Home

Sunday, 13 June 2021

கனல் - குறுநாவல்

ஒன்று 

நான் ஒரு கிறுக்கனாம். மூளை இல்லாதவனாம். அவர்கள் எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் நான் அவ்வளவு கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தால் கூட ‘‘அட, சிரித்துவிட்டுப் போங்களேன்’’ என்று ஒதுங்கிவிடத் தொடங்கிவிட்டேன். மூளை இருக்கிறவன்தான் என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. வெளியே வரும்போது எப்பவாவது சிலர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிப்பைப் பார்த்து நானும் எனக்குள் சிரித்துக் கொள்கிறேன். எனக்குள் எத்தனையோ வருத்தங்கள். கசப்புகள். வெறி. எல்லாவற்றையும் மறந்து நானும் சிரிக்கிறேன். நான் அபூர்வமாகச் சிரிக்க நேரும் சிற்சில தருணங்களுக்காக இவர்கள் எத்தனை பட்டப் பெயர்களிட்டு அழைத்தாலும் கிண்டல் செய்தாலும்கூட நான் கவலைப்படப் போவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்துவிட்டேன். ஐம்பது வயசுக்கு எத்தனையோ வேஷங்கள். எவ்வளவோ அலைச்சல்கள். இவர்களுக்காக இப்போது கொஞ்சகாலம் பைத்தியமாக இருந்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை.

ஒரு வகையில் சொல்லப் போனால் நான் தான் இதற்குக் காரணம். ஊரைத்தாண்டி கடைசியில் இருக்கிற இந்தச் சேரியில் மிகக் குறைச்சலான வாடகைக்கு ஏதாவது இடம் கிடைக்குமா என்று நான் தேடிவந்த போது என் கோலம் அப்படி இருந்தது. அழுக்கான வேட்டி. கிழிந்த சட்டை. ஒட்டுப்போட்ட துணிப்பை. கிழிந்த லுங்கியால் போர்த்தித் தலையில் சுமந்திருந்த மிஷின். இந்தக் கோலத்தில் எவனைப் பார்த்தாலும் எனக்குக்கூட அப்படித்தான் தோன்றும். அந்த மிஷின்தான் ஒரே ஒரு வித்தியாசம். சேரியின் தொடக்கத்தில்தான் ஒருவனிடம் என் தேவையைச் சொன்னேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நிற்கவைத்துக்கொண்டே இன்னொரு ஆளிடம் அதைப்பற்றிச் சொன்னான். அவன் வீட்டுக்குள் இருந்து தன் மனைவியை அழைத்து அவளிடம் சொன்னான். முறத்தில் முருங்கைக்கீரை ஆய்ந்த நிலையிலேயே இறவாணத்தைப் பிடித்து குனிந்தபடி வெளியே வந்தவள், ‘‘தெருக்கடைசில மாரிமுத்து மாமாவ பாத்தா சொல்வாரு’’ என்றாள். குண்டு விளையாடிக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு ‘‘மாரிமுத்து மாமா வீட்ட போய் காட்டுடா’’ என்று சொல்லி அனுப்பினாள். அவனோடு நாலு சிறுவர்கள் கூட வந்தார்கள். நடக்கநடக்க நடுவயசுக்காரர்களும் சேர்ந்து கொண்டார்கள். மாமா என்கிற மாரிமுத்து வீட்டுக்கு முன்னால் நிற்கிறபோது ஒரு பட்டாளமே என் பின்னால் நின்றது.

அழுக்குக் கோலத்தில் அன்று நான் நின்றதற்குக் கூட காரணமிருந்தது. மூன்று நாட்கள் ஏதேதோ ரயிலில் மாறிமாறி ஏறி, கண்ட இடத்தில் படுத்து எழுந்து வந்திருந்தேன். எங்கே தங்குவது என்ற பிரச்சினைக்குப் பதில் இல்லாமலேயே ஸ்டேஷனில் படுத்துக்கிடந்தேன். ஸ்டேஷன் அழுக்கில் புரள்வதில் எனக்கொன்றும் வெட்கம் இல்லை. அழுக்கு, சுகாதாரம், நல்லது, மோசம் எதற்குமே இந்த வாழ்வில் அர்த்தமில்லை என்பதுதான் என் சித்தாந்தம். அதாவது நீளமாக ஒரு கோடு இழுத்துவிட்ட மாதிரியெல்லாம் எந்த மனிதனும் வாழ்ந்து முடிக்கமுடியாது. பந்து எம்பிஎம்பி அடங்குகிற மாதிரி பல முனைகளுக்கு ஊடே தாவித்தாவித் தாறுமாறாகவே செல்கிறது வாழ்க்கை. இந்த வியாக்கியானத்துக்குக் கூட எந்த அர்த்தமும் இல்லை. அர்த்தமே இல்லாத வாழ்வில் பைத்தியம் என்கிற வார்த்தைக்கு மட்டும் அர்த்தத்தைக் கொடுத்து எதற்காக மதிக்க வேண்டும். இத்தனைக்கும் நிஜமாகவே இரண்டு வருஷ காலம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தவன் நான். அது மட்டுமல்ல, ஜெயிலில்கூட எட்டு வருஷம் கம்பியெண்ணிவிட்டு வந்தவன்தான்.

மாரிமுத்து மாமா எனக்கு ஒரு குடிசையை ஏற்பாடு செய்து தந்தார். குடிசைகூட அல்ல அது. ஒரு குடிசையின் திண்ணை. திண்ணையில் ஒரு பக்கம் சாக்காலும், தட்டியாலும் மறைத்திருந்தார்கள். திண்ணையைத் தாண்டி கதவைத் திறக்கவோ நுழையவோ கூடாது. நுழைகிற பட்சத்தில் தயவு தாட்சண்யமில்லாமல் வெளியேற்ற நேரிடும். இத்தனை நிபந்தனைகளுக்கும் நான் எந்தவித மறுப்புமின்றி கட்டுப்பட்டேன்.

சின்ன வயசிலிருந்தே யாருக்கும் கட்டுப்படாத பிறவி நான். யாராவது எதையாவது செய்யக்கூடாது என்றால் அதைத்தான் முதலில் செய்து பார்க்க வேண்டும் என்று ஓசை தோன்றும். ஆசை கூட அல்ல அது. வெறி. மூர்க்கம். செய்து முடிக்கிறவரை தூக்கம் வராது. நரம்புகள் முறுக்கேறி உள்ளுக்குள் ஒரு விதமான கொதிப்பு மூண்டுகொண்டே இருக்கும். ஒரு மாமரம் கனிந்து நின்ற சமயம். காவல்காரன் சதாகாலமும் தோட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்தான். உள்ளே நுழையக்கூடாது என்பது அவன் சட்டம். கூட இருந்த நண்பர்கள் என்னை உசுப்பிவிட்டார்கள். உள்ளே இருந்த சிங்கம் சிலிர்த்துக்கொண்டது. இரவில் தன்னந்தனியே மதிலேறிக் குதித்து ஒரு மரத்திலேறி பழம், காய், பிஞ்சு எல்லாவற்றையும் பறித்து மொட்டையாக்கிவிட்டேன். ஆனால் ஒன்றைக்கூட நான் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு ஈனபுத்திக்காரனில்லை. எல்லாவற்றையும் மரத்தடியிலேயே கொட்டிவிட்டு வெளியேறிவிட்டேன். விடிந்ததும் காவல்காரன் லபோதிபோ என்று கத்தினான். மூச்சுவிடவில்லை. ஆனால் வெறியேற்றும் வார்த்தைகளால் என்னை உசுப்பிவிட்டவனே துரோகியானான். நடந்தது நடந்தபடி சொல்லிவிட்டான். கோயில் மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னை வளைத்துப் பிடித்துவிட்டார்கள். வளைத்துக்கொண்ட நொடியே எல்லாம் புரிந்துவிட்டது. ஆனால் திமிறி ஓட எந்த முயற்சியும் செய்யவில்லை. காவல்காரன் என்னை அடித்தான். திட்டினான். மரத்தில் தலைகீழாய்த் தொங்கவிட்டு கீழே நெருப்பு வைத்துக் கொளுத்தினான்.

இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று எனக்கொன்றும் வேதனை இல்லை. மேற்படி சம்பவத்தால் அன்றைய இரவே ஊரைவிட்டு வெளியேறினேன். இச்சம்பவம் நடக்காமலேயே இருந்திருந்தால் எனது வெளியேற்றம் சிறிது தாமதப்பட்டிருக்கும். அதுதான் வித்தியாசம், என்னைக் கட்டுப்படுத்த அந்த ஊரில் யாரும் இல்லை. நானும் கட்டுப்படக்கூடிய ஆள் இல்லை.

என் வாலிப வயசில் இதுமாதிரி ஏராளமான சம்பவங்கள். பயங்கரமான இந்த வெறி வளர்ந்துகொண்டுதான் இருந்ததே தவிர குறையவில்லை. ஆண்டுகள் உருளஉருள அகம்பாவமும் கூடியது. ஒரு முறை ரெயில்வே ஸ்டேஷனில் படுத்திருந்தேன். யாருக்கும் தொந்தரவில்லாத மூலை. நல்ல தூக்கம். அந்தத் தூக்கத்திலும் லத்தித்தடியால் தரையைத் தட்டித்தட்டி எழுப்பப்படும் சத்தம் ஒரு கனவு மாதிரி காதில் விழுந்தபடி இருந்தது. என் காதுக்கு சமீபத்தில் மடேலென சத்தம் வரும்வரை அதைக் கனவு என்றுதான் எண்ணி இருந்தேன். என் நெஞ்சுக்குழியில் லத்தித்தடி அழுந்த ஆரம்பித்த பிறகுதான் பதறி எழுந்தேன். தொடையில் ஓங்கி அடித்து ‘‘எழுந்து ஓடுடா’’ என்றான். ‘‘ஐயோ’’ என்ற அலறல் என்னையும் மீறி எழுந்துவிட்டது. நொண்டியடிபடியே எழுந்து நின்று அவனைப் பார்த்தேன். அடுத்த தொடையில் மீண்டும் அடி. ‘‘ஓடுடான்னா என்னடா மொறைக்கற. ஒங்க ஆத்தா சம்பாரிச்ச எடம்ன்னு நெனப்பா?’’ மீண்டும் மீண்டும் அடிகள். நான் ஓடிவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் எனக்குள் அந்த இறுமாப்பு தலை தூக்கியது. படுக்க வேறு இடத்துக்குச் செல்லவில்லை. சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் அங்கேயே வந்து படுத்துத் தூங்கினேன். மீண்டும் அதே போலீஸ்காரன் வந்துவிட்டான். அவனுக்கு இந்த முறை ஆத்திரம் அதிகமாகி இருக்கவேண்டும். எழுப்பாமலேயே பிருஷ்டம் பிய்ந்து போகிறமாதிரி அடித்தான். நான் மறுபடியும் எழுந்து ஓடிவிட்டேன். ‘‘இன்னொரு தரம் வந்த, பொணமாக்கிடுவன் உஷார்’’ என்றான். ‘‘சரிதான் போடா’’ என்று ஓரமாய் மறைந்திருந்துவிட்டு அவன் தலை மறைந்ததும் போய்ப்படுத்துத் தூங்கினேன். அப்படி முடிவெடுத்த தருணம்தான் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையானது. அந்த ஒரு கணத்தில் அந்த எண்ணம் மட்டும் தோன்றாமல் இருந்தால் எங்கோ ஒரு மாமூலான மூட்டைக்காரனாகவோ கூலிக்காரனாகவோ காலம் கடத்தி இருப்பேன். இத்தனை மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி இருக்கமாட்டேன். அடுத்த முறையும் போய்ப் படுத்ததால் சீற்றம் மிகுந்து போலீஸ்காரன் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போய் என்னை அடித்துத் துவைத்துவிட்டான். போதாக்குறைக்கு திருடமுனையும்போது பிடிபட்டதாகக் குற்றம் வேறு. அம்பலத்தில் அவன் சொல் ஜெயித்தது. ஒரு மாசம் ஜெயில்வாசம். என் முதல் ஜெயில்வாசம். இதற்குப் பின் திருட்டே என் தொழிலாகிவிட்டது. அதில் இருக்கிற விறுவிறுப்பும் சவாலும் என்னை ஈர்த்துவிட்டன. சிறுசிறு திருட்டுகள். எப்பவாவது சின்னச்சின்ன தண்டனைகள். யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.

