதாதென்று கூடுதலாக இன்னொன்று. என்ன செய்வது. எல்லாம் சோதனைக்காலம்தான். இல்லாவிட்டால் நேற்று மத்தியானம் செகண்ட் பீரியட் நடத்திக்கொண்டிருக்கும்போதே வகுப்புக்குள்ளேயே வாந்தி எடுக்கிறமாதிரி ஆகி இருக்குமா. இதோ வாசலுக்குப் போய்விடலாம் என்று தாண்டி நடப்பதற்குள் வயிற்றுப் பாகத்தில் நாற்காலி இடித்து அங்கேயே வாந்தி வந்துவிட்டது. காலையில் கிளறிச் சாப்பிட்டு வந்த கம்புமாவுக்களி, மருந்து, மாத்திரை எல்லாம் புரட்டிக்கொண்டு வந்துவிட்டது. ராஜேஸ்வரி மிஸ், அல்போன்ஸ் மிஸ், ஸ்டெல்லா மிஸ், மதர் எல்லாரும் வந்துவிட்டார்கள். பிள்ளைகள் எல்லாம் கலவரமாகி ஒதுங்கி அமைதியாய் நின்றிருந்தார்கள். பொன்னம்மா ஆயாதான் இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றி ரூமைச் சுத்தம் செய்தாள். ஒரு  மணி நேரம் எல்லாம் களேபரமாகிவிட்டது. வகுப்பை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று ராஜேஸ்வரி மிஸ்தான் வண்டியேற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டாள்.

இடுப்புப்பக்கம் இற்றுப்போகிறமாதிரி வலிக்கிறது. கொஞ்சம் தாராளமாய் உட்கார்ந்தால் தேவலாம் போல் இருக்கிறது. மின்னுகிற தண்டவாளங்கள் பார்வையில் பட்டு  கான்வென்ட்டுக்கே போயிர்லாம். பக்கத்தில்தானேஎன்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு நடக்கிறாள்.

யூஜினின் ஞாபகம் வருகிறது. மேரி அத்தைக்கு கோயில் கட்டிக் கும்பிட வேண்டும். இந்தக் காலத்தில் இப்படி மனிதர்கள் இருப்பது அதிசயம். வேலைக்கு வருகிற ஒவ்வொரு நாளிலும் மேரி அத்தைதான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறாள். மேரி அத்தை தனது புருஷனிடம் சொல்லி இந்த கான்வென்ட்டில் வேலை வாங்கித் தந்தாள். ‘ஆம்பள கூட வேல செய்யப் பயப்படுவானுங்களே அந்தப் பேக்டரில. நீ ஏம்மா அங்கபோயி கஷ்டப்படற?’ என்று அவர் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கிறது. உலகம் ஒரேயடியாய்க் கெடடுப் போகவில்லை. ஜோசப், ஜோசப் அம்மா மாதிரி ஜனங்களும் இருக்கிறார்கள். மேரி அத்தை, மேரி அத்தை புருஷன் மாதிரி ஜனங்களும்தான் இருக்கிறார்கள். எல்லாம் மாதாவின் செயல்.

பொன்னம்மாவே முதல் மணியடிப்பது தெரிகிறது. வாசலில் கால் வைக்கிற சமயம் லூசியைப் பார்த்துச் சிரிக்கிறாள் அவள்.

இன்னாம்மா பரவாயில்லியா?’

ம்

சுற்றிச்சுற்றி உற்சாகமான குழந்தைகள் சீருடையில் ஆடுகின்றன. எல்லார் முகத்திலும் மலர்ச்சி. சந்தோஷம். சுறுசுறுப்பு. சந்தோஷமான முகத்தையும், கண்ணையும் ஒரு முறை பார்க்கும்போது எதிராளிக்கும் ஒட்டிக்கொண்டு விடுகிறது. காரணம் இல்லாமல் ஜோசப்பின் கடுகடுத்த முகம் ஒரு தரம் மனசுக்குள் வந்து போகிறது. ஸ்டாப்ஃ ரூமூக்குள் போகப்போன சமயம் எதிர்ஹாலில் இருந்து மதர் கூப்பிடுவது கேட்கிறது.

குட்மார்னிங் மதர்...’

வெரி குட்மார்னிங்..’

கொஞ்சநேரம் அமைதி.

இப்ப எப்படி இருக்கு?’

நல்லா இருக்கேன் மதர்

ஒரு விஷயம் சொல்லணும்

சொல்லுங்க மதர்

டேக் யுவர் ஸீட்

பரவாயில்லிங்க மதர். சொல்லுங்க

தப்பா எடுத்துக்கக் கூடாது. நேத்து நீங்க போனப்புறம் ஒங்களப்பத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்னன். ஒரு வியாதிய ரெண்டு வருஷமா வளர உட்டுக்னு இருக்கறது ரொம்ப தப்பு. ஆரோக்கியம்தான் எல்லாத்துக்கும் அடித்தளம். நீங்க அவசியம் டாக்டரைப் பாக்கணும். நல்லா ஓய்வெடுக்கணும். சீக்கிரமா குணமாவணும். இன்னிக்குத் தேதி பதினாலுதான். ஆனா ஒங்க முழுச் சம்பளமும் இந்த பாக்கெட்ல இருக்கு. எடுத்துக்குங்க.

மதர்...’

ஒங்கள நாங்க வெளியேத்தறதா நெனச்சிக்கக் கூடாது. நீங்க மருத்துவம் செஞ்சிக்கணும்னுதான் அனுப்பறம். சீக்கிரம் ஒங்க ஒடம்பு குணமாவ நாங்க எல்லாரும் மாதாவ பிராத்திக்கறம்.

அதற்குப்பிறகு பேச ஒன்றும் இல்லை. நெஞ்சு தழுதழுக்கிறது. ஈரமாய் இரண்டு சொட்டு கண்ணீர் திரள்கிறது. மதர் நீட்டிய பாக்கெட்டை வாங்கிக்கொண்டு ஹாலை விட்டு வெளியே வருகிறபோது மதரும் கூடவே வருகிறார். தோளைத் தட்டிக்கொடுக்கிறார்.

தொடை நடுக்கம் அதிகமாகவே வாசலைப் பார்த்து நடக்க இருந்த லூசி ஸ்டாப்ஃரூம் பெஞ்சில் உட்கார்கிறாள்.

(இங்கே இன்று -1985)