Home

Sunday 27 June 2021

ஒன்பது குன்று - அனுபவக்கதைகள்

  

வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக எழுதினேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.

இலக்கியத் தேன்துளிகள்

  

ஏட்டுச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கிய நூல்கள் அனைத்தும் அச்சு வடிவத்துக்கு மாற்றப்பட்ட காலத்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லவேண்டும். அச்சு ஊடகம், அனைத்து வகையான   எழுத்துகளையும் அனைவருக்கும் பொதுவாக ஆக்கியது. அச்சுநூல்கள், படிக்கத் தெரிந்த அனைவரையும் தன் வாசகர்களாக உருமாற்றிக்கொண்டன. ஏற்கனவே இலக்கியத்தில் தோய்ந்த வித்துவான்களும் புலவர்களும் ஆசிரியர்களும் ரசனையில் தேர்ந்தவர்களும் புதிதாக உருவான இலக்கிய வாசகர்களுக்கு இலக்கியத்தின் நுட்பத்தையும் அழகையும் வாய்ப்பு கிட்டிய  தருணங்களிலெல்லாம் சுட்டிக்காட்டினார்கள். அங்கங்கே இலக்கிய அமைப்புகள் உருவாகி இலக்கிய நயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இலக்கியத்துக்கும் மக்களுக்கும் இடையில் ஒருவித நெருக்கம் உருவாக இத்தகு முயற்சிகள் தூண்டுகோலாக இருந்தன.

தனபால் என்னும் கலைஇயக்கம்

 

தமிழக வரலாறு பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி நாடறிந்த அறிஞர். அவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படிப்பதைவிட எப்போதும் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதைக் கவனித்தார். அதனால் அவர் அந்த மாணவனைப் பார்த்துநீ போய் ஓவியக்கல்லூரியில் சேருடா, அதுதான் உனக்கு நல்லதுஎன்று சொன்னார். அப்போது அந்த மாணவனுக்கு ஓவியக்கல்லூரி இருக்கும் திசை கூட தெரியாது.

Sunday 20 June 2021

சித்தலிங்கையா : எளியவர் போற்றிய கலைஞன்

 

சித்தலிங்கையா 1954 ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் மாகடிக்கு அருகில் உள்ள மஞ்சணபெலெ என்னும் ஊரில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பள்ளிப்படிப்பும் கல்லூரிப்படிப்பும் பெங்களூரில் அமைந்தன. முதுகலைப்படிப்பில் கன்னட மொழியை பாடமாக எடுத்து தங்கப்பதக்கத்துடன் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறி கன்னட ஆய்வு மையத்தில் இணைந்தார். பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, எண்ணற்ற கள ஆய்வுகளுக்குப் பிறகு நாட்டுப்புறத் தெய்வங்கள் என்னும் தலைப்பில் அவர் எழுதிய ஆய்வேடு இன்றளவும் கன்னட ஆய்வாளர்களிடையில் ஒரு வழிகாட்டி நூலாக விளங்குகிறது.

கடல் - சிறுகதை

 பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடலைப் பார்த்தபடி நின்றான் முட்டக்கோஸ். அருகில் யாரும் இல்லை. கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாக ஓடிவரும் அலைகள் நெஞ்சில் முட்டிமோதுவதைப்போல இருந்தது. எனக்கு எதுவும் தெரியாது சாரு. நான் சொல்றத நம்பு சாருஎன்று அழுது கெஞ்சக் கெஞ்ச இந்தக் கரையோரமாகத்தான் அடித்து இழுத்துச் சென்றார்கள் போலீஸ்காரர்கள். இடுப்பெலும்பை முறிப்பது போல இடைவிடாது விழுந்த லத்தியடிகள் இன்னும் நினைவில் இருந்தன. அனிச்சையாக பின்புறத்தைத் தடவிக் கொண்டன அவன் கைகள். அன்று கரைநெடுக ஆட்கள் நின்றிருந்தார்கள். அவன் சொற்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுடைய சத்தியத்துக்கும் கண்ணீருக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றும் சக்தி இல்லை. சந்தர்ப்பச் சூழல்கள் அவனையே குற்றவாளியாக சுட்டிக்காட்டின. வயதின் காரணமாக முதலில் சீர்திருத்தப் பள்ளியிலும் பிறகு சிறைச் சாலையிலும் தண்டனைக் காலத்தைக் கழிக்கவேண்டியிருந்தது.

Sunday 13 June 2021

நெல்லித் தோப்பு - சிறுகதை

‘‘நெல்லித்தோப்பு கவுண்டர் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். போய்ப் பாருடா’’ என்றார் அப்பா. வெயிலில் ரொம்ப தூரம் நடந்து வந்திருந்தார் அவர். கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தார். நாலைந்து இடங்களில் எனக்காகவே அலைந்தலைந்து வேலை பார்த்துத் தருவதும் அதை நான் இரண்டு மூன்று வாரங்களிலேயே தொலைத்துவிட்டு நிற்பதுமாக மாறிமாறி நடந்து கொண்டிருந்த காலம் அது. என்னைப் பார்த்த பார்வையில் ஒருவித விரோதம். எரிச்சல். நான் பதில் சொல்ல கொஞ்ச நேரம் தாமதித்து விட்டேன். ‘‘துப்பு கெட்ட நாயே. இதான் கடைசி தரம். இனிமே சத்தியமா ஒனக்காக எவன்கிட்டயும் போய் பல்லிளிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன். நீ உருப்பட்டாலும் சரி. எங்கனா உண்டச்சோறு வாங்கித் துன்னாலும் சரி. இதோட கை கழுவிட்டேன். ஒங்கிட்ட மாரடிக்க என்னால ஆவாது’’ என்று கத்தினார்.