எதைப்பற்றியும் அக்கறையுமில்லை. மனம்போன போக்குதான் எல்லாம். கையில் காசு. காலடியில் சொர்க்கம். எதுவுமே எனக்குப் பிரச்சைனையாக இல்லை.

உல்லாசமாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வு ஒரு இடத்தில் மோதி நின்றுவிட்டது. எத்தனை பெரிய மோசடிக்காரனாக இருந்திருக்கிறேன் என்கிற உண்மை எனக்கு அன்றுதான் புலப்பட்டது. அந்த நாளை இன்றும் அழுத்தமாய் ஞாபகம் வைத்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல இந்த உயிர் பிரியும் வரை அது ஞாபகம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அது ஒரு கடற்கரை இருட்டுப் பகுதியில் நடந்தது. நானும் என் நண்பனும் மட்டுமே அங்கிருந்தோம். சாலையில் நின்றிருந்த வண்டியில் படகில் இருந்து சரக்குகளை மாற்றிக் கொண்டிருந்தோம். எந்தத் தருணமும் போலீஸ் வந்துவிடும் அபாயம் எங்களைச் சூழ்ந்திருந்தது. அலைகளின் சீரான சத்தம்கூட பயம் தருவதாய் இருந்தது. ஏறத்தாழ வேலை முடியும் தருணம். கடைசிப் பெட்டிகளை தூக்கிக்கொண்டு நடந்தோம். மைபூசிய இருட்டில் ஏதோ ஒரு உருவம் எங்களை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. சட்டென பயம் கவ்வியது. வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தோம். யாரு யாருஎன்று நண்பன் அதட்டினான். அந்த அதட்டல் எல்லாவற்றையும் குழப்பிவிட்டது. சட்டென பாதை விலகிய அந்த உருவங்கள் என்பக்கம் திரும்பி ஓடிவந்தன. இருட்டில் அடையாளம் தெரியாமல் என்மேல் மோத, பெட்டி என் தலையிலிருந்து நழுவியது. ஒரு கணம் எதுவும் புரியாமல் அந்த உருவத்தை நிமிர்ந்து பார்த்தேன். நடுவயசுப் பெண். கையைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கும் சிறுமி. திகைத்தேன். குழம்பினேன். வேகமாய் திரும்பிவந்த நண்பன் கீழே விழுந்திருக்கும் பெட்டியையும் அவளையும் மாறிமாறிப்பார்த்தான். மறுகணம் ஏய், யாரு நீ? யாரு அனுப்பானா உன்ன?” என்று அந்தப் பெண்ணின் கழுத்தை எக்கிப் பிடித்தான். மிரட்டினான். நடுக்கத்தில் அவள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. மீண்டும் அவளிடம் ‘‘போலீஸ் ஆள்தான நீ சொல்லு’’ என்று அடிக்குரலில் அதட்டினான். அவள் தலையசைத்து மறுத்தாள். அவனுக்கோ சந்தேகம் போகவில்லை. சட்டென இடுப்பில் இருந்த கத்தியால் அவள் வயிற்றில் செருகினான். அந்தச் சிறுமி ஓவென்று அழுதாள். என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. அந்த ரத்தம். அந்த வேதனையான குரல். அச்சிறுமியின் அழுகை. நான் உறைந்துபோய் இருந்தேன். என்காதில் எதுவும் விழவில்லை. கீழே விழுந்த பெட்டியோடு அவன் ஓடிவிட்டான். ஓடிவந்த போலீஸிடம் நான் அகப்பட்டுக் கொண்டேன். அதற்குப் பின் எட்டாண்டுகள் சிறைவாசம்.

எப்போதும் இல்லாத வகையில் சிறைவாசம் எனக்கு வருத்தத்தையூட்டியது. இதற்குப் பதிலாக அந்தக் கடற்கரையிலேயே நானும் இறந்திருக்கலாம் என்று தோன்றியது. திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து பொங்கிய ரத்தமும், அச்சிறுமியின் ‘‘அம்மா அம்மா’’ என்கிற கதறலும் என் மனசில் மோதிக்கொண்டிருந்தன. அந்த அளவுக்கு இம்சையை நான் எப்போதும் அனுபவித்தில்லை. கனவுகளின் நெருப்பில் கொஞ்சம்கொஞ்சமாய் பொசுங்கிக்கொண்டிருந்தேன். சாட்சிக்கூண்டில் ஏறிப் பேச வந்தபோது அந்தச்சிறுமியை நன்றாகப் பார்த்தேன். எலும்புத் தேகம். சப்பட்டையான முகம். குச்சிக் கைகள். குளிரில் நடுங்கினமாதிரி குரல். கசங்கிய சட்டை. வறண்ட பரட்டைத்தலையை ஒரு அழுக்கு ரிப்பனில் கட்டியிருந்தாள், அழுதபடி ஒவ்வொரு வார்த்தையாய் கூட்டிக் கூட்டிச் சொன்னாள். எல்லாமே திரும்பத்திரும்ப மனசில் அலைமோதிக்கொண்டிருந்தன. சதா நேரமும் பிதற்றிக் கொண்டிருந்தேன். ‘‘அம்மா அம்மா’’ என்னும் அந்தச் சிறுமியின் கதறல் கடைசி வரைக்கும் என் காதுகளை விட்டு அகலவே இல்லை. மோதும் அந்த அழுகுரல் என்னைக் குழப்பியது. நான் பைத்தியமானேன். மோசமான மனநிலையில் இரண்டாண்டுக்காலம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். குணமான பிறகு மிச்சச் தண்டனையை மீண்டும் சிறையில் கழித்தேன்.

அதற்குப்பின் என் வாழ்வின் திசையே மாறிவிட்டது. இது உண்மை. முன்பு இருந்தது போல ஒரு தடவை கூட அகங்காரத்தைக் காட்டியதில்லை. அகங்காரம், ஆணவம் எல்லாம் எங்கேபோய் ஒளிந்தன என்று தெரியவில்லை. பல நேரங்களில் இரவு முழுக்க விழித்துக்கொண்டிருந்தேன். கண்முன்னே எது இருந்தாலும் மறைந்து உடனே சிறுமியின் முகம் தெரிந்தது. ‘‘அம்மா அம்மா’’ என்னும் அவள் கதறல். வேறு சிந்தனை இல்லை. சில நேரங்களில் நானே ‘‘அம்மா’’ என்றும் கதறிவிடுகிறேன்.

என்றைக்காவது ஒரு நாள் என் பழைய நண்பனைப் பார்ப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவனைப் பார்க்கும் நாள்தான் என் பழைய பாக்கியைத் தீர்க்கும் நாள். இந்த ஒரே ஒரு வெறி மட்டும் ரகசியமாய் என் மனசில் உறங்குகிறது. ஒவ்வொரு இரவிலும் இதுபற்றிச் சிந்திக்கிறேன். இதற்காகவே நான் வாங்கி வைத்திருக்கிற கத்தியை எடுத்து வைத்துக்கொண்டு யோசிக்கிறேன். அக்கத்தி நுனியில் தெரிவது ‘‘அம்மா அம்மா’’ என்று கதறிய அச்சிறுமியின் முகம். எப்படியும் அவனைக் கொல்வேன் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ தெரியவில்லை. ஆனால் என் உயிர் இருப்பதற்குள் அவன் உயிரைப் போக்கிவிட வேண்டும். அப்புறம் என்ன நடந்தாலும் கவலையில்லை. மரணதண்டனையாக இருந்தாலும் சரி.

இரண்டு

பட்டனும் நூலும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். இப்படி எதையாவது வாங்கும் பொருட்டுதான் சேரியைவிட்டு வெளியே கடைத்தெருப்பக்கம் வரவேண்டி இருந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் அந்தத் திண்ணையில் மிஷினுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன். பகலில் மட்டும் அந்தச் சாக்குப் படுதாவைத் தூக்கிவிட்டுக்கொள்வேன். அப்போதுதான் தெருவுக்கு நானும், எனக்குத் தெருவும் தெரிகிறது. உட்கார்ந்திருக்கிற நேரங்களில் எல்லாம் சிந்தனை இழுத்துக் கொண்டு சென்றுவிடும்.

உள் வீட்டில் ஒரு ரிக்ஷாக்கார குடும்பம் இருக்கிறது. கணவன் வெளியே சென்றபிறகு மனைவி எங்கேயாவது சித்தாள் வேலைக்குச் சென்றுவிடுகிறாள். சாயங்காலம்தான் அலுத்துத் திரும்புகிறாள். இரவில் கணவன் திரும்பும்போது ஏதாவது பேச்சு முற்றி சண்டையில் முடிகிறது. வார்த்தைகள் மெல்ல மெல்லத் தடித்து ஒருவரையொருவர் பழி சொல்கிறார்கள். நான் எதையும் தெரிந்துகொள்வதில்லை. மாரிமுத்துவே ஒருநாள் சத்தம் கேட்டுவந்து இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து செய்துவிட்டுப் போனான். பக்கத்துக் குடிசைகளில் இருந்தவர்கள் அநேகமாக ரிக்ஷாக்காரர்களாகவும் கொலுத்துவேலை செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். எதிரில் ஒரு டீக்கடை இருந்தது. அதற்குப் பக்கத்தில் சைக்கிள் கடை. கடையின் பின்கட்டு இரவு நேரங்களில் சாராயக் கடையாகவும் இயங்கியது. இரவும் பகலும் கூச்சலுக்குக் குறைவில்லை.

இங்கு வந்து இத்தனை நாள்களானாலும் யாருக்கும் என்னால் பிரச்சனை இல்லை. எல்லொரும் நன்றாகப் பழகினார்கள். பல நேரங்களில் எல்லாரும் பழந்துணிகளின் கிழிசல்களைத் தைத்து வாங்கிக்கொண்டு போனார்கள். சிலர் காசு கொடுத்தார்கள். சிலர் அப்புறம் தருவதாய்ச் சொன்னார்கள். அத்தனை கறாராய்க் கேட்டு வங்குவதில்லை நான். என் ஒரு வயிற்றுக்கு எத்தனை தேவையோ அந்த அளவுக்குச் குறைச்சலில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தபோது அதையெல்லாம் முக்கியமாய்க் கருதுவதில்லை. எப்போதாவது சிலர் வந்து ‘‘பழைய பாக்கி’’ என்று தானாகவே தருகிறார்கள். அதையும் மறுப்பதில்லை.

