ஒன்று
நான் ஒரு கிறுக்கனாம். மூளை இல்லாதவனாம். அவர்கள் எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் நான் அவ்வளவு கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தால் கூட ‘‘அட, சிரித்துவிட்டுப் போங்களேன்’’ என்று ஒதுங்கிவிடத் தொடங்கிவிட்டேன். மூளை இருக்கிறவன்தான் என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. வெளியே வரும்போது எப்பவாவது சிலர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிப்பைப் பார்த்து நானும் எனக்குள் சிரித்துக் கொள்கிறேன். எனக்குள் எத்தனையோ வருத்தங்கள். கசப்புகள். வெறி. எல்லாவற்றையும் மறந்து நானும் சிரிக்கிறேன். நான் அபூர்வமாகச் சிரிக்க நேரும் சிற்சில தருணங்களுக்காக இவர்கள் எத்தனை பட்டப் பெயர்களிட்டு அழைத்தாலும் கிண்டல் செய்தாலும்கூட நான் கவலைப்படப் போவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்துவிட்டேன். ஐம்பது வயசுக்கு எத்தனையோ வேஷங்கள். எவ்வளவோ அலைச்சல்கள். இவர்களுக்காக இப்போது கொஞ்சகாலம் பைத்தியமாக இருந்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை.