Home

Sunday, 26 April 2026

வாசிப்பும் உரையாடலும்

 

ஜெயஸ்ரீ அவர்களை முதன்முதலாகக் கடலூரில் சந்தித்து உரையாடிய சிறிது நேரத்திலேயே அவர் தம் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த இலக்கிய ஈடுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று தமக்குப் பிடித்த சிறுகதைகளாக அவர் படித்திருந்த சில மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நினைவிலிருந்து அடுக்கிக்கொண்டே சென்றது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

தொடக்கத்தில் அவர் எழுதிய கடிதங்களும் இத்தகு வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவே இருந்தன. கதையுலகத்தையும் எதார்த்த உலகத்தையும் இணைத்துப் பார்த்து சிந்தனையை வளர்த்துக்கொள்ளும் அவருடைய இயல்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு படைப்பைப்பற்றியும் ஒரு கடிதத்தில் அடங்கிப் போகும் அளவுக்கு பத்து பதினைந்து வரிகளில் தம் எண்ணங்களை சுருக்கமாக எழுதித் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் விரிவாக எழுதிப் பழகுமாறு நான் அவருக்குத் தெரிவித்தேன். எல்லோருக்கும் இயல்பாக உருவாகக்கூடிய தயக்கம் அவருக்கும் இருந்தது. அந்தத் தயக்கத்தைக் கடந்து முயற்சி செய்தால் மட்டுமே எழுதத் தொடங்கமுடியும் என பலமுறை அவருக்கு எடுத்துரைத்தபடி இருந்தேன்.

எழுத்து என்பது மனத்தில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தொகுத்து முன்வைக்கும் முயற்சி மட்டுமல்ல. அது நம் எண்ணங்களைக் கூர்மையாக்கி மேன்மேலும் அவற்றைச் சரியான திசையில் வளர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடி நகர்ந்துசெல்லும் முயற்சியும் கூட என்பதை நாம் மறக்கக்கூடாது.

நாம் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பலநூறு நிகழ்ச்சிகளைப் படிக்கிறோம். நம் எண்ணத்துக்கு உகந்த நண்பர்களோடு அவற்றைப்பற்றி உரையாடுகிறோம். ஒரு செய்தியை வாசித்துச் சிந்திப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்டமாக உரையாடலை நோக்கி நகர்கிறார்கள். உரையாடல்கள் மேன்மேலும் அவர்களைச் செம்மைப்படுத்துகின்றன.

ஓர் உரையாடலை மூன்று விதங்களாக வளர்த்துச் செல்லலாம்.  சந்தர்ப்பச்சூழலை முன்வைத்து உரையாடுவது முதல் அடுக்கு. அது சில உண்மைகளை நமக்கு உணர்த்தும்.  நியாயநெறிகளை முன்வைத்து உரையாடுவது இரண்டாவது அடுக்கு. அது நம் புரிதலின் எல்லையை இன்னும் விரிவாக்கும்.  என்றென்றும் மாறாத மானுட அறம் சார்ந்து உரையாடுவது மூன்றாவது அடுக்கு. அது நம் புரிதலை மேம்படுத்திக்கொள்ள மேலும் உதவும்.

வாசிப்புக்கும் உரையாடலுக்கும் உகந்த சூழலில் இருப்பவர்கள் தம் அக உலகத்தின் எல்லைகளை விரிவாக்கிக்கொள்கிறார்கள். ஏதோ காரணத்தால், வாசிப்பதோடு நிறுத்திக்கொள்பவர்கள் அந்தப் புள்ளியிலேயே தேங்கி விடுகிறார்கள். சிற்சில சமயங்களில் தம் எண்ணங்களே உயர்வானவை, தம் கருத்துகளே முக்கியமானவை என்பவை போன்ற பிழையான புள்ளியை நோக்கி சென்றுவிடுகிறார்கள். இப்படி இருவிதமாக இயங்கும் உலகில் தம் அக உலகத்தின் எல்லைகளை விரிவாக்கிக்கொள்ளும் சூழலில் ஜெயஸ்ரீயும் அவருடைய குடும்பமும் அமைந்திருப்பதைப் புரிந்துகொண்ட பிறகு, அச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு படைப்பு முயற்சியில்  இறங்கவேண்டும் என்பதை என் விருப்பமாக ஒவ்வொரு கடிதத்திலும் அவருக்குத் தெரிவித்துவந்தேன்.

ஏதோ காரணம் தொடர்பாக, அவர் படைப்பு முயற்சியைத் தொடங்க தயக்கம் காட்டியபோது, அத்தயக்கம் தாமாகவே உடையும் விதமாக இளமை நினைவுகளையும் வாசித்த புத்தகங்கள் பற்றிய எண்ணப்பதிவுகளையும் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். நல்ல வேளையாக, அந்த யோசனையை அவர் ஏற்றுக்கொண்டு படித்தவற்றில் தமக்குப் பிடித்த ஒருசில புத்தகங்களைப்பற்றி தொடக்கத்தில் உற்சாகமாக எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய கட்டுரைகளை அவரைச் சுற்றியிருந்த பலரும் வாசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டதும் அவருக்குள் ஓர் உற்சாகம் தானாகவே பற்றிப் படரத் தொடங்கிவிட்டது. உடனே அடுத்தடுத்து எழுதத் தொடங்கிவிட்டார்.

ஒரு சின்னஞ்சிறிய  செடி நம்மையறியாமல் வளர்ந்து மரமாக நிற்பதுபோல, ஒரு நல்ல நோக்கத்துடன் மிகக்குறைவான அளவிலேனும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்.  ஒருவேளை, எந்தத் தாக்கத்தையும் உருவாக்கமுடியாமல் போனாலும், நமக்களிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கவில்லை என நமக்குள் திரண்டெழும் மனநிறைவுக்கு நிகராக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

பல்வேறு வகைமைகளில் ஜெயஸ்ரீ தாம் எழுதிய கட்டுரைகளைப் பகுத்துத் தொகுத்திருக்கும் இந்நூலைப் பார்க்கும்போது தம் நிறுவனத்தின் வளர்ச்சிநிலை ஏறுமுகத்தில் இருக்கும் ஒரு வரைபடத்தைப் பார்க்கும் ஒரு நிறுவனராக நான் என்னை உணர்கிறேன்.

புத்தகங்களை வாசிக்கும்படியும் அவற்றைப்பற்றிய எண்ணங்களைத் தொகுத்துக்கொண்டு யோசிக்கும்படியும் எழுதும்படியும் புதியவர்களைச் சந்திக்க நேரும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வது வழக்கம். பலர் அச்சொல்லை மரியாதையின் நிமித்தமாகக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டாலும் ஒரு புன்னகையோடு கடந்துபோய்விடுவார்கள். சிலர் ஆர்வத்தின் காரணமாக தம் முயற்சியை வேகவேகமாகத் தொடங்குவார்கள். ஆயினும் ஏதோ காரணங்களால் தொடர்ந்து முன்னநகர முடியாமல் மெல்ல மெல்ல நின்றுவிடுவார்கள். ஜெயஸ்ரீ போன்ற ஓரிருவர் மட்டுமே தொடர்ந்து களத்தில் நின்று வெற்றியடைகிறார்கள். அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பே சாட்சி. அவர் இந்த வெற்றிப்பாதையில் மேன்மேலும் தளரா முயற்சியுடன் முன்னேறிச் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  

(எஸ்.ஜெயஸ்ரீயின் பெயரென்னும் பெருமை என்கிற கட்டுரைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)