ஏதாவது துணியை வெட்டும்போது வீட்டுக்காரியின் சிறுமிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். துண்டுத்துணிகளை ஆசையோடு கேட்கிறார்கள். ‘‘எல்லாத்தயும் சேத்துவச்சி என்ன செய்யற?’’ என்று கேட்டதும் ‘‘எல்லாத்தயும் சேத்து ஒரு பெரிய ஜமுக்காளம் செய்யப்போறேன்’’ என்று கையை விரித்துக் காட்டுகிறாள். சின்னவளுக்கு அவ்வளவு ஆசை இல்லை. ஒன்றே ஒன்று கிடைத்தால் போதும், வாங்கி ஆள்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு ஓடிவிடுகிறாள்.

நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு கிழவர் இருந்தார். பிள்ளை மருமகள், பேரப்பிள்ளை எல்லோரோடும் கூட்டுக்குடும்பம். மனைவி இல்லை. சதாகாலமும் மகனுக்கும் அவருக்கும் சண்டை. தனது தேவைக்கான பணத்துக்காக அவர் ஒரு குழந்தையைப்போல அவன் முன் கையேந்திக் கெஞ்ச வேண்டியிருந்தது. கெஞ்சக் கெஞ்சத்தான் அவனுக்கு ரோஷம் அதிகமாகும். ‘‘எங்கயாவது கொளம் குட்டைல விழுந்து சாவறதுதான, ஏன் என் உயிர வாங்கற’’ என்று அசிங்கமாக ஏசுவான். கெட்ட வார்த்தையிலிருந்து தொடங்காத வாக்கியமோ முடியாத வாக்கியமோ அவன் வாயிலிருந்து வந்ததே இல்லை. நாலு தெரு கேட்கும் அவன் குரல், கிழவர் வாயைத் திறக்க மாட்டார். பொழுது ஏறியபிறகு திண்ணையில் வந்து உட்கார்வார். என்ன விஷயம்?’ என்பேன். பேச்சைத் தொடங்க இது ஒரு வார்த்தை, அவ்வளவுதான். அப்புறம் கிழவர் கொட்டிவிடுவார்.

எப்போதாவது தன் பழைய வேட்டியைக் கொண்டு வந்து தைத்துத்தரச் சொல்வார் கிழவர். அவரால் பணம் அதிகமாகக் கொடுக்க முடியாது. நானும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எப்போதாவது கையில் பணம் கிடைக்கும்போது தருவதற்காக வந்து செல்வார். மறுத்தாலும் கூட மிஷின் மேலேயே வைத்து விட்டுச் செல்வார்.

கிழவருக்குத் துணையாக இன்னொருவர் இருந்தார். மிலிட்டரிக்காரர். எதிர்த்த வீடு. பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தார். தனிக்கட்டை. இரண்டுபேரும் பேசியபடி வெகுதூரம் நடப்பார்கள். எப்போதாவது இருட்டு வேளையில் சாராயக்கடைக்குள் சென்-று வருவார்கள்.

திண்ணையில் உட்கார்ந்தபடி சாராயக்கடையைக் கவனித்துக்கொண்டிருப்பேன். அங்கிருந்து வெளியே வரும் ஆள்களைக் கவனித்துக்கொண்டிருப்பேன். சிலர் முகங்களில் வருத்தம், கவலை, எரிச்சல். சிலர் முகங்களிலோ அபரிமிதமான மகிழ்ச்சி. கடையிலிருந்து டேப்ரிக்கார்டரில் பாடல்கள் ஒலிக்கும் பாட்டும் இசையும் மிதந்தபடி இருக்கும். வெளியே எதிரும்புதிருமாய் உட்கார்ந்த ஆள்கள் வேடிக்கையாய்ப் பேசுவார்கள்.

துண்டை உதறித் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு சிலர் அலட்சியமாய் நடப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் தூசுக்குச் சமம் என்பது போலப் பேசுவார்கள். மிலிட்டரிக்காரர் என்னோடு சேர்ந்து குடிப்பதை விரும்பினார். எனக்குத் தடை இல்லை. கொஞ்சம் கொத்துக்கறி வாங்கிக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்து கொண்டோம். எல்லோருக்குமே சேர்த்து மிலிட்டரிக்காரர் பணம் கொடுத்தார். ஏரியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட தன் மனைவியைப் பற்றி உருக்கமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டார் மிலிட்டரிக்காரர். பெண்டாட்டி பற்றிப் பேச ஆரம்பத்தால் நிறுத்தவே மாட்டார் என்று கிழவர்க்குத் தெரியும் போலும். பேச்சை திசைதிருப்புங்கள் என்று எனக்கு சைகை செய்தார். நான் அவரது மிலிட்டரி அனுபவங்களின் பக்கம் மெல்ல பேச்சைத் திருப்பினேன். பாகிஸ்தான், சீனா இரண்டு சண்டைகளிலும் பங்கெடுத்தவர் மிலிட்டரிக்காரர். என் கேள்விக்குப் பிறகு கதைகதையாய்ச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

அன்றைக்கு நடந்தது இன்னும்கூட பசுமையாய் ஞாபகமுள்ளது. கடையைவிட்டு வெளியே வந்து நெடுஞ்சாலைப் பக்கம் நடந்தோம். யாரோ ஒரு பிச்சைக்காரன் மிலிட்டரிக்காரர் பக்கம் கைநீட்டிக் கெஞ்சினான். சட்டைப் பையில் கை நுழைத்து கைக்கு வந்த சில்லறைகளை அள்ளி அவன் தட்டில் போட்டுவிட்டுச் சிரித்தார். மேலும் கொஞ்சதூரம் நடந்தோம். அப்போது கிழவர் தொணதொணக்கக் தொடங்கினார். மகன்மீது ஒரே வசைமழைப் புகார். அப்போதுதான் ஒரு குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் இருந்து குட்டிநாய் ஒன்றின் கீச்சுக்குரலைக் கேட்டேன். முதலில் அந்நாய் வேறொன்றோடு ஆடிக்கொண்டும் குரைத்துக்கொண்டும் இருந்தது என நினைத்தேன். ஆனால் அதன் குரல் தொடர்ந்து ஒலித்தது. மீண்டும் அதே குரல். நான் நண்பர்களின் முகத்தைப் பார்த்தேன். எல்லோரும் நின்று விட்டோம். நான் மெல்ல நடந்து தொட்டிக்கருகில் சென்றேன். நாயின் கழுத்தில் கனமான கல் ஒன்றைச் சேர்த்து இறுகிக் கட்டப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல. காலில் நிறைய அடிபட்ட காயங்கள். எனக்கு வேதனையாக இருந்தது. பரபரப்புடன் குனிந்து அவிழ்த்து அந்நாயை விடுவித்தேன். இன்னும்கூட பயம் விலகாமல் குட்டி பலவீனமாய்க் கத்திக்கொண்டிருந்தது. பலம் இருந்திருந்தால் என் கையிலிருந்து ஒருவேளை குதித்துத் தப்பித்து ஓடி இருக்கும். நான் வீடு வரைக்கும் அதை எடுத்து வந்தேன் ‘‘என்ன செய்யப்போறே’’ என்றார்கள் அவர்கள். ‘‘வளக்கப்போறேன்’’ என்று சொல்லிவிட்டு ஒரு கொட்டாங்கச்சியைத் தேடி எடுத்தேன். அவர்கள் சென்றுவிட்டார்கள். ஓட்டலில் இருந்து பால் வாங்கி வந்து நன்றாக ஆற்றி கொட்டாங்கச்சியில் ஊற்றினேன். பரபரப்போடு அந்தக் குட்டி பாலை நக்கிக் குடித்தது. அக்குட்டி நாயின் கண்கள் எனக்கு ருக்மணியை ஞாபகமூட்டியது.

ருக்மணியை ஒரு சாலையோரக் கடையின் அருகில்தான் சந்தித்தேன். அப்போது என் கூட்டாளியும் கூட இருந்தான். நாங்கள் நன்றாக இருந்த காலம் அது. ஏதோ மனச்சோர்வுடன் புகைத்தபடி மரத்தடியில் நின்றிருந்தேன். நண்பன் ஏதோ கணக்கு போட்டபடி பக்கத்தில் நின்றிருந்தான். அப்போதுதான் எதிர்ப்புறத்திலிருந்து திடுமென ஒரு பெண் எங்களைப் பார்த்து ஓடி வந்தாள். முன்னும் பின்னும் அறிமுகமற்ற எங்களைப் பார்த்து கையை நீட்டினாள். ஒதுங்கித் திகைத்து நின்றேன் நான். என் நண்பன் அவளை விரட்டினான். நான் அவள் கண்களைப் பார்த்தேன். நிஜமாகவே பசியில் களைத்துச் சுருங்கிய கண்கள். அவள் போகாமலேயே நின்றிருப்பதைப் பார்த்து நண்பனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. திட்டினான். அதட்டினான். நான் அவனைத் தடுத்து அவளுக்குச் சோறு வாங்கித்தந்தேன். அவன் முணுமுணுத்தபடி என்னை முறைத்துப் பார்த்தான்.

சாப்பிட்டு முடித்த அவள் என் அருகில் வந்தாள். கண் கலங்கினாள். நான் கேட்காமலேயே அவள் தன் கதையைச் சொன்னாள். ஆனால் அதில் அவ்வளவு ஈடுபாடில்லை எனக்கு. நண்பன்தான் ஆர்வத்தோடு கேட்டான். திடுமென அவனுக்கு அதிலே விருப்பமுண்டாகி விட்டது. எல்லோருக்கும் டீவாங்கித் தந்தான். இருட்டும் வரையில் பேச்சுதான். மீண்டும் சாப்பாடு. இந்த முறை நண்பனே பணம் கொடுத்தான். அவசரமின்றி அனைவரும் சாப்பிட்டோம். நாங்கள் அத்தனை நேரமாய்க் காத்திருந்த வண்டியும் ஆளும் வராதது ஒரு வகையில் ஏமாற்றமாகவே இருந்தது. வழியில் ஏதேனும் பிரச்சனையோ என்று இன்னொரு வகையில் கலவரமாகவும் இருந்தது. இனியும் காத்துக்கொண்டிருப்பதில் பயனில்லை என்று கிளம்பினோம். கிளம்பும்போது அவளும் எங்களோடு வந்தாள்.

அவள்?’ திகைப்போடு நண்பனைப் பார்த்தேன் நான். ‘‘சும்மா வரட்டுமே’’ என்று தன் சம்மதத்தைத் தெரிவிப்பவன் போலச் சொன்னான் அவன். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று புரிந்தது. அன்று இரவுதான் அவள் பெயர் ருக்மணி என்று தெரிந்துகொண்டேன்.