கனல் - குறுநாவல்

ஒன்று 

நான் ஒரு கிறுக்கனாம். மூளை இல்லாதவனாம். அவர்கள் எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் நான் அவ்வளவு கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தால் கூட ‘‘அட, சிரித்துவிட்டுப் போங்களேன்’’ என்று ஒதுங்கிவிடத் தொடங்கிவிட்டேன். மூளை இருக்கிறவன்தான் என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. வெளியே வரும்போது எப்பவாவது சிலர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிப்பைப் பார்த்து நானும் எனக்குள் சிரித்துக் கொள்கிறேன். எனக்குள் எத்தனையோ வருத்தங்கள். கசப்புகள். வெறி. எல்லாவற்றையும் மறந்து நானும் சிரிக்கிறேன். நான் அபூர்வமாகச் சிரிக்க நேரும் சிற்சில தருணங்களுக்காக இவர்கள் எத்தனை பட்டப் பெயர்களிட்டு அழைத்தாலும் கிண்டல் செய்தாலும்கூட நான் கவலைப்படப் போவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்துவிட்டேன். ஐம்பது வயசுக்கு எத்தனையோ வேஷங்கள். எவ்வளவோ அலைச்சல்கள். இவர்களுக்காக இப்போது கொஞ்சகாலம் பைத்தியமாக இருந்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை.

Monday 7 June 2021

வாக்குமூலம் - சிறுகதை

 எத்தன தடவ கேட்டாலும் என் பதில் ஒன்னே ஒன்னுதான் சங்கர். எங்க தற்கொலைக்கு கடன் தொல்லைதான் காரணம். கடன் கொடுத்த பேங்க்காரன் நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பிட்டே இருக்கறத எவ்வளவு நாள் தாங்க முடியும்? திருப்பிக் கொடுக்க முடியாத சூழல்ல நாங்க இருந்தது அதவிட பெரிய அவமானம். ஒருவாய் தண்ணிகூட அந்த அவமானத்துல உள்ள இறங்கல. அதனாலதான் செத்துரலாம்ன்னு முடிவெடுத்தம்.

ஏன் என்ன மொறச்சி மொறச்சி பாக்கறீங்க சங்கர்? ஏன் என் மேல நம்பிக்கை இல்லயா? அவன் செத்து நான் உயிரோட இருக்கறதுக்குப் பதிலாக நான் செத்து அவன் உயிரோட இருந்தாலும் இப்பிடி கேள்வி கேட்டு மொறச்சிப் பாப்பீங்களா?

கூடு - சிறுகதை

 மெழுகுவர்த்தி நிறத்தில் பனிப்புகை அடர்ந்திருந்தது. ஜன்னல் திரைச்சீலைக்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை. தோட்டத்தில் நந்தியாவட்டையின் பச்சைக்கிளைகள் கோணல் மாணலாக இழுக்கப்பட்ட கோடுபோல மங்கலாகத் தெரிந்தன. இறகுப்பந்தாட்ட வலைக்கம்பம் அசைவே இல்லாத ஒரு கொடிபோல காணப்பட்டது. குரோட்டன் செடித் தொட்டிகள் உறைந்து நின்றன. பெரியப்பா பெரியப்பாஎன இரவெல்லாம் அரற்றிவிட்டு அதிகாலையில்தான் உறங்கத் தொடங்கிய மஞ்சுக்குட்டியின் தலையை தொடையிலிருந்து மெதுவாக இறக்கி தலையணையின்மீது வைத்தான் ராகவன்.

Wednesday 2 June 2021

வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் ’செகாவின்மீது பனிபெய்கிறது’

 

தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நுட்பமான உறவை மனிதன் புரிந்துகொள்கிறான். ஒரு படைப்பை மனதார வாசித்த பிறகு மானுட குலத்தின் துக்கம் அவனுடைய துக்கமாகவும் மானுட குலத்தின் ஆனந்தம் அவனுடைய ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது. 

மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்- கட்டுரை

 பாரதி புதையல் திரட்டுகளையும் சித்திரபாரதியையும் வழங்கிய பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியால் பாரதியாரின் இருபத்துமூன்று கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவிக்கு எழுதிய ஒரேஒரு கடிதத்தைத் தவிர மற்றவை அனைத்தும் பிறருக்கு எழுதியவை. பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் அவருடைய படைப்பாளி என்கிற முகத்தை அறிய உதவுகின்றன. அவருடைய கடிதங்கள் பாரதியார் என்கிற மனிதரைப்பற்றி அறிய உதவுகின்றன. 

பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை - கட்டுரை

 

நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பாரதி மணி அவர்கள் நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பார்வதிபுரத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தில்லிக்குச் சென்று பணிபுரிந்தவர். தன் திறமையால் நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்று, மெல்லமெல்ல தன்னை ஒரு முக்கிய ஆளுமையாக வளர்த்துக்கொண்டவர். புதியவர்களானாலும் பழகியவர்களானாலும் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடம்தராமல், நம்பிக்கையோடும் அன்போடும் தாராளமாக ஒட்டி உறவாடி நட்பை உருவாக்கிப் பழகுவதிலும் அன்பைப் பொழிவதிலும் தலைசிறந்தவர். அந்த அன்புக்காக மற்றவர்களுக்காக அவரும் அவருக்காக மற்றவர்களும் எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அபூர்வமான அன்பின் ஆளுமையால் கட்டுண்ட ஒன்றாகவே அவருடைய வாழ்வு இன்றுவரை அமைந்திருக்கிறது.