‘‘நீ முரடன். ஆனா, நீ நல்லவன்என்று தனியே இருக்கும்போது என்னிடம் சொல்வாள் ருக்கு. மீசையைப் பிடித்து முறுக்குவாள். நான் மெல்ல அவளை நிமிர்ந்து பார்ப்பேன். முறுக்கு ஏற ஏற லேசான வலியில் முகம் சுளிப்பேன். சட்டெனக் குனிந்து உதடுகளில் முத்தமிடுவாள். என்னைக் குளிர வைக்கும் எல்லா முயற்சிகளையும் தெரிந்து கொண்டிருந்தாள். ஆனால் என்னைக் கண்டதும் அவளுக்குக் கேலி பொங்கிவிடும்.

‘‘உன் கண்ணு பைத்தியக்காரன் கண்ணுமாதிரி இருக்குது’’

‘‘பைத்தியக்காரன் கண்ணு எப்படி இருக்கும்?’’

‘‘எங்க எங்கயோ அலையும்’’

‘‘அப்ப நா அலையறனா?’’

அவளை இழுத்துப் பிடிக்க முனைவதற்குள் அவளே நெருங்கி ஒட்டிக் கொள்வாள். காதோரம் நாக்கால் ஈரப்படுத்தி அவள் பதிக்கும் முத்தம் உடம்பில் சிலிர்ப்பேற்றும். ‘‘ச்சீ’’ என்று கூச்சத்தோடு அவளைக் கீழே தள்ளி விடுவேன். என்னையும் இறுக்கி இழுத்துக் கொண்டபடி அவள் கீழே சரிவாள்.

அவளுக்கு என்னைப் புரிந்து விட்டது. என் நண்பனையும் அவள் புரிந்து கொண்டிருந்தாள். எங்களுக்கு அது சந்தோஷமாகவே இருந்தது. வார்த்தைகள் இன்றி அவள் செய்யும் அபிநயமும், கையையும் தலையையும் அசைத்துச் செய்யும் அசைவையும் பார்க்கப்பார்க்க வேடிக்கையாய் இருக்கும். சிலசமயம் கூந்தலைப் பிரித்து சுவரில் சாய்ந்தபடி மகிழ்ச்சியான குரலில் பேசிக்கொண்டிருப்பாள். சில சமயங்களில் கண்ணீர் பெருக்கி அழுவாள். ஏதோ பழைய ஞாபகம் என்பாள். சட்டென சிரிக்கவும் செய்வாள்.

ஒருமுறை அவள் என் பெட்டியைக் குடைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெட்டியில் இருந்த துணிகளை அலங்கோலமாய் வெளியே எடுத்துப் போட்டிருந்தாள். நான் சட்டென ருக்குஎன்று அவள் எதிரில் போய் நின்றதும் அவள் நடுங்கி விட்டாள். அவள் கைகள் நடுங்குவதை உணர்ந்தேன். ஆனால் அதை மறைக்க அவள் படாதபாடு பட்டாள். சிரிக்க முயன்றாள். ‘‘தலை வலிக்குது. ஏதாவது மாத்திரை இருக்குதான்னு பார்த்தன்’’ என்று தலையைப் பிடித்தபடி ஏதோ சொன்னாள். நான் முகம் சுளித்தேன். எதுவும் பேசவில்லை. ‘‘என்ன, என் பேச்சுல நம்பிக்கை இல்லயா?’’ என்று என்னை இழுத்தாள். நொடிப் பொழுதுக்குள் சரியாகி விட்டிருந்தாள். என் புறங்கழுத்தில் முத்தமிட்டாள். ஆனால் நான் அவளை விலக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டேன்.

திரும்பத்திரும்ப என் கண்முன்னே அந்தக் காட்சியே விரிந்திருந்தது. நண்பன் வேறு ஊரில் இல்லை. ஒரே குழப்பம். எங்கெங்கோ அலைந்து திரும்பினேன். அலுப்பாக இருந்தது. குளிக்கச் சென்றேன். அவள் கூடவே வந்தாள். நான் தடுத்தேன். ‘‘பெரிசா வெக்கப்படாதீங்க ராஜா’’ என்று என்னைத் தள்ளிக் கொண்டு சென்றாள். நிறைய கேலி வார்த்தைகள். அவளே உடலைத் தேய்த்தாள். நான் மறுத்தபோதும் விடவில்லை. என்னை ஒரு குழந்தையாக நினைத்ததுபோலத் தோன்றியது. மெல்லமெல்ல என் மனம் லேசாகிக் கொண்டிருந்தது.

வரும் போது கொஞ்சம் மது வாங்கி வந்திருந்தேன். திருப்தியோடு சாப்பிட்டோம். அவள் என் வாயைக் கிளறினாள். என் சின்ன வயசைப்பற்றிக் கேட்டாள். அவளது அன்பும் ஆதரவும் என்னை மிகவும் இளக்கியது. நான் ஒவ்வொன்றாய்ச் சொல்லத் தொடங்கினேன். இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயங்களையெல்லாம் அவள் முன் கொட்டினேன். மனசை முழுக்கக் காலியாக்கிவிட்டு அவள் முன் லேசாக நிற்கும்படி ஆசை தூண்டியது. அவளும் அதை அனுமதித்தாள். அவளுக்கும் அந்த நிமிடத்தில் அதில் விருப்பம் இருந்ததை அறிந்தேன். மாறிமாறிப் பேசினோம். என்னை அளவுக்கு அதிகமாகவே அன்று கேலி செய்தாள் அவள். நானும் விடவில்லை. எனக்கும் வெறி ஏற்பட்டது. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினேன். அவளும் அதைத் தடுக்கவில்லை.

மறுநாள் காலை நண்பன் வந்து எழுப்பும்போது தான் எழுந்தேன். ஆச்சரியத்துடன் ‘‘நீ எப்படா வந்த?’’ என்று கேட்டேன்.‘‘இப்பதான் வரேன்’’ என்றான் அவன். நான் எழுந்து போய் முகம் கழுவிவிட்டு வந்தேன்.

‘‘ருக்குவ எங்க காணம்’’

‘‘சீக்கிரம் எழுந்து எங்கனா போச்சோ, என்னமோ’’

அப்புறம் எதுவும் பேசவில்லை. இருவரும் வெளியே போய்விட்டுத் திரும்பினோம். அதுவரைக்கும் கூட ருக்குவைக் காணவில்லை. என் மனசில் சந்தேகம் வலுத்தது. ‘‘எதுனா சொல்லிச்சாக ருக்கு?’’ என்று மீண்டும்மீண்டும் துளைக்க ஆரம்பித்தான் நண்பன். முதல் நாள் நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் சொன்னேன். அவன் அதை நம்பவில்லை என்பதை அவன் முகம் உணர்த்தியது. என்னைக் கோபமுடன் பார்த்தான். என்மேல் சந்தேகப்பட்டான். அவன் போக்கு திகைப்பூட்டியது. அக்கணத்தில் அவனை நான் வெறுத்தேன். விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினேன். மனம் போன போக்கில் எங்கெல்லாமோ திரிந்தேன். சோர்வடைந்த உள்ளத்தோடு சாயங்காலமாய்த் திரும்பி வந்தேன். சிறிது நேரத்துக்குப் பின் நண்பன் வந்து நின்றான். காலையில் இருந்ததற்கு முற்றிலும் மாறான மனநிலையில் சிரித்த முகத்தோடு பேசினான். எனக்கும் ஆறுதலாக இருந்தது. இரண்டு பேரும் ஒன்றாகக் கிளம்பினோம்.

வெளியே வந்து போது ஒரு நாய் எங்கள் பக்கத்தில் வந்து நின்று வாலை விட்டியது. எங்கள் சாப்பாட்டு மிச்சங்களை அதுதான் வழக்கமாய்த் தின்று வந்தது. எங்கள் கைகளை எட்டி நக்கியது. ருக்கு இல்லாததால் காலையில் இருந்து அதற்கு ஒன்றுமே இல்லை. சுற்றிச்சுற்றி வந்தது. ‘‘அவளமாதிரிதான் இதுவும். என்னைக்காவது ஒரு நாள் சொல்லாம கொள்ளாம ஓடிடும். நன்றி கெட்ட ஜென்மம்’’ என்று திட்டினான் நண்பன்.

மூன்று

இன்னொரு சிறுமிக்கும் என் வாழ்வில் இடம் இருந்தது. பழைய சிறுமியின் ஞாபக வதையில் இருந்து தப்பிக்க விதியே அவளை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது என்-று நினைத்துக்கொண்டே சுமார் பத்து வருஷ காலம் அந்தச் சிறுமியை வளர்த்தேன். அந்தக் காலம் முழுக்க நான் ஒரு புது ஜென்மம் எடுத்திருந்தேன். ஒரு புது மனிதனாக மாறி இருந்தேன். என் விதியை நினைத்து சந்தோஷமாகக்கூட இருந்தது. ஆனால் விதிக்கு அப்படியொன்றும் என்மீது கருணை சுரந்து வழியவில்லை. விதியைச் சொல்லி எந்தப்பயனும் இல்லை. பைத்தியக்காரத்தனமான முறையில் நான்தான் விதியின் தந்திரவலையில் அகப்பட்டுக் கொண்டேன். ஏன் தான் மனசில் இப்படி ஒவ்வொரு பாத்திரமாய்ப் புகுந்து உருட்டுகிறதோ தெரியவில்லை. என் வாழ்வுக்கே அர்த்தமில்லை என்கிற கட்டத்தில் இந்த இம்சையை அனுபவித்தேன்.

சிறையிலிருந்து வெளிவந்திருந்த சமயம் அது. மழைக்காலம். ஒரு சின்ன உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். என் கந்தல் கோலம். உள்ளே விடவில்லை விடுதிக்காரன். வெளியிலேயே நிற்கவைத்து விட்டான். அதையெல்லாம் முக்கியமாய்க் கருதுகிற மனநிலையில் நான் இல்லை. கடும்பசி. வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு சிறுமி அங்கே பிச்சை எடுக்க வந்தாள். சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்டு பலிக்காமல் அந்த விடுதியின் முன்வந்து நின்று கை நீட்டினாள். அவள் கண்களில் பசி தெரிந்தது. விடுதிக்காரன் அவளை விரட்டினான். விரட்டும்போது இரண்டடி பின்னே செல்வதும் அப்புறம் முன்னே வந்து கைநீட்டிக் கெஞ்சுவதுமாய் இருந்தாள். சட்டென கொதிகலனில் இருந்த சுடுநீரைப் பிடித்து ‘‘இப்ப போறியா இல்ல மேல் ஊத்தட்டுமா?’’ என்று விடுதிக்காரன் மிரட்ட ஆரம்பித்தான். அந்தச் சிறுமி திடீரென அழ ஆரம்பித்தாள். நகர்ந்து என் பின்னே ஒளிந்து கொண்டாள். அவள் கை என் முழங்கையைப் பற்றியிருந்தது. நடுங்கிக்கொண்டிருந்த அவளைக் கண்டு மனம் உருகியது. அவளுக்காக அந்த விடுதிக்காரனிடம் சண்டைக்குப் போகலாமா என்று நினைத்தேன். ஒரு கணம் தான். அப்புறம் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். கலவரம் கொண்ட அந்தச் சிறுமியை இழுத்து முன்பக்கம் நிறுத்தினேன். இன்னும் நடுக்கம் தீராமல் அவள் என் கையை இறுக்கமாய் பிடித்திருந்தாள். அவளிடம் பழைய சிறுமியின் சாயல் தெரிந்தது. நிச்சயமாக அப்படி இருக்க முடியாதுதான். அச்சிறுமி இந்நேரம் பெண்ணாகி யாரையேனும் மணந்திருக்கக் கூடும். சந்தோஷமாகவோ அல்லது துக்கமாகவோ உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கக்கூடும். எதுவுமே இல்லையென்றாலும் எவன் கையிலாவது தாயைப்போல அகப்பட்டு கொலைப்பட்டிருக்கவும் கூடும். எதுவும் தெரியாமல் இல்லை. ஆனால் அனைத்தையும் மீறித்தான் அந்தச் சாயலைக் கண்டேன். அப்படி ஒரு சாயலில் இருப்பதாக நம்புவது அந்தத் தருணத்தில் எனக்குப் பிடித்திருந்தது. சட்டென பையில் இருந்த சில்லறைகளை அந்த கடைக்காரன் முன் விட்டெறியாத குறையாக வைத்தேன். ‘‘அதுக்கும் ரெண்டு இட்லி குடு’’ என்றேன். ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போல வினோதமாக என்னைப் பார்த்தான் அவன். அவனையோ அவன் பார்வையையோ சிறிது கூட பொருட்படுத்தவில்லை நான். அந்தச் சிறுமியைச் சமாதானப்படுத்துவதில் முனைந்திருந்தேன். இட்லித் தட்டு வந்ததும் ஆவலோடு வாங்கித் தின்றாள் அவள்.

தன்பெயர் அன்னபூரணி என்றாள் அச்சிறுமி. அனாதை என்றும் சொன்னாள். ஆறு வயசு வரை அம்மா, அப்பாவோடுதான் இருந்திருக்கிறாள். அப்பா குடிகாரன், அம்மா நோயாளி. குடித்து விட்டு வந்து கறிக்குழம்பு வைக்கச் சொன்னானாம் ஒரு நாள். தன்னால் முடியாது என்று மறுத்திருக்கிறாள் அம்மா. வாய்ச்சண்டை பெருகி விட்டிருக்கிறது. அவனுக்கு ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தலைக்கு ஏறியிருக்கிறது. இதற்கு நடுவில் அம்மிக்குப் பக்கத்தில் இருந்த கறிப் பொட்டலத்தை நாய் வந்து கவ்விக்கொண்டு ஓடிவிட்டிருக்கிறது. கோபத்தில் என்ன செய்கிறோம் என்று கூட புரியாமல் அம்மிக் குழவியாலேயே அவளை அடித்திருக்கிறான். தலை நசுங்கி அதே இடத்தில் அவள் செத்துவிட்டாள். அவன் ஜெயிலுக்குப் போக ஊரூராய் பிச்சை எடுக்க வந்துவிட்டாள் சிறுமி.

அவளை என் குடிசைக்கே அழைத்து வந்தேன். அடுத்த குடிசைக்காரர்கள் எல்லாம் மொய்த்துக்கொண்டார்கள். அச்சிறுமியைப் பற்றி நூறு கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு என்மேல் சந்தேகம் போலும். என் வார்த்தையை நம்பாமல் அவளிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஒரு தந்தைக்குரிய சந்தோஷமே என் மனசில் நிரம்பியது.

காலாகாலத்தில் கல்யாணம் செய்துகொண்டிருந்தால், எனக்கும் அன்னபூரணி மாதிரி ஒரு மகளிருப்பாள். என் உலகிலும் பெண்கள் இருந்தார்கள். பெண் சுகத்திற்கும் இடம் இருந்தது. ஆனால் கல்யாண வாழ்க்கை இல்லை. தந்தை என்கிற ஸ்தானத்தில் கிட்டும் பூரிப்பு பற்றிய ஞானமும் அப்போதில்லை. ஏதோ ஒரு வெறியின் போதையில் அமிழ்ந்திருந்தேன். தொழிலுக்கு அது சரிவராது என்று அலட்சியமாய் ஒதுக்கி விட்டிருந்தேன். இப்போது அதன் தவறு புரிகிறது.

அன்னபூரணி எனக்காகத் தினமும் தண்ணீர் சுடவைத்துத் தந்தாள். குளிக்கும்போது பக்கத்தில் இருந்து முதுகு தேய்த்துவிட்டாள். என் அழுக்குத் துணிகளைக் கசக்கி வெளுத்துக் கொடுத்தாள். கடையிலிருந்து வாங்கிவரும் உணவுப் பொட்டலங்களை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டோம். அவளுக்காக ஒரு முறை துணி எடுத்து வந்தேன். எங்கள் குடிசையின் பக்கத்திலேயே ஒரு தையற்கடை இருந்தது. அங்கேயே அவளை அழைத்துக்கொண்டு உடனே அக்கடைக்காரரும் தைத்துத் தந்தார். அன்னபூரணிக்கு முகமெல்லாம் பூரித்துவிட்டது. சந்தோஷத்தில் இரவு முழுக்க தூங்காமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

அவளை நினைக்க ஆரம்பித்தால் ஏதேதோ ஞாபகங்கள் புரண்டு வருகின்றன. அந்த வருஷங்களின் ஒவ்வொரு நாளும் ஆணி அடித்த மாதிரி பதிந்து விட்டிருக்கிறது. அன்னபூரணியை நினைக்கும்போது பக்கத்து வீட்டிலிருந்த ஆயாவை நினைக்காமல் இருக்க முடியாது. அன்னபூரணி ஆளாவதற்கு அவளும் படாத பாடு பட்டிருந்தாள். சாப்பாடு ஆனதும் என்னிடம் கதை கேட்க வரும் அவளை ஆயாவின் பக்கம்தான் கையைக் காட்டிவிடுவேன். உரலை இழுத்து வெற்றிலை பாக்கு இடித்தபடி அன்னபூரணிக்குக் கதை சொல்வாள் ஆயா. கேட்கும்போது எனக்கும்கூட உருக்கமாய் இருக்கும்.

ஒரு முறை பெரிய மூட்டை ஒன்று என் காலில் விழுந்து முட்டி பிசகி விட்டது. ரெண்டு மாசம் நான் பட்ட அவஸ்தையை வாயால் சொல்ல முடியாது. தையல்கார மாமாதான் என்னைப் புத்தூருக்கு அழைத்துச்சென்றார். இரண்டு முறை மாவுக் கட்டு போட்டார்கள். அச்சமயத்தில் ஒரு தாயைப் போல என்னைக் கவனித்து கொண்டது அன்னபூரணிதான். அந்த அன்பை இப்போது நினைத்தால் கூட நெஞ்சு நெகிழ்கிறது. எழுந்து நிற்க முடியாமல் இடுப்பால் நான் நகர்ந்து பின்கட்டுக்கு செல்வேன். எல்லாக் கழிவு விவகாரங்களும் அங்குதான். வேறு வழி இல்லை. ஒரு பெண்டாட்டிகூட செய்யக் கூச்சப்படுகிற செயல்களைக் கொஞ்சம்கூட அருவருப்பு கொள்ளாமல் செய்தாள் அவள். கூச்சத்தில் என் உடல் குறுகிவிடும். கடவுளே என்று திட்டுவேன். என் கண்களில் என்னையறியாமல் வழியும் கண்ணீரையும் ஆதரவுடன் துடைத்து விடுவாள் அவள்.

அந்த நேரத்தில்தான் அன்னபூரணி வீட்டிலேயே சோறாக்கத் தொடங்கினாள். முதலில் சில நாள்களுக்கு ஆயா கூட இருந்து சொல்லித் தந்தாள். அப்புறம் அவளாகவே செய்யத் தொடங்கினாள். நறுவிசா செய்யறா. எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோஎன்று பாராட்டினாள் அவள். அவளே பக்கத்திலிருந்த குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலைக்குச் சேர்த்து விட்டாள். மதியச்சாப்பாடு போட்டுச் சம்பளம் கொடுத்தார்கள். கொஞ்சம் சுமாராக எழுந்து நடந்து பழக முடிந்திருந்த தருணம் அது. ஆனாலும் கையில் ஒரு தடி தேவையிருந்தது.

கால் குணமான பிறகும் முன்பு போல மூட்டைகளைப் புரட்டித் தூக்கும் அளவுக்குப் பலம் கூடி வரவில்லை. மனசின் மூலையில் பயம்வேறு. பேச்சோடு பேச்சாக தையற்கார மாமாவிடம் சொன்னேன். கொஞ்சம் காஜா பட்டன் தைக்கிற அனுபவம் ஏற்கனவே இருந்தது. தன் கடையிலேயே கொஞ்சநாள் வைத்திருந்தார். பேச்சுக்குப் பேச்சுத் துணை. வேலைக்கு வேலை. ஏதோ கொஞ்சம் கூலி கொடுத்தார். எனக்குப் போதும்தான். ஆனால் எனக்குக் கூலி கொடுத்து அவருக்குக் கட்டுபடி ஆகவில்லை. இரண்டு தெரு தள்ளி ஏற்றுமதிக்காகத் துணிகளைத் தைக்கிற இஸ்மாயில் என்பவரிடம் அழைத்துப் போனார். அங்கே பத்து மிஷின்கள் ஓடிக்கொண்டிருந்தன. உருப்படிகள் மலைபோல் குவிந்திருந்தன. பார்த்ததும் மலைத்து நின்றுவிட்டேன். என் வயசைப் பார்த்து இஸ்மாயில் ரொம்பவும் தயங்கினார். காஜாபட்டன் என்றால் சின்னப் பையன்கள்தான் லாயக்கு என்பது அவர் எண்ணம். சுற்றி வளைத்து எப்படியாவது தவிர்த்துவிடப் பார்த்தார். நான் விடவில்லை. அவர் இரக்கம் எனக்குத் தேவையாயிருந்தது. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். என் உடைந்த காலைக் காட்டினேன். ஒன்று அல்லது இரண்டு மாசத்தில் தைக்கக் கற்றுக்கொள்வேன் என்று உறுதியளித்தேன். தையற்காரரும் என்னைப்பற்றி உயர்வாகவே சொன்னார். இஸ்மாயில் கரைந்து விட்டார். எனக்கு இடம் கொடுத்தார். என் வார்த்தையைக் காப்பாற்றுவதில் முனைப்பாகவே இருந்தேன். அல்லும் பகலும் பாடுபட்டு அந்தத் தைக்கிற வித்தையை வசப்படுத்தினேன். இஸ்மாயில் சபாஷ் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது.

அப்போதுதான் அன்னபூரணி பெரிய பெண்ணானாள். காலை நேரம் அது. எனக்கு எதுவும் புரியவில்லை. சரியான முட்டாள் நான். அவள் மூலையில் ஒதுங்கி எதையோ கண்டு பயந்தது மாதிரி நாணிக் குறுகி நின்றிருந்தாள். ‘‘என்ன வேலைக்குப் போவலியா?’’ என்கிற என் கேள்விக்குக் கூட ‘‘ம்’’ என்று மட்டுமே பதில் வந்தது. ஒரு கால் மணி நேரத்துக்கு மேல் அவள் இருந்த இடத்திலேயே இருப்பதைப் பார்த்த பிறகுதான் எனக்குச் சந்தேகம் வந்தது. காய்ச்சலோ என்று வேறு பயம். நெருங்கி நெற்றியைத் தொட்டுப் பார்க்கச் சென்றேன். அவள் கலவரம் கொண்டு பின் வாங்கிக் குனிந்தாள். மீண்டும் பதறி ‘‘என்ன அன்னபூரணி’’ என்றேன். அவள் ‘‘தொடாத’’ என்றாள். அது ஒரு கட்டளை மாதிரி இருந்தது. அப்போதும் என் மரமண்டையில் ஏதும் ஏறவில்லை. ‘‘போய் ஆயாவ கூப்பிட்டு வா’’ என்றாள். நான் ஓடிப்போய் ஆயாவைக் கையோடு அழைத்துவந்தேன். இரண்டு பேரம் ரகசியமாய்ப் பேசிக்கொண்டார்கள். நான் வாசலில் தவிப்போடு இருந்தேன். ஆயா என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். அவள் வாயெல்லாம் பல். என்னை இழுத்துக் காதோடு செய்தி சொன்னாள். பரபரப்பு. ஆச்சரியம். குழப்பம். சந்தோஷம். மனம் பொங்க அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவளை நன்றாகப் பார்ப்பதற்காக அங்கேயே நின்றிருந்தேன். அன்னபூரணிக்கு என்னைக் கண்டதும் வெட்கம். அவள் கருத்த முகம் ஜொலித்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே கிழவி வெளியே இழுத்து வந்துவிட்டாள்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆயா எதை எதையோ விவரித்தாள். ஆயாவின் கையைப் பிடித்து என் பையில் மடித்துமடித்து வைத்திருந்த நோட்டுகளை நீவி நீவி அவளிடம் கொடுத்துவிட்டேன். இன்னும் பணம் இருந்தால் தாராளமாய்க் கூடச் செய்யலாம். சந்தோஷமாய்த்தான் இருக்கும். அந்த அளவுக்கு இல்லாதது வருத்தமாய்த்தான் இருந்தது. இதையெல்லாம்கூட மீறி ஏதோ ஒரு புதிய அந்தஸ்து கிடைத்துவிட்ட மாதிரி எனக்குள் ஒரு பூரிப்பு. பெருமிதம். அன்று முழுவதும் சந்தோஷத்தில் சாப்பிடக்கூட இல்லை. பிற்பகலில் இஸ்மாயில் வீட்டில் இருந்து ஏதாவது வந்து எல்லோருக்கும் பங்கிட்டுத் தரப்படுவது உண்டு. அதைக் கூட உண்ணமுடியவில்லை. வாங்கி அடுத்தவனிடம் தந்துவிட்டேன். இஸ்மாயில் ‘‘விஷயம் என்ன’’ என்றார். கூச்சப்பட்டுக் கொண்டே சங்கதியைச் சொன்னேன். வீட்டுக்குத் திரும்பும்போது ‘‘செலவுக்கு வச்சிக்கோ’’ என்று சில நோட்டுக்களைத் திணித்தார் இஸ்மாயில்.

வருஷங்கள் நகரநகர அன்னபூரணிக்கு நிறைய துணிமணிகள் தேவைப்பட்டன. இரண்டு வேளை குளிப்பதும் கண்ணாடி முன்பு நின்று வெகுநேரத்திற்குச் சிங்காரித்துக்கொள்வதும் விதவிதமாய் உடுத்திக்கொள்வதுமாக மாறிப்போன அவளைக் காணக்காண எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நன்றாகத் தலைவாரி பூ வைத்திருப்பாள். வாசல் பக்கம் போவாள். சிறிது நேரம் உலாத்துவாள். யாரிடமாவது சிறிது நேரம் பேசுவாள். சட்டெனத் திரும்பி வந்து தலையைக் கலைத்து வேறு மாதிரி வாரிப் பின்னலிட்டுக்கொள்வாள். அவள் குழப்பத்தைப் பார்த்தால் சிரிப்பு வரும். ‘‘என்ன அன்னபூரணி?’’ என்பேன். ‘‘போப்பா’’ என்று ஒரு சிணுங்கல். சின்னதாய் ஒரு சிரிப்பு. அதுதான் அவள் பதில். ‘‘பைத்தியக்காரி’’ என்ற மனசுக்குள் சிரித்தபடி நான் வெளியேறிவிடுவேன்.

சேரியின் கடைசியில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனி தொடங்கி இருந்தார்கள். ஏராளமான பெண்கள் வேலைக்குப் போனார்கள். ஐந்து ரூபாய்க்கூலி, ‘‘போகட்டுமாப்பா’’ என்று கேட்டாள். அவள் ஆசையைத் தடுப்பானேன் என்று நானும் தலையசைத்து விட்டேன். வேலைக்குப் போகத் தொடங்கியதற்கு அடுத்த வருஷத்தில் கம்பெனியிலேயே வேலே செய்த தெற்கத்திக்காரன் ஒருவனுடன் ஊரைவிட்டே போய்விட்டாள் அன்னபூரணி.

நான்கு

சாராயக்கடையில் நடமாட்டம் நள்ளிரவு வரை இருக்கிறது. அதற்குப் பிறகுதான் கடையை மூடுகிறான். அதுவரையில்கூட எனக்குத் தூக்கம் வருவதில்லை. படுத்தவாக்கிலேயே அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பேன். சட்டென அந்தப் பழைய சிறுமியின் குரல் மனசில் எழுந்து வேதனைப்படுத்தும். அதை என்னால் தடுக்கமுடியவில்லை. எதையும் நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒரு தீராத பிரச்சனை. அந்தப் பழைய நண்பனைக் கொல்வதன் மூலம் மட்டுமே இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று உண்மையாகவே நம்புகிறேன். அந்த உணர்வை யாரிடமும் விவரித்துக் கூறுகிற திறமை என்னிடமில்லை. அதைப் பற்றிய கவலையுமில்லை.

என்னையும் அறியாமல் எப்போதாவது தூங்கி விடுகிறேன். தூங்கும் போதுகூட இதே சிந்தனை தொடர்கிறது. சதாகாலமும் நான் திரும்பத்திரும்பக் காண்கிற ஒரு கனவு உண்டு. கத்தியை எடுத்து நண்பனின் இதயத்தில் சொருதுவது பற்றி. முதல் குத்தில் அவன் கீழே சரிகிறான். அதிர்ச்சியில் நம்ப முடியாமல் பார்க்கிறான். அவன். ஓரிரண்டு கணங்கள் தாமதிக்கிறேன். கத்தியைப் பிடுங்கி மீண்டும் சொருகுகிறேன். அவன் முற்றிலும் குலைந்து சரிந்த பிறகுதான் என் படபடப்பு அடங்குகிறது.

கனவு மீண்டும் என்னைத் தவிப்புக்குள்ளாக்குகிறது. என் அமைதி முற்றாகக் குலைகிறது. பைத்தியக்காரனைப்போல அவஸ்தைப்படுகிறேன். சுற்றிலும் இருள். தனியே விடப்பட்டவன்போல உணர்கிறேன். உள்வீட்டிலிருந்து புருஷன் மனைவியின் தணிவான குரல்கள் கேட்கின்றன. எப்போதாவது அந்தச் சின்னஞ்சிறுமி அழுகிறாள். அதன் அழுகை. அதன் வேதனை. மீண்டும் மீண்டும் நான் கொலையுணர்வின்பால் இழுக்கப்படுகிறேன். நாளுக்குநாள் இது அதிகமாகிக் கொண்டே போகிறது. சதா காலமும் அந்த எண்ணத்தோடு இருக்கிறேன். என் கனவுகளைப் பற்றிக் கூட யாரிடமும் சொல்ல முடியாத நிலை.

என்னையொத்த கனவையுடையவன் ஒரே ஒருவனை மட்டும் வாழ்வில் கண்டிருக்கிறேன். அதுவும் சிறையில், அவனுக்கும் என் வயசுதான். மரணதண்டனைக் கைதி. ஒரு குடும்பத்தைச் சார்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டவன். கால்களில் விலங்கிட்டு ஓரிடத்தில் அவனைக் கட்டிப் போட்டிருந்தார்கள். அது ரொம்ப கொடுமை. அதிலிருந்து தப்பிப்பது அரிது. ஆனாலும் என்றாவது ஒரு நாள் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஐவரையும் கொன்றவன் இவன் சகோதரன். ஆனால் பழி இவன் தலையில். சந்தர்ப்பங்களும் சாட்சிகளும் இவனுக்கு எதிராகவே இருந்து விட்டன. தண்டிக்கப்பட்டு விட்டான். நிதானமான குரலில் தன் கதையை அனைவருக்கும் சொன்னான். முடிந்த வரையில் தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன்பு தப்பித்து அந்த சகோதரனைக் கொல்லவேண்டும் என்பதே அவன் கனவு. அவன் குரலில் நம்பிக்கை ஒலித்தது. உள்ளே வரும்போது அவன் கட்டுமஸ்தான உடல்வாகுவோடும் உறுதியோடும் இருந்தான். சிறைவாசம் அவனை உருக்குலைத்துவிட்டது. முகம் ஒடுங்கி தலை மயிர் கொட்டிவிட்டது. அவனால் சிறிது தொலைவாவது தடுக்கி விழாமல் ஓட முடியுமா என்பதுகூட சந்தேகம் தான். அப்படி இருந்தான். ஆனாலும் அவன் கனவு. அவன் ஆசை. எதிலும் மாற்றமில்லை. தூக்கு போட அழைத்துச் செல்லும் முன்பு வரையிலும் ‘‘எப்படியாவது தப்பிச்சி போய் அவனையும் அவன் வம்சத்தையும், அழிக்காம விடமாட்டேன்’’ என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான். அக்குரலை நினைத்தால் மனம் பெரிதும் வேதனையில் அமிழ்கிறது.

சேரியில் என்னுடைய தொடர்பு விரிந்துகொண்டே போனது. நட்புக்காக நான் அலையவில்லை. பலரும் தானாகவே நண்பர்களானார்கள். மிலிட்டரிக்காரர் புதுப்புது ஆள்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். பழைய முகங்களைப் பார்க்காவிட்டாலும்கூட ஞாபகத்தில் இருந்தார்கள். புதிய முகங்கள் அடிக்கடி மறக்கின்றன. மிலிட்டரிக்காரரின் நண்பன் ஒருவனை முக்கியமாய்க் கூற வேண்டும். அவன் கருப்பன். பன்றி மேய்ப்பவன். எங்கள் குடிசையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தான். கருப்பன் தன் சட்டையை நான் கைத்துத்தரவேண்டும் என்று விரும்பினான். சளசளவென்று பேசும் அவன் வாயில் எப்போதும் பீடி இருக்கும். அவன் உடலில் இருந்து மாமிச வாசம் வீசும். ஆனால் மரியாதையாக நடந்துகொள்வான். ஒரு முறை தன் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்று விருந்தளித்தான். பன்றிக்கறி. கொழுத்த பன்றியை ஒரே வீச்சில் வெட்டித் துண்டாக்கிய காட்சி இன்னும் என் கண் முன்னால் இருக்கிறது. கத்தியைக் கையாளும் முழு லாவகத்தையும் அவனிடம் நான் கண்டேன்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயம் என் வேலை கொஞ்சம் அதிகமானது. என்னால் அவ்வளவு செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். முக்கியமான சிலருடைய துணிகளை மட்டும் வாங்கிக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டேன். எல்லாவற்றையும் தைத்துத்தரவேண்டும் என்று ஆசைதான். ஆனால் அலைந்துகொண்டிருக்கும் என் சுபாவத்துக்கு அது சரிப்பட்டு வராது. வேலை என்னை முடக்குவதை ஒருபோதும் நான் விரும்பியதே இல்லை. எனக்குள் எரியும் அந்த நெருப்பை அணையவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருந்தேன்.

அந்தக் கிழவர் எனக்குப் பல வகையில் உதவிசெய்தார். அவரிடம் நான் எதையும் சொன்னதில்லை. அப்படியும் என்னை நச்சரித்து எனக்குத் தேவையாய் இருந்த நூல்கள், பட்டன்களை அறிந்து கொண்டு கடைக்குப் போய் வாங்கிவந்து கொடுத்தார். அவர் எனக்குச் செய்யும் உதவிக்காகச் சில பழைய உடைகளைத் தைத்தும் தந்தேன். சிற்சில சமயங்களில் பணமாகவும் தந்தேன். இவற்றை ஒன்றும் சொல்லாமல் அவர் வாங்கிக் கொள்வார். தினந்தோறும் அவர் வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தது. மகன் திட்டியிருப்பான். அல்லது மருமகள் திட்டியிருப்பாள். அடங்கிய குரலில் அதையெல்லாம் சொல்லி மனசாறுவார் கிழவர்.

கிழவரின் மகன் ஒருநாள் என் கடையைத் தேடி வந்து நான்தான் அவரைக் கெடுப்பதாயச் சொல்லி என்னையும் திட்டினான். எதுவும் பதில் சொல்லவில்லை நான். கிழவருக்கு ஏதேனும் பிரச்சனையுண்டாகுமோ என்பது தான் என் கவலை, கிழவர் உடனே கடையிலிருந்து எழுந்து போய்விட்டார். நான் தடுக்கவில்லை. மறுநாள் அவர் வரவில்லை. என் மனம் கேட்கவில்லை. சாயங்காலமாய் அவரைப் போய் பார்த்தேன். ஏன் வரவில்லை என்று கண்டித்தேன். கிழவர் சிரித்து மழுப்பினார். பிறகு அங்கிருந்து வெளியே சென்று டீ குடித்து விட்டுத் திரும்பினோம். மறுநாள் அவர் வரவில்லை. அதற்கடுத்தநாள் அதிகாலையில் அவர் தூக்கு போட்டுக் கொண்டு இறந்துபோனார்.

ஐந்து

அது எப்படியோ நடந்து விட்டது. என் வெறி தணிய விதியே ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும். யாரைச் சந்திக்கவேண்டும் என்று அல்லும் பகலும் கனவு கண்டு இத்தனை வருஷங்களாய் பைத்தியமாய் அலைந்தேனோ, அவனைக் கண்கூடாகப் பார்த்தேன். என் கையில் இறப்பதற்கென்றே உயிருடன் இருந்தான் போலும்.

எல்லாமே எதேச்சையாய்த்தான் நடந்தது. நான் கடையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். முச்சந்திக்குப் பக்கத்தில் இருக்கிற பூங்காவில் இளைப்பாறுவதற்காகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். சிலர் மௌனமாய் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் முகங்களில் சோர்வும் கவலையும் குடிகொண்டிருந்தன. சிலர் மட்டும் எதையும் பொருட்படுத்தாத வகையில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். ஒன்றிரண்டு பேர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஒருவன் பாடியபடி எல்லாரிடமும் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். குருடனின் ஆனந்தமான குரல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது ஆனந்தத்திற்கு நேர்மாறாக அச்சிறுமின் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தன. அந்தச் சிறுமி. அந்த முகம். கடவுளே. நான் மீண்டும் என் பழைய நினைவுகளில் வேகமாகச் சரியத் தொடங்கினேன்.

அடுத்த பாட்டைக் குருடன் பாடத்தொடங்கினான். அச்சமயத்தில்தான் பூங்காவிற்கு வெளியே ஒரு கடையின் வாசலில் சத்தம் கேட்டது.

‘‘நல்லா போடு. உடாத’’

‘‘அடிக்கற அடில இந்த ஜென்மத்தில திருடவேக் கூடாது’’

‘‘போலீஸ் கூப்புடு. அவன் இட்டும் போயி ஸ்டேஷன்ல நாளு இழுப்பு இழுத்தா தானா புத்தி வரும்’’

‘‘அதெல்லாம் அப்புறம். மொதல்ல செருப்பாலயே ஆளுக்கு நாலு சாத்து சாத்துங்க’’

‘‘இதுங்கள்ளாம் சோத்தத்தான் தின்னுதுங்களா, இல்ல வேற எதயாச்சும் தின்னுதுங்களா’’

ஆளாளுக்குச் சத்தமிடுவது கேட்டது. நான் சத்தம் வந்த திசையில் நடந்தேன். கும்பல் கலைவதற்காகவே காத்திருந்தேன். எதற்காக அப்படித் தோன்றியதோ தெரியவில்லை. ஏதோ கணநேர உந்துதல். அதுதான் காரணம். சிறிது நேரத்துக்குப் பிறகு சந்தடி அடங்கியது. கடைசியாய் ஒருவன் முதுகில் எட்டி உதைத்துவிட்டு நடந்தான். அந்த உருவம் தரையில் விழுந்தது. அந்த உருவத்தின் செய்கைகளை நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

அந்த உருவம் தன் புண்ணிலிருந்து வழிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டபடி துணிகளை உதறியது. பிறகு மெல்ல பூங்காவின் பக்கமிருந்த தண்ணீர்க் குழாயின் பக்கம் நடந்து வந்தது. அந்த நடை என் பழைய நண்பனின் சாயலை ஒத்திருந்தது. சின்ன சந்தேகம். அவன் முகத்தை உற்று நோக்கினேன். அடர்த்தியான தாடி. என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. என்னையறியாமல் எனக்குள் பரபரப்பு ஊர்ந்து அடங்கியது.

மெல்ல அவனுக்கருகில் நடந்து சென்றேன். அடிக்க வந்த ஆள் என்று என்னையும் நினைத்துவிட்டான். சட்டென விலகிப் பின்னோக்கி அடி வைத்தான். சந்தேகக் கண்களுடன் என்னைப் பார்த்தான். உடனே அவனை நோக்கிச் சிரித்தேன். அவனுக்குக் குழப்பம் உண்டாகிவிட்டது. கேள்விக்குறியுடன் என்னை நிமிர்ந்து பார்த்தான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

வேறு திசையில் அருகில் இருந்த டீக்கடைக்கு அவனை அழைத்துச் சென்றேன். மௌனமாய் அவன் என்னைப் பின் தொடர்ந்தான். அவனுக்கு மட்டும் சாப்பிட இரண்டு பன் வாங்கித் தந்தேன். சாப்பிடும்போது அவன் கண்கள் கலங்குவதைக் கண்டேன். அவனை மீண்டும் பூங்காவிற்கு அருகில் அழைத்து வந்தேன். தன் முதுகுப்புண்களை இன்னொரு முறை தண்ணீர் ஊற்றி கழுவினான் அவன். அவனைக் குறித்து மெல்லமெல்ல விசாரிக்க ஆரம்பித்தேன்.

‘‘பசி. ரெண்டு நாளா எதுவும் சாப்பிடல. அந்த ஓட்டல்காரன் கிட்டயே மொதல்ல கேட்டேன். வெரட்டிட்டான். அப்பதான் ஒரு பொண்ணு சாப்பிட்டு வெளிய வந்திட்டிருந்திச்சி. கைல பர்ஸ பார்த்ததுமே அடிச்சிரணும்னு தோணிச்சி. அடிச்சிட்டேன். ஓடும்போது பாழாப்போன கல்லு தடுத்திடுச்சி. ஒத்தக்கை வேற. மாட்டிக்கிட்டேன்.’’

அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு பாதையின் பக்கம் பார்த்தான். ரிக்ஷாகாரர்கள். ஏதோ யோசனையில் மனம்குவித்து நடக்கும் பாதசாரிகள், உரத்த ஸ்பீக்கர்கள் மூலம் கவனத்தை இழுத்தபடி பறக்கும் விளம்பர ஊர்திகள். பெரும்பாலானவர்கள் பரபரப்போடு இருந்தார்கள். எங்கும் பார்வையை படரவிட்டவன் மீண்டும் என்பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தான்.

பொழுது ஏறிவிட்டது. நான் கிளம்பத்தொடங்கினேன். என் வசம் இருந்த பீடிகளை அவனிடம் தந்தேன். அவன் அதை ஆசையோடு வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டான். என்னைப் பார்த்துச் சிரித்த விதம் வேடிக்கையாய் இருந்தது.

இதற்குப் பின் நாங்கள் அடிக்கடி சந்தித்தோம். பல நாள்களில் அப்பூங்கா வாசலிலேயே அவன் உட்கார்ந்திருந்தான். போய்ச் சேர்ந்ததும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பான். அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. இருமல் அவனைப் படாத பாடு படுத்தியது. மூச்சு கூட விடமுடியாமல் இருமினான். இருமி முடித்ததும் ‘‘கடவுளே கடவுளே’’ என்று மூச்சை இழுத்துஇழுத்து விடுவான். வாயில் ஒழுகும் சளி தாடியில் அடர்ந்து கொள்ளும். சட்டையாலும் புறங்கையாலும் அதைத் துடைத்துக்கொள்வான். பிறகு இரண்டு பேரும் ஏதாவது விடுதிக்குச் செல்வோம். தெருவில் நின்றபடி எதையாவது வாங்கித் தின்போம். அடிக்கடி அவன் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினான். கிராமத்துப் பெண். ஏழை. அவளைத் திருமணம் செய்துகொண்டிருந்தால் நிம்மதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம் என்பான். தன்னை அவள் நல்ல நிலையில் வைத்திருக்கக் கூடும் என்றும் சொல்வான். இதை அவன் சொன்னதும் அவனிடம் அவன் கிராமத்துப் பெயரையும் அவன் பெயரையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அவன் பெயரைக் கேட்டதும் நான் பரபரப்பானேன். அவனேதான். எவனுக்காகத் காத்திருந்தேனோ அவனேதான். உறுதியாகிவிட்டது. என் மனம் கூவியது. அங்கயேயே அவன் கதையை முடித்துவிடு என்று உள்ளே குரல்கள் எழும்பின. ஆனால் ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குத் திரும்பி நடந்தேன்.

இரவு முழுக்கத் தூக்கமில்லை. நிறைய திட்டங்கள் மாறி மாறித் தோன்றியபடி இருந்தன. எது சரி எது தப்பு என்று எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எல்லாம் கூடிவரும் தருணம் ஏராளமான குழப்பங்கள் தோன்றின.

அடுத்த நாள் மீண்டும் அவனைக் காணச் சென்றேன். அன்றைக்கு அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்து அறைக்கு அழைத்து வரவேண்டும் என்பதுதான் என் திட்டம். அவனைக் காணாதது ஏமாற்றமாக இருந்தது. வெகுநேரம் காத்திருந்தேன். வரவில்லை. என் பதட்டம் கூடிக் கொண்டிருந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். ஆத்திரமும் எரிச்சலும் வெறுப்பும் மூண்டன. என் நிதானமான புத்தியால் கைநழுவ விட்டேனோ என்கிற எண்ணம் வதைத்தது. நீண்ட நேரம் தொடர்ந்து புகைத்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தேன். அன்று முழுக்க வரவே இல்லை.

மறுநாள் மீண்டும் சென்று காத்திருந்தேன். அவன் அந்த குழாய்க்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சிரித்தான். அங்கேயே குத்திச் சாய்த்துவிடலாமா என்கிற அளவுக்கு ஆத்திரம் வந்தது. நெற்றி வரைக்கும் ஏறிய ஆத்திரத்தைச் சிரமப்பட்டு அடக்கினேன். மெதுவாக ‘‘என்ன நேத்து ஆளையே காணல’’ என்றேன்.

‘‘நேத்து பூரா காய்ச்சல். கைவலி வேற, கோயில் வாசல்லயே படுத்துக் கிடந்தேன்’’

என்னைப் பற்றி முழுக்க அவனிடம் சொல்வது என்று தீர்மானித்து விட்டேன். அதற்குச் சரியான பிடிமானம் கிடைத்த மாதிரி இருந்தது. மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன்.

‘‘எப்படி இந்தக் கை...?’’

‘‘நல்லாத்தா இருந்திச்சி. வீசி வீசி நடப்பேன். அது ஒரு காலம். எலக்ட்ரிக் ட்ரெயன்ல ஒரு தரம் திருடனன். என் கெட்ட நேரம். ஒர்த்தன் பாத்துட்டான். உடனே கூவிட்டான். அவன் மூஞ்சியிலேயே ஒரே குத்து குத்திட்டு வண்டிலேர்ந்து கீழ குதிச்சிட்டன். உயிரே போய்ருக்கணும். கை மட்டும் போய்டுச்சி...’’

என்னையறியாமல் இரக்கத்தால் ச்ச்ச்என்று சொல்லி விட்டேன். கேட்கக் கஷ்டமாய்த்தான் இருந்தது.

‘‘அன்னிக்கே செத்திருக்கலாம். உயிரோடு இருந்து என்ன செய்யப்போறன்னு தெரியல. கடவுள் பொழைக்க வச்சிட்டான். இப்ப நாய் படாத பாடு படறேன்’’

‘‘கேக்க கஷ்டமா இருக்குது’’

‘‘அதுல ஒன்னும் கஷ்டமில்ல. இந்த கையால எத்தன பேர அடிச்சிருப்பேன். எவ்ளோ கொள்ளை அடிச்சிருப்பேன். எத்தன பூட்ட ஒடைச்சிருப்பேன் தெரியுமா. ஒரு கொல கூட செஞ்சிருக்கேன்...’’

‘‘கொலயா...?’’

‘‘எல்லாம் நேரம். நானும் இன்னொரு கூட்டாளியும். கடத்தல சரக்கு வண்டில ஏத்திக்கிட்டிருந்தம். ஒரு பொம்பள பார்த்துட்டா. பொட்டிய போட்டுட்டு என் ஆளு முழிச்சான். அவசரத்துல எதுவும் புரியல. கத்தியால குத்திட்டேன். கடைசில அவன் மாட்டிக்கிட்டான். எட்டு வருஷமோ பத்து வருஷமோ உள்ள போட்டுட்டாங்க. என்னால அவனுக்கு ஜெயில்...’’

நான் உயிரே இல்லாதவன் போல் சக்கையாய் உணர்ந்தேன். என் துணிச்சலெல்லாம் எங்கே போய்க் கரைந்தது என்று தெரியாமல் தவித்தேன். அவன் குரலில் உற்சாகத்துக்குக் குறைவில்லை. அதைப் பார்க்கப்பார்க்க எனக்கு எரிச்சல் கூடியது. அவனைப் பார்த்து அசிங்கமான வசைச்சொல் ஒன்றை உதிர்தேன். சட்டென்று பேசுவதை நிறுத்தி என்னை உற்றுப் பார்த்தான். ‘‘நான்தான்டா அது’’ என்றபடி மீண்டும் அவனை அசிங்கமாய்த் திட்டினேன். என் கண்கள் தளும்பின. அதே கணத்தில் அவனுக்கும் என்னை அடையாளம் புரிந்துவிட்டது. ‘‘நீயா அது’’ என்று சிரித்தான். தாவி நெருங்கி என்னைத் தொட வந்தான். ‘‘இன்னும் உயிரோடு இருக்கியா, இந்த ஜென்மத்துல ஒன்ன பாப்பன்னு நெனைக்கவே இல்ல’’ என்றான். தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்த்தேன். அதைத் தவிர மிச்சமெல்லாம் பேசினான் அவன். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. நான் அவனை என் அறைக்கு அழைத்தேன். உடனே ஒத்துக் கொண்டான் அவன்.

இரவில் இரண்டு பேரும் சேர்ந்து குடித்தோம். அவனுக்கு கிளாஸில் ஊற்றிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவன் போக்கு வினோதமாக இருந்தது. இரவு முழுக்கச் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான். எதையும் சரியாய் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என் திட்டம் குறித்து குழப்பமான நினைவுகளே என் மனசில் கவிந்து கொண்டிருந்தன.

ஏறத்தாழ ஒரு வாரம் நகர்ந்துவிட்டது. அதற்குள் தெருவில் பலர்க்கும் அறிமுகமாகி விட்டான். எந்த நேரமும் பேச்சு, பேச்சு. எல்லோரிடமும் ஏதாவது பேசிக்கொண்டிருந்தான். உரிமையோடு என்னைக் குடிக்கக் கூப்பிட்டான். வாசலிலேயே சாராயக் கடை இருந்தது வசதியாய்ப் போய்விட்டது.

குழப்பங்கள் விலகி ஒரு நாள் தீர்மானத்துக்கு வந்து விட்டேன். பகல் நேரம். நான் மிஷினுக்குப் பக்கத்தில் நின்றிருந்தேன். திண்ணைப்படுதாவை வெயில் என்று சொல்லி இறக்கிவிட்டேன். இப்போது என்னைப் பார்த்தபடி அவன். அவனைப்பார்த்தபடி நான். சரியான சமயம் என்று கூவியது மனம். அவன் சுவரில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். ஒரு கையில் சாராயப்புட்டி இருந்தது. அதைக் குடிப்பதற்காக வாய் அருகில் கொண்டு போனான். அவனை பெயரிட்டழைத்தேன். வெகு அலட்சியமாக என்னை நிமிர்ந்து பார்த்தான்.

‘‘எனக்கும் ஒனக்கும் இருக்கிற பழைய பாக்கிய இன்னிக்கு தீத்துக்கப்போறேன்’’

‘‘பாக்கியா’’

முதல் முறையாய் அவன் கண்களில் கலவரம் தெரிந்தது. நான் மெல்லமெல்ல அவனை நோக்கி முன்னேறினேன்.

‘‘நல்லா நெனச்சிப்பாரு. சமுத்திரக்கரை. இருட்டு. அந்த பொம்பள. அழுதுகிட்டே அந்த சின்னப்பொண்ணு. பட்டுனு குத்திட்டியே, எவ்ளோ ரத்தம்’’

அவன் முகம் வெளுத்துவிட்டது. சட்டென போதை இறங்கி அவன் உளற ஆரம்பித்தான். கண்களில் உயிர்பயம்.

‘‘அது... அது... அந்தநேரம்..’’

‘‘குத்திட்டு மயிராச்சின்னு நீ ஓடிட்டியே. என் நெலமய நெனச்சிப் பாத்தியா. அந்த பெண்ணுக்கு ஒரு துரோகமும் நெனைக்காத நான் ஜெயிலுக்குப் போனேன். பைத்தியமா பரதேசியா என் வாழ்க்கையே வீணாப் போச்சிடா. எல்லாத்துக்கும் இன்னிக்கு கணக்கு தீக்கணும்.’’

‘‘இங்க பாரு... நான் சொல்றத கேளு... அது... அது...’’

புட்டியை என் முகத்தை நோக்கி எறிந்துவிட்டு ஒற்றைக் கையை ஊன்றி எழ முயன்றான் அவன். சட்டென பக்கவாட்டில் முன்னேறி அவன் கையை மிதித்தேன். விடுவித்துக்கொள்ளத் திமிறய அவன் நெஞ்சில் உதைத்தேன். மல்லாந்து விழுந்தான் அவன். என்னைப் பார்த்துக் கெஞ்சினான். எனக்குள் அந்தச் சிறுமியின் முகம். அவள் குரல். சரிந்த உடலில் இருந்து பாய்ந்த ரத்தம். வெறி மூள இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து அவன் இதயத்தில் பாய்ச்சத் தயாரானேன். கனவில் அடிக்கடி கண்ட காட்சி. அவன் நடுங்கினான். என்னைத் தடுக்கப் பலவிதங்களில் கையைக் காலை உதைத்தான். அத்தனை பலம் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. கொடுத்த உதையில் கோழிமாதிரி சுருண்டு விழுந்தான். கத்தியை ஓங்கிக்கொண்டு குனிந்தேன்.

‘‘மாமா..’’

படுதாவை விலக்கிக்கொண்டு உள் வீட்டுச் சிறுமியின் முகம் தெரிந்தது. ஒரு கணத்தில் வியர்வையில் நனைந்தேன். திரும்பி அவளைப் பார்த்தேன். சிரித்தபடியே அச்சிறுமி திண்ணையில் ஏற முயற்சித்தாள்.

‘‘மாமா... இன்னிக்குத் துணியே குடுக்கலியே நீ. என் ஜமுக்காளத்துக்கு துணி தரியா?’’

கடவுளே! அந்தக் குரல். அந்த முகம். என் கைகள் தளரத் தொடங்கின. மனசில் மீண்டும் அந்தப் பழைய சிறுமியின் முகம். அவளே வந்து விட்டதுபோல ஒரு கற்பனை. ஒரு கணம் எல்லா வெறியும் தணிந்து விட மனம் அமைதியானது. கத்தியை மடக்கி மறைத்தபடி நிதானமாய் எழுந்தேன். அச்சிறுமியையும் விழுந்து கிடக்கும் அவனையும் மாறிமாறிப் பார்த்தேன். இன்னும்கூட அவன் கண்களில் பயம். அவநம்பிக்கை.

‘‘எழுந்து போடா’’

என் வார்த்தையை அவனால் நம்ப முடியவில்லை. கலவரத்தோடு என் கண்களைப் பார்த்தான். மீண்டும் ‘‘போடா’’ என்றேன். கையை ஊன்றி எழுந்து நின்றான். ‘‘நா சொல்தற கேளு’’ என்று என் கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ சொல்ல முற்பட்டான். நான் சட்டென உதறினேன். தெருவைச்சுட்டி ‘‘மரியாதையா போய்டு’’ என்றேன். அவன் திண்ணையை விட்டு இறங்கியதும் நான் அச்சிறுமியின் பக்கம் திரும்பினேன். ‘‘யாரு அது, எதுக்குத்திட்டற?’’ என்று கேட்டாள் அவள். ‘‘நீ வா ஒனக்கு துணிகுடுக்கறன்’’ என்று பேச்சை மாற்றினேன் நான்.

(1996)